ஞாயிறு, 26 அக்டோபர், 2014

நாள்கிழமை  நல்லது கெட்டது  நோம்பி  நொடி
ஊரு சேதி  போக்குவரத்து  பயணம்
ஒருத்தி இருக்கிறாளேயென்ற ஓணத்தி  துளியுங் கிடையாது
தாரைவாத்த  கைப்பேசிக்கு  எப்படி மனமுடைந்து  போகிறோம்
செங்கோட்டய்யனென்பது பேருக்குத்தான் சொல்லாமல்
கொள்ளாமல்  பாதி ஆயுள்  பறந்தோடிவிட்டது    
கூடிகலவி  புரிந்த பொழுதுகளில்
அப்படியொன்றும்  மகத்துவமில்லை
ஆண்டுக்குள்ளொரு பேறு அதுவும்  சமைந்துவிட்டது
பணிமூப்பு  திறன்   நயந்து  வாழ்க்கை  துணைநலம்
அபிவிருத்தி  துறையில்  கூடுதல்  பொறுப்பு  வேறு
முதுகுக்கு  சோப்பு  போட கால்வழியும் உள்ளாடையை
கசக்கிப்பிழிய  வேட்டி   சட்டை  வெளுத்துகொடுக்க
கடன்வாங்கி  உடன் வாங்கி  பச்சை  வைக்க
பெத்து பிறப்பு -அண்ணன்  தம்பி -மாமன்  மைத்துனன்
வந்தால் போனால்  வடித்துக்கொட்ட
வாடிக்கையாளர்  சேவைக்கட்டணம்  சகாயம்தான்
தீவாளி தள்ளுபடி  சீலை  ரெண்டு
கிள்ளுச்சரம்  முழம்  பத்து  உருவா
அவளன்றி  ஓர்  அணுவும்  அசையாது
ஏர்ப் பிடித்தவன்  என் செய்வான்

பானை  பிடித்தவள்  பாக்கியசாலி

வியாழன், 23 அக்டோபர், 2014

கல்யாணத்தில் மணமகன் இழவு வீட்டில் பிணம்
பார்த்திருக்க தின்று முழித்திருக்க கை துடைக்கும்
வெள்ளித்திரை பிரும்மாக்கள் ஏரி வேலைக்கு
போனால் என்ன - சோத்துக்கு வழியில்லை
கலைத் தாகமென்றுச் சும்மா புலம்பித் திரிவது
ஒட்டுத்திண்ணை வாசிகள் மேய்த்தால் மதனியைமேய்ப்பார்கள்
இல்லையென்றால் பரதேசம் போவார்கள்
காடு வீடிழந்த குடியானவன் ரோட்டுக்கடையில்
இவன் திங்க பிட்டுச்சுட்டு விற்கிறான்
தொட்டுக்கொள்ள எண்ணையில் சுட்ட கறிகோழியும்
கையில்  பணமிருக்கிறதாவென்றால்
பணமிருந்த  கையிருக்கிறதென்பது
மண்டையிலிருக்கும் மயிரும் சொந்தமில்லை
எடுப்புச்சாப்பாட்டுக்கு எகத்தாளம் கொஞ்சமல்ல மிக அதிகம்
இளக்காரம் கண்டு பூலுக்கு பூண் கட்டச்சொல்வது
ஈரைப்பேன் ஆக்குவது பேனை பெருமாளாக்குவது
எந்நேரமும் அடுத்தவன் வலப்பையை சுரண்டுகிறது
தன் காலில் பூ போட்டுக்கொள்வது
வராத நாயை கயிறு போட்டு இழுப்பது
கைகொடுத்துக்கொண்டே  கடையாணி  பிடுங்குவது
ஈரத்துணி போட்டு கழுத்தை அறுப்பது
அண்டப்புளுகு ஆகாசப்புளுகு பச்சைச்சிரிப்பு நீலிக்கண்ணீர்
அவனியெங்கும் மணக்குது கனவுபட்டறை நாத்தம்
கதவச்சாத்துங்க ஊசக்காத்தடிக்கிது உசுருக்கே கேடு


