ஞாயிறு, 13 நவம்பர், 2011

எங்கும் நிறைந்த பரம்பொருள் நானே!

கூத்திசை மேதை- செல்லப்பன் அவர்களை குறித்த வாய்மொழி வாழ்வியல் பதிவு.செல்லப்பன்:ஒப்பாரும் மிக்காருமில்லாத கூத்திசை மேதை. பாட்டனார் நரசனிடமும் தந்தையார் ராமசாமியிடமும் அவர் பயின்று பெற்ற நுண்ணிய மரபுக்கலை ஆதாரபடிவம் மாறாது கருத்துருவம் சேதமடையாமல் இன்று வரை நாளுக்குநாள் கூடிய செறிவுடனும் கூடுதல் பரிமாணங்களுடனும் கால் பாவியிருக்கிறது. ஆதி, அடவு, திருப்படை,ரூபகம், ஜம்பை, நொண்டிச்சிந்து,கும்மிதாளம் என்ற தாள வரிசைகளுக்கு நான்கு காலங்கள் வீதம் பகுத்தவர் வாசிக்கையில் மிளிரும் நூதனங்கள் வார்த்தைகளில் அடங்காது. உலக பிரபஞ்சத்தில் மாசுமருவற்றதும், கலப்படமற்றதும், கேட்கின்ற பேரை மனிதனாக பண்படுத்தும் இசையாகப்பட்டது கூத்தில் இடைவெளியை இட்டு நிரப்புவதற்கும், ஒட்டு போடுவதற்கும், கதை கட்டங்களை நிகழ்வுக்கோர்வையை, தளர்த்தி முறுக்குவதற்கும், வேடதாரிகள் பேசுகின்ற வசனங்களை அடிக்கோடிட்டு பார்வையாளர் இதயத்தில் அழுந்த பதிப்பதற்குமானதன்று! அது அம்பலக்கலையின் உயிர்த்தளம் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கும் செல்லப்பனின் வாழ்பானுபங்களை வாசகர்களுக்கான பகிர்வாக இங்கு வைக்கிறோம்.


. எங்கப்பன பெத்த கெழவம்பேரு நரசன். அம்மாள பெத்த கெழவம்பேரு சென்றாயன். சம்பந்தியுஞ் சம்பந்தியும் கூத்தாடியூட்டாருங்கற வகையில ரெண்டூட்டாரும் ஒட்டா செட்டுக்கட்டி வவுநாளா பொம்மக்கூத்து நடத்தியிருக்கறாங்க. அம்மாள கட்டறதுக்கு முந்தியே அப்பனுக்கு ஒரு பொண்டாட்டி நம்ப கொளத்தூரு குரும்பனூருல. அந்தம்மா இவுருக்கிட்ட இருந்து வாழ்க்கச் செய்யல, அம்மாள கண்ணாலம் மூச்ச கையோட எங்கப்பா சின்னாயா காவேரியுங் கண்ணாலம் மூச்சிக்கிட்டாரு. அம்மாவூட்டாருக்கும் அப்பன பெத்த தாத்தனுக்கும் வரவு செலவுல போக்குவரத்துல மனஸ்தாபமாகி மவனன மாமனாரு மாமியாளோட வுட்டுட்டு தாத்தனும் பாட்டியும் பிரிஞ்சி, வேறயா ஒல வெச்சிக்கிட்டாங்க. போனவிங்க சும்மா போவல! பொம்ம பொட்டி, மத்தாளம், டெண்டு துணி, ஒருக்கோடியா சுத்தமா தொடச்சி எடுத்துக்கிட்டுப்போவ, அப்பனுக்கு சினேகதக்காரு ஓராளு உருவாய குடுத்து ஒத்தாச பண்டி பொம்மையாட்டி பொழைக்க தடங்காமிச்சாராம். அப்ப இந்த கெழநாடு ஆத்தூரு கள்ளக்குறிச்சிய கட்டி தோலுப்பொம்ம ஆட்டிக்கிட்டு திரிஞ்சவங்க வாழப்பாடி புத்தரகவுண்டம்பாளையம் வந்து சேந்தப்ப எங்கம்மாளுக்கு நானு வவுத்தலிருந்தனாம்.


பத்தாம் மாசம் பேறு மாசம்! அந்த கார வருசத்து பஞ்சத்துல மனசருக்கு திங்க கத்தாழ கெழங்கு கூட ஆப்படலையாம். வாயும் வவுறுமா இருக்கப்பட்ட பொம்பளய நீசுத்தண்ணிக்கி கெதியில்லாத தாவுல வெச்சிருந்து என்னாப் பண்டறருன்னு ஓசிச்சா ஒரு வழியுந் தெம்படல. இந்த பரிதாபத்த பாக்க முடியாத அந்தூரு வைத்தியரு ஒருத்தரு "மொட்டையா! மொட்டையா! பஞ்சத்துல அடிப்பட்டு சாவறதுக்கு ஓடி பொழைச்சிக்கலாம் வாடா"ன்னு ராமக்கல்லு மோகனூருல அந்தாளோட பொறந்தவள கட்டிக் குடுத்திருக்குது. கரவெளிதேசம் தண்ணியுள்ள தாவு, கூத்தாட்டனாலும் சேரி எதோ கூலியோ நாழியோ செஞ்சி பொழைச்சாலும் சேரின்னு கூட்டிப்போயி வுட்டாராம்.


