ஞாயிறு, 13 நவம்பர், 2011

எங்கும் நிறைந்த பரம்பொருள் நானே!

கூத்திசை மேதை- செல்லப்பன் அவர்களை குறித்த வாய்மொழி வாழ்வியல் பதிவு.செல்லப்பன்:ஒப்பாரும் மிக்காருமில்லாத கூத்திசை மேதை. பாட்டனார் நரசனிடமும் தந்தையார் ராமசாமியிடமும் அவர் பயின்று பெற்ற நுண்ணிய மரபுக்கலை ஆதாரபடிவம் மாறாது கருத்துருவம் சேதமடையாமல் இன்று வரை நாளுக்குநாள் கூடிய செறிவுடனும் கூடுதல் பரிமாணங்களுடனும் கால் பாவியிருக்கிறது. ஆதி, அடவு, திருப்படை,ரூபகம், ஜம்பை, நொண்டிச்சிந்து,கும்மிதாளம் என்ற தாள வரிசைகளுக்கு நான்கு காலங்கள் வீதம் பகுத்தவர் வாசிக்கையில் மிளிரும் நூதனங்கள் வார்த்தைகளில் அடங்காது. உலக பிரபஞ்சத்தில் மாசுமருவற்றதும், கலப்படமற்றதும், கேட்கின்ற பேரை மனிதனாக பண்படுத்தும் இசையாகப்பட்டது கூத்தில் இடைவெளியை இட்டு நிரப்புவதற்கும், ஒட்டு போடுவதற்கும், கதை கட்டங்களை நிகழ்வுக்கோர்வையை, தளர்த்தி முறுக்குவதற்கும், வேடதாரிகள் பேசுகின்ற வசனங்களை அடிக்கோடிட்டு பார்வையாளர் இதயத்தில் அழுந்த பதிப்பதற்குமானதன்று! அது அம்பலக்கலையின் உயிர்த்தளம் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கும் செல்லப்பனின் வாழ்பானுபங்களை வாசகர்களுக்கான பகிர்வாக இங்கு வைக்கிறோம்.


. எங்கப்பன பெத்த கெழவம்பேரு நரசன். அம்மாள பெத்த கெழவம்பேரு சென்றாயன். சம்பந்தியுஞ் சம்பந்தியும் கூத்தாடியூட்டாருங்கற வகையில ரெண்டூட்டாரும் ஒட்டா செட்டுக்கட்டி வவுநாளா பொம்மக்கூத்து நடத்தியிருக்கறாங்க. அம்மாள கட்டறதுக்கு முந்தியே அப்பனுக்கு ஒரு பொண்டாட்டி நம்ப கொளத்தூரு குரும்பனூருல. அந்தம்மா இவுருக்கிட்ட இருந்து வாழ்க்கச் செய்யல, அம்மாள கண்ணாலம் மூச்ச கையோட எங்கப்பா சின்னாயா காவேரியுங் கண்ணாலம் மூச்சிக்கிட்டாரு. அம்மாவூட்டாருக்கும் அப்பன பெத்த தாத்தனுக்கும் வரவு செலவுல போக்குவரத்துல மனஸ்தாபமாகி மவனன மாமனாரு மாமியாளோட வுட்டுட்டு தாத்தனும் பாட்டியும் பிரிஞ்சி, வேறயா ஒல வெச்சிக்கிட்டாங்க. போனவிங்க சும்மா போவல! பொம்ம பொட்டி, மத்தாளம், டெண்டு துணி, ஒருக்கோடியா சுத்தமா தொடச்சி எடுத்துக்கிட்டுப்போவ, அப்பனுக்கு சினேகதக்காரு ஓராளு உருவாய குடுத்து ஒத்தாச பண்டி பொம்மையாட்டி பொழைக்க தடங்காமிச்சாராம். அப்ப இந்த கெழநாடு ஆத்தூரு கள்ளக்குறிச்சிய கட்டி தோலுப்பொம்ம ஆட்டிக்கிட்டு திரிஞ்சவங்க வாழப்பாடி புத்தரகவுண்டம்பாளையம் வந்து சேந்தப்ப எங்கம்மாளுக்கு நானு வவுத்தலிருந்தனாம்.


பத்தாம் மாசம் பேறு மாசம்! அந்த கார வருசத்து பஞ்சத்துல மனசருக்கு திங்க கத்தாழ கெழங்கு கூட ஆப்படலையாம். வாயும் வவுறுமா இருக்கப்பட்ட பொம்பளய நீசுத்தண்ணிக்கி கெதியில்லாத தாவுல வெச்சிருந்து என்னாப் பண்டறருன்னு ஓசிச்சா ஒரு வழியுந் தெம்படல. இந்த பரிதாபத்த பாக்க முடியாத அந்தூரு வைத்தியரு ஒருத்தரு "மொட்டையா! மொட்டையா! பஞ்சத்துல அடிப்பட்டு சாவறதுக்கு ஓடி பொழைச்சிக்கலாம் வாடா"ன்னு ராமக்கல்லு மோகனூருல அந்தாளோட பொறந்தவள கட்டிக் குடுத்திருக்குது. கரவெளிதேசம் தண்ணியுள்ள தாவு, கூத்தாட்டனாலும் சேரி எதோ கூலியோ நாழியோ செஞ்சி பொழைச்சாலும் சேரின்னு கூட்டிப்போயி வுட்டாராம்.


அங்க போயி டெண்டக்கட்டி பொம்மக்கூத்து ஆட்டனா ஒருச்சனம் பாக்க வல்லியாம். அதோட அந்தூருல நாளைக்கி மூணு கொல வுழுவுமாம், வாய்க்கால்ல அடிச்சிக்கிட்டு வர்ர பொணத்துக்கு அளவே இல்லியாம். என்றாயிது வடச்சட்டிக்கி பயந்துக்கிட்டு அடுப்புல வுழுந்துட்டமே! எப்பிடிறா பொழைக்கற வழின்னு எங்கப்பன் அழுத கண்ணுஞ் சிந்தனையுமாயிருக்க அன்ன ராவே எங்கம்மாளுக்கு வலி புடிச்சிட்டுதாம். ரெண்டு ராத்திரி ஒரு பகலுமாயும் நானுப் பொறக்கவேயில்ல. அப்பன் பாத்தூட்டு மோகனூருக்கு அந்தாட்டவொரு அலங்காடு, ஆளு நடமாட்டம் அறுதி. ஒலக்க சத்தம், ஒரளு சத்தங்கூட கேக்க கூடாதுன்னுவொரு கட்டள, அவுத்த இருக்கப்பட்ட செல்லியம்மங்கோயிலு போனதும் அந்தம்மா காலடியில வுழுந்து திக்கத்துப் போயிட்டந் தாயே! நீதான் தொண!. புள்ள பொறந்துக்கிச்சி, தாயி வேற புள்ள வேறயா நல்லபடியா இருக்கறாங்கன்னு இந்து காதுல கேட்டா இந்த எடத்தவுட்டு எந்திரிப்பன்! இல்ல உன்ற காலடியில உசுர வுட்டுர்ரேன்னு நீண்டு படுத்துக்கிட்டாராம்.


விடியறதுக்குள்ள நாம் பொறந்த தகோல அந்த வைத்தியரு போயிச் சொல்ல சந்தோசமா எழுந்து தாயே உம்பேர பையனுக்கு வெக்கறேன்! உனக்கே மும்முடி குடுக்கறன்னு வேண்டுத்தல வெச்சிட்டு அதே பிரகாரம் எனக்கு செல்லப்பன்னு பேரு வெச்சாராம். இப்பிடி பஞ்சத்துல நானுப் பொறந்திருக்க, பத்து வருசங் கழிஞ்சது. எடவெளியில முள்ளுவாடி பள்ளியோடத்துல ரெண்டு வருசம் படிச்சன். அதயும் பூர்த்தியா படிக்கல. ஊரு ஊரா தேசாந்தரம் போறவிங்களுக்கு படிப்பு ஒரு கேடா? மொள்ள பஞ்சுபட்டி பாளையம் போயிச் சேந்தம். எங்கம்மாளுக்கு தாயாரு வாத்து பெரிய ரோதன. ஆளு கெடயில படுத்தாச்சி. பாட்டியாள காவுலுக்குப் போட்டுட்டு பாட்டனும் நானும், அப்பனும் சின்னாயாளும் மாரண்டள்ளி சத்தரத்திண்ட பொம்ம கூத்து ஆட்ட வந்தம்.


மக்யா நாத்தெல்லாம், எனக்கு, சின்னாயாளுக்கு, எங்க தங்கச்சி காளியம்மாளுக்கு குடும்பம் முச்சூடும் அம்ம வாத்துக்கிச்சி. மாத்துக்கட்டுல பிள்ளைங்களுக்கு வைத்தியம் பாத்து எங்க தாத்தனுக்கு கண்ணாமுழி பிதுங்கிப்போச்சி. இப்பிடியிருக்கப்பட்ட சந்தர்ப்பத்துல எங்கூட்டுக்காரியும் (ஜெயா) அவிங்கம்மா, அப்பன், பொறந்தவமாரோட மாரண்டள்ளி சத்தரத்துக்கு வந்து சேந்தாங்க. பூர்வீகத்துல எங்கப்பனுக்கு அவிங்க மாமம் மச்சனன் மொற. இவிங்கப்பன் பொம்மக்கூத்துல கற கண்ட வித்துவான், பெருங்கொண்ட ஆசாமி. அந்தாளும் எங்கப்பனும் சேந்துக்கிட்டு சாராயங் குடிக்கப்போன தாவுல செத்த குறம்பையாட்டுக்கறி ஆரோ கூறுகட்டி விக்க, பாட்லோட ரெண்டு கூறு கறியும் எடுத்தாந்து, அந்தச் சணமே வறுத்துக் குடுக்கச் சொல்லி, தாந்தின்னதுமில்லாம எங்கூட்டுக்காரியோட அம்மாளுக்கும் குடுத்துட்டாங்க.


தின்ன மாயத்துல அந்தம்மாளுக்கு சேத்துமாங்கட்டியாட்டம் வந்து ஆளு விடிஞ்சிம் விடியாதமின்ன புளுக்கய விசிறிபுட்டா. ஊருக்கார படவாப் பசங்க இந்தண்ட அந்தண்ட ஒருத்தரையும் நவர வுடமாண்டேங்கறாங்க. அதே சமயம் எனக்கு அம்ம வாத்து நாஞ் செத்துப்போயிட்டன்னு ஆரோ எங்கம்மாளுக்கு தாக்கலுச் சொல்ல, அத்தன காச வெறியிலியும் ஆவுசந் தாங்காம, கட்லுக்கு தொணயாப் படுத்திருந்த பொம்பள ராவோட ராவா போக்கு மாட்டு வண்டியப் புடிச்சி, சத்தரத்துக்கு வந்துட்டா. அந்நேரம் இவிங்களும் எங்கத்தக்காரிய தொட்லுக்கட்டி தூக்கிப் போயி, கறண்டி காம்புல ஒண்ணா ரெண்டா குழியப் பறிச்சி, மூடிப்புட்டு வர, அதப்பாத்ததும் மெரளு வந்தாப்பிடி எங்கம்மா மண்ணு மேல பொரண்டழுவ, ஆளுக்கு ரொம்ப அனதுடியாகி, மேலுக்கு உண்டுன்னா வருத்தமாச்சி. நானு எங்கம்மாள தூக்கி நிறுத்தி, குடிக்க தண்ணி குடுத்து, மொகங்கழுவி அம்மா நானுன்னுஞ் சாவல! உசுரோடத்தான் இருக்கறன்னு தேறுதல சொன்னப்பொறவுதான் அம்மாக்காரி மனசாரி கட்டுல்ல படுத்தா. படுத்தவ திலுப்பி எந்திரிக்க முடியல, மேலு நூலாட்டம் தொவண்டுக்கிச்சி. ஒடம்புல கண்ணு மயிரூண்டு எடம் பாக்கியில்லாம, அச்சரம்! பொண்டு புள்ளைங்க இப்பிடி சின்னப்பட்டு சீரழியறம், அப்பங்காரன் அன்னராவு தம்பட சித்தப்பனொருத்தன் விருந்தாட வந்தவனோட சாராயக்கடைக்கி போனவன், போனவனே!அவனென்ன சொல்லிக் குடுத்தானோ தெரியல! ஆளு எங்கப் போனான்? எவத்திருக்கறான்னு ஒரு துப்புஞ் சிக்கவேயில்ல.
படாதபாடுபட்டு பண்ண ரெக்கிரி பொறிச்சித் தின்னுப்புட்டம். தாத்தம் மேச்சேரிக்கி கூட்டிப் போனாரு.


அங்க இந்த சீரெழவ கண்ல பாக்க முடியாம, அம்மாளோட தாயி மாமனொருத்தரு சின்னான் சின்னான்னு பட்டாளத்துல இருந்தவரு, இங்கிருந்தா சுத்தப்படாது உங்ககிட்ட தொழிலு திறமயிருக்குது, வாழ வழியிருக்குதுன்னு கொல்லிமல சார்புக்கு கூட்டிப்போனாரு!. அங்க ஊருப்பாட்டுப்பாடி வவுறு வளத்தம். ஊருப்பாட்டுங்கறது என்னான்னு கேட்டிங்கன்னா பொட்டி, மத்தாளத்தோட ஓராளு வேசம் போட்டுக்கிட்டு ராவுல ஊடு, ஊடா பிச்சைக்கி ஆட்டம் ஆடறது. இப்பிடியே நாங்க காலந்தள்ள அங்கவொரு ஜமா டெண்டுக் கூத்தாட வந்திச்சி. அதுலவொரு பொம்பள முத்தி, முத்தின்னி அவள அண்டி எங்கம்மா வேசங்கட்ட பழவ, நானுஞ்சேந்து சில்லற வேசமாட பழவனன்.


அவிங்களோட கொஞ்ச நாளு, வவுத்துக்கு பஞ்சமில்லாம, காலந் தள்ளிப்புட்டு மறுக்க தாத்தா வூட்டுக்கு மேச்சேரி வந்தம். அப்ப மேச்சேரியில சடையங் கொறவன் ஜமாவும், அவிங்க பங்காளி அர்ச்சுனஞ் ஜமாவும் கூத்துல கொடிகட்டி பறக்கறாங்க. காரிமங்கலம் காவேரிப்பட்டணத்துக்கு இந்தாண்ட மூணு மைலு தொலவுல குண்டலப்பட்டின்னு ஒரூரு. அந்தூருல ஒட்டுக்கா மூணு ராத்திரி கூத்தாடச் சொல்லி அர்ச்சுனஞ் ஜமாவுக்கு வெத்தல பாக்கு குடுத்துட்டாங்க.
அந்தச் சமயம் அவரு செட்ல ஆளுங்க கொஞ்சம் கட்ட!. ச்சேரி எங்கம்மாவொரு பெருங்கொண்ட வேசக்காரி! அக்கா மொற! நானும் நல்லா மத்தாளந் தட்டவும், சால்ரா போடவும், குடுமியுங் கொண்டையுமா துருதுருன்னு திரிய, எங்களோட பாப்பாரப்பட்டி சாமிநாதன்னு ஓராளையுஞ் சேத்து ஜமாக்கட்டி, அர்ச்சுனமூட்டாரு குண்டலப்பட்டியில கூத்தாடப்போனம். மொத நாளு சுந்தரி கல்யாணம்! சுந்தரி வேசம் போட்டன். ரெண்டாம் நாளு சைந்தவங் கர்வ பங்கம்! சகாதேவன் வேசம், மூணாம் நாளு பவளக் கொடி கல்யாணம்! புலேந்திரன் வேசம் போட்டன். பையம் பரவால்ல, நல்லாயிருக்குது வேசமுன்னாங்க. அப்பறம் அர்ச்சுனங் கூடவே கொஞ்ச நாளு கூத்தாடனம். சத்தரத்துல பிள்ளைங்கள பிள்ளைங்கன்னும், பொண்டாட்டிய பொண்டாட்டியின்னும் நெனச்சிப்பாக்காம,நெஞ்சில துளி ஈரமில்லாம, அனாதியா வுட்டுட்டு ஓடனானே, எங்கப்பந் தாயேலி! இங்கிருந்து போன மாப்ள ஒரு மீனுக்காரிய கட்டிக்கிட்டானாம். பெருமையில, புது பொண்டாட்டிக்கி எங்கம்மா நக நட்டு காலு காப்பு மொதலானதும் பூட்டி அழவு பாத்தானாம்! அவயெங்கியோ ஒரு அண்டப் பீத்தலு!.போனன்னைக்கி போயி, பொதங்கெழமையன்னைக்கி நக்க குடுத்துட்டு,திருவாணியக்கூட மிச்சம் வுடாம பெட்டிக்கிட்டு, போயிட்டு வாடா புண்ட வாயா!ன்னு அடிச்சாளாஞ் சவாரி!


உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணஆன்னு முக்காடு போட்டுக்கிட்டு ஒன்ற வருசமா ஊரு ஊரா எரந்து குடிச்சிக்கிட்டு திரிஞ்சிப்புட்டு கடைசியா குண்டலப்பட்டிக்கி வந்துருக்க, நாங்க அங்க கூத்தாடற சமாச்சாரந் தெரிஞ்சி, தந்தாளு ஒருத்தனவுட்டு பஞ்சாயம் பேச வந்தான். அர்ச்சுனனுக்கு எங்கப்பன் மத்தாளமுன்னா உசுரு!. ரெண்டுபேரும் ஒரு கையி!. பொறந்தவமாரு ரெண்டு பேத்துக்கும், பிள்ளைங்களுக்கும் காலமெல்லாம் நாம்ப வெச்சி கஞ்சியூத்த முடியிமா? போனது போவுட்டும்! மல மேல நெல்லு வௌஞ்சாலுங் குதுருக்கு வந்துதானே ஆவுனுங்கறாப்பிடி இவுனும் கெட்டழிஞ்சி வந்துருக்கறான். கசந்து வந்தவங் கண்ணத் தொடைக்கினுமுன்னு என்னும்மோ சாங்கியத்துக்கு மெரட்டிப்புட்டு அப்பங்காரன செட்டு மத்தாளத்துக்கு சேத்துக்கிட்டாப்ல.
அதும்பொறவு எங்க பெருமாளு பொறந்தான், தங்கா தனம்புள்ள, இந்த கணேசன்(அம்மாபேட்டை),அம்மிணி இப்பிடி பொறப்புங்க ஒவ்வொருத்தார பொறந்தாங்க. ஆளுங்க இருந்தா சடையனோட! இல்ல, அர்ச்சுனனோட கூத்து! ஆளுங்க தோதுப்படலியா தோலுப் பொம்ம கூத்து!. மாத்து கட்டுல தொழுவாடுப் பண்டிக்கிட்டிருந்தம். அப்பிடியே அக்கர பூனாச்சிக்கி போனம். குரும்பனூரு காளிக்கிட்ட சேந்தம். ஏழு வருசம் ஒட்டா கூத்தாடனம். அப்பத்தான் நானு ஆணு வேசம், பொண்ணு வேசம், கோமாளி வேசம் போட்டு பேரெடுத்தது. எனக்கு பதனெட்டு வருசம் முடிஞ்சது. காளி ஜமாவ வுட்டு, சடையஞ் ஜமாவுக்கு போனம். அங்க மாயவனும், கண்ணுப்பையனும் மூண்ட வாலிப்பம்! முசுவா கூத்தாடறாங்க!. நானும் போயிச் சேர, கூத்து தொழுவாடு கொண்டயம் பாத்துட்டுது. அந்தெட்டு ஆடி பதனெட்டன்னைக்கி கோனேரிப்பட்டியில கூத்துட்டுருந்தாங்க. அரவாங்களப்பலி வெச்சி, நானு திரியோதனன், மாயவன் அரவான், கண்ணுப்பையன் நாகக்கன்னி, சடையன் தருமரு! வெச்சி பொள பொளன்னு பொளந்து கட்டனம். கூத்து எத்து! ஆளு ஒசர கெடா, அரவாம் பதிக்கி வெட்டி, தோலுரிச்சி கூறுபோட்டுக்கிட்டிருந்தம். சடையம் பொண்டாட்டி மேச்சேரியில இருந்து பப்பாரிக்கிட்டு வந்தா. சமாச்சாரம் என்னான்னா, மம்பட்டியான், ஒம்போது பேத்த வெட்டி சாச்சதும், மாயவந் தங்கச்சி சங்கீதம் ஒரு படையாச்சியாள கூட்டிக்கிட்டு ஓடிப்போனதுந்தான். கறியாவுது! கசுராவுது! வேசத்த அழிச்சும், அழிக்காத மின்ன ஓடி, புள்ளையையும் பையனையும் எடப்பாடி பஸ் டேண்டிலியே புடிச்சிட்டம்.


கொண்டாந்து தாவுச் சேத்தனம். அங்கருந்து வந்தும் வராதமின்ன ரெண்டு வூட்டாரும் அந்தப் பிள்ளய எனக்கு சம்பந்தம் பேசறாங்க. சுத்தமா பிரியமில்ல எனக்கு. ஏன்னுக்கேளு! நானு முந்தியே இவுளோட (ஜெயா) பேச்சு வார்த்தையில இருந்தன். இவுளும் என்னய வுட்டு, வேறாளுக்கு கழுத்த நீட்ட மாண்டேன்னு சத்தியம் பண்ணிக்குடுத்துருந்தா. ஆனா அவிங்கப்பந் தாயேலி இவள எனக்கு தெரியாமியே, வேற ஒருத்தனுக்கு கண்ணாலஞ் செஞ்சிக் குடுத்துட்டான். இவுளும் எனக்கு எந்த சமாச்சாரத்தையும் சொல்லி வுடல. அதுலியே மனம் நொந்து போயிருந்தனா, அதனால சங்கீதத்த கட்டிக்க பிரியமில்ல.
அந்த ராவே சடையன் ஜமாவுல இருந்து பிரிஞ்சி, எடப்பாடி ஒட்டப்பட்டிக்கி டெண்டச்சுருட்டி தூக்கிட்டுப் போயிட்டம். அந்தியோட மாயவன் ஆளு அனுப்பிச்சான், செல்லப்பன வரச்சொல்லுன்னு. சேரி நாம்பவொன்னு மனசுல நெனச்சிக்கிட்டு இருக்க, அவிங்க பாவம் புள்ளய நம்பளுக்கு கட்டிக்குடுக்கற நெனப்புல இருக்க, பேசாம குட்டோட இருந்துட்டா, மூடிவெச்சி கழுத்தறுக்கற மாதர ஆயிரும். உள்ளத ஒடச்சி சொல்லிப்புட்டு வந்துருலாமுன்னு போயி, மாயவங்கிட்ட இப்பிடி இப்பிடித்தாண்டா மாயவா உன்ற பொறந்தவள கட்டிக்க எனக்கு சுத்தப்படாதுன்னு உம்மய சொன்னன், அவனும் அதப்பத்தி காரியமில்ல, பார்ரா வேலயன்னான். திருப்பி வூட்டுக்கு திரும்பிக்கிட்டன். வரக்குள்ள ஆலச்சம்பாளையம் மாரியாக்கோயில தாண்டயில பொட்டி மத்தாள சத்தங் கேட்டது. பாத்தா, இவளும் இவளோட அப்பனும் ஊருப்பாட்டு பாடிக்கிட்டிருந்தாங்க அவுத்த. இவள பாத்ததும் எனக்கு கால வாரியடிச்சாப்ல, பிதுமாரு கெட்டுப்போச்சி. மனசே சரியில்ல! போவலாமுன்னு நவந்தப்ப, இவளோட மாமங்காரன் என்னய பாத்துட்டு ஓட்டமா ஓடியாந்தான்.


சேரி வாடான்னு அவனையுஞ் சைக்கிள்ல குந்தவெச்சிக்கிட்டு ஒட்டப்பட்டிக்கு வந்து சேந்தன். எங்கப்பங்கிட்ட இவிங்கள ஆலச்சம்பாளையத்துல பாத்தத சொன்னன். சேரி அவன் ஏண்டா அங்க ஒண்டியா தடுமாறணும்? நம்பளோட சேந்து பொம்மக்கூத்து நடத்தட்டுமுன்னு எங்கப்பன் வண்டிக்கட்டிக்கிட்டுப் போயி, அந்த ராவே இவிங்கள கூட்டியாந்து எங்க செட்ல சேத்திக்கிட்டு ஒட்டா மறுபடி பொம்மக்கூத்து நடத்தனாரு. ஒட்டப்பட்டியில இருந்து சேலம் சீரகாப்பாடி போனம், ஜெயா அவ அப்பங்காரஞ் செஞ்ச கொடும கதய சொல்லி அழுதா, மனசௌவி, ஒத்து, ரெண்டுபேரும் கட்டிக்கறமின்னு ஒருமனசா வூட்ல சொன்னா, இந்தாண்ட எங்கம்மா முறுக்குறா, அந்தாண்ட அவிங்க அப்பம் முறுக்குறான். நாயம், அந்தூரு நாயக்காரன் துரியோதன கவுண்டரிண்ட போச்சி. அவரு கவலப்படாதடா செல்லப்பா! உன்ற கல்யாணம் எஞ்செலவு!ன்னு சொல்லி, அவரே முன்னயிருந்து எங்க கண்ணாலத்த செஞ்சி வெச்சாரு. இவிங்கப்பஞ் சும்மா குதிக்க, டேய் கூத்தாடி! சும்மா முறுக்காத! ஒழுங்காயிருந்தா, ஒரு நேரத்துச் சோறு திம்ப! பத்தஞ்சி பரியங்குடுத்தா ஒரு கெளாசு சாராயங் குடிப்ப! மீறி எதனா சத்தங் காட்ன ஈடுதாம் திம்பன்னு அந்தாளு கூப்புட்டுச் சொல்லிப்புடிச்சி., இந்தாளு பேச்சிக்கே எடமில்லாம போயிட்டுது. கடைசியா முக்கி மொனகி நாயக்காரங்கிட்ட எம்பிள்ள பொம்மையாட்ட, நாங்க இத்தனபேரு வவுறு வளக்கறம்! திடுதிப்புனு இவம்பாட்டுக்கு தனியா போயிட்டா பாக்கி இருக்கறவிங்க எப்பிடி பொழைக்கிறதுன்னு நாயங்கட்ட, துரியோதனக் கவுண்டன் நீ சொல்றது வாஸ்தவமான பேச்சி! இருந்தாலும் பொட்டப்புள்ளய பெத்து நாம்பளே வெச்சிக்க முடியுமா? அதுக்குன்னு பிருசன் ஆச! பிள்ள ஆச! தனக்குன்னு ஒரு குடும்பங்குட்டி வேணுமுன்னு ஆசயிருக்காதா? அதனால உம்புள்ளைய வேணுமுன்னா சிறுசு பெருசாவற வரைக்கும் ரெண்டு வருசத்திக்கி உங்கூட வெச்சிக்க! அவ, பொம்மையாட்டட்டும் கூட மருமவனயுங் கூட வெச்சிக்க! பொறவு அவிங்கவிங்க பொழைக்கிற வழியெப்பிடியோ அதப் பாத்துக்கங்கன்னு சொல்ல, நானு அந்த பேச்ச ஒப்பிக்கிட்டு ரெண்டு வருசம் மாமானாருக்கூட இருக்கறன்னு வாக்கு குடுத்துட்டன்.
அங்கயிருந்து பனமரத்துப்பட்டி சந்தப்பேட்டைக்கி போனம். அஞ்சாறு ராத்திரி கூத்து நடத்தனம்.


