திங்கள், 3 நவம்பர், 2014

ஆதமத்த நாடு







போடுவாசி மவ சம்புநதிக்கி குமிஞ்சி நாட்டையில எழக்கட்ட முடியில.  ரெண்டு தக்கம் குதுக்குகுதுக்குன்னு உதரம் புடுங்கித் தீட்டாப் பட்டுக்கிட்டிருந்திச்சி.  வூட்டுக்குத் தூரம் போறன்னைக்கிப் பாழாப்போனப் பொம்பளச் சென்மத்துக்கு ஒடம்பு ஒடம்பாட்டமா இருக்குது கருமாந்தரம்?  மேலப்பூராஞ் சீலையாட்டந் தொவண்டுக்குது.  கசகசன்னு ஈரம், ஒரே கசாட்டு.  அந்தாண்ட இந்தாண்ட அக்கற எழுய ஓடிப் பொணைக்கவுங் கைலாவல, இன்னைக்கி கோனு எட வேற கொறஞ்சிப் போவும், சின்னச் சேட்டுக்கிட்ட ஆரு பாட்டு வாங்கறதுன்னு பிள்ளைக்கிச் செட்யான வெசனம்.


 பெத்தமனம் பித்து பிள்ள மனங் கல்லுன்னு எந்த கேனப்புண்ட சொன்னது? 

சம்புப் பிள்ள அவிங்கம்மா லங்கலாடி அரிசியத்துக்கிட்ட கொண்டாந்து அவன வுட்டடிக்கணும்.  அப்பவே இந்தப் பிள்ள விடியாந்தரம் அடிவவுறு கடுக்குது.  அள்ளவவுத்த நோவுதிடி மூளின்னா, கேட்டாளா அவ?  குண்டு முத்தம்மா கடயில புளிச்ச ரவ்வோத் தண்ணிய ஒரு முழுங்கு வாங்கிக்குடுத்து ஓடுறீ முட்டக்கண்ணின்னு தொரத்தியுட்டுட்டா.  அவ வெசனம் அவுளுக்குப் பாவம்.

  பேரு வௌங்குதேங்கப்பன் எம்.சி.யாருப் பேரு, சனங்காலு நீட்டிப்படுக்க முடியாதபடிக்கி அவங் கட்டிக் குடுத்தானே, காரவூடு அதுக்குப் பட்ட கடனக் கட்டமுடியாம அவப் பிருசந் தாட்டியம்பட்டியாம் போடுவாசி கூதமுட்டிச் செத்துப்போயிட்டான்.  செத்ததுதாஞ் செத்தாந் தாயாலி சும்மாச் செத்தானா?  வருசத்திக்கி ஒண்ணு வருசத்திக்கு ஒண்ணுன்னு சம்புப்பிள்ளைக்கி மின்ன நாலுப் பொட்டப்பிள்ளைங்க.  காட்டுப்பீயப் பேழும் மிந்தியே கருஞ்செவாப்பு வந்து அதலவொரு ரெண்டன்னத்த மண்ணுக்கு வாரிக் குடுத்துட்டாங்க.
 கொங்கநாக் குட்டிப்போட்டு குப்பங்கொசவஞ் சூள வெச்சாப்பிடி, அனாமுத்த பிள்ளைங்களப் பெத்துட்டுட்டு அப்பங்காரந்தான் புளுக்க மண்டிப் போட்டுட்டானே, அம்மாக்காரியாச்சிம் பொழப்பு மேல கருத்தா இருக்கணுமா வேண்டாமா?




 அரிசியம்பிள் ஒரு தாந்தோனி.  பொம்பளைக்கி சேலம் ஒருக்கோடியா தெனஞ் சீனிமாப் பாக்கணும்.  ஆரியமோ, கம்போ, அரிசியோ, சாமையோ அது எதாயிருக்கட்டும் அன்னக்கி வூட்ல உண்டானத கொடையமூட்டு ரட்சிமிக்கிட்ட அளந்துட்டுப்புட்டு வாங்கித் திங்கனும்.  பிள்ளைங்களுக்கு பாவம் படுக்கப் பாயில்ல.  ஆயாக்காரி ஒருபக்கம் பெரும்போக்காத் திரிய, பிள்ளைங்க ஒரு பக்கம் அறங்கையும் பொறங்கையும் நக்கிக்கிட்டு எத்தன நாளைக்கி கெடக்குங்க?  பாத்துட்டு அதுஅதுங்களே ஆளுக்கொரு மாப்பளைங்களத் தேடிக்கிட்டுப் போயி பொழைக்கிதுங்க,  ஒருத்தி டெய்லருப் பையனொருத்தனக் கட்டிக்கிட்டு பொம்மிடி டேனிசிப்பேட்டையில இருக்கறா.  இன்னோருத்தி ராரி டைவரொருத்தனச் சேத்திக்கிட்டு பூசாரிப்பட்டி தீவிட்டிப்பட்டியிலே இருக்கறா,  சொத்தாப் பொழைச்சா வந்துப் போறதோடச் சேரி மிச்சப்படி எதிலியும் பட்டுக்கறதில்ல.



 வாத்துரூம்புலப் போயி மூஞ்சி கைகாலு கழுவிக்கிட்டு வந்தா களப்புக்குச் செத்த நல்லாயிருக்கும்.  மூணுத் தரத்துக்கு மேல மூத்தரத்துக்குப் போனாவே இந்த வாச்சிமேனு கெழவாடி பேரெழுதிக்கொண்டு சூப்ரேசுருப் பசங்கக்கிட்ட குடுத்துர்றான்.  அவிங்க அங்கென்னாப் புடுங்கற வேலைங்கறாங்க?  ஆம்பளைங்கக்கிட்ட இப்பிடித்தான் ஆயிப்போச்சின்னு இந்த சமாச்சாரத்தப் போயிச் சொல்லமுடியிமா?
 சேட்டு அவிங்கப்பன் பெரிய சேட்டு இருக்கந்தினியும் ரவ்வு வேல கெடயாது, பவுலு மத்தியானம் ரெண்டே சிப்ட்டுத்தான்.  கோனு வைண்டிங்கி ரீலிங்கி ரெண்டுத்துக்கும் பொட்டப்பிள்ளைங்கதாஞ் சூப்ரேசுரு.  அப்பிடி அல்லியும் வேணியும் அதுக்குமின்ன கோமிதியும் இருந்தப்ப இத்தன கெடுபிடி இல்ல.  கோனு எட இல்லையின்னாக்கூட எதோ நேந்து நெரவுவாங்க.  டாக்கு எடுக்கனும், லோடு ஏத்தனுமின்னு அவீங்கள நேரங்கெட்ட நேரத்துல வரச்சொல்லி ஆபிசிலவுட்டுச் செனையேறுனா எவ ஒத்துக்குவா?  நேர்றவிங்களுக்குத்தாம்பா இது சேரும், எல்லாத்துக்குமாச் சேரும்?



  நல்ல மவராசருக்கு அடையாளஞ் சொல்லாமப் பொறப்பட்டுருனுமில்ல?  சேட்டுக்குப் பயந்துக்கிட்டு ரெண்டபேரும் வேலைக்கே வர்ரதில்ல, நின்னுக்கிட்டாங்க.  அவிங்க கத அப்பிடி ஆயிப்போச்சா, கோமிதியும், ஒயருமேனு கந்தசாமியும் பாத்த தாவுலப் பேசப் புடிக்க ஒருத்தரு மேலே ஒருத்தரு பிரியமாயிருந்தாங்க,  அத எப்பிடியோ துப்புகண்டு பின்னிங்கி பிட்டரு செலுவராசு, கோமிதிப்பிள்ளையக் காங்கறப்பெல்லாம் கரண்டுக்காரன்னுது மட்லுமென்னா ஒசித்தி?  மண்ணுத் திங்கற பண்டத்த ஆருத் தின்னா என்னா?  நானுந்தா ஒரீடு பதம் பாக்கறனேன்னு ச்சும்மா எரண்டிக்கிட்டேயிருக்க, இவளும் போனாப்போவுதுப் போனாப்போவுதுன்னுப் பொறுத்துக்கிட்டிருந்தா வவுநாளா. 


 ஒரு நாங்கறப்பெட்டுக்கு டெசுட்டு எடுத்துக்கிட்டுப் போனப்பிள்ளய லேப்புலவுட்டு செலுவராசு சீலய உருவ, அவ குய்யோமுய்யோன்னுக் கத்திப்பாரிக்கிட்டு வெளியே ஓடியாந்துக்கறா.  ஓடியாந்தவளக் குறுக்காட்டி இன்னைக்கிச் சும்மா பிசுக்கு, வாயத் தொறந்து வெளிய இத யெங்கியாச்சுஞ் சொல்லிப்புட்டையின்னு வெய்யி, சேட்டு வண்டியில தூக்கிப்போட்டுக் கொண்டு கந்தப்பட்டி ஏரியிலவுட்டுச் சின்னம் பண்டிப்புடுவ மின்னு மெரட்ட, அந்தப்பிள்ள பத்து பதனஞ்சி நாளாட்டம் மில்லுப்பக்கம் தல வெச்சிப் படுக்கல,  ஒழுக்கமா வேலைக்கி வந்துக்கிட்டிருந்தவ, வாரக்கணக்குல ஆளு அட்ரசியே காணமே, மேலுக்கு கீலுக்கு எதனாலுஞ் சவிரியமில்லியோ, என்னமோன்னு ஒயருமேனு, தனசேவுரு, கோவாலு, பின்னிங்கி முருகேசன்னு அஞ்சாறு பசங்கப் போயி அவளப்பாக்க, இப்பிடி இப்பிடித்தான் நாயமின்னு எல்லாத்தையும் பூர்த்தியா புட்டுபுட்டு வெச்சிட்டா. 


 இன்னைக்கி எலய அறுக்கறவன் நாளைக்கி கொலய ஏண்டா அறுக்கமாண்டான்?  இந்த சங்கிதிய இப்பிடியே வுடக்கூடாதுன்னு பசங்கெல்லாம் ஒட்டுக்காச் சேந்துப்போயி சேட்டு காதுல இதப்போட்டு, பிட்ரு செலுவராசு, கோமிதிப்பிள்ளைக்கிட்ட தாஞ்செஞ்சது தப்புன்னு கால்ல வுழுந்து மாப்புக் கேக்குனுமின்னுச் சொல்ல, அவனிருந்துக்கிட்டு, ஒண்ணுமில்லாத விசியத்த ஆரு ஊதிப் பெரிசிப் பண்டனது?  மில்லுப்பேருக் கெட்டுப்போவும், அப்பிடியிப்படி, அங்கயிங்கன்னு தபாய்க்கிறாந்தட்டி  கழிக்கிறாஞ் சும்மா.  அவ்ளதாஞ்சண்ட, பெருத்த சண்ட மூண்டுக்கிச்சி,  பத்துப்பேரு பண்ணயம் பண்ற எடத்துல ஒருத்தன்மேல மட்லும் சேட்டுக்கு கருசனமின்னா அதுக்குங் காரணமில்லாம இல்ல.
 சின்னப்பட்ட கழதைக்கி செனக்கழத கூத்தியாளாம், சேட்டு பண்ற கோளாறுக்கெல்லாஞ் செலுவராசி உள்ளொளவுக்காரன்.  ஏமாந்தப் பிள்ளைங்களக் கூட்டிவுட்டு அவுனுக்கு வௌக்குப் புடிக்கிறவனும் அவனே. 


 ஆதியிலே சேட்டவிங்கப்பனும், செலுவராசி அவிங்கப்பனும் கொண்டலாம்பட்டி, மகுடஞ்சாவடி, எஸ்ப்பாலம், எளம்பிள்ளியக் கட்டி பழயத்துணிப் பொறுக்கி வித்தாங்க.  பிற்பாடு தறி ஓட்டப்போயி, தானே தறிபோட்டு, அப்பறம் நூலுமண்டி வெச்சி, படிப்படியா மின்ன வந்து பெரியச் சேட்டுக்கு நாலஞ்சி மில்லுஞ் சொந்தமாச்சி.  நல்லது கெட்டது எல்லாத்துக்கும் கூடவேயிருந்து கடைசிமுட்டும் ஒத்தாசிப் பண்டுனானில்ல செலுவராசி அவிங்கப்பன், அந்த நன்னிக்கோசரம், மாளியக்கட்டி மரநாயக்குடிவெச்சாம் பெரிய சேட்டு.
 மில்லுவாசல்லே மீட்டிங் பேசி, சின்னசேட்டு வண்டி மேல செருப்பக் கழட்டி வீசும்படி நாலுநாளா டைக்கி பண்ட, வேªறுதுந் தோதுப் பத்தாம பிட்ரு செலுவராசி கோமிதிப் பிள்ளையிண்ட மாப்புக் கேக்க அவ என்னா நெனச்சாளோ மறுக்க மில்லுக்கே வரல.  அன்னைக்கி வெஞ்சம் வெச்சாஞ்சேட்டு, ஆராருக்கு ஓடையடிக்கணுமின்னு.  மொதல்ல அவங்கண்ல சிக்கனது ஒயருமேனு கந்தசாமி.  அந்த சமாச்சாரத்த என்னான்னுச் சொல்றங் கேளுங்க...



 காருவள்ளி கஞ்சநாயக்கம்பட்டியிலருந்து சக்திவேலு, சக்திவேலுன்னு ஒருப்பையன் மில்லு வேலைக்கி வந்துக்கிட்ருந்தானப்பா அஞ்சாறு வருசமா.  நாளுமேல ஒரு சிப்ட்டு ஒன்ரச் சிப்ட்டுன்னாலும் நல்லாக் கவடத்து பஞ்சித் திம்பாஞ் சலிக்காம, புளோரூமு,காடிங்கியொரு தொங்கல்ல இருந்து கோனு வைண்டிங்கி முட்டும் ஈரக்காத்து பதமா வேணுமின்னு ஏசி பிளாண்டு போட்டுருந்தாம் பக்கமா.  பின்னிங்கில ஏறனா அவுத்தவுத்த பொட்டியில அண்டியிருக்கற பஞ்சிக்குப்பய வௌக்குமாத்துல அடிச்சிக் கூட்டணுஞ் சுத்தமா, உள்றப் போறப்ப பவுரு ஆபிசிலச் சொல்லி பீசுக்கட்டய மறக்காம புடுங்கி வெச்சிட்டுப் போவாந் தெனந்தப்பாம.



