சனி, 15 நவம்பர், 2014

மாண்டும் மறக்கவில்லை மாது பெண்ணாசை செத்தும் மறக்கவில்லை சீமாட்டி கண்ணாசை

கோவிலன்  சரித்திரத்தின்  மூன்றாவது  ராத்திரி பாண்டியன்  சண்டை -கூத்து

 நிகழ்வும்  கலைஞர்களும் - ஓர்  பதிவு -தவசிக்கருப்புசாமி


பசியோடு  அலைய வச்சான்  அந்த  பரமன்

ருசியோடு  நூறு  கலைகள் ...!கசியும் மனம் ...!

நிற்கவச்சி   ஏங்கவச்சி காக்கவச்சி  கற்க வச்சி

விற்கவும்  வச்சிட்டா  னே-

  -ஆகாசம்பட்டு  சேஷாசலம்
தருணமின்னும் துவங்கியிருக்க  வில்லை . அங்கொன்றும்  இங்கொன்றுமாக வேண்டுதலை கூத்துகள்  நிகழ்ந்த  வண்ணமிருக்கின்றன . இருக்கப்பட்ட  ஜமாக்களில் எகாபுரம்  சுப்ருவும்  எலிமேடு  வடிவேலுந்தான் வருடம்  முச்சூடும்  நிறை  செலுத்துபவர்கள் .நிகழ்த்துதல் பாங்கின்    குலையாத கட்டுறுதி .உறுத்தாத  எளிமை  சுப்ருவுக்கு  நிரந்தர  பார்வையாளர்களையும்  ஆதரவாளர்களையும்  பெற்றுத்தந்திருக்கிறது . செல்லுபடியாகாத  இந்த  ஐப்பசி மாதத்தில்  கூத்துக்கலைஞர்  பெரிய சீரகாப்பாடி க . ராசுவை  தொடர்ந்து   மெய்யழகன் அவர்களும் மாரடைப்பால்  காலமானதை  அடுத்து  ரொம்பவும்  மனம்  கனத்து போய் திரிந்துக்கொண்டிருந்தேன் .ஒன்றன்  பின்  ஒன்றாக  இருவர்  இரண்டு  முக்கிய புள்ளிகளை  மண்ணுக்கு  வாரிக்கொடுத்த  இழப்பிலிருந்து  இன்னும்  மீள  முடியவில்லை ....


ராஜுவின்  நினைவஞ்சலி  கூட்டத்துக்கு வாத்தியாரை  அழைக்கும்போதுதான் வெள்ளையம் பாளையம்  மூலக்கடை  பாட்டப்ப சாமிக்கு  கூத்து  விட்டுருக்கும்  தாக்கல் சொல்லி  கூத்துப்பாக்க  கூப்பிட்டார் .கொங்கு  மண்டலத்தில் அரங்கக்கலை வழிப்பாட்டுச்சடங்கு களின்  ஓர்  இன்றியமையாத  கூறு .   சுண்டமேட்டூர் ஆயீ  கோவில் , செங்கோடம்பாளையம்  மேடை  பெருமாள்  கோவில் ,வெள்ள கரட்டூர்  பெருமாள்  கோவில்  மற்றும்  ஊர்ப்புற  அம்மன் கோவில்  நோம்பிகளில்  கூத்து ஓர்  இரவு  கட்டாய  நிகழ்வு .
ஒன்பதரை  மணிக்கெல்லாம்  சின்னு  கோமாளி  தர்பாராகி  விட்டார் . மரம்  பழுத்தாலும்  புளிப்பு  குறையவில்லை , அழுத்ததிருத்தமான அதே  பகடி  எள்ளல் .ஜமா  விருத்தாந்தங்களை  சொல்லி  நிகழ்வு  ஏற்பாட்டாளர்களை வாழ்த்தி  அன்றைய  கூத்து  கோவில சரித்திரத்தின்  மூன்றாம்  இரவு  பாண்டியன்  சண்டை  என  முன்னறிக்கை  செய்யப்பட்டது . பாரத -இராமாயண- இதிகாச  புராண  கதைகள்  உட்பட  180  கதைகள்  கொங்கு சீமை  நிகழ்த்துவெளியில்  நிகழ்த்தப்படுகின்றன .பிரதி  வழி நாம்  வாசிக்கும்  சிலப்பதிகார  கோவலன்  கதையிலிருந்து  மக்கள்  உருவாக்கிய  இக்கதை  மாறுப்பட்டது .


காவிரிப்பூம்  பட்டினம்  வாழ்  கப்பல்  வியாபாரி மாத்தோட்டான் செட்டி  மனையாட்டி  வருணமாலை   தமையன்  வீட்டு திருமணத்திற்கு சீர்  கொண்டு சென்றும்  பிள்ளை  இல்லா கொடுமைக்கு  வரிசையின்றி அவமானப்பட்டு   திரும்புகிறாள் . தவமிருந்து  அவள்  கோவலனை  பெறுவது  ஒரு  ராத்திரி  கதை . கோவலன்  கண்ணகியை  மணந்து  மாதவியிடம்  அடிமையாகி  மீண்டு   வருவது  ஒரு ராத்திரி கதை.. சிலம்பு விற்க  போகும்  கோவலன்  மதுரை  வஞ்சி  பத்தான்  ஆசாரி  சதியில்  கொலையாகுவது  மூன்றாம்  ராத்திரி கதை ...

பார்வை வடிவ  படிம  மொழியை  ஆடும்  சபையில் செயற்படுத்தும்  கூத்தாடி  நிகழ்த்துதல்  மூலம்  சுவை  உணர்வை  அனுபவமாக சமைத்து தருகிறான் .கருத்து  புலப்பாடு  அதன் காத்திரமான அங்கம். ..கலைஞன்  எண் வித   உணர்ச்சி  குறிப்புகள்   மற்றும் குரல் வழி- உடல் வழி- அணி  வழி  உள்ளிட்ட  நான்கு வகை  வெளிப்படுத்துதல் வாயிலாக  அவையோருக்கு ஆக சிறந்த  இரசனையை - உய்த்தலை  உண்டாக்குகிறான்   .


சுப்ருவுக்கு  அன்று  தலை  வேடம் ..முதன்மை பாத்திரம் .. சரியாக  இரவு  பத்துமணிக்கு  அரங்கில்  தோன்றியவர் பூர்வோத்திரங்களை  வருணித்து  முடிக்க  ஒன்றரை மணித்தியாலங்கள்  ஆகியிருந்தது ..
கண்ணுக்கு  வெளிச்சமான்  வேடம்...தாளம் - காலம் -சுருதி  பிசகாத பாட்டு வித்தியாசமான  ஆட்டமுறைமை . புத்திக்கு  உறைத்த கதை.

அர்ச்சுனன்  தபசுக்கு - ஜம்பை,  ஆரவல்லி  சண்டை  அல்லிமுத்து  பந்தயம், மதுரை வீரன் ஆகியவற்றுக்கு  சுத்தமான  ஆதி , அண்ணமார்  சரித்திரத்துக்கும்  நூதன  ஓட்ட நாடகமென்னும் சித்தரவல்லி  கூத்துக்கும்-  நொண்டி  சிந்து .....

இந்த  கோவலன்  கூத்துக்கு  ஓரடி ஆதி  சாப்பில்  அமைந்த ஏக  தாள  மெட்டு  வரிசை பாத்தியம் . அத்துடன்    ஆதி, அடவு, திருப்படை,ரூபகம், ஜம்பை, நொண்டிச்சிந்து,கும்மிதாளம் என்ற தாள வரிசைகளையும்  பாவித்து நிகழ்வுக்கு  செழுமை  சேர்த்தார்கள்ஆசாரி  சிரமறுப்பேன்

 அருந்தாமாலை  ஸ்தனமறுப்பேன்

 பொன்னரசன்  உடல்  கிழிப்பேன்
#
அத்த  அத்த  மாமி  அத்த

ஆகாத  கனவு  கண்டேன்

வாழ மரம்  சாயக்கண்டேன்

வடிவழகன்  சாக  கண்டேன்

தென்ன  மரம் சாயக்கண்டேன்

என் தேசிகரும்  மடிய க்கண்டேன்
#
கொண்டவளை  சிறையில்  வைத்து

கூத்து பார்க்க  போனேன்  அண்ணா

மங்கையாளை சிறையில்  வைத்து

 மாதாட்டம்  பார்க்க  போனேன்  அண்ணா

#போன்ற  பாடல்களும் - இசையும்  அம்பலக்கலையின் உயிர்த்தளம். ஆம்  கூத்துப்பாதி  கொட்டுப்பாதி .சேகர்  அவர்களும் , மெய்வேல்  அவர்களும்  மாற்றி  மிருதங்கம்  வாசிக்க அன்றைய  கூத்தின்  பிரதான  அம்சம் முகவீணை.
 ரெட்டிப்பாளையம் குப்பன் அவர்களையடுத்து வந்த தலைமுறையில் செல்வம்   முதல்தரமான முகவீணைக் கலைஞர்.  நாபியில் பிறந்து கண்டத்தில் இழைந்து குழல் வழி வழிந்தோடும் நாதம் கேட்பவரை மனம் பேதலிக்க வைக்கும். அகவலிடுவது, அணுக்கள் கொடுப்பது, சரளி வரிசை என்று தேர்ந்த தெளிந்த இசைஞானம் இவருக்கென்றாலும், இழைத்து, இழைத்து நயமாக்கி அவர் வாசிக்கும் குழல் சோகத்தை, மந்தகாசத்தை, அதிகாரத்தை, ஆணவத்தை, அது எந்த உணர்ச்சி வெளிப்பாடாகயிருப்பினும் பிறழ்வு இன்றி பரிபூரணமாக நம்மை உணரவைக்கும் வித்தைகளையடக்கியது.  உயிர் மூச்சை முதலாக்கி செய்யும் இந்த பிறப்புத் தொழிலுக்கு ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு பிரசவம்.  பிராணசங்கடமேற்று, மக்களை மகிழ்விக்கும் இசையை உற்பவனம் செய்யும் இவர்கள் கலைச் சேவை வெறும் புகழுரைக்கானது மட்டுமன்று!.


கரணம்  தப்பினால்  மரணம்  என்பார்கள். தான்  என்கிற வித்துவானோ  அவர்    எப்பேர்ப்பட்ட  விற்பன்னரோ  கூத்தில் கைத்தாளம்  கலைந்தால்   மிருதங்கம்  வாசிப்பவர் மண்ணை  கவ்வ  வேண்டியதுதான் . அந்த  வகையில்  லயம்  தப்பாது  தாளமடித்த  சுந்தரம் - கொழந்தையப்பன்  இருவரும்  கவனங் கொள்ளத்தக்கவர்கள்

 அன்று  கனகு அப்பு  தாசி  வேடம் ஏற்றிருந்தார் .தெருக்கூத்தில் திருநங்கைகளை பங்கேற்க வைப்பதில் முன்னோடியானவர் கூலிப்பட்டி சுப்ரமணி வாத்தியார் அவர்களே! அவரது ஜமாவில் பங்கு பற்றிய ரேகா அவர்களை தொடர்ந்து ஒக்கிலிப்பட்டி சாமியாருடன் இயங்கிய அபிராமி, புவியரசி,ஆகியோருடன் கனகு அவர்களும் கடந்த பத்தாண்டு காலங்களாக வேடங்களிட்டு ஆடி வருகிறார். ஒப்பு நோக்கும்போது திருநங்கையருக்கு ஆடவர் பெண்டிரைக்காட்டிலும் விஞ்சிய கலைத்தேட்டமும்,நுகர்வும், உற்றுநோக்கி உள்வாங்கும் திறனும் இருப்பதை உணரலாம். மண்டோதரி, அதி வர்ணமாலை, துரோபதை, ஏலக்கன்னி போன்ற
பெருங்கொண்ட கதைமாதர்களாக தோன்றும் கனகு தானதுவாகி பாத்திரத்தை கனம்பண்ணுவதோடு அவையை தனது பல்வேறு கோட்டுச்சித்திரங்கள்,பண்பட்ட ஒயிலாக்கம் வழி நிரப்பித்தருகிறார்.

சுப்ரு அவர்களுடன் கரட்டூர்  செல்வம் (பொன்னரசன் ),அய்யந்துரை ( அருந்தாமாலை ) மெய்வேல் (வஞ்சி  பத்தான் )தருமன் (குப்பு  தாசி ) சீனிவாசன் ( சுப்பு தாசி ) செந்தில்  (பாண்டிய  மன்னன்) ஆகியோரும்  பாகம் ஏற்றிருந்தனர் . வாத்தியார்  என்ற  ஹோதாவில் உருட்டி  மிரட்டி   ஆர்ப்பாட்டங்கள்  ஏதும்  செய்யாத  தோழமையுள்ள  மூத்த  கலைஞன் -  அவன் குறிப்பறிந்து  காரியமாற்றும்  சகபாடிகளை  காண  ஆனந்தமாகயிருந்த அன்றிரவு  நன்றிரவு.

பின்னொட்டு

நிழல்  சாய்ந்த  பக்கம்  குடை  பிடித்து  அதிகாரத்தை  கைப்பற்றி  விடும்  புலவர்  பெருமக்களுக்கு  எப்படியோ  சடையப்ப  வள்ளல்கள் கிடைத்துவிடுகிறார்கள் .போஷகரையும்  புரவலர்களையும்  வாசகர்களையும் கொண்டு  சேர்க்க  ஊடகங்களையும்  ஏற்ப்பாடு  செய்த  பிறகே  பேனா  மூடியை  எழுத  திறக்கும்  நாம் . கூச்சமே  படாது  தகுதிக்கு  மீறிய  அங்கீகாரம்  தேடும்  நாம் , வாய்ப்பு  அருகி  நலிவடைந்து  வரும்  நமது  தொல்கலைகளின்  மேம்பாடு, மீட்டுருவாக்கம் , சீர்மை ,ஆவணமாக்கம் ,மதிப்பீடுகள் ,விமர்சனங்களின்   ஊடாக  சாத்தியப்பட்ட  நகர்வு  மற்றும்  சம்பந்தப்பட்ட   நிகழ்த்துக்கலைஞர்களின் வாழ்வியற்   மேம்பாடு குறித்து  ஒரு  சிந்தனை  தொடர்ச்சியை  மேற்கொள்வதுடன் வாய்  பேசிக்கொண்டிருப்பதை  நிறுத்திவிட்டு  வேலை  மட்டும்  பார்த்தால்  எவ்வளவு  நன்றாக இருக்கும் .

கலைஞன்  பார்வையாளன் இவ்விருவருடைய   உறவு  குறித்த ஆத்மார்த்தமான , தீர்க்கமான புரிந்துணர்வு  இல்லையெனில்  கலை  படைப்பது  வெட்டி  வேலை .


http://youtu.be/q7rV8b2P8zg
வியாழன், 13 நவம்பர், 2014

மன்மதன் ரதிக்கி மேலே வனத்தில்வாழும் குறத்தி கேளாய்!

கொம்பாடிப்பட்டி ராஜூ - கூத்துக் கலைஞர்


 ஓர் அற்புதமான கூத்துக்கலைஞன் என்பதற்கப்பால் ராஜீவைக் குறித்துச் சொல்ல நிறைய விசயங்களிருக்கின்றன.  இன்று பெண் வேடம் தரிப்பவர் அறுதி பெரும்பான்மையினர் அவரையே முன்னோடியாகக் கொள்கின்றனர்.  வேடம் ஒன்றுக்கு மாத்திரமல்ல, போடும் ஒப்பனை,  தோன்றும்பாத்திரம்,பாடும் சாரீரம், ஆடும் அடவென்று தனக்கென்ற ஓர் தனித்துவத்தை ஏற்படுத்திக் கொண்டவர். சென்னை லலிதகலா அகாதமியில் நடைபெற்ற  தமிழ்நாடு-கர்நாடக மாநிலங்களுக்கிடையேயான கலாச்சார பரிவர்த்தனை  நிகழ்வொன்றில் பாஞ்சாலி சபதம் கூத்து நடத்த வந்த  ராஜூ அவர்களோடு      மேற்கொண்ட உரையாடலில் பதிவான அவரது வாழ்க்கை பதிவிது!


-----------------எங்க சொந்த ஊரு சுண்டமேட்டூரு, ஆயி கோயிலு, பச்சாயி கோயிலு இருக்குதில்ல அந்த ஊரு.
அம்மா எனக்கு விவரந் தெரியுமுந்தியே  செத்துப் போச்சிங்க.  ஊருக்கு போனாலும், எங்க போனாலும், ஒரு ஒரம்பறைக்கிப் போனாலும்அப்பாதான் என்னய தோலுமேல தூக்கிவெச்சிக்கிட்டு வளத்துனாரு. நல்லபடியாத்தான் வளத்துனாரு.  அப்பையே சின்ன பையனா இருக்கும்போதே கூத்தாடிச்சின்னா கூட்டிக்கிட்டுப் போவாரு.  சால்ரா போடுவன். தூக்கி கக்கத்துல வெச்சிக்கிட்டு பாடச் சொன்னா அப்பையே பொட்டிக்கிச் சேத்தி பாடுவன்.  சுத்தி இருக்கறவங்கல்லாம் பேசிக்குவாங்க, பார்ரா இந்த  அறியா வயசிலியே பையம் பொட்டிக்கி சேத்தி பாடறதன்னு. 
அப்பா கட்ட பொம்மையில பேரு வாங்கனவரு. காருவள்ளிகாரங்கிட்ட பொம்மையாட்டிக்கிருந்தாரு.  அதுக்கு முன்ன  சிலிவாயன், வடுகப்பட்டி முத்துசெலவடகொன்னவாயன்இவங்களோடகூத்தாடிக்கிட்டிருந்தாரு. எங்கப்பாபட்டியிலகாவலுக்குபடுத்துக்கிட்டிருந்தாசெலவடகொன்னவாயந்தான் வந்து கூத்தாட எழுப்பிக்கிட்டு போவாராம்.  காலையில எங்க தாத்தன் கூத்தாடிப்பட்டு வர்ற எங்கப்பன தொரத்து தொரத்துன்னு தொரத்துவாராம்.  ஏன்னா ஆடு மேய்க்கப் போறவரு கூத்தாடிப்புட்டு களப்புல நெவுல்ல படுத்து தூங்கிப் போயிருவாராம், ஆட்ட தன்னப்பால வுட்டுட்டு.  தாத்தனுக்கு காடு, தோட்டம் உண்டு வசதியான குடும்பம்.  முன்சீப்பே எங்க தாத்தாவ டே கொளந்தையின்னு கூப்பட மாட்டாராம் கொழந்தைப்பான்னு தான் கூப்புடுவாராம்.  மணியாரமூட்டுக் காடும் எங்க காடும் எணக்காடு.  அப்பனுக்கு பொண்ணெடுத்தது பெரிய சீரகாபாடி.  நாங்க பொறந்தது ரெண்டு பசங்க.  எனக்கு நேரிளையவன் செத்துப்போயிட்டானாம்.  செம்மலைக்கி சித்தப்பா மவதான் எங்கம்மா.  பசங்க பொறந்ததும் பொம்பள லாயிக்கில்லாத ரூட்ல போவ, அப்பா வுட்டுட்டாராம்.  எனக்கு தெரியாது, எல்லாருஞ் சொல்வாங்க.  பொறவு அப்பா, இன்னோரு அம்மா ரெண்டாந்தாரங்கட்டி, அதுவும் ஒத்து வரல.  பொம்பளைங்க சமாச்சாரத்துல அப்பன் ரெண்டு பேத்துக்கு மூத்தவரு.  ரெண்டு பேத்துக்கு எளயவரு.  இது புடிக்காம எங்க சின்னம்மா அவுத்தியே தனியாவொரு வீடு பாத்து இருந்திச்சி.  எம்மேல ரொம்ப ஆசம்பா இருக்கும்.  தண்ணி வாத்துவுடும், சடபின்னி சிங்காரிச்சிவிடும்.  எதனா திம்பண்டம் வாங்கனா வெச்சிருந்து குடுக்கும், ஆனா எங்கப்பங்கிட்ட மட்லும் பேசறதில்ல.  இப்பிடி இருக்கப்பட்ட நாளையில சின்னு சின்னுன்னு ஓராளு காருவள்ளியில, சீனு வரையிறதில மீறன கையி.  அவுரு செட்டுக்கு ஆளு இல்லையின்னு வந்து கூப்புட்டாரு அப்பனும் நானும் சேரி வர்ரன்னுப்புட்டு போனம்.போயி மூணு மாசமாட்டம் பொம்ம கூத்து நடத்தனம்.  அங்க தெனமும் டெண்டக்கட்டி ரைட்டு போட்டுவுட்டார்ராங்களா வௌயாட புடிக்க குசாலமா இருக்கும்.  நல்லா அவ்வள அவ்வளசைசி பசங்கள செட்டு சேத்திக்கிட்டு ஓடறது, ஓடியார்றது, குதிக்கிறது இப்பிடி வௌயாடிக்கிட்டிருந்தம்.
 ஒருநாளு நானு துண்ட முறுக்கி கத்தி மாதிரி சொழட்டி அடிக்க ஒரு பையன் உசுரு நெலயிலபட்டு ரத்த ரத்தமா ஊத்துது.  ஊராரு அடிக்க தண்டு கட்டிக்கிட்டு என்னய தேடறாங்க.  ஆரந்த பையங் கூப்புடுங்க கூப்புடுங்கன்னு ஒரே புடியா நிக்கறாங்க.
 இந்த சம்பவம் நடந்தது கீழ்வால!.


