திங்கள், 3 நவம்பர், 2014

நாயி வாயிச்சீல









தெரட்டி முடிஞ்சதும் பொறப்படலாமுன்னா எங்க முடியிது? சொணையான இன்னுமே வரிக்கல, மணி பதனொன்னாவுதோ’ பன்னண்டாவுதா’ தெரில. ஆட்டத்துக்கும் போயிகிட்டு அலங்காரத்துக்கும் போறதுன்னா சாமானியமா?கயிட்டத்தப் பாத்தா காச கண்லக் காங்கறதெப்பிடி? நாமக் கைதொட்ட காரியமாவறதெப்பிடி?


எரநூறு வருதோ- முன்னூறு வருதோ  நாயனக்காரன இருந்து வாங்கியாடான்னு நாம்ப நம்ப தொந்தரவுக்குப் போயிரலாந்தான். ஆனா இண்டம் புடிச்சவன் அதக்கொண்டி எங்கியாச்சும் கூத கீதப்போட்டுக்கிட்டு வந்துட்டான்னா ஒரே ஒத்தப்பைசாவ திலுப்பி வாங்க முடியாது.


பொட்டைங்கன்னு அவனுக்கு மட்டுமில்ல, இந்த வையகத்துச்சனம் முச்சூட்டுக்குமே எளக்காரந்தான். பெறத்தியார ஏஞ்சொல்லணும்? பெத்தவளே நம்ப தலமேல கொலாய வெச்சி தேக்கிறா, அபிராமிப்பிள்ள இருந்தவரிக்கும் ஓரேடத்துக்குப் போவ வர பேசப் புடிக்க பக்கத்தொணையாயிருந்தா, அவளத்தா அனாமுத்தா மண்ணுக்கு வாரிக்குடுத்துட்டமே.


பொம்பளயாப் பொறக்க வேண்டியவ, ஆம்பளயாப் பெறந்து அவ அடஞ்ச சிறும கொஞ்சமா? நஞ்சமா? பொன்ன உருக்கி பூமியில வாத்தாப்பிடி’ தங்கத்த உருக்கி தரையில வாத்தாப்பிடி’ தகதகன்னு ஆளும் அவ அழவும் பிள்ளய கண்ல பாத்தாப் பசியாறும். பாதியில போறதுக்குத்தாம் பாவிமுண்ட அப்பிடியிருந்தாளோ என்னம்மோ’

சாவற வயசா சண்டாளிக்கி?

ஆடிக்காத்துல பூளப்பூவு பறக்குமே அப்பிடி ஓடி ஓடிச் சம்பாரிச்ச சொத்தும் அவளக் காப்பாத்தல, பிருசனே இவந்தான்னு நம்பி பூசப்போட்டுக் கும்புட்டுக்கிட்டிருந்தாளே தேவூரு கவுண்டம் மவன் அவனும் அவளக் காப்பாத்தல.


ஒக்கிலிப்பட்டி சாமியாருக்கிட்டதான் நானும் அவளுங் கூத்துப் படிச்சம். கூத்துப்படிச்சமில்ல அதுக்கும் மிந்தியே அபிராமி தாயம்மாளிண்ட கைபோட்டு பச்சச்சீலக்கட்டி போத்திராசி மாதாளுக்குப் பாலுக்கொடம் எடுத்துப்புட்டு வந்துட்டா.

பாலுக்கொடம் எடுத்தாளில்ல, அந்தவொரு மண்டலம் நாப்பத்தியெட்டு நாளும் அவப்பட்ட வாதயச் சொன்னா கல்லுங்கரையும், மண்ணும் உருகும்.


அப்பன், ஆயா, பெத்து, பொறப்பு அத்தனப் பேத்துக்கும் விரோதமாகி, அடிப்பட்டு, துணிப்பொறுக்கி, அனாதியாட்டம் ஊட்டவுட்டு பம்பாயிக்கி ஓடிபூக்கார ஆயா சமாத்துல சேந்து, பைட்டேண்டுக்கு வைட்டேண்டு, வீதிக்கி வீதி, சந்துக்கு சந்து, அல்லெடுத்து அங்கயிருக்கற பொட்டைங்களுக்கு எல்லாம் ஒரு வருசம், ஆறு மாசம் ராத்திரிப் பகலா ஊழியஞ் செஞ்சா.


ஊழியஞ்செஞ்சவளுக்கு கைபோட்டுத் துப்புரவு பண்டறமின்னுச் சொன்னவிங்க, பேச்சி சுத்தமா இருக்கணுமா வேண்டாமா?

இன்னைக்கி, நாளைக்கின்னு சாக்குப் போக்குச் சொல்றாங்களே தவர ஒரேவொரு தாயம்மாக்கூட இவளுக்கு கைபோடற மாதரயில்ல. வாக்கியங்கெட்ட கழுதைங்களப் போக்குல வுட்டுப் புடிக்கலாமின்னு இவளிருக்க, மறுபடியுமொரு மூணுமாசம் இழுக்கடிச்சி, அதும் பொறவு வடக்க வேண்டாந் தெக்க போலாமின்னு நம்ப உளுந்தூருப்பேட்டைக்கிக் கூட்டிக்கிட்டு வந்தாங்க. கூட்டிக்கிட்டு வந்தவிங்க அங்கியும் ஒரு மாசஞ் சும்மாவே குந்தவெச்சிருந்தாங்க.


குந்தவெச்சிருக்கும்பிடி இவ பொறுக்க மாண்டாம,

“கோத்தியாவே” திரிய இன்னும்மேயெனக்கு விதியா? முடியுமின்னா முடியுமின்னுச் சொல்லுங்க. இல்ல முடியலியா, பம்பாயிக்கி தாட்டிவுடுங்க வழுது சமாத்த அண்டி எனக்கானத நானேப் பாத்துக்கறேன்”னு கேக்க, கேட்டவளுக்கு “ஊக்கியிலக் குத்தி இடுக்கியில முள்ளு எடுக்கற சங்கிதியா இது? கைபோட்டு பொம்பளை யாவறதுன்னா உனக்கு அவ்ள ரேசா? அதுக்கெல்லாஞ் செட்யானப்படிக்கி தெகிரியம் வேணும் நீ செத்த பொறுமையா இருடி தாயி”ன்னு தேறுதலச் சொல்லி ஆத்தூருக்குக் கூட்டிப்போயி அங்கியுமொரு அஞ்சாறு நாளாட்டம் வெச்சிருந்தாங்க.


ஆறாந் நாளு நெறஞ்ச வெள்ளிக்கெழம’ அன்னைக்கி அந்தியோட ஆயாமாருங்க “எல்லாரும் சேலாமாருங்க” எல்லாரும் ஒண்ணாச்சேந்து ஒரேத்துருவா கடவீதிக்கிப் போனாங்க.

போனவிங்க இன்னதுதானில்ல இஷ்டப்பட்ட திம்பண்டத்த நீயி திங்கறமுட்டும் தின்னுடின்னு அபிராமிக்கி வாங்கிக் குடுத்துத் திங்கடிச்சாங்க.

திங்கடிச்சிப்புட்டு அன்னராவு மொதாட்டஞ் சினிமாவுக்குங் கூட்டிப் போனாங்க. போயிட்டு வந்து, கண்ணாறத் தூங்கு மவளே’ இன்னைக்கி விடியறதுக்குள்ள உனுக்கு உறுதியா கைபோடறம்மின்னுச் சொன்னாங்க. சொன்னவிங்கச் சொன்ன மாதர ரெண்டுமணி சுமாருக்கு இவளையெழுப்பி சுத்தம் பத்தம் பண்டி, சுனிக்கி சரட்லச் சுருக்கு வெச்சி, சுத்தியும் வெள்ளத் துணி சுத்திவுட்டாங்க. சுத்திவுட்டவங்க அதும்பொற வொரே அரச்சணங்கூட தூங்கவேப்படாதுன்னு இவுளுக்குக் காவலிருந்தாங்க.


விடிகாலம் நாலுமணிக்கெல்லாம் பாத்துக்க’ ச்சும்மா தடபுடலா மாதாளுக்கு முப்பூசயாவுது. பூச ஆவக்குள்ளயே சாமிக்கி மின்ன நெறம்மணம்மா இவள நிக்க வெச்சாங்க.

நிக்க வெச்சதும் அந்தல்லயிந்தல்ல திமறுதுக்கில்லாம கையரெண்டயும் பிந்தாயம்மா இறுக்கிப் புடிச்சிக்கிட்டா. அவ இறுக்கிப் புடிச்சதும் தலமசுத்த சுருட்டி வாயில துருத்தி, மனசார மாதாவ வருந்தடியம்மான்னுப் புட்டு, ‘மாதா... மாதா...’ன்னு இவ வருந்த, வருந்த கண்ணமூடி முழிக்கறதுக்குள்ள மானியப்புடிச்சி பறக்குனு அறுத்துப்புட்டா இன்னொரு தாயம்மா. அப்பிடி அறுத்ததும் அடேயெங் கொண்டாலா’ காலடியில உதரம் போவுது தானா காவேரி ஆறாட்டம்.


செவுத்தச் சாத்தி ஒக்காரவெச்சி உதரத்த வழிச்சி, வழிச்சி, இவ உச்சந்தல மொதக்கொண்டு உள்ளங்காலு ஒருக்கோடியா சொதம்பப் பூசிவுட்டா தாயம்மா.

தாயம்மா பூசப்பூச தம்பட ரத்தத்த தானே காங்கும்பிடி, அபிராமி அடி அம்மான்னு மயக்கம் போட்டுட்டா. அம்மான்னு சொல்லாதடி மாதான்னுச் சொல்லுடின்னா, அவ எருப்பு தாழமாண்டாம எரியிதே’ எரியிதேன்னு தன்னப்பால பெணாத்தறா, தன்னப்பால பெணாத்தும்படி அந்த தாயம்மா நல்லெண்ணய கொதிக்கக் கொதிக்கக் காயவச்சிக் கைபொறுக்க கொண்டாந்து அந்த பச்சப் புண்ணு வாப்பாட்டச் சுத்தியும் பலாசனா ஊத்தியுட்டா.

ஊத்த ஊத்த வாட்டமாக் காட்டிக்கிட்டிருந்தவ ஒருச்சித்தய கழிச்சி ச்சுறு ச்சுறுன்னு நோவு திலும்பும்பிடி அந்நேரம் அய்யய்யோ எங்கடவுளயே’ன்னு அந்தப் பிள்ள ஒரு கத்துதுதாங் கத்தனாப்பாரு’ கடகால் மட்டத்துலயிருந்து அந்தக் கட்டடமே கிடுகிடுன்னு நடுங்குது’



அருவாளோ, கொடுவாளோ தப்பத்தவற நம்ப மேலுலப்பட்டு அதால வொரு காயமாயிப் போச்சின்னா அதுக்கு எத்தன ஊசிப் போடறம்? எவ்ள மாத்தரத் திங்கறம்? கப்புப் போட்டு, சோக்கேத்தி, ஆத்துக்குப்போயி, தீர்த்தம் எடுத்தாந்து, ஆலாத்திச் சுத்தி, மாதா மொகம் பாத்த பிற்பாடும் ஆறாத ரணத்துக்கொரு மருந்துமில்ல, மாயமுமில்ல.

வலின்னு வாயத்தொறந்துப்புட்டா, மோரியிலக் குந்த வச்சி ஓலத் தண்ணிய மூட்டு மூட்டு காவு மேல அடிச்சி வுடறதோடச்சேரி’ அத மீறனா வெத்தலயில நல்லெண்ணயத் தடவிப் பத்து போடறதோடச் சேரி’

ஒடம்போக்காக் கூடப்போயி பக்கத்துலயிருந்து இந்த பாதரவு எல்லாத்தையும் பாத்துக்கிட்டுருந்த எனக்கு, கைபோட்டா தாயம்மா கிட்டதாங் கைபோட்டுக்கணு மின்னிருந்த வைராக்கியம் எங்கப் போச்சின்னே தெரில.

அத இன்னைக்கி நெனச்சாலும் கை காலு தொவண்டு, கிறுகிறுப்பு பதபதன்னு வந்துரும், காலோட தொறத் தொறன்னு மல்லும் முட்டிக்கும், அந்தப் பயத்திலியே நாங்கையும் போட்டுக்கல கிய்யும் போட்க்கல சொல்லாமப் புடிக்காம அபிராமிக்கி மின்ன திருட்டு வண்டியேறி ஊருக்கு வந்துட்டன்.



உதரக்கட்டு நிக்காம, காஞ்சப்புண்ணு பாதி, காயாத புண்ணுப் பாதின்னு அப்படியே கோமணத்துமேல கோமணங்கட்டி, கட கடயாப் பிச்சையெடுத்து, குருவுக்குப்பட்ட கடங்கட்டிப்புட்டு தாயிப்புள்ளயோட வந்து அவளும் எடஞ்சேந்தா. மரத்தவெட்டி ஆராச்சும் மாருமேல சாச்சிக்கிவாங்களா? எதுக்குயிந்த சித்ரவத? எதனாலயிந்த கந்தரக்கோலமின்னு கேக்கற சனத்துக்கு வதுலுஞ் சொல்ல முடியல? ஆதியில பகவாம் படச்சபண்டம்’ அப்பிடியே இருந்து தொலையட்டுமின்னு இருந்தாலும், மூக்கு மேல பீயப்பனாப்ல இந்த அருகருப்ப வெச்சிக்கிட்டுந் திரிய முடியல....

பவானி குட்டமுனியப்பங் கோலுதான் நாம் பொறந்த ஊரு. யெங்கப்பம் பழனிச்சக்கிலிக்கிம், ங்காயா பச்சாயா சக்கிலிக்கும் நாம் பொறந்தது ஒரேப்பையன். எனக்கொரு பொறந்தவ, அவபேரு அழிஞ்சிகண்ணி, பொறக்கும்போது உருப்படியாதாம் பொறந்தன். பத்து வயசாச்சோ இல்லியோ இந்தப் பித்து புடிச்சிட்டுது.

கண்ணுக்கு மையெழுதி, மண்டையில பூவசொருவி, கவுனுமாட்டி, கண்ணாடி மின்ன ஆட்டம் போட்டு, ஊட்ல பொம்பளச் சட்டியின்னுப் பேரெடுத்து ஊருலப் பேரெடுத்து, கூலிநாலிக்கிப் போற எடத்துலயும் பேரெடுத்து கரும்பு வெட்டப்போனத்தாவுல காட்டுக்காரன் கையக்கால கட்டிப்போட்டு, கடவாயிக்கி கல்லையும் நடுவாயிக்கி புழுலுயும் வெக்க, பத்துப்பேரு அதப்பாத்து சிரிச்சாங்களே அன்னிக்கி ங்கொக்கா பாவாடயோட ஓடி பூதப்பாடி கல்பனா ஆயா காலடியில வுழுந்தவதான், திலும்பி வூட்டுக்குப் போகவேயில்ல


. வவுத்துக்கு திங்கற சோத்துக்கும் இடுப்புக்கு கட்ற துணிக்கும் வஞ்சன வெக்காம வளத்தனா ங்காயா புண்ணியவதி’ மூக்கு குத்தியுட்டு ‘தொளசி’ன்னு அவதான் எனக்குப் பேரு வச்சா. தந்தாவும் வேண்டாண்டி’ ஒரு கிந்தாவும் வேண்டாண்டி’ அலேய் ஆதமுத்து முண்டைங்களா உருவா சம்பாரிக்கலாமின்னு பத்துப் பேரோடப் படுத்து நோவு கீவு வாங்கிக்கிட்டம்னா அந்த வெனய எங்கக் கொண்டுப்போயி தீக்கறது?



ஆடுமாடுங்களுக்கு கூட ஆசிப்பத்திரியிருக்குது’ நாயிம் தம்புண்ண தானே நக்கி ஆத்திக்கிது. அதோட கேவலண்டி நம்ப பொழப்பு. கண்ணக் கெடுத்தாலுங் கோல குடுத்தாங்ககறாப்பிடி மாதா நம்புளுக்கு ஒழச்சிப் பொழைக்க மாளாத தெம்பு குடுத்துக்கிறா. வாங்கடி கைய ஊனி கரணம் போடலாமின்னு அம்பரு, நூறு பொட்டைங்களை ஒண்ணாச்சேத்திக்கிட்டுப் போயி கலைக்கிட்ருக்கிட்ட,


“சாரு, சாரு இந்த மாதர, இந்த மாதர நாங்க சொந்தமா பாடுபட்டு தின்னுக்கறம், எங்களுக்கு எதனா ரோனு கீனு ஏப்பாடு பண்டி வுடுங்க”ன்னு பிட்டிசனு எழுதிக்குடுத்தா, அவிங்க என்னங்கறாங்க... வூடு வாச இருக்குதா? உங்க பேருலச் சொத்து பத்து இருக்குதா? சர்க்காரு வேங்குல ரொக்கம் ரோஜனம் கணக்கு வழக்கு இருக்குதாங்கறாங்க...