 சேட்டுவூட்டாரு மாதரவொரு பிக்கேரிங்க ஆரும் இருக்க மாட்டாங்க.  அப்பனாயா, பெத்துப்பொறப்பு, மாமம்மச்சான் ஒருத்தரு தொச்சமில்லாம வூட்டுச்சனமே மில்லுக்குள்றக் குடியாயிருக்கும்.  அன்னைக்கிங்கறப்ப பெட்டுக்கு சேட்டுப் பொண்டாட்டியந்தச் சொட்டப் பெருக்கான் விடிஞ்சிம் விடியாதமின்ன மில்லுக்கு வந்துட்டா குப்பூரு சொசைட்டியில பாலூட்டிப்புட்டுப் போவ.  மில்லச் சுத்தி வர ஆர்லுக்குள்ள ஆறேக்கரா கொறங்காடு கெடந்தது.  அதயேஞ் சும்மாவுடனமின்னு சோளத்தட்டும், சீமத் தட்டும் ராசிப்பண்டி அத திங்கடிக்க பத்து உருப்பிடி சீம மாடு வளத்தனாங்க.  அன்னாடம் அதுங்க அம்பதுப்படி, அறுவுதுப்படி பாலு பீச்சும்.  அதலவொரு வரும்பிடிப் பாத்துக்க அவிங்களுக்கு.  சொட்டச்சி வந்தவ வந்தச் சோலியப் பாத்துக்கிட்டு போயிருக்கப்படாதா?  ரவ்வுச் சிப்ட்டுக்காரப் பசங்க, பிள்ளைங்க யாராச்சிம் தூங்கறாங்களான்னுத் துப்பெடுக்க உள்ற வந்து ஒவ்வோரு  எடமா நோட்டம் போட்டாப்பிடிச் சுத்திக்கிட்டிருந்தா.  வாச்சிமேனு பாலு பீச்சிக் குடுக்கந்தினியும், அக்காளுக்கு உப்புசந்தாக்குப் புடிக்க முடியல.  வேத்தூத்துதுன்னு சேட்டு மச்சனன் இ.எஸ்.சி என்னா பண்டுனான், சத்திப்பையன் பிளாண்டுள்ள இருக்கவே பீசுப்போட்டு மோட்டாரச் சாட்டுப் பண்டிவுட்டுட்டாம்பா.



 ஏப்பா சின்னவெல மோட்டாரா?  பதனாறயிட்டம் பூராம் இருவுது எம்.சி.பி மோட்டாரு.  காத்தாச் சொழண்டடிக்க இந்த சத்தி மூச்சி வுடமாண்டாம மூணாளு ஒசக்கயிருந்து சுருண்டு வுழந்தாங் கீழ.  சோத்தாங்கையி மூட்டு வெலவிக்கிச்சி.  கீழவுழுந்தவனத் தூக்கியொரு தண்யி தப்பு குடுத்துத் தேக்கந் தேத்தாம, ஆரக் கேட்றா பிளாண்டுக்குள்றப் போனன்னு காதோடச் சேத்தி அப்புறானே இ.எஸ்.சி ஒரு அக்குறும்பு.  பசங்களும் பிள்ளைங்களும் நிமுசம் பையனத் தூக்கி சேட்டு வண்டியில வெச்சி புத்தூருக்குக் கொண்டு போனாங்க கட்டுப்போட.  அன்னராவு வுட்டுட்டு விடிஞ்சி மக்யாநாளு பசங்க வந்து ஆரிந்த அலும்புப் பண்டனது?ன்னுக் கேக்கும்பிடி, இ.எஸ்.சி எனுக்கு எதும் தெரியாதுன்னே சாதிக்கறாம்பா வொரு அநியாயம்.


 கந்தசாமி உம்மய ஒடச்சி சொல்லிப்புட்டான்.  ஓவ் இவங்கொல்ல வந்த மாத்தான்.  வுன்னமாலும் இவன் ஒரே அரச்சணம் மில்லுல இருக்கப்படாதுன்னு மேத்திரிப் பசங்கச் சொல்ல சேட்டு மச்சாங்காரனுக்கு சப்போடு நாயம், மொழுக்கு நாயம் பேச இவிங்க விலுக்கோலு ஒத்துக்க மாட்டேனுப்புட்டாங்க.  கிறுக்கு முறுக்குங்காம மச்சாங்காரன மில்லுக்கு வரவேண்டான்னுப்புட்டு, பையங் கையி எலும்புங்கூடி வருந்தினியும் சம்பளத்தோட ஆசிப்பத்திரி செலவையுஞ் சேத்திக் குடுத்துக்கிட்டிருந்தாஞ் சேட்டு.  மூணு மாசங்கழிச்சி பண்டாத திருக்குசுப்பண்டி திலிப்பியும் மில்லுக்கு வந்துக்கிட்டிருந்தானப்பா இ.எஸ்.சி சேட்டு புண்ணியத்துல.  ஒருநாளு அளவத்த போதையோட ரவ்வு சிப்ட்டு பாத்துக்கிட்டிருந்த கந்தசாமியிண்டப் பேசி பழசக் கௌறுகௌறுன்னுக் கௌறி அகராதிப்பேசி வலிவந்தமா சண்டைக்கி இழுக்க, இவனொண்ணுப்பேச அவனொண்ணுப்பேச ஒண்ணுமேல ஒண்ணுப்போட்டு தகலாறு முத்தி கந்தசாமி, இ.எஸ்.சி மண்டய அடிச்சி ஒழுக்கிப்புட்டான்.  இதுதாண்டா சமயமின்னு சேட்டு ஓமலூரு டேசன்ல போயி கொலக்கேசி எழுதிக்குடுத்து ஒயருமேன உள்றத் தள்ளிப்புட்டான்.  நாயம் நெகாருன்னு ஒருத்தரும் வாயத் தொறக்க முடியல.




 இதெல்லாம் ஒருபக்கங்கெடக்க, மூணு வருசத்துல பரமெண்டு பண்டறமின்னு சொன்னவிங்க ஏழு வருசமாவியும் ஒரே குஞ்சான குஞ்சிக்கி கார்டுக் குடுத்து பரமெண்டு பண்டல.  பி.எப்பு, ஈயெஸ்சு ஒரு சுடுகாடுங் கெடயாது.  தீபாவளிக்கி தீவாளி பிச்சப் போடறாப்ல முந்நூறு, நானூறு மிச்சமாப் போனா ஐநூறு உருவாதாம் போனசி.  வருசமொருக்கா என்னமோ சாங்கியத்துக்கு ரெண்டுருவா சம்பளத்துல ஏத்துவான்.  அதுக்கு உண்டான வேலையுஞ் சேத்தி வாங்கிக்குவாங் கணக்கா.


 ஏப்பா மூக்குமுடி புடுங்கனா ஆளு பாரங் கொறயுமா?  அவனவனுக்கு தக்க சம்சாரமில்ல, சம்பளமே கட்டுப்பிடி ஆவலையின்னா எதவெச்சி சுதாதரிப்ப?  புளோரூமு கொமாரு, காடிங்கி கணேசன், சிம்பலக்சி தனசேவுரு மொகாமையில மேட்டூரு சீரங்கனப் பாத்து ஊனியனு ஆரம்பிக்கலாமின்னு கலந்துப் பேசனதுதாங் காரணம், ஏப்பா சேலம் கிச்சிப்பாளையத்துலயிருந்து ரவிடிங்களக் கூட்டியாந்து, பசங்கள பஞ்சிக் கொடோன்லவுட்டு அடிச்சா அடியா அது.  மூக்குவாயெல்லாம் ரத்தமா கொப்பிளிக்கிது.  ஆளு தப்புனாலும் அடி தப்புல.  ஓரடிப் பாக்கியில்லாம பூராம் உள்ளடி.  தனசேவுருக்குத்தான் மீறன அடி.  தறிக்காருக்கு கோனு திருடி வித்தாங்கன்னு திருட்டுப்பட்டங் கட்டி, போலிசிக்காரனுங்களே வண்டி போட்டுக் கொண்டி அவரவரு வூட்ல துள்ளத் துடிக்க எறிஞ்சிப்புட்டுப் போனாங்க அத்தாந்தரமா.



 அதும்பொறவு உள்ளூரு ஆளுங்க ஒரே பசங்க இல்லாம துப்புரவா வேலயவுட்டு நிறுத்தி ராமநாதபொரம், மதரப் பக்கம்போயி, வெறும் பொட்டப்பிள்ளைங்களாவே மூணுவருசம் யெக்ரிமெண்டு முப்பதாயிரந் தாறம், நாலு யெக்ரிமெண்டு நாப்பதாயிரந் தாறம், அதோதட மாசச் சம்பளம், குடியிருக்க வூடு, போவ வர வண்டி, வசிதின்னு படல்படலாக் கூட்டியாந்து கோட்ரசிக் கட்டிக்குடி வெச்சாங்க.  நரிமின்ன நண்டுக் கரணமடிச்சாப்ல இவிங்கக் விட்ட அவிங்க வந்த எனத்தக்கழட்ட முடியிம்?  வந்த மாதரயே மாசமொரு கும்புலுச் சொல்லாமப் புடிக்காமப் பொறப்பட்டுச்சிங்க,  மிச்சமீதி ஒண்ணு ரெண்டு தாக்குப்புடிச்சித் தடுமாறி மூணு வருசஞ் செலுத்தனவங்களுக்கும் அது நோனி இது நோனின்னு ஒரே அஞ்சிப்பிசா கை நட்டமில்லாமத் தொரத்தியுட்டுட்டாங்க.  அப்பிடித்தாம் பட்டூம் இந்தச் சனந் திருந்திச்சா?  மதரக்காரன் வல்லையின்னா தரும்பிரிக்காரஞ் சும்மாவே வர்ரங்கறான்,  நாயங்கண்டுப் பேசச்செட்யானப்படிக்கி மொகறயில மீசவெச்ச ஆம்பளையுமில்ல, மொழங்கால்ல மீச வெச்ச பொம்பளையுமில்ல.


 சேட்டு மில்ல வெச்சி இன்னொரு வெவகாரமென்னுன்னா ஒராளு ஒரு வேலச் செய்யிதா அந்தவொரு வேல மட்லுந் தாங்கற கட்டுத்திட்டம் எதுங் கெடயாது.  கரண்டு இல்லாம சென்ரேட்ல ஏழு வைண்டிங்கி மிசினுக்குப் பருத்தியா நாலுதான் ஓடுதா, மிச்சப்பேருப் போயி பின்னிங்கில சைடு கட்டணும், மிசுனுத் தொடைக்கனும், ஏப்ரான் ஒட்டுனும், அரியா எடுக்கணும், இதெதுமில்லியா புளோரூம்புக்குப் போயி மிச்சிங்ல பஞ்சள்ளிப் போடுணும்.
 இன்னைக்கி காத்தால வந்தப்பத்தொட்டு ஏழாடங் கரண்டுப்போயி பஞ்சிக் கொடோன்லியேப் பழிக் கெடக்க விதியாச்சி. 



 மத்தியான வெயிலு உக்கரம் புழுங்க ஒரே வேக்காடு, அதுல ஒடம்பு ஒடஞ்சிதான் இப்பிடி திரேகமே ரணமாயிட்டுது.  கண்ணு இருண்டு, காது ரெண்டும் பஞ்சடஞ்சி, மேலு வெலவெலத்து, பிள்ள ரெக்கிரியாட்டம் வதங்கிப் போயிட்டா.  நின்னு நின்னு இடுப்பு நோவெடுக்க, காலுந்தானா மடியிது.  வதயான வதப்பட்டுக்கிட்டு இவளிருக்க பொழுது மணி மூன்றயாச்சி.  இவளவுட்டுட்டு மித்த பிள்ளைங்கெல்லாம் வேரவரு எடுத்த கோனக் கொண்டி சேட்டுக்கிட்ட கணக்கு ஒப்படைக்க, இவ கடைச்சியாப் போயி மேலுக்கு சவிரியமில்ல, நாளைக்கி சேத்தி ஓட்டிக் குடுக்கறன்னு தவுமானஞ் சொல்லிக் குடுத்துட்டுப் போவலாமின்னுருந்தா.


  ரட்சக்கணக்குல மொதுலுப் போட்டு மில்லோட்ற மொதலாளி, எரநூறு முந்நூறுப் பேத்துக்கு மாசம் முப்புது நாளும் படியளக்குற கருத்தா, ஆளு மேல ஆளு ரெண்டாளு வுட்டப் பொறவும் அவங்கிட்ட கையேந்தி கூலி வாங்கறவொரு பொட்டப்பிள்ள, கெட்டக்கேடு, இந்த மாதரவொரு மதியாத்தனத்துல ரஸ்பீட்டு மயிரா நின்னுக்கிட்டிருந்தா, அந்த இஸ்பேட் புளுத்திக்கி ஏப்பா நோப்பாளம் வராது?  எடுத்துக்கிட்டிருந்த கணக்க அப்பிடி அப்பிடியே வுட்டுட்டு, நெனச்சாப்பிடி குந்தியிருந்த சீட்டிய கிடீர்னு பொறவுத் தள்ளி எந்திரிச்சவன், திடுதிடுன்னு அந்தப் பிள்ளையிண்ட ஓட்டமா ஓடி 


‘ஏப் பொம்பளே, சேட்டு கூப்பர்றாந் தெர்லே?  எர்மே மாரி நிக்றே ராஸ்கோல், கித்தனா கோன்?  பொம்பிளே, கித்தனா கோன்?’ன்னு ஒரு அதட்டு அதட்டுனாம் பாரு... விலுக்குன்னு துள்ளிவுழுந்தப் பிள்ள மெரண்டுட்டுதா, அந்தப்பயத்திலேயே இன்னோராடம் தீட்டாயிப்போச்சி.