கடைசி நாளுக்கு மொதநாளு, சந்தைப் பேட்டைக்கி பக்கத்துல பெரிய மாளிக! அந்தூட்டு பண்ணாடிச்சியம்மா பண்ணையக்காரனவுட்டு விடிஞ்சும் விடியாதமின்ன, அந்த பொம்ம ஆட்டன ஆளு, மத்தாளமடிச்ச ஆளு, பொட்டி மீட்டன ஆளு மூணு பேத்தயும் கைப்புடியா கூட்டியான்னு கூப்புட்டது. நாங்களும் போனம். "யாருப்பா பொம்மையாட்னது", "இவதாங்க எம் பொண்டாட்டி", "மத்தாளமடிச்சது ஆரு", "நாந்தானுங்க", பொட்டி வாசிச்சது ஆரு", "அதா அந்தாளுங்க என்ற மாமானாரு", ன்னு நாஞ் சொல்ல அந்தம்மா நானு ஆருன்னு தெரியுமான்னு கேக்க, தெரியலீங்களேன்னன்.
"சம்பூர்ண ராமாயணம் படம் பாத்தீங்களா"
"சேலத்துல அந்த படம் புடிச்சாங்களே! அந்த சூட்டிங்கே பாத்துருக்கறங்க! ஒரு நாளு பொழுதுக்கும் சோறு தண்ணியில்லாம. சிவாஜி பரதன், டி.கே.பகவதி ராவணன். பத்மினியம்மா சீத"
"அந்த டி.கே. பகவதி ஆருன்னு நெனச்சிங்க எங்க அக்கா புருசன்தான், நான் அவரோட கொளுந்தியா!. எங்க மாமனுக்கு ட்ராமா கம்பினி இருக்குது, சினிமாவுலயும் அவரு நடிக்கிறாரு. இப்பிடி திறம வெச்சிருக்கற நீங்க இனிமே தெருவுல இருக்க வேண்டிய தேவ இல்ல. காத்தால அஞ்சி மணிக்கி சேலத்துக்கு ரயிலு! அங்கிருந்து பதினொரு மணிக்கு மெட்ராசிக்கி ரயிலு! எங்கூட வாங்க! உங்களுக்கு சகல சம்பத்தும் நாஞ்செஞ்சிக் குடுக்கறன். ஒடனே சொல்லணுமுன்னு இல்ல போயி தூங்கி எந்திரிச்சி நல்லா யோசன செஞ்சி சொல்லுங்க",ன்னு அந்தம்மா ரெண்டு வலப்பையி நெறயா செலவு சாமானம், ஒரு வாரத்துக்கே தாட்டும்படி அரிசி, பருப்பு எல்லாங் குடுத்துட்டுச்சி. நானும் பெரியவங்கள ஒரு வார்த்த கலந்துக்கிட்டுச் சொல்றன்னு டெண்டுக்கு வருமுந்தியே, அங்க சமாச்சாரந் தெரிஞ்சி, எங்கப்பனும் அம்மாளும் ஒருபக்கம்! பொண்டாட்டியோட அப்பனும் அம்மாளும் ஒருபக்கம்! சும்மா எதுரு ஒப்பேரி வெச்சிக்கிட்டு அழுவறாங்க.


நீங்க மெட்ராசி போயிட்டீங்கன்னா நம்பியிருக்கற எங்க கெதி என்னா ஆவறதுன்னு பொலம்பலான பொலம்பலு!. என்னா செய்யறது, அந்தம்மாகிட்ட போயி என்னா வதுல சொல்றது? விரும்புத்தி பிடிச்சிச்கிச்சி. பேசாம ஒன்ற பாட்லு சாராயத்த குடிச்சிப்புட்டு, குப்புற அடிச்சி படுத்துக்கிட்டன்.
பொழுது விடிஞ்சதோ இல்லியோ, எம்மாமனாரு ஒவ் இதேதுறா புள்ளய இவனோடவுட்டா இவ காரேறி ஊரு பெரயாணம் போயிருவாளாட்டமிருக்குதுன்னு மனசுல கெட்டபுத்தி வெச்சிருந்தானோ என்னம்மோ, மக்காயநாத்து டெண்டப் பிரிச்சிக்கிட்டு பனமரத்துப்பட்டியிலிருந்து அந்தாட்ட நாலுமைலு தொலவுல செந்தாரப்பட்டி மார்க்கத்துல ஒரூருக்கு குடியோடிப்போயிட்டான். நானும் வாக்கு குடுத்துட்டமேன்னு அப்பனம்மா, பொறந்தவமார வுட்டுட்டு அவங்கூடவே போனேன். அன்னிக்கி அந்தியோட எங்கம்மா வந்து, செல்லப்பா, செல்லப்பா பொம்மக்கூத்தாடச் சொல்லி ஊருல கேட்டாங்க, நானு ஒப்பிக்கிட்டன். இன்னிக்கி ஒருநாளு மாத்ரம் வந்து செத்த மத்தாளந் தட்டறா! நாள வாரத்துக்கு வேணுமுன்னா வேற ஆராச்சும் புடியாளப் புடிச்சி செட்டுக்கு சேத்திக்கறன்னு கேக்க, பெத்த தாயி வந்து இப்பிடி பிச்சக்காரி மாதர கெஞ்சறாளேன்னு. எனக்கு அஞ்சுசுரும் பதைக்கிது!. அம்மா அங்கியுங் கூத்து இல்ல! இங்கியுங் கூத்தில்ல! வந்தா ரெண்டுபக்கமும் சுதாரிச்சிக்கலாமின்னுதான் இவிங்ககூட வந்துட்டன். மத்தாளத்துக்கு கொஞ்சம் கரண தேக்கிணும். தேச்சிக்கிட்டு பொறைக்கி வந்தர்றன்னு அம்மாள அனுப்பிச்சி வெச்சன். அந்தியோட தண்ணி கிண்ணி வாத்துக்கிட்டு பனமரத்துப்பட்டிக்கி நானு பொறப்பட, பொறன வூட்டுக்காரியும் பொறப்பட்டா. அன்னமுட்டும் வாயி பேசாமயிருந்தவன், என்னய முன்னவுட்டு, பொறன அவள "எங்க புள்ள போற",ன்னு குறுக்காட்டறானே மாமனாரு! எங்கூட்டுக்காரி எங்க போறன்? மாமம் கூத்துக்குப் போவுது! கூட நானும் போறங்க, அதுக்கு அவனிருந்துக்கிட்டு உம்புருசன் வேணுமுன்னா போவுட்டும், நீ போறதுக்கில்லங்கறானேவொரு சாமார்த்தியம்!.
இவளிருந்துக்கிட்டு, அப்பிடியா நானு போவாம இருக்கறதுக்கில்லன்னு சொல்லிப்புட்டு எம்பொறனையே வந்துட்டா. கூத்து முடிஞ்சதும் நானு எங்கூட்டுக்காரிக்கிட்ட கூப்புட்டுச் சொல்லிப்புட்டன். புள்ள ங்கொப்பன் புத்தி செரியில்ல! இன்னைக்கி எம்பொறன போவ வேண்டாமுன்னு சொல்றவன், நாளைக்கி நம்பள ஒண்ணா பொழைக்க வுடுவானா? நானு அவங்கிட்ட இருந்து தொழிலு செய்ய இனிமேட்டு லாயிக்கப்படாது. நானு வேணுமுன்னா, போயி மரியாதிக்கி உங்கப்பங்கிட்ட ஒருவார்த்த சொல்லிப்புட்டு நீ வா! வேண்டாமுன்னாலும் ஒங்கப்பனோட மவராசியா இருந்துப் பொழ!....
காத்தால போனவ சாயந்தரம் பொட்டியோட வந்துட்டா. பொறவு ரெண்டு புள்ளைங்க பொறக்கந்திண்ணியும் அப்பன், அம்மா பெத்து பொறப்போட நல்ல மொறையா குடித்தனம் பண்டனம். அந்த சமயம் நம்ம வாழப்பாடி முத்தம்பட்டியில வீரப்பன், வீரப்பன்னு ஓராளு. அந்தாளு டெண்டக்கூத்து ஏலத்துக்கு எடுத்து பத்து ராத்திரி கூத்து வுட்டுருந்தாரு. என்னையும் இவளையுஞ் சம்பளத்துக்கு கூப்புட்டாங்க, சேரின்னு போனம்.தூளு வரிச்சிப்புட்டு குந்தியிருந்தம்பாரு! மாமனாரு கணுக்கால்ல இருந்து மொழங்காலு முட்டும் பெரிய்ய கட்டா போட்டுக்கிட்டு கால செண்டி செண்டி வந்தான்.
ஜெயா, ஜெயா, ரெண்டு நாளு பொம்மக்கூத்தாடறன்னு வெத்தலப்பாக்கு வாங்கிப்புட்டன். தம்பிகாரனையும் என்னையும் நாயி கடிச்சிப்புடிச்சி. இந்த நொண்டி காலோட எப்பிடி கூத்தாட்டறது? வந்து ரெண்டு நாளைக்கி பொம்மையாட்டு பொறவு வந்துருவியாமின்னு கேக்க, இவுளுக்கு திடீருனு பொறந்தவம்மேல பாசம் பொத்துக்கிச்சி. நானு போயிட்டு வர்றன் ஓரெட்டுன்னு என்னய உத்தரவு கேட்டா. எனக்குன்னா மாமனாரு மேல சந்தேகம், நாயி கடிச்சிதுக்கா ங்கொக்காளவோலிக்கி இத்தச்சோட்டு கட்டு? இதுல என்னமோ வில்லங்கமிருக்குதுன்னு வூட்டுக்காரிய தனியா கூப்புட்டு, பிள்ள பிள்ள ங்கொப்பன மொதல்ல கால்ல இருக்கற கட்ட அவுக்கச்சொல்லு! உம்மையிலியே நாயி கடிச்சிருக்குதான்னு பாப்பம், நாயி கடிச்சிருந்தா நானும் கூட வர்றன். ரெண்டுபேரும் போவலாம். இல்ல ங்கப்பன் தக்கிடித்தனம் எதனாலும் பண்டிக்கிட்டு ஆள வேல வுடலாமுன்னு வந்துருந்தா, ஒததாம் திம்பாம் பாருன்னு சொல்ல, இவ ஒரே குதியா குதிக்கிறா.
போவ வாண்டமுன்னு சொல்ல முடியாம, எங்கப்பன் மேல பாடா வழி போடறியா? நம்பாதவம் பீய நாயிக்கூட திங்காது! எம்பொறந்தவன பாக்க, நானு போயித்தான் ஆவுணுங்கறா. அப்பிடின்னா சேரி, எம்பேச்ச மீறி நீயி போவத்தாம் வேணுமுன்னா, நாங்கட்ன தாலியோட போவக்கூடாதுன்னு நாஞ் சொல்ல, அப்படியா சமாச்சாரம் ஆருக்கு வேணும் தாலி! இந்தா நீ கட்ன தாலிய நீயே எடுத்துக்குன்னு லவுக்க மறப்புல இருந்த தாலிய படக்குனு எடுத்து வெளிய காட்டனாப்பாரு. நானு வெடுக்குன்னு புடிச்சி அத்துப்புட்டன். தாலியத்த மறுநிமுசம் இவிங்கப்பங்காரன் ஒரு மஞ்சப்பையி கொண்டாந்தாம்பாரு அதலிருந்து நானு கண்ணாலத்துக்கு எடுத்த மாமி சீல! பரியம் உரூவா நூறு! ரெண்டயும் எடுத்து எம்மின்ன வெச்சி, இன்னையோட எம்பிள்ளைக்கும் உனக்கும் ஒறவந்துப்போச்சி! செத்தாப் பொழைச்சா எதுவுங் கெடயாதுன்னு துரும்பு கிள்ளி போடறானே.


கூத்துக்கு கூப்புட வந்தவன்பரியத்து உருவாயும் மாமி சீலயும் எதுக்கு எடுத்துக்கிட்டு வந்துருப்பான்னு இந்த கண்டாரோலி அப்பக்கூட ஆஞ்சியோஞ்சி பாக்கல. அங்க கூத்து ஆரம்பிச்சி நடத்துக்கிட்டு இருக்குது இங்கவொரு கூத்து நடந்துக்கிட்டிருக்குது. வேசம் போட ஆளில்லன்னு தொலாவிக்கிட்டு கூத்துட்டவன் வர, இந்த சமாச்சாரத்த காதுல கேட்டவன், புருசனோட போவியோ, அப்பனோட போவியோ, எனக்கு தெரியாது. கைநீட்டி வாங்கன உருவாயிக்கி விண்ணமில்லாம ஒழுங்கு மரியேதியா கூத்தாடிப்புட்டு போன்னு இவள புடிச்சிக்கிட்டான். இப்பிடி வாட்டலாட்டியத்திலியே ரெண்டு புள்ளைங்க பெத்தம். பொறவு அப்பன், அம்மா, தம்பிமாரெல்லாம் ஒட்டா செட்டுக்கட்ட நானும் இவுளுந் தனியா பொம்மக்கூத்து ஆட்ட செட்டு கட்டனம். ஓகோன்னு தொழிலு நடத்தனம். உளுந்தூருப்பேட்ட பாவந்துருல காடுதோட்டம் வாங்கணம். அத கருத்தா வெச்சிப் பொழைக்க துப்புக்கெட்டு ஒரு நாதேரிக்கிட்ட தோத்தம். அந்த வெசனம் புடிச்சே பதனாலு வருசம் குடிபோதையில திரிஞ்சன்.


சும்மா சொல்லக்கூடாது எங்க பொம்பளைய தனியா ஓராளா சுதாரிச்சி இந்த குடும்பத்த முன்னுக்கு கொண்டாந்தா. அத்தன மொடாக்குடிக்கி ஒடம்பு தாங்கல, வவுத்து நோவு! வாந்தி பேதி!, சுத்தமா சாரீரங் கெட்டு சாவற நெலமைக்கிப்போயி உசுரு பொழைச்சன். மறுபடி வேசம் போட்டாட, முடியல! பொம்மையாட்ட முடியல! ஓஞ்சி ஒக்காருவனா? ம்பொண்டாட்டிய நண்டு கடிக்க! அடிறா மத்தாளத்தன்னு ஆரம்பிச்சன்! நாப்பது வருசமாச்சி!. சாவளவும் அடிச்சிப்புட்டுத்தாஞ் சாவன்.