உங்க சோல இல்ல, ஒதுங்கவொரு வெவுலடி பாத்தியம் இல்ல, எங்ககிட்ட எதுவுமேயில்ல அத்தாந்தரமா நிக்கறம். எதோ நீங்க பாத்துவொரு ஒத்தாசப் பண்டுங்கன்னு கெஞ்சனா, அட்ரசீ இல்லாதவங்களுக்கு ரோனு குடுக்க சட்டத்துல எடமில்லங்கறானுங்கவொரு தலயெடுப்பா... போங்கடா எம்பட்டைங்களான்னு திலும்பி வந்துட்டம்.

ஆளாளுக்கு ஒரு தொழுவாடு கத்துக்கங்கடின்னு ஆயா சாமியாருகிட்ட கூத்துப்படிக்க கைகாட்டியுட்டா. சும்மா எப்பிடிச் சொல்றது? சாமியாரப்பன் வெட்டு வெடுக்குனு ஒரு வார்த்தப் பேசனதில்ல. பெத்த பிள்ளைங்களுக்கு மேல ஆச அம்பா வெச்சிருந்தாரு. அக்குசா தொழில கத்துக்குடுத்தாரு.

அபிராமி கண்ணாலந்தான் மொதல்ல படிச்சம். அப்பதான் இவளுக்கு அபிராமின்னு பேரு வௌங்கனது.


செரியான வுனுப்புக்காரி. எதச்சொன்னாலும் புடிச்சாலும் கப்பூரமாட்டம், ஆட்டம் அப்பிடித்தான், பாட்டும் அப்பிடித்தான். என்னாவெண்ணு சாரீரம் மட்லுங் கொஞ்ச கட்ட சாரீரம். நெட்டையோ, குட்டையோ சாமியாரு செட்டுக்கு, மொகாம, மெயினு வேசக்காரி இவதாங்ககிறாப்பிடி ஆயிட்டா.

சரிங் சரிங்கறாப்பல தொழிலுஞ் செஞ்சா. நாத்து வௌஞ்சி பயிராவறதுக்குள்ள மத்தளக்காரம் பூமுடியூர் ராசி அவள குத்தவதோட்டம் ஓட்டறதுக்கு ஆரம்பிச்சிக்கிட்டான். வூடு வாச அண்டாம, செலவுக்கு அஞ்சிப்பத்து வரும்பிடிய குடுக்காம ஒராம்பள கண்டயெடம் மேஞ்சிக்கிட்டிருந்தா பொட்டப்பொம்பள பிள்ளைங்க குட்டிங்கள வெச்சிக்கிட்டு என்னாப் பண்டுவா? ஒண்டி ஓரியா அவளால சம்சாரத்த சுதாரிக்க முடியுமா? செட்டாளுங்க ஆளாளுக்கு கூடி கூடி நாயம்பேசி, குசலஞ்சொல்லி அவளுக்கு உடுக்கயடிக்க,


“உன்னையொரு பெரிய மனுசன், வாத்தியாருன்னு நம்பி செட்டு மத்தாளத்துக்கு வுட்டா, எம்பிருசனுக்கும் அந்தப் பொட்டையனுக்கும் வௌக்கு புடிச்சி, என்ற வேரப்பறிச்சி வெந்தண்ணி வாக்கற, பரவால்லடா மாப்ள உன்ற பண்ணாட்டு”ன்னு ராசுப் பொண்டாட்டி வந்து பேயாடிப்புட்டு போனா.

“அல்லாருக்கும் எட்டெழுத்து, நம்புளுக்குப் பத்து எழுத்துலே அலே பறமுண்ட’ என்னா பாவம் பண்டனமோ, ஆணுக்காவமே, பொண்ணுக்கு ஆவாம, இந்த மானங்கெட்ட பொறப்பெடுத்து, போற வாரப்பக்கமெல்லாஞ் சின்னப்பட்டு சீரழியறம். ஒருக்குத்தமும் பண்டாத மின்னியே நம்பள தேவிடியாப்பட்டங்கட்டி பல்லுமேல நாக்க போட்டு மந்தைங்க பலவெதமாப் பேசுதுங்க. எச்செலைக்கி வீங்கறப்பொழப்ப இன்னையோட தல முழுவிடி ஆயான்னு உள்ள நாயத்த நானு எடுத்துச் சொல்ல வாத்தியாரும் ரெண்டு வார்த்த நல்ல பித்தி சென்னாரு.



சரீன்னு அபிராமியுங் கம்முன்னிருந்தா ராசு வழிக்கிப் போகாம. ஆடி நோம்பிக்கி கூத்தாட தேவுரு செட்டிப் பட்டிக்கிப் போனாம்பாரு அங்கவொரு எத்துக்காரவான் வந்துச் சேந்தான் அவுளுக்கு எமனா.

களரிக்கூட்டுமிந்தியே வந்தவம்பா’ விடியவிடிய சுத்தி விடிஞ்சும் அபிராமிய வுட்டுட்டு அந்தல்ல நவரல. இவ என்றான்னா அவஞ்சொல்ற பாட்ட பாடறா. அந்தப் பாட்டுக்கு பதனஞ்சி சீல மாத்தறா, ச்சும்மா பறந்து பறந்து ஆடறாப்பா. அந்த திருவாத்தான் ஆளுமேல ஆளவுட்டு இவளுக்கு நோட்டு நோட்டாப் பின்னுக் குத்தறாஞ் சலிக்காம. எப்பிடியும் அன்னைக்கி அனாமுத்தா சேந்தது உருவா ஏழ்நூத்தம்பதுக்கு மேலியே இருக்கும்.


அலங்காரம் முடிஞ்சதும் எங்கடா பிள்ளையின்னு தொழவுனா ரெண்டுபேரும் எவத்தயிருக்கறாங்கன்னு ஒண்ணுந்துப்பே இல்ல. அப்பறம் பாத்துக்க எந்த பிருசம் பொண்டாட்டி அந்த மாதர ஒத்துமையாயருப்பாங்க’ அவிங்க திங்கறதும் ஒரே வட்டலு படுக்கறதும் ஒரே கட்டலு. ஒண்ணும் மண்ணாப் பொழங்கிக்கிட்டிருந்தாங்க. நாளாவ ஆவ இந்த பிள்ளைக்கி சுத்தமா நெப்புக்கெட்டுக்கிச்சி. மாப்ள பெரும கண்ண மூடிக்கிம் பிடி அஞ்சாறு அலங்காரத்துக்கு ஆளு வரல


. கூத்து படு பாணி சாமியாரு கூப்புட்டு கண்டாற கழுத, ங்கோயா, ங்கொம்மான்னு ரவுசுப் பண்டும்பிடி மாப்ளக்காரனுக்கு ச்செட்யான ரோசம் வந்துட்டது.

அவனப்பத்தி அனாவசியம்’ அவனென்ன உன்ன அடிப்புடிங்கறது? நானாச்சி வா உனக்கு தனியா செட்டுக் கட்டித்தாரமின்னு ஒரே ரெண்டு நாளயில ஆளுங்களுக்கு மூவாயிரம், நாலாயிரம் மிம்பணங்குடுத்து சாமியாரு செட்டக்கலைச்சி அபிராமிக்கி தனிச்செட்டு கட்டிக்குடுத்துட்டான்.


இந்த ஆடுகாலிப் போனவ, குருவுக்கிட்டவொரு வார்த்தச் சொல்லிப்புட்டு நல்ல வாக்குசம் வாங்கிக் கிட்டுப் போவக்கூடாதா? போடா பிலக்காப் பையான்னு போவக்குள்ள சாமியாரு குடுத்து வெச்சிருந்த பொதுப்பணம் நாப்பதாயிரத்தையும் வாயிலப் போட்டுக்கிட்டுப் போயிட்டா. ஒரு கூத்தன்னைக்கி இந்த மனுசன் தண்ணிதாசனூர் அம்மங்கோயிலண்ட நின்னு,


 “அடியே குருத்துரோகி’ எண்ணி வொரேவொரு வருசத்துக்குள்ள என்ன கும்பி பத்தறாப்பல பத்தி யெரிஞ்சி போயிருவடி”ன்னு மண்ணவாரி வாரி தூத்த வாச்சொல்லுப் பலிச்சிட்டுது. அந்த ஆளிட்ட சாபனையோ’ அடிநாளு தீவெனையோ கவுண்டமவங்கூட சோடிப் போட்டுகிட்டு அங்கயிங்க சுத்தி ஆட்டம் போட்டது பத்தாதுன்னு இந்த கடகெட்ட மூளி அவனைக் கூட்டிக்கிட்டு வூட்டுக்கேப்போயி கும்மாளம் போடறதா?



அவிங்கம்மாக்காரி பாக்கறவரிக்கும் பாத்துட்டு, “எங்கித்தி பாமனையோ என்னு வவுத்துல வந்து பொறந்து இப்பிடி ஈனப்பானமில்லாம திரியற’ நீதாம் புளுத்துச் சாவற’ எங்கியாச்சும் கண்ணுக்கு மறப்பாப் போயி சாவு’ இங்கேண்டி வூட்ட கந்தறப் பண்டற? கூடப்பொறந்த பொறப்பு ஒரு வயசிப்பிள்ள இருக்கற வூட்ல இந்த மாதர அக்குறும்புல அழியறீங்களே நல்லாயிருப்பீங்களா? நாசமுத்து வேசமாரிப் போவிங்களா?”ன்னு ச்சும்மா வுட்டு வணக்கு வணக்குன்னு வணக்கி கடதாம்பு கட்டும்பிடி, கவுண்டம் மவன் போக்கு வரத்த அறுதியா நிறுத்திக்கிட்டான்.


 இவ மாப்ள வந்து பாக்கறதில்லையின்னு அலமோதி கெட்டலைஞ்சி சோறுதண்ணி கூட குடிக்காம கூத்துக்கு போறது, வந்து கூதப்போட்டுக்கிட்டுப் படுத்துக்கிறது. பங்கினி மாசம் ச்செட்யானப்படிக்கி சீசனு’ வருசக்கூத்தா வருது’ வர்ற கூத்த வாண்டாங்கலாமா? போற எடத்துலியே தங்குமடம். போட்டுக் கூத்தாடிக்கிட்டு தப்படியா வூட்டுக்கு வந்து போயிக்கிட்டிருந்தா.

அந்தப் பிரகாரம் பூலாம்பட்டி சித்தூருல நோம்பிக் கூத்து வொண்ணு தானாவதி மழைக்கி நிக்கிம்படி வூட்டுக்கு போவலாம்னு வந்தவ நட்ட நடு தாவாரத்திலேயே மாப்ளக்காரனும் அம்மாக்காரியுங் கொண்டி மாட்டிக்கிட்டு கெடக்கறதப் பாத்துருக்கறா.


அப்பிடியே அங்கம் பதற அடிவவுறுக்காந்த ச்சட்டங்குன்ன, ச்சரிகலம் நடுநடுங்க நின்னவ “அடியே உத்தமபத்தின எனக்கு பித்தி சொன்னியே இப்ப நீயேண்டி அவுசேரிப் போன”ன்னு ஒரோயொரு வார்த்தையின்னாலும் நாண்டுகிட்டுச் சாவும்பிடி கேட்டுப்புட்டு, கடகடன்னு கண்ணுத்தண்ணிய வுட்டுட்டு அந்தாண்ட வந்துட்டா.

அவ்வளதான் மக்யாவது வாரமெல்லாம், பன்னிக்கறியவறுத்து அதல பாசனத்த கலந்துக் குடுத்து அபிராமிய கொன்னுப்புட்டா அவிங்கம்மாக்காரி.


நெருப்பூரு நாவமரைக்கி சீருக்கு போயிட்டு தகோலு தெரிஞ்சி வரதுக்குள்ள எடுத்துக்கொண்டி எரிச்சுப்புட்டாங்க. எளம்பிள்ளி கூடுகாட்டுல. மவ மூஞ்சியப் பாக்கக்கூட ரொணமில்ல. ஆவுசந் தாங்காம குழிமேட்டுக்குப் போயி சாம்பல நவ்வாலு வாயி அள்ளித் தின்னுப்புட்டு வந்தம்.


நாங்க ஆருக்கு என்னா தீம்புச் செஞ்சம்?

தாயப் பழிச்சமா? தண்ணிய தடுத்தமா?

ஏழய அடிச்சமா?

 எளஞ்சாதம் உண்டமா?


 எனத்துக்கிந்த ஆண்டவனுக்கு எங்கமேல இத்தன கூரியம்?


கூனுக் குருடு, மொண்டி, மொடம் இப்பிடி ஒடம்புல வொரு ஒச்சமின்னாக்கூட மயிராச்சி, அதப்பத்தி காரியமில்ல. பாழாப்போன பொறப்புல கோளாறுபண்டி வேடிக்கப் பாக்குதேயந்த நொள்ளக்கண்ணுச் சாமி..



அபிராமிப்பிள்ளய நெனச்சிட்டம்னா அன்ன பொழுதுக்கும் அன்னந்தண்ணி ஆகாரம் எதுவுமே உள்ள எறங்காது. நாம்ப அழுதகண்ணுஞ் சிந்தன மூக்குமாயிருந்தா மாண்டவிங்க பொழைக்கப் போறாங்களா? மறிச்சி மண்ணவுட்டு மேல வரப்போறாங்களா? இல்ல அன்னைக்கியெழுதன எழுத்த பிரம்மன் அழிச்சி எழுதப்போறானா?


உச்சியத்தாண்டி ஒருமாறுப் பொழுதாச்சி சம்பளம் பிரிக்க, செங்கமா முனியப்பங் கோயில்ல எறங்கி பொடுபொடுன்னு வூட்டுக்குப் போயி, துணிமணிய அலசிப் போட்டுட்டு ஒருவாச் சோத்தக் குடிச்சதும் களப்பாயிருக்குதேன்னு செத்த படுத்தம்பாரு, எந்திரிக்கும்போது மணி ஏழு’

எஸ்.டூ.எ.பஸ்சு சங்கிரி வந்துட்டு திலும்பி பவனி போயிரிச்சி. அதும்பொறவு ஆதியா பாதியா கௌம்பி அம்மாபேட்ட வாரதுக்குள்ள மணி ஒம்பதர, அலங்கார கறவத்தானுங்க ஒருத்தங்கூட வூட்ல இல்ல, எட்டுமணி முட்டும் பாத்துட்டு மினிவண்டி பேசி எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்களாம். வூடு வூடா அவிங்களத் தொழாவிப்புட்டு வரதுக்குள்ள பத்துமணி கடைசி பஸ்சும் போயிட்டுது.



பக்கமாயிருந்தாலுந் தேவல. நாகனூரு வாத்தியாரூட்டு கூத்து. மெயினு ரோட்லயிருந்து பழையூரு, முழியனூரு மேல நடந்துப்போனா ஏழு மைலுக்கும் மேல சேரும். எந்நேரம் போறது? நேரங்காலமா வந்துருந்தா எதோவொரு வண்டி கிண்டி புடிச்சிப் போயிருக்கலாம் அத்துவானத்துல வந்து மாட்டிக்கிட்டமே என்னாப் பண்டறது?


செட்ல சாரி வேசமே இல்ல. அந்த சிறுத்த கண்ணஞ் சேவுருப் பையன் இப்பத்தான் புதுப்பழக்கம். சந்து அடைக்கத் தானாவும், பெருங்கொண்ட ஆக்கிட்டு கட்டிச் செலுத்த மாண்டான்.

மிந்தியாச்சும் சுப்ரமணி இருந்தாப்ல. பொண்ணு வேசத்துக்குப் பஞ்சமில்ல. போனப்பூட்லயே ஆளு அலங்காரத்துக்கு வரல. அவரெண்ணாப் பண்டுவாரு? பத்திருவது வருசமா செட்டுக்கு அவருப்பட்ட பாடு அந்தப்பஞ்சும் பட்டுருக்காது. அப்பிடி ஒழைச்ச ஒழப்புக்கு கைமேல கண்ட பலனா இன்னைக்கி ஒவித்தியப்பட்டுக்கிட்டு கெடக்கறாரு.


குஞ்சாண்டியூருக்கு அந்தாண்ட ஆண்டிக்கர காக்காயந்தெருவுக்கு ஒராட்டத்துக்குப் போயிருந்தம் மூணாம் வருசம் கூம்புக்கு கூத்துவுட்டவிங்க “வக்ரகேது பலி”தான் ஆடனுமின்னுப்புட்டாங்க. எந்த அலங்காரமா யிருந்தாலுஞ்சேரி சுப்ரமணி எத்து வரிசையாதான் தொழிலுப்பண்டுவாரு. அன்னைக்கிம் அவரு விலோச்சனா வேசம் போட்டுருந்தாரு.



