சபரிநாதன் கவிதைகள்

அவர்


1

பைத்தியத்துடன் பேசும் நபர்

நேற்றிரவு தட்டினார் என்

கதவை

வெம்பியிருந்த அந்த முகம் கலைந்து

சிகை அலங்கோலமாய் பரிதாபமாய்

நடுவீட்டில் பெருக்கி பாயிட்டு அமரவைத்தேன்

தேநீருக்காக அடுப்பை பற்ற வைத்துவிட்டு வந்தமர்ந்தேன்

பாவம்

பேசிக்கொண்டிருந்த அவர் உடைந்து

தான் உறங்கி எத்தனையோ வருடங்கள் ஆவதாகவும்

தன் கனவுகளை முத்தமிட விரும்புவதாகவும்

அந்தப் பைத்தியம் தன் உறங்கவிடுவதில்லையென்றும்

விழிப்பதற்கு ஏங்குவதாகவும்

புலம்பினார்

'உங்களுக்கு நான் என்ன செய்யமுடியும்?'

சிறிது நேரம் கழித்து என்னிடம் கேட்டார்

'கொலை செய்வது பாவம்'

இதை உன்னால் நிரூபிக்க முடியுமாவென்று

நான் இரண்டு நிறைகோப்பைகளை கவனமாய் எடுத்துவந்த போது

அவர் போய்விட்டிருந்தார்

அதற்குள்



2



ரொம்ப நாள் அவர் கண்ணில்

தென்படவே யில்லை



3



பைத்தியத்தின் காதலை வாங்கி

என்னவென்று பார்ப்பதற்காக திருப்பித் திருப்பி பார்க்கிறார்

அதன் அபிலாஷைகள் அவர் செவிதங்குவதில்லை

அதன் ஆவேசமான எச்சில் படிந்த வார்த்தைகளைக் கூட

புரிந்துகொள்ள இயலாத மனிதராய்

ஏன் இருக்கிறார் அவர்?



4



அந்த நட்டநடு மழையிரவில்

நடந்து வந்து கொண்டிருந்தபோது

உறங்கிக்கொண்டிருந்த பைத்தியத்தின் முதுகைத்தட்டிக்கொண்டிருந்தார்

அவர்

5

நான் உன்னைக் கொல்ல விரும்புகிறேன் என்றாள் அவள். நானும்தான், அதனால்தான் உன்னைஉயிரோடு விட்டுவைத்திருக்கிறேன் என்றான் அவன்

- ஜப்பான் பழமொழி

6

நேற்றிரவு என் கனவில் அவர்

துயிலுடையும் தருணத்தில்

'எல்லாம் மறக்கக் கடவாய்' என்று சொன்னார்

அது மட்டும் நினைவிருக்கிறது



7

இந்த இரவு தனித்திருக்கிறேன் அவர் வருவாரென்று



8

பெருமழை சற்று தாழ

பள்ளிச்சிறார்கள் குதியாளமிட்டு ஓடிக்கொண்டிருந்தனர் வீட்டுக்கு

பைத்தியம் தனியாக அமர்ந்திருந்தது புளியமரத்தடியில்

நான் ரகசியமாக நெருங்கிச் சென்று பேச

நினைத்தபோது அவர் வந்துவிட்டார்



9

என்றைக்குமில்லாது இன்று

பைத்தியத்தைக் கடந்தபோது

கொல்லவேண்டுமென்று

ஒரு பொறி திடீரென்று



10

இன்று அவரைச் சந்தித்தேன்

பேச்சிடையே அவர் கனவில் வந்ததைச் சொன்னவுடன்

டம்ளரை கீழே எறிந்துவிட்டு

சொல்லிக்கொள்ளாமல் நடக்கத் துவங்கினார்

வெகுதூரத்தில் திரும்பி ஆள்காட்டிவிரலை ஆட்டியபடி ஏதோ சொன்னார்

ரத்தச்சிவப்பாய் இருந்தது கண்கள்



11

இப்போது கடைவீதி முக்கில் அவர் நடந்துபோவதைப் பார்க்கிறேன்

இம்முறையாவது சரியாக இருக்குமென்று முன்னே சென்று காண்கிறபோது அது அவர் இல்லை