ஞாயிறு, 2 நவம்பர், 2014

வாயிக்கி வணங்காத பூவும் பல்லுக்கு மெதுவான கல்லும்




 பட்டும் பாவியானன் நானு நட்டுஞ்சாவியானன் அடியே ஆயா
 எங்கியாச்சுங் கண்டுக்கறமா இந்தமாரி அநியாயத்த ?தெனம் பத்து தரமுன்னாலும் காட்டுக்கும் ஊட்டுக்கும் நடயா நடந்து, கடன ஒடன வாங்கி முட்டுவழிப்போட்டு, இடுப்பொடிய பாடுபட்டு பண்ணயம் பண்டுனாலும் இந்த எலவெடுத்த வூட்ல இந்தாடி உனுக்கொரு அஞ்சிப்பசா காசின்னு நம்புளுக்கு அவுப்பாரு ஆருமில்ல.

  இப்ப அள்ளாமக் கிள்ளாம ஆரூத்தின்னப்பாடுமில்லாம மூணு ஏக்கரா நெலத்த அந்த கொரங்குத் தேவிடியாளுக்கு இந்த ஏத்தி கூத்தியாருப் பெத்த பையன் பட்டா பண்ணி வெக்கப் போறானாமே......

 இப்படி கண்டவங்கத் தின்னுப்புட்டு போறதுக்கா அந்த கெழுட்டுமுண்ட வவுத்துக்குக்கூடத் திங்காம வாயிலப் பொயிலக்குச்சிய அடக்கிக்கிட்டு சந்த சந்தயா அரிசிவித்துச் சொத்து சம்பாரிச்சி வெச்விட்டுப்போனா?

 மேலுக்கூடைக்கு தக்காளி பத்தல.  பெருஞ்சாதிப்பழமா ஒரு பத்துக் கொட்டாப்புட்டி பொறுக்கி, சின்னப் பொடியிண்ட குடுத்துர்றா மாப்பளைன்னு காட்டுக்குப் போவச் சொன்னன்.  பாலூத்திக் கடஞ்ச பண்ண ரெக்கிரியும் மூணு ருண்டகளியையும் முழுங்கிப்புட்டு போனவம் போனவனே......


 பொதஞ்சந்தக்கி போற பாரவண்டிய நிறுத்தி வெச்சிக்கிட்டு நானும் வருவான் வருவான்னு பாத்துக்கிட்டு இங்க கெடக்கறன்.
 எங்கயிருந்து வருவாம் மாப்ள?
 மூணுநாளா அந்த மூளியூட்லயில்ல குடியிருந்துக்கிறான்.  அப்பயே என்று அங்கம் பதயாப் பதச்சது’  என்னமோ எடஞ்சலு வருதுன்னு நெனச்சன் இப்படிப் பண்ணிப்புட்டானே...

 படுத்தா ரவயில தூக்கம் வந்தா?  பாழும் வவுத்துக்கு ஒரு ஒழுங்கு நீசுத்தண்ணிய நிம்மதியா குடிக்க முடியிதா?  அடி எனக்கு ஆளுன்னாலும் ஆறல’  தீருன்னாலும் தீரல, நெஞ்சில ஒரே ரவ அஞ்சிக்க இல்லாம அவனும் உசுரோடத்திரியறான்.  ஏனா ஆம்பளயின்னு அத்தச்சோட்டு மீசய வெச்சிக்கிட்டு..


 ஏண்டா மொன்னயா ஊரே சிரிச்சி சீலப்பேனு குத்துதே.  உன்னு மொவறையில காரிக்காரித் துப்புதே இன்னும் எதுக்குடா பொன்னயை அந்த மானங்கெட்ட உசுர வெச்சிக்கிட்டுருக்கற?  ஏண்டா உனக்கு ஒருச்சார குறண மருந்து சிக்கல’  ஒருச்சாணு கவுறு சிக்கல’  ஹூம் நல்லவங்க எல்லாஞ் சாவுறாங்களே அட ஆண்டவனே’  இவன நீட்டி நீருப்பூசி வெக்கக்கூடாதா?  ஆடிமா குடிவெட்டி நீளமாப் பொதைக்கக் கூடாதா?

 கெடக்குது வுடுறா’  கெடக்குது வுடுறா’  இதா இன்னிக்கு வந்துரும் நல்லபித்தி’  இத நாளைக்கி வந்துரும் நல்ல பித்தின்னு நானும் எட்டு வருசமா உன்னுகிட்ட ஓரியாடிப்பாத்துட்டன், நீயும் திருந்தி நல்லவழி போறதக்காணம்.  எப்ப என்னய அறியாம அந்த காதறுந்த மூளிக்கி காட்ட எழுதிவெக்க துணிஞ்சிட்டியோ, வுன்னுமாலும் உனக்கும் எனக்கும் என்ன இருக்குது?


 கருத்ததெல்லாந் தண்ணி வெளுத்ததெல்லாம் பாலுன்னு உன்ன அண்டி கெடந்தனே’  அதெல்லாம் அந்தக்காலஞ்சாமி அந்தக்காலம்’  இதாவொரு பையன பெத்துவுட்ருக்கறன் மரியேதியா அவுனுக்கும் எனக்கும் பொழைக்கவொரு தடங்காட்டு, பொறவு நீயி, என்னமோச் செஞ்சி எப்படியோ நாசமாப்போ’

 இவ்வள ஆனப்பொறன ஒங்கிட்ட இருந்த பொழைக்கிறதுல அர்த்தமில்ல.  கெதியத்தவ, கேட்க ஆளு இல்லாதவன்னுதான நீயி இப்பிடி தில்லுமாரித்தனம் பண்ணிக்கிட்டுத் திரியற...   எனக்கும்   சாதி சனம்  ஊரு நம்பக்கெடக்குது ...செரக்கப் பொறந்து நெறக்க      பொழச்சதுங்க  போறேன்
 போயி, அவங்கள கூட்டியாரன்.