அம்மாபேட்ட கணேசண்ணன் எரிகண்டங் கட்டியிருந்தாரு. வேகாத திரேகமும், போவாத உசுரும், நீங்காத சேம்பரமும் வேணுமின்னு வரம் வாங்க எரிகண்டன் வக்ரகேதுவ ரணகாளிக்கி பலி குடுக்க கூட்டிப்போறாள். மவன் உசுர மாய்யக்க வேண்டாமின்னு விலோச்சனா அழுது பொலம்பறா. மின்ன வச்ச கால பின்ன வெக்க மாண்டேன்னு சூரனொருபக்கம் இழுக்க, வுடமாண்டேன்னு பொண்டாட்டி குறுக்க வுழுந்து தடுக்க ஓரியாட்டத்துல சூர வேசக்காரன் அவள எட்டி ஒதச்சி தள்ளி, அந்தாண்ட தாட்டி போவானில்ல. அந்த கட்டத்துல, கணேசன் ஒதச்ச ஒதயிலே, ஏமாந்தாப்பிடி அழுதுக்கிட்டிருந்த சுப்ரமணி முதுவுல ஈடுதாங்கி போச்சி. சும்மா ரெண்டு நாளு மூச்சுத்தப்பு வுழுந்ததுதாங் காரணம். பொறவு மனுசன் வாயத்தொறந்து பாட முடியல. எங்கயெங்கியோப் போயி, அளவத்த பணம் செலவு பண்டியும் நோவு நல்லாவது. பொறுக்கித் திங்கற கோழிக்கி மூக்கத் தறிச்சாப்ல, நல்ல தொழிலாளிக்கி நேந்த கதியப் பாரு’ வவுத்துப்பாட்டுக்கு இப்ப ஊரு ஊரா ஈயம் பூசிக்கிட்டு திரியறாரு.



அவருமில்ல நானும் போவலைன்னா கனகராசி வாத்தியாரு கொஞ்சொத்தாப் பேசுவாரு. கெடயில காலு தங்காம அங்கயும் இங்கயும் ஏண்டா காலாந்திரியா திரியற? செட்டுக்கே வந்துர்றா’ ஆத்தர அவசரத்துக்கு வேணுமின்னா பணங்கினம் கூட வாங்கிக்கிவியாமின்னு அவருதாம் பொணையாயிருந்து ஆபரேசம் பண்ட செட்டு பணத்துலயிருந்து எட்டாயிரம் தாரமின்னு சொல்லி மிம்பணம் மூவாயிரத்த கையோட குடுத்தாரு.

ஆச்சி, ஆச்சி இந்த எட்டு பூர்த்தியா ஆடனா வேணுங்கற பணந்தெரண்டுக்கும், ராயவேலூருலியே டாக்கிட்ருமாருங்க கைபோடறாங்களாம். நோவு இல்லாம போயி செஞ்சிக்கிட்டு வந்துர்லாம் நிம்மிதியா’


கல்பனா ஆயா கூட முடிஞ்சத தாரமின்னிருக்குது. எப்பிடிப் பாத்தாலும் போவ வர மேஞ்செலவ ஆயாப் பாத்துக்குவா. ஆசுபத்திரி சமாச்சாரம் செலவு இவ்ளதான் ஆவுமின்னு ஆரு கண்டது? முன்ன பின்னகூட ஆவும். எதுக்கும் உண்டுன்னா காசிருந்தா ஒதாரணைக்கி ஆவுமின்னுதான் நானு கரவாட்டத்துக்கும், கூத்துக்குங் கைகுடுத்துட்டு இப்பிடி பட்டழியறன்.

கனகராசிச் சமாவையுஞ் சும்மாச் சொல்லக்கூடாது, மனசார காங்காம ஏவிடியம் பேசுவாங்களோ என்னமோ தெரியாது. கண்டுவொரு நாளும் எச்சி எடுப்பு பேசனதில்ல. நாலுபேத்து தொழிலு நம்பளப் பத்தி வாதிக்கக்கூடாது. ரோட்டுக்கால்ல நின்னு பாலமாதர பொந்தியப் போட்டு ஒழம்பிக்கிட்டு போறவர ஒண்ணுரெண்டு வண்டிங்கள நாங்குறுக்காட்ட ஒருத்தங்கூட நிக்கல.

நேரம் எந்நேரமோ அம்மாபேட்ட ஊரே அடங்கிப்போச்சி, வவுநேரங்கழிச்சி, தொலையா ஆரோவொரு ஆளு வாட்டசாட்டமா நடமாடற மாதர தெம்பட்டது. ஆராயிருந்தா நமக்கென்ன? கூத்துக்குப் போவ முடியாத வெசனத்துல எம்பாட்ல நானிருக்க, கிட்ட வரச்சொல்லி அவங் கைசாடப் பண்றானே’ இதென்றா தும்பமின்னு பக்கம் போயிப்பாத்தா அவனெங்கியோ வொரு போலிசு ஏட்டு.

சிப்பமோ சீமச்சரக்கோ என்னான்னுந் தெரில. ஆளுக்குப் பதமான போத. சீப்பு வண்டிமேல அட்னகாலுப் போட்டு படுத்துகிட்டிருந்தாஞ் சிவரெட்டுப் பத்தவெச்சிக்கிட்டு.

“என்னாங்க கூப்ட்டது”ன்னு நாங்கேக்க எடுத்த எடுப்பில


“வர்றியா”ங்கறானே ஒரு துடியா.


தடி எடுக்கறப்பவே அடி எங்க வுழுவுமின்னு எனக்கா தெரியாது. இருந்தாலும் இவன் நம்மள வெச்சி தெரிஞ்சி கூப்டறானா? தெரியாம கூட்றானான்னு அறிகொழப்பம்’ எப்பிடியோ இருந்து சாட்டாவுது. இதுக்கு மேல்பட்டு நாங்கூத்துக்கு போறது நெசமில்ல. வளச்சிக்கிட்டு வூட்டுக்குட்ப போவலாமின்னாலும் பவானி வரிக்கும் காரு இருக்கும். அந்தாண்ட வண்டியுமில்ல, பைபாஸ்ல போயி பொழுது விடியந்தின்னியும் குந்தியிருக்கணும்.

அவுத்தப்போயி ஏப்பா அவுதிப்பட்டுக்கிட்டு கெடக்கணும்? இப்பிடிப்போயி சித்தங்கூறியும் இவங்கிட்ட தடுமாறிப்புட்டு வந்தா என்னாக் கெட்டுப்போச்சி? இருந்தாப்பிடியிருந்து எனக்கு தெங்கற நெனப்பெடுத்துக்கிச்சி.


ஆம்பள தெரண்டு ஆளானா ஒடனே கண்ணாலங் கார்த்தி. அவனுக்குண்டான குடும்பங்குட்டி உற்பந்தி ஆவுது. அப்பிடியதுக்கு வசிதிப் பத்தலைன்னா அததுக்கு பொண்டுங்க இருக்கறாங்க அங்கபோயி அம்பதுன்னும் நூறுன்னுங் கடஞ்சொல்லிக்கூட அறுப்பத் தீத்துக்கறாங்க. பொம்பள சமைஞ்சா பெத்தவிங்க கபம்பட்டு, ஒடம்பட்டு ஒருத்தங் கையில புடிச்சிக் குடுக்கறாங்க. அதுச் சுத்தப்படலியா, அவப்பாத்து துணிஞ்சா, அவ பொச்சி பொறன ஆணாகப்பட்ட அத்த சீவனுங்களுக்கும் காரோடத்து நாயி மாதர காசுங்கையுமா சுத்தறாங்க.


இந்த நிக்கற ஆத்துமாவுக்கு ஊத்த ஒடம்புல பிப்பு எடுத்தா அதக்கண்டு ஆத்த மருந்துண்டா? நம்பள அரிசின்னு அள்ளிப் பாப்பாருமில்ல, உமின்னு ஊதிப் பாப்பாருமில்ல. பிரியப்பட்டு வலியினா வர்றங்கறவன ஏம்பா வாண்டான்னுச் சொல்லனுமின்னு நானு அவன அப்பிடிவுட்டுட்டு, இப்பிடி இநதாண்ட வந்து ரோசனப் பண்டிக்கிட்டிருக்கவே அவஞ்சீப்பு வண்டி ஆள ஓரங்கட்டி நிக்குது. வந்து ஏறுன்னு அவஞ்சொல்லுமிந்தி நானு மின்னித்தி சீட்டேறி குந்திக்கிட்டன்.

ஒரே அழுத்துல வண்டி எட்டிப் புடிச்சாப்ல கொடம்பையூரு கரட்டுக்கு வந்துட்டது. அடிக்கரட்ல வட்டப் பாறையும் பாழியும் இருக்கும்பாரு’ அவுத்த வண்டிய நிப்பாட்னான். பாறமேல மழக்காயித்த விரிச்சுட்டுட்டு வண்டியிலந்து நாலஞ்சி பொட்ணத்த எடுத்துப் பிரிச்சி வெச்சாம்பாரு’ எந்த சோத்துக்கடையிலே வாங்கனதோ’ கறிசோத்துப் பொட்ணமாட்டயிருக்குது வட்ட வாகறயே நெய்யி மணக்குது.



மூக்குல பருக்க வர தின்னுப்புட்டு எந்திரிச்சன். அன்னந்தினியும் வாயே பேசாமாயிருந்தவன், “சரக்கு சாப்டுறியா”ன்னு ரெண்டு வெராந்தி பாட்லயும் எடுத்து மின்ன வெச்சான் ஏட்டு.

அதயுஞ் சைசா மண்டயத்திருவி வாயில ஊத்திக்கிட்டன். வீதக்கட்ட வவுறு தூக்கங்கேட்டுது. அதோட அளவான போத, ஆடியாடி அலண்ட ஒடம்புக்கு தோதா யிருந்தது. குளுங்காத்துச் சிலுச்சிலுங்க, மேலுப் பசபசங்க எனக்கு ஏனா தெப்ளச்சுத்தி புரு புருங்குதே’ அப்பிடியே கட்டய கீழசாச்சி கண்ண மூடனம்பாரு. ஏட்டும் எம்மேல சாஞ்சான்.


சாவலு நல்ல பெருஞ்சாதி சாவலு. அணைய அணைய ஒணக்கையா இருந்திச்சி. இப்பிடியே கதய ஒப்பேத்தி, ஓட்டி, கூத்த கொண்டயத்துக்கு கொண்டு போயி, மங்களம் பாடிப்புடலாமுன்னு நாங்கெனாக் கண்ட மாயத்துல, மின்னாம மொழங்காம எண்ணத்துல இடி எறங்குதே’

ஏப்பா உரியேறன சாத்ரீகப் பூன தயிரிருக்க சட்டிய எத்தன நேரம் நக்கும்? வெறியெடுத்து ஆவு ஆவுன்னு என்ற அடிமடிய தொழவனவனுக்கு ஆட்டு ஒதப்பை யாட்டம் எம் புடுக்குச் சிக்கும்பிடி அவம் மொவற நறவல்ல கையுட்டாப்ல சுண்டிப்போச்சி. “த்தூ”ன்னு காறித் துப்புனவங் காது, காதா அப்பறாஞ் சடையாம.

ஓரடியா? ரெண்டடியா? “அய்யோ சாமி நானு அறியாத பித்தியிலே தெரியாம தப்புப் பண்டிப்புட்டன். வுட்டுறு சாமி நானு ஓடிப் பொழச்சிக்கிறன்”னு அழுது பரிதவிக்கிறன் அவங்காலப் புடிச்சிக் கெஞ்சறன் அவங்காயா காதறந்தப் புண்டமேல ஓக்க’ அதயெதயுங் காதுலப் போட்டுக்கவேயில்ல. “மி யெம்மா பூக்குல தெங்கோ’ ஓரி நிக்கற நீ பணியின காமிச்சேவு”ன்னு மயித்த வளச்சிப்போட்டு ச்சும்மா குப்பு குப்புனு குப்பி, என்னய மிங்கட்டு பிங்கட்டு கட்டி சீப்பு வண்டியில தூக்கிப்போட்டு, கண்ணாடியச் சாத்தி, கதவுச்சந்துல எங்காலு ரெண்டையும் வெளியே இழுத்து, ஒரட்டாங்கையிலப் புடிச்சிக்கிட்டான்.


சோத்தாங்கையில அடிப்போன பூணோட அத்தச்சோட்டு குண்டாந்தடியப் புடிச்சி, எல்லப்பன்னியக் குத்தறாப்ல என்ற உசுரு நெலயில ஒரேக்குத்து’ ஆண்டவங் குடுத்த அந்த ஆதாரப்பொருளு கொழண்டு கலங்கிப் போச்சி. இன்னும் நாலீடுப்போட்டு அப்பையே அடிச்சிக் கொன்னிருந்தா ஆயிருக்கும் வதவதயான வதப்பண்டி, வாய்க்கா கரையில வாரிச் சூறையிட்டுப்புட்டுப் போயிட்டான்,

ராவெல்லாம் எங்க கெடந்தன்? எப்பிடி பூதப்பாடி வந்தன்? ஆருக்கொண்டாந்து ஆயாவூட்ல போட்டது. ஒரு பிருவுந் தெரில. நாம் பொழச்சது மாதா புண்ணியம்’ மறுசென்மம்

. “பொறப்படு ஆயா வேலூருக்கு, போயி டாக்டரிண்ட கைபோட்டுக்கிட்டு வந்தரலா”மின்னு கண்ணு முழிச்சதும் மொதக்காரியமா ஆயாள ஆயாள கூப்புட்டுச் சொன்னன்.



ஆதமத்த நாடு







போடுவாசி மவ சம்புநதிக்கி குமிஞ்சி நாட்டையில எழக்கட்ட முடியில.  ரெண்டு தக்கம் குதுக்குகுதுக்குன்னு உதரம் புடுங்கித் தீட்டாப் பட்டுக்கிட்டிருந்திச்சி.  வூட்டுக்குத் தூரம் போறன்னைக்கிப் பாழாப்போனப் பொம்பளச் சென்மத்துக்கு ஒடம்பு ஒடம்பாட்டமா இருக்குது கருமாந்தரம்?  மேலப்பூராஞ் சீலையாட்டந் தொவண்டுக்குது.  கசகசன்னு ஈரம், ஒரே கசாட்டு.  அந்தாண்ட இந்தாண்ட அக்கற எழுய ஓடிப் பொணைக்கவுங் கைலாவல, இன்னைக்கி கோனு எட வேற கொறஞ்சிப் போவும், சின்னச் சேட்டுக்கிட்ட ஆரு பாட்டு வாங்கறதுன்னு பிள்ளைக்கிச் செட்யான வெசனம்.


 பெத்தமனம் பித்து பிள்ள மனங் கல்லுன்னு எந்த கேனப்புண்ட சொன்னது? 

சம்புப் பிள்ள அவிங்கம்மா லங்கலாடி அரிசியத்துக்கிட்ட கொண்டாந்து அவன வுட்டடிக்கணும்.  அப்பவே இந்தப் பிள்ள விடியாந்தரம் அடிவவுறு கடுக்குது.  அள்ளவவுத்த நோவுதிடி மூளின்னா, கேட்டாளா அவ?  குண்டு முத்தம்மா கடயில புளிச்ச ரவ்வோத் தண்ணிய ஒரு முழுங்கு வாங்கிக்குடுத்து ஓடுறீ முட்டக்கண்ணின்னு தொரத்தியுட்டுட்டா.  அவ வெசனம் அவுளுக்குப் பாவம்.

  பேரு வௌங்குதேங்கப்பன் எம்.சி.யாருப் பேரு, சனங்காலு நீட்டிப்படுக்க முடியாதபடிக்கி அவங் கட்டிக் குடுத்தானே, காரவூடு அதுக்குப் பட்ட கடனக் கட்டமுடியாம அவப் பிருசந் தாட்டியம்பட்டியாம் போடுவாசி கூதமுட்டிச் செத்துப்போயிட்டான்.  செத்ததுதாஞ் செத்தாந் தாயாலி சும்மாச் செத்தானா?  வருசத்திக்கி ஒண்ணு வருசத்திக்கு ஒண்ணுன்னு சம்புப்பிள்ளைக்கி மின்ன நாலுப் பொட்டப்பிள்ளைங்க.  காட்டுப்பீயப் பேழும் மிந்தியே கருஞ்செவாப்பு வந்து அதலவொரு ரெண்டன்னத்த மண்ணுக்கு வாரிக் குடுத்துட்டாங்க.
 கொங்கநாக் குட்டிப்போட்டு குப்பங்கொசவஞ் சூள வெச்சாப்பிடி, அனாமுத்த பிள்ளைங்களப் பெத்துட்டுட்டு அப்பங்காரந்தான் புளுக்க மண்டிப் போட்டுட்டானே, அம்மாக்காரியாச்சிம் பொழப்பு மேல கருத்தா இருக்கணுமா வேண்டாமா?




 அரிசியம்பிள் ஒரு தாந்தோனி.  பொம்பளைக்கி சேலம் ஒருக்கோடியா தெனஞ் சீனிமாப் பாக்கணும்.  ஆரியமோ, கம்போ, அரிசியோ, சாமையோ அது எதாயிருக்கட்டும் அன்னக்கி வூட்ல உண்டானத கொடையமூட்டு ரட்சிமிக்கிட்ட அளந்துட்டுப்புட்டு வாங்கித் திங்கனும்.  பிள்ளைங்களுக்கு பாவம் படுக்கப் பாயில்ல.  ஆயாக்காரி ஒருபக்கம் பெரும்போக்காத் திரிய, பிள்ளைங்க ஒரு பக்கம் அறங்கையும் பொறங்கையும் நக்கிக்கிட்டு எத்தன நாளைக்கி கெடக்குங்க?  பாத்துட்டு அதுஅதுங்களே ஆளுக்கொரு மாப்பளைங்களத் தேடிக்கிட்டுப் போயி பொழைக்கிதுங்க,  ஒருத்தி டெய்லருப் பையனொருத்தனக் கட்டிக்கிட்டு பொம்மிடி டேனிசிப்பேட்டையில இருக்கறா.  இன்னோருத்தி ராரி டைவரொருத்தனச் சேத்திக்கிட்டு பூசாரிப்பட்டி தீவிட்டிப்பட்டியிலே இருக்கறா,  சொத்தாப் பொழைச்சா வந்துப் போறதோடச் சேரி மிச்சப்படி எதிலியும் பட்டுக்கறதில்ல.