 அப்பரம் பொம்ம வெக்கிற பொட்டியிருக்குமில்ல பெரிய பொட்டி, ராமரு பொம்ம, சீத பொம்ம, பொம்மய பூரா எடுத்துப்புட்டு அடியில என்னய படுக்க வெச்சி மேல பொம்மய அடுக்கிப்புட்டாங்க.  கேட்டவங்களுக்கு எந்த பையங்க எங்ககிட்ட இருக்கறான், இருக்கறவிங்க பூராம் பெரியாளுங்கன்னு சமாளிச்சிப்புட்டாங்க.  மணி ரெண்டு இருக்கும்.  வண்டிகட்டி ஒரு பத்து மையிலு தாட்டி பஸ்சு ஏத்திவுட்டாங்க.  அப்பறந்தான் எங்க பாட்டி வூடு பெரிய சீரகாபாடிக்கு வந்தம்.  எங்கப்பா காட்டு வேலைக்கிப் போனாரு.  நானு தறி நேயப்போனன்.  கைத்தறி நேசிக்கிட்டு இருக்கும்போது பள்ளிக் கோடத்துக்கு எதுத்தாப்ல குச்சி வூடு இருக்குதுல்ல அதுல நானும் ங்கப்பனும் சோறாக்கி தின்னுக்கிட்டிருந்தம்.  இருக்க வூடுல்லாம இப்பிடியே தறி நெஞ்சிக்கிட்டிருந்தா என்னா செய்யறது எப்பிடி பொழைக்கிறது வெசனம் புடிச்சிக்க, சேரி இந்த வூட்ட வாங்கி கெரயம் பண்டலாமுன்னு தீர்மானம் பண்டி வூட்டுக்காரங்கிட்ட எரநூத்தி பத்து உருவாயிக்கி வூட்ட வெல பேசிப்புட்டன்.  கையில சல்லிக்காசில்ல.  வெறுங்கைய மொழம் போட முடியுமா?  இங்க தறியோட்டிக்கிட்டிருந்தனே அதவுட்டுட்டு இன்னோரு மொதலாளியிண்ட போயி அண்ணா எனக்கு தறியோட்ட தெரியும், நாளையிலிருந்து நம்ப தறிக்கி வர்ரன்.  இப்பிடித் தான் வூட்ட வெலக் கூறிப்புட்டண்ணா, பாக்கி எரநூத்தி பத்து ரூவா குடுங்கண்ணு கேட்டன்.  அந்த மொதலாளி சேரி தம்பி காச காலையில தர்றன்.  ஆனா ரவைக்கி வந்து நீ தறிஓட்டு,அதபாத்துட்டுத்தான்பணந்தாருவன்னு கட்டாச்சாரமாச் சொல்ல, நானு ராத்திரியே போயி சாயிண்டு தறிக்காரன காக்காப் புடிச்சி விடியறதுக்குள்ள ஏழு தாரு ஓட்டிப்புட்டன்.  காத்தால மவராசன் பணத்த குடுக்க வாங்கியாந்து வூட்டுக்கு கட்டிப்புட்டேன்.    இப்பிடியே துண்டு தறியில இருந்து சர்வீசாவி எஸ்போட்டு (எக்ஸ்போர்ட்) தறிக்கு போவாரம்பிச்சேன்.  அந்தச் சமயம் வூட்டுமேல ஒரே ஓலக்கட்டயில்ல.  எல்லாங்கரயாந் தின்னுபுடிச்சி.  வூட்ட மேயணுமே !நேரா வேம்படிதாளத்துலஆட்டையாம்பட்டியாரு ஆட்டையாம்பட்டியாருன்னு ஒருத்தரு! அவுருக்கிட்ட போயி அண்ணா ஐநூறு உருவா கடந்தாருங்கண்ணா நம்ப தறிக்கு வாரன்னு கேக்க, அவரு யாருப்பா நீயி எந்தூரப்பா, சாலச்சட்டையா வந்து பணங்கேக்கறங்க, நானு இப்பிடித்தாண்ணா உங்களிண்ட தறியோட்ற பழனிசாமிக்கி பக்கத்தூட்டுக்காரன்னு சொன்னன்.  அவரு பழனிசாமிய கூப்புட்டு ஏப்பா பையம் பாக்கி கேக்கறான் வாங்கிக்கிட்டுப் போயிட்டு வராம இருந்துக்கிட்டா ஆரப்போயி நாங்கேக்கறதுங்க, பழனிசாமி நானாச்சிங்க பையனுக்கு சாமினுன்னு ஏத்துக்க, அப்பையே செட்டியாரு பணத்த எண்ணி குடுக்க, வாங்கிட்டு போயி, கன்னந்தேறியில எங்க சின்னாயி புருசங்காட்ல கரும்புசோவ இருந்திச்சி,  வண்டியில ஏத்தியாந்து, வூட்ட நல்ல வெல்ல அச்சுமாதர கிர்ன்னு மேஞ்சிப்புட்டன்.  காச வாங்கியாந்து மூணு நாளு வேலைக்கிப் போவல. மூணா நாளு போனன். செட்டியாரு என்னடா தம்பி காச வாங்கனதும் ஆள கண்ல காங்க முடியலன்னு ஆவேசப் பட்டாரு!  நானு இப்பிடித்தான்னா வூடு மேயத்தாம் பாக்கி கேட்டன், நேத்து வூட்டு வேல முடிஞ்சது, இன்னமேட்டு வேலைக்கி ஒழுக்கமா வந்துருவேன்னு தவுமானஞ்சொல்ல, அவருஞ் சேரிங்க அங்க போயிக்கிட்டிருந்தன்.
 கொம்பாடிப்பட்டி அம்மங்கோயிலு நோம்பிச் சாட்டியாச்சின்னா அந்தாண்ட மூணு நாலு மாசத்திக்கி ஒரு நாளுவுட்டு ஒரு நாளு   கூத்து ஆடியேருப்பாங்க.  அந்தெட்டு கூலிப்பட்டி சுப்ரமணி, குருக்குப்பட்டி கணேசன் இவிங்க ரெண்டு பேருதான் இவத்த கூத்துக்கு காணியாச்சி, நல்ல பேருங்கூட.  குருக்குப்பட்டி செட்ல அப்ப சோரக ஆறுமுகம் இருந்தாப்ல.  ரெட்டச்சட போட்டு பொண்ணு வேசங்கட்டி சண்டாளன் வெளிய வந்தா இன்னஞ்சித்த பாத்தாவாச்சின்னு இருக்கும்.  அன்னாடம் நாங்க தறி ஓட்டற பசங்க ரவ்வு சிப்ட்டு பாக்கறவங்க ஒரு மணிக்கு மோட்டார நிறுத்தவம். டீ குடிக்க வந்து அப்பிடி ஒசுருக்கா நின்னு கூத்து பாப்பம்.  அந்த மாதர ஒருப்பூட்டு, அம்மங்கோயில்ல செகநாதஞ்செட்டு கூத்தாட, போயி பாத்துக்கிட்டுருந்தம். அவஞ் செட்டு சூரவேசக்காரன் மெய்யழகனுக்கொரு பொறந்தவன், அவம்பேரு ஆறுமுகம், ஆளு நல்ல செவப்பு கூளயா பந்தடிச்சாப்ல இருப்பான்.  அவெனங்கியோவொரு சண்ட தகராறுல ஒருத்தம் மண்டயப் பொளக்க, போலிசி கேசாவி போலிசிக்காரங்க ஆளுக்கு வலப்போட்டு தொழாவிக்கிட்டு கூத்து டேசிக்கே வந்துட்டாங்க.  செகநாதனும் சூரவேசக்கார மெய்யழகனும் என்னாப் பண்டனாங்க, இந்த ஆறுமொகத்துக்கு தாவணி பாவாட கட்டி சாரி வேசத்த போட்டு சவையில வுட்டுட்டாங்க போலிசு ஆள துப்பு காங்க முடியாம சித்தங்கூறியும் தொழாவிப்புட்டு போயிட்டாங்க.  வேசம் போட்டு வெளிய வந்த ஆறுமொவத்துக்கு கட்ட தொண்ட!
 “செந்தார்மலர் பாதனே வந்தேன் குருநாதனே” ன்னு பாட எனக்குன்னா கர்ண கொடூரத்த கேக்க மனம் ஒப்பல.  பசங்கள வாங்கடான்னு இழுத்துக்கிட்டு, எப்பயும் குந்தி பொறுமையா கூத்த பாக்கறவன் அன்னைக்கிங்க இந்த ஆறுமொவம் வேசத்த பாக்கப் பொறுக்காம பாதியிலேயே தறிக்கி மோட்டார் போட பொறப்பட்டுட்டன்.  போயிதான் தறி ஓட்ட முடிஞ்சிதா?  முடியல.  ஓடாத எண்ணமெல்லாம் பொந்தியில ஓடுது.  மனசே ஒரு நெலயில இல்ல.  என்னடா இவனெல்லாம் வேசம்போட்டு கூத்தாடும்போது, நம்பளால முடியாதா,  அப்பிடின்னு. ராத்திரி எப்படியோ விடிஞ்சது, விடிஞ்சி போயி படுத்தா கண்ணக் குத்தனாலும் தூக்கம் வல்ல.  நானுத் தூங்கவுமில்ல.  துருவா போனன் செங்கோடம் பாளையம், சுப்ரமணிக்கிட்ட  கூத்துக்கு வர்ரன்னு கேக்க. அதுக்குமிந்தியே சுப்ரமணி ஓராடஞ் செட்டுக்கு ஆளுப் பத்தலைன்னு அப்பங்கிட்ட வந்து கருப்பண்ணா! கருப்பண்ணா! பையன ஆட்டத்துக்கு வுடு கருப்பண்ணா! தொழிலு அவனுக்கு அமையுமுன்னு கேக்க, அப்பன் என்னோட போவுட்டுமிந்த கூத்து,  பையனுக்கு அது வேண்டாமுன்னு ஒரே தீர்மானமாச் சொல்லிப்புட்டாரு.  அட அப்பன் இப்பிடி சொல்லியிருக்க நாம்ப போயி கேட்டா நல்லாயிருக்குமான்னு நானு ஓசிக்கல.  நேரா போனன்.  ஏப்பா என்ன வந்ததுன்னு கேட்டாரு.  கூத்துக்கு வரலாமுன்னு இருக்கறன்ணான்னேன்.  கூத்து பாக்க வர்றியா, இல்ல கூத்தாட வர்றியான்னாரு.  கூத்தாடத்தாண்ணா வரலாமுன்னிருக்கறன்னேன்.  டேயெப்பா என்னா திடீருனு இந்த கூத்து மேல பிரியமுன்னு கேக்க, நானு இப்பிடி, இப்பிடித்தான்னா சமாச்சாரம் நேத்து ராத்திரி மெய்யழகந்தம்பி பொண்ணு வேசம் போட்டு ஆட, அதப்பாத்ததுந்தாண்ணா அவனெல்லாம் பாவாட தாவணிக்கட்டி பொண்ணு வேசம் போடறானே நாம்ப போட்டா என்னான்னு  அதும்பேர்லவொரு நாட்டமின்னேன்.  சேரி அப்பிடின்னா, உறுதியா வாரயான்னாரு, உறுதியா வர்ரமின்னேன்.  


அவரு சமாவுல கூடலூரு மாரிமுத்துன்னு ஓராளு நம்ப தென்னாட்டுல சோகக் கட்டத்துக்கு அவருதான் மெயினு.  அவரவுட்டா வேற ஆளில்ல.  மாரிமுத்து, அரியானூரு பழனிசாமி, சாத்தனூரு வெள்ளையன் இவிங்க மூணு பேருந்தான் சாரி வேசம்.  வேசங்கட்ட என்னென்ன பொருளு வேணுமுன்னேன், என்னா வேணும்? ரெண்டு சவுரி சீல சாக்கிட்டு பாவாட வேணும்.  சலங்க வேணும் அதுக்கூட வேற ஆருக்கிட்டயாச்சும் எறவலு வாங்கிக்கலாம்.  சொன்னதயெல்லாம் எடுத்துக்கிட்டு பொறைக்கி பாலம்பட்டி பெருமாக் கோயில்ல ஆட்டம் நேரமா வந்துருன்னாரு.  அங்கிருந்து வூட்டுக்கு வந்ததும் பக்கத்தூட்ல சலங்க காயி வெச்சிருந்தாங்க. ஒரு காயி ஒண்ற உருவாயின்னு அறுவது காயி வாங்கி சலங்க செட் பண்டன கையோட சீல, சாக்கிட்டு, பாவாடயும் எடுத்துவொரு பையில தயாரா வெச்சிக்கிட்டு மத்தியானம் ரெண்டு மணி வரைக்குந் தூங்கனன்.  அட நேரமா வர்ரச் சொன்னாங்களேன்னு எந்திரிச்சி கௌம்பி அரியானூரு போயி அங்கிருந்து பாலம்பட்டிக்கி மூணு மணிக்கெல்லாம் போயிட்டன்.  பஸ்சவுட்ட எறங்கனதுந்தான் நெனப்பு வந்திச்சி, அடடா பெருமாக் கோயிலு கூத்துன்னாரே, கோயிலுக்கிட்ட கூத்தா, ஊருக்குள்ள கூத்தா ஆடற எடம் எவுத்தன்னு கேக்காத வுட்டுட்டமே, எதக்கண்டு தாவு சேர்றதுன்னு ஒரே தடுமாட்டமாப் போச்சி.  சேரின்னு டாப்பிங்கிலியே விசாரிச்சேன்.  அவிங்க கெழபொறமா ஒரு பர்லாங்கு நடந்துபோ, ரோட்டோரம் போரிங்கி பைப்பிருக்கும் அதுக்கு எதுப்புற இருக்கற கூர வூட்டுக்காரமூட்டாருதாங் கூத்துவுட்ருக்காங்கன்னு வெவரஞ் சொன்னாங்க. மொள்ள தடம் புடிச்சேங் கூற வூட்டுக்கு. எவுத்தயிருக்கறாங்களோ ஆளுங்கவொருத்தருங்காணமே!நாம்பதாவொரு வேகத்துல நேரங்கெட்ட நேரத்தல வந்துட்ட மாட்டமிருக்குதுன்னு பலத ஔப்பிக்கிட்டு...... அங்க போனா சால்ரா போடறவனும், பொட்டி மீட்றவனும் கோரப்பாய விரிச்சுட்டு படுத்துக்கிட்டிருந்தாங்க.  எங்கியோ கூத்தாடிப்புட்டு நெட்டா மக்யாநாத்து ஆட்டமுட்டவிங்க வூட்டுக்கே வந்துட்டாங்களாட்டமிருக்குது.  எந்த கூத்தாடிங்களுக்கு என்னைய தெரியாதிருக்குது, அம்மங்கோயில்ல கூத்தாட வார அத்தன ஆட்டக்காரனுக்கும் பவ்வத்துஉருவா பின்னுக்குத்துவன்.  நானு ரொம்ப ரசிப்புத்தம்மையோட பின்னுக்குத்தனது அக்ராவரம் ராமன். பாருங்க நம்ப மாது செட்ல குந்தி வேசம் போடுவாரு, அப்பறம் நாம்ப பாப்புக் கோமாளி. எந்த ஜமா வந்தாடனாலும் ஓராளு தொச்சமில்லாம ஓராளு தொச்சமில்லாம பின்னுக்குத்துவன்.  அதனால சுப்ரமணி செட்டுல அன்னைக்கி வந்த பொட்டிக்காரனும் மத்தாளக்காரனும் என்னய நெப்பு கண்டு, ஏப்பா ராசு எங்க வந்த? என்னா இவ்ளத் தூரமின்னு கேக்க, ஏப்பா என்னாப்பா இவ்வளத்தூரமின்னு கேக்கறீங்க நானும் ஆட்டத்துக்குத்தாம்பா வந்துருக்கறன், நீங்கயென்றான்னா எங்க வந்த? எவத்த வந்தன்னு? இப்பிடி சிலப்பமா கேக்கறீங்கங்கும்பிடி அவிங்க அடடா ஆட்டத்துக்கு வந்தபரவால்ல எடு, வா வா வந்துயிப்பிடி படுன்னு அந்த பாயில எடமுட்டு என்னையும் படுக்க வெச்சிக்கிட்டாங்க மணி ஆறாச்சி, ஏழு, எட்டாச்சி ஒம்போது மணிக்கு ஒவ்வொருத்தரா வந்து சேந்தாங்க. 