 பத்துப்பேர வெச்சி பஞ்சாயம்பேசி துரும்புக் கிள்ளி போட்டுர்ரா சாமி.  உன்னு வழிய நீப்பாத்துக்க என்னுவழிய நாம் பாத்துக்கறன் ஆமா.
 ஒரே ஒரு நிமிசம் இந்தவூட்ல நானு இருக்க மாண்டன், இங்கயிருக்க எனக்கு சுத்தப்படாதுன்னா சுத்தப்படாது.
 ஹூம் நானாப்பிள்ள பொறந்தன் உன்னுக்கிட்ட சின்னப்பட்டு சீரழிய....

 டே கண்ணு சின்ராசு’  கண்டார வோலி பையனே’  எங்கடாப்போயி தொலஞ்ச? உன்னாலத்தாண்டா என்னுசுருப்போவப் போவுது?  வாடா இங்க..  இந்துரா ரெண்டுருவா போயி சளி மிட்டாயி வாங்கித்தின்னு.

 ஒழுங்கா பள்ளியோடம் போ’
 வௌயாட்டுப் பெறாக்குல வூட்ட தொறப்பு போடாம போயி ராத.  இந்தா தொறப்புக்குச்சி’  செத்தாலுந் திலும்பி வர மாட்டேன்னு
புண்ட வாயங்கிட்டச் சொல்லிப்புடுன்னு ஒரே முடுவா அப்பமூட்டுக்கு திலும்பிக்கிட்டா பஞ்சவர்ணம்.



  தடத்துல போற வர்றதுங்க தாம்பாத்துருக்கப் பொறந்தது, இன்னும் ஒழுங்கா கழுவத் தெரியாததுங்கயெல்லாம் பஞ்சவர்ணத்தோட தொகக் கண்டுட்டுப்போற போக்குல அப்படியே ரெவலா தலவ கிள்ளி நெருப்ப பருத்தி வெச்சிருக்குங்க.  அதான் இப்பிடி வேட்டு வெடிச்சி பொக கௌம்புது’
 எட்டுக்கு ஒருக்க, பத்துக்கு ஒருக்க எப்பயும் நடக்கிற கொச வழக்குத்தான்னாலும் இந்தப் பயணம் எதோ முத்திப்போன சமாச்சாரமாட்டமிருக்குது.  இல்லைன்னா பஸ்சு ஏர்றவளா பஞ்சவர்ணம்?


 மீறி மீறிப் போனா வண்டி மேட்டுக்குப்போயி பொழுதடைய அவபொறந்தவ வூட்ல கதய ஓட்டிப்புட்டு துப்பன எச்சி காயறதுக்குள்ள ஓடியாந்துருவா’
 கொண்டுகிட்டு கொலம்பாக்கறது நல்லாயில்லத்தான் என்னாப் பண்டறது?  அவளா பச்சமுத்த கட்டிக்கிறேங் கட்டிக்கிறேன்னு அடிப்பறிக்கிட்டு நின்னா?



ஹூம் அவங்கப்பன் இருக்கறானே திரியோதனன், ராசமுத்து கவுண்டன்.  பொழித்தகராறுல பங்காளி கையவெட்ப்புட்டு போலிசில சிக்கி சேலஞ் செயில்ல கம்பி எண்ணிக்கட்டிருந்தாம் பாவம்.  இவந்தாம்பாத்துட்டு அட அக்காப்பிருசஞ் செயில்ல களித்தின்னுக்கிட்டுக் கெடக்கறானேன்னு சீனிவாச வக்கீலு வெச்சி சே வாதாடி செவச்சி மாமங்காரன விங்கிணிச்சி வெளியக் கொண்டாந்தான்.  அப்ப பஞ்சவர்ணம் வயிச்சிக்கி வந்த புதுசி அதும்பொறவு பாத்துக்க ச்சும்மா கருவாட்டுக்கூடய பூனச் சுத்தனா  ப்புல அவங்கூட்ட இவஞ்சுத்த ராசமுத்து மவள இவுனுக்குக் கட்டிக் குடுத்தாங்க கடன கழிச்சான்.


 தாலியேறுன நாளு மொதக்கொண்டு தண்ணியில எழுதுன எழுத்து அழிஞ்சாலும் தம்பிருசன் சொல்லு அழியமாண்டான்னு நம்பித்தான் பஞ்சவர்ணம் அவங்கிட்ட வாழ்க்கச் செஞ்சா.  அவளாட்டம் உஸ்தியமான பொம்பள கருத்துள்ள பொம்பள ஊருக்கு ஒருத்தருமில்ல.  காலா காலத்துல அவுனுக்கு தெல்லுமணியாட்டம் ஒருப்பையன பெத்துக்குடுத்தா.


 அவ   மாசமாயிருந்தாளே அந்தச்சமயத்துலதான அவுனுக்கு இந்த வெங்காயத்தானோட  வள்ளலுமயிரு முச்சூடுந் தெரிஞ்சது.
எவத்தத்திலும்புனாலும் இவங்கூத்தியா, வெக்கிற நாயந்தான்.  அவுத்தப்பாத்தன்’  இவுத்தப் பாத்தன்’  சனிச்சந்தயிலப்பாத்தன், ஞாயிதுச் சந்தயிலப் பாத்தன், அவளோடப் பாத்தன், இவளோடப் பாத்தன்னு பலரும் பலவிதமா சொன்னப்பக்கூட பஞ்சவர்ணம் அது காது குடுத்துக் கேக்கல.
அவளா ஆள பொடனிமேல கைபோட்டுப் புடிச்சப்பறந்தான் உம்மயான நெலவரத்தக் கண்டுக்கிட்டா.