 வாத்துரூம்புலப் போயி மூஞ்சி கைகாலு கழுவிக்கிட்டு வந்தா களப்புக்குச் செத்த நல்லாயிருக்கும்.  மூணுத் தரத்துக்கு மேல மூத்தரத்துக்குப் போனாவே இந்த வாச்சிமேனு கெழவாடி பேரெழுதிக்கொண்டு சூப்ரேசுருப் பசங்கக்கிட்ட குடுத்துர்றான்.  அவிங்க அங்கென்னாப் புடுங்கற வேலைங்கறாங்க?  ஆம்பளைங்கக்கிட்ட இப்பிடித்தான் ஆயிப்போச்சின்னு இந்த சமாச்சாரத்தப் போயிச் சொல்லமுடியிமா?
 சேட்டு அவிங்கப்பன் பெரிய சேட்டு இருக்கந்தினியும் ரவ்வு வேல கெடயாது, பவுலு மத்தியானம் ரெண்டே சிப்ட்டுத்தான்.  கோனு வைண்டிங்கி ரீலிங்கி ரெண்டுத்துக்கும் பொட்டப்பிள்ளைங்கதாஞ் சூப்ரேசுரு.  அப்பிடி அல்லியும் வேணியும் அதுக்குமின்ன கோமிதியும் இருந்தப்ப இத்தன கெடுபிடி இல்ல.  கோனு எட இல்லையின்னாக்கூட எதோ நேந்து நெரவுவாங்க.  டாக்கு எடுக்கனும், லோடு ஏத்தனுமின்னு அவீங்கள நேரங்கெட்ட நேரத்துல வரச்சொல்லி ஆபிசிலவுட்டுச் செனையேறுனா எவ ஒத்துக்குவா?  நேர்றவிங்களுக்குத்தாம்பா இது சேரும், எல்லாத்துக்குமாச் சேரும்?



  நல்ல மவராசருக்கு அடையாளஞ் சொல்லாமப் பொறப்பட்டுருனுமில்ல?  சேட்டுக்குப் பயந்துக்கிட்டு ரெண்டபேரும் வேலைக்கே வர்ரதில்ல, நின்னுக்கிட்டாங்க.  அவிங்க கத அப்பிடி ஆயிப்போச்சா, கோமிதியும், ஒயருமேனு கந்தசாமியும் பாத்த தாவுலப் பேசப் புடிக்க ஒருத்தரு மேலே ஒருத்தரு பிரியமாயிருந்தாங்க,  அத எப்பிடியோ துப்புகண்டு பின்னிங்கி பிட்டரு செலுவராசு, கோமிதிப்பிள்ளையக் காங்கறப்பெல்லாம் கரண்டுக்காரன்னுது மட்லுமென்னா ஒசித்தி?  மண்ணுத் திங்கற பண்டத்த ஆருத் தின்னா என்னா?  நானுந்தா ஒரீடு பதம் பாக்கறனேன்னு ச்சும்மா எரண்டிக்கிட்டேயிருக்க, இவளும் போனாப்போவுதுப் போனாப்போவுதுன்னுப் பொறுத்துக்கிட்டிருந்தா வவுநாளா. 


 ஒரு நாங்கறப்பெட்டுக்கு டெசுட்டு எடுத்துக்கிட்டுப் போனப்பிள்ளய லேப்புலவுட்டு செலுவராசு சீலய உருவ, அவ குய்யோமுய்யோன்னுக் கத்திப்பாரிக்கிட்டு வெளியே ஓடியாந்துக்கறா.  ஓடியாந்தவளக் குறுக்காட்டி இன்னைக்கிச் சும்மா பிசுக்கு, வாயத் தொறந்து வெளிய இத யெங்கியாச்சுஞ் சொல்லிப்புட்டையின்னு வெய்யி, சேட்டு வண்டியில தூக்கிப்போட்டுக் கொண்டு கந்தப்பட்டி ஏரியிலவுட்டுச் சின்னம் பண்டிப்புடுவ மின்னு மெரட்ட, அந்தப்பிள்ள பத்து பதனஞ்சி நாளாட்டம் மில்லுப்பக்கம் தல வெச்சிப் படுக்கல,  ஒழுக்கமா வேலைக்கி வந்துக்கிட்டிருந்தவ, வாரக்கணக்குல ஆளு அட்ரசியே காணமே, மேலுக்கு கீலுக்கு எதனாலுஞ் சவிரியமில்லியோ, என்னமோன்னு ஒயருமேனு, தனசேவுரு, கோவாலு, பின்னிங்கி முருகேசன்னு அஞ்சாறு பசங்கப் போயி அவளப்பாக்க, இப்பிடி இப்பிடித்தான் நாயமின்னு எல்லாத்தையும் பூர்த்தியா புட்டுபுட்டு வெச்சிட்டா. 


 இன்னைக்கி எலய அறுக்கறவன் நாளைக்கி கொலய ஏண்டா அறுக்கமாண்டான்?  இந்த சங்கிதிய இப்பிடியே வுடக்கூடாதுன்னு பசங்கெல்லாம் ஒட்டுக்காச் சேந்துப்போயி சேட்டு காதுல இதப்போட்டு, பிட்ரு செலுவராசு, கோமிதிப்பிள்ளைக்கிட்ட தாஞ்செஞ்சது தப்புன்னு கால்ல வுழுந்து மாப்புக் கேக்குனுமின்னுச் சொல்ல, அவனிருந்துக்கிட்டு, ஒண்ணுமில்லாத விசியத்த ஆரு ஊதிப் பெரிசிப் பண்டனது?  மில்லுப்பேருக் கெட்டுப்போவும், அப்பிடியிப்படி, அங்கயிங்கன்னு தபாய்க்கிறாந்தட்டி  கழிக்கிறாஞ் சும்மா.  அவ்ளதாஞ்சண்ட, பெருத்த சண்ட மூண்டுக்கிச்சி,  பத்துப்பேரு பண்ணயம் பண்ற எடத்துல ஒருத்தன்மேல மட்லும் சேட்டுக்கு கருசனமின்னா அதுக்குங் காரணமில்லாம இல்ல.
 சின்னப்பட்ட கழதைக்கி செனக்கழத கூத்தியாளாம், சேட்டு பண்ற கோளாறுக்கெல்லாஞ் செலுவராசி உள்ளொளவுக்காரன்.  ஏமாந்தப் பிள்ளைங்களக் கூட்டிவுட்டு அவுனுக்கு வௌக்குப் புடிக்கிறவனும் அவனே. 


 ஆதியிலே சேட்டவிங்கப்பனும், செலுவராசி அவிங்கப்பனும் கொண்டலாம்பட்டி, மகுடஞ்சாவடி, எஸ்ப்பாலம், எளம்பிள்ளியக் கட்டி பழயத்துணிப் பொறுக்கி வித்தாங்க.  பிற்பாடு தறி ஓட்டப்போயி, தானே தறிபோட்டு, அப்பறம் நூலுமண்டி வெச்சி, படிப்படியா மின்ன வந்து பெரியச் சேட்டுக்கு நாலஞ்சி மில்லுஞ் சொந்தமாச்சி.  நல்லது கெட்டது எல்லாத்துக்கும் கூடவேயிருந்து கடைசிமுட்டும் ஒத்தாசிப் பண்டுனானில்ல செலுவராசி அவிங்கப்பன், அந்த நன்னிக்கோசரம், மாளியக்கட்டி மரநாயக்குடிவெச்சாம் பெரிய சேட்டு.
 மில்லுவாசல்லே மீட்டிங் பேசி, சின்னசேட்டு வண்டி மேல செருப்பக் கழட்டி வீசும்படி நாலுநாளா டைக்கி பண்ட, வேªறுதுந் தோதுப் பத்தாம பிட்ரு செலுவராசி கோமிதிப் பிள்ளையிண்ட மாப்புக் கேக்க அவ என்னா நெனச்சாளோ மறுக்க மில்லுக்கே வரல.  அன்னைக்கி வெஞ்சம் வெச்சாஞ்சேட்டு, ஆராருக்கு ஓடையடிக்கணுமின்னு.  மொதல்ல அவங்கண்ல சிக்கனது ஒயருமேனு கந்தசாமி.  அந்த சமாச்சாரத்த என்னான்னுச் சொல்றங் கேளுங்க...



 காருவள்ளி கஞ்சநாயக்கம்பட்டியிலருந்து சக்திவேலு, சக்திவேலுன்னு ஒருப்பையன் மில்லு வேலைக்கி வந்துக்கிட்ருந்தானப்பா அஞ்சாறு வருசமா.  நாளுமேல ஒரு சிப்ட்டு ஒன்ரச் சிப்ட்டுன்னாலும் நல்லாக் கவடத்து பஞ்சித் திம்பாஞ் சலிக்காம, புளோரூமு,காடிங்கியொரு தொங்கல்ல இருந்து கோனு வைண்டிங்கி முட்டும் ஈரக்காத்து பதமா வேணுமின்னு ஏசி பிளாண்டு போட்டுருந்தாம் பக்கமா.  பின்னிங்கில ஏறனா அவுத்தவுத்த பொட்டியில அண்டியிருக்கற பஞ்சிக்குப்பய வௌக்குமாத்துல அடிச்சிக் கூட்டணுஞ் சுத்தமா, உள்றப் போறப்ப பவுரு ஆபிசிலச் சொல்லி பீசுக்கட்டய மறக்காம புடுங்கி வெச்சிட்டுப் போவாந் தெனந்தப்பாம.



 சேட்டுவூட்டாரு மாதரவொரு பிக்கேரிங்க ஆரும் இருக்க மாட்டாங்க.  அப்பனாயா, பெத்துப்பொறப்பு, மாமம்மச்சான் ஒருத்தரு தொச்சமில்லாம வூட்டுச்சனமே மில்லுக்குள்றக் குடியாயிருக்கும்.  அன்னைக்கிங்கறப்ப பெட்டுக்கு சேட்டுப் பொண்டாட்டியந்தச் சொட்டப் பெருக்கான் விடிஞ்சிம் விடியாதமின்ன மில்லுக்கு வந்துட்டா குப்பூரு சொசைட்டியில பாலூட்டிப்புட்டுப் போவ.  மில்லச் சுத்தி வர ஆர்லுக்குள்ள ஆறேக்கரா கொறங்காடு கெடந்தது.  அதயேஞ் சும்மாவுடனமின்னு சோளத்தட்டும், சீமத் தட்டும் ராசிப்பண்டி அத திங்கடிக்க பத்து உருப்பிடி சீம மாடு வளத்தனாங்க.  அன்னாடம் அதுங்க அம்பதுப்படி, அறுவுதுப்படி பாலு பீச்சும்.  அதலவொரு வரும்பிடிப் பாத்துக்க அவிங்களுக்கு.  சொட்டச்சி வந்தவ வந்தச் சோலியப் பாத்துக்கிட்டு போயிருக்கப்படாதா?  ரவ்வுச் சிப்ட்டுக்காரப் பசங்க, பிள்ளைங்க யாராச்சிம் தூங்கறாங்களான்னுத் துப்பெடுக்க உள்ற வந்து ஒவ்வோரு  எடமா நோட்டம் போட்டாப்பிடிச் சுத்திக்கிட்டிருந்தா.  வாச்சிமேனு பாலு பீச்சிக் குடுக்கந்தினியும், அக்காளுக்கு உப்புசந்தாக்குப் புடிக்க முடியல.  வேத்தூத்துதுன்னு சேட்டு மச்சனன் இ.எஸ்.சி என்னா பண்டுனான், சத்திப்பையன் பிளாண்டுள்ள இருக்கவே பீசுப்போட்டு மோட்டாரச் சாட்டுப் பண்டிவுட்டுட்டாம்பா.



 ஏப்பா சின்னவெல மோட்டாரா?  பதனாறயிட்டம் பூராம் இருவுது எம்.சி.பி மோட்டாரு.  காத்தாச் சொழண்டடிக்க இந்த சத்தி மூச்சி வுடமாண்டாம மூணாளு ஒசக்கயிருந்து சுருண்டு வுழந்தாங் கீழ.  சோத்தாங்கையி மூட்டு வெலவிக்கிச்சி.  கீழவுழுந்தவனத் தூக்கியொரு தண்யி தப்பு குடுத்துத் தேக்கந் தேத்தாம, ஆரக் கேட்றா பிளாண்டுக்குள்றப் போனன்னு காதோடச் சேத்தி அப்புறானே இ.எஸ்.சி ஒரு அக்குறும்பு.  பசங்களும் பிள்ளைங்களும் நிமுசம் பையனத் தூக்கி சேட்டு வண்டியில வெச்சி புத்தூருக்குக் கொண்டு போனாங்க கட்டுப்போட.  அன்னராவு வுட்டுட்டு விடிஞ்சி மக்யாநாளு பசங்க வந்து ஆரிந்த அலும்புப் பண்டனது?ன்னுக் கேக்கும்பிடி, இ.எஸ்.சி எனுக்கு எதும் தெரியாதுன்னே சாதிக்கறாம்பா வொரு அநியாயம்.


 கந்தசாமி உம்மய ஒடச்சி சொல்லிப்புட்டான்.  ஓவ் இவங்கொல்ல வந்த மாத்தான்.  வுன்னமாலும் இவன் ஒரே அரச்சணம் மில்லுல இருக்கப்படாதுன்னு மேத்திரிப் பசங்கச் சொல்ல சேட்டு மச்சாங்காரனுக்கு சப்போடு நாயம், மொழுக்கு நாயம் பேச இவிங்க விலுக்கோலு ஒத்துக்க மாட்டேனுப்புட்டாங்க.  கிறுக்கு முறுக்குங்காம மச்சாங்காரன மில்லுக்கு வரவேண்டான்னுப்புட்டு, பையங் கையி எலும்புங்கூடி வருந்தினியும் சம்பளத்தோட ஆசிப்பத்திரி செலவையுஞ் சேத்திக் குடுத்துக்கிட்டிருந்தாஞ் சேட்டு.  மூணு மாசங்கழிச்சி பண்டாத திருக்குசுப்பண்டி திலிப்பியும் மில்லுக்கு வந்துக்கிட்டிருந்தானப்பா இ.எஸ்.சி சேட்டு புண்ணியத்துல.  ஒருநாளு அளவத்த போதையோட ரவ்வு சிப்ட்டு பாத்துக்கிட்டிருந்த கந்தசாமியிண்டப் பேசி பழசக் கௌறுகௌறுன்னுக் கௌறி அகராதிப்பேசி வலிவந்தமா சண்டைக்கி இழுக்க, இவனொண்ணுப்பேச அவனொண்ணுப்பேச ஒண்ணுமேல ஒண்ணுப்போட்டு தகலாறு முத்தி கந்தசாமி, இ.எஸ்.சி மண்டய அடிச்சி ஒழுக்கிப்புட்டான்.  இதுதாண்டா சமயமின்னு சேட்டு ஓமலூரு டேசன்ல போயி கொலக்கேசி எழுதிக்குடுத்து ஒயருமேன உள்றத் தள்ளிப்புட்டான்.  நாயம் நெகாருன்னு ஒருத்தரும் வாயத் தொறக்க முடியல.




 இதெல்லாம் ஒருபக்கங்கெடக்க, மூணு வருசத்துல பரமெண்டு பண்டறமின்னு சொன்னவிங்க ஏழு வருசமாவியும் ஒரே குஞ்சான குஞ்சிக்கி கார்டுக் குடுத்து பரமெண்டு பண்டல.  பி.எப்பு, ஈயெஸ்சு ஒரு சுடுகாடுங் கெடயாது.  தீபாவளிக்கி தீவாளி பிச்சப் போடறாப்ல முந்நூறு, நானூறு மிச்சமாப் போனா ஐநூறு உருவாதாம் போனசி.  வருசமொருக்கா என்னமோ சாங்கியத்துக்கு ரெண்டுருவா சம்பளத்துல ஏத்துவான்.  அதுக்கு உண்டான வேலையுஞ் சேத்தி வாங்கிக்குவாங் கணக்கா.


 ஏப்பா மூக்குமுடி புடுங்கனா ஆளு பாரங் கொறயுமா?  அவனவனுக்கு தக்க சம்சாரமில்ல, சம்பளமே கட்டுப்பிடி ஆவலையின்னா எதவெச்சி சுதாதரிப்ப?  புளோரூமு கொமாரு, காடிங்கி கணேசன், சிம்பலக்சி தனசேவுரு மொகாமையில மேட்டூரு சீரங்கனப் பாத்து ஊனியனு ஆரம்பிக்கலாமின்னு கலந்துப் பேசனதுதாங் காரணம், ஏப்பா சேலம் கிச்சிப்பாளையத்துலயிருந்து ரவிடிங்களக் கூட்டியாந்து, பசங்கள பஞ்சிக் கொடோன்லவுட்டு அடிச்சா அடியா அது.  மூக்குவாயெல்லாம் ரத்தமா கொப்பிளிக்கிது.  ஆளு தப்புனாலும் அடி தப்புல.  ஓரடிப் பாக்கியில்லாம பூராம் உள்ளடி.  தனசேவுருக்குத்தான் மீறன அடி.  தறிக்காருக்கு கோனு திருடி வித்தாங்கன்னு திருட்டுப்பட்டங் கட்டி, போலிசிக்காரனுங்களே வண்டி போட்டுக் கொண்டி அவரவரு வூட்ல துள்ளத் துடிக்க எறிஞ்சிப்புட்டுப் போனாங்க அத்தாந்தரமா.