அங்க போயி டெண்டக்கட்டி பொம்மக்கூத்து ஆட்டனா ஒருச்சனம் பாக்க வல்லியாம். அதோட அந்தூருல நாளைக்கி மூணு கொல வுழுவுமாம், வாய்க்கால்ல அடிச்சிக்கிட்டு வர்ர பொணத்துக்கு அளவே இல்லியாம். என்றாயிது வடச்சட்டிக்கி பயந்துக்கிட்டு அடுப்புல வுழுந்துட்டமே! எப்பிடிறா பொழைக்கற வழின்னு எங்கப்பன் அழுத கண்ணுஞ் சிந்தனையுமாயிருக்க அன்ன ராவே எங்கம்மாளுக்கு வலி புடிச்சிட்டுதாம். ரெண்டு ராத்திரி ஒரு பகலுமாயும் நானுப் பொறக்கவேயில்ல. அப்பன் பாத்தூட்டு மோகனூருக்கு அந்தாட்டவொரு அலங்காடு, ஆளு நடமாட்டம் அறுதி. ஒலக்க சத்தம், ஒரளு சத்தங்கூட கேக்க கூடாதுன்னுவொரு கட்டள, அவுத்த இருக்கப்பட்ட செல்லியம்மங்கோயிலு போனதும் அந்தம்மா காலடியில வுழுந்து திக்கத்துப் போயிட்டந் தாயே! நீதான் தொண!. புள்ள பொறந்துக்கிச்சி, தாயி வேற புள்ள வேறயா நல்லபடியா இருக்கறாங்கன்னு இந்து காதுல கேட்டா இந்த எடத்தவுட்டு எந்திரிப்பன்! இல்ல உன்ற காலடியில உசுர வுட்டுர்ரேன்னு நீண்டு படுத்துக்கிட்டாராம்.


விடியறதுக்குள்ள நாம் பொறந்த தகோல அந்த வைத்தியரு போயிச் சொல்ல சந்தோசமா எழுந்து தாயே உம்பேர பையனுக்கு வெக்கறேன்! உனக்கே மும்முடி குடுக்கறன்னு வேண்டுத்தல வெச்சிட்டு அதே பிரகாரம் எனக்கு செல்லப்பன்னு பேரு வெச்சாராம். இப்பிடி பஞ்சத்துல நானுப் பொறந்திருக்க, பத்து வருசங் கழிஞ்சது. எடவெளியில முள்ளுவாடி பள்ளியோடத்துல ரெண்டு வருசம் படிச்சன். அதயும் பூர்த்தியா படிக்கல. ஊரு ஊரா தேசாந்தரம் போறவிங்களுக்கு படிப்பு ஒரு கேடா? மொள்ள பஞ்சுபட்டி பாளையம் போயிச் சேந்தம். எங்கம்மாளுக்கு தாயாரு வாத்து பெரிய ரோதன. ஆளு கெடயில படுத்தாச்சி. பாட்டியாள காவுலுக்குப் போட்டுட்டு பாட்டனும் நானும், அப்பனும் சின்னாயாளும் மாரண்டள்ளி சத்தரத்திண்ட பொம்ம கூத்து ஆட்ட வந்தம்.


மக்யா நாத்தெல்லாம், எனக்கு, சின்னாயாளுக்கு, எங்க தங்கச்சி காளியம்மாளுக்கு குடும்பம் முச்சூடும் அம்ம வாத்துக்கிச்சி. மாத்துக்கட்டுல பிள்ளைங்களுக்கு வைத்தியம் பாத்து எங்க தாத்தனுக்கு கண்ணாமுழி பிதுங்கிப்போச்சி. இப்பிடியிருக்கப்பட்ட சந்தர்ப்பத்துல எங்கூட்டுக்காரியும் (ஜெயா) அவிங்கம்மா, அப்பன், பொறந்தவமாரோட மாரண்டள்ளி சத்தரத்துக்கு வந்து சேந்தாங்க. பூர்வீகத்துல எங்கப்பனுக்கு அவிங்க மாமம் மச்சனன் மொற. இவிங்கப்பன் பொம்மக்கூத்துல கற கண்ட வித்துவான், பெருங்கொண்ட ஆசாமி. அந்தாளும் எங்கப்பனும் சேந்துக்கிட்டு சாராயங் குடிக்கப்போன தாவுல செத்த குறம்பையாட்டுக்கறி ஆரோ கூறுகட்டி விக்க, பாட்லோட ரெண்டு கூறு கறியும் எடுத்தாந்து, அந்தச் சணமே வறுத்துக் குடுக்கச் சொல்லி, தாந்தின்னதுமில்லாம எங்கூட்டுக்காரியோட அம்மாளுக்கும் குடுத்துட்டாங்க.