 ஒட்னக்கால எட்ட வெக்கறதுக்கில்லாமப் பட்டுக்கிட்டிருந்த சித்தரவதயில பிள்ளைக்கிப் பேச நாவே எந்திரிக்கல.  மொள்ள டேண்டு மேலயிருந்து கோனு எடுத்து சேட்டு மின்ன வெச்சா.  எக், தோ, தீன்னு எண்ணிப்பாத்தவனுக்கு, எட்டேயெட்டு கோனுயிருக்கும்பிடி ª----- சுண்டி, படீர் படீர்னு நோங்கிநோங்கி பிள்ள தலமேலத்தட்டி, ‘ஏப் பொம்பளே, எட்டவர் ஷிப்ட்லே, இவ்ளோதாங் கோனா?  வயறு சோற் சாப்ட தெர்தூ, வாங்கறே பைசாக்கு வேலே செய்னும் தெர்லே’ன்னு கொரைக்க, உச்சியில ஈடுத்தாங்கி பிள்ளைக்கி நெருப்பு பருத்தி வெச்ச மாதர மேலேப்பூராம் த்திகு த்திகுன்னு எரிய அவுளுக்கும் மச திலிம்பிட்டுது. 

 ஏந்திக்கிட்டிருந்த கோன நின்ன வாக்குல விசிறி எஞ்சவ, ‘டேய்ய் ஆர்ரா மேலே வெக்கிறவந் தாயாலி, குடுக்கறத மட்லும் எண்ணி கணக்கு வெய்யிஇ மிச்சப்பிடி கை தீண்டற வேலகீல வெச்சிக்கிட்ட மரியாதி கிரியாதியெல்லாங் கெட்டுப் போயிருஞ் சாக்கிரிதி’ன்னு இடுப்புல கட்டியிருந்த பையயிம், தலயிலக்கட்டியிருந்த வேடயும் அவுத்துச் சுருட்டி அவம் மொவரையில யிட்டுப்புட்டு கொண்டயத் தட்டி, முடிஞ்சிக்கிட்டு வேடிக்கப் பாத்தவிங்கப் பாத்தப்படியிருக்க, படப்படன்னு கேட்டு வாசலுக்கே வந்துட்டா.



 வாசக்காலத் தாண்டி இந்தண்ட வந்ததும், அஞ்சி வருசமா அவள புடிச்ச பீடவுட்ட மாதரயிருந்திச்சி.  பின்னயென்னாப் பின்ன இன்னைக்கி நேத்தா அவ சேட்டு மில்லுல குப்பப் போடறா?  எண்ணி எட்டுவயசில மில்லுல அடியெடுத்து வெச்சவ, ஆயிப்போச்சி அவுளுக்கு பதிமூணு வயசி,  மொதவொரு மூணுமாசம் சேட்டுவூட்டாருக்கு சிக்கனம்பட்டி குதரக்குத்திப் பள்ளத்தலயிருந்து காப்பித் தண்ணி டீத்தண்ணி, ஜர்தாப்பொயில வாங்கிக் குடுத்துக்கிட்டிருந்தா.  அதும்பொறவு கெண்டத் தூக்கப் போட்டாங்க.


  மூணுநாளு, நாலு நாளு கெடையா தொட்டியில ஊறனது.  மக்கேரி நம்ப அள்ளி சும்மாடு கோலித் தூக்கி வெக்கையில அத்த பாரத்துக்கு மனுசரு செத்த ஏமாந்தப்பிடி யிருந்தா கை சோட்டு விட்டய அலுங்காம போட்டுட்டு சத்தமில்லாம ஓடிப் போயிருனும்.  ஓஞ்சி நிக்கறதுண்டா?  உஸ்சின்னு சித்த குந்தறதுக்குண்டா?  சும்மாயிருக்கறதக் கண்டுட்டான்னா பிஞ்சின்னும் மாருன்னும் வெச்சிப் பாக்கமாண்டாஞ் சேட்டு.  அத எடு, இத எடு, அங்க ஓடு, இங்க ஓடுன்னு  முடுக்கியேயிருப்பான்.  உள்ளங்காலுத்தேய ஓவத்து வேலச் செஞ்சாலும் மனசே மோவாதுச் சனியனுக்கு. நீ  கொடலியே உருவி கைலக் காட்டு, அதயும் வெறும் வாழநாருன்னுப்புடுவாந் தாயாலி.  


ஆறுமாசம், ஒரு வருசமாட்டம் கெண்டச் சொமக்கப் போட்டுட்டு, பொறவு காடிங்கிக்கும் ட்ராயிங்கிக்கும் சிலைவருக்கேனு தள்ளப் போட்டாங்க.  அப்பிடியிப்பிடி எதனாலுந்துளி அசந்து ரோலுல பஞ்சி கிஞ்சி ஏறிப்போயிட்டா நறுவுசுப் பண்டனது பணிக்கில்லையின்னு அந்தச்சோட்டு ரோலுக்கட்டையிலியே மண்ட மண்டயா இறுக்குவானந்த ட்ராயிங்கிப் பிட்ரு.  மொள்ள பின்னிங்கிக்கி பாபினு மாத்தியுட்டுட்டு ஆறூசி, ஏழுசி எழக்கட்டச் சொன்னாங்க.  இந்தப்பிள்ளைஞ் சூட்டுப்பா பத்தூசி, பன்னண்டூசிக் கட்டிச்சி.  அப்பிடியிருந்தும் முழுசாவொரு மிசினி அண்டியிருக்க முடியாது.  அதுவுமிந்த ஆயரமூசி வளத்திப் பிரேமு வாங்கிப் பூட்னப்பொறவு சிப்ட்டுக்கு இருவுது அரியா, இருவத்திரெண்டு அரியா எடுத்தது எடுத் மாதரயேயிருக்கணும்.



 இந்தச் சீரெழவெல்லாம் பத்தாதுன்னு இன்னோரு பேரெழவுக்கும் பிள்ளைங்க கைக்குடுக்கனும்.  நெனைச் சிக்கிட்டாப்போதும் மூணுக்கொருக்கா, ஆறுக்கொருக்கா இநத் லேபரு ஆபிசிரு, பேட்ரி இனிசிப்பெட்ரு இவிங்கயெல்லாம் மில்லு மில்லா அல்லெடுக்க வருவாங்க என்னம்மோ அவிங்க அவிங்களுக்கு எள்ளும் பொரியும் எறச்சி, கொண்டுப்போயி ஓமலூரு மலையாளத்தாஞ் சோத்துக்கடையில சீமச்சாராயத்தோட ஆட்டுக்கெடாயுங் காவுக்குடுத்து, அவுத்த அந்த பாடமாத்தியில தேர திலுப்பி வழிக்கூட்டி அனுப்பமுட்டும் பிள்ளைங்க பாவம் பஞ்சிக்குழியில ஒண்டிக்கிட்டு மறப்பாப் படுத்துருக்கணும்.


  காத்துண்டா?  ஒரு வெளிச்சமுண்டா?  பங்கினி மாசம், சித்தர மாசமாயிருந்து, அந்த அடப்பாசறத்துல ஒண்ணுமேல ஒண்ணா பொணமாட்டம்டந்துட்டு எந்திரிச்சா, அந்த ஜூட்டுக்கு ஒவ்வோருப் பிள்ளைங்களுக்கு அக்கி வந்தாப்பிடி மேலே கொந்திப் போயிரும்.    ஒவ்வொண்ணுங்களுக்கு தொடச்சந்துலியும், சூத்தாம்பட்டையிலையும் நல்லா இத்தத்தச்சோடு செலந்தி புட்ரிச்சிக்கிட்டு முட்டி, ஈ மிக்க ச்சும்மா சலமா ஊறும்.  செலந்தி ஒடஞ்சி மொளப்பு வாரந்தின்னியும் நடக்கறதுக்கில்லாம நாத்தமெடுத்துக்கிட்டு திரியினும்.  எப்பிடியோ ரெண்டு வருசமா பிரிப்பேட்தியிலியும், பின்னிங்கியிலியும் ஓரியாடிப்புட்டு, மூணாம் வருசந் தொட்டுத்தான் இந்த கோனு வைண்டிங்கிக்கி வந்தா, கூலிக்கித் தக்கன வேல வாங்கறாங்க, அதுக்கு எச்சாவும் நம்ம பாட்டத் திங்கறாங்க.  பாடுப்பட பால்மார்ற பிள்ளயில்ல இவ.  ஊத்த வாயில வெரு வார்த்தயச் சொல்லிப்புட்டு அந்த சொல்லு அழிய றாங்களே, அதக்கண்டாதானே, மனுசருக்கு வேவறது. 



 பேச்சிச் சுத்தம் இல்லாக்காட்டி அந்தெடத்துல எப்பிடிப்பா பிரியமா பண்ணயம்  பண்டறது?  அட விசியம் வேறொண்ணுமில்ல, போனப்பூட்டு தீவாளீக்கி சேட்டு என்னான்னுச் சொன்னானிங்கற, வருசம் முந்நூத்தி அறுவத்தஞ்சி நாளும் நிக்காம வேலைக்கி வாரவிங்களுக்கு, அடுத்த நோம்பிக்கி சைக்கிளு வாங்கித் தாறமின்னு சொன்னதுதாஞ் சாக்கு,  இவ நோவா நொடியா, நோம்பியா கீம்பியா ஒரு கல்லெடுப்பையுங் கண்டப் பாவியில்ல,  அவுளுண்டு மில்லுண்டுன்னு கிருமமா வேலைக்கிப் போயிக்கிட்டிருந்தா.  எப்பாவொரு பொட்டப்பிள்ள நாம்ப யின்னைக்கி வயிசிக்கி வாரமின்னுக் கண்டா வெச்சிருப்பா?  சமஞ்சவளுக்கு தெரட்டிச்சுத்தி வூட்டுக்குக் கூப்படறாங்கயில்ல, அந்தேழு நாளு மட்டும் பிள்ள மில்லுக்குப் போவல.




 மறிச்சி அந்த வருசந் தீவாளி வந்தது.  அல்லாருஞ் சேட்டு நோம்பிக்கி அவுக்கறான்னு ஆளுமேல ஆளு ஏறிக்கிட்டுப் போயி வாங்கிக்கிட்டிருக்க, சம்புநதிப்பிள்ள அதயெதயுஞ்சட்டையேப் பண்டல.  சைக்கிளு வாங்கறத்துலியே குறியாயிருந்தா.  பின்ன ஊரேத் துடும்படிச்சிக்கிட்டுத் திரிஞ்சாளே, வெறுங்கையோட போனா பெருத்த பங்கமில்ல. ரவுசடங்கனதும் போயி இவ, இப்பிடித்தாஞ் சங்கிதி, சைக்கிளு வாங்கிக் குடுங்க சாருன்னு கேக்க...



 ‘ஏழ்நாள் ஆப்ஜெண்ட் எந்த கணக்குல குடுக்கறது?  கண்டதுக்கு வாரியெறைக்க இதுவொண்ணும் அனாதிங்க சொத்தில்ல’ங்கறானே வாயே கூசாம,  இல்லாதவச் சொல்லு சவ ஏறுமா?  மவ மருவறா மருவறா அப்பிடி மருவறா, மாடாட்டம் அழுவறா. ஆண்டியூம்பச் சொன்னா தாசப்பனுக்கு எங்கப் போச்சி பித்தி?  இவுளுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணுமின்னு மில்லே ஏவிடியும் பேசுது.  புதுவருசம் பொங்கலுன்னு எத்தன ரீவு நாள்ல வேலக்கிப் போயிருப்பா?  வந்த கணக்கவுட்டுட்டு வராத கணக்கச் சொல்லி வேல வுட்டுட்டானில்ல.  இந்த அலுப்பநாயி சாவகேசம் நம்புளுக்கு அரமாலுமே வேண்டாமின்னு அன்னக்கி நெஞ்சில வைராக்கியத்த வெச்சா, எண்ணம் இன்னக்கித்தான் ஈடேறுது.




 கசந்து வந்தவ கண்ணத் தொடச்சி அனுசரிச்சி, ரெண்ட வார்த்த தேறுதலா சொல்லாக்காட்டிப் போவுது, எங்கியோ காத்தடிக்கிது, எவுத்திலியோ மழப் பேயிதுன்னே இருக்குறாளே இந்த அரிசியம்பிள்ள, மொதநாளு அந்தியோட வந்து மூலையிலச் சுருண்டப் பிள்ள, மொடங்கனது மொடங்கனாப்பிடியே கெடக்குதே, என்னாயிருக்கும் ஏதாயிருக்குமின்னு பெத்த வவுறு ரவையாச்சிம் பதைக்கிமா பதைக்காதா?  



இந்தம்மாளுக்குப் பொந்தியில என்னா கருத்து ஓடுது...


 இதேதறா, இந்தப்பிள்ள மில்லுக்குப் போவாம, டிமிக்கிக் குடுப்பாளாட்டமிருக்குதே... அம்மா இப்பிடியே மலத்திப் அரியா ஒய்யாரமாப் படுத்துக்கிட்டிருந்தா, அத வெச்சி போயி ரெண்டுநா சம்பளத்துள கிம்பளத்துல எதனாலுந் துண்டுகிண்டு வுழுத்துப்போச்சின்னா, பண்ணாடிமாருங்க பஞ்சாயத்துல முகவா விக்கிறாங்களே டீவிப்பொட்டி, அத வாங்கற வழியெப்பிடின்னு ச்செட்யான கருக்கட வுழுந்துட்டுது.  அந்த ஆவுசந் தாக்கு புடிக்க மாட்டாம தாம் பொம்பள, மறாநாளு கோழிக் கூப்ட்டுச்சோ, இல்லியோ ‘ஏண்டி மில்லுக்குப் போவுலியா?  மில்லுக்குப் போவுலியா’ன்னு மவள அரியா அரிச்சிப் புடுங்கறாளே வுடாம. 


 அம்மாக்காரி சம்பஞ் சாலாக்கெல்லாம் மவக்கிட்ட ஒண்ணுஞ் செல்லுப்பிடியாவல.  சம்புப்பிள்ள புடிவாதமா, படுத்தது படுத்தவாக்குலயிருக்கா.  ஓஹோ யிந்த சண்டிமாடு ஆட்டம் பழக்கப் பாக்குது, அதயெப்பிடி நொகத்துல பொணைக்கிறதுன்னு எனக்கா தெரியாது?  தீனியெடுக்காம புணிச்சிக்கிட்டுருவனிண்ட ஒரேடியா வாட்லாட்டியம் போட்டா காரியங் கந்தராயாயிப் போயிரும்.  எங்கப் போயிரப் போறா?  ஒருச்சித்தய வுட்டுப்புடிக்கலாமுன்னு நெனக்கங்கட்டு பழயச் சோத்துதண்ணி நேரத்திக்கெல்லாம் அரிசியம்பிள்ள பொறுக்கலுக்குத் திலும்பிக்கிட்டா.  