]
தாரண வருசமோ, கீரண வருசமோ,
ஒருப்பூட்டு
அப்பசி மாசம் செரியான அடமழ’
இப்ப இந்தசின்னராசு பையன் ஆறுமாசமோ தென்னமோ அவ வவுத்துல இருந்தான்.
ஒருநா எங்கியோ காட்டுக்குப் போவலாமுன்னு திலும்புவை,
“இதென்னாடி அநியாயம் இந்தாளு போனா போன எடம்’  வந்தா வந்த எடம்’ காத்தால ஒருக்குண்டாம் பழயச்சோத்துத் தண்ணிய குடிச்சிப்புட்டு போன மனுசன், இன்னும் வூடு வந்து சேரல, வந்தா ஒருவாச்சோத்தப் போட்டுட்டு காட்டண்டி ஒரு வேலவெட்டி பண்ணலாமுன்னா எங்க போறது?  ஒராளுக்கு ஊழியங்செய்யவே நேரஞ்செரியா இருக்குது, அந்திப்பாலு வேறப்பீச்சணும், மாட்டுக்கு பருத்திக்கொட்ட ஆட்டணும்.  ஊர¬ வெச்சது அப்பிடியே உசுரோடக் கெடக்குது.


  இந்த முட்டக்கண்ணி வர்ரன்னா திருட்டு முண்டய இன்னுங் காணம்.  ஒரு மனிசி எத்தன வேலயச் செஞ்சி நாசமாப் போறது.  எப்பப்பாத்தாலும் ஊரெலவாம் பேரெலவாமுன்னு பஞ்சாயம் பேசிக்கிட்டுருந்தாச் சோத்துக்கு வந்துருமா?  தெச்சத்துக்கு பண்ணாடி அதச்சொன்னாரு இதச்சொன்னாருன்னு வீம்பொல்லாப் புத்தாம் மிச்சம் வேண்டாஞ்சாமி இந்தி எச்சிப்பண்ணாட்டுன்னுச் சொன்னா இந்த மொடமசுருப்புடிச்சவங் கேட்க்றானா”ன்னு போன வனக்காணமுன்னு கோவத்துல சாமானஞ் சட்டெல்லாம் பொழங்கறாப்புல பொழங்கிப் போட்டு நொறுக்கிக்கிட்டிருந்தா அப்பத்தாம் பூட்ல பூந்த பச்சமுத்து,
“என்னாடிப்பிள்ள வூட்ல ரவுசு”ன்னு ஒரு அதட்டு அதட்டும்பிடி பண்ணாடிச்சி சத்தங்கித்தமெல்லாங் கைலப் புடிச்சாப்புல டக்குன்னு நின்னுப்போச்சி.




“யேமாமா ஆளுமேல  ஆளு உனுக்கு எத்தன ஆளு வுடறது, வந்து ஒருவாச்சோறு தின்னுப்புட்டு போறதுக்கென்னா?  ஓரெடத்துக்கு போனா மலாருன்னு திலும்பற வேலயே இல்ல.  பேஞ்சப் பாடுமில்ல காஞ்சப்பாடுமில்ல சிணுங்கு சிணுங்குன்னு விடிய விடிய தூறுது விடிஞ்சுந் தூறுது’  மொழுங்காலு வதியில எந்நேரங்காட்டுக்குப் போறது?  அந்தக்காரியுஞ் செவலையுங் கத்திக்கிட்டு கெடக்குங்க.  ரூ£ம் போனாத்தானே ரெண்டு தட்டுகிட்டு அறுத்து அதுங்க வவுத்துக்குப் போடமுடியும் எதோ அரப்படி ஒருப்படி பாலுகறக்குது அதயுங்கூட வெச்சிருவ மாட்டமிருக்குது”ன்னு ஒரேமுட்டா அவ அலுத்துக்கும்படி
“அதயேஞ்சொல்றப்பிள்ள போப்பிள்ள பொழுது மொளச்சும் மொளைக்காத மிந்தியே எவனாச்சும் ஒருத்தன் நாயங்கொண்டாந்துர்றான்.  அக்கப்போர எடுக்க முடியல”ன்னு இவுனுஞ் சலிச்சிக்கிட்டான்.



“அவுங்களுக்குத்தாம் பொழப்பில்ல உனுக்குமா?  வா வா வந்து இதக்குடி”ன்னு ஒன்றப்படி எருமத்தயிர்ல ஒரு வெண்ணத்தாழி பச்ச நெல்லஞ் சோத்த போட்டு நைப்பா கறச்சி ஊத்துனா பஞ்சவர்ணம்.  பச்ச மொளவாயக் கடிச்சிக்கிட்டு மொடக்கு மொடக்குன்ன குடிச்சக் கையோட கட்டுல்ல மல்லாந்துக்கிட்டாம் பச்சமுத்து.


“படுத்தமாயத்துல கொறட்ட வுட்றாத மாமா, ங்கெம்மாளுக்கும் ங்கெப்னுக்கும் நோம்பிக்கி வர்றாங்க வூட்ல ஒருச்செலவான செலவில்ல சந்தக்கிப் போவுனும் நெனப்பிருக்குதான்னா” அவ,



“நாலுமணி நாவநாதனுக்குப் போறம்பிள்ளச் சும்மா தொணதொணன்னு பேசாதப்பிள்ள”ன்னான் இவன்.


 “ச்சேரி, அப்பிடின்னா சித்தங்கூறியத்துல கெத்தலோடம் மருமவவருவா அந்தப் பருத்திக்கொட்டய ஆட்டி எடுத்துக்கிட்டு நானு மாட்டுக்கு தண்ணிக்காட்றதுக்குள்ள நிமுசம் ஓடியாரச் சொல்லு.  அங்கயிங்க நீட்டி நெளிச்சிக்கிட்டு நிப்பா சட்னு தொறத்திவுடு சந்தைக்கு போறப்ப மறக்காம வூட்ட தொறப்பு போட்டுட்டு தொறப்புக்குச்சிய தங்கம்மா அப்பாயிக்கிட்ட குடுத்துட்டு போம்மாமா”ன்னு


 பஞ்சவர்ணம் பக்குவஞ்சொல்லும்பிடி,


“ச்சேரிப்பிள்ள நீ மழைக்கிமின்ன கௌம்பு ரவைக்கி வந்து அடுப்பு பத்த வெக்கினும்மில்ல”

ன்னு பொண்டாட்டிய காட்டுக்குத் தாட்டிவுட்டாம் பச்சமுத்து.