 செட்டு மெயினு பொண்ணு வேசக்காரனிருந்தானே கூடலூரு மாரிமுத்து! அவனும், சூரவேசம்போடற மெய்வேலும் ராத்திரி மணி பத்தே காலுக்கு லாடங்கட்ன தோலு செருப்பு போட்டுக்கிட்டு, சும்மா நறுக்கு நறுக்குன்னு வர்ராங்கப்பா.  அன்னநேரமுட்டும் வந்தவிங்க ஒருத்தரு பாக்கியில்லாம வாத்தி வரங்குடுத்த சுப்பிரமணி அவிங்க ரெண்டு பேத்தயும் ஏண்டா இவ்வளநேரங்கழிச்சி வர்றீங்கன்னு ஒருவார்த்த கேக்கல.  வந்தும் வராதமின்ன அவிங்களுக்கு கைக்கி தண்ணி குடுங்க வந்து சோறுங்குட்டுமுங்கறாரு.  சாப்ட்டம் போனம்.  என்னடா வேசம் போடறியான்னு ஆளத்தூக்கி கனம் பாத்தாரு.   நானு வுடல, என்னான்னா இப்பிடி கேக்கற வேசம் போடதான் வந்துருக்கறன்னன்.  சேரி இரு பாக்கலாம் என்னா அலங்காரம் வெக்கறாங்கன்னு பாத்துட்டுச் சொல்றன்னு டேசிக்குள்ற போயிட்டாரு.  ராமகறவத்தான் பாப்பு வெளிய வந்தான்.  ஆசி கேக்கக்குள்ள என்ற ரசிகன் ராசு இருக்கறாப்ல உள்ள அவர வரச்சொல்லுங்கன்னான்.  நானுப் போனன் வணக்கண்ணான்னன்.  ஏப்பா நீ செட்டுக்கு சேந்த ஆளுதான?  பாட்டி வயசிக்கி வந்துட்டா கூத்துவுட கூத்தாடிங்கள தேடிக்கிட்டு திலும்பனன்.  பாலம்பட்டியில கூத்துன்னாங்க, உங்கள பாத்துட்டு வெத்தலப் பாக்கு குடுக்கலாமின்னு...
ஆமா உங்களுக்கு வருணமால தவிசி கூத்து ஆடத் தெரியுமான்னாரு. 
நானு அன்னைக்கித்தான் சவையில போயி மொத தபா நிக்கறன். இருந்தாலுங் கூச்ச நாச்சமில்லாம என்னாங்க இப்பிடி சொல்றீங்க, பிரமாதமா ஆடுவங்க, வருணமால தவிசி எங்களுக்கு தண்ணி பட்ட பாடுங்கன்னன்,  எங்க ரெண்டடி பாட்டு பாடுன்னாரு பாப்பு.  நாலடி பாட்டுத்தாம் பாடனன், படுத்திருந்தவரு எந்திரிச்சிவந்து சால்ரா போட்டாரு கூலிப்பட்டியாரு.  நானு படக்குன்னு நாலடி பாடி நிறுத்தனதும், பாட்டு ருசனையில சுப்ரமணி அட ஏண்டா நிறுத்தன பாடறா, வேசமாக இன்னும் நேரமிருக்குதுன்னாரு.  அரமணி நேரம் பாடனன்.  வருணமால புள்ள இல்லாத கொறயில புருசங்கிட்ட சொல்லி பொலம்பறது, அண்ண பொண்டாட்டிக்கிட்ட அழுவறதுன்னு வுட்டு பொளந்து கட்டனன்.
அருமப்பா பிரமாதமா பாடற! நல்லா வருவ.  இன்னைக்கி என்னா அலங்காரம் அதச் சொல்லுன்னாரு. 
அண்ணா அதுக்கு வதுலுச் சொல்ல எங்க வாத்தியாரு இருக்கறாரு அவர வரச் சொல்றன்னு டேசிக்குள்ள வந்துட்டன். 

என்னா கூத்து வெக்கிறாங்களோ, ஆரு கூத்துவுட்டவங்களோ நாம்ப என்னத்தக்கண்டம்.  அத தூக்கிட்டு நாம்ப ஏம்பா திரியணும்?
அலங்காரம் ஆரவல்லிச் சண்ட வெச்சிட்டாங்க. ராசுக்கு பொண்ணு வேசம் போட்டுவுட்டு ஏழு பொம்பளைங்களோட ஒரு பொம்பளையா முடுக்குன்னவரு, மறுக்க என்னா நெனச்சாரோ, ஏப்பா ராசு உனக்கென்னாஆடத்தெரியுமா? பாடத்தெரியுமா?நடதான்நடக்கத்தெரியுமா இல்ல வசனந்தாம் பேசத் தெரியிமா? அவிங்களோட வந்து என்னாப் பண்டுவ, நீ பல்வருசா போட்டுக்க. கண்ணே பல்வருசான்னா வெளிய ஓடியாந்துருன்னாரு வாத்தியாரு..
சேரிப்பான்னுட்டு வேசம் போட்டன்.  அன்னைக்கி தாரமங்கலம் மாது வந்துருக்கறாப்ல. என்னு வேசத்தப் பாத்துட்டு, என்னா தம்பி கெழவி கட்ற சீலய எடுத்தாந்துருக்கற வயசிப்பையன், முகமான வேசம் பீத்த சீல வேண்டாமடா இருன்னு அவரு கொண்டாந்த பாவாட தாவணி அவரு கொண்டாந்த டோப்பாவ வெச்சி நல்ல கட்டபொம்மையாட்டம் கும்முனு சிங்காரிச்சி வுட்டாரு மவராசன்.
ஏப்பா சுப்ரமணி நல்ல வேசத்த உள்ற குந்த வெச்சிக்கிட்டு   நீங்களா ஔப்பரிச்சிட்டிருக்கறீங்க! அவன வெளியவுடங்கப்பா!வௌயாடட்டமுன்னு பறக்கறாங்க கூத்து பாக்க வந்த சனம்!.
ஆரவல்லிய பந்தயத்துல செவிச்ச அல்லிமுத்துவுக்கு வெற்றி பரிசு குடுக்கற கட்டம்.  எங்க உங்க பொண்ண கொஞ்சங் கூப்புடுங்கன்னாரு சுப்ரமணி.  ஆரவல்லி வேசக்காரன் கண்ணே பல்வருசா வாடி! வெளியன்னான்.
நானு உள்றயிருந்துக்கிட்டே “ஓ அம்மா, ஏம்மா பாதாள செறயில இருக்கறன்.  சூரிய வெளிச்சமே தெரியல! தாளு நீக்கி சிறையிலிருந்து என்னய விடுவிச்சாத்தாம்மா நானு வெளிய வரமுடியும் சிறைய நீக்குமா மொதல்ல”ன்னேன்.
அப்பையே கூடலூரு மாரிமுத்துக்கு சப்புன்னு ஆயிப்போச்சி.  நேத்து பேஞ்ச மழயில இன்னைக்கி மொளச்ச காளான்,  பவுடரு போட்டு முழுசா வேசமாடல, பூராக்கதையுந் தெரியுது! பல்வருசா பாதாள சிறையில இருக்கறதுந் தெரியிதேன்னு அவிங்க  புழுங்க, நானு சவைக்கி தர்பாரு ஆனன்.  சுப்ரமணி என்னய சும்மாவே நோண்டராரு, இதுதாம் பொண்ணா, இதுதாம் பொண்ணா, ஏம்பிள்ள முகஞ்சோந்தாப்ல இருக்குதுன்னு நானும் அவுத்த வெக்கப்பட்டு ஓடறது இவித்த வெக்கப்பட்டு ஒடறதுன்ன வெறும் பாவ்லா பண்றன்.
கதப்பிரகாரம் பின்ன மரச்சோலைக்குப் போற கட்டம்.  எலுமிச்சங்கனி பூச்செண்டு ரெண்டயுங்குடுத்தாங்க.  அதுயெதுக்குன்னு சொல்லல.  பாக்கலாம் இவிங்க கீட்டகத்தன்னு ஒண்ணும் பேசாம வாங்கியத மடியில வெச்சிக்கிட்டன் பின்ன மரச்சோலைக்கிப் போனன்.  எம்பிருசனுக்கு தாவம் எடுத்துக்கிச்சி. கண்ணே பல்வருசா எனக்கு பச்ச தண்ணி தாவம் பல்லொணந்து போகுது, நல்ல தண்ணி தாவம் நாவொணந்து போகுதேன்னு வசனம் பேசிப்புட்டு சுப்ரமணி ஒருத்தருக்குங் கேக்காதபடிக்கி “ராசு பூச்செண்டு மோந்தா தாவமடங்குமின்னு சொல்லி குடு”ன்னு எங்கிட்ட குசு குசுன்னு சொல்றாரு, எலுமிச்சங்கனி எதுக்கு, பூச்செண்டு எதுக்குன்னு அவருக்கு பிருவா தெரியல.  நானு என்னாச் செஞ்சன், ஓ மன்னா பிராணபதி! எங்கம்மா எனக்கு சொன்னது, இதோயிந்த எலுமிச்சங்கனியை ரெண்டாக பாகம் செய்து சாறு பிழிந்து குடித்தால் போகுவழியதனில் உண்டாகும் தாகம் தணியுமென்று! அந்தப் பிரகாரமே சாமி இந்த கனிய பாகஞ்செய்து புசிப்பீர் ன்னு சொல்லிப்புட்டு அண்ணா சமாச்சாரத்த இப்பிடித்தாண்ணா செய்யுனுமுன்னு அவரு காதுல சொன்னான்.  பின்ன மரச்சோலையில இன்னங்கொஞ்ச தூரம் போனதும் எம்புருசனுக்கு தலயச் சுத்தி மயக்கம் வந்துட்டது. “பெண்ணே பல்வருசா பூமி சொழலுதடி, புத்தி தடுமாறுதடின்னாரு,
சுவாமி இதோயிந்த பூச்செண்டை முகந்து பார்த்தீர்களானால் உண்டான மயக்கம் தன்னால தீருஞ்சுவாமின்னு நானு பூச்செண்டு எடுதுக்குடுக்க மோந்துப் பாத்தவரு,  மயக்கமல்ல பெண்ணே! இது மாரகம், நான் பிழைக்கயினி வழியில்லன்னு ஒரே வார்த்த பேசனதும் சுப்ரமணி என்னு மடிமேல சாஞ்சி கண்ண மூடி படுத்துக்கிட்டாரு.  அல்லிமுத்து செத்ததும் பின்ன மரச்சோலையில அடுத்தாப்ல நானு இன்னத செய்யணும், இன்னார சந்திக்கணுமின்னு ஒருத்தருஞ் சொல்லிக் குடுக்கல.  என்னயத்தவிர மிச்ச பொண்ணு வேசக்காரனங்கெல்லாம் சுத்தி நின்னு வேடிக்கப் பாக்கறாங்க.  என்னாப் பண்றானோ ஏது பண்றானோன்னு மெதுவா சுப்ரமணி தலய அசாம மடியிலயிருந்து எடுத்து கீழவெச்சிட்டு எடுத்தம் பாட்ட.  கண்ணீரா கடவாயில ஒழுவுது!கொல்ல நினைத்தாளோ!கொலைகார ஆரவல்லின்னு மடிக்க நினைத்தாளோமாபாவி ஆரவல்லி!திருப்பி பாட்ட நிறுத்தவேயில்ல.
சனமுன்னா ச்சும்மா காசா கொண்டாந்து கொட்டி என்ற மடிய நப்பறாங்க.  கீழ படுத்துக்கிட்டு சுப்ரமணி பாடு, பாடு சொனையான் எறங்குது பாடுங்கறாரு.  அன்னராவு கூத்து முடிஞ்சி வேசமழிச்சம்.  எல்லாருக்கும் சம்பளம் பிரிச்சாரு வாத்தியாரு.  என்னய கூப்புட்டு அம்பது உருவா சம்பளங் குடுத்தாரு.  மடியில வுழுந்ததே சில்லரக்காசி அத முடிஞ்சி வாத்தியாரு பொட்டியில வெச்சிருந்தன்.  அதயும் எடுத்து இந்தாடா ராசு பத்ரமா வெச்சிக்க பஸ்ல கிஸ்ல தூங்கி காச தொலைச்சிப்புடாதன்னு புத்தி சொன்னாரு, கேட்டுக்கிட்டன். வூட்டுக்குப்போயி மூட்டய பிரிச்சிப் பாத்தன் முந்நூத்தியம்பது உருவா இருந்திச்சி.  நூத்திருவது உருவாயிக்கி சூட்கேசி பொட்டி வாங்கிக்கிட்டன்.
மக்யாநாத்து திண்டமங்கலம் ஆட்டம்.  பழனிமாதர பெரும் பெருத்த கூத்தாடிங்க இருக்கப்பட்ட ஊரு.சலவ வேட்டி, சலவ சர்ட்டு மாட்டிக்கிட்டு கௌம்பனேன்.  பெருமன்னாலூம் பெரும சாமி எனக்கு காலு தரையில பாவல.  என்னையே திரும்பி திரும்பி பாத்துக்கறன்.  காத்தாலயே சம்பளம் பிரிக்கறப்ப, பாரு எளம்பிள்ளையில பன்னியாண்டிங்க இருப்பாங்க காதுகுத்திக்க, ராத்திரி காதுமணியில்லாம பொக்குனுயிருந்திச்சின்னாரு வாத்தியாரு.    ஓமலூரு பஸ்சவுட்ட எறங்கி காதுமணி ரெண்ட வாங்கிக்கிட்டேன். திண்டமங்கலம் போனம்.  இவரு முந்தியேப் போயி அம்பாள் கல்யாணம் அலங்காரம் வெச்சிட்டாரு.   மூணுபேரு மெயினு வேசக்காரங்க,  இருக்கும்போது எனக்கென்னா வேசங்குடுக்கறதுன்னு வாத்தியாரு சித்தங்கூறி தடுமாறிப்புட்டு ராசு நீ தாயி வேசம் போட்டுக்க, பரிமளகந்தி! முன்ன போ ஒண்ணும் ஆட வேண்டாம், பாடவேண்டாம்! தர்பார முடிச்சிக்கிட்டு, “என் மைந்தர்கள் இருவர்களிரண்டு பேர்களும் வீர விளையாட்டுக்கள் விளையாடிக்கொண்டிருப்பாங்க தாயார் நான் அழைத்ததாக அதி சீக்கிரமாக அழைத்து வாருங்கள்”ன்னு சொல்லிப்புட்டு வந்துரு அவ்வளத்தான் வேலன்னாரு.  வேசம் போட்டன். புதுசா வாங்கன காதுமணிய கண்ணமூடிக்கிட்டு ரெண்டு காதுலையும் குத்தி பட்ன மாட்டிக்கிட்டன். வெளிய போனன் தெரிஞ்சத ஆடனன்.  அறுவது உருவா பின்னுக்குததனாங்க.  முன்னப் போனாங்களே செட்டு மெயினு வேசக்காரங்க மாரிமுத்து, வெள்ளையன், பழனிசாமி இவிங்க ஆருக்கும் ஒருபைசா சொனையாங்குத்துவாரில்ல.  ஆடி தர்பார முடிச்சிக்கிட்டு உள்ர வந்தன்.  ரெண்டு பக்கத்து தோளுபட்டயும் நனஞ்சி, சாக்கிட்டும் நனஞ்சி போச்சி! சோத்தாங்கையி காதுல சொட்டு சொட்டுன்னு ரத்தம் ஒழுதே இருக்குது.  சட்டுனு வேற சாக்கிட்டு மாத்திக்கிட்டு காத்தாட நின்னு வலிய ஆத்திக்கிட்டிருந்தன்.   இந்த மாரிமுத்து கிட்டவந்து  "முன்ன போயி நாலு பேரு ஆடனம் ஒருவா குத்துவாரில்ல! பொறன போயி மூணுபேத்தயும் மண்ட பண்டிப் புட்ட''ங்கறான்! மொவறயில எள்ளுங்கொள்ளும் வெடிக்குது.  நானு ஒண்ணுஞ்சொல்லல பேசாம இந்துக்கிட்டன்.  சந்திப்பு கட்டம் வந்திச்சி திலும்பி சவைக்கி போனன்.  பீஷ்ம வேசக்காரனும், விசித்திர வீரியன் வேசக்காரனும் இருக்க, எனக்கு மாத்தரம் ஒருத்தன் பத்து உருவாயகொண்டாந்து குத்திபுட்டு என்ற கைய புடிச்சி குலுக்கல,சுப்பிரமணிய கையப்பிடிச்சி குலுக்கி  என்னான்னு சொல்றான் மவராசன், புண்ணியவான் இன்னிக்கிச் சொன்ன மாதர இருக்குது "சுப்ரமணி இந்தபையம் மட்டும் உன்ற செட்டுல ஒரே வருசம் இருந்தான்னா, உன்ன அடிச்சி ஆட இந்த தென்னகத்துல வேற செட்டு இல்ல''ன்னாம்பா. சுப்ரமணிக்கு வாயி வெப்பிரிச்சிப் போச்சி.  ம்... ம்... செய்வான்னாரு.அடுத்த நாளு கள்ளக்குறிச்சி ஆட்டம் எல்லாம் அஞ்சர மணிக்கு கள்ளக்குறிச்சி பஸ்டாண்டுக்கு வந்துருங்கன்னு வாத்தியாரு சொன்னதும், அவிங்கவிங்க வூட்டுக்கு பொறப்பட்டம்.  அப்ப சுப்ரமணி சாவா வண்டி வெச்சிருந்தாரு.  ரயிலு மாதர பொக.  பொறன ஒருவண்டி போறதுக்கில்ல தடதடன்னு சத்தம் வேற. என்னய பொறன குந்த வெச்சிக்கிட்டாரு ராசு, நீயி கள்ளக்குறிச்சி வந்து சேர மாண்ட, மூணு மணிக்கி நம்ப வூட்டுக்கு வந்துரு, நாம்ப ஒட்டா போவலாமுன்னாரு. சேரின்னுப்புட்டு நானு வூட்டுக்கு வந்து தூங்கல, நேரா ஓராள புடிச்சிக்கிட்டு திருச்செங்கோடு வந்து தேர்முட்டிக்கிட்ட இந்தா வளத்தி டோப்பா முடி! முந்நூறு உருவாக்கி வாங்கனேன்.  வூட்டுக்கு போனன், தண்ணி வாத்தன் நேரஞ் செரியாயிருந்திச்சி.  கள்ளக்குறிச்சி போயிட்டம்.  அன்னைக்கும் சுப்ரமணி அம்பாள் கல்யாணமே வெச்சிட்டாரு.  அம்பாலிக வேசக்காரன் அரியானூரான் வரல.  வேசம் போட்டன், வெளிய போனன் நூத்திருவது உருவா பின்னுக்குத்தனாங்க.  சந்திப்பு கட்டத்துல, அவிங்க பாடிக்கிட்டிருந்தா, ஏப்பா நீங்களே பாடறீங்க அந்த பையன செத்த பாடச் சொல்லங்கறாங்க சவையில குந்தியிருக்கறவங்க.  மாரிமுத்தும் வெள்ளையனும் மொவறய திருப்பிக்கிட்டு நிக்கறாங்க.  நானென்ன செய்யறது?  உண்டான விருத்தம், உண்டான பாட்ட பாடனன்.  அவிங்கள நாங்கண்டுக்கல.  கள்ளக்குறிச்சி ஆட்டத்துல சுப்ரமணி சம்பளத்த ஏத்தி எம்பது உருவா குடுத்தாரு.  விடிஞ்சன்னைக்கி ஆட்டம் சாமக்குட்டப்பட்டி... நம்ப ராசாபாளையத்துக்கிட்ட.  அந்த ராவும் அம்பாள் கல்யாணமே அலங்காரம், அம்பாள் வேசம் போடற மாரிமுத்து வரல வாத்தியாருக்கிட்டயும் சொல்லல,  ஒருத்தருக்கிட்டயும் சொல்லல.  ராத்திரிப்புடிச்சே ஆளு மொவற சுண்டிப்போயி அரா சிவான்னு ஆருகிட்டயும் பேசிக்கல.  ஆளுக்கு என்னமோ பொந்தியில பொமைச்சலு.  சுப்ரமணி பழனிசாமிய அம்பாள் வேசங்கட்டுன்னா அவன் க்கும் நாந்தான்,  அம்பாள போடறானா? ன்னு ஒரே முக்கு முக்கிப்புட்டா. வெள்ளயன கேட்டா ஏப்பா நீயொருப்பக்கம்! நாந்தான் சிக்கனான்னு ஆளு தூரமாப் போயிட்டான்.  வேசம் போட்டு செலுத்தமுடியாமயில்ல, புதுவேசக்காரனுக்கு இவ்வளவு ரஸ்பீட்டு மயிரா? இன்னைக்கு ஆக்கிட்டு போட்டு புளுத்துட்டுமே! சவையில வுட்டு சனங்க மின்ன சமாச்சாரந் தெரியாம சரக்கு பத்தாம சின்னப்படட்டுமுன்னு ஒரு கெட்ட எண்ணம்.