தின்ன மாயத்துல அந்தம்மாளுக்கு சேத்துமாங்கட்டியாட்டம் வந்து ஆளு விடிஞ்சிம் விடியாதமின்ன புளுக்கய விசிறிபுட்டா. ஊருக்கார படவாப் பசங்க இந்தண்ட அந்தண்ட ஒருத்தரையும் நவர வுடமாண்டேங்கறாங்க. அதே சமயம் எனக்கு அம்ம வாத்து நாஞ் செத்துப்போயிட்டன்னு ஆரோ எங்கம்மாளுக்கு தாக்கலுச் சொல்ல, அத்தன காச வெறியிலியும் ஆவுசந் தாங்காம, கட்லுக்கு தொணயாப் படுத்திருந்த பொம்பள ராவோட ராவா போக்கு மாட்டு வண்டியப் புடிச்சி, சத்தரத்துக்கு வந்துட்டா. அந்நேரம் இவிங்களும் எங்கத்தக்காரிய தொட்லுக்கட்டி தூக்கிப் போயி, கறண்டி காம்புல ஒண்ணா ரெண்டா குழியப் பறிச்சி, மூடிப்புட்டு வர, அதப்பாத்ததும் மெரளு வந்தாப்பிடி எங்கம்மா மண்ணு மேல பொரண்டழுவ, ஆளுக்கு ரொம்ப அனதுடியாகி, மேலுக்கு உண்டுன்னா வருத்தமாச்சி. நானு எங்கம்மாள தூக்கி நிறுத்தி, குடிக்க தண்ணி குடுத்து, மொகங்கழுவி அம்மா நானுன்னுஞ் சாவல! உசுரோடத்தான் இருக்கறன்னு தேறுதல சொன்னப்பொறவுதான் அம்மாக்காரி மனசாரி கட்டுல்ல படுத்தா. படுத்தவ திலுப்பி எந்திரிக்க முடியல, மேலு நூலாட்டம் தொவண்டுக்கிச்சி. ஒடம்புல கண்ணு மயிரூண்டு எடம் பாக்கியில்லாம, அச்சரம்! பொண்டு புள்ளைங்க இப்பிடி சின்னப்பட்டு சீரழியறம், அப்பங்காரன் அன்னராவு தம்பட சித்தப்பனொருத்தன் விருந்தாட வந்தவனோட சாராயக்கடைக்கி போனவன், போனவனே!அவனென்ன சொல்லிக் குடுத்தானோ தெரியல! ஆளு எங்கப் போனான்? எவத்திருக்கறான்னு ஒரு துப்புஞ் சிக்கவேயில்ல.
படாதபாடுபட்டு பண்ண ரெக்கிரி பொறிச்சித் தின்னுப்புட்டம். தாத்தம் மேச்சேரிக்கி கூட்டிப் போனாரு.


அங்க இந்த சீரெழவ கண்ல பாக்க முடியாம, அம்மாளோட தாயி மாமனொருத்தரு சின்னான் சின்னான்னு பட்டாளத்துல இருந்தவரு, இங்கிருந்தா சுத்தப்படாது உங்ககிட்ட தொழிலு திறமயிருக்குது, வாழ வழியிருக்குதுன்னு கொல்லிமல சார்புக்கு கூட்டிப்போனாரு!. அங்க ஊருப்பாட்டுப்பாடி வவுறு வளத்தம். ஊருப்பாட்டுங்கறது என்னான்னு கேட்டிங்கன்னா பொட்டி, மத்தாளத்தோட ஓராளு வேசம் போட்டுக்கிட்டு ராவுல ஊடு, ஊடா பிச்சைக்கி ஆட்டம் ஆடறது. இப்பிடியே நாங்க காலந்தள்ள அங்கவொரு ஜமா டெண்டுக் கூத்தாட வந்திச்சி. அதுலவொரு பொம்பள முத்தி, முத்தின்னி அவள அண்டி எங்கம்மா வேசங்கட்ட பழவ, நானுஞ்சேந்து சில்லற வேசமாட பழவனன்.


அவிங்களோட கொஞ்ச நாளு, வவுத்துக்கு பஞ்சமில்லாம, காலந் தள்ளிப்புட்டு மறுக்க தாத்தா வூட்டுக்கு மேச்சேரி வந்தம். அப்ப மேச்சேரியில சடையங் கொறவன் ஜமாவும், அவிங்க பங்காளி அர்ச்சுனஞ் ஜமாவும் கூத்துல கொடிகட்டி பறக்கறாங்க. காரிமங்கலம் காவேரிப்பட்டணத்துக்கு இந்தாண்ட மூணு மைலு தொலவுல குண்டலப்பட்டின்னு ஒரூரு. அந்தூருல ஒட்டுக்கா மூணு ராத்திரி கூத்தாடச் சொல்லி அர்ச்சுனஞ் ஜமாவுக்கு வெத்தல பாக்கு குடுத்துட்டாங்க.
அந்தச் சமயம் அவரு செட்ல ஆளுங்க கொஞ்சம் கட்ட!. ச்சேரி எங்கம்மாவொரு பெருங்கொண்ட வேசக்காரி! அக்கா மொற! நானும் நல்லா மத்தாளந் தட்டவும், சால்ரா போடவும், குடுமியுங் கொண்டையுமா துருதுருன்னு திரிய, எங்களோட பாப்பாரப்பட்டி சாமிநாதன்னு ஓராளையுஞ் சேத்து ஜமாக்கட்டி, அர்ச்சுனமூட்டாரு குண்டலப்பட்டியில கூத்தாடப்போனம். மொத நாளு சுந்தரி கல்யாணம்! சுந்தரி வேசம் போட்டன். ரெண்டாம் நாளு சைந்தவங் கர்வ பங்கம்! சகாதேவன் வேசம், மூணாம் நாளு பவளக் கொடி கல்யாணம்! புலேந்திரன் வேசம் போட்டன். பையம் பரவால்ல, நல்லாயிருக்குது வேசமுன்னாங்க. அப்பறம் அர்ச்சுனங் கூடவே கொஞ்ச நாளு கூத்தாடனம். சத்தரத்துல பிள்ளைங்கள பிள்ளைங்கன்னும், பொண்டாட்டிய பொண்டாட்டியின்னும் நெனச்சிப்பாக்காம,நெஞ்சில துளி ஈரமில்லாம, அனாதியா வுட்டுட்டு ஓடனானே, எங்கப்பந் தாயேலி! இங்கிருந்து போன மாப்ள ஒரு மீனுக்காரிய கட்டிக்கிட்டானாம். பெருமையில, புது பொண்டாட்டிக்கி எங்கம்மா நக நட்டு காலு காப்பு மொதலானதும் பூட்டி அழவு பாத்தானாம்! அவயெங்கியோ ஒரு அண்டப் பீத்தலு!.போனன்னைக்கி போயி, பொதங்கெழமையன்னைக்கி நக்க குடுத்துட்டு,திருவாணியக்கூட மிச்சம் வுடாம பெட்டிக்கிட்டு, போயிட்டு வாடா புண்ட வாயா!ன்னு அடிச்சாளாஞ் சவாரி!


உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணஆன்னு முக்காடு போட்டுக்கிட்டு ஒன்ற வருசமா ஊரு ஊரா எரந்து குடிச்சிக்கிட்டு திரிஞ்சிப்புட்டு கடைசியா குண்டலப்பட்டிக்கி வந்துருக்க, நாங்க அங்க கூத்தாடற சமாச்சாரந் தெரிஞ்சி, தந்தாளு ஒருத்தனவுட்டு பஞ்சாயம் பேச வந்தான். அர்ச்சுனனுக்கு எங்கப்பன் மத்தாளமுன்னா உசுரு!. ரெண்டுபேரும் ஒரு கையி!. பொறந்தவமாரு ரெண்டு பேத்துக்கும், பிள்ளைங்களுக்கும் காலமெல்லாம் நாம்ப வெச்சி கஞ்சியூத்த முடியிமா? போனது போவுட்டும்! மல மேல நெல்லு வௌஞ்சாலுங் குதுருக்கு வந்துதானே ஆவுனுங்கறாப்பிடி இவுனும் கெட்டழிஞ்சி வந்துருக்கறான். கசந்து வந்தவங் கண்ணத் தொடைக்கினுமுன்னு என்னும்மோ சாங்கியத்துக்கு மெரட்டிப்புட்டு அப்பங்காரன செட்டு மத்தாளத்துக்கு சேத்துக்கிட்டாப்ல.
அதும்பொறவு எங்க பெருமாளு பொறந்தான், தங்கா தனம்புள்ள, இந்த கணேசன்(அம்மாபேட்டை),அம்மிணி இப்பிடி பொறப்புங்க ஒவ்வொருத்தார பொறந்தாங்க. ஆளுங்க இருந்தா சடையனோட! இல்ல, அர்ச்சுனனோட கூத்து! ஆளுங்க தோதுப்படலியா தோலுப் பொம்ம கூத்து!. மாத்து கட்டுல தொழுவாடுப் பண்டிக்கிட்டிருந்தம். அப்பிடியே அக்கர பூனாச்சிக்கி போனம். குரும்பனூரு காளிக்கிட்ட சேந்தம். ஏழு வருசம் ஒட்டா கூத்தாடனம். அப்பத்தான் நானு ஆணு வேசம், பொண்ணு வேசம், கோமாளி வேசம் போட்டு பேரெடுத்தது. எனக்கு பதனெட்டு வருசம் முடிஞ்சது. காளி ஜமாவ வுட்டு, சடையஞ் ஜமாவுக்கு போனம். அங்க மாயவனும், கண்ணுப்பையனும் மூண்ட வாலிப்பம்! முசுவா கூத்தாடறாங்க!. நானும் போயிச் சேர, கூத்து தொழுவாடு கொண்டயம் பாத்துட்டுது. அந்தெட்டு ஆடி பதனெட்டன்னைக்கி கோனேரிப்பட்டியில கூத்துட்டுருந்தாங்க. அரவாங்களப்பலி வெச்சி, நானு திரியோதனன், மாயவன் அரவான், கண்ணுப்பையன் நாகக்கன்னி, சடையன் தருமரு! வெச்சி பொள பொளன்னு பொளந்து கட்டனம். கூத்து எத்து! ஆளு ஒசர கெடா, அரவாம் பதிக்கி வெட்டி, தோலுரிச்சி கூறுபோட்டுக்கிட்டிருந்தம். சடையம் பொண்டாட்டி மேச்சேரியில இருந்து பப்பாரிக்கிட்டு வந்தா. சமாச்சாரம் என்னான்னா, மம்பட்டியான், ஒம்போது பேத்த வெட்டி சாச்சதும், மாயவந் தங்கச்சி சங்கீதம் ஒரு படையாச்சியாள கூட்டிக்கிட்டு ஓடிப்போனதுந்தான். கறியாவுது! கசுராவுது! வேசத்த அழிச்சும், அழிக்காத மின்ன ஓடி, புள்ளையையும் பையனையும் எடப்பாடி பஸ் டேண்டிலியே புடிச்சிட்டம்.