பொறுக்கலுக்குத் திலும்புனவ, முட்டப் போண்டா திங்கலாமின்னு ஒரேத்துருவா காமலாப்பொரம் பெருமாளாசாரி கடைக்கேப் போயிட்டா.  முட்டப்போண்டா திங்கப் போனாளில்ல ஆசாரிக்கடைக்கி, அவுத்தத்தான் எங்கியோ மில்லு நாயந் துப்புத் தெரிஞ்சிப் போச்சி.  அவ்ளதாம்பா, படப்படன்னு சூரிக்காத்தாட்டம் வூட்டுக்கு வந்தவ, வந்தும் வராதமின்ன அலுப்பா கவுத்துக் கட்டுல்லத் தூங்கிக்கிட்டிருந்தப் பிள்ளை, வெடுக்குன்னுத் தூக்கி கீழப்போட்டு மிதிச்சி ஏண்டி ஓலீ, சோறுப் போடற மவராசன், ஒருச்சொல்லு சொன்னாயென்னா?  ரெண்டு ஈடுதான் வெச்சாயென்னா?  ஒண்ணுமில்லாதப் பொத்துலு, உனக்கெதுக்கிடி ரோசமின்னு குமுறுகுமுறுன்னுக் குமுறி, மசத்தப் புடிச்சி தரத்தரன்னு இவள அடிச்சி வேல வாங்குங்க சாமீன்னு, சொல்லிவுட்டுட்டு வந்தப்பொறவுதான், அரிசியம் பிள்ளைக்கி மனசாறி, மத்தியானச் சோறேக் குடிச்சா.

ஞாயிறு, 2 நவம்பர், 2014

வாயிக்கி வணங்காத பூவும் பல்லுக்கு மெதுவான கல்லும்




 பட்டும் பாவியானன் நானு நட்டுஞ்சாவியானன் அடியே ஆயா
 எங்கியாச்சுங் கண்டுக்கறமா இந்தமாரி அநியாயத்த ?தெனம் பத்து தரமுன்னாலும் காட்டுக்கும் ஊட்டுக்கும் நடயா நடந்து, கடன ஒடன வாங்கி முட்டுவழிப்போட்டு, இடுப்பொடிய பாடுபட்டு பண்ணயம் பண்டுனாலும் இந்த எலவெடுத்த வூட்ல இந்தாடி உனுக்கொரு அஞ்சிப்பசா காசின்னு நம்புளுக்கு அவுப்பாரு ஆருமில்ல.

  இப்ப அள்ளாமக் கிள்ளாம ஆரூத்தின்னப்பாடுமில்லாம மூணு ஏக்கரா நெலத்த அந்த கொரங்குத் தேவிடியாளுக்கு இந்த ஏத்தி கூத்தியாருப் பெத்த பையன் பட்டா பண்ணி வெக்கப் போறானாமே......

 இப்படி கண்டவங்கத் தின்னுப்புட்டு போறதுக்கா அந்த கெழுட்டுமுண்ட வவுத்துக்குக்கூடத் திங்காம வாயிலப் பொயிலக்குச்சிய அடக்கிக்கிட்டு சந்த சந்தயா அரிசிவித்துச் சொத்து சம்பாரிச்சி வெச்விட்டுப்போனா?

 மேலுக்கூடைக்கு தக்காளி பத்தல.  பெருஞ்சாதிப்பழமா ஒரு பத்துக் கொட்டாப்புட்டி பொறுக்கி, சின்னப் பொடியிண்ட குடுத்துர்றா மாப்பளைன்னு காட்டுக்குப் போவச் சொன்னன்.  பாலூத்திக் கடஞ்ச பண்ண ரெக்கிரியும் மூணு ருண்டகளியையும் முழுங்கிப்புட்டு போனவம் போனவனே......


 பொதஞ்சந்தக்கி போற பாரவண்டிய நிறுத்தி வெச்சிக்கிட்டு நானும் வருவான் வருவான்னு பாத்துக்கிட்டு இங்க கெடக்கறன்.
 எங்கயிருந்து வருவாம் மாப்ள?
 மூணுநாளா அந்த மூளியூட்லயில்ல குடியிருந்துக்கிறான்.  அப்பயே என்று அங்கம் பதயாப் பதச்சது’  என்னமோ எடஞ்சலு வருதுன்னு நெனச்சன் இப்படிப் பண்ணிப்புட்டானே...

 படுத்தா ரவயில தூக்கம் வந்தா?  பாழும் வவுத்துக்கு ஒரு ஒழுங்கு நீசுத்தண்ணிய நிம்மதியா குடிக்க முடியிதா?  அடி எனக்கு ஆளுன்னாலும் ஆறல’  தீருன்னாலும் தீரல, நெஞ்சில ஒரே ரவ அஞ்சிக்க இல்லாம அவனும் உசுரோடத்திரியறான்.  ஏனா ஆம்பளயின்னு அத்தச்சோட்டு மீசய வெச்சிக்கிட்டு..


 ஏண்டா மொன்னயா ஊரே சிரிச்சி சீலப்பேனு குத்துதே.  உன்னு மொவறையில காரிக்காரித் துப்புதே இன்னும் எதுக்குடா பொன்னயை அந்த மானங்கெட்ட உசுர வெச்சிக்கிட்டுருக்கற?  ஏண்டா உனக்கு ஒருச்சார குறண மருந்து சிக்கல’  ஒருச்சாணு கவுறு சிக்கல’  ஹூம் நல்லவங்க எல்லாஞ் சாவுறாங்களே அட ஆண்டவனே’  இவன நீட்டி நீருப்பூசி வெக்கக்கூடாதா?  ஆடிமா குடிவெட்டி நீளமாப் பொதைக்கக் கூடாதா?

 கெடக்குது வுடுறா’  கெடக்குது வுடுறா’  இதா இன்னிக்கு வந்துரும் நல்லபித்தி’  இத நாளைக்கி வந்துரும் நல்ல பித்தின்னு நானும் எட்டு வருசமா உன்னுகிட்ட ஓரியாடிப்பாத்துட்டன், நீயும் திருந்தி நல்லவழி போறதக்காணம்.  எப்ப என்னய அறியாம அந்த காதறுந்த மூளிக்கி காட்ட எழுதிவெக்க துணிஞ்சிட்டியோ, வுன்னுமாலும் உனக்கும் எனக்கும் என்ன இருக்குது?


 கருத்ததெல்லாந் தண்ணி வெளுத்ததெல்லாம் பாலுன்னு உன்ன அண்டி கெடந்தனே’  அதெல்லாம் அந்தக்காலஞ்சாமி அந்தக்காலம்’  இதாவொரு பையன பெத்துவுட்ருக்கறன் மரியேதியா அவுனுக்கும் எனக்கும் பொழைக்கவொரு தடங்காட்டு, பொறவு நீயி, என்னமோச் செஞ்சி எப்படியோ நாசமாப்போ’

 இவ்வள ஆனப்பொறன ஒங்கிட்ட இருந்த பொழைக்கிறதுல அர்த்தமில்ல.  கெதியத்தவ, கேட்க ஆளு இல்லாதவன்னுதான நீயி இப்பிடி தில்லுமாரித்தனம் பண்ணிக்கிட்டுத் திரியற...   எனக்கும்   சாதி சனம்  ஊரு நம்பக்கெடக்குது ...செரக்கப் பொறந்து நெறக்க      பொழச்சதுங்க  போறேன்
 போயி, அவங்கள கூட்டியாரன்.

 பத்துப்பேர வெச்சி பஞ்சாயம்பேசி துரும்புக் கிள்ளி போட்டுர்ரா சாமி.  உன்னு வழிய நீப்பாத்துக்க என்னுவழிய நாம் பாத்துக்கறன் ஆமா.
 ஒரே ஒரு நிமிசம் இந்தவூட்ல நானு இருக்க மாண்டன், இங்கயிருக்க எனக்கு சுத்தப்படாதுன்னா சுத்தப்படாது.
 ஹூம் நானாப்பிள்ள பொறந்தன் உன்னுக்கிட்ட சின்னப்பட்டு சீரழிய....

 டே கண்ணு சின்ராசு’  கண்டார வோலி பையனே’  எங்கடாப்போயி தொலஞ்ச? உன்னாலத்தாண்டா என்னுசுருப்போவப் போவுது?  வாடா இங்க..  இந்துரா ரெண்டுருவா போயி சளி மிட்டாயி வாங்கித்தின்னு.

 ஒழுங்கா பள்ளியோடம் போ’
 வௌயாட்டுப் பெறாக்குல வூட்ட தொறப்பு போடாம போயி ராத.  இந்தா தொறப்புக்குச்சி’  செத்தாலுந் திலும்பி வர மாட்டேன்னு
புண்ட வாயங்கிட்டச் சொல்லிப்புடுன்னு ஒரே முடுவா அப்பமூட்டுக்கு திலும்பிக்கிட்டா பஞ்சவர்ணம்.



  தடத்துல போற வர்றதுங்க தாம்பாத்துருக்கப் பொறந்தது, இன்னும் ஒழுங்கா கழுவத் தெரியாததுங்கயெல்லாம் பஞ்சவர்ணத்தோட தொகக் கண்டுட்டுப்போற போக்குல அப்படியே ரெவலா தலவ கிள்ளி நெருப்ப பருத்தி வெச்சிருக்குங்க.  அதான் இப்பிடி வேட்டு வெடிச்சி பொக கௌம்புது’
 எட்டுக்கு ஒருக்க, பத்துக்கு ஒருக்க எப்பயும் நடக்கிற கொச வழக்குத்தான்னாலும் இந்தப் பயணம் எதோ முத்திப்போன சமாச்சாரமாட்டமிருக்குது.  இல்லைன்னா பஸ்சு ஏர்றவளா பஞ்சவர்ணம்?


 மீறி மீறிப் போனா வண்டி மேட்டுக்குப்போயி பொழுதடைய அவபொறந்தவ வூட்ல கதய ஓட்டிப்புட்டு துப்பன எச்சி காயறதுக்குள்ள ஓடியாந்துருவா’
 கொண்டுகிட்டு கொலம்பாக்கறது நல்லாயில்லத்தான் என்னாப் பண்டறது?  அவளா பச்சமுத்த கட்டிக்கிறேங் கட்டிக்கிறேன்னு அடிப்பறிக்கிட்டு நின்னா?



ஹூம் அவங்கப்பன் இருக்கறானே திரியோதனன், ராசமுத்து கவுண்டன்.  பொழித்தகராறுல பங்காளி கையவெட்ப்புட்டு போலிசில சிக்கி சேலஞ் செயில்ல கம்பி எண்ணிக்கட்டிருந்தாம் பாவம்.  இவந்தாம்பாத்துட்டு அட அக்காப்பிருசஞ் செயில்ல களித்தின்னுக்கிட்டுக் கெடக்கறானேன்னு சீனிவாச வக்கீலு வெச்சி சே வாதாடி செவச்சி மாமங்காரன விங்கிணிச்சி வெளியக் கொண்டாந்தான்.  அப்ப பஞ்சவர்ணம் வயிச்சிக்கி வந்த புதுசி அதும்பொறவு பாத்துக்க ச்சும்மா கருவாட்டுக்கூடய பூனச் சுத்தனா  ப்புல அவங்கூட்ட இவஞ்சுத்த ராசமுத்து மவள இவுனுக்குக் கட்டிக் குடுத்தாங்க கடன கழிச்சான்.


 தாலியேறுன நாளு மொதக்கொண்டு தண்ணியில எழுதுன எழுத்து அழிஞ்சாலும் தம்பிருசன் சொல்லு அழியமாண்டான்னு நம்பித்தான் பஞ்சவர்ணம் அவங்கிட்ட வாழ்க்கச் செஞ்சா.  அவளாட்டம் உஸ்தியமான பொம்பள கருத்துள்ள பொம்பள ஊருக்கு ஒருத்தருமில்ல.  காலா காலத்துல அவுனுக்கு தெல்லுமணியாட்டம் ஒருப்பையன பெத்துக்குடுத்தா.


 அவ   மாசமாயிருந்தாளே அந்தச்சமயத்துலதான அவுனுக்கு இந்த வெங்காயத்தானோட  வள்ளலுமயிரு முச்சூடுந் தெரிஞ்சது.
எவத்தத்திலும்புனாலும் இவங்கூத்தியா, வெக்கிற நாயந்தான்.  அவுத்தப்பாத்தன்’  இவுத்தப் பாத்தன்’  சனிச்சந்தயிலப்பாத்தன், ஞாயிதுச் சந்தயிலப் பாத்தன், அவளோடப் பாத்தன், இவளோடப் பாத்தன்னு பலரும் பலவிதமா சொன்னப்பக்கூட பஞ்சவர்ணம் அது காது குடுத்துக் கேக்கல.
அவளா ஆள பொடனிமேல கைபோட்டுப் புடிச்சப்பறந்தான் உம்மயான நெலவரத்தக் கண்டுக்கிட்டா.

]
தாரண வருசமோ, கீரண வருசமோ,
ஒருப்பூட்டு
அப்பசி மாசம் செரியான அடமழ’
இப்ப இந்தசின்னராசு பையன் ஆறுமாசமோ தென்னமோ அவ வவுத்துல இருந்தான்.
ஒருநா எங்கியோ காட்டுக்குப் போவலாமுன்னு திலும்புவை,
“இதென்னாடி அநியாயம் இந்தாளு போனா போன எடம்’  வந்தா வந்த எடம்’ காத்தால ஒருக்குண்டாம் பழயச்சோத்துத் தண்ணிய குடிச்சிப்புட்டு போன மனுசன், இன்னும் வூடு வந்து சேரல, வந்தா ஒருவாச்சோத்தப் போட்டுட்டு காட்டண்டி ஒரு வேலவெட்டி பண்ணலாமுன்னா எங்க போறது?  ஒராளுக்கு ஊழியங்செய்யவே நேரஞ்செரியா இருக்குது, அந்திப்பாலு வேறப்பீச்சணும், மாட்டுக்கு பருத்திக்கொட்ட ஆட்டணும்.  ஊர¬ வெச்சது அப்பிடியே உசுரோடக் கெடக்குது.