என்னய கேட்டாரு, சுப்ரமணி. அண்ணா வேசம் போடத்தான் வந்துருக்கறன், எந்த வேசமுன்னாலுங்குடு போட்டுக்கறன்.  இன்ன இன்னத இப்பிடி இப்பிடி செய்யணும் விங்கிணிச்சி சொல்லு அந்தப்பிரகாரஞ் செஞ்சிபுடறன்னன். அம்பாள் வேசங்குடுத்தாரு.  மொத மொத பெருங்கொண்ட கதாநாயகி வேசம் போடறன்னு கொஞ்சம் அச்சமா இருந்திச்சி சுதாரிச்சிக்கிட்டன்.  சும்மா சொல்லக்கூடாது அத்தனாம்பட்டி சீனு சால்வன் வேசம், சுப்ரமணி பீஷ்மரு வேசம் ரெண்டு பேருச் சந்திப்பையும் திருத்தமா செஞ்சன்.  எல்லாத்துக்கும் நல்ல பேரு,  கூத்து எத்தாயிருந்திச்சி.  அந்த அம்பாள் வேசத்துலயிருந்து இன்னைக்கி வரைக்கும் சுபத்தர, சித்ராங்கத, சீத, தமயந்தி, பாஞ்சாலி ன்னு பெருங்கொண்ட வேசந்தான் கட்டியாடறன்.  "சீசீ இந்த வேசம் நல்லாயில்ல உள்ற போ'' ன்னு ஒரு சொல்லு கேக்காத அளவுக்கு தொழிலுப் பண்றன்.  தனியா செட்டுக்கட்டி பதனஞ்சி வருசம் ஆடிப் பத்துப்புட்டன்.  ஒண்ணும் சுத்தப்படல. இப்ப ஏகாபுரம் சுப்ருகிட்ட ஆடிக்கிட்ருக்கறன்.  வரும்பிடி பரவால்ல, மூணு பேரு சம்சாரத்த தாட்ட முடியிது. என்று தனது, வாழ்வானுபவத்தை தொழில் ரீதியாகவே பகிர்ந்து கொள்ளும் ராஜூ அவர்கள் சிறந்த கலைஞர் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.*

*********கலைஞனை அணுகுவதும், அண்டியிருப்பதும் அவனது உட்கிடக்கையை உள்வாங்குவதும், பின் வெளிச்சமிட்டுக் காட்டுவதும் சாமான்யமல்ல.  ஒவ்வொரு கணமும் அவனே அவனுக்கே புதுமையானவன், நிகரானவன். உள்ளதை உள்ளவாறே கண்டு நுகர்வதே சாலச் சிறந்தது.  மற்றங்கே நமது தேடலை, விருப்பத்தை கேள்விகளாக்கி வேண்டிய விடையெதிர் நோக்கி பரிட்சித்தோமானால்இ நாமங்கே பெறும் மதிப்பெண் பூச்சியமே!

https://www.youtube.com/watch?v=UEyYo9lXhng


பெற்றவள் என்றில்லை தண்ணீருக்கும் மூன்று முறை
தாளம் காலம் இசையாத அச்சிறுப்பிழையும் பொறுக்கான்
பொட்டி மூலிகைச் சிமிழ் கொண்டு நெறிதப்பி போகும்
மயில்ராவணனை தடுத்து நாயஞ்சொல்வான்
அதிவர்ண மாலையான ராசுப்பையன்
குற்றங்கடிந்து நீட்டும் அச்சுட்டுவிரல் கண்
ஒளிந்திருக்கும் ஆயிரமாயிரம் சித்ரவித்தை
குறி சொல்லும் நேர்த்தியில் குறத்தி தோற்பாள்
எத்தனையெத்தனை பாவங்கள் வேண்டுமுங்களுக்கு
கல்லெல்லாம் மாணிக்கமல்ல சொல்லெல்லாம் அச்சரமல்ல
அரங்காடும் நல்லத்தங்காள் பொம்மையைக் கேட்டுப்பாருங்கள்
சோமப்பானம் சுராப்பானம் தேவர்களுக்கு
பீ மூத்திரமொன்றாய் பிசைந்துண்டும் புத்தி வரவில்லை
ஓரவஞ்சனை பாராமுகம் லாரிமுன் தீப்பாய்ந்தது சீதை
வேடப்பையின் ஓட்டை வழி தொங்கும்
ஒற்றைச்சதங்கை குரலெடுத்து அரற்றுகிறது
யாகச்சேனை வேசமினி ஆர் கட்டுவதுகாலனக்கென்ன தாகம் மரியாதைக்குரியவர்களின் உயிரை எல்லாம் குடிக்கிறான்
..கூத்து கலைஞர் கொம்பாடிப்பட்டி ராஜு அகால மரணம் ...22-10-2014
திங்கள், 3 நவம்பர், 2014

நாயி வாயிச்சீல

தெரட்டி முடிஞ்சதும் பொறப்படலாமுன்னா எங்க முடியிது? சொணையான இன்னுமே வரிக்கல, மணி பதனொன்னாவுதோ’ பன்னண்டாவுதா’ தெரில. ஆட்டத்துக்கும் போயிகிட்டு அலங்காரத்துக்கும் போறதுன்னா சாமானியமா?கயிட்டத்தப் பாத்தா காச கண்லக் காங்கறதெப்பிடி? நாமக் கைதொட்ட காரியமாவறதெப்பிடி?


எரநூறு வருதோ- முன்னூறு வருதோ  நாயனக்காரன இருந்து வாங்கியாடான்னு நாம்ப நம்ப தொந்தரவுக்குப் போயிரலாந்தான். ஆனா இண்டம் புடிச்சவன் அதக்கொண்டி எங்கியாச்சும் கூத கீதப்போட்டுக்கிட்டு வந்துட்டான்னா ஒரே ஒத்தப்பைசாவ திலுப்பி வாங்க முடியாது.


பொட்டைங்கன்னு அவனுக்கு மட்டுமில்ல, இந்த வையகத்துச்சனம் முச்சூட்டுக்குமே எளக்காரந்தான். பெறத்தியார ஏஞ்சொல்லணும்? பெத்தவளே நம்ப தலமேல கொலாய வெச்சி தேக்கிறா, அபிராமிப்பிள்ள இருந்தவரிக்கும் ஓரேடத்துக்குப் போவ வர பேசப் புடிக்க பக்கத்தொணையாயிருந்தா, அவளத்தா அனாமுத்தா மண்ணுக்கு வாரிக்குடுத்துட்டமே.


பொம்பளயாப் பொறக்க வேண்டியவ, ஆம்பளயாப் பெறந்து அவ அடஞ்ச சிறும கொஞ்சமா? நஞ்சமா? பொன்ன உருக்கி பூமியில வாத்தாப்பிடி’ தங்கத்த உருக்கி தரையில வாத்தாப்பிடி’ தகதகன்னு ஆளும் அவ அழவும் பிள்ளய கண்ல பாத்தாப் பசியாறும். பாதியில போறதுக்குத்தாம் பாவிமுண்ட அப்பிடியிருந்தாளோ என்னம்மோ’

சாவற வயசா சண்டாளிக்கி?

ஆடிக்காத்துல பூளப்பூவு பறக்குமே அப்பிடி ஓடி ஓடிச் சம்பாரிச்ச சொத்தும் அவளக் காப்பாத்தல, பிருசனே இவந்தான்னு நம்பி பூசப்போட்டுக் கும்புட்டுக்கிட்டிருந்தாளே தேவூரு கவுண்டம் மவன் அவனும் அவளக் காப்பாத்தல.


ஒக்கிலிப்பட்டி சாமியாருக்கிட்டதான் நானும் அவளுங் கூத்துப் படிச்சம். கூத்துப்படிச்சமில்ல அதுக்கும் மிந்தியே அபிராமி தாயம்மாளிண்ட கைபோட்டு பச்சச்சீலக்கட்டி போத்திராசி மாதாளுக்குப் பாலுக்கொடம் எடுத்துப்புட்டு வந்துட்டா.

பாலுக்கொடம் எடுத்தாளில்ல, அந்தவொரு மண்டலம் நாப்பத்தியெட்டு நாளும் அவப்பட்ட வாதயச் சொன்னா கல்லுங்கரையும், மண்ணும் உருகும்.


அப்பன், ஆயா, பெத்து, பொறப்பு அத்தனப் பேத்துக்கும் விரோதமாகி, அடிப்பட்டு, துணிப்பொறுக்கி, அனாதியாட்டம் ஊட்டவுட்டு பம்பாயிக்கி ஓடிபூக்கார ஆயா சமாத்துல சேந்து, பைட்டேண்டுக்கு வைட்டேண்டு, வீதிக்கி வீதி, சந்துக்கு சந்து, அல்லெடுத்து அங்கயிருக்கற பொட்டைங்களுக்கு எல்லாம் ஒரு வருசம், ஆறு மாசம் ராத்திரிப் பகலா ஊழியஞ் செஞ்சா.


ஊழியஞ்செஞ்சவளுக்கு கைபோட்டுத் துப்புரவு பண்டறமின்னுச் சொன்னவிங்க, பேச்சி சுத்தமா இருக்கணுமா வேண்டாமா?

இன்னைக்கி, நாளைக்கின்னு சாக்குப் போக்குச் சொல்றாங்களே தவர ஒரேவொரு தாயம்மாக்கூட இவளுக்கு கைபோடற மாதரயில்ல. வாக்கியங்கெட்ட கழுதைங்களப் போக்குல வுட்டுப் புடிக்கலாமின்னு இவளிருக்க, மறுபடியுமொரு மூணுமாசம் இழுக்கடிச்சி, அதும் பொறவு வடக்க வேண்டாந் தெக்க போலாமின்னு நம்ப உளுந்தூருப்பேட்டைக்கிக் கூட்டிக்கிட்டு வந்தாங்க. கூட்டிக்கிட்டு வந்தவிங்க அங்கியும் ஒரு மாசஞ் சும்மாவே குந்தவெச்சிருந்தாங்க.


குந்தவெச்சிருக்கும்பிடி இவ பொறுக்க மாண்டாம,

“கோத்தியாவே” திரிய இன்னும்மேயெனக்கு விதியா? முடியுமின்னா முடியுமின்னுச் சொல்லுங்க. இல்ல முடியலியா, பம்பாயிக்கி தாட்டிவுடுங்க வழுது சமாத்த அண்டி எனக்கானத நானேப் பாத்துக்கறேன்”னு கேக்க, கேட்டவளுக்கு “ஊக்கியிலக் குத்தி இடுக்கியில முள்ளு எடுக்கற சங்கிதியா இது? கைபோட்டு பொம்பளை யாவறதுன்னா உனக்கு அவ்ள ரேசா? அதுக்கெல்லாஞ் செட்யானப்படிக்கி தெகிரியம் வேணும் நீ செத்த பொறுமையா இருடி தாயி”ன்னு தேறுதலச் சொல்லி ஆத்தூருக்குக் கூட்டிப்போயி அங்கியுமொரு அஞ்சாறு நாளாட்டம் வெச்சிருந்தாங்க.


ஆறாந் நாளு நெறஞ்ச வெள்ளிக்கெழம’ அன்னைக்கி அந்தியோட ஆயாமாருங்க “எல்லாரும் சேலாமாருங்க” எல்லாரும் ஒண்ணாச்சேந்து ஒரேத்துருவா கடவீதிக்கிப் போனாங்க.

போனவிங்க இன்னதுதானில்ல இஷ்டப்பட்ட திம்பண்டத்த நீயி திங்கறமுட்டும் தின்னுடின்னு அபிராமிக்கி வாங்கிக் குடுத்துத் திங்கடிச்சாங்க.

திங்கடிச்சிப்புட்டு அன்னராவு மொதாட்டஞ் சினிமாவுக்குங் கூட்டிப் போனாங்க. போயிட்டு வந்து, கண்ணாறத் தூங்கு மவளே’ இன்னைக்கி விடியறதுக்குள்ள உனுக்கு உறுதியா கைபோடறம்மின்னுச் சொன்னாங்க. சொன்னவிங்கச் சொன்ன மாதர ரெண்டுமணி சுமாருக்கு இவளையெழுப்பி சுத்தம் பத்தம் பண்டி, சுனிக்கி சரட்லச் சுருக்கு வெச்சி, சுத்தியும் வெள்ளத் துணி சுத்திவுட்டாங்க. சுத்திவுட்டவங்க அதும்பொற வொரே அரச்சணங்கூட தூங்கவேப்படாதுன்னு இவுளுக்குக் காவலிருந்தாங்க.


விடிகாலம் நாலுமணிக்கெல்லாம் பாத்துக்க’ ச்சும்மா தடபுடலா மாதாளுக்கு முப்பூசயாவுது. பூச ஆவக்குள்ளயே சாமிக்கி மின்ன நெறம்மணம்மா இவள நிக்க வெச்சாங்க.

நிக்க வெச்சதும் அந்தல்லயிந்தல்ல திமறுதுக்கில்லாம கையரெண்டயும் பிந்தாயம்மா இறுக்கிப் புடிச்சிக்கிட்டா. அவ இறுக்கிப் புடிச்சதும் தலமசுத்த சுருட்டி வாயில துருத்தி, மனசார மாதாவ வருந்தடியம்மான்னுப் புட்டு, ‘மாதா... மாதா...’ன்னு இவ வருந்த, வருந்த கண்ணமூடி முழிக்கறதுக்குள்ள மானியப்புடிச்சி பறக்குனு அறுத்துப்புட்டா இன்னொரு தாயம்மா. அப்பிடி அறுத்ததும் அடேயெங் கொண்டாலா’ காலடியில உதரம் போவுது தானா காவேரி ஆறாட்டம்.


செவுத்தச் சாத்தி ஒக்காரவெச்சி உதரத்த வழிச்சி, வழிச்சி, இவ உச்சந்தல மொதக்கொண்டு உள்ளங்காலு ஒருக்கோடியா சொதம்பப் பூசிவுட்டா தாயம்மா.

தாயம்மா பூசப்பூச தம்பட ரத்தத்த தானே காங்கும்பிடி, அபிராமி அடி அம்மான்னு மயக்கம் போட்டுட்டா. அம்மான்னு சொல்லாதடி மாதான்னுச் சொல்லுடின்னா, அவ எருப்பு தாழமாண்டாம எரியிதே’ எரியிதேன்னு தன்னப்பால பெணாத்தறா, தன்னப்பால பெணாத்தும்படி அந்த தாயம்மா நல்லெண்ணய கொதிக்கக் கொதிக்கக் காயவச்சிக் கைபொறுக்க கொண்டாந்து அந்த பச்சப் புண்ணு வாப்பாட்டச் சுத்தியும் பலாசனா ஊத்தியுட்டா.

ஊத்த ஊத்த வாட்டமாக் காட்டிக்கிட்டிருந்தவ ஒருச்சித்தய கழிச்சி ச்சுறு ச்சுறுன்னு நோவு திலும்பும்பிடி அந்நேரம் அய்யய்யோ எங்கடவுளயே’ன்னு அந்தப் பிள்ள ஒரு கத்துதுதாங் கத்தனாப்பாரு’ கடகால் மட்டத்துலயிருந்து அந்தக் கட்டடமே கிடுகிடுன்னு நடுங்குது’அருவாளோ, கொடுவாளோ தப்பத்தவற நம்ப மேலுலப்பட்டு அதால வொரு காயமாயிப் போச்சின்னா அதுக்கு எத்தன ஊசிப் போடறம்? எவ்ள மாத்தரத் திங்கறம்? கப்புப் போட்டு, சோக்கேத்தி, ஆத்துக்குப்போயி, தீர்த்தம் எடுத்தாந்து, ஆலாத்திச் சுத்தி, மாதா மொகம் பாத்த பிற்பாடும் ஆறாத ரணத்துக்கொரு மருந்துமில்ல, மாயமுமில்ல.

வலின்னு வாயத்தொறந்துப்புட்டா, மோரியிலக் குந்த வச்சி ஓலத் தண்ணிய மூட்டு மூட்டு காவு மேல அடிச்சி வுடறதோடச்சேரி’ அத மீறனா வெத்தலயில நல்லெண்ணயத் தடவிப் பத்து போடறதோடச் சேரி’

ஒடம்போக்காக் கூடப்போயி பக்கத்துலயிருந்து இந்த பாதரவு எல்லாத்தையும் பாத்துக்கிட்டுருந்த எனக்கு, கைபோட்டா தாயம்மா கிட்டதாங் கைபோட்டுக்கணு மின்னிருந்த வைராக்கியம் எங்கப் போச்சின்னே தெரில.

அத இன்னைக்கி நெனச்சாலும் கை காலு தொவண்டு, கிறுகிறுப்பு பதபதன்னு வந்துரும், காலோட தொறத் தொறன்னு மல்லும் முட்டிக்கும், அந்தப் பயத்திலியே நாங்கையும் போட்டுக்கல கிய்யும் போட்க்கல சொல்லாமப் புடிக்காம அபிராமிக்கி மின்ன திருட்டு வண்டியேறி ஊருக்கு வந்துட்டன்.உதரக்கட்டு நிக்காம, காஞ்சப்புண்ணு பாதி, காயாத புண்ணுப் பாதின்னு அப்படியே கோமணத்துமேல கோமணங்கட்டி, கட கடயாப் பிச்சையெடுத்து, குருவுக்குப்பட்ட கடங்கட்டிப்புட்டு தாயிப்புள்ளயோட வந்து அவளும் எடஞ்சேந்தா. மரத்தவெட்டி ஆராச்சும் மாருமேல சாச்சிக்கிவாங்களா? எதுக்குயிந்த சித்ரவத? எதனாலயிந்த கந்தரக்கோலமின்னு கேக்கற சனத்துக்கு வதுலுஞ் சொல்ல முடியல? ஆதியில பகவாம் படச்சபண்டம்’ அப்பிடியே இருந்து தொலையட்டுமின்னு இருந்தாலும், மூக்கு மேல பீயப்பனாப்ல இந்த அருகருப்ப வெச்சிக்கிட்டுந் திரிய முடியல....

பவானி குட்டமுனியப்பங் கோலுதான் நாம் பொறந்த ஊரு. யெங்கப்பம் பழனிச்சக்கிலிக்கிம், ங்காயா பச்சாயா சக்கிலிக்கும் நாம் பொறந்தது ஒரேப்பையன். எனக்கொரு பொறந்தவ, அவபேரு அழிஞ்சிகண்ணி, பொறக்கும்போது உருப்படியாதாம் பொறந்தன். பத்து வயசாச்சோ இல்லியோ இந்தப் பித்து புடிச்சிட்டுது.