வழி வழிய அலுமினியச்சருவத்துல தீனிய எடுத்துக்கிட்டு பஞ்சவர்ணம் காட்டுக்குப் பொறப்புட்டா.  ஊருக்னெத்த தாண்டி சின்னப்பொன்னி பூட்டு தென்னந்தோப்பத்தாண்டி இட்டேரிமேல ஏறுனா ஏமாந்தப்பிடி எட்டி அடிவெச்சதுல முட்டுக்கல்லுல நெக்குனு மோதி ‘ச்சளக்குனு’ சருவத் ருந்த தீனித்தண்ணி மேல வழிஞ்சோட,

“என்னாடி இட்டேரி எங்கொலாயிலயிருந்த இட்டேரி’  ஓராளு உள்றபூந்து போவமுடியிதா புண்டத்தலயெரிங்க ஓட்டு வாங்க க்குள்ள மட்லும் வந்து வந்து பொச்ச நக்கனானுங்க.  காரிய மானபின்ன அப்பரம் எதயுங் கண்டுக்கிறதில்ல..........கட்டியத்தின்னிங்க நம்புளுக்குத்தாஞ் “சங்களவம்” மின்னு ஊரு பெரியத்தனக்காரனங் ரெண்டு எத்தி ஏலம்போடுட்டு மாத்துடப்பு மாத்திக்கலாம்ன்னு ஆட்டுக்கே திருப்பியும் நடந்தா, தீனிக்கவிச்சி ஒண்ணுஞ்சொல்லிக்க முடியல

.
“திக்கத்தப்பான என்னா நாத்தம் நாறுது பாரு கழுதமுண்டைங்கக்கிட்ட தீனியில கறிச்சாத்த ஊத்தாதிங்கடி ஊத்தாதிங்கடின்னா எந்த வெள்ளாச்சி கேக்கறா நம்புளுக்கே நாத்தம் தாக்குப்பிடிக்க முடியிலியே அந்த வாயிலாச் சீவனுங்க எப்பிடி தண்ணி குடிக்குங்க”ன்னு தீனி ஊத்தற பொம்பளங்களையும் வுட்டு ரெண்டு வெளாசு வெளாசுன்னு வெளாசுனா



ஏதுரா பொடக்கலிப்பக்கம் பொண்டாட்டி ரவுசு கேட்குதுன்னு குட்லுமேல படுத்துக்கிட்டிருந்த பச்சமுத்து அரக்கப்பறக்க எந்திரிச்சி ஓடியாந்து,
“அதயேங்கேட்கற மாமா, அந்த இட்டேரி முட்டுக்கல்லு இடிச்சி கீழவுழுந்து மண்ட ஒடஞ்சிக்கும் நல்லவேள தப்பிச்சேன்.  புளிச்ச தண்ணி தெறிச்சி மேலுப்பூரா ஒரே சலதாரக்கப்பு அப்படியே  ஒக்காளிச்சிக்கிட்டு வந்து”ன்னு அவ இட்டேரியில வுழுந்த கதயச் சொன்னா பஞ்சவர்ணம்.


“அடடா ஏப்பிள்ள பாத்துபோவக்கூடாதா”ன்னுச் சாங்கியத்துக்கு என்னும்மோ ரெண்டுச்சொல்லு வெசாரிச்சியும் வெசாரிக்காத மின்ன,

“ச்சேரி சேரி நாலுடப்பா தண்ணிய வாத்து கழுவிக்கிட்டு ஒடுப்பிள்ள சீக்கர”முன்னு பறவா பறந்தாம் பச்சமுத்து.



“அடயிரு மாமா துணி மாத்திக்கிட்டு போறன்”னா அவ.



“இவுத்தியே அல்லாட்டம் போட்டுக்கிட்டிருந்தா சொசைட்டிக்கி பாலு ஊத்தனாப்பலதாம்போ”ன்னு வாசக்கால்ல குறுக்க நின்னுக்கிட்டு பொண்டாட்டிய உள்ற வுடாம வளைச்சி முடுக்கிறதிலியே குறியா இருந்தான் ...


“இதா மாமா சித்தி நவுர்ரியா சீலயும் லவுக்கவும் நனஞ்சிச் சதசதன்னு போயிரிச்சி.  ஈரத்தோட அப்படியே என்னமுட்டும் இருக்கறது?  ஒருநேரம் பாலு ஊத்தாட்டிப் போவுது மோருக்கடஞ்சிக் குடிச்சிப்புட்டுப் போறது’  இப்படியெல்லாம் உசாராப் பொழச்சிருந்தா இந்நேரம் நம்ப பொழப்பு கொண்டயத்துக்கு போயிருக்காது ஹூம்”ன்னு


 புருசன ஒரு போடு போட்டவ பண்ணாடி படுத்திருந்த உள்ளூட்ல பூந்து பொட்டியத் தொறந்து சாக்கிட்டு ஒண்ண எடுத்தா போட்டுக்கிட்டுருந்தத அவுத்து தூக்குமேல போட்டுட்டு மாராப்ப வாயிலக் கடிச்சிக்கிட்டு சோத்தாங்கையச் சாக்கிட்டுக்குள்ளவுட்டா பாக்காத பண்டமாட்டம் பச்சமுத்து பொண்டாட்டிய பொடக்கு பொடக்குன்னு பாத்துக்கிட்டிருந்தான்.  சனியம்புடிச்ச முந்தி நழுவி ரவுக்குனு கீழ வுழுவ ஐயய்யோன்னுப் பதச்சி அவ குமிஞ்சி முந்திய அள்ள கட்லடிய ச்சர ச்சரக்க என்னமோ ஏதோன்னு இவ உத்தப்பாக்க அவுத்த செத்த ஆட்டுக் கண்ணாட்டம் ரெண்டு முட்டக் கண்ணு பிதுக்கா பிதுக்கான்னு முழிச்சிக்கிட்டிருந்திச்சி.
என்னாப்பண்டுவ?