ஞாயிறு, 19 அக்டோபர், 2014

மோரளந்து வாத்ததுக்கு முந்தளந்து போட்ட கத - தவசிக்கருப்புசாமி

நம்ப வவானிக்கி தெக்க அந்தியூரு அத்தானிக்கிட்ட ஆத்துக்கு அந்தல்ல மேவானி, இந்தல்ல கீவானி. மேவானி ஊருக்கவுண்டனுக்கு ஒரு மவன். தவமா தவமிருந்து வேண்டாத தெய்வத்த வேண்டி வெக்காத கோயிலுக்கு வேண்டுதல வெச்சி பொறந்தபையன். என்னமோச் சொல்லுவாங்களே ஒருத்திக்கி ஒரு மவனாம் அவம் பருத்திக்காட்ல புளுத்திக்கிட்டு செத்தானங்கறாப்பிடி ஒண்ணும் உருப்படியில்ல. பரமதொண்டு.


எந்நேரம் பாத்தாலும் குடி கூத்தியா சீட்டாட்டம். அப்பனாயா ரெண்டுபேரும் பையனுக்கு சொல்லாதப் பித்தியில்ல. அவந்திருந்தி நல்ல வழிக்கி போற மாதர இல்ல. கேனந்தெனிஞ்சா கண்ணாலம் பண்டலாம் கண்ணாலம் பண்டனா கேனந்தெளியிமின்னு மவங்காரனுக்கு எங்கியாச்சும் ஒருப்பிள்ளய பாத்து கட்டிவெச்சா அதும்பொறவு அவனாச்சி அவங்குடம்பங் குட்டியாச்சின்னு திருந்தி வருவானாப் பாக்குலாம்முன்னு கட்டுச் சோத்தக் கட்டிக்கிட்டு ஊரு ஊராப் பொண்ணு தேடனாங்க, தேடனாங்க அப்பிடித் தேடனாங்க.


எங்கியுஞ்சிக்கல. சிவனேன்னு வந்து இக்கரைக்கு பரசத்தாட்ட அக்கரையில குந்தியிருந்தாங்க. அக்கரையில இவிங்களாட்டமே ஒரு கவுண்டமூட்டாரு தம்பட மவளுக்கு மாப்பளப் பாக்க இக்கரைக்கி வரலாமின்னு பரசத்தாட்ட குந்தியிருக்க, ஒருத்தரோட ஒருத்த ஆர எவடம் என்னாச் சமாச்சாரமின்னு பேச்சி குடுக்க, ஒண்ணோட ஒண்ணு கலந்துக்கிட்டாங்க. பையனுக்கு பொண்ணு குடுப்பீங்களான்னு இவிக்க கேக்க, பொண்ணு இருக்குது கண்ணாலம் மூச்சிக்கிறீங்களான்னு அவிங்க கேக்க ரெண்டூட்டாரும் கொள்ளலாங் கொடுக்கலாமுன்னு ஒரு மனசா தீருமானம் பண்டிக்கிட்டாங்க.

பொண்ணப் பெத்தவிக பிள்ளய ஒருச்சித்ரமா எழுதி மாப்பிள்ளயப் பெத்தவிங்கக்கிட்ட குடுக்க, இவிங்க வாங்கிட்டு மவங்கிட்ட காட்டலாமுன்னு கொண்டாந்தா மவங்காரன் வூட்ல இல்ல. ஆறேழு மாசமாட்டம் அறுதியா வூட்டுப்பக்கம் வாரதில்ல, கூத்தியா வூட்ல சூதாடிக்கிட்டிருந்தான். இவிங்க வருவான் வருவான்னு பாத்துக்கிட்டுருந்து பொறவு ஆளுக்காரங்கிட்ட கொண்டி பொண்ணுப் புள்ள மூஞ்சியவாச்சுங் காட்டிப்புட்டு வாடான்னு குடுத்துட்டாங்க.


இந்தத் திருவாத்தாம்போயி கவுண்டங்கூத்தியாருக்கிட்ட அதக் குடுத்துட்டு வந்துட்டான்.