கண்ணுக்கு மையெழுதி, மண்டையில பூவசொருவி, கவுனுமாட்டி, கண்ணாடி மின்ன ஆட்டம் போட்டு, ஊட்ல பொம்பளச் சட்டியின்னுப் பேரெடுத்து ஊருலப் பேரெடுத்து, கூலிநாலிக்கிப் போற எடத்துலயும் பேரெடுத்து கரும்பு வெட்டப்போனத்தாவுல காட்டுக்காரன் கையக்கால கட்டிப்போட்டு, கடவாயிக்கி கல்லையும் நடுவாயிக்கி புழுலுயும் வெக்க, பத்துப்பேரு அதப்பாத்து சிரிச்சாங்களே அன்னிக்கி ங்கொக்கா பாவாடயோட ஓடி பூதப்பாடி கல்பனா ஆயா காலடியில வுழுந்தவதான், திலும்பி வூட்டுக்குப் போகவேயில்ல


. வவுத்துக்கு திங்கற சோத்துக்கும் இடுப்புக்கு கட்ற துணிக்கும் வஞ்சன வெக்காம வளத்தனா ங்காயா புண்ணியவதி’ மூக்கு குத்தியுட்டு ‘தொளசி’ன்னு அவதான் எனக்குப் பேரு வச்சா. தந்தாவும் வேண்டாண்டி’ ஒரு கிந்தாவும் வேண்டாண்டி’ அலேய் ஆதமுத்து முண்டைங்களா உருவா சம்பாரிக்கலாமின்னு பத்துப் பேரோடப் படுத்து நோவு கீவு வாங்கிக்கிட்டம்னா அந்த வெனய எங்கக் கொண்டுப்போயி தீக்கறது?ஆடுமாடுங்களுக்கு கூட ஆசிப்பத்திரியிருக்குது’ நாயிம் தம்புண்ண தானே நக்கி ஆத்திக்கிது. அதோட கேவலண்டி நம்ப பொழப்பு. கண்ணக் கெடுத்தாலுங் கோல குடுத்தாங்ககறாப்பிடி மாதா நம்புளுக்கு ஒழச்சிப் பொழைக்க மாளாத தெம்பு குடுத்துக்கிறா. வாங்கடி கைய ஊனி கரணம் போடலாமின்னு அம்பரு, நூறு பொட்டைங்களை ஒண்ணாச்சேத்திக்கிட்டுப் போயி கலைக்கிட்ருக்கிட்ட,


“சாரு, சாரு இந்த மாதர, இந்த மாதர நாங்க சொந்தமா பாடுபட்டு தின்னுக்கறம், எங்களுக்கு எதனா ரோனு கீனு ஏப்பாடு பண்டி வுடுங்க”ன்னு பிட்டிசனு எழுதிக்குடுத்தா, அவிங்க என்னங்கறாங்க... வூடு வாச இருக்குதா? உங்க பேருலச் சொத்து பத்து இருக்குதா? சர்க்காரு வேங்குல ரொக்கம் ரோஜனம் கணக்கு வழக்கு இருக்குதாங்கறாங்க...

உங்க சோல இல்ல, ஒதுங்கவொரு வெவுலடி பாத்தியம் இல்ல, எங்ககிட்ட எதுவுமேயில்ல அத்தாந்தரமா நிக்கறம். எதோ நீங்க பாத்துவொரு ஒத்தாசப் பண்டுங்கன்னு கெஞ்சனா, அட்ரசீ இல்லாதவங்களுக்கு ரோனு குடுக்க சட்டத்துல எடமில்லங்கறானுங்கவொரு தலயெடுப்பா... போங்கடா எம்பட்டைங்களான்னு திலும்பி வந்துட்டம்.

ஆளாளுக்கு ஒரு தொழுவாடு கத்துக்கங்கடின்னு ஆயா சாமியாருகிட்ட கூத்துப்படிக்க கைகாட்டியுட்டா. சும்மா எப்பிடிச் சொல்றது? சாமியாரப்பன் வெட்டு வெடுக்குனு ஒரு வார்த்தப் பேசனதில்ல. பெத்த பிள்ளைங்களுக்கு மேல ஆச அம்பா வெச்சிருந்தாரு. அக்குசா தொழில கத்துக்குடுத்தாரு.

அபிராமி கண்ணாலந்தான் மொதல்ல படிச்சம். அப்பதான் இவளுக்கு அபிராமின்னு பேரு வௌங்கனது.


செரியான வுனுப்புக்காரி. எதச்சொன்னாலும் புடிச்சாலும் கப்பூரமாட்டம், ஆட்டம் அப்பிடித்தான், பாட்டும் அப்பிடித்தான். என்னாவெண்ணு சாரீரம் மட்லுங் கொஞ்ச கட்ட சாரீரம். நெட்டையோ, குட்டையோ சாமியாரு செட்டுக்கு, மொகாம, மெயினு வேசக்காரி இவதாங்ககிறாப்பிடி ஆயிட்டா.

சரிங் சரிங்கறாப்பல தொழிலுஞ் செஞ்சா. நாத்து வௌஞ்சி பயிராவறதுக்குள்ள மத்தளக்காரம் பூமுடியூர் ராசி அவள குத்தவதோட்டம் ஓட்டறதுக்கு ஆரம்பிச்சிக்கிட்டான். வூடு வாச அண்டாம, செலவுக்கு அஞ்சிப்பத்து வரும்பிடிய குடுக்காம ஒராம்பள கண்டயெடம் மேஞ்சிக்கிட்டிருந்தா பொட்டப்பொம்பள பிள்ளைங்க குட்டிங்கள வெச்சிக்கிட்டு என்னாப் பண்டுவா? ஒண்டி ஓரியா அவளால சம்சாரத்த சுதாரிக்க முடியுமா? செட்டாளுங்க ஆளாளுக்கு கூடி கூடி நாயம்பேசி, குசலஞ்சொல்லி அவளுக்கு உடுக்கயடிக்க,


“உன்னையொரு பெரிய மனுசன், வாத்தியாருன்னு நம்பி செட்டு மத்தாளத்துக்கு வுட்டா, எம்பிருசனுக்கும் அந்தப் பொட்டையனுக்கும் வௌக்கு புடிச்சி, என்ற வேரப்பறிச்சி வெந்தண்ணி வாக்கற, பரவால்லடா மாப்ள உன்ற பண்ணாட்டு”ன்னு ராசுப் பொண்டாட்டி வந்து பேயாடிப்புட்டு போனா.

“அல்லாருக்கும் எட்டெழுத்து, நம்புளுக்குப் பத்து எழுத்துலே அலே பறமுண்ட’ என்னா பாவம் பண்டனமோ, ஆணுக்காவமே, பொண்ணுக்கு ஆவாம, இந்த மானங்கெட்ட பொறப்பெடுத்து, போற வாரப்பக்கமெல்லாஞ் சின்னப்பட்டு சீரழியறம். ஒருக்குத்தமும் பண்டாத மின்னியே நம்பள தேவிடியாப்பட்டங்கட்டி பல்லுமேல நாக்க போட்டு மந்தைங்க பலவெதமாப் பேசுதுங்க. எச்செலைக்கி வீங்கறப்பொழப்ப இன்னையோட தல முழுவிடி ஆயான்னு உள்ள நாயத்த நானு எடுத்துச் சொல்ல வாத்தியாரும் ரெண்டு வார்த்த நல்ல பித்தி சென்னாரு.சரீன்னு அபிராமியுங் கம்முன்னிருந்தா ராசு வழிக்கிப் போகாம. ஆடி நோம்பிக்கி கூத்தாட தேவுரு செட்டிப் பட்டிக்கிப் போனாம்பாரு அங்கவொரு எத்துக்காரவான் வந்துச் சேந்தான் அவுளுக்கு எமனா.

களரிக்கூட்டுமிந்தியே வந்தவம்பா’ விடியவிடிய சுத்தி விடிஞ்சும் அபிராமிய வுட்டுட்டு அந்தல்ல நவரல. இவ என்றான்னா அவஞ்சொல்ற பாட்ட பாடறா. அந்தப் பாட்டுக்கு பதனஞ்சி சீல மாத்தறா, ச்சும்மா பறந்து பறந்து ஆடறாப்பா. அந்த திருவாத்தான் ஆளுமேல ஆளவுட்டு இவளுக்கு நோட்டு நோட்டாப் பின்னுக் குத்தறாஞ் சலிக்காம. எப்பிடியும் அன்னைக்கி அனாமுத்தா சேந்தது உருவா ஏழ்நூத்தம்பதுக்கு மேலியே இருக்கும்.


அலங்காரம் முடிஞ்சதும் எங்கடா பிள்ளையின்னு தொழவுனா ரெண்டுபேரும் எவத்தயிருக்கறாங்கன்னு ஒண்ணுந்துப்பே இல்ல. அப்பறம் பாத்துக்க எந்த பிருசம் பொண்டாட்டி அந்த மாதர ஒத்துமையாயருப்பாங்க’ அவிங்க திங்கறதும் ஒரே வட்டலு படுக்கறதும் ஒரே கட்டலு. ஒண்ணும் மண்ணாப் பொழங்கிக்கிட்டிருந்தாங்க. நாளாவ ஆவ இந்த பிள்ளைக்கி சுத்தமா நெப்புக்கெட்டுக்கிச்சி. மாப்ள பெரும கண்ண மூடிக்கிம் பிடி அஞ்சாறு அலங்காரத்துக்கு ஆளு வரல


. கூத்து படு பாணி சாமியாரு கூப்புட்டு கண்டாற கழுத, ங்கோயா, ங்கொம்மான்னு ரவுசுப் பண்டும்பிடி மாப்ளக்காரனுக்கு ச்செட்யான ரோசம் வந்துட்டது.

அவனப்பத்தி அனாவசியம்’ அவனென்ன உன்ன அடிப்புடிங்கறது? நானாச்சி வா உனக்கு தனியா செட்டுக் கட்டித்தாரமின்னு ஒரே ரெண்டு நாளயில ஆளுங்களுக்கு மூவாயிரம், நாலாயிரம் மிம்பணங்குடுத்து சாமியாரு செட்டக்கலைச்சி அபிராமிக்கி தனிச்செட்டு கட்டிக்குடுத்துட்டான்.


இந்த ஆடுகாலிப் போனவ, குருவுக்கிட்டவொரு வார்த்தச் சொல்லிப்புட்டு நல்ல வாக்குசம் வாங்கிக் கிட்டுப் போவக்கூடாதா? போடா பிலக்காப் பையான்னு போவக்குள்ள சாமியாரு குடுத்து வெச்சிருந்த பொதுப்பணம் நாப்பதாயிரத்தையும் வாயிலப் போட்டுக்கிட்டுப் போயிட்டா. ஒரு கூத்தன்னைக்கி இந்த மனுசன் தண்ணிதாசனூர் அம்மங்கோயிலண்ட நின்னு,


 “அடியே குருத்துரோகி’ எண்ணி வொரேவொரு வருசத்துக்குள்ள என்ன கும்பி பத்தறாப்பல பத்தி யெரிஞ்சி போயிருவடி”ன்னு மண்ணவாரி வாரி தூத்த வாச்சொல்லுப் பலிச்சிட்டுது. அந்த ஆளிட்ட சாபனையோ’ அடிநாளு தீவெனையோ கவுண்டமவங்கூட சோடிப் போட்டுகிட்டு அங்கயிங்க சுத்தி ஆட்டம் போட்டது பத்தாதுன்னு இந்த கடகெட்ட மூளி அவனைக் கூட்டிக்கிட்டு வூட்டுக்கேப்போயி கும்மாளம் போடறதா?அவிங்கம்மாக்காரி பாக்கறவரிக்கும் பாத்துட்டு, “எங்கித்தி பாமனையோ என்னு வவுத்துல வந்து பொறந்து இப்பிடி ஈனப்பானமில்லாம திரியற’ நீதாம் புளுத்துச் சாவற’ எங்கியாச்சும் கண்ணுக்கு மறப்பாப் போயி சாவு’ இங்கேண்டி வூட்ட கந்தறப் பண்டற? கூடப்பொறந்த பொறப்பு ஒரு வயசிப்பிள்ள இருக்கற வூட்ல இந்த மாதர அக்குறும்புல அழியறீங்களே நல்லாயிருப்பீங்களா? நாசமுத்து வேசமாரிப் போவிங்களா?”ன்னு ச்சும்மா வுட்டு வணக்கு வணக்குன்னு வணக்கி கடதாம்பு கட்டும்பிடி, கவுண்டம் மவன் போக்கு வரத்த அறுதியா நிறுத்திக்கிட்டான்.


 இவ மாப்ள வந்து பாக்கறதில்லையின்னு அலமோதி கெட்டலைஞ்சி சோறுதண்ணி கூட குடிக்காம கூத்துக்கு போறது, வந்து கூதப்போட்டுக்கிட்டுப் படுத்துக்கிறது. பங்கினி மாசம் ச்செட்யானப்படிக்கி சீசனு’ வருசக்கூத்தா வருது’ வர்ற கூத்த வாண்டாங்கலாமா? போற எடத்துலியே தங்குமடம். போட்டுக் கூத்தாடிக்கிட்டு தப்படியா வூட்டுக்கு வந்து போயிக்கிட்டிருந்தா.

அந்தப் பிரகாரம் பூலாம்பட்டி சித்தூருல நோம்பிக் கூத்து வொண்ணு தானாவதி மழைக்கி நிக்கிம்படி வூட்டுக்கு போவலாம்னு வந்தவ நட்ட நடு தாவாரத்திலேயே மாப்ளக்காரனும் அம்மாக்காரியுங் கொண்டி மாட்டிக்கிட்டு கெடக்கறதப் பாத்துருக்கறா.


அப்பிடியே அங்கம் பதற அடிவவுறுக்காந்த ச்சட்டங்குன்ன, ச்சரிகலம் நடுநடுங்க நின்னவ “அடியே உத்தமபத்தின எனக்கு பித்தி சொன்னியே இப்ப நீயேண்டி அவுசேரிப் போன”ன்னு ஒரோயொரு வார்த்தையின்னாலும் நாண்டுகிட்டுச் சாவும்பிடி கேட்டுப்புட்டு, கடகடன்னு கண்ணுத்தண்ணிய வுட்டுட்டு அந்தாண்ட வந்துட்டா.

அவ்வளதான் மக்யாவது வாரமெல்லாம், பன்னிக்கறியவறுத்து அதல பாசனத்த கலந்துக் குடுத்து அபிராமிய கொன்னுப்புட்டா அவிங்கம்மாக்காரி.


நெருப்பூரு நாவமரைக்கி சீருக்கு போயிட்டு தகோலு தெரிஞ்சி வரதுக்குள்ள எடுத்துக்கொண்டி எரிச்சுப்புட்டாங்க. எளம்பிள்ளி கூடுகாட்டுல. மவ மூஞ்சியப் பாக்கக்கூட ரொணமில்ல. ஆவுசந் தாங்காம குழிமேட்டுக்குப் போயி சாம்பல நவ்வாலு வாயி அள்ளித் தின்னுப்புட்டு வந்தம்.


நாங்க ஆருக்கு என்னா தீம்புச் செஞ்சம்?

தாயப் பழிச்சமா? தண்ணிய தடுத்தமா?

ஏழய அடிச்சமா?

 எளஞ்சாதம் உண்டமா?


 எனத்துக்கிந்த ஆண்டவனுக்கு எங்கமேல இத்தன கூரியம்?


கூனுக் குருடு, மொண்டி, மொடம் இப்பிடி ஒடம்புல வொரு ஒச்சமின்னாக்கூட மயிராச்சி, அதப்பத்தி காரியமில்ல. பாழாப்போன பொறப்புல கோளாறுபண்டி வேடிக்கப் பாக்குதேயந்த நொள்ளக்கண்ணுச் சாமி..அபிராமிப்பிள்ளய நெனச்சிட்டம்னா அன்ன பொழுதுக்கும் அன்னந்தண்ணி ஆகாரம் எதுவுமே உள்ள எறங்காது. நாம்ப அழுதகண்ணுஞ் சிந்தன மூக்குமாயிருந்தா மாண்டவிங்க பொழைக்கப் போறாங்களா? மறிச்சி மண்ணவுட்டு மேல வரப்போறாங்களா? இல்ல அன்னைக்கியெழுதன எழுத்த பிரம்மன் அழிச்சி எழுதப்போறானா?


உச்சியத்தாண்டி ஒருமாறுப் பொழுதாச்சி சம்பளம் பிரிக்க, செங்கமா முனியப்பங் கோயில்ல எறங்கி பொடுபொடுன்னு வூட்டுக்குப் போயி, துணிமணிய அலசிப் போட்டுட்டு ஒருவாச் சோத்தக் குடிச்சதும் களப்பாயிருக்குதேன்னு செத்த படுத்தம்பாரு, எந்திரிக்கும்போது மணி ஏழு’

எஸ்.டூ.எ.பஸ்சு சங்கிரி வந்துட்டு திலும்பி பவனி போயிரிச்சி. அதும்பொறவு ஆதியா பாதியா கௌம்பி அம்மாபேட்ட வாரதுக்குள்ள மணி ஒம்பதர, அலங்கார கறவத்தானுங்க ஒருத்தங்கூட வூட்ல இல்ல, எட்டுமணி முட்டும் பாத்துட்டு மினிவண்டி பேசி எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்களாம். வூடு வூடா அவிங்களத் தொழாவிப்புட்டு வரதுக்குள்ள பத்துமணி கடைசி பஸ்சும் போயிட்டுது.பக்கமாயிருந்தாலுந் தேவல. நாகனூரு வாத்தியாரூட்டு கூத்து. மெயினு ரோட்லயிருந்து பழையூரு, முழியனூரு மேல நடந்துப்போனா ஏழு மைலுக்கும் மேல சேரும். எந்நேரம் போறது? நேரங்காலமா வந்துருந்தா எதோவொரு வண்டி கிண்டி புடிச்சிப் போயிருக்கலாம் அத்துவானத்துல வந்து மாட்டிக்கிட்டமே என்னாப் பண்டறது?


செட்ல சாரி வேசமே இல்ல. அந்த சிறுத்த கண்ணஞ் சேவுருப் பையன் இப்பத்தான் புதுப்பழக்கம். சந்து அடைக்கத் தானாவும், பெருங்கொண்ட ஆக்கிட்டு கட்டிச் செலுத்த மாண்டான்.

மிந்தியாச்சும் சுப்ரமணி இருந்தாப்ல. பொண்ணு வேசத்துக்குப் பஞ்சமில்ல. போனப்பூட்லயே ஆளு அலங்காரத்துக்கு வரல. அவரெண்ணாப் பண்டுவாரு? பத்திருவது வருசமா செட்டுக்கு அவருப்பட்ட பாடு அந்தப்பஞ்சும் பட்டுருக்காது. அப்பிடி ஒழைச்ச ஒழப்புக்கு கைமேல கண்ட பலனா இன்னைக்கி ஒவித்தியப்பட்டுக்கிட்டு கெடக்கறாரு.