கற கறன்னு கண்ல பிச்சிக்கிட்டு வந்த கண்ணுத்தண்ணி வெரல்ல வழிச்சி சுண்டியெஞ்சிப்புட்டு வாயிப்போசம கப்புனு இந்துக்கிட்டா இன்னிக்கி இருக்கிற நெனப்பு அன்னிக்கி இருந்துருந்தா ரெண்டுபேத்தயும் செக்கப்புழிஞ்சி செனாருக் கௌப்பியிருப்பா முழுக்க நனஞ்சபொறவு முக்காடு எதுக்குங்கறாப்ல பச்சமுத்துக்கு பின்னியுங் குளுருவுட்டுப்போச்சி ஹூம் இன்னிக்கி நேத்தா அவம்பித்தியப் பாக்கறம்?



என்னிக்கி மீச மொளச்சி தொண்டக் கட்ச்சோ அப்பப்புடுச்சி அவுனுக்கு இதே தொழுவாடுதான்.  எத்தன வூட்ல கூரயப் பிரிச்சிருப்பான்?  எத்தனவூட்டு செவுரு ஏறிக்குதிச்சி ஈடு தின்னுட்டு வந்துருப்பாந்தெரியுமா?



ஓராடங் கழுத்த கத்திரிச்சிப் போறப்புலக் கூட ஆயிருக்குது’
இந்த குட்டக்கரமேட்ல சம்புநதி, சம்புநதின்னு ஒரு பொம்பள இருந்தா.  எந்நேரமும் அவுளுக்கு பத்துப்பேரோட தொடுப்பு’  அதும் இந்த சிறுவயசிப் பசங்கன்னா அவுளுக்கு இன்னும் நொம்போ பிரியம்.  கூட்டிக்கிட்டுப்போயி நேரு, கூறு, நெளுவு, சுளுவுத் தொச்சமில்லாமச் சொல்லிக் குடுப்பா.  சூது வாது தெரியாதவ ஒரு கவுடத்தவப் பாவம்.



இந்தப்பழம எப்பிடி இவுனுக்கு தெரிஞ்சிதோ இல்ல ஆருச் சொன்னாங்களோ.  நெனப்பெடுத்துக்கிட்டு பையன் ஒருநாள் தண்டு கட்டிக்கிட்டு அஞ்சாறு வலசுப்பசங்களோக் கூட்டிக்கிட்டு அவ வூட்டுக் கொட்டாயிக்கிப் போயிட்டாம்ப்பா கொட்டாயின்னா ஒசக்க செவுரேத்தி தூளம் போட்டு ஓடு மேஞ்சதில்ல.  நெடுக்குவார குறுக்கு வார ஓட்டி பனவோலையில மேஞ்சி எறவாணத்தச் சும்மா ரெண்டு மூணடி செவுத்துமேல எறக்கிவெச் சிருக்கறது இவமபோயி வூட்டுக்கு மின்னப்பாக்க கதவு உள்தாழுப்போட்டுருந்தது.  அப்பரம் இவம்பொறனபோயி எறவானத்தப் பிடிச்சி அப்படியே அலாக்காத்தூக்கி சந்துல தலயவுட்டு முட்டி “அக்கா அக்கா”ன்னு நல்லாப்பெருத்த ஒரவுட்டுக் கூப்புடும்படி அந்நேரம் அவெங்கியோ ஒரு குருவிக்காரப்பீத்துலோட முசுவா பண்ணயம் பண்டிக்கிட்டிருந்தா ...

சிவப்பூசயில இதென்றா கரடிக்கத்துதுன்னு அவன் குருவிச் சுடற டுவாக்கிய எடுத்து ‘டொப்புனு’ச்சுட்டு “ஆர்ராவன் ங்கோயால இன்னேரத்துல’  தெகிரியமிருந்தா எம்மின்னால வாங்கடாப் பாக்கலாமுன்னு கருவனாம் பாத்துக்க இந்த கூட வந்த கொலவாரிங்க.

எரவானத்த இவம்பொடனிமேலயே வுட்டுட்டு திக்காலிக்க ஒண்ணாச்சும்மா பிச்சிக்கிட்டு ஓட்டம்பிடிச்சிவுட்ருச்சிங்க.  கீழு நடுவார இவம் பெறங்கழுத்துல நல்லாப்பொருத்தி ஒக்காந்திக்கிச்சி.  தலய வுள்ள வுட்டு எடுக்கறதா? வெளியவுட்டு எடுக்கறதான்னு பையங் கதவடிய சிக்கன பெருச்சாளியாட்டம் தெணறி, திண்டாடி தவுளிச்சி நெண்டி, நெளிஞ்சி ஒராழு குழிப்பறிச்சி மொள்ள விங்கிணிச்சி எடுக்கறதுக்குள்ள நரம்பு பெரண்டு கழுத்துப் பெசகிக்கிச்சி.