புதன், 29 ஜூன், 2011

குடிநாசுவன்
கோழிக்கூப்டமித்தியே கண்ணுமுழிச்சவ பாழாப்போன கொலநோவுல எந்திரிக்க கையிலாவாம இன்னுஞ்செத்த விடியிட்டும், இன்னுஞ்செத்த விடியிட்டுமின்னு பாயோடப் பாயாச் சுருண்டுக் கெடந்துட்டு, நெனச்சாப்ல ஓவ்வுனுமேட்டுஞ் சும்மா வெட்டியாப் படுத்துருந்தா வேலைக்காவாது, வாசக்கூட்டி சாணியாச்சந்தொளிக்கலாமின்னு வவுநேரங் கழிச்சி அழவம்மா எந்திரிச்சி வெளிய வந்தா. அந்நேரம் குபேர மூலையக்காட்டி ஒரளான்ட வெள்ளவெளேருன்னு என்னும்மோ நின்னுக்கிட்டுக்கறாப்ல தெம்பட்டதும் நெப்புத் தெரியாமப் பயந்துக்கிட்டு போயி பிருசன எழுப்பலாமின் வந்த வெசயில திலுப்பியும் வூட்டுக்குள்ற ஓட்டம் புடிச்சா. “நாசூத்தி... நாசூத்தி... கேன நாசுவன் எங்கடி?ன்னு கொலுச் சத்தங்கேட்கும்பிடி அவத்திருந்த ஆளு இன்னாருன்னு அவுளுக்குச் சத்தமாப் பிருவாயிப்போச்சி. இந்த தம்பியிண்ணமூட்டு சில்லிவண்டு செகதாப்பிள்ளத்தான்’ வெள்ள வேட்டிய காலுவழியப் போத்திக்கிட்டு கொள்ளிவாவி பெசாதாட்டம் செஞ்செவிக்க நின்னுக்கிட்டிருந்திச்சி. ‘இவ ஆளு எவ்ளுண்டு பொம்பள எவ்ளுண்டு இழுத்துப் புடிச்சி அளந்தா ஒருச்சாண் இருக்கமாட்டா. விடிஞ்சும் விடியாதமின்ன நம்பூட்டு சால்ல வந்து நின்னு தலமேல அடிச்சாப்ல அத்தச்சோடு அம்பளய பேரச் சொல்லிக் கூப்டறாப்பாரு’ன்னு அழவம்மாளுக்கு ச்செட்யான கோவம் வந்துட்டுது. “அதெங்கியோ பீச்சூத்தி, நானென்னத்தக் கண்டன். அவனெஙகப் போனானோ”ன்னு காலாச்சட்டயா ரெண்டொரு வார்த்தயில வதுலச் சொல்லியுஞ் சொல்லாம வத் வேலய மறந்து அடுப்புச் சாம்புலு அள்ளப் போயிட்டா அழவம்மா. பீச்சூத்தின்னுச் சொன்னதுதாம் மாயம், இந்தச் செங்காநண்டு அழுதுக்கிட்டே ஓடி அவங்காயாக்கிட்ட குசலஞ்சொல்ல அவள கையோடக் கூட்டியாந்துட்டா. ஊருக்கவுண்டம் மருமவ ரட்சிமாயி, வௌஞ்சகாட்டுக்குருவி’ மீறுனப்பண்ணாட்டுக்காரி’ பாக்கறதுக்கு பொட்டப் பொம்பளதான், மன்னக்குட்டி வாயத் தொறந்துப் புட்டான்னா அவ்வளதான். சலதாரக் கப்பு எங்கித்தி மூல? அவப் பேச ஆரம்பிச்ச் ஒருப்புளுத்த நாயுங்குறுக்கப்பூதாது. “ஆர்ரிவ பொம்பள வூட்ல? வெளிய வாடி’ உனுக்கு எவ்வள மண்டத்திமுரு இருந்தா எம்பிள்ளையப் பீச்சூத்தின்னு பட்டப்பேரு வெச்சிக்கூட்புடுவ? உன்னு நாசுவக்கிருச என்னுக்கிட்டயேக் காட்ரியா? கூண்டி நாலு வூடு எறந்துக்குடிச்சி வவுறு வளக்கறப்பவே உங்களுக்கு இத்தன நீரேத்தமா? ஆர்ரிவ, கூப்ட கூட்ப குந்தியிருக்கறவ, நீயி வெளிய வரியா, இல்ல நானு உள்ற வந்து உம்மயிர அறுக்குட்டுமா”ன்னு ரட்சிமாயி ச்சும்மா மேலுக்குங்கீழுக்குங் குதிக்கும்பிடி அழவம்மாளுக்கும் ஆத்தரத்தாக்குபுடிக்க முடியல. “இங்கப்பாராயா, காலங்காத்தால வூட்டண்ட வந்து மயித்தறுக்கரன் கயித்தறக்கரன்னு அனாவசியமா பேசற வேல வெச்சிக்காத’ உம்மவ வயசென்ன எம்பிருசன் வயசென்னா? ஒரு கேள்விமொற மனசருங்கற மட்டு மரியாதி இல்ல. வந்து என்னம்மோ ‘நாசூத்தி நாசூத்தி நாசுவன் எங்க’ன்னு கேட்கறா? எங்களக்கண்டா அத்தன எளக்காரமா”ன்னு அவளுந் திலுப்பிப் பேச புடுச்சது பிளுபிளுன்னு அடமழயாட்டம் நாசுவமூட்டாண்டச் சண்ட. “பட்டத்துக்கு பவிசி வந்ததும் பாக்க முடியிலியாம், பட்டுச்சீலக் கிழிஞ்ச்ப்போனா தெய்க்க முடியிலியாம், அடியே டிங்குமாரி டவுனுக்கேப்மாரி, உம்பிருசன் பெரீய்ய கிலுட்டி அவங்காலுக்கு பூப்போட்டு கும்புட்டு தட்டு வருசவெச்சி வாடா மாப்ள வந்துச் செயிடான்னு அழைக்கணுமா? செய்யறதுச் செரைக்கற வேல. அவன நாசுவங்காமப் பெறவு வேற எப்டீறீங்கறது? உமூட்டு வாசல்ல வந்து கூட்புட்டா வெக்கமாயிருக் குதுங்கறவ, அடி மானரோசக்காரி’ வீர்சக்காரி’மழமாரி பேயாம மானங்காஞ்சாலும்வெள்ளாம வௌஞ்சாலும் வௌயாட்டியும் எஞ்சாண்ட வருசம் பத்துவள்ளம் அளந்துட்டு உனுக்கு வாக்கரிச்சி போடறனே’ தூமக்கட்டி எடுத்துக்கிட்டு வந்து திங்கறறேஇ அப்ப இருக்கணும்டி இந்த ஒணவு. குடிநாசுவமூடுன்னு ஊருல உங்க குடிவெச்சிருக்கறது கவுண்டிங்கத்தனம் பண்றதுக்கா? ஏண்டி அய்யனாட்டம் நெதஞ்செரச்சிக்கிட்டு ஒம்பிருசன் ஊருமெரமன வருவான்’ எமூட்டு ஆம்பளைங்க மட்லுஞ் சிண்டும் முடியுமா தாடியுந்தப்புமா பஞ்சத்துல அடிப்பட்ட பரதேசிங்களாட்டந் திரியினுமா? ஒழுங்கா மரியாதியா உம்பிருசன இன்னிக்கி காட்டுக்கப் போயிக் கிருமமாச் சவரம் பண்டச் சொல்லு. நாளைக்கி திலுப்பியொருக்க அவங்கள அப்பிடியே பாத்தன், பொம்பள நடக்கறதே வேற”ன்னு ரட்சிமாயிப் போட்ட போடு பூட்ட வாங்குது’
குளுருக்கு மொடங்கிக் கெடந்தவன் இந்த மூளி அலங்காரி தொறந்த தொறப்புல கண்ணு முழிச்சி அரத்தூக்கத்துல எந்திரிச்சி வந்து, இத இப்பிடியே வுட்ட வெவகாரம் வேற வேறயாப்போயிருமுன்னு ‘ஆ’ன்னு தொறக்கவுட்டாம அழவம்மாள வாயடக்கி அவள உள்ற தள்ளிவுட்டு தாளுப்போட்டு, “ரவுசுப் பண்டாதீங்க ஆயா’ அவக்கெடக்கறா கழுத’ அவளோட உங்குளுக்கு என்னா வாட்லாட்டியம்? சிங்க ஊட்டுக்குப் போங்க, இதா இப்பபோயி பண்ணாடிங்களுக்கு நாம்பாத்துச் செஞ்சிவுடறன்”ன்னு அங்கமுத்து தொஙகுச்சலாம் போட்டு நாலாடம் பல்லக்கெஞ்சி தலய தலய சொறிஞ்சப் பொறவுதான் ரட்சிமாயி அந்த எடத்தவுட்டு அந்தல்லப் போனா. தெனம் பொழுது விடிஞ்சாப் போதும் அங்கமுத்துக்கு ஓரியாட்டம் ஓயறதில்ல. ஊரு நாயிங்க வூட்ல வுழுந்தப் பொணத்துக்கு ஒரு நாப்பொழுதுக்கும் நிமுசு, வுழுவாதப் பொணத்துக்கு அது புளுக்கய விசுறமுட்டும் ஒக்குலு காத்துக்கிட்டு குந்தியிருக்கணும். செத்தா பொழச்சா எங்கியும் போவமுடியாது. அவந்தான் என்னாப் பண்டுவாம் பாவம்’ நூறூட்டுக் கவுண்டமூட்டாருக்கு ஒருத்தஞ் சேவிக்கறதுன்னா சாமானியப்பட்டக் காரியமா? கெழக்க வெளுக்காதமின்ன அடப்பத்தயுங்கத்தியயுங் கமக்கட்டையில அடக்கிட்டுப் பொறப்பட்டான்னா மவராசன் இருட்ட தலமேலப் போட்டுக்கிட்டு வூட்டுக்குத திலும்புமட்டும் காடு கண்டப்பக்கம் பண்ணாடிங்கள கல்லுமேலக் குந்தவெச்சி வெட்னது வெட்னவாக்குல, செறச்சது செறச்ச வாக்குலியே இருந்தாலும், எதோ ஒண்ணு ரெண்டு இப்பிடி தவுறிப் போவுது. கண்ணு வெளிச்சங்கொறஞ்சி மிமிகங்கது, காதும் மத்துவமாயிக்கிச்சி, முடியலையின்னு கருமாத்தரத்த வுடமுடியிதா’ திங்கறச் சோத்துல மண்ணள்ளிப்போட்டுட்டு, பொறவு ரெண்டுகரு சீவிக்கற வழி? புட்டுச்சுட்டு வித்துக்கிட்டுருந்த வேலப்பமூட்டு பாப்பா மேச்சேரியில ஓட்லுக்கட வெச்சிட்டா, கல்கோனா, சவ்வுமுட்டாயி, சளிமுட்டாயி, சோளக்கருது, பேரிக்கா, பனங்கெழங்கு, குச்சிக்கெழங்கு, கொழிஞ்சி முட்டாயின்னு போட்டு கட்லுக்கட வெச்சிருந்த எளயா மூட்டு கிட்ணப்பன் பலசரக்கு கட வெச்சிட்டான் காடு கற களவெட்டிக்கிட்டு, பயிரு நட்டுக்கிட்டு, அவுத்த யிவுத்த சிக்கனத்தாவுலு குததவைக்கிப்புடிச்சி ஒருக்குட்ட ரெண்டுக்குட்ட வெள்ளாமப் பண்டிக்கிட்டிருந்த மண்டமூக்கு ஆண்டியப்பன் ஏரியோரத்துல கங்காணிய்ட்டு நெலத்த வாங்கி வயலடிக்கிறான். சட்லக்கா, புட்லக்கான்ன தறிநேசிக்கிட்டிருந்த செட்டுக்கார கோவாலு சேலத்துல பெரிய்ய சவுளிக்கட வெச்சிட்டான். இந்த அங்கமுத்து நாசுவனும், செங்கோடவண்ணானும் கொட்டுக்கொட்ட நடேசந்தோட்டியும், செருப்பு தெக்கிற செம்மூஞ்சியூட்டாரும் அன்னிக்கிப் பொழச்ச பொழப்ப இன்னிக்கும் அச்சுக்கொலயாம அப்பிடியேத்தான் பொழைக்கறாங்க. எப்பிடி மின்னேறது? என்னிக்கி வந்த தாவு சேர்றது? ச்சேரி. னுத்தன நாளைக்கி இவங்கப் பாடய திலுப்பறது? நாலுப் பேராட்டம் நாம்பளுஞ் சரீங்கறாப்புல பொழைக்கனுமின்னுதான் ஓடி மேட்டுருல இவஞ்சாப்புக்கட வெச்சான். அவன் வாங்கியாந்த வரம்’ தலையெழுத்து’ அவுனுக்குப் பொறந்தது நாலுந் தெல்லவாரிங்க. தாம் பொழைக்கவுந் துப்பு இல்லாம அப்பனாயாளுக்கு ரெண்டுச் சம்பாரிச்சிப் போட்டுத் திங்கடிச்சிக் கெவுணிக்கவுங்கருத்து இல்லாம, கடய ஒரே வருசத்துல வித்து பொறுக்கித் தின்னுப்புட்டு ஆளாளுக்கு ஒவ்வொரு ஊரா அல்லு எடுக்கப் போயிரிச்சிங்க. ஊம்... ஒண்ணப் பெத்தா உரியிலச் சோறு, நாலப் பெத்தா நடுத்தெருவுலச் சோறுங்கறது செரியாப் போச்சி எவ்வளவெடுப்பா, எவ்வளவிறாப்பா குச்சப் புடுங்கிக்கிட்டு ஊரவுட்டுப் போனானோ, அத்தச் சின்னப்பட்டு, சீப்பரத்து, ரோலாயப்பட்டு, திலும்பி வர வேண்டியதாப்போச்சி. அதும்பொறவு ஊருல அவனுக்கு கொஞ்ச நஞ்சமிருந்த யோக்கிதியும் தொச்சமில்லாமக் கெட்டுப்போச்சி. தெனஞ் சித்ரவத ஊத்தவாயக் கழுவாமஇ ஒரு முழுங்கு நீசுத்தண்ணிக்கூட குடிக்காம காத்தாலங்காட்டியும் பண்ணாடியத்தேடித் திலும்புனான் அங்கமுத்து. “எங்கன்னு கண்டு தொழாவுறது? புளிச்சக் கள்ளக் குடிச்சிப்புட்டு தம்பி பண்ணாடி காமாடு தலமாடு தெரியாம எங்கக் கெடக்கறானோ’ இலல எத்த மப்பு எறங்காம இருக்க, சின்னப் பையஞ் சாணனோட கொய்யாமரத்துக்காடு ஒருகோடியா தொப்பலாமூட்டு தோப்புமுட்டும் பனஞ்சாரி எங்க திரியறானோ? மனுசங் கைக்கிச்சிக்கறது அவ்ள லேசுப்பட்ட சமாச்சாரமா, ஆராலடா கடவுளே ஆவறது"ன்னு வெசனம் புடிச்சிக்கிட்டு அங்கமுத்து தேசிகமூட்டு கெணத்தான்டயிருந்து, அப்பிடியே நாயப்பமூட்டு காடு, மெமல யூட்டுக்காடு, மலையாமூட்டுக்காடு, குட்டக்கர, வளயச் செட்டியாமூட்டுக்காடு, முத்தண்ண மூட்டுக்காடு, தூங்கண்ணமூட்டுக்காடுன்னு ஆளத் தொழா அலமோதி கெட்டலஞ்சி கடச்சியா பழனியப்பமூட்டுத் தோப்புல அவனப் புடிச்சி சேத்தனான். “ஏண்டா கேனா, எள நேரத்துல வர்றதுக்கு உன்கென்றா கேடு? வெய்ய நேரத்துல வந்து ஏண்டா எந்தாலிய அறுக்கற? இனுமேட்டு நீ எப்ப செரக்கிறது, நானு எந்நேரந் தண்ணி வாத்துக்கிட்டுச் சோறுக்குடிக்கறது”ன்னு பண்ணாடிக்க அவன பாத்தும் பாக்காதமின்னன்னு நோப்பாளஞ் சீறிக்கிட்டு வந்துட்டது. சவரம் பண்டிக்க மாண்டேன்னு நொம்போ உலுக்கனாரு. அதா இதான்னு என்னான்னவோ தவுமானஞ்சொல்லி ஆளக்கூட்டியாந்து எடஞ்சேத்தறதுக்குள்ள அங்கமுத்து தெணறு தெணறுன்னு தெணறிப்புட்டான். அப்பிடியே சைசாப்பேசி நைசுப்பண்டி கவுண்டரக் குந்தவெச்சி, கத்தியத் தீட்டி மெவறயில வெச்சாம்பா, இருந்தாப்பிடி இருந்து பண்ணாடி சிவுக்குன்னு எழுந்து தென்னமரத்துலச் சாஞ்சி நின்னு வெடுக்குனு கோமணத்த அவுத்துவுட்டு ”அங்க கெடந்தா கெடக்கட்டும், அதவுடுறா, அப்புறம் பாத்துக்கலாம். இங்கப் பண்டுறா மொதல்ல”ன்னு முக்கிலியமான எடத்த காட்டும்பிடி வழுதுப்பேசல அங்கமுத்து. செத்துப்போன மொன்ன பாம்பாட்டம் தெவண்டுப்போயி தொங்கிக்கிட்டு இருந்த உசுரு நெலயச் சுத்தி அடபாசரம், முச மண்டலம், மூத்தர நாத்தம், ஓரேச் சீன்றம். மொடையடிக்கிது, சூரையடிக்கிது என்றனால முடியாதுடாச் செரைக்கன்னு சொல்ல முடியுமா? இல்ல ஏனோதானோ என்னம்மோ அப்பிடி ஒண்ணு ரெண்டாச் செஞ்சித் தப்பிக்க முடியுமா? மூச்... வழிச்சுட்ட வூடாட்டம் சுத்தமா இருக்குனும். வெரலவுட்டு நெரடிப்பாக்கையில எங்கியாச்சும் ஒருமுடி இந்துப்புடிச்சி பொறவு ஈடுதிங்க முடியாது. பண்ணாடி மாருங்களுக்கு கோவம் வந்திச்சி அவ்ளத்தான். புளியாமரத்துலக் கட்டிவெச்சி வெளுத்தா வெளுத்துப்புடுவாங்க. குமிஞ்சவாக்குல என்ன முட்டும் நிக்கறது? இடுப்பு நோவு வேற மின்னலு மின்றாப்லப் பளீர் பளீர்ருங்க மண்டிப்போட்டு வாட்டமா நின்னு நெதானமா பொறுத்து பொறுத்துச் சீருப்பாத்துச் செஞ்சி முடிக்கையில பண்ணாடிக்கு கண்ணச் சொருவிக்கிட்டு தூக்கம் வந்துட்டுது. “எந்திரிங்க சாமி”ன்னு இவந்தொட்டு எழுப்பும்பிடி பண்ணாடி நித்தரக்கலஞ்சி,“என்றா கேனா ஆச்சாடா”ன்னு கேட்டான். “ஆச்சுங்க சாமி”யின்னான் இவன். “என்னோட வந்தவேல முடிஞ்சிப்போச்சின்னு நீப்பாட்டுக்கு லயில்வே கேட்டுக்கு புட்டு திங்கப் போயிராத. அதா அவுத்தகொட்டாயில சின்ன பண்ணாடி இருக்கறாம் போயி அவுனுக்கும் பாத்துச் செஞ்சிப் புட்டுப்போ”ன்னு பண்ணாடிச் சொல்லும்பிடி. “சேரிங்கச் சாமி”ன்னுப்புட்டு. இவன் மொழங்காலு நோவோட மொள்ள எந்திரிச்சி ரெவலா நடந்து மின்ன போயி நின்னான். இவந்தலய கண்டுங்காங்காத மாதிரி கொட்டாயிக்குள்ள கட்டுல்ல படுத்துக்கிட்டு இருந்தான் தம்பியின்ன மவன் பழனியப்பன். இருந்து இருந்து சலிச்சி இருக்க மாட்டாம இவஞ், “சாமீ... சாமீ...”ன்னு ரெண்டுச் சொல்லுக் கூப்புடும்பிடி அந்த மொள்ளமாரி படுத்தவாக்குல கட்லடியக் கெடந்த நெத்துத் தேங்காய எடுத்து ‘ச்சுடேன்னு’ வாசக்காலப் பாத்து விர்ரன்னு வீசனாம் பாத்துக்க இந்த ஈனப்பானங்கெட்டது அடிக்கி தப்பிச்சி ஓரமா ஒதுங்கி நின்னுக்கிட்டு. “சாமீ, பண்ணாடி’ நாந்தாஞ்சாமி குடீநாசுவன் வந்துக்கிறஞ்சாமி”ன் பிருவா வௌம்பி விங்கிணிச்சி சொல்லிச்சி மறுக்க. அதுக்கு அந்த எறப்பாணி பெத்தது, “ஆரு அங்கமுத்து பண்ணாடியா? அடப்பகவானே’ பெரிய்யக் கருப்ராயா, நானு வேற இந்த மொண்டு வாலு நாயிதான் ஒலைக்குதோ தென்னமோன்னு தச்சோட்டு நெத்துக்காய எடுத்து இட்டுப் புட்டனே”ங்குது எகத்தாளமா. திலுப்பியும் இந்த கேடு கெட்ட அங்கமுத்து, “ஐய்யோ, குத்தஞ்சாமி குத்தம். நீங்கபோயி என்னயப் பண்ணாடிங்கறதா, வாண்டாஞ்சாமி வாண்டாம். பாவத்த எங்கப்போயி தொலப்பஞ்சாமி”ன்னு கெஞ்சறாங் கொணாய்க்கிறாஞ் சும்மா. “பின்ன என்றாப் பன்ன? கத இப்ப அப்பிடித்தாண்டா ஓடுது, கூச்சு கூச்சுன்னா வந்து மூஞ்ச நக்கறீங்க? ரேங்கண்டு நீங்களா வந்து செய்யறதில்ல. கெடஞ் சாவுதுன்னு வூட்டுக்கு ஆளுவுட்டுக் கூப்புட்டா பொட்டக்கழுதைங்கள வாயிபேசவுட்டு வேடிக்கப் பாக்கறீங்க. அது வேற ஒண்ணுமில்லீங்க, ராசாவு உங்குளுக்கு துளுரு வுட்டுப்போச்சி. மணிக் கட்டோட கைய நறுக்கி வுட்டுட்டா எல்லாஞ் செரியப் போவும்”மின்னு காதுல நத்தம் முட்றாப்ல பேச்சறான். இவுனும் அதல்லீங்கச்சாமி, இது இல்லீங்கச் சாமி, அது அப்பிடி ஆயிப்போச்சிங்கச்சாமி, இது இப்பிடி ஆயிப்போச்சிங்கச்சாமின்னு ஆயிரத்தெட்டு சாக்குச் சொல்லி அந்த சொட்டத்தலையில சீக்கட்றாப்ல சொறிஞ்சி புண்ணுப்பண்டி, அந்த ஒந்தறக்கண்ண சிமிட்டி, சிமிட்டி பல்ல இளிச்சி அவன சுதாரிச்சி கொண்டி நெல்லிக்கா மரத்தடிய நிறுப்துப்பிடி ஒட்கார தோதா ஒண்ணுஞ்சிக்கல்ல. பொறவு இவம் போயி கல்லுக்கட்டு மேலருந்து ஒரு கருங்கல்ல பேத்துக் கொண்டாந் துப்போட்டு பண்ணாடியக் குந்தவெச்சி தண்ணியத் தொட்டு தடவி மெதுவா அப்பிடியே பூப்பறிக்கறாப்ல துக்ளியூண்டு துக்ளியூண்டா செறயயும் வழிச்சி எடுத்தான். ஏனோ பழனியப்பன் அப்பைக்கும் உர்ர்ருன்னே குந்தியிருந்தான். இன்னும் ஏதாச்சிம் ரெண்டு சமாதானஞ்சொல்லி பண்ணாடியவிக கோவத்த ஆத்தி பொந்திய குளுர வெச்சா எதோ போடிபுட்டுக் காச்சும் காசாவுமுன்னு இந்த திருவாத்தான். “சாமி அறியாப்புள்ளயா இருந்தப்பப் புடிச்சி எத்தனையோத்தரம் உங்குளுக் கெராப்பு வெட்டி வுட்ருக்கறன், கள்ளிச் செதுக்கிவுட்ரு’கறன், மீசக் கத்திரிச்சி ஒதுக்கிவுட்ருக்கறன். ஆனானாக்கச் சாமீ, ஒரே ஒருத்தரங்கூட இன்னிக்கு அமஞ்ச ரட்சணம் உங்க மெவறயில என்னிக்குமே அமஞ்சதில்ல. இந்த கல்லோட ராசியோ என்னமோ ஆளும் உங்க மொகக் கூறும் நீங்க குந்தியிருக்ற கெம்பீரமும் பாத்தா அட அட என்னான்னுச் சொல்றது’ அப்பிடியே அந்த மைசூரு மவராசா தங்க சிங்காதனத்துல குந்தியிருக்கறாப்ல அத்தன அற்புதமா இருக்குதுப்போங்க”ன்னு ஒரு மிஞ்சனப் பழமய மெய்க்க மெய்க்கப் பேசும்பிடி, படக்குனு அந்தக் கவுண்டந் தூக்குடா கேனா கல்ல வூட்டுக்குன்னு உத்தரவு போட்டான் ஒரேடியா. ஹூம்... வெந்தது தின்னு விதி வந்தாச் சாவ கெழுட்டுத் தாயேலி, கல்லச் சொமந்துக்கிட்டு நொறத்தும்ப பண்ணாடிப் பொன பட்டி நாயாட்டம் ஓட்டமெடுத்தான்.