  இந்த முட்டக்கண்ணி வர்ரன்னா திருட்டு முண்டய இன்னுங் காணம்.  ஒரு மனிசி எத்தன வேலயச் செஞ்சி நாசமாப் போறது.  எப்பப்பாத்தாலும் ஊரெலவாம் பேரெலவாமுன்னு பஞ்சாயம் பேசிக்கிட்டுருந்தாச் சோத்துக்கு வந்துருமா?  தெச்சத்துக்கு பண்ணாடி அதச்சொன்னாரு இதச்சொன்னாருன்னு வீம்பொல்லாப் புத்தாம் மிச்சம் வேண்டாஞ்சாமி இந்தி எச்சிப்பண்ணாட்டுன்னுச் சொன்னா இந்த மொடமசுருப்புடிச்சவங் கேட்க்றானா”ன்னு போன வனக்காணமுன்னு கோவத்துல சாமானஞ் சட்டெல்லாம் பொழங்கறாப்புல பொழங்கிப் போட்டு நொறுக்கிக்கிட்டிருந்தா அப்பத்தாம் பூட்ல பூந்த பச்சமுத்து,
“என்னாடிப்பிள்ள வூட்ல ரவுசு”ன்னு ஒரு அதட்டு அதட்டும்பிடி பண்ணாடிச்சி சத்தங்கித்தமெல்லாங் கைலப் புடிச்சாப்புல டக்குன்னு நின்னுப்போச்சி.




“யேமாமா ஆளுமேல  ஆளு உனுக்கு எத்தன ஆளு வுடறது, வந்து ஒருவாச்சோறு தின்னுப்புட்டு போறதுக்கென்னா?  ஓரெடத்துக்கு போனா மலாருன்னு திலும்பற வேலயே இல்ல.  பேஞ்சப் பாடுமில்ல காஞ்சப்பாடுமில்ல சிணுங்கு சிணுங்குன்னு விடிய விடிய தூறுது விடிஞ்சுந் தூறுது’  மொழுங்காலு வதியில எந்நேரங்காட்டுக்குப் போறது?  அந்தக்காரியுஞ் செவலையுங் கத்திக்கிட்டு கெடக்குங்க.  ரூ£ம் போனாத்தானே ரெண்டு தட்டுகிட்டு அறுத்து அதுங்க வவுத்துக்குப் போடமுடியும் எதோ அரப்படி ஒருப்படி பாலுகறக்குது அதயுங்கூட வெச்சிருவ மாட்டமிருக்குது”ன்னு ஒரேமுட்டா அவ அலுத்துக்கும்படி
“அதயேஞ்சொல்றப்பிள்ள போப்பிள்ள பொழுது மொளச்சும் மொளைக்காத மிந்தியே எவனாச்சும் ஒருத்தன் நாயங்கொண்டாந்துர்றான்.  அக்கப்போர எடுக்க முடியல”ன்னு இவுனுஞ் சலிச்சிக்கிட்டான்.



“அவுங்களுக்குத்தாம் பொழப்பில்ல உனுக்குமா?  வா வா வந்து இதக்குடி”ன்னு ஒன்றப்படி எருமத்தயிர்ல ஒரு வெண்ணத்தாழி பச்ச நெல்லஞ் சோத்த போட்டு நைப்பா கறச்சி ஊத்துனா பஞ்சவர்ணம்.  பச்ச மொளவாயக் கடிச்சிக்கிட்டு மொடக்கு மொடக்குன்ன குடிச்சக் கையோட கட்டுல்ல மல்லாந்துக்கிட்டாம் பச்சமுத்து.


“படுத்தமாயத்துல கொறட்ட வுட்றாத மாமா, ங்கெம்மாளுக்கும் ங்கெப்னுக்கும் நோம்பிக்கி வர்றாங்க வூட்ல ஒருச்செலவான செலவில்ல சந்தக்கிப் போவுனும் நெனப்பிருக்குதான்னா” அவ,



“நாலுமணி நாவநாதனுக்குப் போறம்பிள்ளச் சும்மா தொணதொணன்னு பேசாதப்பிள்ள”ன்னான் இவன்.


 “ச்சேரி, அப்பிடின்னா சித்தங்கூறியத்துல கெத்தலோடம் மருமவவருவா அந்தப் பருத்திக்கொட்டய ஆட்டி எடுத்துக்கிட்டு நானு மாட்டுக்கு தண்ணிக்காட்றதுக்குள்ள நிமுசம் ஓடியாரச் சொல்லு.  அங்கயிங்க நீட்டி நெளிச்சிக்கிட்டு நிப்பா சட்னு தொறத்திவுடு சந்தைக்கு போறப்ப மறக்காம வூட்ட தொறப்பு போட்டுட்டு தொறப்புக்குச்சிய தங்கம்மா அப்பாயிக்கிட்ட குடுத்துட்டு போம்மாமா”ன்னு


 பஞ்சவர்ணம் பக்குவஞ்சொல்லும்பிடி,


“ச்சேரிப்பிள்ள நீ மழைக்கிமின்ன கௌம்பு ரவைக்கி வந்து அடுப்பு பத்த வெக்கினும்மில்ல”

ன்னு பொண்டாட்டிய காட்டுக்குத் தாட்டிவுட்டாம் பச்சமுத்து.


வழி வழிய அலுமினியச்சருவத்துல தீனிய எடுத்துக்கிட்டு பஞ்சவர்ணம் காட்டுக்குப் பொறப்புட்டா.  ஊருக்னெத்த தாண்டி சின்னப்பொன்னி பூட்டு தென்னந்தோப்பத்தாண்டி இட்டேரிமேல ஏறுனா ஏமாந்தப்பிடி எட்டி அடிவெச்சதுல முட்டுக்கல்லுல நெக்குனு மோதி ‘ச்சளக்குனு’ சருவத் ருந்த தீனித்தண்ணி மேல வழிஞ்சோட,

“என்னாடி இட்டேரி எங்கொலாயிலயிருந்த இட்டேரி’  ஓராளு உள்றபூந்து போவமுடியிதா புண்டத்தலயெரிங்க ஓட்டு வாங்க க்குள்ள மட்லும் வந்து வந்து பொச்ச நக்கனானுங்க.  காரிய மானபின்ன அப்பரம் எதயுங் கண்டுக்கிறதில்ல..........கட்டியத்தின்னிங்க நம்புளுக்குத்தாஞ் “சங்களவம்” மின்னு ஊரு பெரியத்தனக்காரனங் ரெண்டு எத்தி ஏலம்போடுட்டு மாத்துடப்பு மாத்திக்கலாம்ன்னு ஆட்டுக்கே திருப்பியும் நடந்தா, தீனிக்கவிச்சி ஒண்ணுஞ்சொல்லிக்க முடியல

.
“திக்கத்தப்பான என்னா நாத்தம் நாறுது பாரு கழுதமுண்டைங்கக்கிட்ட தீனியில கறிச்சாத்த ஊத்தாதிங்கடி ஊத்தாதிங்கடின்னா எந்த வெள்ளாச்சி கேக்கறா நம்புளுக்கே நாத்தம் தாக்குப்பிடிக்க முடியிலியே அந்த வாயிலாச் சீவனுங்க எப்பிடி தண்ணி குடிக்குங்க”ன்னு தீனி ஊத்தற பொம்பளங்களையும் வுட்டு ரெண்டு வெளாசு வெளாசுன்னு வெளாசுனா



ஏதுரா பொடக்கலிப்பக்கம் பொண்டாட்டி ரவுசு கேட்குதுன்னு குட்லுமேல படுத்துக்கிட்டிருந்த பச்சமுத்து அரக்கப்பறக்க எந்திரிச்சி ஓடியாந்து,
“அதயேங்கேட்கற மாமா, அந்த இட்டேரி முட்டுக்கல்லு இடிச்சி கீழவுழுந்து மண்ட ஒடஞ்சிக்கும் நல்லவேள தப்பிச்சேன்.  புளிச்ச தண்ணி தெறிச்சி மேலுப்பூரா ஒரே சலதாரக்கப்பு அப்படியே  ஒக்காளிச்சிக்கிட்டு வந்து”ன்னு அவ இட்டேரியில வுழுந்த கதயச் சொன்னா பஞ்சவர்ணம்.


“அடடா ஏப்பிள்ள பாத்துபோவக்கூடாதா”ன்னுச் சாங்கியத்துக்கு என்னும்மோ ரெண்டுச்சொல்லு வெசாரிச்சியும் வெசாரிக்காத மின்ன,

“ச்சேரி சேரி நாலுடப்பா தண்ணிய வாத்து கழுவிக்கிட்டு ஒடுப்பிள்ள சீக்கர”முன்னு பறவா பறந்தாம் பச்சமுத்து.



“அடயிரு மாமா துணி மாத்திக்கிட்டு போறன்”னா அவ.



“இவுத்தியே அல்லாட்டம் போட்டுக்கிட்டிருந்தா சொசைட்டிக்கி பாலு ஊத்தனாப்பலதாம்போ”ன்னு வாசக்கால்ல குறுக்க நின்னுக்கிட்டு பொண்டாட்டிய உள்ற வுடாம வளைச்சி முடுக்கிறதிலியே குறியா இருந்தான் ...


“இதா மாமா சித்தி நவுர்ரியா சீலயும் லவுக்கவும் நனஞ்சிச் சதசதன்னு போயிரிச்சி.  ஈரத்தோட அப்படியே என்னமுட்டும் இருக்கறது?  ஒருநேரம் பாலு ஊத்தாட்டிப் போவுது மோருக்கடஞ்சிக் குடிச்சிப்புட்டுப் போறது’  இப்படியெல்லாம் உசாராப் பொழச்சிருந்தா இந்நேரம் நம்ப பொழப்பு கொண்டயத்துக்கு போயிருக்காது ஹூம்”ன்னு


 புருசன ஒரு போடு போட்டவ பண்ணாடி படுத்திருந்த உள்ளூட்ல பூந்து பொட்டியத் தொறந்து சாக்கிட்டு ஒண்ண எடுத்தா போட்டுக்கிட்டுருந்தத அவுத்து தூக்குமேல போட்டுட்டு மாராப்ப வாயிலக் கடிச்சிக்கிட்டு சோத்தாங்கையச் சாக்கிட்டுக்குள்ளவுட்டா பாக்காத பண்டமாட்டம் பச்சமுத்து பொண்டாட்டிய பொடக்கு பொடக்குன்னு பாத்துக்கிட்டிருந்தான்.  சனியம்புடிச்ச முந்தி நழுவி ரவுக்குனு கீழ வுழுவ ஐயய்யோன்னுப் பதச்சி அவ குமிஞ்சி முந்திய அள்ள கட்லடிய ச்சர ச்சரக்க என்னமோ ஏதோன்னு இவ உத்தப்பாக்க அவுத்த செத்த ஆட்டுக் கண்ணாட்டம் ரெண்டு முட்டக் கண்ணு பிதுக்கா பிதுக்கான்னு முழிச்சிக்கிட்டிருந்திச்சி.
என்னாப்பண்டுவ?



கற கறன்னு கண்ல பிச்சிக்கிட்டு வந்த கண்ணுத்தண்ணி வெரல்ல வழிச்சி சுண்டியெஞ்சிப்புட்டு வாயிப்போசம கப்புனு இந்துக்கிட்டா இன்னிக்கி இருக்கிற நெனப்பு அன்னிக்கி இருந்துருந்தா ரெண்டுபேத்தயும் செக்கப்புழிஞ்சி செனாருக் கௌப்பியிருப்பா முழுக்க நனஞ்சபொறவு முக்காடு எதுக்குங்கறாப்ல பச்சமுத்துக்கு பின்னியுங் குளுருவுட்டுப்போச்சி ஹூம் இன்னிக்கி நேத்தா அவம்பித்தியப் பாக்கறம்?



என்னிக்கி மீச மொளச்சி தொண்டக் கட்ச்சோ அப்பப்புடுச்சி அவுனுக்கு இதே தொழுவாடுதான்.  எத்தன வூட்ல கூரயப் பிரிச்சிருப்பான்?  எத்தனவூட்டு செவுரு ஏறிக்குதிச்சி ஈடு தின்னுட்டு வந்துருப்பாந்தெரியுமா?



ஓராடங் கழுத்த கத்திரிச்சிப் போறப்புலக் கூட ஆயிருக்குது’
இந்த குட்டக்கரமேட்ல சம்புநதி, சம்புநதின்னு ஒரு பொம்பள இருந்தா.  எந்நேரமும் அவுளுக்கு பத்துப்பேரோட தொடுப்பு’  அதும் இந்த சிறுவயசிப் பசங்கன்னா அவுளுக்கு இன்னும் நொம்போ பிரியம்.  கூட்டிக்கிட்டுப்போயி நேரு, கூறு, நெளுவு, சுளுவுத் தொச்சமில்லாமச் சொல்லிக் குடுப்பா.  சூது வாது தெரியாதவ ஒரு கவுடத்தவப் பாவம்.



இந்தப்பழம எப்பிடி இவுனுக்கு தெரிஞ்சிதோ இல்ல ஆருச் சொன்னாங்களோ.  நெனப்பெடுத்துக்கிட்டு பையன் ஒருநாள் தண்டு கட்டிக்கிட்டு அஞ்சாறு வலசுப்பசங்களோக் கூட்டிக்கிட்டு அவ வூட்டுக் கொட்டாயிக்கிப் போயிட்டாம்ப்பா கொட்டாயின்னா ஒசக்க செவுரேத்தி தூளம் போட்டு ஓடு மேஞ்சதில்ல.  நெடுக்குவார குறுக்கு வார ஓட்டி பனவோலையில மேஞ்சி எறவாணத்தச் சும்மா ரெண்டு மூணடி செவுத்துமேல எறக்கிவெச் சிருக்கறது இவமபோயி வூட்டுக்கு மின்னப்பாக்க கதவு உள்தாழுப்போட்டுருந்தது.  அப்பரம் இவம்பொறனபோயி எறவானத்தப் பிடிச்சி அப்படியே அலாக்காத்தூக்கி சந்துல தலயவுட்டு முட்டி “அக்கா அக்கா”ன்னு நல்லாப்பெருத்த ஒரவுட்டுக் கூப்புடும்படி அந்நேரம் அவெங்கியோ ஒரு குருவிக்காரப்பீத்துலோட முசுவா பண்ணயம் பண்டிக்கிட்டிருந்தா ...