கொண்டாந்து தாவுச் சேத்தனம். அங்கருந்து வந்தும் வராதமின்ன ரெண்டு வூட்டாரும் அந்தப் பிள்ளய எனக்கு சம்பந்தம் பேசறாங்க. சுத்தமா பிரியமில்ல எனக்கு. ஏன்னுக்கேளு! நானு முந்தியே இவுளோட (ஜெயா) பேச்சு வார்த்தையில இருந்தன். இவுளும் என்னய வுட்டு, வேறாளுக்கு கழுத்த நீட்ட மாண்டேன்னு சத்தியம் பண்ணிக்குடுத்துருந்தா. ஆனா அவிங்கப்பந் தாயேலி இவள எனக்கு தெரியாமியே, வேற ஒருத்தனுக்கு கண்ணாலஞ் செஞ்சிக் குடுத்துட்டான். இவுளும் எனக்கு எந்த சமாச்சாரத்தையும் சொல்லி வுடல. அதுலியே மனம் நொந்து போயிருந்தனா, அதனால சங்கீதத்த கட்டிக்க பிரியமில்ல.
அந்த ராவே சடையன் ஜமாவுல இருந்து பிரிஞ்சி, எடப்பாடி ஒட்டப்பட்டிக்கி டெண்டச்சுருட்டி தூக்கிட்டுப் போயிட்டம். அந்தியோட மாயவன் ஆளு அனுப்பிச்சான், செல்லப்பன வரச்சொல்லுன்னு. சேரி நாம்பவொன்னு மனசுல நெனச்சிக்கிட்டு இருக்க, அவிங்க பாவம் புள்ளய நம்பளுக்கு கட்டிக்குடுக்கற நெனப்புல இருக்க, பேசாம குட்டோட இருந்துட்டா, மூடிவெச்சி கழுத்தறுக்கற மாதர ஆயிரும். உள்ளத ஒடச்சி சொல்லிப்புட்டு வந்துருலாமுன்னு போயி, மாயவங்கிட்ட இப்பிடி இப்பிடித்தாண்டா மாயவா உன்ற பொறந்தவள கட்டிக்க எனக்கு சுத்தப்படாதுன்னு உம்மய சொன்னன், அவனும் அதப்பத்தி காரியமில்ல, பார்ரா வேலயன்னான். திருப்பி வூட்டுக்கு திரும்பிக்கிட்டன். வரக்குள்ள ஆலச்சம்பாளையம் மாரியாக்கோயில தாண்டயில பொட்டி மத்தாள சத்தங் கேட்டது. பாத்தா, இவளும் இவளோட அப்பனும் ஊருப்பாட்டு பாடிக்கிட்டிருந்தாங்க அவுத்த. இவள பாத்ததும் எனக்கு கால வாரியடிச்சாப்ல, பிதுமாரு கெட்டுப்போச்சி. மனசே சரியில்ல! போவலாமுன்னு நவந்தப்ப, இவளோட மாமங்காரன் என்னய பாத்துட்டு ஓட்டமா ஓடியாந்தான்.


சேரி வாடான்னு அவனையுஞ் சைக்கிள்ல குந்தவெச்சிக்கிட்டு ஒட்டப்பட்டிக்கு வந்து சேந்தன். எங்கப்பங்கிட்ட இவிங்கள ஆலச்சம்பாளையத்துல பாத்தத சொன்னன். சேரி அவன் ஏண்டா அங்க ஒண்டியா தடுமாறணும்? நம்பளோட சேந்து பொம்மக்கூத்து நடத்தட்டுமுன்னு எங்கப்பன் வண்டிக்கட்டிக்கிட்டுப் போயி, அந்த ராவே இவிங்கள கூட்டியாந்து எங்க செட்ல சேத்திக்கிட்டு ஒட்டா மறுபடி பொம்மக்கூத்து நடத்தனாரு. ஒட்டப்பட்டியில இருந்து சேலம் சீரகாப்பாடி போனம், ஜெயா அவ அப்பங்காரஞ் செஞ்ச கொடும கதய சொல்லி அழுதா, மனசௌவி, ஒத்து, ரெண்டுபேரும் கட்டிக்கறமின்னு ஒருமனசா வூட்ல சொன்னா, இந்தாண்ட எங்கம்மா முறுக்குறா, அந்தாண்ட அவிங்க அப்பம் முறுக்குறான். நாயம், அந்தூரு நாயக்காரன் துரியோதன கவுண்டரிண்ட போச்சி. அவரு கவலப்படாதடா செல்லப்பா! உன்ற கல்யாணம் எஞ்செலவு!ன்னு சொல்லி, அவரே முன்னயிருந்து எங்க கண்ணாலத்த செஞ்சி வெச்சாரு. இவிங்கப்பஞ் சும்மா குதிக்க, டேய் கூத்தாடி! சும்மா முறுக்காத! ஒழுங்காயிருந்தா, ஒரு நேரத்துச் சோறு திம்ப! பத்தஞ்சி பரியங்குடுத்தா ஒரு கெளாசு சாராயங் குடிப்ப! மீறி எதனா சத்தங் காட்ன ஈடுதாம் திம்பன்னு அந்தாளு கூப்புட்டுச் சொல்லிப்புடிச்சி., இந்தாளு பேச்சிக்கே எடமில்லாம போயிட்டுது. கடைசியா முக்கி மொனகி நாயக்காரங்கிட்ட எம்பிள்ள பொம்மையாட்ட, நாங்க இத்தனபேரு வவுறு வளக்கறம்! திடுதிப்புனு இவம்பாட்டுக்கு தனியா போயிட்டா பாக்கி இருக்கறவிங்க எப்பிடி பொழைக்கிறதுன்னு நாயங்கட்ட, துரியோதனக் கவுண்டன் நீ சொல்றது வாஸ்தவமான பேச்சி! இருந்தாலும் பொட்டப்புள்ளய பெத்து நாம்பளே வெச்சிக்க முடியுமா? அதுக்குன்னு பிருசன் ஆச! பிள்ள ஆச! தனக்குன்னு ஒரு குடும்பங்குட்டி வேணுமுன்னு ஆசயிருக்காதா? அதனால உம்புள்ளைய வேணுமுன்னா சிறுசு பெருசாவற வரைக்கும் ரெண்டு வருசத்திக்கி உங்கூட வெச்சிக்க! அவ, பொம்மையாட்டட்டும் கூட மருமவனயுங் கூட வெச்சிக்க! பொறவு அவிங்கவிங்க பொழைக்கிற வழியெப்பிடியோ அதப் பாத்துக்கங்கன்னு சொல்ல, நானு அந்த பேச்ச ஒப்பிக்கிட்டு ரெண்டு வருசம் மாமானாருக்கூட இருக்கறன்னு வாக்கு குடுத்துட்டன்.
அங்கயிருந்து பனமரத்துப்பட்டி சந்தப்பேட்டைக்கி போனம். அஞ்சாறு ராத்திரி கூத்து நடத்தனம்.