 அதும்பொறவு உள்ளூரு ஆளுங்க ஒரே பசங்க இல்லாம துப்புரவா வேலயவுட்டு நிறுத்தி ராமநாதபொரம், மதரப் பக்கம்போயி, வெறும் பொட்டப்பிள்ளைங்களாவே மூணுவருசம் யெக்ரிமெண்டு முப்பதாயிரந் தாறம், நாலு யெக்ரிமெண்டு நாப்பதாயிரந் தாறம், அதோதட மாசச் சம்பளம், குடியிருக்க வூடு, போவ வர வண்டி, வசிதின்னு படல்படலாக் கூட்டியாந்து கோட்ரசிக் கட்டிக்குடி வெச்சாங்க.  நரிமின்ன நண்டுக் கரணமடிச்சாப்ல இவிங்கக் விட்ட அவிங்க வந்த எனத்தக்கழட்ட முடியிம்?  வந்த மாதரயே மாசமொரு கும்புலுச் சொல்லாமப் புடிக்காமப் பொறப்பட்டுச்சிங்க,  மிச்சமீதி ஒண்ணு ரெண்டு தாக்குப்புடிச்சித் தடுமாறி மூணு வருசஞ் செலுத்தனவங்களுக்கும் அது நோனி இது நோனின்னு ஒரே அஞ்சிப்பிசா கை நட்டமில்லாமத் தொரத்தியுட்டுட்டாங்க.  அப்பிடித்தாம் பட்டூம் இந்தச் சனந் திருந்திச்சா?  மதரக்காரன் வல்லையின்னா தரும்பிரிக்காரஞ் சும்மாவே வர்ரங்கறான்,  நாயங்கண்டுப் பேசச்செட்யானப்படிக்கி மொகறயில மீசவெச்ச ஆம்பளையுமில்ல, மொழங்கால்ல மீச வெச்ச பொம்பளையுமில்ல.


 சேட்டு மில்ல வெச்சி இன்னொரு வெவகாரமென்னுன்னா ஒராளு ஒரு வேலச் செய்யிதா அந்தவொரு வேல மட்லுந் தாங்கற கட்டுத்திட்டம் எதுங் கெடயாது.  கரண்டு இல்லாம சென்ரேட்ல ஏழு வைண்டிங்கி மிசினுக்குப் பருத்தியா நாலுதான் ஓடுதா, மிச்சப்பேருப் போயி பின்னிங்கில சைடு கட்டணும், மிசுனுத் தொடைக்கனும், ஏப்ரான் ஒட்டுனும், அரியா எடுக்கணும், இதெதுமில்லியா புளோரூம்புக்குப் போயி மிச்சிங்ல பஞ்சள்ளிப் போடுணும்.
 இன்னைக்கி காத்தால வந்தப்பத்தொட்டு ஏழாடங் கரண்டுப்போயி பஞ்சிக் கொடோன்லியேப் பழிக் கெடக்க விதியாச்சி. 



 மத்தியான வெயிலு உக்கரம் புழுங்க ஒரே வேக்காடு, அதுல ஒடம்பு ஒடஞ்சிதான் இப்பிடி திரேகமே ரணமாயிட்டுது.  கண்ணு இருண்டு, காது ரெண்டும் பஞ்சடஞ்சி, மேலு வெலவெலத்து, பிள்ள ரெக்கிரியாட்டம் வதங்கிப் போயிட்டா.  நின்னு நின்னு இடுப்பு நோவெடுக்க, காலுந்தானா மடியிது.  வதயான வதப்பட்டுக்கிட்டு இவளிருக்க பொழுது மணி மூன்றயாச்சி.  இவளவுட்டுட்டு மித்த பிள்ளைங்கெல்லாம் வேரவரு எடுத்த கோனக் கொண்டி சேட்டுக்கிட்ட கணக்கு ஒப்படைக்க, இவ கடைச்சியாப் போயி மேலுக்கு சவிரியமில்ல, நாளைக்கி சேத்தி ஓட்டிக் குடுக்கறன்னு தவுமானஞ் சொல்லிக் குடுத்துட்டுப் போவலாமின்னுருந்தா.


  ரட்சக்கணக்குல மொதுலுப் போட்டு மில்லோட்ற மொதலாளி, எரநூறு முந்நூறுப் பேத்துக்கு மாசம் முப்புது நாளும் படியளக்குற கருத்தா, ஆளு மேல ஆளு ரெண்டாளு வுட்டப் பொறவும் அவங்கிட்ட கையேந்தி கூலி வாங்கறவொரு பொட்டப்பிள்ள, கெட்டக்கேடு, இந்த மாதரவொரு மதியாத்தனத்துல ரஸ்பீட்டு மயிரா நின்னுக்கிட்டிருந்தா, அந்த இஸ்பேட் புளுத்திக்கி ஏப்பா நோப்பாளம் வராது?  எடுத்துக்கிட்டிருந்த கணக்க அப்பிடி அப்பிடியே வுட்டுட்டு, நெனச்சாப்பிடி குந்தியிருந்த சீட்டிய கிடீர்னு பொறவுத் தள்ளி எந்திரிச்சவன், திடுதிடுன்னு அந்தப் பிள்ளையிண்ட ஓட்டமா ஓடி 


‘ஏப் பொம்பளே, சேட்டு கூப்பர்றாந் தெர்லே?  எர்மே மாரி நிக்றே ராஸ்கோல், கித்தனா கோன்?  பொம்பிளே, கித்தனா கோன்?’ன்னு ஒரு அதட்டு அதட்டுனாம் பாரு... விலுக்குன்னு துள்ளிவுழுந்தப் பிள்ள மெரண்டுட்டுதா, அந்தப்பயத்திலேயே இன்னோராடம் தீட்டாயிப்போச்சி.



 ஒட்னக்கால எட்ட வெக்கறதுக்கில்லாமப் பட்டுக்கிட்டிருந்த சித்தரவதயில பிள்ளைக்கிப் பேச நாவே எந்திரிக்கல.  மொள்ள டேண்டு மேலயிருந்து கோனு எடுத்து சேட்டு மின்ன வெச்சா.  எக், தோ, தீன்னு எண்ணிப்பாத்தவனுக்கு, எட்டேயெட்டு கோனுயிருக்கும்பிடி ª----- சுண்டி, படீர் படீர்னு நோங்கிநோங்கி பிள்ள தலமேலத்தட்டி, ‘ஏப் பொம்பளே, எட்டவர் ஷிப்ட்லே, இவ்ளோதாங் கோனா?  வயறு சோற் சாப்ட தெர்தூ, வாங்கறே பைசாக்கு வேலே செய்னும் தெர்லே’ன்னு கொரைக்க, உச்சியில ஈடுத்தாங்கி பிள்ளைக்கி நெருப்பு பருத்தி வெச்ச மாதர மேலேப்பூராம் த்திகு த்திகுன்னு எரிய அவுளுக்கும் மச திலிம்பிட்டுது. 

 ஏந்திக்கிட்டிருந்த கோன நின்ன வாக்குல விசிறி எஞ்சவ, ‘டேய்ய் ஆர்ரா மேலே வெக்கிறவந் தாயாலி, குடுக்கறத மட்லும் எண்ணி கணக்கு வெய்யிஇ மிச்சப்பிடி கை தீண்டற வேலகீல வெச்சிக்கிட்ட மரியாதி கிரியாதியெல்லாங் கெட்டுப் போயிருஞ் சாக்கிரிதி’ன்னு இடுப்புல கட்டியிருந்த பையயிம், தலயிலக்கட்டியிருந்த வேடயும் அவுத்துச் சுருட்டி அவம் மொவரையில யிட்டுப்புட்டு கொண்டயத் தட்டி, முடிஞ்சிக்கிட்டு வேடிக்கப் பாத்தவிங்கப் பாத்தப்படியிருக்க, படப்படன்னு கேட்டு வாசலுக்கே வந்துட்டா.



 வாசக்காலத் தாண்டி இந்தண்ட வந்ததும், அஞ்சி வருசமா அவள புடிச்ச பீடவுட்ட மாதரயிருந்திச்சி.  பின்னயென்னாப் பின்ன இன்னைக்கி நேத்தா அவ சேட்டு மில்லுல குப்பப் போடறா?  எண்ணி எட்டுவயசில மில்லுல அடியெடுத்து வெச்சவ, ஆயிப்போச்சி அவுளுக்கு பதிமூணு வயசி,  மொதவொரு மூணுமாசம் சேட்டுவூட்டாருக்கு சிக்கனம்பட்டி குதரக்குத்திப் பள்ளத்தலயிருந்து காப்பித் தண்ணி டீத்தண்ணி, ஜர்தாப்பொயில வாங்கிக் குடுத்துக்கிட்டிருந்தா.  அதும்பொறவு கெண்டத் தூக்கப் போட்டாங்க.


  மூணுநாளு, நாலு நாளு கெடையா தொட்டியில ஊறனது.  மக்கேரி நம்ப அள்ளி சும்மாடு கோலித் தூக்கி வெக்கையில அத்த பாரத்துக்கு மனுசரு செத்த ஏமாந்தப்பிடி யிருந்தா கை சோட்டு விட்டய அலுங்காம போட்டுட்டு சத்தமில்லாம ஓடிப் போயிருனும்.  ஓஞ்சி நிக்கறதுண்டா?  உஸ்சின்னு சித்த குந்தறதுக்குண்டா?  சும்மாயிருக்கறதக் கண்டுட்டான்னா பிஞ்சின்னும் மாருன்னும் வெச்சிப் பாக்கமாண்டாஞ் சேட்டு.  அத எடு, இத எடு, அங்க ஓடு, இங்க ஓடுன்னு  முடுக்கியேயிருப்பான்.  உள்ளங்காலுத்தேய ஓவத்து வேலச் செஞ்சாலும் மனசே மோவாதுச் சனியனுக்கு. நீ  கொடலியே உருவி கைலக் காட்டு, அதயும் வெறும் வாழநாருன்னுப்புடுவாந் தாயாலி.  


ஆறுமாசம், ஒரு வருசமாட்டம் கெண்டச் சொமக்கப் போட்டுட்டு, பொறவு காடிங்கிக்கும் ட்ராயிங்கிக்கும் சிலைவருக்கேனு தள்ளப் போட்டாங்க.  அப்பிடியிப்பிடி எதனாலுந்துளி அசந்து ரோலுல பஞ்சி கிஞ்சி ஏறிப்போயிட்டா நறுவுசுப் பண்டனது பணிக்கில்லையின்னு அந்தச்சோட்டு ரோலுக்கட்டையிலியே மண்ட மண்டயா இறுக்குவானந்த ட்ராயிங்கிப் பிட்ரு.  மொள்ள பின்னிங்கிக்கி பாபினு மாத்தியுட்டுட்டு ஆறூசி, ஏழுசி எழக்கட்டச் சொன்னாங்க.  இந்தப்பிள்ளைஞ் சூட்டுப்பா பத்தூசி, பன்னண்டூசிக் கட்டிச்சி.  அப்பிடியிருந்தும் முழுசாவொரு மிசினி அண்டியிருக்க முடியாது.  அதுவுமிந்த ஆயரமூசி வளத்திப் பிரேமு வாங்கிப் பூட்னப்பொறவு சிப்ட்டுக்கு இருவுது அரியா, இருவத்திரெண்டு அரியா எடுத்தது எடுத் மாதரயேயிருக்கணும்.



 இந்தச் சீரெழவெல்லாம் பத்தாதுன்னு இன்னோரு பேரெழவுக்கும் பிள்ளைங்க கைக்குடுக்கனும்.  நெனைச் சிக்கிட்டாப்போதும் மூணுக்கொருக்கா, ஆறுக்கொருக்கா இநத் லேபரு ஆபிசிரு, பேட்ரி இனிசிப்பெட்ரு இவிங்கயெல்லாம் மில்லு மில்லா அல்லெடுக்க வருவாங்க என்னம்மோ அவிங்க அவிங்களுக்கு எள்ளும் பொரியும் எறச்சி, கொண்டுப்போயி ஓமலூரு மலையாளத்தாஞ் சோத்துக்கடையில சீமச்சாராயத்தோட ஆட்டுக்கெடாயுங் காவுக்குடுத்து, அவுத்த அந்த பாடமாத்தியில தேர திலுப்பி வழிக்கூட்டி அனுப்பமுட்டும் பிள்ளைங்க பாவம் பஞ்சிக்குழியில ஒண்டிக்கிட்டு மறப்பாப் படுத்துருக்கணும்.


  காத்துண்டா?  ஒரு வெளிச்சமுண்டா?  பங்கினி மாசம், சித்தர மாசமாயிருந்து, அந்த அடப்பாசறத்துல ஒண்ணுமேல ஒண்ணா பொணமாட்டம்டந்துட்டு எந்திரிச்சா, அந்த ஜூட்டுக்கு ஒவ்வோருப் பிள்ளைங்களுக்கு அக்கி வந்தாப்பிடி மேலே கொந்திப் போயிரும்.    ஒவ்வொண்ணுங்களுக்கு தொடச்சந்துலியும், சூத்தாம்பட்டையிலையும் நல்லா இத்தத்தச்சோடு செலந்தி புட்ரிச்சிக்கிட்டு முட்டி, ஈ மிக்க ச்சும்மா சலமா ஊறும்.  செலந்தி ஒடஞ்சி மொளப்பு வாரந்தின்னியும் நடக்கறதுக்கில்லாம நாத்தமெடுத்துக்கிட்டு திரியினும்.  எப்பிடியோ ரெண்டு வருசமா பிரிப்பேட்தியிலியும், பின்னிங்கியிலியும் ஓரியாடிப்புட்டு, மூணாம் வருசந் தொட்டுத்தான் இந்த கோனு வைண்டிங்கிக்கி வந்தா, கூலிக்கித் தக்கன வேல வாங்கறாங்க, அதுக்கு எச்சாவும் நம்ம பாட்டத் திங்கறாங்க.  பாடுப்பட பால்மார்ற பிள்ளயில்ல இவ.  ஊத்த வாயில வெரு வார்த்தயச் சொல்லிப்புட்டு அந்த சொல்லு அழிய றாங்களே, அதக்கண்டாதானே, மனுசருக்கு வேவறது. 



 பேச்சிச் சுத்தம் இல்லாக்காட்டி அந்தெடத்துல எப்பிடிப்பா பிரியமா பண்ணயம்  பண்டறது?  அட விசியம் வேறொண்ணுமில்ல, போனப்பூட்டு தீவாளீக்கி சேட்டு என்னான்னுச் சொன்னானிங்கற, வருசம் முந்நூத்தி அறுவத்தஞ்சி நாளும் நிக்காம வேலைக்கி வாரவிங்களுக்கு, அடுத்த நோம்பிக்கி சைக்கிளு வாங்கித் தாறமின்னு சொன்னதுதாஞ் சாக்கு,  இவ நோவா நொடியா, நோம்பியா கீம்பியா ஒரு கல்லெடுப்பையுங் கண்டப் பாவியில்ல,  அவுளுண்டு மில்லுண்டுன்னு கிருமமா வேலைக்கிப் போயிக்கிட்டிருந்தா.  எப்பாவொரு பொட்டப்பிள்ள நாம்ப யின்னைக்கி வயிசிக்கி வாரமின்னுக் கண்டா வெச்சிருப்பா?  சமஞ்சவளுக்கு தெரட்டிச்சுத்தி வூட்டுக்குக் கூப்படறாங்கயில்ல, அந்தேழு நாளு மட்டும் பிள்ள மில்லுக்குப் போவல.




 மறிச்சி அந்த வருசந் தீவாளி வந்தது.  அல்லாருஞ் சேட்டு நோம்பிக்கி அவுக்கறான்னு ஆளுமேல ஆளு ஏறிக்கிட்டுப் போயி வாங்கிக்கிட்டிருக்க, சம்புநதிப்பிள்ள அதயெதயுஞ்சட்டையேப் பண்டல.  சைக்கிளு வாங்கறத்துலியே குறியாயிருந்தா.  பின்ன ஊரேத் துடும்படிச்சிக்கிட்டுத் திரிஞ்சாளே, வெறுங்கையோட போனா பெருத்த பங்கமில்ல. ரவுசடங்கனதும் போயி இவ, இப்பிடித்தாஞ் சங்கிதி, சைக்கிளு வாங்கிக் குடுங்க சாருன்னு கேக்க...