 சித்தரத்தப் பாத்ததுதாஞ் சாக்கு அந்த தேவிடியாளுக்கு அங்கம் பதைக்கிது அடிவவுறு காந்துது.

சூரிய சந்தரனாட்டம் இத்தன அழவா இருக்கறாளே பொம்பளய அந்த மாப்ள கண்ல கண்டுட்டான்னா நம்பளத் திலும்பிப் பாப்பானா?ன்னு மனசுல கூரயத்த வெச்சுக்கிட்டு அடுப்புக்கரிய எடுத்து சித்ரம் முச்சூடுங்கோடு இழுத்து கண்ணையும் இழுக்கி வுட்டு,


 ‘இந்தா ங்கொப்பனும் ங்கொம்மாளும் எந்த ரட்சணத்துல உனக்கு பொண்ணு பாத்துக்கிறாங்க பாரு’ன்னு


 கொண்டி மாப்ளகிட்ட குடுத்தா, அந்த தெல்லவாரி நாயி அத என்னன்னுங் கண்டுக்கல. வாங்கி பொச்சிக்கடியில வெச்சிட்டு மும்மரமா சூதாடறாம்பா. அங்க, கவுண்டனும் கவுண்டம்பொண்டாட்டியும் மவங் கண்ணாலத்துக்கு முகூர்த்தக்காலு நட்டுப்புட்டாங்க. பந்தலன்னைக்கி கூட மவராசன் வூட்டுக்கு வரல. பாத்துட்டு அப்பனாத்த ரெண்டு பேரும் தாசியிண்ட போயி

‘எங்கவூட்ல வௌக்கு பொருத்தி வையிடி ஆயா மவராசி. நாளைக்கி ஒரு பொழுது என்ற மவன வூட்டுக்குத் தாட்டிவுடு! அவுனுக்கும் ஒரு கண்ணாலங்கார்த்தி முடியட்டும் பொறவு அவ எங்க கெடந்தாலும் நாங்கேக்கல’ன்னு


 கெஞ்சி கொறமாட அந்த தாசி, காலுப்பெருவெரலப் பாத்துக்கிட்டே பொண்டாட்டிக்கி தாலி கட்டிப்புட்டு கட்ன அடுத்த சனம் இங்கயிருக்கனுமின்னு கையடிச்சு சத்தியம் வாங்கிக்கிட்டு மாப்ளய தாட்டிவுட்டா.

கவுண்ட மவன் வந்தான் கண்ணாலமும் நடந்திச்சி. பெருவிரலப் பாத்துக்கிட்டு பொண்ணுப் பிள்ளைக்கி தாலி கட்டனான். கட்ன மறுச்சனம் குதுர வண்டியேறி கூத்தியா வூட்டுக்குத் திலும்பிக்கிட்டான். இதென்றா கந்தரகோலமின்னு புதுப்பொண்ணுக்கு ஒன்னும் நெட்டுசிக்கல.

 மறுதாலிக்கட்ல, மருமூச்சும் திலம்பல. போனவம் போனவனே. இன்னிக்கி வருவாம் மாப்ள நாளைக்கி வருவாம் மாப்ளன்னு இவ இங்க இருக்க அங்க புருசங்காரன் கொட்டு மொழக்கு போடறாந் தெனம். எத்தன நாளைக்கி பொறுப்பா ஒரு வயசிப்பிள்ள?

ஓகோ இதொன்னும் ரைனு வராதுன்னு தெரிஞ்சிக்கிட்டு கவுண்டம் மருமவ மாமியா மாமனாரிண்ட வந்து,

ஏம்மாமா ஒங்க மவங்காரம் பண்டறது தேவிலியா-ன்னு கேக்க,

 ஆயா கண்ணாலம் பண்டனதோட எங்க கடம முடிஞ்சிபோச்சி. குடி, சூதாட்டமின்னு ஒம்புருசங் கூத்தியா கொலாயிக்கி பிரமனையா இருக்கறான். அவன மீட்டு, வூட்டுக்கு கொண்டாருவியோ கொண்டாறமாட்டியோ எங்களுக்கு தெரியாது

-ன்னு நழுவிக்கிட்டாங்க.