சிவப்பூசயில இதென்றா கரடிக்கத்துதுன்னு அவன் குருவிச் சுடற டுவாக்கிய எடுத்து ‘டொப்புனு’ச்சுட்டு “ஆர்ராவன் ங்கோயால இன்னேரத்துல’  தெகிரியமிருந்தா எம்மின்னால வாங்கடாப் பாக்கலாமுன்னு கருவனாம் பாத்துக்க இந்த கூட வந்த கொலவாரிங்க.

எரவானத்த இவம்பொடனிமேலயே வுட்டுட்டு திக்காலிக்க ஒண்ணாச்சும்மா பிச்சிக்கிட்டு ஓட்டம்பிடிச்சிவுட்ருச்சிங்க.  கீழு நடுவார இவம் பெறங்கழுத்துல நல்லாப்பொருத்தி ஒக்காந்திக்கிச்சி.  தலய வுள்ள வுட்டு எடுக்கறதா? வெளியவுட்டு எடுக்கறதான்னு பையங் கதவடிய சிக்கன பெருச்சாளியாட்டம் தெணறி, திண்டாடி தவுளிச்சி நெண்டி, நெளிஞ்சி ஒராழு குழிப்பறிச்சி மொள்ள விங்கிணிச்சி எடுக்கறதுக்குள்ள நரம்பு பெரண்டு கழுத்துப் பெசகிக்கிச்சி.

அத்தன ஒவுத்தினியத்திலியும் வூட்டுக்கு திலும்பி வருவானா ......... பையன்?
ஆளு ஒசரம் வெவசாயக் கொட்டமரம் கிர்ருன்னு மொளச்சிக் கெடந்தது.  அதுல இவம் ஒட்டுமூட் நாயி கூலுக்கு காத்தாப்ல காத்துக்கிட்டு கெடந்துட்டு சாமத்துல போயி சம்புநதிய என்னாச் சேதின்னு கேட்டப்பொறவுதான் வந்து தாவுச் சேந்தான்.
மலமழுங்கி மாரியப்பனுக்கு ஒரளுக்கல்லு எங்கித்தி மூல?  இப்பேருப்பட்ட வல்லாளக் கண்டனுக்கு பொண்டாட்டி பேசறதும் புடிக்கறதும் பொச்சி மேல ஒட்ன மண்ணு’  ச்சும்மா தட்டிவுட்டுட்டு அவம்பாட்டுக்கு ஊருமேயப் போயிக்கிட்டே இருப்பாம் பாத்துக்க




இவங்கோளாற கண்டப்பின்னா இரும்புப்பூணு மாட்டாத கொறையா பஞ்சவர்ணம் என்ன என்னாவோ கண்டுக்கல மேல கண்டுசனு போட்டா.  கட்டுமானமும் பண்டிப்பாத்தா, ஒண்ணும் அவங்கிட்ட பொட்டு நவுத்த முடியல.  திருடனுக்கு காவுலு இருக்க முடியிமா?
என்னமோ ஆத்ரந்தாங்காம அப்பமூட்டுக்கு போயிட்டாளே ஒழிய அவுளுக்கு அங்க காலு கெடயில தங்கல.

ஆளு இருந்தாலே “ஊரே கேளு’  நாடே கேளு’ன்னு திரியறவன் ஆளு இல்லாத நேரத்துல கையக்கால வெச்சிக்கிட்டு சும்மா இருப்பானா?  அவன் நெனப்பு எடுத்துக்கும்படி பஞ்சவர்ணம் சொல்லாம கொள்ளாம பிருசமூட்டுக்கு மூட்டயக் கட்டனா.
என்னத்த நெனச்சி என்னா ஆவப்போது?  மவனாட ஆசைக்கு  பச்சமுத்து நேத்த ராவே கொடம் ஒடச்சி கொள்ளி வெச்சிட்டான்.  வண்டியச்சும் முறிஞ்சிப்போச்சி’ ஆயக்காலும் கழண்டுக்கிச்சி.  எந்தண்ட நவறதுக்கும் வாட்டமில்ல.


 இருக்க எடந்தெரியாம அவணுண்டு அவனோட வேலவுண்டுன்னு பொட்டாட்டந்தாங் கெடந்தாஞ் சின்ராசு ஒரு மூலையில.
அதும்போவ அவனுக்கு இந்தப் பொட்டப் புள்ளைங்க சமாச்சாரமே துப்பரவாப் புடிக்கவே புடிக்காது.  எங்கியாச்சும் பசங்களோடச் சுத்தயில போறது வாரதுங்கள நின்னுச் சித்த வேடிக்கப் பாக்கறானே அதோடச் சேரி மித்தது எதிலியும் தலப்பட்டுக்க மாட்டான்.  ஏன்னுக் கேளு’
ராசாமணி, ராசாமணின்னு அவனுக்கொரு கூட்டாளி குட்டப்பட்டி புதூருல இருந்தான்.  அந்த ராசாமணிக்கி வடிவேலு, வடிவேலுன்னு ஒரு சேத்தாளி அந்தூருலியே.  வூட்டுக்கு போவ, வர வடிவேலுப் பையந் தங்கச்சி அன்னக்கிளிக்கு ராசாமணி மேல ஒருக்கண்ணு’ இவுனுக்கும் அவமேல ஒருக்கண்ணு’


ரெண்டுங்களும் அவுத்த இவுத்த சேந்த வாக்குல திரிய வெவகாரம் முத்தி விசியம் வெளியத் தெரிஞ்சிப்போச்சி.  ரெண்டு வூட்டாளுங்கள இதுங்களச் சித்த வுட்டுப்புடிச்சிருந்தா ஆயிருக்கும்’  ஒரேடியா கிடுக்கிபோட்டு நெருக்கும்படி அதுங்க இதுதாஞ்சாக்குன்னு ஒப்புடிச்சுட்டுருச்சிங்க ஈரோட்டு கொடுமுடிக்கி.
பையமூடு அப்பிடியொண்ணும் வசதி வாய்ப்புள்ளவிங்க இல்ல.  என்னமோ அவிங்க பொழப்பு அன்னாடங்காச்சி’  வண்ணாம்மாத்து ராசாமணியவிக சித்தப்பங்காரனும் சின்னாயாளுந்தான் நின்னு ச்சேரி பையன் பிரியப்படறாம், பொழச்சிட்டுப் போவுடும்னு ப்ளசரு காரு கொண்டாந்து ஏத்தி தாட்டிவுட்டாங்க.  அதுங்க பாட்டுக்கு அதுங்க போயிரிச்சிங்களா, பொறவு பிள்ளய பெத்தவிங்களும், பையனப் பெத்தவிங்களும் விடிய விடிய தேடி விடிஞ்சிம் ஒரு வாரந்தேடனாங்க.

 சோடி கைக்கிச் சிக்கல போயிச் சாட்டாவுதுன்னு கம்முனு வுட்டுட்டு இருந்து கிட்டாங்க.


இந்த எடவெளியில ராசாமணியவிக சின்னாயிக்காரி அன்னக்கிளியவிக அம்மாளுக்கும் தடவழியில என்னம்மோ தகராறு பேச்சி மேல பேச்சி முத்தி, ஒண்ணு மேல ஒண்ணு போட்டு சண்ட வலுத்துக்கிச்சி.


“ஓடுகாலி முண்டயப் பெத்துப்புட்டு உனக்கென்னடி இவ்வளவு ஏத்தமின்னு” ஒருச்சொல்லு இவங்கேக்க, அவச் சொல்லு பொறுக்க மாட்டாம,

“பாழும் பிள்ளயப் பத்திதான இந்தப்பேரு’  லட்சம் உருவா செலவானாலுஞ்சேரி... பிள்ளய கொண்டாந்து தாவுச்சேத்தங்கடா’ எங்கையால அவக்கழுத்ததிருவி எஞ்சிப்புடறன்”னு மாரியம்மா சாமியாட, அப்பறம் பாத்துக்க’ மூல மூலைக்கு ஆளு பறக்குது.
முசுவா தேடி, துப்புக்கண்டு பிள்ளைக் கொண்டாந்து. குட்டப்பட்டியில போட்டு குப்பு குப்புன்னு குப்பி, கையோடக் கையா இன்னொருப் பையனச் சல்லுசாப் பிடிச்சி கட்டி வெச்சிட்டாங்க.  வூட்டவுட்டுப்போயி ஒரு வாரமா திரிஞ்சவிங்களுக்குள்ள எதனாலும் கசமுசா நடக்காமியா இருந்துருக்கும்?


  அதயெதயும் நெனச்சிப்பாக்காம பிருசன அத்தவ புதுப்பொண்ணுங்கறாப்பிடி அத்தப்பிள்ளை கட்டனவனோட பொழைக்கப் பொயிட்டா.  இந்த ராசாமணி அவள நெனச்சி தண்ணி வண்டியாவ ஊரு ஊருக்கு அல்லு எடுத்துக்கிட்டு திரியறான்.
அதப்பத்தி சின்ராசுக்கு பிள்ளைங்கன்னாவே செரியான கருக்கடப்பாலம்.
இந்தக்கூட இருக்கற சொலவாரிங்கதான் எதுத்தூட்டுப்பிள்ள உன்னப் பாக்குதுடா, எதுத்தூட்டுப்பிள்ள உன்னப் பாக்குதுடான்னு சும்மாயிருந்தவனஞ்...... சுக்க வெச்சி ஊதி வுட்டுட்டுடானுங்க இருக்க மாண்டாம இவுனும் ஒருநாளு அந்த பிள்ளய வெறுக்கு வெறுக்குன்னுப் பாக்க பட்டுக்கிச்சி.ஒரு வயசிப் பையனுக்கும் ஒரு வயசிப் பிள்ளைக்கும் ஒருத்தருமேல ஒருத்தருக்கு நெனப்பு எடுத்துக்கிச்சின்னா, அவிக பண்ற ரோலாயத்துக்கு அளவே இல்ல.  மொதல்ல அதுங்களுக்கு காலு தலையில பாவுதா?  எதுக்க வர்£ரது இன்னதுதான்னு ஒரு பிருவு, நெதானந் தெரியிதா?  அதும் இந்தக் காலத்துப் பிள்ளைங்க இருக்குதுங்களே சுத்த மோசம்.  அப்பிடியே தலகீழ நிக்கிதுங்க.



நெவுலடியா ஒரு மறப்புச் சிக்கறதுக்கில்ல ஒரு ஈடு பொரன்டு எந்திரிச்சித்தாம் போவுதுங்க.  ஆரு இருக்கறாங்க?  ஆரு பாக்கறாங்கன்னு துளிக்கூட ஒரு அஞ்சிக்க கெடயாது அந்த வாக்குலதான் இவுனும் அந்த வசந்தாப்பிள்ளய எவுத்திக்காலி கண்டாலுஞ்சோ... சந்து பொந்து, இண்டு இடுக்குன்னு நிக்காம அந்தட்ல ஒரடி தாண்டமாட்டான்.  அதென்ன நாயம் பேசுவாங்களோ மணிக்கணக்கா.  கேனம்புடிச்சவன் வளச்சி, வளச்சி ஒரே நாயம் பேசறாப்ல ஒண்னுக்குமத்த நாயத்த வாயி நோவ பேசுவாங்க.



தெக்க, வடக்க பாத்தமாதர எதுரெதுரு வூடுங்கறதனால என்னிக்கி எந்த வூடு தொறப்பு போட்டுருந்தாலுஞ்சேரி அன்னிக்கி அவுத்தான் ரெண்டுபேத்துக்கும் படுக்க தப்பு தண்டாவுக்கு துணிஞ்சதில்ல, ஆனா முன்னித்தி வௌயாட்டு உண்டு.  இப்பிடி புருசன் பொண்டாட்டி மாதர ஒண்ணும் மண்ணா பொழங்கிக்கிட்டு இருந்ததுங்க கத்திரிக்கா தெரண்டுப்போச்சின்னா பெறவு சந்தைக்கு வந்துத்தானே ஆவுணும்?


 பழம ஊருக்கே தெரிஞ்சிப் போச்சி.  பொரட்டாசி கடக்கெடிம சோரவப் பெருமாக் கோயிலுக்குப் போனதுங்க சாமியக் கும்புட்டுட்டு, மெரமணயச் சுத்திபுட்டு, வந்துருந்தா ஆயிருக்கும்?  பாலிப்பாறப் பொரட்டுல ஒருத்தரு மேல ஒருத்தரு சாஞ்சிக்கிட்டு ரெண்டுப்பேரும் ஒட்டுக்கா குந்தி பேசிக்கிட்டிருந்தத பச்சமுத்து நேருக்கு நேரா பாத்துட்டான்.
சண்ட கிண்ட புடிக்கல, வூட்டுக்கு வந்தவம் பையங்கிட்ட கூப்ட்டுச் சொல்லிப்புட்டான்.

“அடே அந்தப்பிள்ள நம்ம வூட்டுக்கு ஆவாது, அப்பிடி எங்கள மீறி எதனாலும் ஏடா கூடம் நடந்ததுன்னு வையி ங்கோயாளும் நானும் கவுறுப் போட்டுக்குவஞ் சாக்கிரிதி”ன்னு அறுதிகட்டி ஒரே தீருமானமாச் சொல்லிப்புட்டான்.என்னாப் பண்டுவ?  சின்ராசு ஒருவாரம் பத்து நாளா சோறுத் தண்ணி ஒண்ணும் எதயே எடுக்கல.  அப்பிடியே நாளுப்பட்ட நோவுக்காரனாட்டம் கெடயில வுழுந்துட்டான்.  இன்னதுதான் அவம்புத்தியில ஓடுதுன்னு இல்ல பலமாதிரியா ரோசன.


“இந்தாளு எதுக்கு அந்தப்பிள்ளய வேண்டாங்கறான்?