 ‘ஏழ்நாள் ஆப்ஜெண்ட் எந்த கணக்குல குடுக்கறது?  கண்டதுக்கு வாரியெறைக்க இதுவொண்ணும் அனாதிங்க சொத்தில்ல’ங்கறானே வாயே கூசாம,  இல்லாதவச் சொல்லு சவ ஏறுமா?  மவ மருவறா மருவறா அப்பிடி மருவறா, மாடாட்டம் அழுவறா. ஆண்டியூம்பச் சொன்னா தாசப்பனுக்கு எங்கப் போச்சி பித்தி?  இவுளுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணுமின்னு மில்லே ஏவிடியும் பேசுது.  புதுவருசம் பொங்கலுன்னு எத்தன ரீவு நாள்ல வேலக்கிப் போயிருப்பா?  வந்த கணக்கவுட்டுட்டு வராத கணக்கச் சொல்லி வேல வுட்டுட்டானில்ல.  இந்த அலுப்பநாயி சாவகேசம் நம்புளுக்கு அரமாலுமே வேண்டாமின்னு அன்னக்கி நெஞ்சில வைராக்கியத்த வெச்சா, எண்ணம் இன்னக்கித்தான் ஈடேறுது.




 கசந்து வந்தவ கண்ணத் தொடச்சி அனுசரிச்சி, ரெண்ட வார்த்த தேறுதலா சொல்லாக்காட்டிப் போவுது, எங்கியோ காத்தடிக்கிது, எவுத்திலியோ மழப் பேயிதுன்னே இருக்குறாளே இந்த அரிசியம்பிள்ள, மொதநாளு அந்தியோட வந்து மூலையிலச் சுருண்டப் பிள்ள, மொடங்கனது மொடங்கனாப்பிடியே கெடக்குதே, என்னாயிருக்கும் ஏதாயிருக்குமின்னு பெத்த வவுறு ரவையாச்சிம் பதைக்கிமா பதைக்காதா?  



இந்தம்மாளுக்குப் பொந்தியில என்னா கருத்து ஓடுது...


 இதேதறா, இந்தப்பிள்ள மில்லுக்குப் போவாம, டிமிக்கிக் குடுப்பாளாட்டமிருக்குதே... அம்மா இப்பிடியே மலத்திப் அரியா ஒய்யாரமாப் படுத்துக்கிட்டிருந்தா, அத வெச்சி போயி ரெண்டுநா சம்பளத்துள கிம்பளத்துல எதனாலுந் துண்டுகிண்டு வுழுத்துப்போச்சின்னா, பண்ணாடிமாருங்க பஞ்சாயத்துல முகவா விக்கிறாங்களே டீவிப்பொட்டி, அத வாங்கற வழியெப்பிடின்னு ச்செட்யான கருக்கட வுழுந்துட்டுது.  அந்த ஆவுசந் தாக்கு புடிக்க மாட்டாம தாம் பொம்பள, மறாநாளு கோழிக் கூப்ட்டுச்சோ, இல்லியோ ‘ஏண்டி மில்லுக்குப் போவுலியா?  மில்லுக்குப் போவுலியா’ன்னு மவள அரியா அரிச்சிப் புடுங்கறாளே வுடாம. 


 அம்மாக்காரி சம்பஞ் சாலாக்கெல்லாம் மவக்கிட்ட ஒண்ணுஞ் செல்லுப்பிடியாவல.  சம்புப்பிள்ள புடிவாதமா, படுத்தது படுத்தவாக்குலயிருக்கா.  ஓஹோ யிந்த சண்டிமாடு ஆட்டம் பழக்கப் பாக்குது, அதயெப்பிடி நொகத்துல பொணைக்கிறதுன்னு எனக்கா தெரியாது?  தீனியெடுக்காம புணிச்சிக்கிட்டுருவனிண்ட ஒரேடியா வாட்லாட்டியம் போட்டா காரியங் கந்தராயாயிப் போயிரும்.  எங்கப் போயிரப் போறா?  ஒருச்சித்தய வுட்டுப்புடிக்கலாமுன்னு நெனக்கங்கட்டு பழயச் சோத்துதண்ணி நேரத்திக்கெல்லாம் அரிசியம்பிள்ள பொறுக்கலுக்குத் திலும்பிக்கிட்டா.  


பொறுக்கலுக்குத் திலும்புனவ, முட்டப் போண்டா திங்கலாமின்னு ஒரேத்துருவா காமலாப்பொரம் பெருமாளாசாரி கடைக்கேப் போயிட்டா.  முட்டப்போண்டா திங்கப் போனாளில்ல ஆசாரிக்கடைக்கி, அவுத்தத்தான் எங்கியோ மில்லு நாயந் துப்புத் தெரிஞ்சிப் போச்சி.  அவ்ளதாம்பா, படப்படன்னு சூரிக்காத்தாட்டம் வூட்டுக்கு வந்தவ, வந்தும் வராதமின்ன அலுப்பா கவுத்துக் கட்டுல்லத் தூங்கிக்கிட்டிருந்தப் பிள்ளை, வெடுக்குன்னுத் தூக்கி கீழப்போட்டு மிதிச்சி ஏண்டி ஓலீ, சோறுப் போடற மவராசன், ஒருச்சொல்லு சொன்னாயென்னா?  ரெண்டு ஈடுதான் வெச்சாயென்னா?  ஒண்ணுமில்லாதப் பொத்துலு, உனக்கெதுக்கிடி ரோசமின்னு குமுறுகுமுறுன்னுக் குமுறி, மசத்தப் புடிச்சி தரத்தரன்னு இவள அடிச்சி வேல வாங்குங்க சாமீன்னு, சொல்லிவுட்டுட்டு வந்தப்பொறவுதான், அரிசியம் பிள்ளைக்கி மனசாறி, மத்தியானச் சோறேக் குடிச்சா.

ஞாயிறு, 2 நவம்பர், 2014

வாயிக்கி வணங்காத பூவும் பல்லுக்கு மெதுவான கல்லும்




 பட்டும் பாவியானன் நானு நட்டுஞ்சாவியானன் அடியே ஆயா
 எங்கியாச்சுங் கண்டுக்கறமா இந்தமாரி அநியாயத்த ?தெனம் பத்து தரமுன்னாலும் காட்டுக்கும் ஊட்டுக்கும் நடயா நடந்து, கடன ஒடன வாங்கி முட்டுவழிப்போட்டு, இடுப்பொடிய பாடுபட்டு பண்ணயம் பண்டுனாலும் இந்த எலவெடுத்த வூட்ல இந்தாடி உனுக்கொரு அஞ்சிப்பசா காசின்னு நம்புளுக்கு அவுப்பாரு ஆருமில்ல.

  இப்ப அள்ளாமக் கிள்ளாம ஆரூத்தின்னப்பாடுமில்லாம மூணு ஏக்கரா நெலத்த அந்த கொரங்குத் தேவிடியாளுக்கு இந்த ஏத்தி கூத்தியாருப் பெத்த பையன் பட்டா பண்ணி வெக்கப் போறானாமே......

 இப்படி கண்டவங்கத் தின்னுப்புட்டு போறதுக்கா அந்த கெழுட்டுமுண்ட வவுத்துக்குக்கூடத் திங்காம வாயிலப் பொயிலக்குச்சிய அடக்கிக்கிட்டு சந்த சந்தயா அரிசிவித்துச் சொத்து சம்பாரிச்சி வெச்விட்டுப்போனா?

 மேலுக்கூடைக்கு தக்காளி பத்தல.  பெருஞ்சாதிப்பழமா ஒரு பத்துக் கொட்டாப்புட்டி பொறுக்கி, சின்னப் பொடியிண்ட குடுத்துர்றா மாப்பளைன்னு காட்டுக்குப் போவச் சொன்னன்.  பாலூத்திக் கடஞ்ச பண்ண ரெக்கிரியும் மூணு ருண்டகளியையும் முழுங்கிப்புட்டு போனவம் போனவனே......


 பொதஞ்சந்தக்கி போற பாரவண்டிய நிறுத்தி வெச்சிக்கிட்டு நானும் வருவான் வருவான்னு பாத்துக்கிட்டு இங்க கெடக்கறன்.
 எங்கயிருந்து வருவாம் மாப்ள?
 மூணுநாளா அந்த மூளியூட்லயில்ல குடியிருந்துக்கிறான்.  அப்பயே என்று அங்கம் பதயாப் பதச்சது’  என்னமோ எடஞ்சலு வருதுன்னு நெனச்சன் இப்படிப் பண்ணிப்புட்டானே...

 படுத்தா ரவயில தூக்கம் வந்தா?  பாழும் வவுத்துக்கு ஒரு ஒழுங்கு நீசுத்தண்ணிய நிம்மதியா குடிக்க முடியிதா?  அடி எனக்கு ஆளுன்னாலும் ஆறல’  தீருன்னாலும் தீரல, நெஞ்சில ஒரே ரவ அஞ்சிக்க இல்லாம அவனும் உசுரோடத்திரியறான்.  ஏனா ஆம்பளயின்னு அத்தச்சோட்டு மீசய வெச்சிக்கிட்டு..


 ஏண்டா மொன்னயா ஊரே சிரிச்சி சீலப்பேனு குத்துதே.  உன்னு மொவறையில காரிக்காரித் துப்புதே இன்னும் எதுக்குடா பொன்னயை அந்த மானங்கெட்ட உசுர வெச்சிக்கிட்டுருக்கற?  ஏண்டா உனக்கு ஒருச்சார குறண மருந்து சிக்கல’  ஒருச்சாணு கவுறு சிக்கல’  ஹூம் நல்லவங்க எல்லாஞ் சாவுறாங்களே அட ஆண்டவனே’  இவன நீட்டி நீருப்பூசி வெக்கக்கூடாதா?  ஆடிமா குடிவெட்டி நீளமாப் பொதைக்கக் கூடாதா?

 கெடக்குது வுடுறா’  கெடக்குது வுடுறா’  இதா இன்னிக்கு வந்துரும் நல்லபித்தி’  இத நாளைக்கி வந்துரும் நல்ல பித்தின்னு நானும் எட்டு வருசமா உன்னுகிட்ட ஓரியாடிப்பாத்துட்டன், நீயும் திருந்தி நல்லவழி போறதக்காணம்.  எப்ப என்னய அறியாம அந்த காதறுந்த மூளிக்கி காட்ட எழுதிவெக்க துணிஞ்சிட்டியோ, வுன்னுமாலும் உனக்கும் எனக்கும் என்ன இருக்குது?


 கருத்ததெல்லாந் தண்ணி வெளுத்ததெல்லாம் பாலுன்னு உன்ன அண்டி கெடந்தனே’  அதெல்லாம் அந்தக்காலஞ்சாமி அந்தக்காலம்’  இதாவொரு பையன பெத்துவுட்ருக்கறன் மரியேதியா அவுனுக்கும் எனக்கும் பொழைக்கவொரு தடங்காட்டு, பொறவு நீயி, என்னமோச் செஞ்சி எப்படியோ நாசமாப்போ’

 இவ்வள ஆனப்பொறன ஒங்கிட்ட இருந்த பொழைக்கிறதுல அர்த்தமில்ல.  கெதியத்தவ, கேட்க ஆளு இல்லாதவன்னுதான நீயி இப்பிடி தில்லுமாரித்தனம் பண்ணிக்கிட்டுத் திரியற...   எனக்கும்   சாதி சனம்  ஊரு நம்பக்கெடக்குது ...செரக்கப் பொறந்து நெறக்க      பொழச்சதுங்க  போறேன்
 போயி, அவங்கள கூட்டியாரன்.

 பத்துப்பேர வெச்சி பஞ்சாயம்பேசி துரும்புக் கிள்ளி போட்டுர்ரா சாமி.  உன்னு வழிய நீப்பாத்துக்க என்னுவழிய நாம் பாத்துக்கறன் ஆமா.
 ஒரே ஒரு நிமிசம் இந்தவூட்ல நானு இருக்க மாண்டன், இங்கயிருக்க எனக்கு சுத்தப்படாதுன்னா சுத்தப்படாது.
 ஹூம் நானாப்பிள்ள பொறந்தன் உன்னுக்கிட்ட சின்னப்பட்டு சீரழிய....

 டே கண்ணு சின்ராசு’  கண்டார வோலி பையனே’  எங்கடாப்போயி தொலஞ்ச? உன்னாலத்தாண்டா என்னுசுருப்போவப் போவுது?  வாடா இங்க..  இந்துரா ரெண்டுருவா போயி சளி மிட்டாயி வாங்கித்தின்னு.

 ஒழுங்கா பள்ளியோடம் போ’
 வௌயாட்டுப் பெறாக்குல வூட்ட தொறப்பு போடாம போயி ராத.  இந்தா தொறப்புக்குச்சி’  செத்தாலுந் திலும்பி வர மாட்டேன்னு
புண்ட வாயங்கிட்டச் சொல்லிப்புடுன்னு ஒரே முடுவா அப்பமூட்டுக்கு திலும்பிக்கிட்டா பஞ்சவர்ணம்.



  தடத்துல போற வர்றதுங்க தாம்பாத்துருக்கப் பொறந்தது, இன்னும் ஒழுங்கா கழுவத் தெரியாததுங்கயெல்லாம் பஞ்சவர்ணத்தோட தொகக் கண்டுட்டுப்போற போக்குல அப்படியே ரெவலா தலவ கிள்ளி நெருப்ப பருத்தி வெச்சிருக்குங்க.  அதான் இப்பிடி வேட்டு வெடிச்சி பொக கௌம்புது’
 எட்டுக்கு ஒருக்க, பத்துக்கு ஒருக்க எப்பயும் நடக்கிற கொச வழக்குத்தான்னாலும் இந்தப் பயணம் எதோ முத்திப்போன சமாச்சாரமாட்டமிருக்குது.  இல்லைன்னா பஸ்சு ஏர்றவளா பஞ்சவர்ணம்?


 மீறி மீறிப் போனா வண்டி மேட்டுக்குப்போயி பொழுதடைய அவபொறந்தவ வூட்ல கதய ஓட்டிப்புட்டு துப்பன எச்சி காயறதுக்குள்ள ஓடியாந்துருவா’
 கொண்டுகிட்டு கொலம்பாக்கறது நல்லாயில்லத்தான் என்னாப் பண்டறது?  அவளா பச்சமுத்த கட்டிக்கிறேங் கட்டிக்கிறேன்னு அடிப்பறிக்கிட்டு நின்னா?



ஹூம் அவங்கப்பன் இருக்கறானே திரியோதனன், ராசமுத்து கவுண்டன்.  பொழித்தகராறுல பங்காளி கையவெட்ப்புட்டு போலிசில சிக்கி சேலஞ் செயில்ல கம்பி எண்ணிக்கட்டிருந்தாம் பாவம்.  இவந்தாம்பாத்துட்டு அட அக்காப்பிருசஞ் செயில்ல களித்தின்னுக்கிட்டுக் கெடக்கறானேன்னு சீனிவாச வக்கீலு வெச்சி சே வாதாடி செவச்சி மாமங்காரன விங்கிணிச்சி வெளியக் கொண்டாந்தான்.  அப்ப பஞ்சவர்ணம் வயிச்சிக்கி வந்த புதுசி அதும்பொறவு பாத்துக்க ச்சும்மா கருவாட்டுக்கூடய பூனச் சுத்தனா  ப்புல அவங்கூட்ட இவஞ்சுத்த ராசமுத்து மவள இவுனுக்குக் கட்டிக் குடுத்தாங்க கடன கழிச்சான்.


 தாலியேறுன நாளு மொதக்கொண்டு தண்ணியில எழுதுன எழுத்து அழிஞ்சாலும் தம்பிருசன் சொல்லு அழியமாண்டான்னு நம்பித்தான் பஞ்சவர்ணம் அவங்கிட்ட வாழ்க்கச் செஞ்சா.  அவளாட்டம் உஸ்தியமான பொம்பள கருத்துள்ள பொம்பள ஊருக்கு ஒருத்தருமில்ல.  காலா காலத்துல அவுனுக்கு தெல்லுமணியாட்டம் ஒருப்பையன பெத்துக்குடுத்தா.


 அவ   மாசமாயிருந்தாளே அந்தச்சமயத்துலதான அவுனுக்கு இந்த வெங்காயத்தானோட  வள்ளலுமயிரு முச்சூடுந் தெரிஞ்சது.
எவத்தத்திலும்புனாலும் இவங்கூத்தியா, வெக்கிற நாயந்தான்.  அவுத்தப்பாத்தன்’  இவுத்தப் பாத்தன்’  சனிச்சந்தயிலப்பாத்தன், ஞாயிதுச் சந்தயிலப் பாத்தன், அவளோடப் பாத்தன், இவளோடப் பாத்தன்னு பலரும் பலவிதமா சொன்னப்பக்கூட பஞ்சவர்ணம் அது காது குடுத்துக் கேக்கல.
அவளா ஆள பொடனிமேல கைபோட்டுப் புடிச்சப்பறந்தான் உம்மயான நெலவரத்தக் கண்டுக்கிட்டா.