கடைசி நாளுக்கு மொதநாளு, சந்தைப் பேட்டைக்கி பக்கத்துல பெரிய மாளிக! அந்தூட்டு பண்ணாடிச்சியம்மா பண்ணையக்காரனவுட்டு விடிஞ்சும் விடியாதமின்ன, அந்த பொம்ம ஆட்டன ஆளு, மத்தாளமடிச்ச ஆளு, பொட்டி மீட்டன ஆளு மூணு பேத்தயும் கைப்புடியா கூட்டியான்னு கூப்புட்டது. நாங்களும் போனம். "யாருப்பா பொம்மையாட்னது", "இவதாங்க எம் பொண்டாட்டி", "மத்தாளமடிச்சது ஆரு", "நாந்தானுங்க", பொட்டி வாசிச்சது ஆரு", "அதா அந்தாளுங்க என்ற மாமானாரு", ன்னு நாஞ் சொல்ல அந்தம்மா நானு ஆருன்னு தெரியுமான்னு கேக்க, தெரியலீங்களேன்னன்.
"சம்பூர்ண ராமாயணம் படம் பாத்தீங்களா"
"சேலத்துல அந்த படம் புடிச்சாங்களே! அந்த சூட்டிங்கே பாத்துருக்கறங்க! ஒரு நாளு பொழுதுக்கும் சோறு தண்ணியில்லாம. சிவாஜி பரதன், டி.கே.பகவதி ராவணன். பத்மினியம்மா சீத"
"அந்த டி.கே. பகவதி ஆருன்னு நெனச்சிங்க எங்க அக்கா புருசன்தான், நான் அவரோட கொளுந்தியா!. எங்க மாமனுக்கு ட்ராமா கம்பினி இருக்குது, சினிமாவுலயும் அவரு நடிக்கிறாரு. இப்பிடி திறம வெச்சிருக்கற நீங்க இனிமே தெருவுல இருக்க வேண்டிய தேவ இல்ல. காத்தால அஞ்சி மணிக்கி சேலத்துக்கு ரயிலு! அங்கிருந்து பதினொரு மணிக்கு மெட்ராசிக்கி ரயிலு! எங்கூட வாங்க! உங்களுக்கு சகல சம்பத்தும் நாஞ்செஞ்சிக் குடுக்கறன். ஒடனே சொல்லணுமுன்னு இல்ல போயி தூங்கி எந்திரிச்சி நல்லா யோசன செஞ்சி சொல்லுங்க",ன்னு அந்தம்மா ரெண்டு வலப்பையி நெறயா செலவு சாமானம், ஒரு வாரத்துக்கே தாட்டும்படி அரிசி, பருப்பு எல்லாங் குடுத்துட்டுச்சி. நானும் பெரியவங்கள ஒரு வார்த்த கலந்துக்கிட்டுச் சொல்றன்னு டெண்டுக்கு வருமுந்தியே, அங்க சமாச்சாரந் தெரிஞ்சி, எங்கப்பனும் அம்மாளும் ஒருபக்கம்! பொண்டாட்டியோட அப்பனும் அம்மாளும் ஒருபக்கம்! சும்மா எதுரு ஒப்பேரி வெச்சிக்கிட்டு அழுவறாங்க.