செவ்வாய், 28 ஜூன், 2011

ஒருநா ஒருப்பொழுதுஒருத்தன் ரெண்டு பேரா இருந்தாச் சமாளிக்கலாம்! அடவொரு ஐந்நூறு ஆயிரமுன்னாச் சுதாரிக்கலாம். நெனைச்சாப்பிடி ங்கொண்ணகாரம் பட்ட கடன் மூணு லட்சங்குடு நாலு லட்சங்குடுன்னா எங்கயிருந்து அவுக்கறது? இந்த நேரம் பாத்து இவ வேற வவுத்த நோவுதுன்னு மூணு நாலாப் பெணாத்திக்கிட்டு கெடக்கறா! ஒரேப் பிள்ள போதுண்டின்னுச் சொன்னன் கேட்டாளா? எச்சித்தண்ணிக்கு எதுத்தண்ணி வக்கு இல்ல மாளாத சொத்து வீணாப்போவுது பையன் வேணும், பையன் வேணுமின்னா, இப்ப பட்டுக்கிட்டுருக்கறா.
கூலிக¢காரம் பொழப்புல நோக்காடு ஒரு நோவு நோடியின்னா அந்தண்ட இந்தண்ட நவுர முடியிதா?ங்கொம்மாள கூட்டிக்கிட்டு வாடின்னா ஆயலோக்க அவளுக்கு சேலம் ராவு ஆசுபத்திரியிலதான் நொட்டணுமாம். ஜம்பஞ் ஜல ஜலங்குது மொள்ள மொளு மொளுங்குது.
இங்கு ஒவ்வொருத்தணும் அஞ்சி உருவா பச்ச நோட்ட கண்ல பாக்கறதுக்குள்ள குண்டியில சீக்கட்டிக்கிது. அவ அவ அப்பமூட்லயிருந்து அதக்கொண்டாரா, இதக்கொண்டாரா உப்பு புளி மொளவாக் காயிலயிருந்து சகலமுங் கொண்டாரா! நம¢பளுக்கு ஆத்தர அவசரத்துக்கு ஒரு பக்கம் போவ வர தொணக்கி ஒரு ஆளு வேணுமின்னா வெண்ண வெச்சி உருவணும். என்னைக்கும் கண்ட நாயந்தானே இது, கெடந்து தொலையிது.
ஒம்போதுப் பிள்ள பெத்தவளுக்கு தலச்சம் பிள்ளக்காரி மருத்துவம் பாத்த கதையா அந்த பாடமாத்திங்களுக்கு என்னா மயிரா தெரியிது? எதயும் அத்துப்படியா தித்துமானம் பண்டுதுங்களா? நாம்பு நாம்பா மாத்தர! கொலாயச் சுத்திச் சுத்தி வற ஊசி, ஏத்தி காசப்புடுங்கதாம் பாக்குதுங்க.
மட்டக்கார மாதுப்பிள்ள மவனுக்கு காசக்குளுரு வந்து எடப்பாடிக்கி கொண்டி ஒரு டாக்டரிண்ட ஊசி போட்டதுதாஞ் சாக்கு! ஏப்பா பையனுக்கு மேலுப்பூரா பத்துபத்தா தோலு உரிஞ்சிக்கிட்டு வருதே நல்லம்பாம்பு சட்டையாட்டம்! இங்கயிருந்து சேலம் நாலு ரோட்டுக்கு ஓடி சுந்தர்ராசி ஆசுப்பத்திரியில சேத்தி ஒன்ற லட்சம் செலவு பண்டனதுதான் தொச்சம் பையந் தெளிச்சியாவல. இன்னைக்கோ, நாளைக்கோன்னு இழுத்துக்கிட்டு கெடக்குது! இந்த ரட்சணத்துல ஊசி போட்ட மவராசன.
“என்றா தாயோலி இப்பிடி பண்டிப்புட்டி”ன்னு நாயங்கேட்டா.
“டேய் ஆசுபத்திரியிலிருந்து பையன உசுரோட கொண்டு போவ மாண்டிங்கடா”ன்னு ஆளு வெச்சி மெரட்டறானாம். காசக் குடுத்துட்டு காண்டுப்புண்டய பாத்தியா?
இவுத்த இருக்கற குருவா கெழவியிண்ட கையக் குடுத்தா வவுத்துல இருக்கறத ஆணா, பொண்ணான்னு கண்ட வெச்ச மாதர சொல்லிப்புடுவா... ம்... கொறத்திப் புள்ள பெத்தா கொற வந்தான காயந்திங்கனும்?
“பொறப்படறீப்பிள்ள சேலத்துக்கு”ன்னு
நானு எங்க கருவாச்சிய இழுத்துக்கிட்டு காரு ஏறி மேச்சேரி வர்ரதுக்குள்ள அவிங்க அம்மாக்காரி தகோலுத் தெரிஞ்சி பையிங் கையிமா மூட்டக்கட்டிக்கிட்டு வந்துட்டா, மவள என்னம்மோ ஆசுபத்திரியில கெடயில போடறாப்ல. இந்த திருடி மலயாமூட்லயிருந்து போனுபோட்டுச் சொல்லியிருப்பா
“வாடி ஆயா என்னப்பெத்தவளே! இந்த கால கண்ட ஐயன் சேலங்கூட்டிக்கிட்டு போறான். திலும்பி கூட்டியாரதுக்குள்ள என்னய கொன்னாலுங் கொன்னுப்புடுவாண்டி”ன்னு எங்க மாமியாளக் கண்டாவே எனக்கு பொச்சி வாயெல்லாம் எரியும். வவுத்துப்பிள்ள கீழ நழுவறாப்பல பேசுவாளே ஒழிய காரியத்துல ஒண்ணுமிருக்காது.
ஒரு ரெண்டு வருசத்திக்கு மிந்தி எங்கூட்டுக்காரி நெறமாசம், கட்டுச்சோறு ஆக்கிப்போட்டு அவிங்கப்பமூடு கூட்டிபோயிந்தாங்க. அந்தெட்டு எங்கூட்டாளி செந்திலான் வூடுகட்டி சம்ரட்ண வெச்சிருந்தான் திலுப்பூர்ல. நானு வர்லயின்னாலும் அவன் வுடல.வாடா வாடான்னு ஒரேத் தொந்தரவு. சேரி தெலையிது எங்கூட்டு அக்கப்போருலயிருந்து ஒருநா கண்ணுக்கு மறப்பா எங்கியாச்சும் இருந்துட்டு வர்லாமுன்னு கௌம்பனன்.
போற தடத்துல மேட்டூருக்குப் போயி இவளப் பாத்துட்டு ரெண்டு பழங்கிழம் வாங்கிக் குடுத்துட்டு போலாமின்னு போனா, ஏப்பா இந்த கொலவாரிங்க ஒண்ணுங்கூட வூட்ல இல்லப்பா. எங்கியோ பெரிய காரியம் ஆயிப்போச்சின்னு இவள ஒருத்தியும் தனியா வுட்டுட்டு போயிரிச்சிங்க. பொம்பள மேலு வேற மினுமினுன்னுருக்குது, மொவற வேற வெளுத்து சொரந்துக்கிட்டுருக்குது. எந்நேரம் வேணுமின்னாலும் புளள் பொறந்துக்கும் ஆருக்கண்டா?
எனக்குன்னா திலுப்பூரு போவ மனசே இல்ல. இருந்தாலுஞ் செந்திலாங்கிட்ட வர்ரன்னு சொல்லிப்புட்டமே... மடியிலிருந்த மூவாயிரத்த எடுத்து இந்த காமாலச்சிக்கிட்ட எதுக்கும் செலவுக்கு வெச்சிக்கடின்னு குடுத்துட்டு “பத்திரமாயிருப்புள்ள விடிஞ்சதும் ஓடியாந்துடறன் ”ன்னு வண்டியேறி நான் அந்தண்ட போவ, இவுளுக்கு இந்தண்ட புள்ள நோவு கண்டுருக்குது.
என்னாப்பண்டுவா? ஒரு சுடுதண்ணி வச்சிக்குடுக்கக்கூட ஆளு இல்லாம வூட்டுக்குள்ற குறுக்கு மறுக்கா நடந்துகிட்டே மவ நோவு பொறுக்கமாட்டாம துடியா துடிச்சிக்கிட்டு இருந்துருக்கறா. அவ சின்னப் பொறந்தவன் அக்காளச் சித்தய பாக்கறதாம் அழுவுறதாஞ் சித்தய! அவனுக்கு என்னாத் தெரியும் பாவம் அறியாப் பையனுக்கு? எந்தச்சாமி புண்ணியமோ! பக்கத்தூட்டு மாங்காக் காரம்மா இந்த தாக்கல கேட்டவ கடயப் போட்டது போட்ட வாக்குல வுட்டுட்டு மவங்காரன ஒரு வண்டி கொண்டாரச் சொல்லி இவள ஏத்திக்கொண்டி கவுருமெண்டு ஆசுபத்திரியில சேத்தியிருக்கறா.
விடிய, விடிய முக்கி பிள்ளப்பெத்த நோவுக்கூட எம்பொண்டாட்டிக்கி பெருசில்ல, இப்பிடி வாயும் வவுறுமா இருக்கறவள இட்டாந்து சீருப்பாக்கறதுக்கில்லாம ஒண்டி ஒரியா வுட்டுட்டு அப்பமூடு ஊருமேல போயிட்டாங்களே, அந்த மொடமசுரு புடிச்சவன் கண்டாரக் கழதையின்னு வந்து நேந்தப்படி பேசனா என்னா வதுல சொல்லறதுன்னு அழுது கிட்டிருந்திருக்கறா.
கெழக்கு வெளுக்கும் மிந்தியே நானும் ஓடியாந்துட்டேன். எம்மவள பாத்தன். கோவங்கீவமெல்லாம்போன எடந்தெரியல. ஆரையும் பேசல, எதயுஞ் சொல்லல.
அப்பறம் ரெண்டு நாளு கழிச்சி இவளோட ஆயாளும், பொறந்தவனும் மெட்ராசியிலிருந்து ஆடிக்கிட்டு வந்தாங்க. வந்தவுங்க எதோ ஆளு அம்பு இல்லாத தாவுல மவக்காரி நல்ல விதமா பிள்ள பெத்துக்கிட்டாளேன்னு சந்தோசப்படறத வுட்டுட்டு வந்த வெசயில.
டேய் ஆர்ரா பிள்ளய சீன்ரத்துல கொண்டாந்து தள்ளுனது? பூமா ஆசுபத்திரியில எம்மவ பிரசவத்துக்கு அஞ்சாயிரம் பணங்கட்டி டோக்கனு வாங்கியிருக்கறன். இந்த நாத்தத்துல வேண்டா, தூக்குங்க தூக்குங்க! காரக்கூப்புடுங்க பிளசரக் கூப்புடுங்க அங்கயிங்கன்னுச் சும்மா குதிக்கறாங்க. அதுவும் இவப்பெரிய பொறந்தவனுக்குன்னா இடுப்புல வேட்டியே நிக்கல. ஹும் இவிங்க புண்ட வருச எனக்கு தெரியாதா?
“பிள்ள கொலாய மூடிக்கிட்டு கம்முகு இருக்கச் சொல்லு! வலி பொறந்தா ஒதவி ஒத்தாசிக்கு எசவில்லாம என்னாப்பண்டுவான்னு துளிக்கூட கருக்கட இல்லாம தலச்சம்பிள்ளத்தாச்சிய வுட்டுட்டு அவிங்க ஊருபெரயாணம் போனதே பெரிய்ய குத்தம். பொறவு இங்க வந்து அது நோனி இது நோனின்னு எச்சாப் பேசனாங்க... செத்தாலும் இலல் பொழச்சாலும் இல்லன்னு ஒரேடியா கழிச்சிக்கட்டிப்புட்டு ஆசுபத்திரியிலயிருந்து இப்பிடியே உன்னய கூட்டிக்கிட்டுப் போயிருவஞ் சாக்கிரிதி! உன்னு மரிகேதிக் கோசரம் வேணும் வௌயனுமின்னு பாக்கறன்”னு நானு எங்கூட்டுக்காரியிண்ட ஒரே வார்த்தயாச் சொல்லிப்புட்டான்.
வெத்துவேட்டு நாயம், வெறும் பழம பேசறதுல மட்டுமில்ல எங்க மாமியா ஒரூட்ட ஒமபோது வூடாப் பண்றதலியும் கெட்டிக்காரி.
அண்ணந்தம்பி நாங்க அஞ்சாறுப்பேரு. ஆளுக்கு தக்கனப் பாடு! அவரவருச் சம்பாதன. ஓராளுப் பன்னாட்டு எல்லாம் ஒட்டுக்காத்தான் இருந்தம்.
எனக்கு கண்ணாலம் ஆன புதுசு. ஓகாதியோ என்ன கருமாந்தரமோ! மொத நோம்பிக்கி கூப்புட மாமியாக்காரியும், நங்கையாக்காரியும் வந்துருந்தாங்க. தவுசு நாடகத்துல வர்ற பேரண்டச்சி வேசமாட்டம் எம்பொண்டாட்டியோட அக்காக்காரி நல்லாப் பெருஞ்சாதிப்பொம்பள. கரும்புக்காட்டுக்கு நெருப்பு வச்ச மாதிரி நெறம். தண்ணியக் கழுவி நெவுலப் பூமியிலப் பொதைக்கிற ரகம். நோம்பிக்கின்னு வூடு வாசச் சுத்தம் பண்டி துணிமணி தொவச்சி சாமானஞ்சட்டெல்லாம் வௌக்கி கமுத்தி வெச்சிருந்தாங்க. வந்தவங்க ரெண்டுபேரும் ஒரு பக்கமாயிருந்து நோட்டம்போட்டாங்க. சனி மூலையில கோந்திருந்தவங்க இருந்தாப்பிடியிருந்து எங்கூட்டுகாரிய கட்டிப் படிச்சிக்கிட்டு அழுதாங்க பாரு ஒரு அழுவாச்சி ச்சும்மா ஏங்கி ஏங்கி அழுவறாங்கப்பா! அழுவாச்சியோட அழுவாச்சியா எங்க மாமியா “அய்யோ கண்ணு அல்லா வேலயும் நீயேத்தாஞ் செய்யணுமா? வஞ்சிக் கொடியாட்டம் வளத்தனனே! மாடா ஒழைச்ச் ஒடாத் தேயிறியே மவளே”ன்னு நீலிக்கண்ணீரு வடிச்சா.
கூடமாட வேல செஞ்சவிங்க காதுல இது வுழுந்தா அவிங்க வவுறு வாயி பத்துமா பத்தாதா? ஏப¢பா பத்தாயிரம் இருவதாயிரம் போட்டு கண்ணாலம் பண்டிகிட்டு வர்ரவன் பொம்பளைய சாமியூட்ல வெச்சி பூப்போட்டு பூசையா போடுவான்? ஒடம்பு வளையாம ஒரு வேல வெட்டி செய்யாம நெவுலடி நாத்தாட்டம் இவிங்க குந்தன தாவுல குந்திக்கிட்டு இருக்க ஆளு அம்பு வெச்சி வேலப்பண்ட நாம்பென்னா குபேரமூடா? நாஙகூப்புட்டுச் சொல்லிப்புட்டன. “விருந்தாட வந்தமா, வவுறாறத் தின்னமான்னு வந்த சோலியப் பாத்துக்கிட்டு போயிக்கிட்டேயிருக்கனும். நடுப்பற குசலம்பேசி வூட்ல குச்சி முறிச்சி போடற நெனப்போட ஆராச்சும் இந்தவூட்ல அடியெடுத்து வெச்சா மானங்கெட்டுப் போயிரு”மின்னு.
அப்புறம் ஆறு மாசம் ஒரு வருசம் நோம்பியாவுது நொடியாவுது ஒருத்தியும் எந்த விசேசத்துக்கும் எங்கூட்டுப்பக்கம் தல வச்சிப் படுக்கல. ஊரான ஊருக்கு மணிக்கி ஒம்போது வண்டி, பத்து வண்டி வந்து போனாலும் பாழாப் போன சந்தக் கூட்டத்துல சனம் பஸ்சுக்குள்ற ஏற முடியிதா? நல்ல நாளுலியே நெலத்துல கால ஊனி நடக்கமாண்டா, ஒடற பஸ்சிலியா இவ ஒவஞ்சி நிக்கப்போறா.
மிந்தி ஓராடம் மாமனாருக்கு வருசாந்தரங்கும்பட நானும் அவளும் எங்க குட்டிப்பிள்ளயும் மேட்டூருக்குப் போனம். பதனாறு கமானத்தாண்டி சேலம் கேம்ப்பு திலுப்பத்தல கிட்டு பஸ்சு டைவரு போட்டாம்பாரு பிரேக்கு! ரெண்டாளுச் சீட்டியிலக் குந்தியிருந்தவ பிள்ளயோடப் போயி படிக்கட்டுல வுழுந்தா. கண்ண மூடி கண்ண தொறக்கறதுக்குள்ள ரெண்டு உசுருங் காணாமப் போயிக்கும். நானோடி பிள்ளயத்தூக்கனதும் வுட்டன் இவுளுக்கொரு அப்பட்ட பொம்பளைக்கி அத்தன அசால்ட்டு மயிரு! புடிமானங் குடுத்து ஒக்காரத் தெரியாதா? உருசுப் போனாலும் போயிட்டுப்போவுது, ஒரு நாள்ல அழுது தொலச்சிப்புடலாம். காலு, கையி ஒடஞ்சி கட்லோடக் கெடந்தா பீயி, மூத்ரம் அள்ளி... அந்தச் சீரெழவ ஆரு கண்ல பாக்கறது?
நாலு பஸ்சு, அஞ்சி பஸ்ச வுட்டுட்டு அதுப் பொறவு ஒரு பஸ்சுல ஏறனம். எங்க பொடுசலையும் அவளையும், அவிக ஆயா¬யும் ஒருத்தாவுல குந்த வெச்சிட்டு நானுப்போயி தனியா ஓரெடம்பாத்து ஒக்காந்திக்கிட்டன். மடியில ங்கெண்ணங்காரங் கேம்பரா மூணன்னங் கெடந்தது. இந்தப்பிள்ள சில்லி வண்டு பண்ற ராவுடியில அதெயெங்கியாச்சும் உளுக்காட்டியுட்டுட்டா? ஒரு உருவா? ரெண்டு உருவாயா?
ஒவ்வொண்ணும் பத்தாயிரம், பாஞ்சாயிரம்! நேரங்கண்டு வவுத்துக்கு சோறு குடிக்காம, முடிச்சுப்போட்டு முடிச்சிப்போட்டு சேத்தி வெச்சி வாங்கனப்பண்டம். அத்தன வெலப் போட்டு வாங்கியொண்ணும் வீணாப்போவல. முட்டுவலிக்கி தவுந்த வருமானம். போன பக்கம் வந்த பக்கம், ஒரு கண்ணாலங் காரியம், சீருசெனத்தி, வூடு சம்ரட்ன எவுத்த திலம்புனாலும் சீத்தாராமம் போட்டாத்தான்.
அதோட நின்னிருந்தா இந்த அவகேடு வந்துருக்காது பாழாப்போன சீனிமா ஆச மவன பழி எடுத்துப்புடிச்சி. ஆறேழு வருசமா, அப்பனாயா, பெத்து பொறப்பு பொண்டாட்டி பிள்ளைங்கன்னு ஆரோடயும் ஒட்டு ஒறவு இல்லாம சேலத்துக்குப் போறது, மெட்ராசிக்கி போறது.. ஆரு ஆரையோ சினேகிதம் பண்டி பட முந்தா புடிச்சான். அதல ஒரு பத்தும் நூறும் சம்பாரிச்சான். படிப்படியா மின்னுக்கு வந்தான். மெட்ராசி பசாருல ஒரு வூடு வாங்கனான், ஆளு அம்பு சேந்தது. ஆருக்கண்ணு பட்டுச்சோ! எவுரு கண்ணுபட்டுச்சோ! இல்ல அந்த ஆண்டவனுக்கே பொறுக்கலையோ! ஆத்தூருக்கு அக்கட்ட பெரம்பலூரிண்ட சிமிட்டி ராரி அடிச்சி, துள்ள துள்ள போயிச்சேந்துட்டான். முப்பத்தியேழு வயசி ஒரு வயசா? பாழுஞ் சீவம் போவயில எப்பிடித் துடிச்சதோ! மவராசன் என்னான்னா நெனச்சானோ! தாயோலி ஊருக்கு வந்தா ஒரு நிமிசம் வூட்ல நிப்பானா? கூட்டாளிங்க கூட்டாளிங்க... அவிக கொலாயிப் பொறனச் சுத்துவானே ஒழிய அப்பனாத்தா, பொறந்தவ மாரு ஆரும் அவங்கண்ணுக்கு தெரியாது. ஒக்காந்து அவிங்களோட ஒரு வார்த்தப் பேச மாட்டான். வீதி வாசக்கால்ல நின்னு ங்கெம்மாக்காரி
“கண்ணு வந்து ஒருவாச் சோறு குடிச்சிபுட்டு போடா”ன்னு வேண்டாத நாளு இல்ல. நிக்க நேரமில்ல, நிக்க நேரமில்லன்னுப் பொட்டியத் துக்கிக்கிட்டு ஒடுவாஞ் சண்டாளன்.
செத்தவன வாரிக்கொண்டாந்து நடு வூட்லப் போட்டு எடுக்கல நிக்க நேரமில்ல நிக்க நேரமில்லன்னு எரிக்க கொண்டுப் போயிட்டாங்க.
தோளுமேலேயேத் தூக்கிக்கிட்டு திரிஞ்சானே அவம்பிள்ள! பாவம், அது அப்பங்காரன் மொவத்தவக் கூட பாக்கல தூங்கி முழிக்கறதுக்குள்ளே கட்ட வெந்துபோச்சி. இருக்கறமுட்டும் வாங்கித் தின்ன நாயிங்க இன்னைக்கி எங்கிட்ட லட்சம் வாங்கனான், கோடி வாங்கனான்னு கழுத்துக்கு துண்டு போடறாங்க. நம்ப பொழப்பே நாறிக்கிட்டு கெடக்குது. இதுல எங்கப்போயி கடந்தீக்கறது? சீட்டுக்காரம் பொண்டாட்டி பணம் வல்லையின்னா மருந்தக் குடிக்கறன், மாயத்தக் குடிக்கறன்னு நேத்து ராத்திரி ஒரே ஆர்ப்பாட்டம். நாயக்காரனங்க வந்து எதோ கொஞ்சங் கொஞ்சமா அவஞ்சொத்த வித்தாச்சும் கடங்கட்டுன்னு நாயஞ்சொல்லிப்புட்டு போயிட்டாங்க. எத விக்கிறது? அரநாக்கவுறு மொதக் கொண்டு அடமானமுன்னு அங்கபோயி பாத்தப்பறந்தாஞ் தெரிஞ்சது. என்னாப் பண்டுவ? எதக்கண்டு கடங்கட்டுவ? உள்ளது இந்த கேம்பரா. ரெண்டு மூணு டிவிப்பொட்டி. அதப்பத்தி நாம்பென்னதக் கண்டம்? தலமேல தூக்கி விக்காத கொறயா சுத்தாத எடமில்ல. அடிமாட்டு வெலைக்கி கேக்கறாங்க மனசொம்பல, பூராம்அவன் ரத்தமாச்சே...
புது பைட்டேண்டுல எறங்கி அவிங்கள ஆசுபத்திரிக்கி மொள்ள நவுத்திக்கிட்டு வர்றதுக்குள்ள கண்ணாமுழி பிதுங்கிப் போச்சி. சொந்த ஆசுபத்திரின்னு தாம் பேரு! ஊருப்பட்ட நோவுக்காரனெல்லாம் ஒட்டா வந்து குமியராங்கடாச் சாமி! அதத கெவுணிக்க தனித்தனி ஆளு.
இவளக்கொண்டி ஒரு பொம்பள டாக்டரிண்ட காட்னா,அவ ரத்தமும், மூதரமும் சோதிச்சக்கிட்டு வரச்சொல்லி சீட்டு எழுதிக் குடுத்துட்டா. அதும்பொறவு கேணு வேற எடுத்துப் பாக்கணுமாம்.
என்னாக் கல்லெடுப்பா! ஒவ்வொண்ணுக்கும் சாரியில நின்னு, நின்னு, காலே மரத்துப் போச்சி. எல்லாம் முடிஞ்சி கேணுப் போட்டு பாத்தா, படம் நல்லா வுழுவலியாம், வவுறு நம்ப தண்ணிக் குடிச்சப்பொறவு திலிப்பியொருக்க எடுக்கச் சொல்லிப்புட்டா அந்தப் பொம்பள. மறுக்கா படம் எடுக்கறவனப் போயி பாத்தா,
“என்னம்மா உங்களோட ஒரே ரச்ச போயிட்டு பொறைக்கி வாங்க”ன்னுப்புட்டான். அவனச்சொல்லியும் புண்ணியமில்ல. அவஞ் சூத்துப்பொறன அஞ்சாறு ரைனு.
சரிசரின்னு இவுளுக்கும் அவிகம்மாளுக்கும், பிள்ளைக்கும் அவுத்தியே ஆளுக்கொரு சோத்துப் பொட்டணமும், அதோட துளித் துளி மழக்காயிதத்துல சர்பத் வித்தாங்க அதயும் ரெண்டு வாங்க கையில துருத்தி,