]
தாரண வருசமோ, கீரண வருசமோ,
ஒருப்பூட்டு
அப்பசி மாசம் செரியான அடமழ’
இப்ப இந்தசின்னராசு பையன் ஆறுமாசமோ தென்னமோ அவ வவுத்துல இருந்தான்.
ஒருநா எங்கியோ காட்டுக்குப் போவலாமுன்னு திலும்புவை,
“இதென்னாடி அநியாயம் இந்தாளு போனா போன எடம்’  வந்தா வந்த எடம்’ காத்தால ஒருக்குண்டாம் பழயச்சோத்துத் தண்ணிய குடிச்சிப்புட்டு போன மனுசன், இன்னும் வூடு வந்து சேரல, வந்தா ஒருவாச்சோத்தப் போட்டுட்டு காட்டண்டி ஒரு வேலவெட்டி பண்ணலாமுன்னா எங்க போறது?  ஒராளுக்கு ஊழியங்செய்யவே நேரஞ்செரியா இருக்குது, அந்திப்பாலு வேறப்பீச்சணும், மாட்டுக்கு பருத்திக்கொட்ட ஆட்டணும்.  ஊர¬ வெச்சது அப்பிடியே உசுரோடக் கெடக்குது.


  இந்த முட்டக்கண்ணி வர்ரன்னா திருட்டு முண்டய இன்னுங் காணம்.  ஒரு மனிசி எத்தன வேலயச் செஞ்சி நாசமாப் போறது.  எப்பப்பாத்தாலும் ஊரெலவாம் பேரெலவாமுன்னு பஞ்சாயம் பேசிக்கிட்டுருந்தாச் சோத்துக்கு வந்துருமா?  தெச்சத்துக்கு பண்ணாடி அதச்சொன்னாரு இதச்சொன்னாருன்னு வீம்பொல்லாப் புத்தாம் மிச்சம் வேண்டாஞ்சாமி இந்தி எச்சிப்பண்ணாட்டுன்னுச் சொன்னா இந்த மொடமசுருப்புடிச்சவங் கேட்க்றானா”ன்னு போன வனக்காணமுன்னு கோவத்துல சாமானஞ் சட்டெல்லாம் பொழங்கறாப்புல பொழங்கிப் போட்டு நொறுக்கிக்கிட்டிருந்தா அப்பத்தாம் பூட்ல பூந்த பச்சமுத்து,
“என்னாடிப்பிள்ள வூட்ல ரவுசு”ன்னு ஒரு அதட்டு அதட்டும்பிடி பண்ணாடிச்சி சத்தங்கித்தமெல்லாங் கைலப் புடிச்சாப்புல டக்குன்னு நின்னுப்போச்சி.




“யேமாமா ஆளுமேல  ஆளு உனுக்கு எத்தன ஆளு வுடறது, வந்து ஒருவாச்சோறு தின்னுப்புட்டு போறதுக்கென்னா?  ஓரெடத்துக்கு போனா மலாருன்னு திலும்பற வேலயே இல்ல.  பேஞ்சப் பாடுமில்ல காஞ்சப்பாடுமில்ல சிணுங்கு சிணுங்குன்னு விடிய விடிய தூறுது விடிஞ்சுந் தூறுது’  மொழுங்காலு வதியில எந்நேரங்காட்டுக்குப் போறது?  அந்தக்காரியுஞ் செவலையுங் கத்திக்கிட்டு கெடக்குங்க.  ரூ£ம் போனாத்தானே ரெண்டு தட்டுகிட்டு அறுத்து அதுங்க வவுத்துக்குப் போடமுடியும் எதோ அரப்படி ஒருப்படி பாலுகறக்குது அதயுங்கூட வெச்சிருவ மாட்டமிருக்குது”ன்னு ஒரேமுட்டா அவ அலுத்துக்கும்படி
“அதயேஞ்சொல்றப்பிள்ள போப்பிள்ள பொழுது மொளச்சும் மொளைக்காத மிந்தியே எவனாச்சும் ஒருத்தன் நாயங்கொண்டாந்துர்றான்.  அக்கப்போர எடுக்க முடியல”ன்னு இவுனுஞ் சலிச்சிக்கிட்டான்.



“அவுங்களுக்குத்தாம் பொழப்பில்ல உனுக்குமா?  வா வா வந்து இதக்குடி”ன்னு ஒன்றப்படி எருமத்தயிர்ல ஒரு வெண்ணத்தாழி பச்ச நெல்லஞ் சோத்த போட்டு நைப்பா கறச்சி ஊத்துனா பஞ்சவர்ணம்.  பச்ச மொளவாயக் கடிச்சிக்கிட்டு மொடக்கு மொடக்குன்ன குடிச்சக் கையோட கட்டுல்ல மல்லாந்துக்கிட்டாம் பச்சமுத்து.


“படுத்தமாயத்துல கொறட்ட வுட்றாத மாமா, ங்கெம்மாளுக்கும் ங்கெப்னுக்கும் நோம்பிக்கி வர்றாங்க வூட்ல ஒருச்செலவான செலவில்ல சந்தக்கிப் போவுனும் நெனப்பிருக்குதான்னா” அவ,



“நாலுமணி நாவநாதனுக்குப் போறம்பிள்ளச் சும்மா தொணதொணன்னு பேசாதப்பிள்ள”ன்னான் இவன்.


 “ச்சேரி, அப்பிடின்னா சித்தங்கூறியத்துல கெத்தலோடம் மருமவவருவா அந்தப் பருத்திக்கொட்டய ஆட்டி எடுத்துக்கிட்டு நானு மாட்டுக்கு தண்ணிக்காட்றதுக்குள்ள நிமுசம் ஓடியாரச் சொல்லு.  அங்கயிங்க நீட்டி நெளிச்சிக்கிட்டு நிப்பா சட்னு தொறத்திவுடு சந்தைக்கு போறப்ப மறக்காம வூட்ட தொறப்பு போட்டுட்டு தொறப்புக்குச்சிய தங்கம்மா அப்பாயிக்கிட்ட குடுத்துட்டு போம்மாமா”ன்னு


 பஞ்சவர்ணம் பக்குவஞ்சொல்லும்பிடி,


“ச்சேரிப்பிள்ள நீ மழைக்கிமின்ன கௌம்பு ரவைக்கி வந்து அடுப்பு பத்த வெக்கினும்மில்ல”

ன்னு பொண்டாட்டிய காட்டுக்குத் தாட்டிவுட்டாம் பச்சமுத்து.


வழி வழிய அலுமினியச்சருவத்துல தீனிய எடுத்துக்கிட்டு பஞ்சவர்ணம் காட்டுக்குப் பொறப்புட்டா.  ஊருக்னெத்த தாண்டி சின்னப்பொன்னி பூட்டு தென்னந்தோப்பத்தாண்டி இட்டேரிமேல ஏறுனா ஏமாந்தப்பிடி எட்டி அடிவெச்சதுல முட்டுக்கல்லுல நெக்குனு மோதி ‘ச்சளக்குனு’ சருவத் ருந்த தீனித்தண்ணி மேல வழிஞ்சோட,

“என்னாடி இட்டேரி எங்கொலாயிலயிருந்த இட்டேரி’  ஓராளு உள்றபூந்து போவமுடியிதா புண்டத்தலயெரிங்க ஓட்டு வாங்க க்குள்ள மட்லும் வந்து வந்து பொச்ச நக்கனானுங்க.  காரிய மானபின்ன அப்பரம் எதயுங் கண்டுக்கிறதில்ல..........கட்டியத்தின்னிங்க நம்புளுக்குத்தாஞ் “சங்களவம்” மின்னு ஊரு பெரியத்தனக்காரனங் ரெண்டு எத்தி ஏலம்போடுட்டு மாத்துடப்பு மாத்திக்கலாம்ன்னு ஆட்டுக்கே திருப்பியும் நடந்தா, தீனிக்கவிச்சி ஒண்ணுஞ்சொல்லிக்க முடியல

.
“திக்கத்தப்பான என்னா நாத்தம் நாறுது பாரு கழுதமுண்டைங்கக்கிட்ட தீனியில கறிச்சாத்த ஊத்தாதிங்கடி ஊத்தாதிங்கடின்னா எந்த வெள்ளாச்சி கேக்கறா நம்புளுக்கே நாத்தம் தாக்குப்பிடிக்க முடியிலியே அந்த வாயிலாச் சீவனுங்க எப்பிடி தண்ணி குடிக்குங்க”ன்னு தீனி ஊத்தற பொம்பளங்களையும் வுட்டு ரெண்டு வெளாசு வெளாசுன்னு வெளாசுனா



ஏதுரா பொடக்கலிப்பக்கம் பொண்டாட்டி ரவுசு கேட்குதுன்னு குட்லுமேல படுத்துக்கிட்டிருந்த பச்சமுத்து அரக்கப்பறக்க எந்திரிச்சி ஓடியாந்து,
“அதயேங்கேட்கற மாமா, அந்த இட்டேரி முட்டுக்கல்லு இடிச்சி கீழவுழுந்து மண்ட ஒடஞ்சிக்கும் நல்லவேள தப்பிச்சேன்.  புளிச்ச தண்ணி தெறிச்சி மேலுப்பூரா ஒரே சலதாரக்கப்பு அப்படியே  ஒக்காளிச்சிக்கிட்டு வந்து”ன்னு அவ இட்டேரியில வுழுந்த கதயச் சொன்னா பஞ்சவர்ணம்.


“அடடா ஏப்பிள்ள பாத்துபோவக்கூடாதா”ன்னுச் சாங்கியத்துக்கு என்னும்மோ ரெண்டுச்சொல்லு வெசாரிச்சியும் வெசாரிக்காத மின்ன,

“ச்சேரி சேரி நாலுடப்பா தண்ணிய வாத்து கழுவிக்கிட்டு ஒடுப்பிள்ள சீக்கர”முன்னு பறவா பறந்தாம் பச்சமுத்து.



“அடயிரு மாமா துணி மாத்திக்கிட்டு போறன்”னா அவ.



“இவுத்தியே அல்லாட்டம் போட்டுக்கிட்டிருந்தா சொசைட்டிக்கி பாலு ஊத்தனாப்பலதாம்போ”ன்னு வாசக்கால்ல குறுக்க நின்னுக்கிட்டு பொண்டாட்டிய உள்ற வுடாம வளைச்சி முடுக்கிறதிலியே குறியா இருந்தான் ...


“இதா மாமா சித்தி நவுர்ரியா சீலயும் லவுக்கவும் நனஞ்சிச் சதசதன்னு போயிரிச்சி.  ஈரத்தோட அப்படியே என்னமுட்டும் இருக்கறது?  ஒருநேரம் பாலு ஊத்தாட்டிப் போவுது மோருக்கடஞ்சிக் குடிச்சிப்புட்டுப் போறது’  இப்படியெல்லாம் உசாராப் பொழச்சிருந்தா இந்நேரம் நம்ப பொழப்பு கொண்டயத்துக்கு போயிருக்காது ஹூம்”ன்னு


 புருசன ஒரு போடு போட்டவ பண்ணாடி படுத்திருந்த உள்ளூட்ல பூந்து பொட்டியத் தொறந்து சாக்கிட்டு ஒண்ண எடுத்தா போட்டுக்கிட்டுருந்தத அவுத்து தூக்குமேல போட்டுட்டு மாராப்ப வாயிலக் கடிச்சிக்கிட்டு சோத்தாங்கையச் சாக்கிட்டுக்குள்ளவுட்டா பாக்காத பண்டமாட்டம் பச்சமுத்து பொண்டாட்டிய பொடக்கு பொடக்குன்னு பாத்துக்கிட்டிருந்தான்.  சனியம்புடிச்ச முந்தி நழுவி ரவுக்குனு கீழ வுழுவ ஐயய்யோன்னுப் பதச்சி அவ குமிஞ்சி முந்திய அள்ள கட்லடிய ச்சர ச்சரக்க என்னமோ ஏதோன்னு இவ உத்தப்பாக்க அவுத்த செத்த ஆட்டுக் கண்ணாட்டம் ரெண்டு முட்டக் கண்ணு பிதுக்கா பிதுக்கான்னு முழிச்சிக்கிட்டிருந்திச்சி.
என்னாப்பண்டுவ?



கற கறன்னு கண்ல பிச்சிக்கிட்டு வந்த கண்ணுத்தண்ணி வெரல்ல வழிச்சி சுண்டியெஞ்சிப்புட்டு வாயிப்போசம கப்புனு இந்துக்கிட்டா இன்னிக்கி இருக்கிற நெனப்பு அன்னிக்கி இருந்துருந்தா ரெண்டுபேத்தயும் செக்கப்புழிஞ்சி செனாருக் கௌப்பியிருப்பா முழுக்க நனஞ்சபொறவு முக்காடு எதுக்குங்கறாப்ல பச்சமுத்துக்கு பின்னியுங் குளுருவுட்டுப்போச்சி ஹூம் இன்னிக்கி நேத்தா அவம்பித்தியப் பாக்கறம்?



என்னிக்கி மீச மொளச்சி தொண்டக் கட்ச்சோ அப்பப்புடுச்சி அவுனுக்கு இதே தொழுவாடுதான்.  எத்தன வூட்ல கூரயப் பிரிச்சிருப்பான்?  எத்தனவூட்டு செவுரு ஏறிக்குதிச்சி ஈடு தின்னுட்டு வந்துருப்பாந்தெரியுமா?



ஓராடங் கழுத்த கத்திரிச்சிப் போறப்புலக் கூட ஆயிருக்குது’
இந்த குட்டக்கரமேட்ல சம்புநதி, சம்புநதின்னு ஒரு பொம்பள இருந்தா.  எந்நேரமும் அவுளுக்கு பத்துப்பேரோட தொடுப்பு’  அதும் இந்த சிறுவயசிப் பசங்கன்னா அவுளுக்கு இன்னும் நொம்போ பிரியம்.  கூட்டிக்கிட்டுப்போயி நேரு, கூறு, நெளுவு, சுளுவுத் தொச்சமில்லாமச் சொல்லிக் குடுப்பா.  சூது வாது தெரியாதவ ஒரு கவுடத்தவப் பாவம்.



இந்தப்பழம எப்பிடி இவுனுக்கு தெரிஞ்சிதோ இல்ல ஆருச் சொன்னாங்களோ.  நெனப்பெடுத்துக்கிட்டு பையன் ஒருநாள் தண்டு கட்டிக்கிட்டு அஞ்சாறு வலசுப்பசங்களோக் கூட்டிக்கிட்டு அவ வூட்டுக் கொட்டாயிக்கிப் போயிட்டாம்ப்பா கொட்டாயின்னா ஒசக்க செவுரேத்தி தூளம் போட்டு ஓடு மேஞ்சதில்ல.  நெடுக்குவார குறுக்கு வார ஓட்டி பனவோலையில மேஞ்சி எறவாணத்தச் சும்மா ரெண்டு மூணடி செவுத்துமேல எறக்கிவெச் சிருக்கறது இவமபோயி வூட்டுக்கு மின்னப்பாக்க கதவு உள்தாழுப்போட்டுருந்தது.  அப்பரம் இவம்பொறனபோயி எறவானத்தப் பிடிச்சி அப்படியே அலாக்காத்தூக்கி சந்துல தலயவுட்டு முட்டி “அக்கா அக்கா”ன்னு நல்லாப்பெருத்த ஒரவுட்டுக் கூப்புடும்படி அந்நேரம் அவெங்கியோ ஒரு குருவிக்காரப்பீத்துலோட முசுவா பண்ணயம் பண்டிக்கிட்டிருந்தா ...

சிவப்பூசயில இதென்றா கரடிக்கத்துதுன்னு அவன் குருவிச் சுடற டுவாக்கிய எடுத்து ‘டொப்புனு’ச்சுட்டு “ஆர்ராவன் ங்கோயால இன்னேரத்துல’  தெகிரியமிருந்தா எம்மின்னால வாங்கடாப் பாக்கலாமுன்னு கருவனாம் பாத்துக்க இந்த கூட வந்த கொலவாரிங்க.

எரவானத்த இவம்பொடனிமேலயே வுட்டுட்டு திக்காலிக்க ஒண்ணாச்சும்மா பிச்சிக்கிட்டு ஓட்டம்பிடிச்சிவுட்ருச்சிங்க.  கீழு நடுவார இவம் பெறங்கழுத்துல நல்லாப்பொருத்தி ஒக்காந்திக்கிச்சி.  தலய வுள்ள வுட்டு எடுக்கறதா? வெளியவுட்டு எடுக்கறதான்னு பையங் கதவடிய சிக்கன பெருச்சாளியாட்டம் தெணறி, திண்டாடி தவுளிச்சி நெண்டி, நெளிஞ்சி ஒராழு குழிப்பறிச்சி மொள்ள விங்கிணிச்சி எடுக்கறதுக்குள்ள நரம்பு பெரண்டு கழுத்துப் பெசகிக்கிச்சி.

அத்தன ஒவுத்தினியத்திலியும் வூட்டுக்கு திலும்பி வருவானா ......... பையன்?
ஆளு ஒசரம் வெவசாயக் கொட்டமரம் கிர்ருன்னு மொளச்சிக் கெடந்தது.  அதுல இவம் ஒட்டுமூட் நாயி கூலுக்கு காத்தாப்ல காத்துக்கிட்டு கெடந்துட்டு சாமத்துல போயி சம்புநதிய என்னாச் சேதின்னு கேட்டப்பொறவுதான் வந்து தாவுச் சேந்தான்.
மலமழுங்கி மாரியப்பனுக்கு ஒரளுக்கல்லு எங்கித்தி மூல?  இப்பேருப்பட்ட வல்லாளக் கண்டனுக்கு பொண்டாட்டி பேசறதும் புடிக்கறதும் பொச்சி மேல ஒட்ன மண்ணு’  ச்சும்மா தட்டிவுட்டுட்டு அவம்பாட்டுக்கு ஊருமேயப் போயிக்கிட்டே இருப்பாம் பாத்துக்க




இவங்கோளாற கண்டப்பின்னா இரும்புப்பூணு மாட்டாத கொறையா பஞ்சவர்ணம் என்ன என்னாவோ கண்டுக்கல மேல கண்டுசனு போட்டா.  கட்டுமானமும் பண்டிப்பாத்தா, ஒண்ணும் அவங்கிட்ட பொட்டு நவுத்த முடியல.  திருடனுக்கு காவுலு இருக்க முடியிமா?
என்னமோ ஆத்ரந்தாங்காம அப்பமூட்டுக்கு போயிட்டாளே ஒழிய அவுளுக்கு அங்க காலு கெடயில தங்கல.