அவளுக்கென்னா கொறச்சலு?  கோணயா?  மானயா?  இல்ல ஒட்ட ஒடுசலாச்செவ ச்செவன்னு தக்கோளி பழமாட்டம்பள்ள’  கொணம் மனமும் சும்மாச் சொல்றதுக்கில்ல.  பச்சத்தங்கம் அதும் போவ பிள்ள என்னா அன்னி அசலா?  தூரத் தொலயா?
எடுத்துப்போட்டங் கழுத்த முறிச்சன்னு ஒரு மனுசன் இப்பிடி அரமாலும் ஒருப்பிள்ளய வேண்டாம்னா அதுக்குவொரு காரணம் வேணுமில்ல.  இவனா வெச்சிப் பொழைக்கறான்?  இன்னும் பத்து வருசமோ பதனஞ்சி வருசமோ ஓல வாங்கிட்டு மேலப்போயிருவான்.  எசவில்லாத தாவுல மாட்டிக்கிட்டு பொறனாட்டுக்கு நானுத்தான நமுக்கப்படனு”மின்னு பொடம் பொடன்னு சடஞ்சிக்கிட்டிருந்தப் பையன். முந்தா நேத்து
“ஏண்டா அப்பம்பையா அந்தப்பிள்ளய வேண்டாங்கற”ன்னு ச்சும்மா புடி புடின்னு எதுக்குப் புடிச்சிக்கும்படி பச்சமுத்து அந்தண்ட இந்தண்ட இண்ணும் திமிர முடியல.




பையங்கேக்ற கேள்விக்கி வருலச் சொல்லணுமா?  வாண்டாமா? செத்து பொணமாட்டம் வெரைச்சிப்போயி ஒக்காந்தியிருந்தவன் பாக்கற முட்டும் பாத்துட்டு படக்குன்னு குட்ட ஒடச்சாம் பாத்துக்க சின்ராசுக்கு அண்ட சராச்சரமெல்லம் காலடியில புடுங்குது.
அவனொண்ணுஞ் சொல்லல,

“இப்படித்தாண்ட மவனே உன்னையாட்டஞ் சிறுவயசுல அவங்கம்மாக்காரியிண்ட நாங்கொஞ்ச நாளு தடுமாறிக்கிட்டுருந்தண்டா அப்பா’  அவ ஒனக்கு தங்கச்சி மொற வேணுன்டா பால பாக்காட்டிப் போவுது சட்டிய பார்ராச் சீத்த சாமி”யின்னான்.



பையனுக்கு காலுக்கையெல்லாம் வெலவெலன்னு போயிரிச்சி வந்து கட்ட மேல வுழுந்த வந்தாம்பா.  இன்னையோட ரெண்டு நாளு ஆவுது மேல எந்திரிக்கவேயில்ல.  நெனச்சி நெனச்சி மருவறான் மருவறான் அப்பிடி மருவறாந் தன்னப்பா பீத்தநாயி அதச்சொல்லாம இருந்துருந்தா ஆயிருக்கும் ஹூம் வட்டி நம்ம சோத்தப்போட்டுட்டு அதுல துளி நறவல வெச்சாப்ல.  ச்சை’ இந்தப் பையனுக்கு மனசே ஒம்பல.


இப்பேருபட்ட அப்பனுக்கு மவனா பொறந்துட்டு இன்னமேட்டும் உசுரோடத் திரியதுல அர்த்தமில்ல”ன்னு படபடன்னு எந்திரிச்சாம்பா.
எந்திரிச்சப்பையம் போயி எரவானத்துல சொருவி வெச்சிருந்த பயத்த மருந்தப் பொட்னத்த எடுத்துப்பிரிச்சி தண்ணி வாத்துக்கற டப்பாவுலக் கொட்டி கொடி கொடின்னுன்னு டப்பா வழிய கரைச்சி தவுக்னு வாயில ஊத்த அண்ணாந்தாம்ப்பா அந்நேரம் எங்கியோ இந்த விருப்புக்கு மல்லலாமின்னு பொக்காலிக்கி வந்த பஞ்சவர்ணங் கண்ல இந்த சமாச்சாரம் பட வெடுக்குனு கையத் தட்டிவுட்டவ


 “ஐயோ மவனே இதென்ன வேல”  ஆர்ரா உனுக்கு இந்தப்பித்திய படிச்சிக் குடுத்தது?”ன்னு அவன மடியில போட்டுக்கிட்டு கண்ணீருவுட்டா “அம்மாப்பிள்ள வசந்தாள நாங்கண்ணாலம் பண்டிக்கிலைன்னாக் கூட தொலையிது’  அதப்பத்தி காரியமில்ல’  இந்த அப்பம்பையன நெனச்சிட்டா தாம்பிள்ள எனக்கு சாவலாமின்னே இருக்குது” ன்னு

 சின்ராசு பொலம்ப,

“அவங்கெடக்கறாண்டா ஆகாவழி’  அஞ்சாறு மொறக் கண்டவனா?  அவனுக்கென்னா தெரியும்?  மயிராத் தெரியும் “நாஞ்சொல்றன் நீக்கோளு’  அந்தப்பிள்ள உனுக்கு கொளுத்த மொற இழுத்து கொண்டி தாலிக்கட்றா”ன்னு பையன வழிக்கூட்டி அனுப்பி வெச்சா.

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

நாள்கிழமை  நல்லது கெட்டது  நோம்பி  நொடி
ஊரு சேதி  போக்குவரத்து  பயணம்
ஒருத்தி இருக்கிறாளேயென்ற ஓணத்தி  துளியுங் கிடையாது
தாரைவாத்த  கைப்பேசிக்கு  எப்படி மனமுடைந்து  போகிறோம்
செங்கோட்டய்யனென்பது பேருக்குத்தான் சொல்லாமல்
கொள்ளாமல்  பாதி ஆயுள்  பறந்தோடிவிட்டது    
கூடிகலவி  புரிந்த பொழுதுகளில்
அப்படியொன்றும்  மகத்துவமில்லை
ஆண்டுக்குள்ளொரு பேறு அதுவும்  சமைந்துவிட்டது
பணிமூப்பு  திறன்   நயந்து  வாழ்க்கை  துணைநலம்
அபிவிருத்தி  துறையில்  கூடுதல்  பொறுப்பு  வேறு
முதுகுக்கு  சோப்பு  போட கால்வழியும் உள்ளாடையை
கசக்கிப்பிழிய  வேட்டி   சட்டை  வெளுத்துகொடுக்க
கடன்வாங்கி  உடன் வாங்கி  பச்சை  வைக்க
பெத்து பிறப்பு -அண்ணன்  தம்பி -மாமன்  மைத்துனன்
வந்தால் போனால்  வடித்துக்கொட்ட
வாடிக்கையாளர்  சேவைக்கட்டணம்  சகாயம்தான்
தீவாளி தள்ளுபடி  சீலை  ரெண்டு
கிள்ளுச்சரம்  முழம்  பத்து  உருவா
அவளன்றி  ஓர்  அணுவும்  அசையாது
ஏர்ப் பிடித்தவன்  என் செய்வான்

பானை  பிடித்தவள்  பாக்கியசாலி

வியாழன், 23 அக்டோபர், 2014

கல்யாணத்தில் மணமகன் இழவு வீட்டில் பிணம்
பார்த்திருக்க தின்று முழித்திருக்க கை துடைக்கும்
வெள்ளித்திரை பிரும்மாக்கள் ஏரி வேலைக்கு
போனால் என்ன - சோத்துக்கு வழியில்லை
கலைத் தாகமென்றுச் சும்மா புலம்பித் திரிவது
ஒட்டுத்திண்ணை வாசிகள் மேய்த்தால் மதனியைமேய்ப்பார்கள்
இல்லையென்றால் பரதேசம் போவார்கள்
காடு வீடிழந்த குடியானவன் ரோட்டுக்கடையில்
இவன் திங்க பிட்டுச்சுட்டு விற்கிறான்
தொட்டுக்கொள்ள எண்ணையில் சுட்ட கறிகோழியும்
கையில்  பணமிருக்கிறதாவென்றால்
பணமிருந்த  கையிருக்கிறதென்பது
மண்டையிலிருக்கும் மயிரும் சொந்தமில்லை
எடுப்புச்சாப்பாட்டுக்கு எகத்தாளம் கொஞ்சமல்ல மிக அதிகம்
இளக்காரம் கண்டு பூலுக்கு பூண் கட்டச்சொல்வது
ஈரைப்பேன் ஆக்குவது பேனை பெருமாளாக்குவது
எந்நேரமும் அடுத்தவன் வலப்பையை சுரண்டுகிறது
தன் காலில் பூ போட்டுக்கொள்வது
வராத நாயை கயிறு போட்டு இழுப்பது
கைகொடுத்துக்கொண்டே  கடையாணி  பிடுங்குவது
ஈரத்துணி போட்டு கழுத்தை அறுப்பது
அண்டப்புளுகு ஆகாசப்புளுகு பச்சைச்சிரிப்பு நீலிக்கண்ணீர்
அவனியெங்கும் மணக்குது கனவுபட்டறை நாத்தம்
கதவச்சாத்துங்க ஊசக்காத்தடிக்கிது உசுருக்கே கேடு


ஞாயிறு, 19 அக்டோபர், 2014

மோரளந்து வாத்ததுக்கு முந்தளந்து போட்ட கத - தவசிக்கருப்புசாமி

நம்ப வவானிக்கி தெக்க அந்தியூரு அத்தானிக்கிட்ட ஆத்துக்கு அந்தல்ல மேவானி, இந்தல்ல கீவானி. மேவானி ஊருக்கவுண்டனுக்கு ஒரு மவன். தவமா தவமிருந்து வேண்டாத தெய்வத்த வேண்டி வெக்காத கோயிலுக்கு வேண்டுதல வெச்சி பொறந்தபையன். என்னமோச் சொல்லுவாங்களே ஒருத்திக்கி ஒரு மவனாம் அவம் பருத்திக்காட்ல புளுத்திக்கிட்டு செத்தானங்கறாப்பிடி ஒண்ணும் உருப்படியில்ல. பரமதொண்டு.


எந்நேரம் பாத்தாலும் குடி கூத்தியா சீட்டாட்டம். அப்பனாயா ரெண்டுபேரும் பையனுக்கு சொல்லாதப் பித்தியில்ல. அவந்திருந்தி நல்ல வழிக்கி போற மாதர இல்ல. கேனந்தெனிஞ்சா கண்ணாலம் பண்டலாம் கண்ணாலம் பண்டனா கேனந்தெளியிமின்னு மவங்காரனுக்கு எங்கியாச்சும் ஒருப்பிள்ளய பாத்து கட்டிவெச்சா அதும்பொறவு அவனாச்சி அவங்குடம்பங் குட்டியாச்சின்னு திருந்தி வருவானாப் பாக்குலாம்முன்னு கட்டுச் சோத்தக் கட்டிக்கிட்டு ஊரு ஊராப் பொண்ணு தேடனாங்க, தேடனாங்க அப்பிடித் தேடனாங்க.


எங்கியுஞ்சிக்கல. சிவனேன்னு வந்து இக்கரைக்கு பரசத்தாட்ட அக்கரையில குந்தியிருந்தாங்க. அக்கரையில இவிங்களாட்டமே ஒரு கவுண்டமூட்டாரு தம்பட மவளுக்கு மாப்பளப் பாக்க இக்கரைக்கி வரலாமின்னு பரசத்தாட்ட குந்தியிருக்க, ஒருத்தரோட ஒருத்த ஆர எவடம் என்னாச் சமாச்சாரமின்னு பேச்சி குடுக்க, ஒண்ணோட ஒண்ணு கலந்துக்கிட்டாங்க. பையனுக்கு பொண்ணு குடுப்பீங்களான்னு இவிக்க கேக்க, பொண்ணு இருக்குது கண்ணாலம் மூச்சிக்கிறீங்களான்னு அவிங்க கேக்க ரெண்டூட்டாரும் கொள்ளலாங் கொடுக்கலாமுன்னு ஒரு மனசா தீருமானம் பண்டிக்கிட்டாங்க.

பொண்ணப் பெத்தவிக பிள்ளய ஒருச்சித்ரமா எழுதி மாப்பிள்ளயப் பெத்தவிங்கக்கிட்ட குடுக்க, இவிங்க வாங்கிட்டு மவங்கிட்ட காட்டலாமுன்னு கொண்டாந்தா மவங்காரன் வூட்ல இல்ல. ஆறேழு மாசமாட்டம் அறுதியா வூட்டுப்பக்கம் வாரதில்ல, கூத்தியா வூட்ல சூதாடிக்கிட்டிருந்தான். இவிங்க வருவான் வருவான்னு பாத்துக்கிட்டுருந்து பொறவு ஆளுக்காரங்கிட்ட கொண்டி பொண்ணுப் புள்ள மூஞ்சியவாச்சுங் காட்டிப்புட்டு வாடான்னு குடுத்துட்டாங்க.


இந்தத் திருவாத்தாம்போயி கவுண்டங்கூத்தியாருக்கிட்ட அதக் குடுத்துட்டு வந்துட்டான்.

 சித்தரத்தப் பாத்ததுதாஞ் சாக்கு அந்த தேவிடியாளுக்கு அங்கம் பதைக்கிது அடிவவுறு காந்துது.

சூரிய சந்தரனாட்டம் இத்தன அழவா இருக்கறாளே பொம்பளய அந்த மாப்ள கண்ல கண்டுட்டான்னா நம்பளத் திலும்பிப் பாப்பானா?ன்னு மனசுல கூரயத்த வெச்சுக்கிட்டு அடுப்புக்கரிய எடுத்து சித்ரம் முச்சூடுங்கோடு இழுத்து கண்ணையும் இழுக்கி வுட்டு,


 ‘இந்தா ங்கொப்பனும் ங்கொம்மாளும் எந்த ரட்சணத்துல உனக்கு பொண்ணு பாத்துக்கிறாங்க பாரு’ன்னு


 கொண்டி மாப்ளகிட்ட குடுத்தா, அந்த தெல்லவாரி நாயி அத என்னன்னுங் கண்டுக்கல. வாங்கி பொச்சிக்கடியில வெச்சிட்டு மும்மரமா சூதாடறாம்பா. அங்க, கவுண்டனும் கவுண்டம்பொண்டாட்டியும் மவங் கண்ணாலத்துக்கு முகூர்த்தக்காலு நட்டுப்புட்டாங்க. பந்தலன்னைக்கி கூட மவராசன் வூட்டுக்கு வரல. பாத்துட்டு அப்பனாத்த ரெண்டு பேரும் தாசியிண்ட போயி

‘எங்கவூட்ல வௌக்கு பொருத்தி வையிடி ஆயா மவராசி. நாளைக்கி ஒரு பொழுது என்ற மவன வூட்டுக்குத் தாட்டிவுடு! அவுனுக்கும் ஒரு கண்ணாலங்கார்த்தி முடியட்டும் பொறவு அவ எங்க கெடந்தாலும் நாங்கேக்கல’ன்னு


 கெஞ்சி கொறமாட அந்த தாசி, காலுப்பெருவெரலப் பாத்துக்கிட்டே பொண்டாட்டிக்கி தாலி கட்டிப்புட்டு கட்ன அடுத்த சனம் இங்கயிருக்கனுமின்னு கையடிச்சு சத்தியம் வாங்கிக்கிட்டு மாப்ளய தாட்டிவுட்டா.