அத்தன ஒவுத்தினியத்திலியும் வூட்டுக்கு திலும்பி வருவானா ......... பையன்?
ஆளு ஒசரம் வெவசாயக் கொட்டமரம் கிர்ருன்னு மொளச்சிக் கெடந்தது.  அதுல இவம் ஒட்டுமூட் நாயி கூலுக்கு காத்தாப்ல காத்துக்கிட்டு கெடந்துட்டு சாமத்துல போயி சம்புநதிய என்னாச் சேதின்னு கேட்டப்பொறவுதான் வந்து தாவுச் சேந்தான்.
மலமழுங்கி மாரியப்பனுக்கு ஒரளுக்கல்லு எங்கித்தி மூல?  இப்பேருப்பட்ட வல்லாளக் கண்டனுக்கு பொண்டாட்டி பேசறதும் புடிக்கறதும் பொச்சி மேல ஒட்ன மண்ணு’  ச்சும்மா தட்டிவுட்டுட்டு அவம்பாட்டுக்கு ஊருமேயப் போயிக்கிட்டே இருப்பாம் பாத்துக்க




இவங்கோளாற கண்டப்பின்னா இரும்புப்பூணு மாட்டாத கொறையா பஞ்சவர்ணம் என்ன என்னாவோ கண்டுக்கல மேல கண்டுசனு போட்டா.  கட்டுமானமும் பண்டிப்பாத்தா, ஒண்ணும் அவங்கிட்ட பொட்டு நவுத்த முடியல.  திருடனுக்கு காவுலு இருக்க முடியிமா?
என்னமோ ஆத்ரந்தாங்காம அப்பமூட்டுக்கு போயிட்டாளே ஒழிய அவுளுக்கு அங்க காலு கெடயில தங்கல.

ஆளு இருந்தாலே “ஊரே கேளு’  நாடே கேளு’ன்னு திரியறவன் ஆளு இல்லாத நேரத்துல கையக்கால வெச்சிக்கிட்டு சும்மா இருப்பானா?  அவன் நெனப்பு எடுத்துக்கும்படி பஞ்சவர்ணம் சொல்லாம கொள்ளாம பிருசமூட்டுக்கு மூட்டயக் கட்டனா.
என்னத்த நெனச்சி என்னா ஆவப்போது?  மவனாட ஆசைக்கு  பச்சமுத்து நேத்த ராவே கொடம் ஒடச்சி கொள்ளி வெச்சிட்டான்.  வண்டியச்சும் முறிஞ்சிப்போச்சி’ ஆயக்காலும் கழண்டுக்கிச்சி.  எந்தண்ட நவறதுக்கும் வாட்டமில்ல.


 இருக்க எடந்தெரியாம அவணுண்டு அவனோட வேலவுண்டுன்னு பொட்டாட்டந்தாங் கெடந்தாஞ் சின்ராசு ஒரு மூலையில.
அதும்போவ அவனுக்கு இந்தப் பொட்டப் புள்ளைங்க சமாச்சாரமே துப்பரவாப் புடிக்கவே புடிக்காது.  எங்கியாச்சும் பசங்களோடச் சுத்தயில போறது வாரதுங்கள நின்னுச் சித்த வேடிக்கப் பாக்கறானே அதோடச் சேரி மித்தது எதிலியும் தலப்பட்டுக்க மாட்டான்.  ஏன்னுக் கேளு’
ராசாமணி, ராசாமணின்னு அவனுக்கொரு கூட்டாளி குட்டப்பட்டி புதூருல இருந்தான்.  அந்த ராசாமணிக்கி வடிவேலு, வடிவேலுன்னு ஒரு சேத்தாளி அந்தூருலியே.  வூட்டுக்கு போவ, வர வடிவேலுப் பையந் தங்கச்சி அன்னக்கிளிக்கு ராசாமணி மேல ஒருக்கண்ணு’ இவுனுக்கும் அவமேல ஒருக்கண்ணு’


ரெண்டுங்களும் அவுத்த இவுத்த சேந்த வாக்குல திரிய வெவகாரம் முத்தி விசியம் வெளியத் தெரிஞ்சிப்போச்சி.  ரெண்டு வூட்டாளுங்கள இதுங்களச் சித்த வுட்டுப்புடிச்சிருந்தா ஆயிருக்கும்’  ஒரேடியா கிடுக்கிபோட்டு நெருக்கும்படி அதுங்க இதுதாஞ்சாக்குன்னு ஒப்புடிச்சுட்டுருச்சிங்க ஈரோட்டு கொடுமுடிக்கி.
பையமூடு அப்பிடியொண்ணும் வசதி வாய்ப்புள்ளவிங்க இல்ல.  என்னமோ அவிங்க பொழப்பு அன்னாடங்காச்சி’  வண்ணாம்மாத்து ராசாமணியவிக சித்தப்பங்காரனும் சின்னாயாளுந்தான் நின்னு ச்சேரி பையன் பிரியப்படறாம், பொழச்சிட்டுப் போவுடும்னு ப்ளசரு காரு கொண்டாந்து ஏத்தி தாட்டிவுட்டாங்க.  அதுங்க பாட்டுக்கு அதுங்க போயிரிச்சிங்களா, பொறவு பிள்ளய பெத்தவிங்களும், பையனப் பெத்தவிங்களும் விடிய விடிய தேடி விடிஞ்சிம் ஒரு வாரந்தேடனாங்க.

 சோடி கைக்கிச் சிக்கல போயிச் சாட்டாவுதுன்னு கம்முனு வுட்டுட்டு இருந்து கிட்டாங்க.


இந்த எடவெளியில ராசாமணியவிக சின்னாயிக்காரி அன்னக்கிளியவிக அம்மாளுக்கும் தடவழியில என்னம்மோ தகராறு பேச்சி மேல பேச்சி முத்தி, ஒண்ணு மேல ஒண்ணு போட்டு சண்ட வலுத்துக்கிச்சி.