அப்படியா சேதின்னு அத காதல வாங்கி வவுத்துலப் போட்டுக்கிட்டு கவுண்டம் மருமவ அப்பமூட்ல போயி நின்னு ஒரு பாலு மாட்டப் புடிச்சாந்தா.

அத மேச்சி பாங்கு பத்ரம் பண்டி பாலுபீச்சி மோருச்சிலுப்பி ஒருக்கூடயில வெச்சிக்கிட்டு அந்த தாசியிருக்கற வீதிய வுட்டுட்டு அந்தாண்ட எல்லா வீதியிலியுங் கொண்டி மோரு வித்துக்கிட்டு வந்தா.

இவ அந்த தெருவுக்குள்ள மோரு எடுத்துக்கிட்டுப் போயிட்டாப் போதும் கவுண்டமவங்கூட சூதாடறப் பசங்க எல்லாம் அப்பிடி அப்பிடியே ஆட்டத்த வுட்டுட்டு திப்புறு திப்புறுன்னு எந்திரிச்சு ஓடறதாம் மோருக்குடிக்க. இதென்றா கங்காச்சியா இருக்குது காணாத அதிசியமா இந்த மோரு? அதக்குடிக்கவா இந்த மந்தைங்க இப்பிடி ஓடுது? இப்பேருப்பட்ட மோரு ஊத்தறவ எப்பேருப்பட்டவளா இருப்பா. நாம்பளுந்தாம் பாக்கலாஞ் சித்தன்னு கவுண்ட மவனும் மோருக் குடிக்கப் போனான் வழுது தெருவுக்கு.


அட சாமி அங்கப் போயிப் பொம்பளயப் பாத்ததுதாஞ் சாக்கு அவனுக்கு ஒடம்பே பூராஞ் சிலுத்துப் போச்சாம்.

 அடோக் கண்டாரவோலியூட்டுப் பிள்ளய, பொம்பள பாரா ஒரு ரட்சணத்த பொம்மக் கட்டயாட்டமுன்னு இவம் பௌந்த வாய மூடவேயில்ல. ஓவ் இவந்தான் நம்ப பிருசன்னு அவக்கண்டுக்கிட்டா.

குட்டுவுடாம கம்முன அவபாட்டுக்கு அவ இருக்க,

‘இந்தா  பொம்பள எனக்குந்தா ஒருச்சொம்பு மோரு வாரு’-ன்னு

இவங்கேக்க, அவளிருந்துக்கிட்டு


 ‘கேட்டதும் ஊத்திப்புட்டு போவ இதொன்னும் சின்ன வெல மோருல்ல. மூணுச்சொம்பு முத்தளந்தா ஒரு சொம்பு மோரு வாப்பன். ஒரு சொம்பு மோருக்கு ஒரு பொட்டு சிந்த மோருக்கூட வாக்க மாண்டே’-ன்னா அவ.

இதென்றா வலியனா மோருக்கேட்டதுக்கு இந்தப் பொம்பள நம்பள பல்லுப்புடிச்சி பதம்பாக்கறாளோ?-ன்னு

கவுண்டன் மவன் சின்னக் கவுண்டனுக்கு கருக்கட வுழுந்துட்டுது. இருந்தாலும் அவளிண்ட பேச்சி வெச்சிக்க பிரியப்பட்டு ஓடி அவங்கொண்டாந்து தாசியூட்ல கொட்னானே மாளாத சொத்து. அதல தாசிய காங்காம மூணுச்சொம்பு முத்த அள்ளியெடுத்தாந்து குடுத்துட்டு மோருக் குடிச்சான்.