கவுண்ட மவன் வந்தான் கண்ணாலமும் நடந்திச்சி. பெருவிரலப் பாத்துக்கிட்டு பொண்ணுப் பிள்ளைக்கி தாலி கட்டனான். கட்ன மறுச்சனம் குதுர வண்டியேறி கூத்தியா வூட்டுக்குத் திலும்பிக்கிட்டான். இதென்றா கந்தரகோலமின்னு புதுப்பொண்ணுக்கு ஒன்னும் நெட்டுசிக்கல.

 மறுதாலிக்கட்ல, மருமூச்சும் திலம்பல. போனவம் போனவனே. இன்னிக்கி வருவாம் மாப்ள நாளைக்கி வருவாம் மாப்ளன்னு இவ இங்க இருக்க அங்க புருசங்காரன் கொட்டு மொழக்கு போடறாந் தெனம். எத்தன நாளைக்கி பொறுப்பா ஒரு வயசிப்பிள்ள?

ஓகோ இதொன்னும் ரைனு வராதுன்னு தெரிஞ்சிக்கிட்டு கவுண்டம் மருமவ மாமியா மாமனாரிண்ட வந்து,

ஏம்மாமா ஒங்க மவங்காரம் பண்டறது தேவிலியா-ன்னு கேக்க,

 ஆயா கண்ணாலம் பண்டனதோட எங்க கடம முடிஞ்சிபோச்சி. குடி, சூதாட்டமின்னு ஒம்புருசங் கூத்தியா கொலாயிக்கி பிரமனையா இருக்கறான். அவன மீட்டு, வூட்டுக்கு கொண்டாருவியோ கொண்டாறமாட்டியோ எங்களுக்கு தெரியாது

-ன்னு நழுவிக்கிட்டாங்க.

அப்படியா சேதின்னு அத காதல வாங்கி வவுத்துலப் போட்டுக்கிட்டு கவுண்டம் மருமவ அப்பமூட்ல போயி நின்னு ஒரு பாலு மாட்டப் புடிச்சாந்தா.

அத மேச்சி பாங்கு பத்ரம் பண்டி பாலுபீச்சி மோருச்சிலுப்பி ஒருக்கூடயில வெச்சிக்கிட்டு அந்த தாசியிருக்கற வீதிய வுட்டுட்டு அந்தாண்ட எல்லா வீதியிலியுங் கொண்டி மோரு வித்துக்கிட்டு வந்தா.

இவ அந்த தெருவுக்குள்ள மோரு எடுத்துக்கிட்டுப் போயிட்டாப் போதும் கவுண்டமவங்கூட சூதாடறப் பசங்க எல்லாம் அப்பிடி அப்பிடியே ஆட்டத்த வுட்டுட்டு திப்புறு திப்புறுன்னு எந்திரிச்சு ஓடறதாம் மோருக்குடிக்க. இதென்றா கங்காச்சியா இருக்குது காணாத அதிசியமா இந்த மோரு? அதக்குடிக்கவா இந்த மந்தைங்க இப்பிடி ஓடுது? இப்பேருப்பட்ட மோரு ஊத்தறவ எப்பேருப்பட்டவளா இருப்பா. நாம்பளுந்தாம் பாக்கலாஞ் சித்தன்னு கவுண்ட மவனும் மோருக் குடிக்கப் போனான் வழுது தெருவுக்கு.


அட சாமி அங்கப் போயிப் பொம்பளயப் பாத்ததுதாஞ் சாக்கு அவனுக்கு ஒடம்பே பூராஞ் சிலுத்துப் போச்சாம்.

 அடோக் கண்டாரவோலியூட்டுப் பிள்ளய, பொம்பள பாரா ஒரு ரட்சணத்த பொம்மக் கட்டயாட்டமுன்னு இவம் பௌந்த வாய மூடவேயில்ல. ஓவ் இவந்தான் நம்ப பிருசன்னு அவக்கண்டுக்கிட்டா.

குட்டுவுடாம கம்முன அவபாட்டுக்கு அவ இருக்க,

‘இந்தா  பொம்பள எனக்குந்தா ஒருச்சொம்பு மோரு வாரு’-ன்னு

இவங்கேக்க, அவளிருந்துக்கிட்டு


 ‘கேட்டதும் ஊத்திப்புட்டு போவ இதொன்னும் சின்ன வெல மோருல்ல. மூணுச்சொம்பு முத்தளந்தா ஒரு சொம்பு மோரு வாப்பன். ஒரு சொம்பு மோருக்கு ஒரு பொட்டு சிந்த மோருக்கூட வாக்க மாண்டே’-ன்னா அவ.

இதென்றா வலியனா மோருக்கேட்டதுக்கு இந்தப் பொம்பள நம்பள பல்லுப்புடிச்சி பதம்பாக்கறாளோ?-ன்னு

கவுண்டன் மவன் சின்னக் கவுண்டனுக்கு கருக்கட வுழுந்துட்டுது. இருந்தாலும் அவளிண்ட பேச்சி வெச்சிக்க பிரியப்பட்டு ஓடி அவங்கொண்டாந்து தாசியூட்ல கொட்னானே மாளாத சொத்து. அதல தாசிய காங்காம மூணுச்சொம்பு முத்த அள்ளியெடுத்தாந்து குடுத்துட்டு மோருக் குடிச்சான்.


 பாக்க / புடிக்க, பேச / பொழங்க அன்னாடம் மோருக்குடிக்கன்னு சின்ன கவுண்டனுக்கு இதோ தொழுவாடாப் போயிரிச்சி. இருந்தாலும் பொம்பளய வெரலு நவத்துலக்கூட தீண்ட முடியல. ஒரு மாசம் ரெண்டு மாசம்னு பொறுத்தான். இவுனுக்குன்னா நாளுக்கு நாளு பொழுதுக்குப் பொழுது பாக்கப் பாக்க பொண்டாட்டிமேலே ச்சும்மா வெறிக்கண்டுப் போச்சி.

 அவ கண்டுங்காணமயே இருக்க ஒருநாளிங்கறப்பெட்டுக்கு விசுக்குன்னு கையப்புடிச்சி இழுத்தவன்,

‘உசுரக்கூட வுட்டர்றேன் ஆயா ஒரே ஒருத்தரம்னு ....ன்னுப்புடறஞ்சித்த என்னாச் சொல்றே’-ன்னு கேக்க

ஆர்றாளு இந்த பண்ணாட்டெல்லாம் என்னிண்டச் செல்லுபடி ஆவாது. நானு அப்பேருகந்த பொம்பளையுமில்ல. ங்கெப்பன், ங்கெம்மா காதுல வுழுந்தா ஆரு என்னான்னு பாக்கா மாண்டாங்க கைய கால முறிச்சி சூத்துல சொருவிப்புடுவாங்க மாப்ள, அங்கயிங்க... அப்டிடா இப்பிடிடான்னும் சும்மா மெரட்ட ........

இவங்காலுல வுழுவாத கொடுமையா கெஞ்ச அவ மனசெறங்கி, கெடந்து சாட்டாவுது நாயாட்டங் கெஞ்சற, உன்ற ஆசப்பெரகாரம் நடக்கட்டும். ஆனா ஒரு விண்ணப்பம் பத்துப்பேரு அறிய தாலிக்கட்டி நீரு வெக்கிலின்னா போச்சாது. ஆத்தங்கரயில பச்சப் பந்தப்போட்டு அரச எல மேல மஞ்சப்புள்ளாருப் புடிச்சிவெச்சி மோதரமாத்தி கண்ணாலம் பண்டிக்கன்னா. இவனுஞ் சேரியின்னு பலான நாளு ஆத்து ஓரத்துக்கு நீ வந்துருன்னுச் சொன்னான்.

இவளும் வந்தா. ஊருக்குத் தெரியாம தாசிக்குத் தெரியாம அவுத்திகாலியே மோதரம் மாத்திக்கிட்டாங்க. அவுத்தயே சித்த நேரம் ஒண்ணாயிருந்தாங்க. அன்னயோடச் சேரி கவுண்டம் மருமவ தாசியிருக்கற வீதிக்ககி மோரு விக்கவேப் போவல. அந்த வாசத்த மறந்துட்டா.


 புருசங் கண்ணுக்கே சிக்கல. அவ பாட்டு அவ அங்கருக்க சின்ன கவுண்டனுக்கு பொம்பள நெனப்பெடுத்துக்கிச்சி. தெனமும் தெருவே ஒரு கோடியா தொழாவறது அவிங்க ரெண்டு பேரும் ன்னாங்களே அங்க போயிச்சித்த குந்தறது. இப்பிடியே ஆளு வவுத்துக்குக் கூட திங்காம பொம்பள பிரியம் எச்சாவி ஒரே ஆறு மாசத்துல சட்டங் கழண்டு சரீகலங்குண்ணிப் போயிட்டான்.

இவங்கத இப்பிடியிருக்க தாசிக் கண்டுக்கிட்டா. ஓவ் நம்ம கொலாய நக்கிக்கிட்டு கெடந்த மாப்ள இப்ப என்றான்னா எங்க கெடக்கற நாயேன்னுங் கண்டுக்கறதில்ல ஏறெடுத்தும் பாக்கறதில்ல உம்ம கிம்ம தெரிஞ்சி பொண்டாட்டியின்ட போ வர பொழக்காட்டம் போடறானோ என்னா கருமாந்தரமோன்னு ஒரு அறிகொழப்பத்துல கவுண்டமூட்டுக்கு ஒரு தந்தாள நேமிச்சி நோட்டம் பாத்துட்டு வரச்சொன்னா.


 போயிட்டு வந்து இப்பிடித்தான் இப்பிடித்தான் கவுண்டம் மருமவ வாயும் வவுறுமா இருந்தது, அன்னிக்கி பையம் பெத்து புள்ளயாரு கோயிலுக்கு பேரு வெக்க வந்ததுன்னு பூராம் புட்டு புட்டு சொல்லிப்புட்டா.

தாசிக்கிவொண்ணும் கையும் ஓடல காலும் ஓடல. இத இப்பிடியே வுட்டுட்டா கத வேற வேறயா போயிரும் பொறவு மொதலுக்கே மோசம் வந்திருமின்னு போன வெசயில சூதாடிக்கிட்டிருந்த மாப்ளகிட்ட

ஒல்காமாலையா    ஒல்காமாலையா இங்கென்றா சூதாடிக்கிட்டு குந்தியிருக்கற? அங்க உம் பொண்டாட்டி எவங்கிட்டப் படுத்தாளோ ஆருக்கு முந்தி விரிச்சாளோ? புள்ளப் பெத்து எடுத்துக்கிட்டு புள்ளயாரு கோயிலுக்கு பெரு வெய்க்க எடுத்துக்கிட்டு போறாளாமடா? போயி தல வேற முண்டம் வேறயா வெட்டி சாய்க்காம இன்னும் ஏண்டா நீயில்லாம் ஒரு ஆம்பளையின்னு உசுரோட குந்தி இருக்கற?ன்னுச் சும்மா திந்நீரு கொழிச்சி வுடறா.


இவுனுக்கு சுருக்குனு கோவம் வந்துட்டது. தாசிவூடே கதின்னு நாம் இவுத்தக் குந்தியிருக்க பொண்டாட்டி எப்பிடி செனையாவியிருப்பா? ஆம்பள ஆயிரம் பேத்துக்கிட்ட போவான் வருவான் பொம்பளைக்கில்ல அடக்கச் சொடக்கம் வேணும். அதோட மோருக்காரி மேலிருந்த கோவமெல்லாம் பொண்டாட்டி மேல திலும்பிக்கும்பிடி, கொண்டாடி கொடுவாள அவள கொடல உருவி மால போட்டுகிட்டு வாரமின்னு புள்ளயாருக்கோயிலுக்கு ஓடனாஞ் சின்னகவுண்டன்.


தாசியாட்டமே இந்த கவுண்டம் பொண்டாட்டியும் தாசியூட்டுக்கு ஒரு தந்தாளு வெச்சிருந்தா ஔவு பாக்க. அவ தந்தாளு புருசங்காரன் பொண்டு, புள்ளய கொல்ல வர்ர பழமையச் சொல்ல புள்ளாருக்கோயில்ல புருசன் வரங்காட்டியும் மவனுக்கு பேரு வெச்சி ஒரே மின்னெட்டுல வூட்டுக்கு வந்து உள்தாழு போட்டுக்கிட்டா.

நடுவூட்டு உத்தரத்துல தூரி கட்டி பையன அதல போட்டு, அவ பொறந்து வளந்தது, புருசங்கட்டனது, அவந்தாசிவூட்டுக்குப் போனது, இவ மோரு விக்கப் போனது, பையம் பொறந்தது, அப்பங்காரங் கொல பண்ட வந்துருக்கறது பூர்த்திய ஒருப் பாட்டா பாடி கல்லு கரைய மண்ணுருவ அழவுறா.

 இந்த நாயத்த கதவுக்கு வெளியே தாவாரத்துல நின்னுக் கேட்டுக்கிட்டிருந்த சின்னக்கவுண்டனுக்கு நெசமும் பொய்யிந் தெரிய ஆஞ்சியோஞ்சிப் பாத்துட்டு போயி தாசிய வெட்டிச் சாச்சிபுட்டு வந்து பொண்டாட்டி புள்ளயோட நல்ல விதமாப் பொழச்சானாம்.