சோத்தத் தின்னுப்புட்டு நெவுல்ல குந்தியிருங்க. நாம்போயி இந்த கேம்பரா எங்கியாச்சும் வெளையாவுமான்னு பாத்துட்டு வரன்னு சொல்லிப்புட்டு நானு சோட்டானுக்குப் போனு போட்டான். மேட்டூருல அய்ட்டி படிக்கக்குள்ள சேலங் கேம்ப்லயிருந்து எங்கூட ஒரு மலையாளத்தானும் படிச்சான். செரியான நெனப்புக்காரன். எதயும் அவங்கண்ணுப் பாத்திச்சின்னா கையி செய்யும். ஐயோன்னு போனா ஆருக்கும் ஒரு ஒதாரண நெனைக்கிறவன். அவந்தான் இவத்த சேலம் நாலுரோட்டுண்ட போட் டாக்கட, லேடியாக்கட, டேப்புக்கட வெச்சிருந்தான்.
எதனாலும் இந்தச் சாமானத்தப் பாத்து வித்தக்குடுறான்னு மிந்தியே ஒருநாக் கேட்டிருந்தன். அவனும் சேலம் வந்தா வாடான்னு சொல்லியிருந்தான். இவிக தின்னு கை கழுவறதுக்குள்ள பையன் பரோர்னு வண்டிப்போட்டுக்கிட்டு வந்துட்டான்.
பத்ரம் பத்ரமுன்னு
எங்கூட்டுக்காரியிண்டச் சொல்லிப்புட்டு, மாமியார்க்காரி என்னா ஏதுன்னு கேக்குமின்ன வண்டியேறிக் குந்திக்கிட்டான். வண்டியோட்ட எங்கப்படிச்சானோ ரோட்ட வழுக்கிக்கிட்டு சல்லுனு போவுது சக்கரம். அவங்கடைக்கிப் போயி சேர்றதுக்குள்ள பையனுக்கு அஞ்சாறு போனு வந்துட்டது. வண்டிக்கி எண்ணப் புடிக்கலாமுன்னு ஒரு பங்குல நிறுத்தனாம்பாரு அவுத்திக்காலியும் போனு கினிகினியிங்க
“பொட்டாப் பொழுதுக்கும் அடிச்சே இருக்குதே! அத எடுத்து பேசித் தெலையிடாச் சித்த“”ன்னு நானுச் சத்தம்போட, அவம் பேசிப்புட்டு வைக்குமிந்தி மொவற சுண்டிப்போச்சி.
“என்றா சமாச்சாரம் ஆர்ரா மாப்ள போனுல?” நாங் கேக்க
“நம்ப மணியவிங்க அம்மாதாண்டா பேசினிச்சு. நாமக்கல்லு மோகனூருல போன வாரந்தாண்டா அவனுக்கு பொண்ணு பாத்து உறுதி செஞ்சம். அந்தப்பிள்ளய வேண்டான்னுப்புட்டு, அதாரோ இன்னொருப்பிள்ளய கூட்டியாந்து வூட்ல வெச்சிக்கிட்டு அவளத்தாங் கண்ணாலஞ் செஞ்சிக்கவன்னு அடம் புடிச்சி ஆட்டங்கட்றானாம். அவிங்க சித்தப்பமூட்ல பஞ்சாயத்தாம். கையோட வர்றச் சொல்றாங்க. வர்றியா ஓரெட்டு போனதும் வந்தரலாம்”மின்னான்.
நானுங் சேரியிங்க வண்டித்திலுப்பி அன்னதானப்பட்டிக்கி வுட்டான். எங்களோட மணி, மணியின்னு இன்னோருப் பையனும் படிச்சான். மலையாளத்தாங்கூட அவனும் இரும்பாலைக்கி போயிக்கிட்டிருந்தான் வேலைக்கி. அவங்கூட்டு நல்லது கெட்டதுன்னா மலையாளத்தாந்தான் மொகாம எதயும் மின்ன இருந்துச் சேய்யிவான்.
அட அப்பா! அங்கப்போயிப் பாத்தா, அது வூடா சந்தக்கடையான்னே தெரியல. மணிப்பையனோட அப்பன் ஒருபக்கங் கத்தறான், அவிங்கம்மா ஒரு பக்கம் அழுவுறா, அவம்பொறந்தவன் ஒரு பக்கங் கத்தறான் அவஞ் சித்தப்பனும், சித்தியும் ஒரு பக்கம் பேசறாங்க, இவனொருபக்கம் நாம்போயி சாவறங்கறான். அவங்கூட்டியாந்தானே இஷ்டக்காரி அந்தப்பிள்ள ஒரு பக்கம் நாம்போயி கரண்டுல கைய வெக்கிறங்குது.
நாயங்கண்டு பேச முடியல. ஒண்ணுக்கு ஒண்ணு ஆரும் வுட்டுக் குடுக்கறாப்பல இல்ல. எரியறதத் தணிச்சா கொதிக்கறது அடங்குமின்னு அந்தப் பிள்ளய கூட்டிப்போயி சேட்டந் தனியாப் பேச்சிக் குடுத்தான். அதுவும் நாயம் மேல நாயம் போட்டதாட்மிருக்குது. ஒண்ணும் வேலைக்காவல வந்ததும்
“ஏண்டா ஒரு பொட்டப்புள்ள பாவத்த கையேந்தற”ன்னு மணிப்பையஞ் செவுனியக்கட்டி வுட்டாம் பொலிச்சின்னு ஒரு அர
“வராத நாய ஏங்கவுறு போட்டு இழுக்கணும்? வாண்டான்னா இவன வுட்ருங்க. பிரியமில்லாம அந்தப்பிள்ளய இவனுக்கு நாம்ப கட்டி வெச்சா மறுக்க திருட்டு நாயி எங்கியாச்சும் ஓட்டம் புடிச்சி வுட்டுட்டான்னா அந்தப்பிள்ள பொழப்பு பாழாப் போயிரும். நிச்சியத்தோட கண்ணாலத்த நிறுத்திப்புடுங்க. இந்தாம்மா பொண்ணு! பெரியவிங்க கோவந் தாழட்டும். அப்பறம் ஒரு நல்ல நாளாப்பாத்து கண்ணாலங் கார்த்திய வெச்சிக்கலாம் நீப்போயி தாயோடப் புள்ளயாச் சேரு. கொஞ்சம் வுட்டுப்புடி ஆயா மவராசி!” ன்னு ஆளாளுக்கு பித்தி சொல்லிப்புட்டு மணிப்பையனக் கொண்டி அந்தப்பிள்ளய பஸ்சு வெச்சுட்டுட்டு வரச்சொன்னம். போனவம் போனவனே! வவு நேரமாவியும் பையன் வரவேயில்ல.பையனும் பிள்ளயும் எங்கியாச்சும் எஸ்சு ஆயிட்டாங்களா என்னமோன்னு திலுப்பி அவனத் தேடிகிட்டு ரெண்டுபேரும் பைட்டேண்டுக்கு வந்தா டாப்பிங்குக்கு மின்ன ஒருக்கட்யா மரத்தடிய ரெண்டுங்களும் அழுத கண்ணும் சிந்துன மூக்குமா நிக்குதுங்க. ஆனமுட்டும் அவிங்களக்கு தேறுதலச் சொல்லி புள்ளய பஸ்சு ஏத்தி வுட வந்தமா, ஏப்பா அந்நேரம் ஒரு போலிசு வேனு எங்களத் தாண்டிப்புட்டு மேக்க புர்ர்ருன்னு பறந்து போனது, போன வெசயில திலும்பி கெழக்க வருதே! வண்டியில குந்தியிருந்த சர்க்கிளும் ஏட்டும் என்னா ஏதுன்னு நெதானிக்கிறதுக்கில்லாம, ஏறுங்கடா வண்டியில, ஏறுங்கடா வண்டியிலன்னு குண்டாந்தடியில முட்டி முட்டியா குடுக்கறாங்களே பெட்டு!
ஆன்னு வாயத்தொறக்க வுடல மவராசனுங்க. வண்டி நூறுல டேசனுக்குப் பறக்குது. அட வெட்டுப்பழி குத்துப்பழியின்னாக்கூட இத்தன கெடுபுடி இருக்காதேர எனத்துக்குடா இவுனுங்க மல்லுக்கூட்டி நாலுப்பேத்தயும் டேசனுக்கு கொண்டு போறாங்கன்னு ஒண்ணும் பிருவே சிக்கல.
அட அங்கப்போயி எறங்கனமா... வாரவம் போறவனெல்லாம் தாட்டுப்பூட்டுன்னு குதிக்கறான். ஐயா வரட்டும் ஒரு கேசு எழுதறங்கறான். அந்தப்பிள்ளய ஒருத்தரு மாத்தி ஒருத்தரு மொறச்ச் பாக்கறதும், மணிப்பையனுக்கு ஒரு ஈடு வைக்கிறதும், காரித்துப்பாத கொறயா எங்களப் பேசறுதுமாவே இருக்கறாங்க.
அவிங்கக்கிட்ட வாயத்தொறந்து பேச முடியல எதச்சொன்னாலும் அந்த கொலகாரப் பாவிங்க நம்பல. அடவொரு போலிச்சிக்காரன் வந்ததும் அந்தப்பிள்ளய “ஏண்டிப் பொம்பள உனக்கு எவ்ள ஏத்தமிருந்தா பொச்சிக்கடியில டேசன வெச்சிக்கிட்டு, நட்ட நடு பசாருல ரேட்டு பேசுவ? உனக்கெல்லாங் கொலுவ காய வச்சி சொறுவனாத்தாண்டி அடங்குவ”ன்னாம் பாத்துக்க அப்பத்தான் எனக்கு.
ஓஹோ இந்த மாமாப்பசங்க ஆளு நெலவரந் தெரியாம அத்தாந்தாரமா நம்ப நாலுப்பேத்த பிராத்தலு கேசுன்னு புடிச்சாந்துட்டாங்கடான்னு, ரெவலா நெப்புப்பட்டது. அட ஆண்டவனே சென்றாயா நாம்ப நெனச்சி வந்தது என்னா? இங்க நடக்கற காரியம் என்னா?ஆசுபத்திரியில பொண்டாட்டிக்காரிய தன்னப்பாலவுட்டுட்டு நம்பளுக்கு எனத்துக்கு இந்த வேல? அவக்காதுக்கு இதுபோனா என்னா நெனைப்பா? அட அவிங்கம்மாக்காரிதான் என்னாச் சொல்லுவா? நெனைக்க நெனைக்க எனக்குன்னா அப்பிடியே நெரிஞ்சி முள்ளு மேல நிக்கற மாதிரி இருக்குது.
என்னு ஆயுசுக்கும் நானு ரெண்டே ரெண்டு தக்கந்ததான் டேசனு படி ஏறியிருக்கறன்.
எங்கவூடு, குண்டியாமூடு, கங்காணியூடு மூணு வூடும் ஒட்டுச்செவுரு. அந்தக்காலத்துல ஒரூட்டுப் பங்காளிங்க அண்ணந்தம்பி மூணு பேரும் சேந்து ஒட்டா வூடு கட்டியிருந்துருக்கறாங்க. இதுல கங்காணியூடு மட்லுந்தான் ஆதிரியிலிருந்து குடியிருக்கறவங்க. நாங்களுங் குண்டியானும் அவரவுரு வெலக்குடுத்து வாங்கனது.
வூட்ட வெல பேசயில அதும்பேர்ல எதனாச்சும் வில்லங்கம் இருக்குதான்னு அவனுங் கண்டுக்கல, நாங்களுங் கண்டுக்கல. இருந்திருந்தாப்பிடி ஒருநாளு வந்து என்னூட்டு முட்டும் அத்துப் பிரிச்சி கூரையடி ரெண்டு அடி நெலம் உடுன்னா நடுவூட்ட இடிச்சிப்புட்டு நாங்க என்னாப் பண்றது?
இந்தக குண்டியான்ன...
சலதாரய அடைக்கிறான். தட வழியில விவசாய முள்ள வெட்டிப் போடாறான். ஆம்பளைங்க வூட்ல இல்லையின்னா பொம்பளைங்கள ஆயா, அம்மான்னு பேசறான். என்றாப் பண்றது? என்னிக்கி இருந்தாலுந் தலவலி தலவலிதாண்டா புள்ள இல்லாதவங்கிட்ட எனத்துக்குடா ஓரியாட்டம் தொலைஞ்சி போவுட்டும்! அவனுக்கு ரெண்டடி நெலம் வுட்டுத்தொலையிங்கடான்னு ங்கண்ணங்காரஞ் சொன்னதும் ச்சேரின்னு நாங்களும் ஒத்துக்கிட்டம். அந்த எட்டுல என்ற தங்கச் சிக்கி வேற கங்கணப்பொருத்தம் கூடிக்கிச்சி. சேரி கண்ணாலம் முடிஞ்சப்பொறவு வூட்ட இடிக்கலாமின்னு குண்டியாங்கிட்ட வாய்தா கேட்டம். அவனுஞ் செரியின்னுதாஞ் சொன்னான். அட ஆரு அவனுக்குச் சொல்லிக் குடுத்தாங்களோ, என்னாச் சமாச்சாரமோ ஏப்பா மாப்ள திடீருனு குறுக்கத் திலும்பிக்கிட்டாம்பா.ஒரு நாளு எங்க தாயி தண்ணி வாத்துக்கிட்டு இருக்க, குண்டியாங் குடிச் சிப்புட்டு வந்து போதையில ஏப்பா நல்லா இத்தாச்சோட்டு கருங்கல்ல பொடக்காலியில்ல தூக்கி போடறதா? எம் பொறந்தவ வீறுவீறுன்னு கத்தி பப்பார, அடுப்படியிலிருந்த எங்கூட்டுக்காரி ஓடி,
“ஏண்டா குடிகாரா, இப்டி கல்லெடுத்து எய்யற? படாத எடத்துல பட்ருந்தா வயசிப்பிள்ள கதி எனத்துக்காவறது? எதுக்குடா அக்குறும்புல அழியற”ன்னு கேட்டதுதாம் மாயம்...
ஏப்பா ஆசாரியூட்டு கரக்கட்டுல இருந்து கருங்கல்லு ச்சும்மா விர் விர்ருன்னு பறக்குதாம்.
பொம்பளைங்க விரும்புத்தி புடிச்சாப்ல நின்ன வாக்குல நிக்க, ஒருக்கல்லு எங்கம்மா பாதத்துல வுழுந்து நச்சிப்புடிச்சி. ராவு டூட்டிக்குப் போயிட்டு வந்து தூங்கிட்டிருந்தவன் என்றா ரவுசாவுதேன்னு அதற பதற எந்திரிச்சோடிப்பாத்தாங் கெம்மா காலடியில நத்தமா போவுது. எங்கயிருந்து வந்ததோ அத்தன வெறி, போன வெசயில குண்டியான கீழத்தள்ளி மிதி மிதின்னு மிதிச்சம்ப்பா.
அவ்வளவுதாங் குண்டியான் ஓடனதும் அவம் பங்காளி பொன்னுச்சாமி வாத்தியாரு மவன் செலுவராசயும், குட்டப்படி ரத்தனம் பிருசங்கிட்டுப்பைனையுங் கூட்டிக்கிட்டுப் போயி நங்கோலி டேசன்ல கேசு குடுத்துட்டான். அதோட வுட்டாங்களா? ஊடுநம்ப கல்லெடுத்து இட்டவன ஒருத்தேவிடியாப் பையனும் ஏஅ என்னான்னு கேக்கல.
ஒண்டி குடியா ஊரவுட்டுப் ஊரு பஞ்சம் பொழைக்க வந்தவிங்க எப்டிறா எங்க ஆள கை தீண்டலாமின்னு நாயம் வேற வெச்சிட்டாங்க. ஒன்ற மாசமா டேசனுக்கு இழுக்கடிச்சி உருவா மூவாயிரத்த வாங்கித் தின்னு வழிச்சி நக்கனப் பொறவு பிரச்சன முடிஞ்சது.
ரெண்டாவது தக்கம், எம்பொறந்தவ கண்ணாலத்துக்கு பதனஞ்சி நாளுக்கு மின்ன நங்கோலி கோவாலு வாத்தியாரூட்டு அச்சாபீஸ்ல பத்திரிக்க அடிக்கக் குடுத்துருந்தம். ஒருநாபொழுது முச்சூடும் குந்த வெச்சிட்டிருந்துட்டு அந்தியோடத்தான் அடிச்சிக் குடுத்தாங்க. அத வாங்கி வலப்பையில வெச்சிகிட்டு சந்தப்பேட்ட திலுப்பத்துல நானு பஸ்சுக்கு நின்னுக்கிட்டிருந்தன். அன்னிக்கிங்கறப்பெட்டுக்கு கரட்டிப்பட்டிக்காரன் எவனோவொரு நாதேரி கொள்ளிச்சட்டி கச்சிக்காரனாம். சேலம் சீலநாக்கம்பட்டி பைபாஸ்ல லாரி மோதி செத்துப்போயிட்டானாம். போனவன் அவம்பொச்சி மண்ணோடப் போயிட்டான். இங்க ஊரேப் பூராந்தெரண்டு பைட்டேண்டு முக்குல அவம்போட்டா படத்த வெச்சி பூசப்பண்டிக்கிட்டு போற வார காரு வண்டிங்கள நிறுத்தி, பிட்டு நோட்டீசு ஒட்டிக்கிட்டு ஒரே அமர்க்களம், அட்டகாச்ம், அக்கப்போர எடுக்க முடியல.
ஒரு ஆறுமணி சுமாருக்கு அவத்திக்கி சலண்டபுரம் நரசிம்மன் டாக்கிட்ரு மேட்டூரு போவ வந்தாரே இல்ல, மேச்சேரி போவ வந்தாரோ தெரில. காரு போட்டுக்கிட்டு வந்துக்கிட்டிருந்தாரு.
எங்க தம்பி லோகனுக்கு கூத ஆப்பரேசன் அவரிண்டதாஞ் செஞ்சம். போவ வர பழக்கம். நல்ல மனுசன். இல்லாதவங்களக் கண்டா எளவுற பித்தி. இந்தக கொலவாரிங்க கையக்காட்டி ப்ளசர நிறுத்தம்பிடி அவரு கட கன்னியத்தாட்டி அந்தால்ல பத்தடி தள்ளிப்போயி நிறுத்தனாரு.
அதுதாம்ப்பா காரணம் வேற ஒண்ணுமில்ல. பிளுபிளுன்னு பத்து பதினஞ்சி டிக்கிட்டுங்க ஓடி உள்றயிருந்த மனுசன வெளிய இழுத்துப் போட்டுக் குப்பு குப்புன்னு குப்பறாங்கப்பா. பக்கத்துல இருந்த போலிசுக்காரனுங்க அவிங்கள வேண்டான்னுந் தடுக்கல வெலக்கியும் வுடல. நின்னுக்கிட்டு மனசார அநியாயத்த வேடிக்கப்பாக்கறானுங்களே, நானு ஓடிப்போயி.
அடேய், சாமி சாமியா இருப்பீங்களாம். அவரு கெவுருமெண்டு டாக்கிட்ருடா, வுட்ருங்கடா, வுட்ருங்கடான்னு தொண்டத்தண்ணி வத்த முட்டுங் கத்றன். என்னயத் தூக்கி கொடிக்கம்பத்தடிய போட்டுட்டானுங்க. நரசிம்மனும் சாதாரண ஆளு இல்ல. நல்லக்கண்ணு ஒருக்கோடியா ராமதாசி மவன் அம்புமணி முட்டும் போனு போட்டு பேசறாரு.அங்கப்பேசி இங்கப்பேசி எங்கியெங்கியோப் பேசி கடைசியில எஸ்.பி.முத்துமாணிக்கத்துக்கு போனுப்போயி, அவரு அங்கயிருந்த போலிசிகாரனக் கூப்புட்டு என்னய்யா கலாட்டுன்னு கேட்டா,அடிமேல அடிவாங்கி ஒதடு பிஞ்சி நத்தம் ஒவமலக்கல்லாட்டம் ஒரு மனுசன் நின்னுக்கிட்டு இருக்க, ஒண்ணும்மே நடக்கலங்கறானே அந்த சண்டாளன். அயோக்கியப் பசங்கள சாமானியத்துல வுடக்கூடாதுன்னு போயி டேசன்ல பேசு எழுதிக் கொடுத்துட்டு வந்தம் மனுசனுக்கு பல்லு போயி பவுடுஒடஞ்சி கடவாயி கிழிஞ்சதுதாம் மிச்சம்.
மத்தியானம் மணி ஒண்ணுக்குப் போனவிங்க நின்னு சலிச்சிருக்க, ஊரு பாராவுக்கு போயிருந்த இனிசுபெட்டரும் இன்னும் நாலஞ்சி போலிசிக்காரனங்களும் இருட்டுக்கட்ட வந்தாங்க. அதுல ஒரு போலிசிக்காரன் மணிப்பையனுக்கு தெரிஞ்சவனாம்.
உள்ளத ஒண்ணுவுடாம அவங்கிட்டச் சொன்னம். அவம்போயி இனிசுபெட்டருக்கிட்ட என்னாப்பேசனானோ, மணியவிக அம்மாளையும், அப்பனையும், சித்தப்பங்காரனையும் வரச் சொல்லி, இதுதாஞ் சங்கதின்னு எழுதிக்குடுத்தப் பொறவு, மணியோட இஷ்ட்டக்காரிய ஓராளு அவங்க ஊர்ல வுட்டுட்டு அந்தூரு போலிசு டேசன்ல ஒப்பம் வாங்கியாரச் சொன்னாங்க. இந்த மட்டுஞ் சொன்னதே போதுண்டாஞ் சாமின்னு மணிப்பையன் அவிங்கம்மாளையும் அப்பனையும் அந்தப்பிள்ளயோட கருநாடகாவுக்கு போவ தாட்டிவுட்டுட்டு நானும், சேட்டனும், மணியும் பழைய பைட்டேண்டு வந்தம். எனக்குன்னா ஆத்ரம் அடங்கல.
“ஏங்க என்னாதாங் கெவுருமெண்டு உத்தியோகமின்னாலும் போலிசிக்காரனுங்களுக்கு இத்தன அகராதி ஆவாதுங்க. எதனாச்சும் மக்க மனசருன்னு ஒரு மரியாதி வெச்சி பாக்கறானுங்களா? ஒரு நாயம் நெகாருன்னு தீர்மானமா தெரிஞ்சி பேசறானுங்களா? ஒண்ணுமில்லாத பழமைக்கே இப்டி பங்கம் பண்டிப்புட்டாங்களே. பொறவு போலிசிக்காரன சனம் சாபிக்குதுன்னா ஏஞ்சாபிக்காது”ன்னு நானுப்பேச, அந்தப் போலிசி.
“நூத்துல ஒரு வார்த்தைங்க நீங்க சொல்றது. ஆனா மணிக்கேசுல நானாயிருந்தாலும் அப்பிடித்தாஞ் செஞ்சிருப்பன்”ங்கறான்.“என்னாங்க கேசு கேசுன்னு சும்மா மெரட்டறீங்க? எதுக்கு கேசு போடறதுன்னு வேண்டாம். கூட நாங்கயிருக்க அவனொரு தப்பு தண்டாவும் பண்டலீங்களே”ன்னு நானு வசூலுக்கு பேச.
“இப்ப பண்டலீங்க, போன மாசம் எட்டாந் தேதி ஏற்காட்டு ஓட்டல்ல வெச்சி இவனையும் அந்த பிள்ளயையும் பலான கேசுல புடிச்சாங்க. தந்தி பேப்பர்ல எல்லாம் போட்டு நாறிச்சே நீங்க பாக்கலீங்களா? மறுபிடி இங்க வந்து அந்த வேலய ஆரம்பிச்சிட்டாங்களோ என்னமோன்னு சந்தேவப்பட்டுத்தான் உங்களையுஞ்சேத்தி புடிச்சாந்துட்டாங்களாட்டமிருக்குது”ன்னு அவஞ் சொல்ல
எனக்குன்னா குப்புன்னு மேலெல்லாம் வேர்த்துப்போச்சி. ஒட்டிக்கிட்டிருந்த வண்டிய நிப்பாட்டி சேட்டன். “எறங்குடா ங்கோயா”ன்னு மணிப்பையங் காதக்கட்டி அப்பனாம் பாரு ஒரு அப்பு ஏழு சென்மத்துக்கும் இன்னும் நாலு ஈடு வெச்சான். பின்ன என்னாப் பின்ன? இத்தன கோளாறும் இவனக்கொண்டு நடந்துருக்குது.
நாம்ப பண்ணாத குத்தம் பண்டானாப்ல அஞ்சு உருசும் பதற பதற டேசன்ல நிக்க, ஒரே வொரு வார்த்தச் சொல்லாம புடிக்காம இவனும் ஒண்ணுந்தெரியாத சின்னக் கண்ணனாட்டம் குட்டு வுடாம நமப்ளோடயே நின்னுக்கிட்டு இருந்துப்புட்டானே படவா! இவன் ஆரு தலய திங்க மாட்டான்?
நடு ரோட்ல அவன வுட்டடிச்சிப்புட்டு நானும் மலையாளத்தானும் ராவு ஆசுபத்திரிக்கி வந்தம். கண்டதும் என்னய கட்டிப்புடிச்சிக்கிட்டு எங்கூட்டுக்காரி, சீத்துப்பூத்துன்னு அழுதா வவுறு எறங்கிப்போச்சாம், பாவம் ம்... நானு கோவணம் அவுத்த நேரஞ் செரியில்ல.