 பாக்க / புடிக்க, பேச / பொழங்க அன்னாடம் மோருக்குடிக்கன்னு சின்ன கவுண்டனுக்கு இதோ தொழுவாடாப் போயிரிச்சி. இருந்தாலும் பொம்பளய வெரலு நவத்துலக்கூட தீண்ட முடியல. ஒரு மாசம் ரெண்டு மாசம்னு பொறுத்தான். இவுனுக்குன்னா நாளுக்கு நாளு பொழுதுக்குப் பொழுது பாக்கப் பாக்க பொண்டாட்டிமேலே ச்சும்மா வெறிக்கண்டுப் போச்சி.

 அவ கண்டுங்காணமயே இருக்க ஒருநாளிங்கறப்பெட்டுக்கு விசுக்குன்னு கையப்புடிச்சி இழுத்தவன்,

‘உசுரக்கூட வுட்டர்றேன் ஆயா ஒரே ஒருத்தரம்னு ....ன்னுப்புடறஞ்சித்த என்னாச் சொல்றே’-ன்னு கேக்க

ஆர்றாளு இந்த பண்ணாட்டெல்லாம் என்னிண்டச் செல்லுபடி ஆவாது. நானு அப்பேருகந்த பொம்பளையுமில்ல. ங்கெப்பன், ங்கெம்மா காதுல வுழுந்தா ஆரு என்னான்னு பாக்கா மாண்டாங்க கைய கால முறிச்சி சூத்துல சொருவிப்புடுவாங்க மாப்ள, அங்கயிங்க... அப்டிடா இப்பிடிடான்னும் சும்மா மெரட்ட ........

இவங்காலுல வுழுவாத கொடுமையா கெஞ்ச அவ மனசெறங்கி, கெடந்து சாட்டாவுது நாயாட்டங் கெஞ்சற, உன்ற ஆசப்பெரகாரம் நடக்கட்டும். ஆனா ஒரு விண்ணப்பம் பத்துப்பேரு அறிய தாலிக்கட்டி நீரு வெக்கிலின்னா போச்சாது. ஆத்தங்கரயில பச்சப் பந்தப்போட்டு அரச எல மேல மஞ்சப்புள்ளாருப் புடிச்சிவெச்சி மோதரமாத்தி கண்ணாலம் பண்டிக்கன்னா. இவனுஞ் சேரியின்னு பலான நாளு ஆத்து ஓரத்துக்கு நீ வந்துருன்னுச் சொன்னான்.

இவளும் வந்தா. ஊருக்குத் தெரியாம தாசிக்குத் தெரியாம அவுத்திகாலியே மோதரம் மாத்திக்கிட்டாங்க. அவுத்தயே சித்த நேரம் ஒண்ணாயிருந்தாங்க. அன்னயோடச் சேரி கவுண்டம் மருமவ தாசியிருக்கற வீதிக்ககி மோரு விக்கவேப் போவல. அந்த வாசத்த மறந்துட்டா.


 புருசங் கண்ணுக்கே சிக்கல. அவ பாட்டு அவ அங்கருக்க சின்ன கவுண்டனுக்கு பொம்பள நெனப்பெடுத்துக்கிச்சி. தெனமும் தெருவே ஒரு கோடியா தொழாவறது அவிங்க ரெண்டு பேரும் ன்னாங்களே அங்க போயிச்சித்த குந்தறது. இப்பிடியே ஆளு வவுத்துக்குக் கூட திங்காம பொம்பள பிரியம் எச்சாவி ஒரே ஆறு மாசத்துல சட்டங் கழண்டு சரீகலங்குண்ணிப் போயிட்டான்.

இவங்கத இப்பிடியிருக்க தாசிக் கண்டுக்கிட்டா. ஓவ் நம்ம கொலாய நக்கிக்கிட்டு கெடந்த மாப்ள இப்ப என்றான்னா எங்க கெடக்கற நாயேன்னுங் கண்டுக்கறதில்ல ஏறெடுத்தும் பாக்கறதில்ல உம்ம கிம்ம தெரிஞ்சி பொண்டாட்டியின்ட போ வர பொழக்காட்டம் போடறானோ என்னா கருமாந்தரமோன்னு ஒரு அறிகொழப்பத்துல கவுண்டமூட்டுக்கு ஒரு தந்தாள நேமிச்சி நோட்டம் பாத்துட்டு வரச்சொன்னா.