நீங்க மெட்ராசி போயிட்டீங்கன்னா நம்பியிருக்கற எங்க கெதி என்னா ஆவறதுன்னு பொலம்பலான பொலம்பலு!. என்னா செய்யறது, அந்தம்மாகிட்ட போயி என்னா வதுல சொல்றது? விரும்புத்தி பிடிச்சிச்கிச்சி. பேசாம ஒன்ற பாட்லு சாராயத்த குடிச்சிப்புட்டு, குப்புற அடிச்சி படுத்துக்கிட்டன்.
பொழுது விடிஞ்சதோ இல்லியோ, எம்மாமனாரு ஒவ் இதேதுறா புள்ளய இவனோடவுட்டா இவ காரேறி ஊரு பெரயாணம் போயிருவாளாட்டமிருக்குதுன்னு மனசுல கெட்டபுத்தி வெச்சிருந்தானோ என்னம்மோ, மக்காயநாத்து டெண்டப் பிரிச்சிக்கிட்டு பனமரத்துப்பட்டியிலிருந்து அந்தாட்ட நாலுமைலு தொலவுல செந்தாரப்பட்டி மார்க்கத்துல ஒரூருக்கு குடியோடிப்போயிட்டான். நானும் வாக்கு குடுத்துட்டமேன்னு அப்பனம்மா, பொறந்தவமார வுட்டுட்டு அவங்கூடவே போனேன். அன்னிக்கி அந்தியோட எங்கம்மா வந்து, செல்லப்பா, செல்லப்பா பொம்மக்கூத்தாடச் சொல்லி ஊருல கேட்டாங்க, நானு ஒப்பிக்கிட்டன். இன்னிக்கி ஒருநாளு மாத்ரம் வந்து செத்த மத்தாளந் தட்டறா! நாள வாரத்துக்கு வேணுமுன்னா வேற ஆராச்சும் புடியாளப் புடிச்சி செட்டுக்கு சேத்திக்கறன்னு கேக்க, பெத்த தாயி வந்து இப்பிடி பிச்சக்காரி மாதர கெஞ்சறாளேன்னு. எனக்கு அஞ்சுசுரும் பதைக்கிது!. அம்மா அங்கியுங் கூத்து இல்ல! இங்கியுங் கூத்தில்ல! வந்தா ரெண்டுபக்கமும் சுதாரிச்சிக்கலாமின்னுதான் இவிங்ககூட வந்துட்டன். மத்தாளத்துக்கு கொஞ்சம் கரண தேக்கிணும். தேச்சிக்கிட்டு பொறைக்கி வந்தர்றன்னு அம்மாள அனுப்பிச்சி வெச்சன். அந்தியோட தண்ணி கிண்ணி வாத்துக்கிட்டு பனமரத்துப்பட்டிக்கி நானு பொறப்பட, பொறன வூட்டுக்காரியும் பொறப்பட்டா. அன்னமுட்டும் வாயி பேசாமயிருந்தவன், என்னய முன்னவுட்டு, பொறன அவள "எங்க புள்ள போற",ன்னு குறுக்காட்டறானே மாமனாரு! எங்கூட்டுக்காரி எங்க போறன்? மாமம் கூத்துக்குப் போவுது! கூட நானும் போறங்க, அதுக்கு அவனிருந்துக்கிட்டு உம்புருசன் வேணுமுன்னா போவுட்டும், நீ போறதுக்கில்லங்கறானேவொரு சாமார்த்தியம்!.
இவளிருந்துக்கிட்டு, அப்பிடியா நானு போவாம இருக்கறதுக்கில்லன்னு சொல்லிப்புட்டு எம்பொறனையே வந்துட்டா. கூத்து முடிஞ்சதும் நானு எங்கூட்டுக்காரிக்கிட்ட கூப்புட்டுச் சொல்லிப்புட்டன். புள்ள ங்கொப்பன் புத்தி செரியில்ல! இன்னைக்கி எம்பொறன போவ வேண்டாமுன்னு சொல்றவன், நாளைக்கி நம்பள ஒண்ணா பொழைக்க வுடுவானா? நானு அவங்கிட்ட இருந்து தொழிலு செய்ய இனிமேட்டு லாயிக்கப்படாது. நானு வேணுமுன்னா, போயி மரியாதிக்கி உங்கப்பங்கிட்ட ஒருவார்த்த சொல்லிப்புட்டு நீ வா! வேண்டாமுன்னாலும் ஒங்கப்பனோட மவராசியா இருந்துப் பொழ!....
காத்தால போனவ சாயந்தரம் பொட்டியோட வந்துட்டா. பொறவு ரெண்டு புள்ளைங்க பொறக்கந்திண்ணியும் அப்பன், அம்மா பெத்து பொறப்போட நல்ல மொறையா குடித்தனம் பண்டனம். அந்த சமயம் நம்ம வாழப்பாடி முத்தம்பட்டியில வீரப்பன், வீரப்பன்னு ஓராளு. அந்தாளு டெண்டக்கூத்து ஏலத்துக்கு எடுத்து பத்து ராத்திரி கூத்து வுட்டுருந்தாரு. என்னையும் இவளையுஞ் சம்பளத்துக்கு கூப்புட்டாங்க, சேரின்னு போனம்.தூளு வரிச்சிப்புட்டு குந்தியிருந்தம்பாரு! மாமனாரு கணுக்கால்ல இருந்து மொழங்காலு முட்டும் பெரிய்ய கட்டா போட்டுக்கிட்டு கால செண்டி செண்டி வந்தான்.
ஜெயா, ஜெயா, ரெண்டு நாளு பொம்மக்கூத்தாடறன்னு வெத்தலப்பாக்கு வாங்கிப்புட்டன். தம்பிகாரனையும் என்னையும் நாயி கடிச்சிப்புடிச்சி. இந்த நொண்டி காலோட எப்பிடி கூத்தாட்டறது? வந்து ரெண்டு நாளைக்கி பொம்மையாட்டு பொறவு வந்துருவியாமின்னு கேக்க, இவுளுக்கு திடீருனு பொறந்தவம்மேல பாசம் பொத்துக்கிச்சி. நானு போயிட்டு வர்றன் ஓரெட்டுன்னு என்னய உத்தரவு கேட்டா. எனக்குன்னா மாமனாரு மேல சந்தேகம், நாயி கடிச்சிதுக்கா ங்கொக்காளவோலிக்கி இத்தச்சோட்டு கட்டு? இதுல என்னமோ வில்லங்கமிருக்குதுன்னு வூட்டுக்காரிய தனியா கூப்புட்டு, பிள்ள பிள்ள ங்கொப்பன மொதல்ல கால்ல இருக்கற கட்ட அவுக்கச்சொல்லு! உம்மையிலியே நாயி கடிச்சிருக்குதான்னு பாப்பம், நாயி கடிச்சிருந்தா நானும் கூட வர்றன். ரெண்டுபேரும் போவலாம். இல்ல ங்கப்பன் தக்கிடித்தனம் எதனாலும் பண்டிக்கிட்டு ஆள வேல வுடலாமுன்னு வந்துருந்தா, ஒததாம் திம்பாம் பாருன்னு சொல்ல, இவ ஒரே குதியா குதிக்கிறா.
போவ வாண்டமுன்னு சொல்ல முடியாம, எங்கப்பன் மேல பாடா வழி போடறியா? நம்பாதவம் பீய நாயிக்கூட திங்காது! எம்பொறந்தவன பாக்க, நானு போயித்தான் ஆவுணுங்கறா. அப்பிடின்னா சேரி, எம்பேச்ச மீறி நீயி போவத்தாம் வேணுமுன்னா, நாங்கட்ன தாலியோட போவக்கூடாதுன்னு நாஞ் சொல்ல, அப்படியா சமாச்சாரம் ஆருக்கு வேணும் தாலி! இந்தா நீ கட்ன தாலிய நீயே எடுத்துக்குன்னு லவுக்க மறப்புல இருந்த தாலிய படக்குனு எடுத்து வெளிய காட்டனாப்பாரு. நானு வெடுக்குன்னு புடிச்சி அத்துப்புட்டன். தாலியத்த மறுநிமுசம் இவிங்கப்பங்காரன் ஒரு மஞ்சப்பையி கொண்டாந்தாம்பாரு அதலிருந்து நானு கண்ணாலத்துக்கு எடுத்த மாமி சீல! பரியம் உரூவா நூறு! ரெண்டயும் எடுத்து எம்மின்ன வெச்சி, இன்னையோட எம்பிள்ளைக்கும் உனக்கும் ஒறவந்துப்போச்சி! செத்தாப் பொழைச்சா எதுவுங் கெடயாதுன்னு துரும்பு கிள்ளி போடறானே.