குஞ்சாண்டியூருக்கு அந்தாண்ட ஆண்டிக்கர காக்காயந்தெருவுக்கு ஒராட்டத்துக்குப் போயிருந்தம் மூணாம் வருசம் கூம்புக்கு கூத்துவுட்டவிங்க “வக்ரகேது பலி”தான் ஆடனுமின்னுப்புட்டாங்க. எந்த அலங்காரமா யிருந்தாலுஞ்சேரி சுப்ரமணி எத்து வரிசையாதான் தொழிலுப்பண்டுவாரு. அன்னைக்கிம் அவரு விலோச்சனா வேசம் போட்டுருந்தாரு.அம்மாபேட்ட கணேசண்ணன் எரிகண்டங் கட்டியிருந்தாரு. வேகாத திரேகமும், போவாத உசுரும், நீங்காத சேம்பரமும் வேணுமின்னு வரம் வாங்க எரிகண்டன் வக்ரகேதுவ ரணகாளிக்கி பலி குடுக்க கூட்டிப்போறாள். மவன் உசுர மாய்யக்க வேண்டாமின்னு விலோச்சனா அழுது பொலம்பறா. மின்ன வச்ச கால பின்ன வெக்க மாண்டேன்னு சூரனொருபக்கம் இழுக்க, வுடமாண்டேன்னு பொண்டாட்டி குறுக்க வுழுந்து தடுக்க ஓரியாட்டத்துல சூர வேசக்காரன் அவள எட்டி ஒதச்சி தள்ளி, அந்தாண்ட தாட்டி போவானில்ல. அந்த கட்டத்துல, கணேசன் ஒதச்ச ஒதயிலே, ஏமாந்தாப்பிடி அழுதுக்கிட்டிருந்த சுப்ரமணி முதுவுல ஈடுதாங்கி போச்சி. சும்மா ரெண்டு நாளு மூச்சுத்தப்பு வுழுந்ததுதாங் காரணம். பொறவு மனுசன் வாயத்தொறந்து பாட முடியல. எங்கயெங்கியோப் போயி, அளவத்த பணம் செலவு பண்டியும் நோவு நல்லாவது. பொறுக்கித் திங்கற கோழிக்கி மூக்கத் தறிச்சாப்ல, நல்ல தொழிலாளிக்கி நேந்த கதியப் பாரு’ வவுத்துப்பாட்டுக்கு இப்ப ஊரு ஊரா ஈயம் பூசிக்கிட்டு திரியறாரு.அவருமில்ல நானும் போவலைன்னா கனகராசி வாத்தியாரு கொஞ்சொத்தாப் பேசுவாரு. கெடயில காலு தங்காம அங்கயும் இங்கயும் ஏண்டா காலாந்திரியா திரியற? செட்டுக்கே வந்துர்றா’ ஆத்தர அவசரத்துக்கு வேணுமின்னா பணங்கினம் கூட வாங்கிக்கிவியாமின்னு அவருதாம் பொணையாயிருந்து ஆபரேசம் பண்ட செட்டு பணத்துலயிருந்து எட்டாயிரம் தாரமின்னு சொல்லி மிம்பணம் மூவாயிரத்த கையோட குடுத்தாரு.

ஆச்சி, ஆச்சி இந்த எட்டு பூர்த்தியா ஆடனா வேணுங்கற பணந்தெரண்டுக்கும், ராயவேலூருலியே டாக்கிட்ருமாருங்க கைபோடறாங்களாம். நோவு இல்லாம போயி செஞ்சிக்கிட்டு வந்துர்லாம் நிம்மிதியா’


கல்பனா ஆயா கூட முடிஞ்சத தாரமின்னிருக்குது. எப்பிடிப் பாத்தாலும் போவ வர மேஞ்செலவ ஆயாப் பாத்துக்குவா. ஆசுபத்திரி சமாச்சாரம் செலவு இவ்ளதான் ஆவுமின்னு ஆரு கண்டது? முன்ன பின்னகூட ஆவும். எதுக்கும் உண்டுன்னா காசிருந்தா ஒதாரணைக்கி ஆவுமின்னுதான் நானு கரவாட்டத்துக்கும், கூத்துக்குங் கைகுடுத்துட்டு இப்பிடி பட்டழியறன்.

கனகராசிச் சமாவையுஞ் சும்மாச் சொல்லக்கூடாது, மனசார காங்காம ஏவிடியம் பேசுவாங்களோ என்னமோ தெரியாது. கண்டுவொரு நாளும் எச்சி எடுப்பு பேசனதில்ல. நாலுபேத்து தொழிலு நம்பளப் பத்தி வாதிக்கக்கூடாது. ரோட்டுக்கால்ல நின்னு பாலமாதர பொந்தியப் போட்டு ஒழம்பிக்கிட்டு போறவர ஒண்ணுரெண்டு வண்டிங்கள நாங்குறுக்காட்ட ஒருத்தங்கூட நிக்கல.

நேரம் எந்நேரமோ அம்மாபேட்ட ஊரே அடங்கிப்போச்சி, வவுநேரங்கழிச்சி, தொலையா ஆரோவொரு ஆளு வாட்டசாட்டமா நடமாடற மாதர தெம்பட்டது. ஆராயிருந்தா நமக்கென்ன? கூத்துக்குப் போவ முடியாத வெசனத்துல எம்பாட்ல நானிருக்க, கிட்ட வரச்சொல்லி அவங் கைசாடப் பண்றானே’ இதென்றா தும்பமின்னு பக்கம் போயிப்பாத்தா அவனெங்கியோ வொரு போலிசு ஏட்டு.

சிப்பமோ சீமச்சரக்கோ என்னான்னுந் தெரில. ஆளுக்குப் பதமான போத. சீப்பு வண்டிமேல அட்னகாலுப் போட்டு படுத்துகிட்டிருந்தாஞ் சிவரெட்டுப் பத்தவெச்சிக்கிட்டு.

“என்னாங்க கூப்ட்டது”ன்னு நாங்கேக்க எடுத்த எடுப்பில


“வர்றியா”ங்கறானே ஒரு துடியா.


தடி எடுக்கறப்பவே அடி எங்க வுழுவுமின்னு எனக்கா தெரியாது. இருந்தாலும் இவன் நம்மள வெச்சி தெரிஞ்சி கூப்டறானா? தெரியாம கூட்றானான்னு அறிகொழப்பம்’ எப்பிடியோ இருந்து சாட்டாவுது. இதுக்கு மேல்பட்டு நாங்கூத்துக்கு போறது நெசமில்ல. வளச்சிக்கிட்டு வூட்டுக்குட்ப போவலாமின்னாலும் பவானி வரிக்கும் காரு இருக்கும். அந்தாண்ட வண்டியுமில்ல, பைபாஸ்ல போயி பொழுது விடியந்தின்னியும் குந்தியிருக்கணும்.

அவுத்தப்போயி ஏப்பா அவுதிப்பட்டுக்கிட்டு கெடக்கணும்? இப்பிடிப்போயி சித்தங்கூறியும் இவங்கிட்ட தடுமாறிப்புட்டு வந்தா என்னாக் கெட்டுப்போச்சி? இருந்தாப்பிடியிருந்து எனக்கு தெங்கற நெனப்பெடுத்துக்கிச்சி.


ஆம்பள தெரண்டு ஆளானா ஒடனே கண்ணாலங் கார்த்தி. அவனுக்குண்டான குடும்பங்குட்டி உற்பந்தி ஆவுது. அப்பிடியதுக்கு வசிதிப் பத்தலைன்னா அததுக்கு பொண்டுங்க இருக்கறாங்க அங்கபோயி அம்பதுன்னும் நூறுன்னுங் கடஞ்சொல்லிக்கூட அறுப்பத் தீத்துக்கறாங்க. பொம்பள சமைஞ்சா பெத்தவிங்க கபம்பட்டு, ஒடம்பட்டு ஒருத்தங் கையில புடிச்சிக் குடுக்கறாங்க. அதுச் சுத்தப்படலியா, அவப்பாத்து துணிஞ்சா, அவ பொச்சி பொறன ஆணாகப்பட்ட அத்த சீவனுங்களுக்கும் காரோடத்து நாயி மாதர காசுங்கையுமா சுத்தறாங்க.


இந்த நிக்கற ஆத்துமாவுக்கு ஊத்த ஒடம்புல பிப்பு எடுத்தா அதக்கண்டு ஆத்த மருந்துண்டா? நம்பள அரிசின்னு அள்ளிப் பாப்பாருமில்ல, உமின்னு ஊதிப் பாப்பாருமில்ல. பிரியப்பட்டு வலியினா வர்றங்கறவன ஏம்பா வாண்டான்னுச் சொல்லனுமின்னு நானு அவன அப்பிடிவுட்டுட்டு, இப்பிடி இநதாண்ட வந்து ரோசனப் பண்டிக்கிட்டிருக்கவே அவஞ்சீப்பு வண்டி ஆள ஓரங்கட்டி நிக்குது. வந்து ஏறுன்னு அவஞ்சொல்லுமிந்தி நானு மின்னித்தி சீட்டேறி குந்திக்கிட்டன்.

ஒரே அழுத்துல வண்டி எட்டிப் புடிச்சாப்ல கொடம்பையூரு கரட்டுக்கு வந்துட்டது. அடிக்கரட்ல வட்டப் பாறையும் பாழியும் இருக்கும்பாரு’ அவுத்த வண்டிய நிப்பாட்னான். பாறமேல மழக்காயித்த விரிச்சுட்டுட்டு வண்டியிலந்து நாலஞ்சி பொட்ணத்த எடுத்துப் பிரிச்சி வெச்சாம்பாரு’ எந்த சோத்துக்கடையிலே வாங்கனதோ’ கறிசோத்துப் பொட்ணமாட்டயிருக்குது வட்ட வாகறயே நெய்யி மணக்குது.மூக்குல பருக்க வர தின்னுப்புட்டு எந்திரிச்சன். அன்னந்தினியும் வாயே பேசாமாயிருந்தவன், “சரக்கு சாப்டுறியா”ன்னு ரெண்டு வெராந்தி பாட்லயும் எடுத்து மின்ன வெச்சான் ஏட்டு.

அதயுஞ் சைசா மண்டயத்திருவி வாயில ஊத்திக்கிட்டன். வீதக்கட்ட வவுறு தூக்கங்கேட்டுது. அதோட அளவான போத, ஆடியாடி அலண்ட ஒடம்புக்கு தோதா யிருந்தது. குளுங்காத்துச் சிலுச்சிலுங்க, மேலுப் பசபசங்க எனக்கு ஏனா தெப்ளச்சுத்தி புரு புருங்குதே’ அப்பிடியே கட்டய கீழசாச்சி கண்ண மூடனம்பாரு. ஏட்டும் எம்மேல சாஞ்சான்.


சாவலு நல்ல பெருஞ்சாதி சாவலு. அணைய அணைய ஒணக்கையா இருந்திச்சி. இப்பிடியே கதய ஒப்பேத்தி, ஓட்டி, கூத்த கொண்டயத்துக்கு கொண்டு போயி, மங்களம் பாடிப்புடலாமுன்னு நாங்கெனாக் கண்ட மாயத்துல, மின்னாம மொழங்காம எண்ணத்துல இடி எறங்குதே’

ஏப்பா உரியேறன சாத்ரீகப் பூன தயிரிருக்க சட்டிய எத்தன நேரம் நக்கும்? வெறியெடுத்து ஆவு ஆவுன்னு என்ற அடிமடிய தொழவனவனுக்கு ஆட்டு ஒதப்பை யாட்டம் எம் புடுக்குச் சிக்கும்பிடி அவம் மொவற நறவல்ல கையுட்டாப்ல சுண்டிப்போச்சி. “த்தூ”ன்னு காறித் துப்புனவங் காது, காதா அப்பறாஞ் சடையாம.

ஓரடியா? ரெண்டடியா? “அய்யோ சாமி நானு அறியாத பித்தியிலே தெரியாம தப்புப் பண்டிப்புட்டன். வுட்டுறு சாமி நானு ஓடிப் பொழச்சிக்கிறன்”னு அழுது பரிதவிக்கிறன் அவங்காலப் புடிச்சிக் கெஞ்சறன் அவங்காயா காதறந்தப் புண்டமேல ஓக்க’ அதயெதயுங் காதுலப் போட்டுக்கவேயில்ல. “மி யெம்மா பூக்குல தெங்கோ’ ஓரி நிக்கற நீ பணியின காமிச்சேவு”ன்னு மயித்த வளச்சிப்போட்டு ச்சும்மா குப்பு குப்புனு குப்பி, என்னய மிங்கட்டு பிங்கட்டு கட்டி சீப்பு வண்டியில தூக்கிப்போட்டு, கண்ணாடியச் சாத்தி, கதவுச்சந்துல எங்காலு ரெண்டையும் வெளியே இழுத்து, ஒரட்டாங்கையிலப் புடிச்சிக்கிட்டான்.


சோத்தாங்கையில அடிப்போன பூணோட அத்தச்சோட்டு குண்டாந்தடியப் புடிச்சி, எல்லப்பன்னியக் குத்தறாப்ல என்ற உசுரு நெலயில ஒரேக்குத்து’ ஆண்டவங் குடுத்த அந்த ஆதாரப்பொருளு கொழண்டு கலங்கிப் போச்சி. இன்னும் நாலீடுப்போட்டு அப்பையே அடிச்சிக் கொன்னிருந்தா ஆயிருக்கும் வதவதயான வதப்பண்டி, வாய்க்கா கரையில வாரிச் சூறையிட்டுப்புட்டுப் போயிட்டான்,

ராவெல்லாம் எங்க கெடந்தன்? எப்பிடி பூதப்பாடி வந்தன்? ஆருக்கொண்டாந்து ஆயாவூட்ல போட்டது. ஒரு பிருவுந் தெரில. நாம் பொழச்சது மாதா புண்ணியம்’ மறுசென்மம்

. “பொறப்படு ஆயா வேலூருக்கு, போயி டாக்டரிண்ட கைபோட்டுக்கிட்டு வந்தரலா”மின்னு கண்ணு முழிச்சதும் மொதக்காரியமா ஆயாள ஆயாள கூப்புட்டுச் சொன்னன்.ஆதமத்த நாடுபோடுவாசி மவ சம்புநதிக்கி குமிஞ்சி நாட்டையில எழக்கட்ட முடியில.  ரெண்டு தக்கம் குதுக்குகுதுக்குன்னு உதரம் புடுங்கித் தீட்டாப் பட்டுக்கிட்டிருந்திச்சி.  வூட்டுக்குத் தூரம் போறன்னைக்கிப் பாழாப்போனப் பொம்பளச் சென்மத்துக்கு ஒடம்பு ஒடம்பாட்டமா இருக்குது கருமாந்தரம்?  மேலப்பூராஞ் சீலையாட்டந் தொவண்டுக்குது.  கசகசன்னு ஈரம், ஒரே கசாட்டு.  அந்தாண்ட இந்தாண்ட அக்கற எழுய ஓடிப் பொணைக்கவுங் கைலாவல, இன்னைக்கி கோனு எட வேற கொறஞ்சிப் போவும், சின்னச் சேட்டுக்கிட்ட ஆரு பாட்டு வாங்கறதுன்னு பிள்ளைக்கிச் செட்யான வெசனம்.


 பெத்தமனம் பித்து பிள்ள மனங் கல்லுன்னு எந்த கேனப்புண்ட சொன்னது? 

சம்புப் பிள்ள அவிங்கம்மா லங்கலாடி அரிசியத்துக்கிட்ட கொண்டாந்து அவன வுட்டடிக்கணும்.  அப்பவே இந்தப் பிள்ள விடியாந்தரம் அடிவவுறு கடுக்குது.  அள்ளவவுத்த நோவுதிடி மூளின்னா, கேட்டாளா அவ?  குண்டு முத்தம்மா கடயில புளிச்ச ரவ்வோத் தண்ணிய ஒரு முழுங்கு வாங்கிக்குடுத்து ஓடுறீ முட்டக்கண்ணின்னு தொரத்தியுட்டுட்டா.  அவ வெசனம் அவுளுக்குப் பாவம்.

  பேரு வௌங்குதேங்கப்பன் எம்.சி.யாருப் பேரு, சனங்காலு நீட்டிப்படுக்க முடியாதபடிக்கி அவங் கட்டிக் குடுத்தானே, காரவூடு அதுக்குப் பட்ட கடனக் கட்டமுடியாம அவப் பிருசந் தாட்டியம்பட்டியாம் போடுவாசி கூதமுட்டிச் செத்துப்போயிட்டான்.  செத்ததுதாஞ் செத்தாந் தாயாலி சும்மாச் செத்தானா?  வருசத்திக்கி ஒண்ணு வருசத்திக்கு ஒண்ணுன்னு சம்புப்பிள்ளைக்கி மின்ன நாலுப் பொட்டப்பிள்ளைங்க.  காட்டுப்பீயப் பேழும் மிந்தியே கருஞ்செவாப்பு வந்து அதலவொரு ரெண்டன்னத்த மண்ணுக்கு வாரிக் குடுத்துட்டாங்க.
 கொங்கநாக் குட்டிப்போட்டு குப்பங்கொசவஞ் சூள வெச்சாப்பிடி, அனாமுத்த பிள்ளைங்களப் பெத்துட்டுட்டு அப்பங்காரந்தான் புளுக்க மண்டிப் போட்டுட்டானே, அம்மாக்காரியாச்சிம் பொழப்பு மேல கருத்தா இருக்கணுமா வேண்டாமா?
 அரிசியம்பிள் ஒரு தாந்தோனி.  பொம்பளைக்கி சேலம் ஒருக்கோடியா தெனஞ் சீனிமாப் பாக்கணும்.  ஆரியமோ, கம்போ, அரிசியோ, சாமையோ அது எதாயிருக்கட்டும் அன்னக்கி வூட்ல உண்டானத கொடையமூட்டு ரட்சிமிக்கிட்ட அளந்துட்டுப்புட்டு வாங்கித் திங்கனும்.  பிள்ளைங்களுக்கு பாவம் படுக்கப் பாயில்ல.  ஆயாக்காரி ஒருபக்கம் பெரும்போக்காத் திரிய, பிள்ளைங்க ஒரு பக்கம் அறங்கையும் பொறங்கையும் நக்கிக்கிட்டு எத்தன நாளைக்கி கெடக்குங்க?  பாத்துட்டு அதுஅதுங்களே ஆளுக்கொரு மாப்பளைங்களத் தேடிக்கிட்டுப் போயி பொழைக்கிதுங்க,  ஒருத்தி டெய்லருப் பையனொருத்தனக் கட்டிக்கிட்டு பொம்மிடி டேனிசிப்பேட்டையில இருக்கறா.  இன்னோருத்தி ராரி டைவரொருத்தனச் சேத்திக்கிட்டு பூசாரிப்பட்டி தீவிட்டிப்பட்டியிலே இருக்கறா,  சொத்தாப் பொழைச்சா வந்துப் போறதோடச் சேரி மிச்சப்படி எதிலியும் பட்டுக்கறதில்ல. வாத்துரூம்புலப் போயி மூஞ்சி கைகாலு கழுவிக்கிட்டு வந்தா களப்புக்குச் செத்த நல்லாயிருக்கும்.  மூணுத் தரத்துக்கு மேல மூத்தரத்துக்குப் போனாவே இந்த வாச்சிமேனு கெழவாடி பேரெழுதிக்கொண்டு சூப்ரேசுருப் பசங்கக்கிட்ட குடுத்துர்றான்.  அவிங்க அங்கென்னாப் புடுங்கற வேலைங்கறாங்க?  ஆம்பளைங்கக்கிட்ட இப்பிடித்தான் ஆயிப்போச்சின்னு இந்த சமாச்சாரத்தப் போயிச் சொல்லமுடியிமா?
 சேட்டு அவிங்கப்பன் பெரிய சேட்டு இருக்கந்தினியும் ரவ்வு வேல கெடயாது, பவுலு மத்தியானம் ரெண்டே சிப்ட்டுத்தான்.  கோனு வைண்டிங்கி ரீலிங்கி ரெண்டுத்துக்கும் பொட்டப்பிள்ளைங்கதாஞ் சூப்ரேசுரு.  அப்பிடி அல்லியும் வேணியும் அதுக்குமின்ன கோமிதியும் இருந்தப்ப இத்தன கெடுபிடி இல்ல.  கோனு எட இல்லையின்னாக்கூட எதோ நேந்து நெரவுவாங்க.  டாக்கு எடுக்கனும், லோடு ஏத்தனுமின்னு அவீங்கள நேரங்கெட்ட நேரத்துல வரச்சொல்லி ஆபிசிலவுட்டுச் செனையேறுனா எவ ஒத்துக்குவா?  நேர்றவிங்களுக்குத்தாம்பா இது சேரும், எல்லாத்துக்குமாச் சேரும்?  நல்ல மவராசருக்கு அடையாளஞ் சொல்லாமப் பொறப்பட்டுருனுமில்ல?  சேட்டுக்குப் பயந்துக்கிட்டு ரெண்டபேரும் வேலைக்கே வர்ரதில்ல, நின்னுக்கிட்டாங்க.  அவிங்க கத அப்பிடி ஆயிப்போச்சா, கோமிதியும், ஒயருமேனு கந்தசாமியும் பாத்த தாவுலப் பேசப் புடிக்க ஒருத்தரு மேலே ஒருத்தரு பிரியமாயிருந்தாங்க,  அத எப்பிடியோ துப்புகண்டு பின்னிங்கி பிட்டரு செலுவராசு, கோமிதிப்பிள்ளையக் காங்கறப்பெல்லாம் கரண்டுக்காரன்னுது மட்லுமென்னா ஒசித்தி?  மண்ணுத் திங்கற பண்டத்த ஆருத் தின்னா என்னா?  நானுந்தா ஒரீடு பதம் பாக்கறனேன்னு ச்சும்மா எரண்டிக்கிட்டேயிருக்க, இவளும் போனாப்போவுதுப் போனாப்போவுதுன்னுப் பொறுத்துக்கிட்டிருந்தா வவுநாளா. 