வெள்ளி, 24 ஜூன், 2011

செல்வம் - முகவீணைக் கலைஞர்


ரெட்டிப்பாளையம் குப்பன் அவர்களையடுத்து வந்த தலைமுறையில் முதல்தரமான முகவீணைக் கலைஞர். நாபியில் பிறந்து கண்டத்தில் இழைந்து குழல் வழி வழிந்தோடும் நாதம் கேட்பவரை மனம் பேதலிக்க வைக்கும். அகவலிடுவது, அணுக்கள் கொடுப்பது, சரளி வரிசை என்று தேர்ந்த தெளிந்த இசைஞானம் இவருக்கென்றாலும், இழைத்து, இழைத்து நயமாக்கி அவர் வாசிக்கும் குழல் சோகத்தை, மந்தகாசத்தை, அதிகாரத்தை, ஆணவத்தை, அது எந்த உணர்ச்சி வெளிப்பாடாகயிருப்பினும் பிறழ்வு இன்றி பரிபூரணமாக நம்மை உணரவைக்கும் வித்தைகளையடக்கியது. உயிர் மூச்சை முதலாக்கி செய்யும் இந்த பிறப்புத் தொழிலுக்கு ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு பிரசவம். பிராணசங்கடமேற்று, மக்களை மகிழ்விக்கும் இசையை உற்பவனம் செய்யும் இவர்கள் கலைச் சேவை வெறும் புகழுரைக்கானது மட்டுமன்று!.

வியாழன், 16 ஜூன், 2011

மட்டம்பட்டி பழனி
அப்பனும் பாட்டனும் பண்ணையடிமைகள். ஆசை மகனுக்கோ கூத்தின் பேரில் மிகுதியான ஆவல். பகலில் ஆடு மாடு மேய்ப்பது, இரவல் பட்டி காவலுக்கு போவது என்று நடையொழியாத அல்லல் நிறைந்த வாழ்க்கை! தெக்கித்தி வளவுக்காரர்கள் ஆள் பொறுக்கி கூத்துப் பயில ஓரமாக நின்று வேடிக்கைப் பார்க்கக்கூட பழனிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. உயிர் தேடலும் ஊக்கமும் அந்த பாமர மனிதனுக்குள் ஊறிக்கிடந்த கலையார்வத்தை தூண்டிவிட ஓர் ஒத்திகையின்போது கோவலன் நாடகத்தில் கண்ணகி வேடதாரி பாட்டுத் தெரியாமல் தத்தளிக்க, வழக்கமாய் கேட்ட பழனிக்கு வாய்ப்பு கிடைக்க சிக்கென பிடித்துக்கொண்டுவிட்டாரவர். அந்த பிடியின்னும் தளரவில்லை. சதிராட்டத்தில் மாதவி, பின்வரும் பாண்டியன் சண்டையில் கண்ணகி எதிரும் புதிருமான இரும்பெரும் கதாபாத்திரங்கள், அவற்றிற்கிடையேயான முரண்பாடுகள், இவ்வேடப் புனைவு யாரையும் சற்று தயங்கவே செய்யும். பழனிக்கோ மாதவியும் கண்ணகியும் ஓருடலில் ஒட்டிப்பிறந்த இரட்டைப் பாத்திரங்கள். மாதவி வேடத்தில் பழனி சொல்லும் சாங்கிய சம்பிரதாயங்கள் பெண் மனப்பாங்கை ஆராயும் ஆர்வலர்களுக்கு ஆகச் சிறந்த உளவியல் தரவுகளாக அமையும். கண்ணகி வேடத்தில் அவர் காட்டும் பரிமாணங்கள் முற்றிலும் வேறுபட்டது. வேடத்தோடு பல்வேறு வாத்தியப் பயிற்சிகளை கற்றுத் தேர்ந்த பழனி பெண் வேடதாரிகளுக்கு மிகச் சிறந்த முன்மாதிரி.

ஞாயிறு, 12 ஜூன், 2011

வாத்தியார் இன்று வீடு திரும்புகிறார்சேலம் செல்லப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அம்மாபேட்டை கணேசன் வாத்தியார் இன்று வீடு திரும்புகிறார். கலைஞர் காப்பீட்டுத்திட்டத்தில் இலவசமாக ஆபரேசன் செய்து புருசன் பொண்டாட்டி இரண்டுபேர்களையும் சொஸ்தப்படுத்துவதாக சொன்ன டாக்கிட்ரு புனிதவதி அம்மையார் பெருங்கருணை காட்டி பில்லை முப்பத்தி நான்காயிரமாக குறைத்திருக்கிறாராம். கேசை எடுத்துக்கொண்ட வக்கீல் சாரிடம்( போலிஸ் ஸ்டேசனில் எல்லாம் தாம் பார்த்துக்கொள்வதாக மிழற்றியவர்) நேற்று இராவெல்லாம் மண்டியிட்டு பிச்சைகேட்டதில் ஒரு ஐயாயிரம் பிறந்திருக்கிறது. என்னிடமுள்ள பனிரெண்டாயிரம் போக கணேசன் மகள் வாணியிடம்( மேச்சேரி புதன் சந்தையில் காய் கசுறு வித்து புருசனுக்கு தெரியாமல் சீட்டு நாட்டு போட்டு சிறுவாடு சேர்த்து அப்பனிடமும் உடன் பிறந்தானிடமும் பறிகொடுப்பவள். தேள் கொடுக்கு நாக்குள்ள மாப்பிள்ளையின் ஏச்சும் பேச்சும் தம்பியின் கண்ணீரில் கரைந்துவிடும்) மூவாயிரம் இருக்கிறதாம். பாக்கி பணத்துக்கு என்னடா பண்டப்போறமென்று கையை பிசைந்து விட்டு லெனின் சாருக்கு காலையில் போன்போட்டேன். ஏழாயிரத்து எண்ணூறு பேங்கில் போடுவதாக சொல்லியிருக்கிறார். போக்குவரத்துக்கு நம்ப தக்கை பாபுவுக்கு ஒரு ரிங் வுட்டாபோதும். கடம்பட்டு ஒடம்பட்டு மனுச உசுர காப்பாற்றியாச்சு. வந்து பழையபடிக்கி நான் கண்டு அதியசிக்கும் ரெட்டடவு போட்டு ஆடுவாரா? கொளத்தூரில் கொள்முதல் செய்து குறிச்சி ஒலகடத்தில் அரைத்த மிளகாப்பொடியை கூவி விற்க சந்தை சந்தையாக போவாரா? தெரியவில்லை.

வியாழன், 2 ஜூன், 2011

உனக்கின்னும் பேராசை உலகாள யிருக்குதே!தோற்பாவை கட்டபொம்மலாட்ட தெருக்கூத்து கலைஞர் அம்மாபேட்டை கணேசன் அவர்களுடன் நேர்முகம்.
சந்திப்பு: தவசிக்கருப்புசாமி, ர.தனபால்.


அம்மாபேட்டை கணேசன்
அம்மாபேட்டை கணேசனுக்கு வயது ஐம்பத்தியேழு. ஏழு வயதில் தந்தையார் மொட்டயனுக்கு உதவியாக தோற்பாவைக்கூத்தில் பொம்மைப் பிடித்தாட்டத் துவங்கியவர், பதினைந்து வயதிற்கெல்லாம் அதன் நுட்பதிட்பங்கள், நுணுக்கங்கள் கைவந்த சூத்தரதாரியாகி தனி நிகழ்வுகள் நடத்தியிருக்கிறார். பதினாறாம் வயதில் தாய்வழிப் பாட்டனார் சடையன் அவர்களின் ஆசீர்வாதத்தில் கட்டியங்காரன் வேடங்கட்டவாரம்பித்தவர், அதன் பிறகான நாட்களில் சிச்சிறு வேடங்கள், தரித்து தேறியபின் ஓர் பத்தாண்டு காலங்கள் பெண் வேடங்களிட்டு ஆடியிருக்கிறார். கோரிய வாலிபத்தில் ராவணன், மயில் ராவணன், இரண்யன், கீசகன், துரியன், சைந்தவன் உள்ளிட்ட பெரும் கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கியவர், இன்றுவரை அத்தொல்கலையின் உயிரோட்டம் மாறாது நிகழ்த்தி வருவதோடு, அதன் செயல்முறையில் கொள்ளுவன கொண்டு, தள்ளுவன தள்ளி, புதிய அழகியலை, புதிய உடல் மொழியை, புதிய ஆட்ட வகைகளை, தொன்மக் கூறுகளை அதன் தன்மைகளின்று அடிபிறழாத வண்ணம் பிணைத்து தனது கூத்துக்களை நிகழ்த்தி வருகிறார். இராமாயண இலங்கேஸ்வரனோ, மகாபாரத துரியனோ இதுகாறும் நம் ஐம்புலனுக்கெட்டாத பாத்திரம் எந்த பாத்திரமாகயிருந்தாலும் தொகை நகைகள் மாட்டி சபைக்கு தர்பாராகி வந்து இதுதானய்யா, அந்த பாத்திரம் என்று அவர் தன் விருத்தாந்தங்களை சொல்லும்போது, ஐயம் என்பது தோன்றாதபடி அந்த வேடம் அத்தனை பொருத்தமாக முழுமை பெற்று அமைந்திருப்பதோடு காட்சி வனப்பு மிக்கதாகவுமிருக்கும்.
உருவம் மட்டுமல்லாது, ஒரு பாத்திரத்தின் உளப்பாங்கு, மனவோட்டம், எண்ணம், செயல்பாடு, நடத்தை என்று எதை எடுத்துக்கொண்டாலும் கணேசனின் பிரதிபலிப்பு, வார்ப்பு, மாற்றும் குறைந்திருக்காது. வேடங்கள் தரிப்பதோடு பக்க மேளமான மத்தளம் வாசிப்பது, பெட்டி வாசிப்பது, பாவைக்கூத்துக்கு வேண்டிய தோற்பாவைகள் செய்தல், கூத்தில் ஆண் வேடத்திற்குரிய தொழிற்கருவிகள், ஆடையணி வடிவமைத்தல் என்று கணேசனின் கலையாளுமை பன்முகத்தன்மை கொண்டது. ஏட்டுக் கல்வியொன்று வாய்க்கப்பெற்றிருந்தால், கணேசன் அவர்கள் நிகழ்த்துவெளியில் குறிப்பிடத் தகுந்த சிகர உயரங்களை தொட்டிருப்பார் என்பது கண்கூடு.. சங்கீத கலா அகாதமிக்காக களரியுடன் இணைந்து இரு நாள் பொம்மலாட்டம் நிகழ்த்துவதற்காக டெல்லி சென்ற பயணத்தின்போழ்து அவ்வப்போது கணேசன் அவர்களோடு உரையாடிய உரையாடலின் சுருங்கிய வடிவம் அவருடனான நேர்முகமாக இங்கு தரப்படுகிறது.