கூத்துக்கு கூப்புட வந்தவன்பரியத்து உருவாயும் மாமி சீலயும் எதுக்கு எடுத்துக்கிட்டு வந்துருப்பான்னு இந்த கண்டாரோலி அப்பக்கூட ஆஞ்சியோஞ்சி பாக்கல. அங்க கூத்து ஆரம்பிச்சி நடத்துக்கிட்டு இருக்குது இங்கவொரு கூத்து நடந்துக்கிட்டிருக்குது. வேசம் போட ஆளில்லன்னு தொலாவிக்கிட்டு கூத்துட்டவன் வர, இந்த சமாச்சாரத்த காதுல கேட்டவன், புருசனோட போவியோ, அப்பனோட போவியோ, எனக்கு தெரியாது. கைநீட்டி வாங்கன உருவாயிக்கி விண்ணமில்லாம ஒழுங்கு மரியேதியா கூத்தாடிப்புட்டு போன்னு இவள புடிச்சிக்கிட்டான். இப்பிடி வாட்டலாட்டியத்திலியே ரெண்டு புள்ளைங்க பெத்தம். பொறவு அப்பன், அம்மா, தம்பிமாரெல்லாம் ஒட்டா செட்டுக்கட்ட நானும் இவுளுந் தனியா பொம்மக்கூத்து ஆட்ட செட்டு கட்டனம். ஓகோன்னு தொழிலு நடத்தனம். உளுந்தூருப்பேட்ட பாவந்துருல காடுதோட்டம் வாங்கணம். அத கருத்தா வெச்சிப் பொழைக்க துப்புக்கெட்டு ஒரு நாதேரிக்கிட்ட தோத்தம். அந்த வெசனம் புடிச்சே பதனாலு வருசம் குடிபோதையில திரிஞ்சன்.


சும்மா சொல்லக்கூடாது எங்க பொம்பளைய தனியா ஓராளா சுதாரிச்சி இந்த குடும்பத்த முன்னுக்கு கொண்டாந்தா. அத்தன மொடாக்குடிக்கி ஒடம்பு தாங்கல, வவுத்து நோவு! வாந்தி பேதி!, சுத்தமா சாரீரங் கெட்டு சாவற நெலமைக்கிப்போயி உசுரு பொழைச்சன். மறுபடி வேசம் போட்டாட, முடியல! பொம்மையாட்ட முடியல! ஓஞ்சி ஒக்காருவனா? ம்பொண்டாட்டிய நண்டு கடிக்க! அடிறா மத்தாளத்தன்னு ஆரம்பிச்சன்! நாப்பது வருசமாச்சி!. சாவளவும் அடிச்சிப்புட்டுத்தாஞ் சாவன்.