 ஒரு நாங்கறப்பெட்டுக்கு டெசுட்டு எடுத்துக்கிட்டுப் போனப்பிள்ளய லேப்புலவுட்டு செலுவராசு சீலய உருவ, அவ குய்யோமுய்யோன்னுக் கத்திப்பாரிக்கிட்டு வெளியே ஓடியாந்துக்கறா.  ஓடியாந்தவளக் குறுக்காட்டி இன்னைக்கிச் சும்மா பிசுக்கு, வாயத் தொறந்து வெளிய இத யெங்கியாச்சுஞ் சொல்லிப்புட்டையின்னு வெய்யி, சேட்டு வண்டியில தூக்கிப்போட்டுக் கொண்டு கந்தப்பட்டி ஏரியிலவுட்டுச் சின்னம் பண்டிப்புடுவ மின்னு மெரட்ட, அந்தப்பிள்ள பத்து பதனஞ்சி நாளாட்டம் மில்லுப்பக்கம் தல வெச்சிப் படுக்கல,  ஒழுக்கமா வேலைக்கி வந்துக்கிட்டிருந்தவ, வாரக்கணக்குல ஆளு அட்ரசியே காணமே, மேலுக்கு கீலுக்கு எதனாலுஞ் சவிரியமில்லியோ, என்னமோன்னு ஒயருமேனு, தனசேவுரு, கோவாலு, பின்னிங்கி முருகேசன்னு அஞ்சாறு பசங்கப் போயி அவளப்பாக்க, இப்பிடி இப்பிடித்தான் நாயமின்னு எல்லாத்தையும் பூர்த்தியா புட்டுபுட்டு வெச்சிட்டா. 


 இன்னைக்கி எலய அறுக்கறவன் நாளைக்கி கொலய ஏண்டா அறுக்கமாண்டான்?  இந்த சங்கிதிய இப்பிடியே வுடக்கூடாதுன்னு பசங்கெல்லாம் ஒட்டுக்காச் சேந்துப்போயி சேட்டு காதுல இதப்போட்டு, பிட்ரு செலுவராசு, கோமிதிப்பிள்ளைக்கிட்ட தாஞ்செஞ்சது தப்புன்னு கால்ல வுழுந்து மாப்புக் கேக்குனுமின்னுச் சொல்ல, அவனிருந்துக்கிட்டு, ஒண்ணுமில்லாத விசியத்த ஆரு ஊதிப் பெரிசிப் பண்டனது?  மில்லுப்பேருக் கெட்டுப்போவும், அப்பிடியிப்படி, அங்கயிங்கன்னு தபாய்க்கிறாந்தட்டி  கழிக்கிறாஞ் சும்மா.  அவ்ளதாஞ்சண்ட, பெருத்த சண்ட மூண்டுக்கிச்சி,  பத்துப்பேரு பண்ணயம் பண்ற எடத்துல ஒருத்தன்மேல மட்லும் சேட்டுக்கு கருசனமின்னா அதுக்குங் காரணமில்லாம இல்ல.
 சின்னப்பட்ட கழதைக்கி செனக்கழத கூத்தியாளாம், சேட்டு பண்ற கோளாறுக்கெல்லாஞ் செலுவராசி உள்ளொளவுக்காரன்.  ஏமாந்தப் பிள்ளைங்களக் கூட்டிவுட்டு அவுனுக்கு வௌக்குப் புடிக்கிறவனும் அவனே. 


 ஆதியிலே சேட்டவிங்கப்பனும், செலுவராசி அவிங்கப்பனும் கொண்டலாம்பட்டி, மகுடஞ்சாவடி, எஸ்ப்பாலம், எளம்பிள்ளியக் கட்டி பழயத்துணிப் பொறுக்கி வித்தாங்க.  பிற்பாடு தறி ஓட்டப்போயி, தானே தறிபோட்டு, அப்பறம் நூலுமண்டி வெச்சி, படிப்படியா மின்ன வந்து பெரியச் சேட்டுக்கு நாலஞ்சி மில்லுஞ் சொந்தமாச்சி.  நல்லது கெட்டது எல்லாத்துக்கும் கூடவேயிருந்து கடைசிமுட்டும் ஒத்தாசிப் பண்டுனானில்ல செலுவராசி அவிங்கப்பன், அந்த நன்னிக்கோசரம், மாளியக்கட்டி மரநாயக்குடிவெச்சாம் பெரிய சேட்டு.
 மில்லுவாசல்லே மீட்டிங் பேசி, சின்னசேட்டு வண்டி மேல செருப்பக் கழட்டி வீசும்படி நாலுநாளா டைக்கி பண்ட, வேªறுதுந் தோதுப் பத்தாம பிட்ரு செலுவராசி கோமிதிப் பிள்ளையிண்ட மாப்புக் கேக்க அவ என்னா நெனச்சாளோ மறுக்க மில்லுக்கே வரல.  அன்னைக்கி வெஞ்சம் வெச்சாஞ்சேட்டு, ஆராருக்கு ஓடையடிக்கணுமின்னு.  மொதல்ல அவங்கண்ல சிக்கனது ஒயருமேனு கந்தசாமி.  அந்த சமாச்சாரத்த என்னான்னுச் சொல்றங் கேளுங்க... காருவள்ளி கஞ்சநாயக்கம்பட்டியிலருந்து சக்திவேலு, சக்திவேலுன்னு ஒருப்பையன் மில்லு வேலைக்கி வந்துக்கிட்ருந்தானப்பா அஞ்சாறு வருசமா.  நாளுமேல ஒரு சிப்ட்டு ஒன்ரச் சிப்ட்டுன்னாலும் நல்லாக் கவடத்து பஞ்சித் திம்பாஞ் சலிக்காம, புளோரூமு,காடிங்கியொரு தொங்கல்ல இருந்து கோனு வைண்டிங்கி முட்டும் ஈரக்காத்து பதமா வேணுமின்னு ஏசி பிளாண்டு போட்டுருந்தாம் பக்கமா.  பின்னிங்கில ஏறனா அவுத்தவுத்த பொட்டியில அண்டியிருக்கற பஞ்சிக்குப்பய வௌக்குமாத்துல அடிச்சிக் கூட்டணுஞ் சுத்தமா, உள்றப் போறப்ப பவுரு ஆபிசிலச் சொல்லி பீசுக்கட்டய மறக்காம புடுங்கி வெச்சிட்டுப் போவாந் தெனந்தப்பாம. சேட்டுவூட்டாரு மாதரவொரு பிக்கேரிங்க ஆரும் இருக்க மாட்டாங்க.  அப்பனாயா, பெத்துப்பொறப்பு, மாமம்மச்சான் ஒருத்தரு தொச்சமில்லாம வூட்டுச்சனமே மில்லுக்குள்றக் குடியாயிருக்கும்.  அன்னைக்கிங்கறப்ப பெட்டுக்கு சேட்டுப் பொண்டாட்டியந்தச் சொட்டப் பெருக்கான் விடிஞ்சிம் விடியாதமின்ன மில்லுக்கு வந்துட்டா குப்பூரு சொசைட்டியில பாலூட்டிப்புட்டுப் போவ.  மில்லச் சுத்தி வர ஆர்லுக்குள்ள ஆறேக்கரா கொறங்காடு கெடந்தது.  அதயேஞ் சும்மாவுடனமின்னு சோளத்தட்டும், சீமத் தட்டும் ராசிப்பண்டி அத திங்கடிக்க பத்து உருப்பிடி சீம மாடு வளத்தனாங்க.  அன்னாடம் அதுங்க அம்பதுப்படி, அறுவுதுப்படி பாலு பீச்சும்.  அதலவொரு வரும்பிடிப் பாத்துக்க அவிங்களுக்கு.  சொட்டச்சி வந்தவ வந்தச் சோலியப் பாத்துக்கிட்டு போயிருக்கப்படாதா?  ரவ்வுச் சிப்ட்டுக்காரப் பசங்க, பிள்ளைங்க யாராச்சிம் தூங்கறாங்களான்னுத் துப்பெடுக்க உள்ற வந்து ஒவ்வோரு  எடமா நோட்டம் போட்டாப்பிடிச் சுத்திக்கிட்டிருந்தா.  வாச்சிமேனு பாலு பீச்சிக் குடுக்கந்தினியும், அக்காளுக்கு உப்புசந்தாக்குப் புடிக்க முடியல.  வேத்தூத்துதுன்னு சேட்டு மச்சனன் இ.எஸ்.சி என்னா பண்டுனான், சத்திப்பையன் பிளாண்டுள்ள இருக்கவே பீசுப்போட்டு மோட்டாரச் சாட்டுப் பண்டிவுட்டுட்டாம்பா. ஏப்பா சின்னவெல மோட்டாரா?  பதனாறயிட்டம் பூராம் இருவுது எம்.சி.பி மோட்டாரு.  காத்தாச் சொழண்டடிக்க இந்த சத்தி மூச்சி வுடமாண்டாம மூணாளு ஒசக்கயிருந்து சுருண்டு வுழந்தாங் கீழ.  சோத்தாங்கையி மூட்டு வெலவிக்கிச்சி.  கீழவுழுந்தவனத் தூக்கியொரு தண்யி தப்பு குடுத்துத் தேக்கந் தேத்தாம, ஆரக் கேட்றா பிளாண்டுக்குள்றப் போனன்னு காதோடச் சேத்தி அப்புறானே இ.எஸ்.சி ஒரு அக்குறும்பு.  பசங்களும் பிள்ளைங்களும் நிமுசம் பையனத் தூக்கி சேட்டு வண்டியில வெச்சி புத்தூருக்குக் கொண்டு போனாங்க கட்டுப்போட.  அன்னராவு வுட்டுட்டு விடிஞ்சி மக்யாநாளு பசங்க வந்து ஆரிந்த அலும்புப் பண்டனது?ன்னுக் கேக்கும்பிடி, இ.எஸ்.சி எனுக்கு எதும் தெரியாதுன்னே சாதிக்கறாம்பா வொரு அநியாயம்.


 கந்தசாமி உம்மய ஒடச்சி சொல்லிப்புட்டான்.  ஓவ் இவங்கொல்ல வந்த மாத்தான்.  வுன்னமாலும் இவன் ஒரே அரச்சணம் மில்லுல இருக்கப்படாதுன்னு மேத்திரிப் பசங்கச் சொல்ல சேட்டு மச்சாங்காரனுக்கு சப்போடு நாயம், மொழுக்கு நாயம் பேச இவிங்க விலுக்கோலு ஒத்துக்க மாட்டேனுப்புட்டாங்க.  கிறுக்கு முறுக்குங்காம மச்சாங்காரன மில்லுக்கு வரவேண்டான்னுப்புட்டு, பையங் கையி எலும்புங்கூடி வருந்தினியும் சம்பளத்தோட ஆசிப்பத்திரி செலவையுஞ் சேத்திக் குடுத்துக்கிட்டிருந்தாஞ் சேட்டு.  மூணு மாசங்கழிச்சி பண்டாத திருக்குசுப்பண்டி திலிப்பியும் மில்லுக்கு வந்துக்கிட்டிருந்தானப்பா இ.எஸ்.சி சேட்டு புண்ணியத்துல.  ஒருநாளு அளவத்த போதையோட ரவ்வு சிப்ட்டு பாத்துக்கிட்டிருந்த கந்தசாமியிண்டப் பேசி பழசக் கௌறுகௌறுன்னுக் கௌறி அகராதிப்பேசி வலிவந்தமா சண்டைக்கி இழுக்க, இவனொண்ணுப்பேச அவனொண்ணுப்பேச ஒண்ணுமேல ஒண்ணுப்போட்டு தகலாறு முத்தி கந்தசாமி, இ.எஸ்.சி மண்டய அடிச்சி ஒழுக்கிப்புட்டான்.  இதுதாண்டா சமயமின்னு சேட்டு ஓமலூரு டேசன்ல போயி கொலக்கேசி எழுதிக்குடுத்து ஒயருமேன உள்றத் தள்ளிப்புட்டான்.  நாயம் நெகாருன்னு ஒருத்தரும் வாயத் தொறக்க முடியல.
 இதெல்லாம் ஒருபக்கங்கெடக்க, மூணு வருசத்துல பரமெண்டு பண்டறமின்னு சொன்னவிங்க ஏழு வருசமாவியும் ஒரே குஞ்சான குஞ்சிக்கி கார்டுக் குடுத்து பரமெண்டு பண்டல.  பி.எப்பு, ஈயெஸ்சு ஒரு சுடுகாடுங் கெடயாது.  தீபாவளிக்கி தீவாளி பிச்சப் போடறாப்ல முந்நூறு, நானூறு மிச்சமாப் போனா ஐநூறு உருவாதாம் போனசி.  வருசமொருக்கா என்னமோ சாங்கியத்துக்கு ரெண்டுருவா சம்பளத்துல ஏத்துவான்.  அதுக்கு உண்டான வேலையுஞ் சேத்தி வாங்கிக்குவாங் கணக்கா.


 ஏப்பா மூக்குமுடி புடுங்கனா ஆளு பாரங் கொறயுமா?  அவனவனுக்கு தக்க சம்சாரமில்ல, சம்பளமே கட்டுப்பிடி ஆவலையின்னா எதவெச்சி சுதாதரிப்ப?  புளோரூமு கொமாரு, காடிங்கி கணேசன், சிம்பலக்சி தனசேவுரு மொகாமையில மேட்டூரு சீரங்கனப் பாத்து ஊனியனு ஆரம்பிக்கலாமின்னு கலந்துப் பேசனதுதாங் காரணம், ஏப்பா சேலம் கிச்சிப்பாளையத்துலயிருந்து ரவிடிங்களக் கூட்டியாந்து, பசங்கள பஞ்சிக் கொடோன்லவுட்டு அடிச்சா அடியா அது.  மூக்குவாயெல்லாம் ரத்தமா கொப்பிளிக்கிது.  ஆளு தப்புனாலும் அடி தப்புல.  ஓரடிப் பாக்கியில்லாம பூராம் உள்ளடி.  தனசேவுருக்குத்தான் மீறன அடி.  தறிக்காருக்கு கோனு திருடி வித்தாங்கன்னு திருட்டுப்பட்டங் கட்டி, போலிசிக்காரனுங்களே வண்டி போட்டுக் கொண்டி அவரவரு வூட்ல துள்ளத் துடிக்க எறிஞ்சிப்புட்டுப் போனாங்க அத்தாந்தரமா. அதும்பொறவு உள்ளூரு ஆளுங்க ஒரே பசங்க இல்லாம துப்புரவா வேலயவுட்டு நிறுத்தி ராமநாதபொரம், மதரப் பக்கம்போயி, வெறும் பொட்டப்பிள்ளைங்களாவே மூணுவருசம் யெக்ரிமெண்டு முப்பதாயிரந் தாறம், நாலு யெக்ரிமெண்டு நாப்பதாயிரந் தாறம், அதோதட மாசச் சம்பளம், குடியிருக்க வூடு, போவ வர வண்டி, வசிதின்னு படல்படலாக் கூட்டியாந்து கோட்ரசிக் கட்டிக்குடி வெச்சாங்க.  நரிமின்ன நண்டுக் கரணமடிச்சாப்ல இவிங்கக் விட்ட அவிங்க வந்த எனத்தக்கழட்ட முடியிம்?  வந்த மாதரயே மாசமொரு கும்புலுச் சொல்லாமப் புடிக்காமப் பொறப்பட்டுச்சிங்க,  மிச்சமீதி ஒண்ணு ரெண்டு தாக்குப்புடிச்சித் தடுமாறி மூணு வருசஞ் செலுத்தனவங்களுக்கும் அது நோனி இது நோனின்னு ஒரே அஞ்சிப்பிசா கை நட்டமில்லாமத் தொரத்தியுட்டுட்டாங்க.  அப்பிடித்தாம் பட்டூம் இந்தச் சனந் திருந்திச்சா?  மதரக்காரன் வல்லையின்னா தரும்பிரிக்காரஞ் சும்மாவே வர்ரங்கறான்,  நாயங்கண்டுப் பேசச்செட்யானப்படிக்கி மொகறயில மீசவெச்ச ஆம்பளையுமில்ல, மொழங்கால்ல மீச வெச்ச பொம்பளையுமில்ல.