“ஓடுகாலி முண்டயப் பெத்துப்புட்டு உனக்கென்னடி இவ்வளவு ஏத்தமின்னு” ஒருச்சொல்லு இவங்கேக்க, அவச் சொல்லு பொறுக்க மாட்டாம,

“பாழும் பிள்ளயப் பத்திதான இந்தப்பேரு’  லட்சம் உருவா செலவானாலுஞ்சேரி... பிள்ளய கொண்டாந்து தாவுச்சேத்தங்கடா’ எங்கையால அவக்கழுத்ததிருவி எஞ்சிப்புடறன்”னு மாரியம்மா சாமியாட, அப்பறம் பாத்துக்க’ மூல மூலைக்கு ஆளு பறக்குது.
முசுவா தேடி, துப்புக்கண்டு பிள்ளைக் கொண்டாந்து. குட்டப்பட்டியில போட்டு குப்பு குப்புன்னு குப்பி, கையோடக் கையா இன்னொருப் பையனச் சல்லுசாப் பிடிச்சி கட்டி வெச்சிட்டாங்க.  வூட்டவுட்டுப்போயி ஒரு வாரமா திரிஞ்சவிங்களுக்குள்ள எதனாலும் கசமுசா நடக்காமியா இருந்துருக்கும்?


  அதயெதயும் நெனச்சிப்பாக்காம பிருசன அத்தவ புதுப்பொண்ணுங்கறாப்பிடி அத்தப்பிள்ளை கட்டனவனோட பொழைக்கப் பொயிட்டா.  இந்த ராசாமணி அவள நெனச்சி தண்ணி வண்டியாவ ஊரு ஊருக்கு அல்லு எடுத்துக்கிட்டு திரியறான்.
அதப்பத்தி சின்ராசுக்கு பிள்ளைங்கன்னாவே செரியான கருக்கடப்பாலம்.
இந்தக்கூட இருக்கற சொலவாரிங்கதான் எதுத்தூட்டுப்பிள்ள உன்னப் பாக்குதுடா, எதுத்தூட்டுப்பிள்ள உன்னப் பாக்குதுடான்னு சும்மாயிருந்தவனஞ்...... சுக்க வெச்சி ஊதி வுட்டுட்டுடானுங்க இருக்க மாண்டாம இவுனும் ஒருநாளு அந்த பிள்ளய வெறுக்கு வெறுக்குன்னுப் பாக்க பட்டுக்கிச்சி.ஒரு வயசிப் பையனுக்கும் ஒரு வயசிப் பிள்ளைக்கும் ஒருத்தருமேல ஒருத்தருக்கு நெனப்பு எடுத்துக்கிச்சின்னா, அவிக பண்ற ரோலாயத்துக்கு அளவே இல்ல.  மொதல்ல அதுங்களுக்கு காலு தலையில பாவுதா?  எதுக்க வர்£ரது இன்னதுதான்னு ஒரு பிருவு, நெதானந் தெரியிதா?  அதும் இந்தக் காலத்துப் பிள்ளைங்க இருக்குதுங்களே சுத்த மோசம்.  அப்பிடியே தலகீழ நிக்கிதுங்க.



நெவுலடியா ஒரு மறப்புச் சிக்கறதுக்கில்ல ஒரு ஈடு பொரன்டு எந்திரிச்சித்தாம் போவுதுங்க.  ஆரு இருக்கறாங்க?  ஆரு பாக்கறாங்கன்னு துளிக்கூட ஒரு அஞ்சிக்க கெடயாது அந்த வாக்குலதான் இவுனும் அந்த வசந்தாப்பிள்ளய எவுத்திக்காலி கண்டாலுஞ்சோ... சந்து பொந்து, இண்டு இடுக்குன்னு நிக்காம அந்தட்ல ஒரடி தாண்டமாட்டான்.  அதென்ன நாயம் பேசுவாங்களோ மணிக்கணக்கா.  கேனம்புடிச்சவன் வளச்சி, வளச்சி ஒரே நாயம் பேசறாப்ல ஒண்னுக்குமத்த நாயத்த வாயி நோவ பேசுவாங்க.



தெக்க, வடக்க பாத்தமாதர எதுரெதுரு வூடுங்கறதனால என்னிக்கி எந்த வூடு தொறப்பு போட்டுருந்தாலுஞ்சேரி அன்னிக்கி அவுத்தான் ரெண்டுபேத்துக்கும் படுக்க தப்பு தண்டாவுக்கு துணிஞ்சதில்ல, ஆனா முன்னித்தி வௌயாட்டு உண்டு.  இப்பிடி புருசன் பொண்டாட்டி மாதர ஒண்ணும் மண்ணா பொழங்கிக்கிட்டு இருந்ததுங்க கத்திரிக்கா தெரண்டுப்போச்சின்னா பெறவு சந்தைக்கு வந்துத்தானே ஆவுணும்?


 பழம ஊருக்கே தெரிஞ்சிப் போச்சி.  பொரட்டாசி கடக்கெடிம சோரவப் பெருமாக் கோயிலுக்குப் போனதுங்க சாமியக் கும்புட்டுட்டு, மெரமணயச் சுத்திபுட்டு, வந்துருந்தா ஆயிருக்கும்?  பாலிப்பாறப் பொரட்டுல ஒருத்தரு மேல ஒருத்தரு சாஞ்சிக்கிட்டு ரெண்டுப்பேரும் ஒட்டுக்கா குந்தி பேசிக்கிட்டிருந்தத பச்சமுத்து நேருக்கு நேரா பாத்துட்டான்.
சண்ட கிண்ட புடிக்கல, வூட்டுக்கு வந்தவம் பையங்கிட்ட கூப்ட்டுச் சொல்லிப்புட்டான்.

“அடே அந்தப்பிள்ள நம்ம வூட்டுக்கு ஆவாது, அப்பிடி எங்கள மீறி எதனாலும் ஏடா கூடம் நடந்ததுன்னு வையி ங்கோயாளும் நானும் கவுறுப் போட்டுக்குவஞ் சாக்கிரிதி”ன்னு அறுதிகட்டி ஒரே தீருமானமாச் சொல்லிப்புட்டான்.என்னாப் பண்டுவ?  சின்ராசு ஒருவாரம் பத்து நாளா சோறுத் தண்ணி ஒண்ணும் எதயே எடுக்கல.  அப்பிடியே நாளுப்பட்ட நோவுக்காரனாட்டம் கெடயில வுழுந்துட்டான்.  இன்னதுதான் அவம்புத்தியில ஓடுதுன்னு இல்ல பலமாதிரியா ரோசன.