 போயிட்டு வந்து இப்பிடித்தான் இப்பிடித்தான் கவுண்டம் மருமவ வாயும் வவுறுமா இருந்தது, அன்னிக்கி பையம் பெத்து புள்ளயாரு கோயிலுக்கு பேரு வெக்க வந்ததுன்னு பூராம் புட்டு புட்டு சொல்லிப்புட்டா.

தாசிக்கிவொண்ணும் கையும் ஓடல காலும் ஓடல. இத இப்பிடியே வுட்டுட்டா கத வேற வேறயா போயிரும் பொறவு மொதலுக்கே மோசம் வந்திருமின்னு போன வெசயில சூதாடிக்கிட்டிருந்த மாப்ளகிட்ட

ஒல்காமாலையா    ஒல்காமாலையா இங்கென்றா சூதாடிக்கிட்டு குந்தியிருக்கற? அங்க உம் பொண்டாட்டி எவங்கிட்டப் படுத்தாளோ ஆருக்கு முந்தி விரிச்சாளோ? புள்ளப் பெத்து எடுத்துக்கிட்டு புள்ளயாரு கோயிலுக்கு பெரு வெய்க்க எடுத்துக்கிட்டு போறாளாமடா? போயி தல வேற முண்டம் வேறயா வெட்டி சாய்க்காம இன்னும் ஏண்டா நீயில்லாம் ஒரு ஆம்பளையின்னு உசுரோட குந்தி இருக்கற?ன்னுச் சும்மா திந்நீரு கொழிச்சி வுடறா.


இவுனுக்கு சுருக்குனு கோவம் வந்துட்டது. தாசிவூடே கதின்னு நாம் இவுத்தக் குந்தியிருக்க பொண்டாட்டி எப்பிடி செனையாவியிருப்பா? ஆம்பள ஆயிரம் பேத்துக்கிட்ட போவான் வருவான் பொம்பளைக்கில்ல அடக்கச் சொடக்கம் வேணும். அதோட மோருக்காரி மேலிருந்த கோவமெல்லாம் பொண்டாட்டி மேல திலும்பிக்கும்பிடி, கொண்டாடி கொடுவாள அவள கொடல உருவி மால போட்டுகிட்டு வாரமின்னு புள்ளயாருக்கோயிலுக்கு ஓடனாஞ் சின்னகவுண்டன்.


தாசியாட்டமே இந்த கவுண்டம் பொண்டாட்டியும் தாசியூட்டுக்கு ஒரு தந்தாளு வெச்சிருந்தா ஔவு பாக்க. அவ தந்தாளு புருசங்காரன் பொண்டு, புள்ளய கொல்ல வர்ர பழமையச் சொல்ல புள்ளாருக்கோயில்ல புருசன் வரங்காட்டியும் மவனுக்கு பேரு வெச்சி ஒரே மின்னெட்டுல வூட்டுக்கு வந்து உள்தாழு போட்டுக்கிட்டா.

நடுவூட்டு உத்தரத்துல தூரி கட்டி பையன அதல போட்டு, அவ பொறந்து வளந்தது, புருசங்கட்டனது, அவந்தாசிவூட்டுக்குப் போனது, இவ மோரு விக்கப் போனது, பையம் பொறந்தது, அப்பங்காரங் கொல பண்ட வந்துருக்கறது பூர்த்திய ஒருப் பாட்டா பாடி கல்லு கரைய மண்ணுருவ அழவுறா.

 இந்த நாயத்த கதவுக்கு வெளியே தாவாரத்துல நின்னுக் கேட்டுக்கிட்டிருந்த சின்னக்கவுண்டனுக்கு நெசமும் பொய்யிந் தெரிய ஆஞ்சியோஞ்சிப் பாத்துட்டு போயி தாசிய வெட்டிச் சாச்சிபுட்டு வந்து பொண்டாட்டி புள்ளயோட நல்ல விதமாப் பொழச்சானாம்.