 சேட்டு மில்ல வெச்சி இன்னொரு வெவகாரமென்னுன்னா ஒராளு ஒரு வேலச் செய்யிதா அந்தவொரு வேல மட்லுந் தாங்கற கட்டுத்திட்டம் எதுங் கெடயாது.  கரண்டு இல்லாம சென்ரேட்ல ஏழு வைண்டிங்கி மிசினுக்குப் பருத்தியா நாலுதான் ஓடுதா, மிச்சப்பேருப் போயி பின்னிங்கில சைடு கட்டணும், மிசுனுத் தொடைக்கனும், ஏப்ரான் ஒட்டுனும், அரியா எடுக்கணும், இதெதுமில்லியா புளோரூம்புக்குப் போயி மிச்சிங்ல பஞ்சள்ளிப் போடுணும்.
 இன்னைக்கி காத்தால வந்தப்பத்தொட்டு ஏழாடங் கரண்டுப்போயி பஞ்சிக் கொடோன்லியேப் பழிக் கெடக்க விதியாச்சி.  மத்தியான வெயிலு உக்கரம் புழுங்க ஒரே வேக்காடு, அதுல ஒடம்பு ஒடஞ்சிதான் இப்பிடி திரேகமே ரணமாயிட்டுது.  கண்ணு இருண்டு, காது ரெண்டும் பஞ்சடஞ்சி, மேலு வெலவெலத்து, பிள்ள ரெக்கிரியாட்டம் வதங்கிப் போயிட்டா.  நின்னு நின்னு இடுப்பு நோவெடுக்க, காலுந்தானா மடியிது.  வதயான வதப்பட்டுக்கிட்டு இவளிருக்க பொழுது மணி மூன்றயாச்சி.  இவளவுட்டுட்டு மித்த பிள்ளைங்கெல்லாம் வேரவரு எடுத்த கோனக் கொண்டி சேட்டுக்கிட்ட கணக்கு ஒப்படைக்க, இவ கடைச்சியாப் போயி மேலுக்கு சவிரியமில்ல, நாளைக்கி சேத்தி ஓட்டிக் குடுக்கறன்னு தவுமானஞ் சொல்லிக் குடுத்துட்டுப் போவலாமின்னுருந்தா.


  ரட்சக்கணக்குல மொதுலுப் போட்டு மில்லோட்ற மொதலாளி, எரநூறு முந்நூறுப் பேத்துக்கு மாசம் முப்புது நாளும் படியளக்குற கருத்தா, ஆளு மேல ஆளு ரெண்டாளு வுட்டப் பொறவும் அவங்கிட்ட கையேந்தி கூலி வாங்கறவொரு பொட்டப்பிள்ள, கெட்டக்கேடு, இந்த மாதரவொரு மதியாத்தனத்துல ரஸ்பீட்டு மயிரா நின்னுக்கிட்டிருந்தா, அந்த இஸ்பேட் புளுத்திக்கி ஏப்பா நோப்பாளம் வராது?  எடுத்துக்கிட்டிருந்த கணக்க அப்பிடி அப்பிடியே வுட்டுட்டு, நெனச்சாப்பிடி குந்தியிருந்த சீட்டிய கிடீர்னு பொறவுத் தள்ளி எந்திரிச்சவன், திடுதிடுன்னு அந்தப் பிள்ளையிண்ட ஓட்டமா ஓடி 


‘ஏப் பொம்பளே, சேட்டு கூப்பர்றாந் தெர்லே?  எர்மே மாரி நிக்றே ராஸ்கோல், கித்தனா கோன்?  பொம்பிளே, கித்தனா கோன்?’ன்னு ஒரு அதட்டு அதட்டுனாம் பாரு... விலுக்குன்னு துள்ளிவுழுந்தப் பிள்ள மெரண்டுட்டுதா, அந்தப்பயத்திலேயே இன்னோராடம் தீட்டாயிப்போச்சி. ஒட்னக்கால எட்ட வெக்கறதுக்கில்லாமப் பட்டுக்கிட்டிருந்த சித்தரவதயில பிள்ளைக்கிப் பேச நாவே எந்திரிக்கல.  மொள்ள டேண்டு மேலயிருந்து கோனு எடுத்து சேட்டு மின்ன வெச்சா.  எக், தோ, தீன்னு எண்ணிப்பாத்தவனுக்கு, எட்டேயெட்டு கோனுயிருக்கும்பிடி ª----- சுண்டி, படீர் படீர்னு நோங்கிநோங்கி பிள்ள தலமேலத்தட்டி, ‘ஏப் பொம்பளே, எட்டவர் ஷிப்ட்லே, இவ்ளோதாங் கோனா?  வயறு சோற் சாப்ட தெர்தூ, வாங்கறே பைசாக்கு வேலே செய்னும் தெர்லே’ன்னு கொரைக்க, உச்சியில ஈடுத்தாங்கி பிள்ளைக்கி நெருப்பு பருத்தி வெச்ச மாதர மேலேப்பூராம் த்திகு த்திகுன்னு எரிய அவுளுக்கும் மச திலிம்பிட்டுது. 

 ஏந்திக்கிட்டிருந்த கோன நின்ன வாக்குல விசிறி எஞ்சவ, ‘டேய்ய் ஆர்ரா மேலே வெக்கிறவந் தாயாலி, குடுக்கறத மட்லும் எண்ணி கணக்கு வெய்யிஇ மிச்சப்பிடி கை தீண்டற வேலகீல வெச்சிக்கிட்ட மரியாதி கிரியாதியெல்லாங் கெட்டுப் போயிருஞ் சாக்கிரிதி’ன்னு இடுப்புல கட்டியிருந்த பையயிம், தலயிலக்கட்டியிருந்த வேடயும் அவுத்துச் சுருட்டி அவம் மொவரையில யிட்டுப்புட்டு கொண்டயத் தட்டி, முடிஞ்சிக்கிட்டு வேடிக்கப் பாத்தவிங்கப் பாத்தப்படியிருக்க, படப்படன்னு கேட்டு வாசலுக்கே வந்துட்டா. வாசக்காலத் தாண்டி இந்தண்ட வந்ததும், அஞ்சி வருசமா அவள புடிச்ச பீடவுட்ட மாதரயிருந்திச்சி.  பின்னயென்னாப் பின்ன இன்னைக்கி நேத்தா அவ சேட்டு மில்லுல குப்பப் போடறா?  எண்ணி எட்டுவயசில மில்லுல அடியெடுத்து வெச்சவ, ஆயிப்போச்சி அவுளுக்கு பதிமூணு வயசி,  மொதவொரு மூணுமாசம் சேட்டுவூட்டாருக்கு சிக்கனம்பட்டி குதரக்குத்திப் பள்ளத்தலயிருந்து காப்பித் தண்ணி டீத்தண்ணி, ஜர்தாப்பொயில வாங்கிக் குடுத்துக்கிட்டிருந்தா.  அதும்பொறவு கெண்டத் தூக்கப் போட்டாங்க.


  மூணுநாளு, நாலு நாளு கெடையா தொட்டியில ஊறனது.  மக்கேரி நம்ப அள்ளி சும்மாடு கோலித் தூக்கி வெக்கையில அத்த பாரத்துக்கு மனுசரு செத்த ஏமாந்தப்பிடி யிருந்தா கை சோட்டு விட்டய அலுங்காம போட்டுட்டு சத்தமில்லாம ஓடிப் போயிருனும்.  ஓஞ்சி நிக்கறதுண்டா?  உஸ்சின்னு சித்த குந்தறதுக்குண்டா?  சும்மாயிருக்கறதக் கண்டுட்டான்னா பிஞ்சின்னும் மாருன்னும் வெச்சிப் பாக்கமாண்டாஞ் சேட்டு.  அத எடு, இத எடு, அங்க ஓடு, இங்க ஓடுன்னு  முடுக்கியேயிருப்பான்.  உள்ளங்காலுத்தேய ஓவத்து வேலச் செஞ்சாலும் மனசே மோவாதுச் சனியனுக்கு. நீ  கொடலியே உருவி கைலக் காட்டு, அதயும் வெறும் வாழநாருன்னுப்புடுவாந் தாயாலி.  


ஆறுமாசம், ஒரு வருசமாட்டம் கெண்டச் சொமக்கப் போட்டுட்டு, பொறவு காடிங்கிக்கும் ட்ராயிங்கிக்கும் சிலைவருக்கேனு தள்ளப் போட்டாங்க.  அப்பிடியிப்பிடி எதனாலுந்துளி அசந்து ரோலுல பஞ்சி கிஞ்சி ஏறிப்போயிட்டா நறுவுசுப் பண்டனது பணிக்கில்லையின்னு அந்தச்சோட்டு ரோலுக்கட்டையிலியே மண்ட மண்டயா இறுக்குவானந்த ட்ராயிங்கிப் பிட்ரு.  மொள்ள பின்னிங்கிக்கி பாபினு மாத்தியுட்டுட்டு ஆறூசி, ஏழுசி எழக்கட்டச் சொன்னாங்க.  இந்தப்பிள்ளைஞ் சூட்டுப்பா பத்தூசி, பன்னண்டூசிக் கட்டிச்சி.  அப்பிடியிருந்தும் முழுசாவொரு மிசினி அண்டியிருக்க முடியாது.  அதுவுமிந்த ஆயரமூசி வளத்திப் பிரேமு வாங்கிப் பூட்னப்பொறவு சிப்ட்டுக்கு இருவுது அரியா, இருவத்திரெண்டு அரியா எடுத்தது எடுத் மாதரயேயிருக்கணும். இந்தச் சீரெழவெல்லாம் பத்தாதுன்னு இன்னோரு பேரெழவுக்கும் பிள்ளைங்க கைக்குடுக்கனும்.  நெனைச் சிக்கிட்டாப்போதும் மூணுக்கொருக்கா, ஆறுக்கொருக்கா இநத் லேபரு ஆபிசிரு, பேட்ரி இனிசிப்பெட்ரு இவிங்கயெல்லாம் மில்லு மில்லா அல்லெடுக்க வருவாங்க என்னம்மோ அவிங்க அவிங்களுக்கு எள்ளும் பொரியும் எறச்சி, கொண்டுப்போயி ஓமலூரு மலையாளத்தாஞ் சோத்துக்கடையில சீமச்சாராயத்தோட ஆட்டுக்கெடாயுங் காவுக்குடுத்து, அவுத்த அந்த பாடமாத்தியில தேர திலுப்பி வழிக்கூட்டி அனுப்பமுட்டும் பிள்ளைங்க பாவம் பஞ்சிக்குழியில ஒண்டிக்கிட்டு மறப்பாப் படுத்துருக்கணும்.


  காத்துண்டா?  ஒரு வெளிச்சமுண்டா?  பங்கினி மாசம், சித்தர மாசமாயிருந்து, அந்த அடப்பாசறத்துல ஒண்ணுமேல ஒண்ணா பொணமாட்டம்டந்துட்டு எந்திரிச்சா, அந்த ஜூட்டுக்கு ஒவ்வோருப் பிள்ளைங்களுக்கு அக்கி வந்தாப்பிடி மேலே கொந்திப் போயிரும்.    ஒவ்வொண்ணுங்களுக்கு தொடச்சந்துலியும், சூத்தாம்பட்டையிலையும் நல்லா இத்தத்தச்சோடு செலந்தி புட்ரிச்சிக்கிட்டு முட்டி, ஈ மிக்க ச்சும்மா சலமா ஊறும்.  செலந்தி ஒடஞ்சி மொளப்பு வாரந்தின்னியும் நடக்கறதுக்கில்லாம நாத்தமெடுத்துக்கிட்டு திரியினும்.  எப்பிடியோ ரெண்டு வருசமா பிரிப்பேட்தியிலியும், பின்னிங்கியிலியும் ஓரியாடிப்புட்டு, மூணாம் வருசந் தொட்டுத்தான் இந்த கோனு வைண்டிங்கிக்கி வந்தா, கூலிக்கித் தக்கன வேல வாங்கறாங்க, அதுக்கு எச்சாவும் நம்ம பாட்டத் திங்கறாங்க.  பாடுப்பட பால்மார்ற பிள்ளயில்ல இவ.  ஊத்த வாயில வெரு வார்த்தயச் சொல்லிப்புட்டு அந்த சொல்லு அழிய றாங்களே, அதக்கண்டாதானே, மனுசருக்கு வேவறது.  பேச்சிச் சுத்தம் இல்லாக்காட்டி அந்தெடத்துல எப்பிடிப்பா பிரியமா பண்ணயம்  பண்டறது?  அட விசியம் வேறொண்ணுமில்ல, போனப்பூட்டு தீவாளீக்கி சேட்டு என்னான்னுச் சொன்னானிங்கற, வருசம் முந்நூத்தி அறுவத்தஞ்சி நாளும் நிக்காம வேலைக்கி வாரவிங்களுக்கு, அடுத்த நோம்பிக்கி சைக்கிளு வாங்கித் தாறமின்னு சொன்னதுதாஞ் சாக்கு,  இவ நோவா நொடியா, நோம்பியா கீம்பியா ஒரு கல்லெடுப்பையுங் கண்டப் பாவியில்ல,  அவுளுண்டு மில்லுண்டுன்னு கிருமமா வேலைக்கிப் போயிக்கிட்டிருந்தா.  எப்பாவொரு பொட்டப்பிள்ள நாம்ப யின்னைக்கி வயிசிக்கி வாரமின்னுக் கண்டா வெச்சிருப்பா?  சமஞ்சவளுக்கு தெரட்டிச்சுத்தி வூட்டுக்குக் கூப்படறாங்கயில்ல, அந்தேழு நாளு மட்டும் பிள்ள மில்லுக்குப் போவல.
 மறிச்சி அந்த வருசந் தீவாளி வந்தது.  அல்லாருஞ் சேட்டு நோம்பிக்கி அவுக்கறான்னு ஆளுமேல ஆளு ஏறிக்கிட்டுப் போயி வாங்கிக்கிட்டிருக்க, சம்புநதிப்பிள்ள அதயெதயுஞ்சட்டையேப் பண்டல.  சைக்கிளு வாங்கறத்துலியே குறியாயிருந்தா.  பின்ன ஊரேத் துடும்படிச்சிக்கிட்டுத் திரிஞ்சாளே, வெறுங்கையோட போனா பெருத்த பங்கமில்ல. ரவுசடங்கனதும் போயி இவ, இப்பிடித்தாஞ் சங்கிதி, சைக்கிளு வாங்கிக் குடுங்க சாருன்னு கேக்க... ‘ஏழ்நாள் ஆப்ஜெண்ட் எந்த கணக்குல குடுக்கறது?  கண்டதுக்கு வாரியெறைக்க இதுவொண்ணும் அனாதிங்க சொத்தில்ல’ங்கறானே வாயே கூசாம,  இல்லாதவச் சொல்லு சவ ஏறுமா?  மவ மருவறா மருவறா அப்பிடி மருவறா, மாடாட்டம் அழுவறா. ஆண்டியூம்பச் சொன்னா தாசப்பனுக்கு எங்கப் போச்சி பித்தி?  இவுளுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணுமின்னு மில்லே ஏவிடியும் பேசுது.  புதுவருசம் பொங்கலுன்னு எத்தன ரீவு நாள்ல வேலக்கிப் போயிருப்பா?  வந்த கணக்கவுட்டுட்டு வராத கணக்கச் சொல்லி வேல வுட்டுட்டானில்ல.  இந்த அலுப்பநாயி சாவகேசம் நம்புளுக்கு அரமாலுமே வேண்டாமின்னு அன்னக்கி நெஞ்சில வைராக்கியத்த வெச்சா, எண்ணம் இன்னக்கித்தான் ஈடேறுது.
 கசந்து வந்தவ கண்ணத் தொடச்சி அனுசரிச்சி, ரெண்ட வார்த்த தேறுதலா சொல்லாக்காட்டிப் போவுது, எங்கியோ காத்தடிக்கிது, எவுத்திலியோ மழப் பேயிதுன்னே இருக்குறாளே இந்த அரிசியம்பிள்ள, மொதநாளு அந்தியோட வந்து மூலையிலச் சுருண்டப் பிள்ள, மொடங்கனது மொடங்கனாப்பிடியே கெடக்குதே, என்னாயிருக்கும் ஏதாயிருக்குமின்னு பெத்த வவுறு ரவையாச்சிம் பதைக்கிமா பதைக்காதா?  இந்தம்மாளுக்குப் பொந்தியில என்னா கருத்து ஓடுது...


 இதேதறா, இந்தப்பிள்ள மில்லுக்குப் போவாம, டிமிக்கிக் குடுப்பாளாட்டமிருக்குதே... அம்மா இப்பிடியே மலத்திப் அரியா ஒய்யாரமாப் படுத்துக்கிட்டிருந்தா, அத வெச்சி போயி ரெண்டுநா சம்பளத்துள கிம்பளத்துல எதனாலுந் துண்டுகிண்டு வுழுத்துப்போச்சின்னா, பண்ணாடிமாருங்க பஞ்சாயத்துல முகவா விக்கிறாங்களே டீவிப்பொட்டி, அத வாங்கற வழியெப்பிடின்னு ச்செட்யான கருக்கட வுழுந்துட்டுது.  அந்த ஆவுசந் தாக்கு புடிக்க மாட்டாம தாம் பொம்பள, மறாநாளு கோழிக் கூப்ட்டுச்சோ, இல்லியோ ‘ஏண்டி மில்லுக்குப் போவுலியா?  மில்லுக்குப் போவுலியா’ன்னு மவள அரியா அரிச்சிப் புடுங்கறாளே வுடாம. 


 அம்மாக்காரி சம்பஞ் சாலாக்கெல்லாம் மவக்கிட்ட ஒண்ணுஞ் செல்லுப்பிடியாவல.  சம்புப்பிள்ள புடிவாதமா, படுத்தது படுத்தவாக்குலயிருக்கா.  ஓஹோ யிந்த சண்டிமாடு ஆட்டம் பழக்கப் பாக்குது, அதயெப்பிடி நொகத்துல பொணைக்கிறதுன்னு எனக்கா தெரியாது?  தீனியெடுக்காம புணிச்சிக்கிட்டுருவனிண்ட ஒரேடியா வாட்லாட்டியம் போட்டா காரியங் கந்தராயாயிப் போயிரும்.  எங்கப் போயிரப் போறா?  ஒருச்சித்தய வுட்டுப்புடிக்கலாமுன்னு நெனக்கங்கட்டு பழயச் சோத்துதண்ணி நேரத்திக்கெல்லாம் அரிசியம்பிள்ள பொறுக்கலுக்குத் திலும்பிக்கிட்டா.  


பொறுக்கலுக்குத் திலும்புனவ, முட்டப் போண்டா திங்கலாமின்னு ஒரேத்துருவா காமலாப்பொரம் பெருமாளாசாரி கடைக்கேப் போயிட்டா.  முட்டப்போண்டா திங்கப் போனாளில்ல ஆசாரிக்கடைக்கி, அவுத்தத்தான் எங்கியோ மில்லு நாயந் துப்புத் தெரிஞ்சிப் போச்சி.  அவ்ளதாம்பா, படப்படன்னு சூரிக்காத்தாட்டம் வூட்டுக்கு வந்தவ, வந்தும் வராதமின்ன அலுப்பா கவுத்துக் கட்டுல்லத் தூங்கிக்கிட்டிருந்தப் பிள்ளை, வெடுக்குன்னுத் தூக்கி கீழப்போட்டு மிதிச்சி ஏண்டி ஓலீ, சோறுப் போடற மவராசன், ஒருச்சொல்லு சொன்னாயென்னா?  ரெண்டு ஈடுதான் வெச்சாயென்னா?  ஒண்ணுமில்லாதப் பொத்துலு, உனக்கெதுக்கிடி ரோசமின்னு குமுறுகுமுறுன்னுக் குமுறி, மசத்தப் புடிச்சி தரத்தரன்னு இவள அடிச்சி வேல வாங்குங்க சாமீன்னு, சொல்லிவுட்டுட்டு வந்தப்பொறவுதான், அரிசியம் பிள்ளைக்கி மனசாறி, மத்தியானச் சோறேக் குடிச்சா.