தவசி:- ஆதியில இருந்த கத, அதே ஆட்டம் அதே பாட்டு! கொஞ்சம் மாத்தி புதுசா கூத்து நடத்துனா என்னா கெட்டுப் போகுது?கணேசன்:- மேட்டு மேல நின்னுக்கிட்டு நொட்ட சொல்லிக்கிட்டிருக்ககூடாது. கூத்த அத்துப்படியா கத்துக் கர கண்டவன் எவனுமில்ல, எல்லாமே கண்டு பாவனதான். அரகரா, சிவா சிவான்னாப் பத்தாது. அமுது படைக்கணும். ஒங்களமாதர படிச்ச டிக்கிட்டுங்க, உள்ற குதிக்கணும் அலங்காரத்த பூர்த்தியா படிச்சி தேறணும். அப்பிடி ஒராளு இருக்கறான்னா அவனாலக் கூட சட்டுனு கூத்த புதுமயா ஆட முடியாது. கருத்தா கவனிச்சி, உகத்தமா தொழில் செஞ்சிக்கிட்டே வந்தா எந்த பொருள கழிக்கிறது எந்த பொருள சேர்க்கறதுன்னு நெட்டு சிக்கும். மேமேச்சலுகாரங்கிட்ட கூத்து ஆப்புட்டா, அன்னநடை கத்துக்க போயி தன்னடையும் மறந்தாப்ல ஆயிரும். பாத்து, பாத்து பதனமா செய்ய வேண்டிய காரியமிது.


தனபால்:- பழம பலவிதம். கூத்துன்னா என்னா? உங்க அனுப்போகத்த வெச்சி சொல்லுங்க?கணேசன்:- கண்ணுக்கு வெளிச்சமா வேசங்கட்டி தாளம், காலம், சுதி எசவோட பாட்டுப்பாடி, ஆட்டமாடி, புத்திக்கு ஒறைக்கிற கத சொல்றதுதாங் கூத்து.


தவசி:- கூத்தாடுனா குடும்பங் கெடுதுங்கறாங்களே, அது உம்மையா பொய்யா?கணேசன்:- நீங்க சொன்னமாதர, கூத்தாடுனா குடும்பங் கெடுதுங்கறது உம்மதானுங்க. அதுயெப்பிடின்னு கேளுங்க! ஆம்பளையாகப்பட்ட கூத்தாடி அலங்காரத்துக்குன்னு பத்தூரு பஸ்ரேறி போறான், வாரான். அங்க இருக்கப்பட்ட பொண்டு புள்ளைங்ககிட்ட பேசாம புடிக்காம இருக்க முடியாது. ஆடன ஆட்டத்த மெச்சி உருவா குத்தறாங்களா, வாங்கியத சோபியில வச்சிமா அதோட அந்த சகவாசத்த வுட்டுத் தல முழுவணும். வுடாம நோட்டம் போட்டு மேயறதும், குத்தவத் தோட்டம் ஓட்டப்போறதுமா பொழக்காட்டம் வெச்சிக்கிறான் கூத்தாடி. கூத்தாடி அப்பிடியா! கூத்தாடி பொண்டாட்டி கூத்துக்கு போன புருசன் ஆடி களைச்சி அலுப்பு சலுப்பா வருவானேன்னு வெந்தண்ணி காயவெச்சி சோறோ, களியோ வூட்ல உண்டானதை ஒல வெச்சி ஆக்கி, தடத்த தடத்த எதுரு பாத்துக்கிட்டிருப்பா. இவந்தான் இங்க எச்செல பொறுக்க போயிட்டானே எப்பிடி வருவான்? நெரங்கண்டு போயி பொழுதிருக்க பொண்டாட்டிய அண்டுணா சீரு பாரு சேவுகம் நடக்கும். ஒரு நாளு, ரெண்டு நாளு பாப்பா! கட்னப் புருசஞ் சொல்ல மிஞ்சி சோரம்போனா பொம்பளயெத்தன நாளைக்கி தாக்குப் புடிப்பா? பொறவு ஒட்டத்தோண்டினாலும் அதுக்கொரு பீத்த கவுறு சிக்காம போவுமா? இப்பிடித்தாங் குடும்பங் கெட்டு குட்டிச் செவுராப் போறது. அதுக்குன்னு எல்லா கூத்தாடிங்களையும் ஒரே ராத்துலுல நிறுக்க முடியாது..பத்துப் பேச்சி என்னத்துக்கங்க? கரும்பு கட்டோடயிருந்தா எறும்பு என்னா செய்யும்?


தவசி:- கட்ட பொம்மலாட்டம் அதுக்குமுந்தி தோலு பொம்மலாட்டம் நடத்திக்கிட்டிருந்த நீங்க கூத்தாட வந்தது எப்பிடி? பாடு கஷ்டம் அதுல அதிகங்கறதுனாலயா? இல்ல வேறெதுங் காரணமா?கணேசன்:- விருப்பத்துலவொரு காரியஞ் செஞ்சா வருத்தம் பாரம் தெரியாது. அப்பிடி நெனச்சிதான் கட்ட பொம்மலாட்டமும் தோலு பொம்மலாட்டமும் நடத்திக்கிட்டிருந்தன். பொறவு மறப்புலேயே ஆட்டிக்கிட்டு இருக்கறமே வெளிச்சத்துல ஆடனாயென்னான்னு ஆசப்பட்டேன், அதுலயுமொரு சமாச்சாரமிருக்குது. பிருவம் நெரிக்கறதையும், கண்ண உருட்டி, சொழட்டி முழிக்கறதையும், மீச துடிக்கறதையும், ஆங்காரமா சிரிக்கறதையும் பொம்மலாட்டத்துல நெனச்சாலும் செய்ய முடியாது. இன்னோன்னு ஒரு வேசத்த எத்துவரிசையா செய்யும்போது நாலு சனம் கைத்தட்டறதையும், அலங்காரம் நல்லாயிருக்குதுன்னு சொல்றதையும் காதாற கேக்கலாமில்ல!. அதோட ஆட்டக்காரனுக்கு வவுத்துக்கு கஞ்சியில்லையின்னாலும் வாயி உபச்சாரம் தேவையாயிருக்குதே!.


தனபால்:- தெரைக்குள்ளயேயிருந்த நீங்க சவைக்கி மொதல்ல என்ன வேசங்கட்டிக்கிட்டு வந்தீங்க? கூச்ச நாச்சம், கோளாறு, கொளறுபடி இல்லாம பாகத்த செலுத்தனீங்களா? இல்ல பங்கப்பட்டீங்களா? அந்த அனுபோகத்த சொல்லுங்க சித்த?கணேசன்:- அந்த காலத்துல ஒராளு அத்தன சிலப்பமா வேசங்கட்டியாட முடியாது. பல படி தாண்டி வரணும். மின்ன பொட்டி மீட்டணும், சால்ரா போடணும், ஆசி கேக்கணும் அப்புறந்தாம் பவுடர கையில தீண்ட முடியும். ஓமலூரு கோட்ட கவுண்டம்பட்டியில எங்க மாமன் மாயவனும், தாத்தஞ் சடையங் கொறவனும், டெண்டுக் கூத்து ஆடிக்கிட்டிருந்தாங்கப்ப. நானு சால்ரா போட்டுக்கிட்டிருந்தன். கோமாளி வேசக்காரன் வரிச கூத்தாடனவன் வூட்டுக்கு பொண்டு புள்ளைங்கள பாத்துட்டு வரமுன்னு போனவன் அன்னைக்கி வரவேயில்ல. செட்டுல மத்த ஆளுங்களும் ஒருத்தரு ரெண்டுபேரு வரல. சடையனிருந்துக்கிட்டு என்னைய டேசிக்குள்ற கூப்புட்டு போடறா கண்ணு கோமாளி வேசமுன்னு வேசம் போட்டுவுட்டாரு. எனக்கோ பயத்துல நாக்கொழறுது, காலோட காலு பின்னுது! என்றா கூத்தாடி நீயி இப்பிடி மெரள்றன்னு தாத்தன் கொட்டாங்குச்சியில சாராயத்த ஊத்தி, குடிச்சிப்புட்டு தெகிரியமா வெளியப் போடான்னு சொல்ல, சாராயத்த குடிச்சும் எனக்கு நடுக்கமே நிக்கல. தெரய புடிச்சித் தடுமாறிக்கிட்டிருந்தம்பாரு! மத்தாளம் அடிச்சிக்கிட்டிருந்த செல்லப்பண்ணன் நோங்கி பொறங்கழுத்துல ஒரீடு போட்டு போடா வெளியன்னு தள்ளிவுட்டாரு! ஒரு வழியா பயம் தெளிஞ்சது. அன்னைக்கி புடிச்சி சரியா அஞ்சிவருசம் கோமாளி வேசம்! அப்பறம் சாரிவேசம்! இப்ப சூரவேசம்!.
தவசி : ஏர்வ தாளம், துடியான ஆட்டம் டாய் டூய்னு கத்தியேச் சலிக்கணும்! சாரீரம் சீக்கிரம் மங்கிப் போயிடும். இப்பிடி எச்சி பாடு, ஒவித்திரியஞ் சாஸ்தி! கட்டனதாங் கட்டனீங்க, ஒரு கொண்டக்கட்டு வேசங்கட்டி பழவியிருக்கலாமில்ல. இன்னுமொரு அஞ்சாறு வருசம் சேத்தி தொழிலுச் செஞ்சிருக்கலாமே.
கணேசன் : சாப்பாட்டுக்கு ஆறு ருசி! சதுருக்கு ஒம்போது ருசி! கைபாகம் இருக்கப்பட்டவிங்க கொள்ளு கடுப்பனாட்டி, களி கிண்டனாலும் சேரி! கூட்டுமாவரைச்சி, கறிச்சாறு காச்சி களிக் கிண்டனாலும் சேரி! திங்க நல்லாயிருக்கும். சமத்து பத்தனவன் சாரி வேசம் கட்டனாயென்னா! சூர வேசம் கட்டனாயென்னா? இல்ல கொண்டகட்டு கட்டனாயென்னா? சனங் குந்திப் பாத்தா சேரி!. நம்பள ஆட்டிவெக்கிறானே ஆண்டவன் அவங் கவுத்த கீழபோடாம இருந்தான்னா, என்னு ரத்தஞ் சுண்டற வரைக்கும் இந்த சூர வேசமாடுவன், அப்பறம் என்ன கதி நேருதோ ஆரு கண்டா?தனபால் : காசா பணமா? கணக்கில்லாத வரும்பிடி வருதா? மெனக்கெட்டு ஒக்காந்து எதுக்கு கூத்து பாக்கணும்?
கணேசன் : சோறு ஏந்திங்கறம்? செரிமானம் சீரணம் பண்டி அது ரத்தத்திலே கலந்து மனுசன் ஓடியாட, ஒரு வேலவெட்டி செய்ய சத்து வேணுமின்னுதான. பாடுபட்டு வர்ரவனுக்கு பலகாரஞ்சோறு தின்னாப்பல தெம்பு இந்த கூத்தால கெடைக்குது. அதோட மக்க மனுசரு, நாலுபேத்த பாக்க புடிக்க, மனசுட்டு பேச சிரிக்க, ஒரு தாவுல ஒண்ணு சேர்றம். மாடு கண்டா ஒதுங்காம மனுசன கண்டா பேசாம அதுயென்னா பொழப்பு?தவசி : தரமான தொழிலாளின்னு பேரெடுத்துருக்கறீங்க. நீங்க சொல்லுங்க நடிப்புங்கறதோட உள்கூடு என்னா? பொருளுயென்னா?
கணேசன் : கலைத் தொழிலாளிக்கி,அடிப்படையான பொருளு இந்த நடிப்பு. இப்ப கீசக சம்பாரத்துல கீசகனா நானு வரிக்கறன்னு வையி, போதையில தாயுந் தெரியாது! செத்த நாயுந் தெரியாது!. அந்த நெதானத்துல நந்தாவனத்துல பூப்பொறுக்கற பாஞ்சாலியாகப் பட்ட சைலேந்திரிய கீசகந் தப்படியா பாக்கறான். மோகந் தலைக்கேறி அவளச் சேர தொரத்துறான். அந்தக் கட்டத்துல போதைக்காரன் கீசகன்னு நானு நெசமாலும் போதப் போட முடியுமா? ஆனா போதையிலிருக்கப்பட்டவன் என்னென்ன அகராதி, அக்குறும்பு, சேட்டப் பண்டறானோ அதயெல்லாம் அத்துப்படியா செய்யுணும். அப்பிடிச் செய்யும்போது பாக்கறவிங்க இந்த பாவி சண்டாளங்கிட்ட, இந்தப் பொம்பளை சிக்கி சீரழியறாளேன்னு பொன்னுவேசக்காரன நெனச்சிபரிதவிக்கணும். அவிங்க பொந்தியில ஈவிரக்கம், பொறக்கணும். கீசகனா வேசங்கட்டியிருக்கற எம்மேல கோவம் வருணும். ரண போர்க்களமா ரெண்டுபேரு கத்தி மொணையில சண்டச் செய்யறாங்காள அவிங்க ஆக்ரோசமா கத்தியச் சொழட்டற சொழட்டுல பாக்கறவங்க பொந்தியில ஐயோ எந்த தல துண்டாகி கீழ வுழுவுதோன்னு திகிலு, பதபதப்பு வரணும். ஆனா வேசக்காரங்கமேல துளி நவக்கீரலு படக்கூடாது. சோகக்கட்டமா, ஏழ்நாட்டாம் சனி புடிச்சி நளச்சக்கரவர்த்தி புஷ்கர்ணங்கிட்ட நாடு, நகரம், நவநீதச் செங்கோல், உப்புச்சட்டி வறயோடு மொதக்கொண்டு தோற்வையாகி, தமயந்திரிய கூட்டிக்கிட்டு வனம் வனாந்தரம் போறனில்ல, அந்த எடத்துல தமயந்தி வேசக்காரன், சாமி! ஆணிமுத்து கோட்டு, அங்கவஸ்திரம் உடுத்தி ராஜமகுடந் தரிச்சி உங்க தங்கசள்ளா தர பொரள அந்தப்புரத்துக்கு நீங்க வரும்போது, பாக்க ஆயிரங்கண்ணு வேணுமே!. பீத்த வேட்டித் துணிக்கும் வக்கத்து இப்பிடி ஒரே முண்ட உடுத்தியிருக்கறமே! இந்தகந்தறகோலத்துல உங்கள பாக்க எனக்கு விதியா? விதிவசமா? வராத வங்கொடும வந்து நேர,ஆருக்கு நாம்பயென்னாசாமி தீம்பு செஞ்சமுண்ணு கதறியழுதா, இப்பேருபட்ட அவகேடு நம்ப எதிரிக்கு கூட வரக்கூடாதுன்னு, சனமும் நம்பளோட சேந்து அழுவுணும்.சுபத்ர அர்ச்சுனந் சந்திப்பா, பிருசம் பொண்டாட்டி, பொணங்கறதும் கூடறதும், கூடறதும் பொணங்கறதும், அவிங்க சேர்க்க சேர்ற தோரணயில, பேசற நடவடிக்கய பாத்தா, ஆம்பளையாகப்பட்டவிங்க பார்ரா நம்பளுக்கு இப்பிடியொரு பொண்டாட்டி வாய்க்கலையே! ன்னு நெனைக்கணும். பொம்பளையாகப்பட்டவிங்க பார்ரா நம்பளுக்கு இப்பிடியொரு பிருசம் வாய்க்கலையேன்னு நெனைக்கணும்.இப்பிடி டூட்டி செஞ்சாதான் நடிப்பு.


தனபால் : சினிமாவுல நடிக்கிறாங்களே அந்த நடிப்புக்கும் நீங்க கூத்துல நடிக்கற நடிப்புக்கும் என்னா வித்தியாசம்?
கணேசன் :இவுத்த அம்மாபேட்ட ஆத்துல பொம்பளயொருத்தி பரிச தாட்டி படிஏர்றத அம்பது தக்கம் எடுத்தாங்க.சினிமாக்காரனுங்க நடிப்பு திண்ணப் பள்ளியோடத்துல மணல்ல எழுதறமே அந்த மாதர அழிச்சி அழிச்சி எழுதறது, சிலேட்டம். குறிவெச்சி அம்பெய்யறமாதர கூத்துல நடிக்கறது சிலமேல எழுத்து!.சுத்திய நோங்கி தட்டனா மொண முறிஞ்சி மொக்கையாகிப்போவும்.பொசான தட்டுனா அச்சுப் பதியாது. நேந்து நெரவி விசுவாசத்தோட பணிக்கச் செஞ்சா செல கண்தெறந்த சில்பமாவும்.தவசி : வேசத்துக்கேத்த விருத்தம், கதைக்கேத்த கந்தார்த்தமுன்னு சொல்றாங்களே விருத்தத்துக்கும், கந்தார்த்ததுக்கும் கூத்துல பாத்தியமென்னா?
கணேசன் : மன்னாளுற ராசனுக்கு மகுடம் அழகு. அந்த மகுடத்துக்கு அழகு அதும்பட சிரசுல சொருவுற கல்துறா. அந்த மாதரத்தான் கூத்துக்கு லச்சணமான விசியம் ரெண்டு. ஒண்ணு விருத்தம், இன்ணோன்னு கந்தார்த்தம். சபைக்கு தர்பாரு ஆவுற ஒவ்வொரு வேசத்துக்கும் ஐதீகமான வரலாறு, விருத்தாந்தமிருக்குது அந்த விருத்தாந்தத்தச் சுருக்கிச் சொல்றது விருத்தம். கத காரணமிங்கறது முத்திப் பழுத்த கனியின்னா அதும்பட சாறுதாங் கந்தார்த்தம்.
மயில் ராவணஞ் சண்டையில் மயில் ராவணந் தர்பாரா வரும்போது இந்த விருத்தம்போட்டு வெளிய வருவான்.......
அஷ்டகுல பருவதம்போல்புஜங்கள் மின்னஅணிந்ததோர் மணிமகுடம்கிரிபோல் ஓங்கஇஷ்டமுள்ள மந்திரிமார்கள்சூழ்ந்து நிற்கஈரேழு லோகமும் கிடு நடுங்கமச்ச கற்பகன் கரம்கூப்பி நிற்கமயில் ராவணன் வருகின்றேனே!
இன்ன இன்ன குணாச்சாரமுள்ள ஆளு, இந்த நாட்டுக்கதிபதி அவனோட நடத்த நடவடிக்க இப்பிடிங்கற ஐதீகத்த இந்த விருத்தஞ் சொல்லுது.சூர்ப்பனக கர்வபங்கத்துல,
வாதாடும் சூர்ப்பனகை தன்னை நோக்கிமதித்த ராகவனுக்குதான் மனையாள் சீதைபோதாதே ஓரூறையுறைள் இருவாள்புறங்காக்கும் தம்பிக்குத்தான் மனையாலில்லைநீதான் போவெனவே போகலட்சுமணன் கூர் வாளேந்திகாதோடுமூக்கறுத்து முன்னும்பின்னும் பங்கம்

கருகுவாள் தன் உறவையெண்ணி புலம்புவாளே!
ன்னு கந்தார்த்தம் போட்டு
அருமை பிறப்பே அண்ணாராவணா அண்ணா!சிங்கமிருக்க குட்டி பறி போகுமாஉன் செல்வத் தங்கையொருவன் தொடலாகுமா?ஆனையிருக்க குட்டி மோசம் போகுமாஅருமைத் தங்கையை ஒருவன் தொடலாகுமா?ன்னு பாட்டு பாடும்போது அந்த கதையோட முக்கிலியமான திலுப்பம் தெரியிது. ராவணந்தங்கச்சி சூர்ப்பனக மவன் ஜம்புகுமாரகன கொன்னவன தேடிக்கிட்டு வரும்போது அலங்காட்ல ராமன பாக்கறா. அவம் மேல ஆசப்படறா. ன்னு ரொம்ப நாளாச்சி! ஒரே ஒராடம் ங்கறியான்னு கேக்கறா.. ராமஞ்சொல்றான் அம்மா எனக்கு கண்ணாலமாயிப் போச்சி ! எங்கூட்டுக்காரி உசுரோடத்தான் இருக்கறா!.உன்ன பக்கம்போட்டு படுக்க என்னாலாகாது தாயே! அந்தாண்ட போயி பாரு! எங்காளு ஒராளு இருப்பான் அவனுக்குத்தான் இப்ப பொண்டாட்டியில்ல! எதோ அவம்பாத்து பண்ணயம் பண்டனாத்தான் உண்டு! அவன் அப்பிடி சொல்ல, இவ எதுக்கும் நீயொரு சிபார்சு பண்ணுங்கறா!. அதுக்கு இந்த அலுப்பநாயி தானும்படுக்காம தள்ளியும் படுக்காம தம்பிகாரங்கிட்ட கூட்டிக்குடுக்க, அந்த கையாலாவாத கேப்மாரி பொம்பளையின்னும் பாக்காம அவள சின்னம் பண்டியுட, அண்ணங்காரன நெனச்சி அழுதுப்புட்டு நெஞ்சில வஞ்சத்த வெக்கிறா, இந்த கறிமூஞ்சி பசங்கள கறுவறுக்க.அதத்தான் இந்த கந்தார்தஞ் சொல்லுது.தனபால் : பத்து பேரு தொழிலாளிங்க, இருக்கையில வாத்தியாருங்கற பொறுப்ப ஆரு வசங்குடுக்கறது? அதயெப்பிடி தீர்மானம் பண்டறது?
கணேசன் : வெத்தலபாக்கு வாங்கறதும், வேசப்பொட்டி மேல புள்ளையார வெச்சி பூசப் போடறதும், போன வெசயில பேசி மறப்புல படுத்துக்கறதும் வாத்தியாரு தனமில்ல. எனங்கண்டு ஆளுங்க வேசத்த பிரிக்கறதும், ஒட்ட வேண்டி எடத்துல கதய ஒட்டி வெட்ட வேண்டிய எடத்துல வெட்டி கண்ணியக்காம கத பொருள கொண்டாந்து தாவு சேத்தணும். வேசம் ஒண்ணு வல்லையின்னா தாம் போட்டாடி சந்து அடைக்கனும். சுதியேத்த எறக்கம், கூத்துல எந்தவொரு கொறப்பாடு நேந்தாலும் முந்தியத சரிக்கட்ட தெரிஞ்சிக்கறதுதான் வாத்தியாருத்தனம். இந்த சாமார்த்தியம் இருக்கறவனெவனோ அவனாலதான் செட்டுக்கு வாத்தியாராக முடியும்.தனபால் : இவ்ள புத்தி ஊகமாப் பேசறீங்க? நீங்க ஏஞ்செட்டு கட்டி ஆடல?
கணேசன் : ஆருச் சொன்னது நாஞ்செட்டு கட்டி ஆடலைன்னு. முப்பது வருசமா ஆத்துல அகப்பட்டு, சேத்துல சிக்கப்பட்டு இப்பத்தான் ஓரெடத்துல ஒலி சாவி குந்திக்கறன். பத்துபேர படதெரட்டி யுத்த களத்துக்குபோயி ஐசா பைசா பாத்துறலாம். இந்த கூத்தாடிங்கள ஒட்டுச்சேத்தி செட்டு வெச்சி சேவிக்கறது, தண்ணிமேல நடக்கற மாதர காரியம். வெத்தல பாக்கு ஒருரூல வாங்கன நிமுசம் மொதக் கொண்டு கண்ண மூடித் தூங்கமுடியாது. கொண்டக்கட்டுக்காரன் வருவானா? வரமாட்டானா? கொழலுக்காரன் வருவானா மாட்டானா?ன்னு தடத்த தடத்த எதுரு பாத்துக்கிட்டிருக்கணும். அப்பிடியெவனாவுது காம்ப காட்டிப்புட்டா ஊருக்குள்றயும் அவனில்லாம போவமுடியாது. கூத்துத்துட்டவுங் மொவறையில காறித் துப்பனாலும் தொடச்சிக்கிட்டு பொச்ச மூடிக்கிட்டு இருக்கணும். பத்துப்பேரு பண்ணாட்டு, ஒரு கையிதட்டனா ஓச வராது, தொழில கண்டு பொழைக்கறவன் அத கருதிப் புடிங்கடா, நேரங்காலமா ஆட்டத்துக்கு வாங்கடான்னு பாடி, பாடி குத்தனாலும் அந்த பதருங்க அரிசியாவற வழியக்காணம். சேரி நம்பளுக்கென்னா பொட்டியத் தூக்கிக்கிட்டு போனா எதோவொரு வேசம், விடிஞ்சா சம்பளம். இப்பதான் நிம்மதியா தூங்கறன்.தவசி : விடிய அலங்காரம் வரிச்சிப்புட்டு விடிஞ்சி முகமழிக்கறீங்க இல்லியா, அதோட அந்த வேச நெனப்பு மறந்து போவுமா? இல்ல மறுக்க கனவுல, நடப்புல வந்து தொந்தரவு குடுக்குமா?
கணேசன் : எல்லா வேசத்துக்கும் அந்த சத்தி கெடயாது. 'வாலி சுக்ரீவன் சண்ட', அலங்காரம்!. வாலி உசுருடற கட்டம். ராமன் கேக்கறாப்பல வாலி இப்பவொண்ணுங் கெட்டுப்போவல. `ம்` முன்னு ஒரு வார்த்த சொல்லு உசுரகுடுத்து உன்ன எழுப்பறன்னு. அதுக்கு வாலி சொல்றான். ராமா நீ நாயம் அநியாயந் தெரியாதவன். எனக்குப் பொறன பொறந்த சிறுபையன்! இத்தன நாளா வாலி! வாலி! வீர வாலின்னு பேரெடுத்தவன் உங்கிட்ட உசுருபிச்ச வாங்கி குத்துப்பட்ட வாலின்னு சாவ எனக்கு பிரியமில்ல. எனக்கொரு யாசகம் கொடுக்கற யோக்கிதி உனக்கில்ல. ஓடிப்போயிரு தூரன்னு சொல்லிப்புட்டு தம்பிய கூப்புட்டு அவெனென்றா மனுச பூண்டு! உனக்கிந்த கிஷ்கிந்தாபுரிய மீட்டு குடுக்கறது, மனசார நாங்குடுக்கறண்டான்னு சுக்ரீவங்கையில நாட்ட ஒப்படைச்சிட்டு மண்ணுமேல சாயுது அந்த புண்ணியாத்துமா, நானு வாலி வேசங்கட்டிப்புட்டன்னா மாத்ரம் அவஞ்சாவ நெனச்சி, நெனச்சி மனசு மருவிக்கிட்டே கெடக்கும்.தனபால் : பெத்து பொறப்பு ஆம்பளையாகப்பட்டவனுக்கு பொண்டாட்டி புள்ளைங்க அதுங்களோட நல்லது, கெட்டது, போக்குவரத்துன்னு ஒவ்வொண்ணுக்கு செலவு சாரி, கடங் கட்சி கட்டறது, சம்சாரத்த கொண்டாறதுன்னு ஆயிரெத்தெட்டு பிக்கு புடுங்கலு! கூத்தாடிக்கும் இந்த பிரச்சனை அதிகமுன்னு சொல்லலாம். இந்த வாதன வருத்தமெல்லாம் தொழில பாதிக்காதா?
கணேசன் : வித்தைக்கு சத்துரு வெசனம், ஆயிரம் வறும,சிறுமையிருக்கட்டும்! வருத்தம் வாட்டமிருக்கட்டும்! வெந்து நொந்து வேதனப்பட்டா கட்ட வெரலு சுண்டு வெரலு ஆவுமா? சுண்டு வெரலு கட்ட வெரலு ஆவுமா? எல்லாத்தையும் மென்னு முழுங்கி தண்ணிக் குடிச்சிப்புட்டு, வேசத்தப்போட்டு வெளிய வந்து, சபையில நின்னு சனத்த பாத்தா நோவு நோக்காடு போற எடந்தெரியாம தன்னாலபோயிரும். கவலைய மறக்கடிக்க கூத்தாடறவன் தானே கவலப்பட்டா காலத்த ஓட்ட முடியுமா?தவசி : மெத்தப் படிச்சவன் மேதாவி. நீங்களும் பல வித்த கத்த வாத்தியாரு, தானுங்கற மண்டகணம் உங்களுக்கில்லையா?
கணேசன் : சேடக்கட்டி வயலடிச்சி, நாத்து நட்டு, பசுரு பச்சைக்கி பாதுகாப்பு பண்டி, வௌஞ்சத ராசிப்பண்டி பத்துசுரு பொழைக்கும்படி வெள்ளாம பண்டறானே அவங்கிட்ட இல்லாத வித்தையா? அடுக்குல இருக்கறது அரிசியோ, ஆரியமோ உள்ளத கொண்டு பக்குவமா சாதங்கறி வெச்சி பசியாத்தறாங்களே பொண்டுங்க, அவிங்களுக்கு தெரியாத வித்தையா? சொப்பு மொத! சூட்டடுப்பு கட! எத்தன ஆயிரம் பண்டஞ் செய்யறாங்க செட்டிமாருங்க! அவிங்களுக்கு தெரியாத வித்தையா? இதெல்லாம் நெனச்சிப்பாத்தா நம்ப கையி வெறுங்கையி. வெறுங்கையில மொழம்போட்டா மரியாதி இருக்குமா? வணக்கம் தனக்கழகு கண்ணு.