“இந்தாளு எதுக்கு அந்தப்பிள்ளய வேண்டாங்கறான்?


அவளுக்கென்னா கொறச்சலு?  கோணயா?  மானயா?  இல்ல ஒட்ட ஒடுசலாச்செவ ச்செவன்னு தக்கோளி பழமாட்டம்பள்ள’  கொணம் மனமும் சும்மாச் சொல்றதுக்கில்ல.  பச்சத்தங்கம் அதும் போவ பிள்ள என்னா அன்னி அசலா?  தூரத் தொலயா?
எடுத்துப்போட்டங் கழுத்த முறிச்சன்னு ஒரு மனுசன் இப்பிடி அரமாலும் ஒருப்பிள்ளய வேண்டாம்னா அதுக்குவொரு காரணம் வேணுமில்ல.  இவனா வெச்சிப் பொழைக்கறான்?  இன்னும் பத்து வருசமோ பதனஞ்சி வருசமோ ஓல வாங்கிட்டு மேலப்போயிருவான்.  எசவில்லாத தாவுல மாட்டிக்கிட்டு பொறனாட்டுக்கு நானுத்தான நமுக்கப்படனு”மின்னு பொடம் பொடன்னு சடஞ்சிக்கிட்டிருந்தப் பையன். முந்தா நேத்து
“ஏண்டா அப்பம்பையா அந்தப்பிள்ளய வேண்டாங்கற”ன்னு ச்சும்மா புடி புடின்னு எதுக்குப் புடிச்சிக்கும்படி பச்சமுத்து அந்தண்ட இந்தண்ட இண்ணும் திமிர முடியல.




பையங்கேக்ற கேள்விக்கி வருலச் சொல்லணுமா?  வாண்டாமா? செத்து பொணமாட்டம் வெரைச்சிப்போயி ஒக்காந்தியிருந்தவன் பாக்கற முட்டும் பாத்துட்டு படக்குன்னு குட்ட ஒடச்சாம் பாத்துக்க சின்ராசுக்கு அண்ட சராச்சரமெல்லம் காலடியில புடுங்குது.
அவனொண்ணுஞ் சொல்லல,

“இப்படித்தாண்ட மவனே உன்னையாட்டஞ் சிறுவயசுல அவங்கம்மாக்காரியிண்ட நாங்கொஞ்ச நாளு தடுமாறிக்கிட்டுருந்தண்டா அப்பா’  அவ ஒனக்கு தங்கச்சி மொற வேணுன்டா பால பாக்காட்டிப் போவுது சட்டிய பார்ராச் சீத்த சாமி”யின்னான்.



பையனுக்கு காலுக்கையெல்லாம் வெலவெலன்னு போயிரிச்சி வந்து கட்ட மேல வுழுந்த வந்தாம்பா.  இன்னையோட ரெண்டு நாளு ஆவுது மேல எந்திரிக்கவேயில்ல.  நெனச்சி நெனச்சி மருவறான் மருவறான் அப்பிடி மருவறாந் தன்னப்பா பீத்தநாயி அதச்சொல்லாம இருந்துருந்தா ஆயிருக்கும் ஹூம் வட்டி நம்ம சோத்தப்போட்டுட்டு அதுல துளி நறவல வெச்சாப்ல.  ச்சை’ இந்தப் பையனுக்கு மனசே ஒம்பல.


இப்பேருபட்ட அப்பனுக்கு மவனா பொறந்துட்டு இன்னமேட்டும் உசுரோடத் திரியதுல அர்த்தமில்ல”ன்னு படபடன்னு எந்திரிச்சாம்பா.
எந்திரிச்சப்பையம் போயி எரவானத்துல சொருவி வெச்சிருந்த பயத்த மருந்தப் பொட்னத்த எடுத்துப்பிரிச்சி தண்ணி வாத்துக்கற டப்பாவுலக் கொட்டி கொடி கொடின்னுன்னு டப்பா வழிய கரைச்சி தவுக்னு வாயில ஊத்த அண்ணாந்தாம்ப்பா அந்நேரம் எங்கியோ இந்த விருப்புக்கு மல்லலாமின்னு பொக்காலிக்கி வந்த பஞ்சவர்ணங் கண்ல இந்த சமாச்சாரம் பட வெடுக்குனு கையத் தட்டிவுட்டவ


 “ஐயோ மவனே இதென்ன வேல”  ஆர்ரா உனுக்கு இந்தப்பித்திய படிச்சிக் குடுத்தது?”ன்னு அவன மடியில போட்டுக்கிட்டு கண்ணீருவுட்டா “அம்மாப்பிள்ள வசந்தாள நாங்கண்ணாலம் பண்டிக்கிலைன்னாக் கூட தொலையிது’  அதப்பத்தி காரியமில்ல’  இந்த அப்பம்பையன நெனச்சிட்டா தாம்பிள்ள எனக்கு சாவலாமின்னே இருக்குது” ன்னு

 சின்ராசு பொலம்ப,

“அவங்கெடக்கறாண்டா ஆகாவழி’  அஞ்சாறு மொறக் கண்டவனா?  அவனுக்கென்னா தெரியும்?  மயிராத் தெரியும் “நாஞ்சொல்றன் நீக்கோளு’  அந்தப்பிள்ள உனுக்கு கொளுத்த மொற இழுத்து கொண்டி தாலிக்கட்றா”ன்னு பையன வழிக்கூட்டி அனுப்பி வெச்சா.

கருத்துகள் இல்லை: