வியாழன், 2 ஜூன், 2011

உனக்கின்னும் பேராசை உலகாள யிருக்குதே!



தோற்பாவை கட்டபொம்மலாட்ட தெருக்கூத்து கலைஞர் அம்மாபேட்டை கணேசன் அவர்களுடன் நேர்முகம்.




சந்திப்பு: தவசிக்கருப்புசாமி, ர.தனபால்.






அம்மாபேட்டை கணேசன்
அம்மாபேட்டை கணேசனுக்கு வயது ஐம்பத்தியேழு. ஏழு வயதில் தந்தையார் மொட்டயனுக்கு உதவியாக தோற்பாவைக்கூத்தில் பொம்மைப் பிடித்தாட்டத் துவங்கியவர், பதினைந்து வயதிற்கெல்லாம் அதன் நுட்பதிட்பங்கள், நுணுக்கங்கள் கைவந்த சூத்தரதாரியாகி தனி நிகழ்வுகள் நடத்தியிருக்கிறார். பதினாறாம் வயதில் தாய்வழிப் பாட்டனார் சடையன் அவர்களின் ஆசீர்வாதத்தில் கட்டியங்காரன் வேடங்கட்டவாரம்பித்தவர், அதன் பிறகான நாட்களில் சிச்சிறு வேடங்கள், தரித்து தேறியபின் ஓர் பத்தாண்டு காலங்கள் பெண் வேடங்களிட்டு ஆடியிருக்கிறார். கோரிய வாலிபத்தில் ராவணன், மயில் ராவணன், இரண்யன், கீசகன், துரியன், சைந்தவன் உள்ளிட்ட பெரும் கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கியவர், இன்றுவரை அத்தொல்கலையின் உயிரோட்டம் மாறாது நிகழ்த்தி வருவதோடு, அதன் செயல்முறையில் கொள்ளுவன கொண்டு, தள்ளுவன தள்ளி, புதிய அழகியலை, புதிய உடல் மொழியை, புதிய ஆட்ட வகைகளை, தொன்மக் கூறுகளை அதன் தன்மைகளின்று அடிபிறழாத வண்ணம் பிணைத்து தனது கூத்துக்களை நிகழ்த்தி வருகிறார். இராமாயண இலங்கேஸ்வரனோ, மகாபாரத துரியனோ இதுகாறும் நம் ஐம்புலனுக்கெட்டாத பாத்திரம் எந்த பாத்திரமாகயிருந்தாலும் தொகை நகைகள் மாட்டி சபைக்கு தர்பாராகி வந்து இதுதானய்யா, அந்த பாத்திரம் என்று அவர் தன் விருத்தாந்தங்களை சொல்லும்போது, ஐயம் என்பது தோன்றாதபடி அந்த வேடம் அத்தனை பொருத்தமாக முழுமை பெற்று அமைந்திருப்பதோடு காட்சி வனப்பு மிக்கதாகவுமிருக்கும்.
உருவம் மட்டுமல்லாது, ஒரு பாத்திரத்தின் உளப்பாங்கு, மனவோட்டம், எண்ணம், செயல்பாடு, நடத்தை என்று எதை எடுத்துக்கொண்டாலும் கணேசனின் பிரதிபலிப்பு, வார்ப்பு, மாற்றும் குறைந்திருக்காது. வேடங்கள் தரிப்பதோடு பக்க மேளமான மத்தளம் வாசிப்பது, பெட்டி வாசிப்பது, பாவைக்கூத்துக்கு வேண்டிய தோற்பாவைகள் செய்தல், கூத்தில் ஆண் வேடத்திற்குரிய தொழிற்கருவிகள், ஆடையணி வடிவமைத்தல் என்று கணேசனின் கலையாளுமை பன்முகத்தன்மை கொண்டது. ஏட்டுக் கல்வியொன்று வாய்க்கப்பெற்றிருந்தால், கணேசன் அவர்கள் நிகழ்த்துவெளியில் குறிப்பிடத் தகுந்த சிகர உயரங்களை தொட்டிருப்பார் என்பது கண்கூடு.. சங்கீத கலா அகாதமிக்காக களரியுடன் இணைந்து இரு நாள் பொம்மலாட்டம் நிகழ்த்துவதற்காக டெல்லி சென்ற பயணத்தின்போழ்து அவ்வப்போது கணேசன் அவர்களோடு உரையாடிய உரையாடலின் சுருங்கிய வடிவம் அவருடனான நேர்முகமாக இங்கு தரப்படுகிறது.






தவசி:- ஆதியில இருந்த கத, அதே ஆட்டம் அதே பாட்டு! கொஞ்சம் மாத்தி புதுசா கூத்து நடத்துனா என்னா கெட்டுப் போகுது?



கணேசன்:- மேட்டு மேல நின்னுக்கிட்டு நொட்ட சொல்லிக்கிட்டிருக்ககூடாது. கூத்த அத்துப்படியா கத்துக் கர கண்டவன் எவனுமில்ல, எல்லாமே கண்டு பாவனதான். அரகரா, சிவா சிவான்னாப் பத்தாது. அமுது படைக்கணும். ஒங்களமாதர படிச்ச டிக்கிட்டுங்க, உள்ற குதிக்கணும் அலங்காரத்த பூர்த்தியா படிச்சி தேறணும். அப்பிடி ஒராளு இருக்கறான்னா அவனாலக் கூட சட்டுனு கூத்த புதுமயா ஆட முடியாது. கருத்தா கவனிச்சி, உகத்தமா தொழில் செஞ்சிக்கிட்டே வந்தா எந்த பொருள கழிக்கிறது எந்த பொருள சேர்க்கறதுன்னு நெட்டு சிக்கும். மேமேச்சலுகாரங்கிட்ட கூத்து ஆப்புட்டா, அன்னநடை கத்துக்க போயி தன்னடையும் மறந்தாப்ல ஆயிரும். பாத்து, பாத்து பதனமா செய்ய வேண்டிய காரியமிது.






தனபால்:- பழம பலவிதம். கூத்துன்னா என்னா? உங்க அனுப்போகத்த வெச்சி சொல்லுங்க?



கணேசன்:- கண்ணுக்கு வெளிச்சமா வேசங்கட்டி தாளம், காலம், சுதி எசவோட பாட்டுப்பாடி, ஆட்டமாடி, புத்திக்கு ஒறைக்கிற கத சொல்றதுதாங் கூத்து.






தவசி:- கூத்தாடுனா குடும்பங் கெடுதுங்கறாங்களே, அது உம்மையா பொய்யா?



கணேசன்:- நீங்க சொன்னமாதர, கூத்தாடுனா குடும்பங் கெடுதுங்கறது உம்மதானுங்க. அதுயெப்பிடின்னு கேளுங்க! ஆம்பளையாகப்பட்ட கூத்தாடி அலங்காரத்துக்குன்னு பத்தூரு பஸ்ரேறி போறான், வாரான். அங்க இருக்கப்பட்ட பொண்டு புள்ளைங்ககிட்ட பேசாம புடிக்காம இருக்க முடியாது. ஆடன ஆட்டத்த மெச்சி உருவா குத்தறாங்களா, வாங்கியத சோபியில வச்சிமா அதோட அந்த சகவாசத்த வுட்டுத் தல முழுவணும். வுடாம நோட்டம் போட்டு மேயறதும், குத்தவத் தோட்டம் ஓட்டப்போறதுமா பொழக்காட்டம் வெச்சிக்கிறான் கூத்தாடி. கூத்தாடி அப்பிடியா! கூத்தாடி பொண்டாட்டி கூத்துக்கு போன புருசன் ஆடி களைச்சி அலுப்பு சலுப்பா வருவானேன்னு வெந்தண்ணி காயவெச்சி சோறோ, களியோ வூட்ல உண்டானதை ஒல வெச்சி ஆக்கி, தடத்த தடத்த எதுரு பாத்துக்கிட்டிருப்பா. இவந்தான் இங்க எச்செல பொறுக்க போயிட்டானே எப்பிடி வருவான்? நெரங்கண்டு போயி பொழுதிருக்க பொண்டாட்டிய அண்டுணா சீரு பாரு சேவுகம் நடக்கும். ஒரு நாளு, ரெண்டு நாளு பாப்பா! கட்னப் புருசஞ் சொல்ல மிஞ்சி சோரம்போனா பொம்பளயெத்தன நாளைக்கி தாக்குப் புடிப்பா? பொறவு ஒட்டத்தோண்டினாலும் அதுக்கொரு பீத்த கவுறு சிக்காம போவுமா? இப்பிடித்தாங் குடும்பங் கெட்டு குட்டிச் செவுராப் போறது. அதுக்குன்னு எல்லா கூத்தாடிங்களையும் ஒரே ராத்துலுல நிறுக்க முடியாது..பத்துப் பேச்சி என்னத்துக்கங்க? கரும்பு கட்டோடயிருந்தா எறும்பு என்னா செய்யும்?






தவசி:- கட்ட பொம்மலாட்டம் அதுக்குமுந்தி தோலு பொம்மலாட்டம் நடத்திக்கிட்டிருந்த நீங்க கூத்தாட வந்தது எப்பிடி? பாடு கஷ்டம் அதுல அதிகங்கறதுனாலயா? இல்ல வேறெதுங் காரணமா?



கணேசன்:- விருப்பத்துலவொரு காரியஞ் செஞ்சா வருத்தம் பாரம் தெரியாது. அப்பிடி நெனச்சிதான் கட்ட பொம்மலாட்டமும் தோலு பொம்மலாட்டமும் நடத்திக்கிட்டிருந்தன். பொறவு மறப்புலேயே ஆட்டிக்கிட்டு இருக்கறமே வெளிச்சத்துல ஆடனாயென்னான்னு ஆசப்பட்டேன், அதுலயுமொரு சமாச்சாரமிருக்குது. பிருவம் நெரிக்கறதையும், கண்ண உருட்டி, சொழட்டி முழிக்கறதையும், மீச துடிக்கறதையும், ஆங்காரமா சிரிக்கறதையும் பொம்மலாட்டத்துல நெனச்சாலும் செய்ய முடியாது. இன்னோன்னு ஒரு வேசத்த எத்துவரிசையா செய்யும்போது நாலு சனம் கைத்தட்டறதையும், அலங்காரம் நல்லாயிருக்குதுன்னு சொல்றதையும் காதாற கேக்கலாமில்ல!. அதோட ஆட்டக்காரனுக்கு வவுத்துக்கு கஞ்சியில்லையின்னாலும் வாயி உபச்சாரம் தேவையாயிருக்குதே!.






தனபால்:- தெரைக்குள்ளயேயிருந்த நீங்க சவைக்கி மொதல்ல என்ன வேசங்கட்டிக்கிட்டு வந்தீங்க? கூச்ச நாச்சம், கோளாறு, கொளறுபடி இல்லாம பாகத்த செலுத்தனீங்களா? இல்ல பங்கப்பட்டீங்களா? அந்த அனுபோகத்த சொல்லுங்க சித்த?



கணேசன்:- அந்த காலத்துல ஒராளு அத்தன சிலப்பமா வேசங்கட்டியாட முடியாது. பல படி தாண்டி வரணும். மின்ன பொட்டி மீட்டணும், சால்ரா போடணும், ஆசி கேக்கணும் அப்புறந்தாம் பவுடர கையில தீண்ட முடியும். ஓமலூரு கோட்ட கவுண்டம்பட்டியில எங்க மாமன் மாயவனும், தாத்தஞ் சடையங் கொறவனும், டெண்டுக் கூத்து ஆடிக்கிட்டிருந்தாங்கப்ப. நானு சால்ரா போட்டுக்கிட்டிருந்தன். கோமாளி வேசக்காரன் வரிச கூத்தாடனவன் வூட்டுக்கு பொண்டு புள்ளைங்கள பாத்துட்டு வரமுன்னு போனவன் அன்னைக்கி வரவேயில்ல. செட்டுல மத்த ஆளுங்களும் ஒருத்தரு ரெண்டுபேரு வரல. சடையனிருந்துக்கிட்டு என்னைய டேசிக்குள்ற கூப்புட்டு போடறா கண்ணு கோமாளி வேசமுன்னு வேசம் போட்டுவுட்டாரு. எனக்கோ பயத்துல நாக்கொழறுது, காலோட காலு பின்னுது! என்றா கூத்தாடி நீயி இப்பிடி மெரள்றன்னு தாத்தன் கொட்டாங்குச்சியில சாராயத்த ஊத்தி, குடிச்சிப்புட்டு தெகிரியமா வெளியப் போடான்னு சொல்ல, சாராயத்த குடிச்சும் எனக்கு நடுக்கமே நிக்கல. தெரய புடிச்சித் தடுமாறிக்கிட்டிருந்தம்பாரு! மத்தாளம் அடிச்சிக்கிட்டிருந்த செல்லப்பண்ணன் நோங்கி பொறங்கழுத்துல ஒரீடு போட்டு போடா வெளியன்னு தள்ளிவுட்டாரு! ஒரு வழியா பயம் தெளிஞ்சது. அன்னைக்கி புடிச்சி சரியா அஞ்சிவருசம் கோமாளி வேசம்! அப்பறம் சாரிவேசம்! இப்ப சூரவேசம்!.




தவசி : ஏர்வ தாளம், துடியான ஆட்டம் டாய் டூய்னு கத்தியேச் சலிக்கணும்! சாரீரம் சீக்கிரம் மங்கிப் போயிடும். இப்பிடி எச்சி பாடு, ஒவித்திரியஞ் சாஸ்தி! கட்டனதாங் கட்டனீங்க, ஒரு கொண்டக்கட்டு வேசங்கட்டி பழவியிருக்கலாமில்ல. இன்னுமொரு அஞ்சாறு வருசம் சேத்தி தொழிலுச் செஞ்சிருக்கலாமே.
கணேசன் : சாப்பாட்டுக்கு ஆறு ருசி! சதுருக்கு ஒம்போது ருசி! கைபாகம் இருக்கப்பட்டவிங்க கொள்ளு கடுப்பனாட்டி, களி கிண்டனாலும் சேரி! கூட்டுமாவரைச்சி, கறிச்சாறு காச்சி களிக் கிண்டனாலும் சேரி! திங்க நல்லாயிருக்கும். சமத்து பத்தனவன் சாரி வேசம் கட்டனாயென்னா! சூர வேசம் கட்டனாயென்னா? இல்ல கொண்டகட்டு கட்டனாயென்னா? சனங் குந்திப் பாத்தா சேரி!. நம்பள ஆட்டிவெக்கிறானே ஆண்டவன் அவங் கவுத்த கீழபோடாம இருந்தான்னா, என்னு ரத்தஞ் சுண்டற வரைக்கும் இந்த சூர வேசமாடுவன், அப்பறம் என்ன கதி நேருதோ ஆரு கண்டா?



தனபால் : காசா பணமா? கணக்கில்லாத வரும்பிடி வருதா? மெனக்கெட்டு ஒக்காந்து எதுக்கு கூத்து பாக்கணும்?
கணேசன் : சோறு ஏந்திங்கறம்? செரிமானம் சீரணம் பண்டி அது ரத்தத்திலே கலந்து மனுசன் ஓடியாட, ஒரு வேலவெட்டி செய்ய சத்து வேணுமின்னுதான. பாடுபட்டு வர்ரவனுக்கு பலகாரஞ்சோறு தின்னாப்பல தெம்பு இந்த கூத்தால கெடைக்குது. அதோட மக்க மனுசரு, நாலுபேத்த பாக்க புடிக்க, மனசுட்டு பேச சிரிக்க, ஒரு தாவுல ஒண்ணு சேர்றம். மாடு கண்டா ஒதுங்காம மனுசன கண்டா பேசாம அதுயென்னா பொழப்பு?



தவசி : தரமான தொழிலாளின்னு பேரெடுத்துருக்கறீங்க. நீங்க சொல்லுங்க நடிப்புங்கறதோட உள்கூடு என்னா? பொருளுயென்னா?
கணேசன் : கலைத் தொழிலாளிக்கி,அடிப்படையான பொருளு இந்த நடிப்பு. இப்ப கீசக சம்பாரத்துல கீசகனா நானு வரிக்கறன்னு வையி, போதையில தாயுந் தெரியாது! செத்த நாயுந் தெரியாது!. அந்த நெதானத்துல நந்தாவனத்துல பூப்பொறுக்கற பாஞ்சாலியாகப் பட்ட சைலேந்திரிய கீசகந் தப்படியா பாக்கறான். மோகந் தலைக்கேறி அவளச் சேர தொரத்துறான். அந்தக் கட்டத்துல போதைக்காரன் கீசகன்னு நானு நெசமாலும் போதப் போட முடியுமா? ஆனா போதையிலிருக்கப்பட்டவன் என்னென்ன அகராதி, அக்குறும்பு, சேட்டப் பண்டறானோ அதயெல்லாம் அத்துப்படியா செய்யுணும். அப்பிடிச் செய்யும்போது பாக்கறவிங்க இந்த பாவி சண்டாளங்கிட்ட, இந்தப் பொம்பளை சிக்கி சீரழியறாளேன்னு பொன்னுவேசக்காரன நெனச்சிபரிதவிக்கணும். அவிங்க பொந்தியில ஈவிரக்கம், பொறக்கணும். கீசகனா வேசங்கட்டியிருக்கற எம்மேல கோவம் வருணும். ரண போர்க்களமா ரெண்டுபேரு கத்தி மொணையில சண்டச் செய்யறாங்காள அவிங்க ஆக்ரோசமா கத்தியச் சொழட்டற சொழட்டுல பாக்கறவங்க பொந்தியில ஐயோ எந்த தல துண்டாகி கீழ வுழுவுதோன்னு திகிலு, பதபதப்பு வரணும். ஆனா வேசக்காரங்கமேல துளி நவக்கீரலு படக்கூடாது. சோகக்கட்டமா, ஏழ்நாட்டாம் சனி புடிச்சி நளச்சக்கரவர்த்தி புஷ்கர்ணங்கிட்ட நாடு, நகரம், நவநீதச் செங்கோல், உப்புச்சட்டி வறயோடு மொதக்கொண்டு தோற்வையாகி, தமயந்திரிய கூட்டிக்கிட்டு வனம் வனாந்தரம் போறனில்ல, அந்த எடத்துல தமயந்தி வேசக்காரன், சாமி! ஆணிமுத்து கோட்டு, அங்கவஸ்திரம் உடுத்தி ராஜமகுடந் தரிச்சி உங்க தங்கசள்ளா தர பொரள அந்தப்புரத்துக்கு நீங்க வரும்போது, பாக்க ஆயிரங்கண்ணு வேணுமே!. பீத்த வேட்டித் துணிக்கும் வக்கத்து இப்பிடி ஒரே முண்ட உடுத்தியிருக்கறமே! இந்தகந்தறகோலத்துல உங்கள பாக்க எனக்கு விதியா? விதிவசமா? வராத வங்கொடும வந்து நேர,ஆருக்கு நாம்பயென்னாசாமி தீம்பு செஞ்சமுண்ணு கதறியழுதா, இப்பேருபட்ட அவகேடு நம்ப எதிரிக்கு கூட வரக்கூடாதுன்னு, சனமும் நம்பளோட சேந்து அழுவுணும்.சுபத்ர அர்ச்சுனந் சந்திப்பா, பிருசம் பொண்டாட்டி, பொணங்கறதும் கூடறதும், கூடறதும் பொணங்கறதும், அவிங்க சேர்க்க சேர்ற தோரணயில, பேசற நடவடிக்கய பாத்தா, ஆம்பளையாகப்பட்டவிங்க பார்ரா நம்பளுக்கு இப்பிடியொரு பொண்டாட்டி வாய்க்கலையே! ன்னு நெனைக்கணும். பொம்பளையாகப்பட்டவிங்க பார்ரா நம்பளுக்கு இப்பிடியொரு பிருசம் வாய்க்கலையேன்னு நெனைக்கணும்.இப்பிடி டூட்டி செஞ்சாதான் நடிப்பு.






தனபால் : சினிமாவுல நடிக்கிறாங்களே அந்த நடிப்புக்கும் நீங்க கூத்துல நடிக்கற நடிப்புக்கும் என்னா வித்தியாசம்?
கணேசன் :இவுத்த அம்மாபேட்ட ஆத்துல பொம்பளயொருத்தி பரிச தாட்டி படிஏர்றத அம்பது தக்கம் எடுத்தாங்க.சினிமாக்காரனுங்க நடிப்பு திண்ணப் பள்ளியோடத்துல மணல்ல எழுதறமே அந்த மாதர அழிச்சி அழிச்சி எழுதறது, சிலேட்டம். குறிவெச்சி அம்பெய்யறமாதர கூத்துல நடிக்கறது சிலமேல எழுத்து!.சுத்திய நோங்கி தட்டனா மொண முறிஞ்சி மொக்கையாகிப்போவும்.பொசான தட்டுனா அச்சுப் பதியாது. நேந்து நெரவி விசுவாசத்தோட பணிக்கச் செஞ்சா செல கண்தெறந்த சில்பமாவும்.



தவசி : வேசத்துக்கேத்த விருத்தம், கதைக்கேத்த கந்தார்த்தமுன்னு சொல்றாங்களே விருத்தத்துக்கும், கந்தார்த்ததுக்கும் கூத்துல பாத்தியமென்னா?
கணேசன் : மன்னாளுற ராசனுக்கு மகுடம் அழகு. அந்த மகுடத்துக்கு அழகு அதும்பட சிரசுல சொருவுற கல்துறா. அந்த மாதரத்தான் கூத்துக்கு லச்சணமான விசியம் ரெண்டு. ஒண்ணு விருத்தம், இன்ணோன்னு கந்தார்த்தம். சபைக்கு தர்பாரு ஆவுற ஒவ்வொரு வேசத்துக்கும் ஐதீகமான வரலாறு, விருத்தாந்தமிருக்குது அந்த விருத்தாந்தத்தச் சுருக்கிச் சொல்றது விருத்தம். கத காரணமிங்கறது முத்திப் பழுத்த கனியின்னா அதும்பட சாறுதாங் கந்தார்த்தம்.
மயில் ராவணஞ் சண்டையில் மயில் ராவணந் தர்பாரா வரும்போது இந்த விருத்தம்போட்டு வெளிய வருவான்.......




அஷ்டகுல பருவதம்போல்புஜங்கள் மின்ன



அணிந்ததோர் மணிமகுடம்கிரிபோல் ஓங்க



இஷ்டமுள்ள மந்திரிமார்கள்சூழ்ந்து நிற்க



ஈரேழு லோகமும் கிடு நடுங்க



மச்ச கற்பகன் கரம்கூப்பி நிற்க



மயில் ராவணன் வருகின்றேனே!
இன்ன இன்ன குணாச்சாரமுள்ள ஆளு, இந்த நாட்டுக்கதிபதி அவனோட நடத்த நடவடிக்க இப்பிடிங்கற ஐதீகத்த இந்த விருத்தஞ் சொல்லுது.சூர்ப்பனக கர்வபங்கத்துல,
வாதாடும் சூர்ப்பனகை தன்னை நோக்கி



மதித்த ராகவனுக்குதான் மனையாள் சீதை



போதாதே ஓரூறையுறைள் இருவாள்



புறங்காக்கும் தம்பிக்குத்தான் மனையாலில்லை



நீதான் போவெனவே போக



லட்சுமணன் கூர் வாளேந்தி



காதோடுமூக்கறுத்து முன்னும்பின்னும் பங்கம்

கருகுவாள் தன் உறவையெண்ணி புலம்புவாளே!
ன்னு கந்தார்த்தம் போட்டு
அருமை பிறப்பே அண்ணா



ராவணா அண்ணா!



சிங்கமிருக்க குட்டி பறி போகுமா



உன் செல்வத் தங்கையொருவன் தொடலாகுமா?



ஆனையிருக்க குட்டி மோசம் போகுமா



அருமைத் தங்கையை ஒருவன் தொடலாகுமா?



ன்னு பாட்டு பாடும்போது அந்த கதையோட முக்கிலியமான திலுப்பம் தெரியிது. ராவணந்தங்கச்சி சூர்ப்பனக மவன் ஜம்புகுமாரகன கொன்னவன தேடிக்கிட்டு வரும்போது அலங்காட்ல ராமன பாக்கறா. அவம் மேல ஆசப்படறா. ன்னு ரொம்ப நாளாச்சி! ஒரே ஒராடம் ங்கறியான்னு கேக்கறா.. ராமஞ்சொல்றான் அம்மா எனக்கு கண்ணாலமாயிப் போச்சி ! எங்கூட்டுக்காரி உசுரோடத்தான் இருக்கறா!.உன்ன பக்கம்போட்டு படுக்க என்னாலாகாது தாயே! அந்தாண்ட போயி பாரு! எங்காளு ஒராளு இருப்பான் அவனுக்குத்தான் இப்ப பொண்டாட்டியில்ல! எதோ அவம்பாத்து பண்ணயம் பண்டனாத்தான் உண்டு! அவன் அப்பிடி சொல்ல, இவ எதுக்கும் நீயொரு சிபார்சு பண்ணுங்கறா!. அதுக்கு இந்த அலுப்பநாயி தானும்படுக்காம தள்ளியும் படுக்காம தம்பிகாரங்கிட்ட கூட்டிக்குடுக்க, அந்த கையாலாவாத கேப்மாரி பொம்பளையின்னும் பாக்காம அவள சின்னம் பண்டியுட, அண்ணங்காரன நெனச்சி அழுதுப்புட்டு நெஞ்சில வஞ்சத்த வெக்கிறா, இந்த கறிமூஞ்சி பசங்கள கறுவறுக்க.அதத்தான் இந்த கந்தார்தஞ் சொல்லுது.



தனபால் : பத்து பேரு தொழிலாளிங்க, இருக்கையில வாத்தியாருங்கற பொறுப்ப ஆரு வசங்குடுக்கறது? அதயெப்பிடி தீர்மானம் பண்டறது?
கணேசன் : வெத்தலபாக்கு வாங்கறதும், வேசப்பொட்டி மேல புள்ளையார வெச்சி பூசப் போடறதும், போன வெசயில பேசி மறப்புல படுத்துக்கறதும் வாத்தியாரு தனமில்ல. எனங்கண்டு ஆளுங்க வேசத்த பிரிக்கறதும், ஒட்ட வேண்டி எடத்துல கதய ஒட்டி வெட்ட வேண்டிய எடத்துல வெட்டி கண்ணியக்காம கத பொருள கொண்டாந்து தாவு சேத்தணும். வேசம் ஒண்ணு வல்லையின்னா தாம் போட்டாடி சந்து அடைக்கனும். சுதியேத்த எறக்கம், கூத்துல எந்தவொரு கொறப்பாடு நேந்தாலும் முந்தியத சரிக்கட்ட தெரிஞ்சிக்கறதுதான் வாத்தியாருத்தனம். இந்த சாமார்த்தியம் இருக்கறவனெவனோ அவனாலதான் செட்டுக்கு வாத்தியாராக முடியும்.



தனபால் : இவ்ள புத்தி ஊகமாப் பேசறீங்க? நீங்க ஏஞ்செட்டு கட்டி ஆடல?
கணேசன் : ஆருச் சொன்னது நாஞ்செட்டு கட்டி ஆடலைன்னு. முப்பது வருசமா ஆத்துல அகப்பட்டு, சேத்துல சிக்கப்பட்டு இப்பத்தான் ஓரெடத்துல ஒலி சாவி குந்திக்கறன். பத்துபேர படதெரட்டி யுத்த களத்துக்குபோயி ஐசா பைசா பாத்துறலாம். இந்த கூத்தாடிங்கள ஒட்டுச்சேத்தி செட்டு வெச்சி சேவிக்கறது, தண்ணிமேல நடக்கற மாதர காரியம். வெத்தல பாக்கு ஒருரூல வாங்கன நிமுசம் மொதக் கொண்டு கண்ண மூடித் தூங்கமுடியாது. கொண்டக்கட்டுக்காரன் வருவானா? வரமாட்டானா? கொழலுக்காரன் வருவானா மாட்டானா?ன்னு தடத்த தடத்த எதுரு பாத்துக்கிட்டிருக்கணும். அப்பிடியெவனாவுது காம்ப காட்டிப்புட்டா ஊருக்குள்றயும் அவனில்லாம போவமுடியாது. கூத்துத்துட்டவுங் மொவறையில காறித் துப்பனாலும் தொடச்சிக்கிட்டு பொச்ச மூடிக்கிட்டு இருக்கணும். பத்துப்பேரு பண்ணாட்டு, ஒரு கையிதட்டனா ஓச வராது, தொழில கண்டு பொழைக்கறவன் அத கருதிப் புடிங்கடா, நேரங்காலமா ஆட்டத்துக்கு வாங்கடான்னு பாடி, பாடி குத்தனாலும் அந்த பதருங்க அரிசியாவற வழியக்காணம். சேரி நம்பளுக்கென்னா பொட்டியத் தூக்கிக்கிட்டு போனா எதோவொரு வேசம், விடிஞ்சா சம்பளம். இப்பதான் நிம்மதியா தூங்கறன்.



தவசி : விடிய அலங்காரம் வரிச்சிப்புட்டு விடிஞ்சி முகமழிக்கறீங்க இல்லியா, அதோட அந்த வேச நெனப்பு மறந்து போவுமா? இல்ல மறுக்க கனவுல, நடப்புல வந்து தொந்தரவு குடுக்குமா?
கணேசன் : எல்லா வேசத்துக்கும் அந்த சத்தி கெடயாது. 'வாலி சுக்ரீவன் சண்ட', அலங்காரம்!. வாலி உசுருடற கட்டம். ராமன் கேக்கறாப்பல வாலி இப்பவொண்ணுங் கெட்டுப்போவல. `ம்` முன்னு ஒரு வார்த்த சொல்லு உசுரகுடுத்து உன்ன எழுப்பறன்னு. அதுக்கு வாலி சொல்றான். ராமா நீ நாயம் அநியாயந் தெரியாதவன். எனக்குப் பொறன பொறந்த சிறுபையன்! இத்தன நாளா வாலி! வாலி! வீர வாலின்னு பேரெடுத்தவன் உங்கிட்ட உசுருபிச்ச வாங்கி குத்துப்பட்ட வாலின்னு சாவ எனக்கு பிரியமில்ல. எனக்கொரு யாசகம் கொடுக்கற யோக்கிதி உனக்கில்ல. ஓடிப்போயிரு தூரன்னு சொல்லிப்புட்டு தம்பிய கூப்புட்டு அவெனென்றா மனுச பூண்டு! உனக்கிந்த கிஷ்கிந்தாபுரிய மீட்டு குடுக்கறது, மனசார நாங்குடுக்கறண்டான்னு சுக்ரீவங்கையில நாட்ட ஒப்படைச்சிட்டு மண்ணுமேல சாயுது அந்த புண்ணியாத்துமா, நானு வாலி வேசங்கட்டிப்புட்டன்னா மாத்ரம் அவஞ்சாவ நெனச்சி, நெனச்சி மனசு மருவிக்கிட்டே கெடக்கும்.



தனபால் : பெத்து பொறப்பு ஆம்பளையாகப்பட்டவனுக்கு பொண்டாட்டி புள்ளைங்க அதுங்களோட நல்லது, கெட்டது, போக்குவரத்துன்னு ஒவ்வொண்ணுக்கு செலவு சாரி, கடங் கட்சி கட்டறது, சம்சாரத்த கொண்டாறதுன்னு ஆயிரெத்தெட்டு பிக்கு புடுங்கலு! கூத்தாடிக்கும் இந்த பிரச்சனை அதிகமுன்னு சொல்லலாம். இந்த வாதன வருத்தமெல்லாம் தொழில பாதிக்காதா?
கணேசன் : வித்தைக்கு சத்துரு வெசனம், ஆயிரம் வறும,சிறுமையிருக்கட்டும்! வருத்தம் வாட்டமிருக்கட்டும்! வெந்து நொந்து வேதனப்பட்டா கட்ட வெரலு சுண்டு வெரலு ஆவுமா? சுண்டு வெரலு கட்ட வெரலு ஆவுமா? எல்லாத்தையும் மென்னு முழுங்கி தண்ணிக் குடிச்சிப்புட்டு, வேசத்தப்போட்டு வெளிய வந்து, சபையில நின்னு சனத்த பாத்தா நோவு நோக்காடு போற எடந்தெரியாம தன்னாலபோயிரும். கவலைய மறக்கடிக்க கூத்தாடறவன் தானே கவலப்பட்டா காலத்த ஓட்ட முடியுமா?



தவசி : மெத்தப் படிச்சவன் மேதாவி. நீங்களும் பல வித்த கத்த வாத்தியாரு, தானுங்கற மண்டகணம் உங்களுக்கில்லையா?
கணேசன் : சேடக்கட்டி வயலடிச்சி, நாத்து நட்டு, பசுரு பச்சைக்கி பாதுகாப்பு பண்டி, வௌஞ்சத ராசிப்பண்டி பத்துசுரு பொழைக்கும்படி வெள்ளாம பண்டறானே அவங்கிட்ட இல்லாத வித்தையா? அடுக்குல இருக்கறது அரிசியோ, ஆரியமோ உள்ளத கொண்டு பக்குவமா சாதங்கறி வெச்சி பசியாத்தறாங்களே பொண்டுங்க, அவிங்களுக்கு தெரியாத வித்தையா? சொப்பு மொத! சூட்டடுப்பு கட! எத்தன ஆயிரம் பண்டஞ் செய்யறாங்க செட்டிமாருங்க! அவிங்களுக்கு தெரியாத வித்தையா? இதெல்லாம் நெனச்சிப்பாத்தா நம்ப கையி வெறுங்கையி. வெறுங்கையில மொழம்போட்டா மரியாதி இருக்குமா? வணக்கம் தனக்கழகு கண்ணு.






*கூடுவிட்டு கூடுபாய்கின்ற ஆற்றல் வாய்க்கப்பெற்றவன் கலைஞன். அந்த கூட்டுக்குள் ஆவியாய் குடிகொண்டிருக்கிறது கலையென்னும் பரம்பொருள்.
*

2 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

நேர்முகம் படித்தேன். கலைஞர்களின் பாடு வேதனையாக இருக்கிறது.
இந்த அருமையான பதிவை எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி ஐயா.

Jayavel Chakravarthy Srinivasan சொன்னது…

Nalla Karauthu.. :)