*கூடுவிட்டு கூடுபாய்கின்ற ஆற்றல் வாய்க்கப்பெற்றவன் கலைஞன். அந்த கூட்டுக்குள் ஆவியாய் குடிகொண்டிருக்கிறது கலையென்னும் பரம்பொருள்.
*

புதன், 13 ஏப்ரல், 2011

தாய்க்கி பிள்ளையேதடாதண்ணி கெணத்துக்கு முறைமையேதடா சாரங்கதாரா!கூத்துக்கலைஞர் கொத்தாபாளையம் குருநாத வாத்தியார் குறித்தொரு பதிவு.

சேலம் மாவட்டத்தில் பூரல்கோட்டை கருப்புசெட்டி என்றால் அழுதபிள்ளை வாய் மூடும்.வன்னிய சமூகத்தில் மாத்திரமல்ல,மற்ற இடைச்சாதியினர் மத்தியில் மேலதிக செல்வாக்கும், ஆதிக்கமும் பெற்றிருந்தவர்.கோனூர் பஞ்சாயத்தில் ஒரு குட்டி ராசாவாக கோலோச்சி வந்த அவர் வெள்ளைப் புரவி ஏறி ஊர் பவனி வருகையில் கைச்சொடுக்கும் சாட்டையொலி மக்களுக்கு அசீரிரி!.உதிர்க்குஞ் சொல் வேதவாக்கு!. மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் நிர்வாகப் பாத்தியதை சம்மந்தமாக நடைப்பெற்ற வழக்கொன்றில் அந்த ரணபத்ரகாளியே வந்து இவர்பட்சமாக சாட்சி சொன்னதாக பெருங்கதையாடல்கள் இங்குண்டு. மனிதனின் எச்சிப்பால் குடித்து வளர்ந்தது தான் சாதியென்றாலும் அதனின்று இப்பூலகில் ஜனித்தவன் அவன் எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருக்கட்டுமே! தப்பித்தல் அரிது.இதற்கு கருப்பு செட்டியும் விதி விலக்கல்ல!( பெற்ற பாசத்தைவிட வளர்த்த பாசம் பெரிதல்லவா?) பூரல்கோட்டையில் பிறக்கப்பட்ட பறையன், சக்கிலி, குறவன் (அவர்கள் சின்னச்சாதிகள் என்றே இட்டு வழங்கப்படுகிறார்கள்)மட்டுமல்ல உடுத்தியிருக்கும் இடுப்புவேட்டி, கால்செருப்பு ,தலைமுண்டாசு,மொட்டைக் கோமணம் முதற்கொண்டு அவர் ஆக்கிணையை சிரமேற்கொண்டொழுக வேண்டும். அன்றேல் மண்மேல் மனுசன் சீவிப்பது யதேஷ்டம்!இப்படியாகத்தானே கருப்புசெட்டியின் ராஜ்யபரிபாலனத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டி வேடமாரியம்மன் கோவிலில் சோமாரக்கிழமை ஊர் பெருந்தனக்காரர்கள் கெவுளி வாக்கு கேட்டுச் சொல்ல, இறங்கு பொழுதில் அன்றைக்கெல்லாம் ஒருசிந்தியிருந்த ஊர்தோட்டி வட்டப்பாறையில் நின்று நோம்பிச்சாட்டை துடும்படித்து அறிக்கைச் செய்தால் சுற்றியுள்ள ஆண்டிக்கரை, தானம்பட்டி,மேட்டுத்தானம்பட்டி, கந்தனூர், சாவடியூர்,குள்ளமுடையானூர்,நரியனூர்,மல்லிகுந்தம், பூரல்கோட்டை,காலாண்டியூர், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பதினெட்டு கிராமங்களில் உள்ள மாரியம்மனுக்கு அந்தந்த ஊருக்குண்டான வழமொறை,வாமூல் என்னென்னவோ அந்தப்படியே நோம்பி சாட்டிவிடுவார்கள். இந்தப்பிரகாரமாகத்தானே பூரல்கோட்டை மாரியம்மனுக்கு காதறுத்து* ,கம்பம் நட்டு*, கம்பளிக்கூத்தாடிச்* சாட்டிய பதினைந்து நாள் சாட்டுக்கு அன்றாடம் பனிரெண்டு வகை தாளத்திற்கு சாரிக்கு எவ்வேழுப்பேர், பதினாறு சாரியாக நின்று இளவட்டங்கள் ஆடும் மாரியாத்தா ஆட்டத்தில்(சேவாட்டம்) ஊரே அல்லோகலப்பட்டுக்கொண்டிருந்தது. பதிமூன்றாம் நாள் திங்கள் அம்மன் அழைப்பு, பதினான்காம் நாள் செவ்வாய் இராவிளக்கு, கடைசிநாள் புதன் பகல் விளக்கு, அந்தியில் அலகு குத்து,பூங்கரகம், அக்னி கரகத்தோடு வண்டிவேசம், குதிரை வேசம்,நரி வேசம், வாணவேடிக்கை என்று இந்த அமர்க்களம் போதாதென்று குருநாதவாத்தியாருக்கும் வெற்றிலைப்பாக்கு கொடுத்திருந்தார்கள் கூத்தாட. மூணேகால் உரூவா ஒத்திக்கு காந்த விளக்கை கொண்டுவரும் சேலத்துக்காரன் இன்னும் வந்துசேர்ந்திருக்கவில்லை. பார்க்கின்றவரைக்கும் பார்த்துவிட்டு கொடுவாள்முனையில் மேட்டூர் பழம் மல்லை சுற்றி பந்தம் முடைந்து சீமெண்ணையில் நனைத்து பற்ற வைத்து அதையிருவர் வாகாக பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர். அதிகாலையிலிருந்து அந்திவரை குடித்த ஒருமரக்கள்ளுக்கும் செலவுச்சாமான்கள் ஏதுமின்றி வெறும்குறுமிளகிட்டுப் பிரட்டிய வெள்ளாட்டுக்கறிக்கும் அமைந்த தோதில், இன்னும் துளி, இன்னும் துளியென ஒரம்பரை சரம்பரைகளை உற்றார் உறவினர் வஞ்சனையின்றி உபசரிக்க, அதில் நெகிழ்ந்து போய் நாலுவாய்ச்சோற்றினை எச்சாக உண்ட மயக்கத்தில் சனம் ஒருவிதமான கிறக்கத்துடனேதான் கூத்துப்பார்க்க காத்திருந்தார்கள்.பூசைப் போட்டாயிற்று, பொட்டி மத்தளத்தை வெளியே எடுத்து வைத்தாயிற்று, களரிக்கூட்டி கூத்தும் துவக்கமாயிற்று. பாத்திரங்களை பங்கு வைத்துப் பிரித்துக் கொடுத்தப்பின்பு வரிசைக்கூத்தாகயிருந்தால் குருநாதவாத்தியார் வேசங்கட்ட உக்காருவதற்கு முன்பு காற்றாட சற்றெங்காவது ஒதுக்குப்புறமாக துண்டை விரித்து கண் அயர்வது வழக்கம்.முந்தி தோன்றிய கோமாளி வேடதாரியும் உடன் தர்பாரான தலை வேடதாரியும் துருவதாளத்தில் ஆடிக்கொண்டிருக்க சபை அந்த ஆட்டத்தில் மெய்ம்மறந்து அமர்ந்திருந்தது. கூத்தாடிகளுக்கு ஆக்கிப்போடவா நான் தாலிக்கட்டி நீரு வைத்துக்கொண்டேன் என பெண்டாட்டிக்காரி பிணங்கிக்கொண்டுவிட்டதால் வந்திருந்த ஆட்டக்காரர்களை வீட்டிற்கு ஒருவராக சோத்துக்கு அனுப்பியதில் பந்தி விசாரிக்க முடியாமல் போயிற்று.அதும்போக ஊர் முகாமியாக தானிருக்க, உள்ளூரில் விசேசம் நடந்துக்கொண்டிருக்க கூத்தாடிகளுக்கு ஒரு நாலணாவோ, எட்டணாவோ எனாங்கொடுக்காமல், ஒரு வெற்றிலைப்பாக்கு பொகையிலை நறுக்கு வாங்கிக்கொடுக்காமல், கொட்டாங்குச்சியில் வார்த்துக்கொடுக்கும் டீத்தண்ணியோ, ஒரு சுக்குத்தண்ணியோ ஏற்பாடு பண்டாமல் இருந்துவிட்டால் இதுகாறும் செய்து வந்த பண்ணாட்டுத்தனத்திற்கு அதனாலொரு பின்னம் நேர்ந்துவிட்டால் எதைக்கொண்டு அதனை ஈடுக்கட்டுவது? கவுண்டா கவுண்டான்னா ஓய்ங்கிறான்! ஒராளுக்கு சோறுடான்னா ஊகூங்கறாண்டா இந்தூரு கவுண்டன்! என்று மணியக்காரர் வீட்டில் கை நனைத்துவிட்டு வருகையில் ஏவிடியம் பேசிய எடக்கு பிடித்த கூத்தாடியொருவன் அதை எத்தனை ஊரில் போய்ச்சொல்லுவானோ! என்ற விசனமும் சேர்ந்துகொள்ள, எதற்கும் ஓருப்பூட்டு எட்டி பார்த்துவிட்டு போகலாமென்ற கட்டாசாரத்தில் ஊர் மந்தைக்கு அவர் தனது சாரட்டுவண்டியை திருப்ப விளைந்தது வம்பு! முக்கியஸ்தர் உக்காருவதற்கென்று தருவிக்கப்பட்ட நாற்காலியில் தன் சரீகலத்தை ஓய்வாக சாய்த்திருக்க ஒருகணமுமவருக்கு இருப்புக்கொள்ளவில்லை. பத்துத்தலை ராவணேசன் கொலுவில் பதிக்கெட்ட குரங்கு வால்கோட்டையிட்டு அமர்ந்தாற்போல ஒண்ணானப்பட்ட பண்ணாடி தன் எதிரே மத்தளமடித்த பறையனும்,குழலூதிய பறையனும் பெஞ்சுப்போட்டு குந்தியிருப்பதா? காண மனம் ஒப்புமா? அண்ணாருக்கு கோபம் வந்து கண்கள் சிவந்தால் அடிப்பொடிகள் சும்மாயிருப்பார்களா? "ஆரடா கூத்தாடி? எவண்டா வாத்தியாரு? ஊளச்சாதி கழுதைங்களா! ஒங்க பொச்சிக்கெட்டக் கேட்டுக்கு அட்டாலிக் கேக்குதா? மண்ணுல குந்தி மத்தாளமடிக்கிறதுன்னாதாங் கூத்தாடும்! இல்ல தல தனியா முண்டந்தனியா கெடக்கும்!" என்று மிரட்ட மத்தாளக்காரர் பள்ளிப்பட்டி பெருமாளும், குழல்காரர் வேலாயுதமும், பெட்டிக்காரரோடு மூவரும் விரித்துப்போட்ட கோணிப்பைமேல் சத்தமில்லாமல் உட்கார்ந்து வாசிக்கலாயினர். இந்த அமளி துமளியில் தூக்கம் கெட்ட குருநாதன் முழித்தெழுந்தார். விசயம் தெரிந்தது, வேறுப் பேசவில்லை. மானம் மருவாதி கெட்டு கூத்தாடமாட்டேன்! என்று கூத்தை நிறுத்தி விட்டார். வந்தது சண்டை! கூடியது பஞ்சாயத்து! கண்டால் கையெடுக்கும்படி விதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவனின் குரல் கேட்க நாதியற்று காற்றில் கரைந்துப் போனது. தளரவில்லை குருநாதன்," சாமி நீங்க படியளக்கற பரமேஸ்பரனா இருக்கலாம்! பதனெட்டுப்பட்டிக்கி ராஜனா இருக்கலாம்! பெரிய்ய நாயாதிபதியா இருக்கலாம்! நீங்க தொட்டு இழுத்தாதான் மேச்சேரித்தேரு மறு அடி நகருங்கறது உம்மயாக்கூட இருக்கலாம்! அது பத்துப்பேரா ஒத்துக்கிட்ட சங்கதி! அதுல உங்களுக்கு பவுருண்டு! பங்கு பாத்தியமுண்டு! அவுத்த உங்க பேச்சி செல்லும்! கூத்து உங்களுக்கு தெரியாத பொருளு! அங்க என்னய படைச்ச பிரம்மாப் பேச்சின்னாக்கூட நானு வெச்சிக்கமாட்டன்! ஜதியும் சுதியும் புருசம் பொண்டாட்டி மாதர! புருசங் கட்லு மேலயும், பொண்டாட்டி பாயி மேலயும் படுத்திருந்தா சம்சாரம் நெறக்குமா?நானு நின்னுக்கிட்டுப் பாடி அவிங்க ஒக்காந்தி அடிச்சா மேளக்கட்டு நல்லாயிருக்குமா? ஆஞ்சியோஞ்சிப் பாக்காட்டி நாயஞ்செத்துப்போவுங்க! நேந்து நெரவுங்க செத்த!" என்க, அவருதவிக்கு எழுந்து நின்ற சனத்திரளைக்கண்டு கருப்புச்செட்டியாரும் தணிந்து நிதானித்து," டேய் இவனென்றா தெரிஞ்சப்பொருளு, தெரியாதப்பொருளுன்னு புது நாயம் போடறான்? ஒண்ணும் பிருவாத் தெரியிலியே! கூப்புடுறா வாயாடிப்பூசேரிய! வாக்கு கேட்டு அவஞ் சொல்ற மாதரச் செய்வம்." என்றுமருளாடியை அழைத்து சாமி வருந்தினர். உடனே அம்மன் பிரசண்டமாகி பூசாரி மீதிறங்கி,"எளச்சவிங்கன்னு எளக்காரமா நெனைக்காதீங்கடா! அவிங்களும் எம்மக்கமாருதாண்டா! ஒசக்க ஒக்காந்தி அடிக்கச் சொல்றா!" என்று தீர்க்கபிரச்சனை முடிவுக்கு வந்து அந்த இரவு மட்டுமல்ல, தொடர்ந்து அந்த வட்ட வாகறையில் ஏழு ராத்திரி கூத்தாடினாராம்!. கலைஞனுக்கு தன் சுயத்தை விட்டுக்கொடுக்காத மன உறுதி வேண்டும். குருநாதன் கலைஞர் மாத்திரமல்ல நல்ல மனிதரும் கூட.எடப்பாடி தாதாபுரம் காட்டுவளவைச் சேர்ந்த குருநாதனுக்கு உடன்பிறந்தோர் ஐந்துபேர். மூன்று தமையன்கள், இரண்டு தமக்கைகள்.தந்தை வீரய்யனுக்கும்,தாயார் பாவாயிக்கும் செல்லப்பிள்ளையாக வளர்ந்த குருநாதனின் பால்யகாலம் சேட்டைகளும், வாய்த்துடுக்கும், விளையாட்டுப் புத்தியும் நிரம்பியதாக இருந்ததினால் திண்ணைப்பள்ளிக்கூடமும் அங்கிருந்த முரட்டு வாத்தியாரும் அவருக்கு வேப்பங்காயாய் கசந்துப் போனதில் வியப்பேதுமில்லை.பிறகு தன் மாமன் மகனுடன் சேர்ந்து அரிச்சுவடிகளை தானே வாங்கிப் படித்துக்கொண்டு வந்தவருக்கு அதன் நீட்சியாக பிற்காலத்தில் கூத்துப்பிரதிகளை படைக்கும் அளவிற்கு அந்த கனமுள்ள வாசிப்பனுபவம் கைக்கொடுத்திருக்கிறது. பள்ளி நிழல்தானுறியாத தன் மகன் எண்ணற எழுத்தற துருசாகப் படிப்பதை பார்த்த தந்தையாருக்கு ஓரெட்டில் சந்தேகம் மண்டி பையனுக்கு பைத்தியமென்று ஊரெல்லாம் தூற்றிவிட, சொந்தக்கார பெரியவர்கள் இருவர் குருநாதனை சோதித்து அப்பாமர தகப்பனின் ஐயம் போக்கியுள்ளனர். தாதாபுரம் கரட்டுப்பெருமாள் கோயிலுக்கு செலவடை கொன்னவாயன்* அவர்கள் வந்து அலங்காரம் வரிக்க லைட்டு கம்பத்தடியிலிருந்து அதைப்பார்த்தவருக்கு கூத்தின் மேல் ஆர்வம் பிறந்திருக்கிறது. பிறகென்ன எந்த ஊரில் கூத்தென்றாலும் கிழடு கிண்டுகளோடுஅரையில் மொட்டக்கோவணம்,தோளில் மேல் சுண்டு சகிதமாக, நடைத்துணையாகச் செல்லும் வாத்தியாரையும் முதல் ஆளாக அங்கேப் பார்த்துக்கொள்ளலாம். கண்டதை காலாடிப்பார்க்க, காதால் கேட்டதை வாய்ப்பாட ஆடு மாடு மேய்க்குமிடமெல்லாம் குருநாதனுக்கு கூத்தாடும் சபையாகிப்போனது. ஆசை பித்தாகி ஆட்டுவிக்க, உள்ளூரில் குடியிருந்த பழைய கூத்தாடி பொன்னான் வாத்தியாரிடம் இவர் வேண்டியதற்கிணங்க, அவராடிய துரோபதை துயில் கூத்தில் முதன்முறையாக அர்ச்சுனன் வேடங்கிட்ட, கரட்டுப்பெருமாள் முன்னிலையில் குருநாதனவர்களினுடைய அரங்கேற்றம் நடந்தேறியிருக்கிறது.பின்தொடர்ந்த நாட்களில் சொந்தமுயற்சியில் தன் வயதொத்த சகாக்களுடன் சத்தியவதிக் கல்யாணம், கிருஷ்ணன் பிறப்பு,போகவதி கல்யாணம் போன்ற கூத்துக்களைப் பயின்று நிகழ்த்தி வந்தவருக்கு பதினாறு வயதில் மேச்சேரி சடையன் வாத்தியாரின் பாஞ்சாலக் குறவஞ்சி கூத்தைப் பார்த்தப் பிற்ப்பாடு ஓர் திருப்பம்! அதில் சடையன் புனைந்த குறத்தி வேடத்தாக்கத்தில் தானும் சிலவருடங்கள் பெருங்கொண்ட பெண் வேடங்களை விரும்பியேற்று அவைத்தோறுந் துலங்கி கோரிய வாலிபத்தில் மூண்ட இருபது வயதிலெல்லாம் தக்கப்படியான கூத்தாடி என்று பேர் எடுத்து விளங்கியிருக்கிறார். அன்று தொட்டு இன்று வரை அறுபதாண்டு காலங்களுக்கு மேலாகியும் இக்கலைச்சங்கின் சங்கநாதம் ஓயாது தொனித்தபடியேயிருக்கிறது. எனது விடலைபருவத்தில்தான் வாத்தியாரின் கூத்தைப் பார்க்க வாய்த்தது. அப்பொழுது எனக்கு பதினான்கு அல்லது பதினைந்து வயதிருக்கும். ஏர்வாடியிலிருந்து மாதநாயக்கன்பட்டிக்கு விருந்தாடப் போயிருந்தோம். காது குத்து- கல்யாணம், நோம்பி- நொடி,வீட்டுச்சாமி- காட்டுச்சாமி,தேரு-தெவம் என்று வந்துவிட்டால் மேச்சேரி பகுதிகளில் ஒரம்பரை அழைப்பு என்றவோர் சம்பிரதாயம் இன்றளவும் உண்டு. விருந்துக்கு கூப்பிடுவதென்றால் சும்மா அல்ல! ஒரு ஊரில் விசேசமென்றால் பெண்டுகள் பேசிவைத்து முப்பது நாற்பதுபேர் ஒன்றிணைந்து அக்கம்பக்கமோ, தூரந்தொலைவோ அதெங்கிருந்தாலும் உறவினர் வீட்டுக்கு கட்டெறும்புச்சாரிப்போல் படையெடுப்பார்கள்.ஒரு வீட்டில் எத்தனைப் பேரிருந்தாலும், சிட்டாமுட்டிகளானாலும் சரியே அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே "நோம்பிக்கி வாங்க! நோம்பிக்கி வாங்க! என நெஞ்சார அழைத்து மனதார விருந்தளிப்பார்கள். அந்தச்சோலி, இந்தச்சோலி என்று சாக்குச்சொல்லி காரியத்தின் பேரில் விருந்துண்ண வாராதவர்களை "கொன்னவாயன் சமா- குருநாதன் சமா, சடையன் சமா- சின்னாளு சமா,பாப்பம்பாடி சமா- கன்னந்தேரி பச்சமுத்து சமா கூத்தாடுது சோத்துக்கு வராட்டிப்போவுது! கூத்துப்பாக்கவாச்சும் வந்துட்டு வருவீங்களாம் வாங்க" நோம்பி கும்பிடுவதின், விருந்திடுவதின் சிறப்புக்கூறாக கூத்தை முன்வைத்து அழைப்பதும் வழமை. ஆண்கள் கறிபோட, பெண்கள் சாந்தறைக்க என மாயாத வேலைகளை பகிர்ந்துக் கொள்ளும்போதே கோப தாபங்கள், குற்றம் குறைப்பாடுகள்,கஷ்ட நஷ்டங்கள், உதவி ஒத்தாசைகள் பரஸ்பரம் பரிமாறி ஒருவருக்குள் ஒருவர் இளைப்பாறிக்கொள்வார்கள். பேச்சு திசைத் தப்பி வார்த்தை தடித்து சண்டையிட்டு மண்டை உடைத்துக் கொள்வதும் நடக்கும்.குருநாதவாத்தியாரின் சமாவினரை வைத்து பள்ளத்து கட்டேறுப்பன்* தெவத்துக்கு அன்று "வன்னியன் பிறப்பு" கூத்து வைத்திருந்தார்கள். முன் வந்த பாத்திரங்கள் களைத்து ஓய்ந்த மூன்று மணி கருக்கல், அங்கமெலாம் தீயெரிய அதிவீரவன்னியனாக குருநாதன் சபையில் தோன்ற உக்கிரமாகி தகித்தது.சுமார் இரண்டரை மணிக்கூறுகள் ஆயிற்று அந்த பாத்திரத்தின் தர்பார் விருத்தாத்தங்கள் முடிவதற்கென்றாலும் கூடிய அச்சபையினின்று ஒருவரும் அசைந்தவர்களில்லை. பார்த்தகண் பூக்கவில்லை, கேட்ட காதடைக்கவில்லை! கைகள் பொத்தி, வாய் பதைக்க பக்தி சிரத்தையோடும், தொற்றவைத்த பதட்டத்தோடும் கூத்தை கண்டு களித்திருந்தோம்.இரண்டாம்முறை குருநாத வாத்தியாரைச் சந்தித்தது கரும்பு சாலியூர் ஊத்துக்கோம்பை மாரியம்மனுக்கு* 'சாரங்கதாரா ' கூத்தாட வந்தபோது. உடாங்கனை கனவு நிலையென்னும் 'வாணாசூரன் சண்டை' எனுமோர் கூத்தைப்போன்றே சாரங்கதாராவும் புழக்காட்டத்திலிருந்து அருகி மறைந்து வருமொரு கூத்து. அர்ச்சுனன் மகன் அபிமன்யு, அபிமன்யு மகன் பரிச்சித்து, பரிச்சித்து மகன் ஜனமேஜெயன், ஜெனமேஜெயன் மகன் சுரேந்திரன், சுரேந்திரன்மகன் நரேந்திரன். இந்த நரேந்திர மன்னன் சபையில் தோன்றுவது முதல் மகன் சாரங்கன் சித்திரத்தைக் காட்டி சித்ராங்கியை நயவஞ்சகமாக ஏமாற்றி மணம் முடிப்பது,அந்த ரகசியத்தை மைந்தனிடம் சொல்லப்படாதென்று மந்திரிகுமாரானாகிய சுபந்திரனை நிர்ப்பந்தஞ் செய்வது, மந்திரிகுமாரனும், சாரங்கனும் புறாப்பந்து விளையாடுவது, எதிர்பாரா சந்தர்ப்பத்தில் சாரங்கனின் மணிப்புறா சித்ராங்கி மடியில் தஞ்சமடைய, மீள புறாவைப் பெறும் பொருட்டு சாரங்கன் அந்தப்புறம் ஏகுவது, சித்திரத்தில் கண்டவன் இவனென துணிந்து சாரங்கனை சித்ராங்கி புணர்ச்சிக்கு அழைப்பது, மறுத்தவன் வெளியேற, வெஞ்சினங்கொண்டவள் சாரங்கன் மீது வீண்பழிப் போடுவது, மனையாட்டி சுமத்தும் குற்றத்தை ஆராயாமல் நரேந்திர மன்னன் மகனை மாறுகை, மாறுகால் வாங்குவது ஈறாக இந்த கட்டங்களெல்லாம் வாத்தியார் நடத்தும் சாரங்கதாரா கூத்தில் செறிவார்ந்தபகுதிகள். கதையோட்டத்தின் பல நிலைகளை குருநாதனும் அவர்தம் சகாக்களும் மெனக்கெடாமல், இயல்போட்டம் மாறாமல் அந்த புராதான காலத்தை கரைந்து நிற்றல் வழி அப்படியே கண்முன் நிறுத்தியப் பாங்கு அசாத்தியமானது.மூன்றாவது முறை நேரிட்ட சந்தர்ப்பத்தில் வாத்தியார் வல்லிய இடுங்கட்டில் மாட்டிக்கொண்டிருந்தார்.காப்புக்கட்டு முடிந்து தை பிறந்துவிட்டால் ஆடிமாதம் முடியும் மட்டும் ஊரில் இருக்கப்பட்ட சாமிகளுக்கு கொண்டாட்டத்திற்கு குறைவிருக்காது. காமாண்டாருக்கு* படையலிட்ட கரிநாளன்று சாட்டப்பெறும், ஏழு நாள் சாட்டென்றாளும் சரி, பதினைந்து நாள் சாட்டென்றாளும் சரி அதில்விழும் வியாழக்கிழமை மாமூலாக கூத்து நடத்தியே தீருவார்கள். ஊர்ப்பெரியத்தனக்காரர்கள் அவரவர்கள் நேமித்துக்கொண்ட ஜமாக்களுக்கும் இன்னும் பிறவுள்ள புதுமை விரும்பிகளுக்கும் அடிக்கடி மூளும் போட்டி பொறாமை, சண்டை சச்சரவுகளிடையே ஆனைச்சண்டையில் கொசு நசுங்குவதுப்போல வாத்தியார்கள் சிக்கி தத்தளிப்பார்கள். நெருக்கடி மிகுந்த இச்சூழலில் அம்மாபேட்டை சரஸ்வதி ஜமா பெரியத்தலைகளான கனகராஜி வாத்தியாரும், கணேசவாத்தியாரும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் ஒரே நாளில் ஆரியக்கவுண்டனூரிலும், குருவரெட்டியூர் அண்ணாநகரிலும் ஆடும்படிக்கு வெற்றிலைப்பாக்கு வாங்கிவிட்டார்கள். சரியானபடிக்கு நிறைந்த தருணம் வேண்டி வேண்டி அழைத்தாலும் மாற்று ஜமாவிலிருந்து ஒரே ஒரு ஆளைப் பெயர்க்கமுடியவில்லை. முன்பணம் கொடுத்தவர்கள் அம்மாபேட்டை அந்தியூர் பிரிவு ரோட்டில் வண்டிப்போட்டுக்கொண்டு வந்து மணிக்கணக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். செய்வதறியாது கையைப் பிசைந்துக் கொண்டு நின்றிருந்தவர்களுக்கு முடை நீக்கிய ஆபத்தாந்தவனாக வந்துச் சேர்ந்தார் குருநாத வாத்தியார்! ஒரே (அபிமன்னன் சுந்தரி மாலை) கூத்தை இரண்டு நிகழ்விடங்களிலும் வைத்துக்கொள்ளலாமென்றும், வேடதாரிகளை மாத்துக்கட்டில் (இங்காடியவர் அங்கு, அங்காடியவர் இங்கு ) பாகமேற்கப் பண்டலாமென்றும், பின்னித்தி மேளத்தோடு இருப்பவர்களை தன்னோடுத் தாட்டிவிடுமாறு பணித்தவர், பன்னிருவர் இருக்குமிடத்தில் வெறும் அறுவரை இட்டுக்கொண்டு ஊர்போய்ச் சேர்கையில் இரவு மணி பத்து. கூத்துப் பார்க்கப் போன நான் ஓட்டை டிவியெஸ் வண்டியில் விடிய விடிய ஆரியக்கவுண்டனூருக்கும் அண்ணாநகருக்கும் சவாரியடித்து சலித்து ஓய்கையில் வாத்தியார்,அறம் புகழ் ஈன்ற நகர்அரசுக்கு உரிமையானஅபிமன்னராஜனிதோவந்தேன்சபையை நாடிஎன துடியாக தர்பாராகிக்கொண்டிருந்தார். என் உறக்கச்சடைவை கண்ட சுப்ரமணி(அம்மா பேட்டை கணேச வாத்தியாரின் சோதரர்) சுபத்திரை வேடமிட்டாடிக்கொண்டிருந்தவர் சுருக்கமாக தன் டூட்டியை முடித்துக்கொண்டு வந்த சுருக்கில் அங்கிருந்த இச்சிமரத்திட்டில் என்னை இளைப்பாறச்சொல்லிவிட்டு தான் ஒரு நடை ஆரியக்கவுண்டனூருக்கு போய் வருவதாக வண்டியை வாங்கிக்கொண்டார். தவிரவும் ஆடிமுடிக்கப்படாத சுபத்திரை பாகம் அவருக்கென்று அங்கு காத்திருந்தது. போனவர் போனவரே! வெகு நேரமாகியும் ஆள் துப்பே காணவில்லை! வரவேண்டிய மற்றொருவரும் வந்துச்சேரவில்லை! அபிமன்யு கானகத்தில் வேட்டையாடிக்கொண்டிருந்தவர் காதலியாம் மாமன் மகள் கமலச்சுந்தரி எட்டடுக்கு கற்கோட்டை! எறும்பேறா மண்டபம்! பத்தடுக்கு கற்கோட்டை! பாம்பேறா மண்டபத்தில் சிறையிடப்பட்ட சேதியை சுந்தரியெழுதிய நிருபம்கண்டு தெரிந்து சிறைமீட்க தாய் சுபத்திரையிடத்தில் உத்தாரம் பெற ஆனைக்குந்திப்பட்டணம் நோக்கி காற்றாய் பறந்துவந்துக்கொண்டிருந்தார். என்னாச்சோ, ஏதாச்சோ தம்பி எட்டிப்பாத்துட்டு வாங்க ஒருவிச, என்று குருநாதவாத்தியார் வேண்ட திரும்ப ஆரியக்கவுண்டனூருக்கு பயணம்போனேன்.எதிரே சுப்ரமணியை தேடிக்கொண்டு அங்கிருந்தொருவர் வரவே எனக்கோ பதட்டமான பதட்டம். கூடி இருவருந் துழாவியதில் பழையூர் முக்கில் எம்.பி நலநிதியில் வடிக்கட்டி எழுப்பிய பேருந்து நிழற்குடையினடியில் மனிதர் நாயொன்றிற்கும் தனக்கும் நடந்த அகோரயுத்தத்தில் மிஞ்சியிருந்த தாய்ச்சீலையினைக் கிழித்து கடிப்பட்ட இடத்தில் கட்டுப்போட்டப்படி விதியே என்று ஒடுங்கிப்போய்க் குந்தியிருந்தார். ஆண்வேடமோ, பெண் வேடமோ அதுவெந்த வேடமாகயிருந்தாலும் தரித்தவர் முகமழிக்காமல், கால்களிலிருக்கும் சதங்கைகளை அவிழ்க்காமல் ஆடரங்கை விட்டகலமாட்டார்கள். இட்ட வேடத்திற்கு எதாவதொரு விதத்தில் பங்கம் விளைந்தால் தன் வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய அவகேடாக அதை எண்ணியெண்ணி வருந்துவார்கள். அன்றைக்கிருந்த இக்கட்டில் யாருக்கும் எதையும் பொந்தியிலிருத்த இயலவில்லை. அவதி பகுதியாக கிளம்பியவர் எண்ணை இல்லாமல் முண்டியடித்த வண்டியை நடைப்பழக்கிப்போயிருக்கிறார் தடத்தோர பஞ்சர் கடையில் எப்படியும் எண்ணையைப் பிடித்துக்கொள்ளலாமென்று துணிந்து!. கட்டுத்திட்டத்தை மீறி தனது காற்சதங்கையை அவிழ்க்காமல் சென்றதால் அந்த கலைவாணி சரஸ்வதியே நாயாக அவதாரமெடுத்து வந்து தன்னை தண்டித்துவிட்டதாக வருந்திய அந்த அப்பாவிக்கலைஞனை உடனடியாக பூதப்பாடி மருத்துவமனையில் அனுமதித்தப்பின் உடன் வந்தவரை ஆரியக்கவுண்டனூருக்கு அனுப்பிவிட்டு தக்க கலைஞர்களின்றி இரண்டு பக்க கூத்தும் என்ன கதியானதோ என்ற வாட்டம் மேலிட நான் அண்ணா நகருக்கு விரைந்தேன். குரு நாத வாத்தியார் நெடிது நீண்ட தன் சிகையை விரித்துப் போட்டு சுபத்திரை வேடத்தில் நின்று கண்ணனிடம்,உரிமைக்காரி நானிருக்கயாருக்கண்ணா பெண் கொடுத்தாய்சொந்தக்காரி நானிருக்கசுந்தரியை!தரலாமாஅவன் பாவி துரியனாச்சுதேஎன் ஆவி பதறலாச்சுதேஓ அண்ணா மாயக்கண்ணா!என்று அபிமன்னனுக்கு பெண் கேட்டது ஆச்சரியமென்றால் அதைவிட ஆச்சரியம், தங்கை மகனுக்கு பெண் தர மறுத்ததோடு தகாதமுறையில் அவமானப்படுத்தி கண்ணனும் அவன் மனைவி மலர்மங்கை லட்சுமியும் சுபத்திரையை விரட்டியடிக்க, தாயை அவமதித்த மாமனை கருவறுத்து கமலசுந்தரியை சிறைமீட்ட சபதங்கூறி புறப்படவேண்டிய இடத்தில் பெண் வேடத்தில் உள்ளே சென்றவர் மூன்றடி பாட்டு இடைவெளியில் மீண்டும் ஆண்வேடத்தில் வெளியில் வந்த சுருக்கு. மின்னல் வேக தோற்ற மாற்றம்! யாருக்கு வேண்டுமானாலும் சமயோசிதப் புத்தி வாய்க்கலாம், அது காரியமாவது கலைஞனிடமே! பத்தடிக்கு பத்தடி சதுரம், அம்மண் தரையே கொலுமண்டபம், சபாமண்டபம், அந்தப்புரம், ஆண்டவன் சந்நிதானம், ஆரண்யமான கானகம், படுகளம், பாடிக்கூடாரம்!!!நவீனகால காணூடகங்கள் கொண்டாட்டமாக கட்டமைக்கும் பிரம்மாண்டமான காட்சிப் பின்புலங்களுக்கு நிகரானதொரு காட்சிக்களத்தை தனியொரு கலைஞன் தனது தனித்த மெய்ப்பாடுகள் வழி நிகழ்த்திக்காட்டும் வன்மை குருநாதனவர்கள் நிகழ்த்தும் கூத்திலுள்ளது.. மற்றுமவர் ஆடும் கூத்துக்களில் சிறப்பம்சங்களென்று தருக்கள் விருத்தங்களைச் சொல்லலாம். (மரபுக்கலை வடிவமான கூத்து பாட்டுக்கள் வழி கதை நகர்த்தும் போக்கை கொண்டது) ஓர் பனுவலாக எழுத்துரு காணாத இப்பாடல்களை நாம் இன்றியமையாதனவொன்றாக கருதி படைப்பாக வடிக்கவேண்டிய காரணம் என்னவெனில் பாட்டன் பூட்டன் காலத்து பழைய சொத்து என்பதனால் மட்டுமல்ல,பொருளோடு புதைந்திருக்கும் கருத்துச்செழுமைக்கும்,வழி வழியாக பல தலைமுறை கண்டபோதும் வகைத்தூய்மை சிதையாத மூல மெட்டுக்கள்,அதன் கட்டுறுதி, இசைக்குந்தோறும் சலிக்காமல் கேட்பவரை மனங்கிறங்கடிக்கும் உள்ளுறைந்த அந்நூதனம்! சாரங்கதாரா கூத்தில் சித்ராங்கி சாரங்கன் சந்திப்பில் இருவருக்குமுண்டான தர்க்கத்தில் அமைந்த தருக்கள் இவை: சாரங்கன் சொல் தரு இங்குவந்த என்புறாவைமாதாவே தாயேஎடுத்திருந்தால் தந்திடம்மாமாதாவே தாயேமணிப்புறாவைத் தந்தீரானால்மாளிவிட்டுச் சென்றிடுவேன் சித்ராங்கி சொல் தரு மாராப்பு சீலைக்குள்ளேஎன் கண்ணாளாமானு ரெண்டு வெளையாடுதுமானை நீ பிடிப்பதெப்போஇந்த மங்கை குறைதீர்ப்பதெப்போசித்தாட சீலைக்குள்ளேஎன் கண்ணாளாசித்திரம் எழுதியிருக்குதுசித்திரத்த நீ பார்ப்பதெப்போஇந்த செல்லி குறைதீர்ப்பதெப்போ சாரங்கன் சொல் தரு விடு விடம்மா மடி விடம்மாநான் வீடு போய் சேரவேண்டும் சித்ராங்கி சொல் தரு விடுவதற்கா மடி பிடித்தேன்மெல்லியாளை என்னைச் சேரும் சாரங்கன் சொல் தருஎன் தந்தையாரும் வந்து கண்டால்தகுந்த பழி நேருமம்மா சித்ராங்கி சொல் தரு உந்தன் தந்தையாரும் வருகுமுன்னே தாட்டிடுவேன் என் மாளிவிட்டு சாரங்கன் சொல் தரு என்னை கணவன் என்று சொன்னால்அம்மாஉனக்கு கண்ணு தெரியுமோஎன்னை புருசன் என்று சொன்னால்அம்மாஉனக்கு புண்ணியம் கிட்டுமோ சித்ராங்கி சொல் தரு தாயிக்கி பிள்ளையேதடாசாரங்கதாராதண்ணி கெணத்துக்கு முறைமையேதடாசாரங்கதாராகோழிக்கி முறைமையேதடாசாரங்கதாராகொக்குக்கு முறைமையேதடாசாரங்கதாரா அச்சரப் பிழையற்ற வசனங்கள், அடிபிறழாத பாடல்கள், தாளம் தப்பாத அடவுகள், பாகத்திற்குண்டான ஒப்பனை, ஒன்றி இயைந்து பகட்டின்றி வெளிப்பட்ட நடிப்பு இவற்றின் மூலம் மட்டுமல்ல, அந்நேரமந்நேரம் தோன்றும் கற்பனையில் குருநாதனவர்கள் நிகழ்த்துதலில் உருவாக்கிய காட்சியற்புதம் அதன் தீவிரம் இன்றளவும் மனதைவிட்டகலவில்லை.தற்செயலாக திறமைசார்ந்த பற்பல அசாத்தியங்களை வெளிக்கிட்டுக்காட்டும் அளிக்கை குருநாதனவாத்தியாரின் கூத்தில் ஓர் தனித்த பண்பாகும். தொடர் ஒத்திகை, நெறியாள்கை முதலான அறிவுத்தளத்திலமைந்த செல்நெறிகளினின்றும் அதை தனித்தே இனங்காணலாம்.அறிவனுபவமாகவும், உணர்பனுவமாகவம் உள்ள படிமம் கவிதையை உன்னதமாக்கும் அத்தன்மைப்போல் அவர் பாத்திரத்தோடு பொருந்தி அதில் பற்பல மெய்ப்பாடுகளை பொதிந்து பார்வையாளனின் உள்ளத்தில் உணர்வெழுச்சியை உண்டுச்செய்யும் சமத்காரம் அவர்தம் ஆளுமையை கட்டியம் கூறும் பிரதான கூறு. கற்றலும் கற்பித்தலும் கலைஞனை புதுப்பிக்குமோர் பாரிய செயற்பாடு! நிகழ்வுதோறும் கற்றுதெளிந்ததோடு மெய்வேல்,நல்லூர் பெரிய மாது, சாத்தனூர் வெள்ளையன்,பொன்னான்,சோரகை மணி, மட்டம்பட்டி பழனி,போன்ற வளப்பமான சீடப்பிள்ளைகளை வளர்த்தி ஆளாக்கி நிகழ்த்து கலையுலகில் அழியாச்சுவடுகள் பதிக்க வைத்துள்ளார் வாத்தியார். இங்குகலைஞனென்றும் கலைவாழ்க்கையென்றும் பேதங்களில்லை.வறண்டபூமியில் பொங்கலிட்டு உண்டுகளித்த உடல் உழைப்பாளிக்கு, நாளுக்கு நாள் கூடிய உழைப்பில் பாடு ஏற்றிய சேகு ஆகச்சிறந்த கலைக்கூறுகளை அவனுள் உற்பவனம் செய்வதோடு அவனை வாதைகளை பகடியாக்கும் தேர்ந்த கலைஞன் ஆக்குகிறது. காதறுத்தல்:நோம்பி சாட்டும் முகமாக நடப்படும் கம்பத்திற்கு (மூன்றடிக்கு ஐந்தடி ஆழம்) வெள்ளாட்டு கிடாயின் காதறுத்து இரத்தப்பலி கொடுத்த அன்றைக்கு மரம் தேர்ந்து அக்கம்பத்தில் உருவம் வடித்தமைக்காக ஆசாரிமார்களுக்கு அக்கிடாய் இனாமாகக் கொடுக்கப்படும். கம்பம் நடுதல்:கம்பம் நடுவது நோம்பி சாட்டுதலில் முக்கியமான சம்பிரதாயமாகும். கார்த்த வீரியார்ச்சுனனை மனதிலெண்ணியது ஓரு குற்றமென வன்கொலை செய்யப்பட்ட ரேணுகா பத்தினி உருமாறி தெய்வமாக நின்றபோழ்து அம்மணி உனைப் பிரிந்து யாம் உய்வது எங்ஙகனம்? என்று ஜமதக்னி முனிவர் தம் பெண்டாட்டியை கேட்க, கலியுகத்தில் மக்கள் எனக்கு நோம்பி சாட்டி விழா எடுக்கும் அந்த பதினைந்து தினங்கள் மாத்திரம் கம்பத்தில் வனைந்த சிற்பமாக தன்னோடு உறையலாம் என அம்மன் சொன்ன ஐதீகப் பிரகாரம் முற்றிய பாலை மரத்தை தேர்ந்து ஆண் உருவை செதுக்கி தூய நீராட்டி மஞ்சள் சந்தனம் தடவி சிறப்பு பூசனையிட்டு கோயில் தலைவாசலில் அம்மன் முகம் பார்க்கும்படி நட்டு விடுவார்கள்.கம்பளிக்கூத்துமாமன் மைத்துனர் முறையுள்ள உறவுக்காரர்களிரண்டுபேர்களுக்கு உடலில் கம்பளி சுற்றி, முகத்திற்கு மாறுபட்ட ஒப்பனை செய்து தாளக்கட்டுக்கு ஏற்றவாறு அடவில் பகடி கலந்து ஆடும் ஆட்டம் கம்பளிக்கூத்து. இதற்கென்று பாடப்பெறும் தனிப்பாடல்களும் உண்டு. செலவடை கொன்னவாயன்சொந்த பெயர் குஞ்சிப்பையன்.தந்தையார் இராமசாமி படையாச்சி சேவாட்டத்தில் மிகச்சிறந்த விற்பன்னர். தகப்பன் வழி காலடவு ஆட்டங்களில் விஞ்சிய ஆட்டம் கொன்னவாயன் அவர்களுடையது. கூத்தில் தனக்கென்றுவோர் தனி பாணி அமைத்து அதையும் சிறப்பாக செய்து வந்தவர்.சாரங்கதாரா கூத்தில் அவரிட்டு விளையாடும் சாரங்கன் வேடம் மக்களிடையே வெகுவான மதிப்பை பெற்றது.கட்டேறுப்பன்( கட்டு ஏரியப்பன்):சேலம் ஜில்லா, மேட்டூர் வட்டார வன்னிய குடிகளின் காவல் தெய்வமாகிவிட்ட மூத்த குடித்தலைவன். முஸ்லீம் பெண்ணை சிறையெடுத்து (நங்கியம்மனாக) இணை சேர்த்து கொண்டதனால் வழிபாட்டு முறைகளும் இசுலாமிய வழிபாட்டு முறைகளையொட்டிய பழக்கங்கங்களாக உள்ளது. (அருள் வந்து சாமி பேசுகையில் உருது மொழியில் பேசுவதாக சொல்கிறார்கள். மண்டிபோட்டு வணங்குகிறார்கள்.) ஆதி பதி வாணியம்பாடி திருப்பத்தூரிலும், இன்ன பிற பதிகள் சேலம் கீரை பாப்பம்பாடி, மாதநாயக்கன் பட்டி, கொப்பம் புதூர் ஆகிய இடங்களில் கிளை பிரிந்து அமைந்திருக்கிறது. காமாண்டார்தைமாதம் மூன்றாம் கிழமை கரிநாளன்று காலை, பிள்ளை பிராயத்திலுள்ள இருபால் சிறார்கள் மணியடித்து பாட்டுப்பாடி ஊர் சோறெயெடுத்து பிள்ளையார் கோயில் முன்பதாக கூடியதை உண்ட பிற்பாடு அங்கிருந்து ஒரு அரை மைல் தூரத்திற்கு ஒட்டப்பந்தயம் விடுவார்கள். தோற்றவர்கள் ஆணோ பெண்ணோ அவர்களை காமாண்டார் பெண்டாட்டி என தெரிவு செய்துஅன்று மாலைபொழுது இறங்கியபின் ஆறோ, ஏரியோ, கிணறோ ஊர் எல்லையிலுள்ள நீர் நிலைக்கு சென்று களிமண் எடுத்து வந்து ஆணுரு (காமாண்டார்) பெண்ணுரு(காமாண்டார் பெண்டாட்டி) பிடித்து வைக்க அவரவர் பெற்றவர்கள தங்கள் குழந்தைகளுக்கு இட்டு அழகு பார்ப்பதுபோல வெள்ளியோ,தங்கமோ, பித்தளயோநகைகளை அப்பிரதிமைகளுக்கு போட்டு அலங்கரித்து கூடி நின்று கும்மியடித்து,மாவிளக்கோடு பழந்தேங்காய் படைத்து வழிபடுவார்கள். பெரும்பாலும் பிள்ளை வரம் கேட்டு வரும் கோரிக்கைகளே அதிகமுமிருக்கும். விடிந்தபின் அப்பொம்மைகளை மீண்டும் பிள்ளையார் கோயில் வாசலில் எரியூட்டிவிடுவார்கள்.