ஆளு இருந்தாலே “ஊரே கேளு’  நாடே கேளு’ன்னு திரியறவன் ஆளு இல்லாத நேரத்துல கையக்கால வெச்சிக்கிட்டு சும்மா இருப்பானா?  அவன் நெனப்பு எடுத்துக்கும்படி பஞ்சவர்ணம் சொல்லாம கொள்ளாம பிருசமூட்டுக்கு மூட்டயக் கட்டனா.
என்னத்த நெனச்சி என்னா ஆவப்போது?  மவனாட ஆசைக்கு  பச்சமுத்து நேத்த ராவே கொடம் ஒடச்சி கொள்ளி வெச்சிட்டான்.  வண்டியச்சும் முறிஞ்சிப்போச்சி’ ஆயக்காலும் கழண்டுக்கிச்சி.  எந்தண்ட நவறதுக்கும் வாட்டமில்ல.


 இருக்க எடந்தெரியாம அவணுண்டு அவனோட வேலவுண்டுன்னு பொட்டாட்டந்தாங் கெடந்தாஞ் சின்ராசு ஒரு மூலையில.
அதும்போவ அவனுக்கு இந்தப் பொட்டப் புள்ளைங்க சமாச்சாரமே துப்பரவாப் புடிக்கவே புடிக்காது.  எங்கியாச்சும் பசங்களோடச் சுத்தயில போறது வாரதுங்கள நின்னுச் சித்த வேடிக்கப் பாக்கறானே அதோடச் சேரி மித்தது எதிலியும் தலப்பட்டுக்க மாட்டான்.  ஏன்னுக் கேளு’
ராசாமணி, ராசாமணின்னு அவனுக்கொரு கூட்டாளி குட்டப்பட்டி புதூருல இருந்தான்.  அந்த ராசாமணிக்கி வடிவேலு, வடிவேலுன்னு ஒரு சேத்தாளி அந்தூருலியே.  வூட்டுக்கு போவ, வர வடிவேலுப் பையந் தங்கச்சி அன்னக்கிளிக்கு ராசாமணி மேல ஒருக்கண்ணு’ இவுனுக்கும் அவமேல ஒருக்கண்ணு’


ரெண்டுங்களும் அவுத்த இவுத்த சேந்த வாக்குல திரிய வெவகாரம் முத்தி விசியம் வெளியத் தெரிஞ்சிப்போச்சி.  ரெண்டு வூட்டாளுங்கள இதுங்களச் சித்த வுட்டுப்புடிச்சிருந்தா ஆயிருக்கும்’  ஒரேடியா கிடுக்கிபோட்டு நெருக்கும்படி அதுங்க இதுதாஞ்சாக்குன்னு ஒப்புடிச்சுட்டுருச்சிங்க ஈரோட்டு கொடுமுடிக்கி.
பையமூடு அப்பிடியொண்ணும் வசதி வாய்ப்புள்ளவிங்க இல்ல.  என்னமோ அவிங்க பொழப்பு அன்னாடங்காச்சி’  வண்ணாம்மாத்து ராசாமணியவிக சித்தப்பங்காரனும் சின்னாயாளுந்தான் நின்னு ச்சேரி பையன் பிரியப்படறாம், பொழச்சிட்டுப் போவுடும்னு ப்ளசரு காரு கொண்டாந்து ஏத்தி தாட்டிவுட்டாங்க.  அதுங்க பாட்டுக்கு அதுங்க போயிரிச்சிங்களா, பொறவு பிள்ளய பெத்தவிங்களும், பையனப் பெத்தவிங்களும் விடிய விடிய தேடி விடிஞ்சிம் ஒரு வாரந்தேடனாங்க.

 சோடி கைக்கிச் சிக்கல போயிச் சாட்டாவுதுன்னு கம்முனு வுட்டுட்டு இருந்து கிட்டாங்க.


இந்த எடவெளியில ராசாமணியவிக சின்னாயிக்காரி அன்னக்கிளியவிக அம்மாளுக்கும் தடவழியில என்னம்மோ தகராறு பேச்சி மேல பேச்சி முத்தி, ஒண்ணு மேல ஒண்ணு போட்டு சண்ட வலுத்துக்கிச்சி.


“ஓடுகாலி முண்டயப் பெத்துப்புட்டு உனக்கென்னடி இவ்வளவு ஏத்தமின்னு” ஒருச்சொல்லு இவங்கேக்க, அவச் சொல்லு பொறுக்க மாட்டாம,

“பாழும் பிள்ளயப் பத்திதான இந்தப்பேரு’  லட்சம் உருவா செலவானாலுஞ்சேரி... பிள்ளய கொண்டாந்து தாவுச்சேத்தங்கடா’ எங்கையால அவக்கழுத்ததிருவி எஞ்சிப்புடறன்”னு மாரியம்மா சாமியாட, அப்பறம் பாத்துக்க’ மூல மூலைக்கு ஆளு பறக்குது.
முசுவா தேடி, துப்புக்கண்டு பிள்ளைக் கொண்டாந்து. குட்டப்பட்டியில போட்டு குப்பு குப்புன்னு குப்பி, கையோடக் கையா இன்னொருப் பையனச் சல்லுசாப் பிடிச்சி கட்டி வெச்சிட்டாங்க.  வூட்டவுட்டுப்போயி ஒரு வாரமா திரிஞ்சவிங்களுக்குள்ள எதனாலும் கசமுசா நடக்காமியா இருந்துருக்கும்?


  அதயெதயும் நெனச்சிப்பாக்காம பிருசன அத்தவ புதுப்பொண்ணுங்கறாப்பிடி அத்தப்பிள்ளை கட்டனவனோட பொழைக்கப் பொயிட்டா.  இந்த ராசாமணி அவள நெனச்சி தண்ணி வண்டியாவ ஊரு ஊருக்கு அல்லு எடுத்துக்கிட்டு திரியறான்.
அதப்பத்தி சின்ராசுக்கு பிள்ளைங்கன்னாவே செரியான கருக்கடப்பாலம்.
இந்தக்கூட இருக்கற சொலவாரிங்கதான் எதுத்தூட்டுப்பிள்ள உன்னப் பாக்குதுடா, எதுத்தூட்டுப்பிள்ள உன்னப் பாக்குதுடான்னு சும்மாயிருந்தவனஞ்...... சுக்க வெச்சி ஊதி வுட்டுட்டுடானுங்க இருக்க மாண்டாம இவுனும் ஒருநாளு அந்த பிள்ளய வெறுக்கு வெறுக்குன்னுப் பாக்க பட்டுக்கிச்சி.ஒரு வயசிப் பையனுக்கும் ஒரு வயசிப் பிள்ளைக்கும் ஒருத்தருமேல ஒருத்தருக்கு நெனப்பு எடுத்துக்கிச்சின்னா, அவிக பண்ற ரோலாயத்துக்கு அளவே இல்ல.  மொதல்ல அதுங்களுக்கு காலு தலையில பாவுதா?  எதுக்க வர்£ரது இன்னதுதான்னு ஒரு பிருவு, நெதானந் தெரியிதா?  அதும் இந்தக் காலத்துப் பிள்ளைங்க இருக்குதுங்களே சுத்த மோசம்.  அப்பிடியே தலகீழ நிக்கிதுங்க.



நெவுலடியா ஒரு மறப்புச் சிக்கறதுக்கில்ல ஒரு ஈடு பொரன்டு எந்திரிச்சித்தாம் போவுதுங்க.  ஆரு இருக்கறாங்க?  ஆரு பாக்கறாங்கன்னு துளிக்கூட ஒரு அஞ்சிக்க கெடயாது அந்த வாக்குலதான் இவுனும் அந்த வசந்தாப்பிள்ளய எவுத்திக்காலி கண்டாலுஞ்சோ... சந்து பொந்து, இண்டு இடுக்குன்னு நிக்காம அந்தட்ல ஒரடி தாண்டமாட்டான்.  அதென்ன நாயம் பேசுவாங்களோ மணிக்கணக்கா.  கேனம்புடிச்சவன் வளச்சி, வளச்சி ஒரே நாயம் பேசறாப்ல ஒண்னுக்குமத்த நாயத்த வாயி நோவ பேசுவாங்க.



தெக்க, வடக்க பாத்தமாதர எதுரெதுரு வூடுங்கறதனால என்னிக்கி எந்த வூடு தொறப்பு போட்டுருந்தாலுஞ்சேரி அன்னிக்கி அவுத்தான் ரெண்டுபேத்துக்கும் படுக்க தப்பு தண்டாவுக்கு துணிஞ்சதில்ல, ஆனா முன்னித்தி வௌயாட்டு உண்டு.  இப்பிடி புருசன் பொண்டாட்டி மாதர ஒண்ணும் மண்ணா பொழங்கிக்கிட்டு இருந்ததுங்க கத்திரிக்கா தெரண்டுப்போச்சின்னா பெறவு சந்தைக்கு வந்துத்தானே ஆவுணும்?


 பழம ஊருக்கே தெரிஞ்சிப் போச்சி.  பொரட்டாசி கடக்கெடிம சோரவப் பெருமாக் கோயிலுக்குப் போனதுங்க சாமியக் கும்புட்டுட்டு, மெரமணயச் சுத்திபுட்டு, வந்துருந்தா ஆயிருக்கும்?  பாலிப்பாறப் பொரட்டுல ஒருத்தரு மேல ஒருத்தரு சாஞ்சிக்கிட்டு ரெண்டுப்பேரும் ஒட்டுக்கா குந்தி பேசிக்கிட்டிருந்தத பச்சமுத்து நேருக்கு நேரா பாத்துட்டான்.
சண்ட கிண்ட புடிக்கல, வூட்டுக்கு வந்தவம் பையங்கிட்ட கூப்ட்டுச் சொல்லிப்புட்டான்.

“அடே அந்தப்பிள்ள நம்ம வூட்டுக்கு ஆவாது, அப்பிடி எங்கள மீறி எதனாலும் ஏடா கூடம் நடந்ததுன்னு வையி ங்கோயாளும் நானும் கவுறுப் போட்டுக்குவஞ் சாக்கிரிதி”ன்னு அறுதிகட்டி ஒரே தீருமானமாச் சொல்லிப்புட்டான்.என்னாப் பண்டுவ?  சின்ராசு ஒருவாரம் பத்து நாளா சோறுத் தண்ணி ஒண்ணும் எதயே எடுக்கல.  அப்பிடியே நாளுப்பட்ட நோவுக்காரனாட்டம் கெடயில வுழுந்துட்டான்.  இன்னதுதான் அவம்புத்தியில ஓடுதுன்னு இல்ல பலமாதிரியா ரோசன.


“இந்தாளு எதுக்கு அந்தப்பிள்ளய வேண்டாங்கறான்?


அவளுக்கென்னா கொறச்சலு?  கோணயா?  மானயா?  இல்ல ஒட்ட ஒடுசலாச்செவ ச்செவன்னு தக்கோளி பழமாட்டம்பள்ள’  கொணம் மனமும் சும்மாச் சொல்றதுக்கில்ல.  பச்சத்தங்கம் அதும் போவ பிள்ள என்னா அன்னி அசலா?  தூரத் தொலயா?
எடுத்துப்போட்டங் கழுத்த முறிச்சன்னு ஒரு மனுசன் இப்பிடி அரமாலும் ஒருப்பிள்ளய வேண்டாம்னா அதுக்குவொரு காரணம் வேணுமில்ல.  இவனா வெச்சிப் பொழைக்கறான்?  இன்னும் பத்து வருசமோ பதனஞ்சி வருசமோ ஓல வாங்கிட்டு மேலப்போயிருவான்.  எசவில்லாத தாவுல மாட்டிக்கிட்டு பொறனாட்டுக்கு நானுத்தான நமுக்கப்படனு”மின்னு பொடம் பொடன்னு சடஞ்சிக்கிட்டிருந்தப் பையன். முந்தா நேத்து
“ஏண்டா அப்பம்பையா அந்தப்பிள்ளய வேண்டாங்கற”ன்னு ச்சும்மா புடி புடின்னு எதுக்குப் புடிச்சிக்கும்படி பச்சமுத்து அந்தண்ட இந்தண்ட இண்ணும் திமிர முடியல.




பையங்கேக்ற கேள்விக்கி வருலச் சொல்லணுமா?  வாண்டாமா? செத்து பொணமாட்டம் வெரைச்சிப்போயி ஒக்காந்தியிருந்தவன் பாக்கற முட்டும் பாத்துட்டு படக்குன்னு குட்ட ஒடச்சாம் பாத்துக்க சின்ராசுக்கு அண்ட சராச்சரமெல்லம் காலடியில புடுங்குது.
அவனொண்ணுஞ் சொல்லல,

“இப்படித்தாண்ட மவனே உன்னையாட்டஞ் சிறுவயசுல அவங்கம்மாக்காரியிண்ட நாங்கொஞ்ச நாளு தடுமாறிக்கிட்டுருந்தண்டா அப்பா’  அவ ஒனக்கு தங்கச்சி மொற வேணுன்டா பால பாக்காட்டிப் போவுது சட்டிய பார்ராச் சீத்த சாமி”யின்னான்.



பையனுக்கு காலுக்கையெல்லாம் வெலவெலன்னு போயிரிச்சி வந்து கட்ட மேல வுழுந்த வந்தாம்பா.  இன்னையோட ரெண்டு நாளு ஆவுது மேல எந்திரிக்கவேயில்ல.  நெனச்சி நெனச்சி மருவறான் மருவறான் அப்பிடி மருவறாந் தன்னப்பா பீத்தநாயி அதச்சொல்லாம இருந்துருந்தா ஆயிருக்கும் ஹூம் வட்டி நம்ம சோத்தப்போட்டுட்டு அதுல துளி நறவல வெச்சாப்ல.  ச்சை’ இந்தப் பையனுக்கு மனசே ஒம்பல.


இப்பேருபட்ட அப்பனுக்கு மவனா பொறந்துட்டு இன்னமேட்டும் உசுரோடத் திரியதுல அர்த்தமில்ல”ன்னு படபடன்னு எந்திரிச்சாம்பா.
எந்திரிச்சப்பையம் போயி எரவானத்துல சொருவி வெச்சிருந்த பயத்த மருந்தப் பொட்னத்த எடுத்துப்பிரிச்சி தண்ணி வாத்துக்கற டப்பாவுலக் கொட்டி கொடி கொடின்னுன்னு டப்பா வழிய கரைச்சி தவுக்னு வாயில ஊத்த அண்ணாந்தாம்ப்பா அந்நேரம் எங்கியோ இந்த விருப்புக்கு மல்லலாமின்னு பொக்காலிக்கி வந்த பஞ்சவர்ணங் கண்ல இந்த சமாச்சாரம் பட வெடுக்குனு கையத் தட்டிவுட்டவ


 “ஐயோ மவனே இதென்ன வேல”  ஆர்ரா உனுக்கு இந்தப்பித்திய படிச்சிக் குடுத்தது?”ன்னு அவன மடியில போட்டுக்கிட்டு கண்ணீருவுட்டா “அம்மாப்பிள்ள வசந்தாள நாங்கண்ணாலம் பண்டிக்கிலைன்னாக் கூட தொலையிது’  அதப்பத்தி காரியமில்ல’  இந்த அப்பம்பையன நெனச்சிட்டா தாம்பிள்ள எனக்கு சாவலாமின்னே இருக்குது” ன்னு

 சின்ராசு பொலம்ப,

“அவங்கெடக்கறாண்டா ஆகாவழி’  அஞ்சாறு மொறக் கண்டவனா?  அவனுக்கென்னா தெரியும்?  மயிராத் தெரியும் “நாஞ்சொல்றன் நீக்கோளு’  அந்தப்பிள்ள உனுக்கு கொளுத்த மொற இழுத்து கொண்டி தாலிக்கட்றா”ன்னு பையன வழிக்கூட்டி அனுப்பி வெச்சா.

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

நாள்கிழமை  நல்லது கெட்டது  நோம்பி  நொடி
ஊரு சேதி  போக்குவரத்து  பயணம்
ஒருத்தி இருக்கிறாளேயென்ற ஓணத்தி  துளியுங் கிடையாது
தாரைவாத்த  கைப்பேசிக்கு  எப்படி மனமுடைந்து  போகிறோம்
செங்கோட்டய்யனென்பது பேருக்குத்தான் சொல்லாமல்
கொள்ளாமல்  பாதி ஆயுள்  பறந்தோடிவிட்டது    
கூடிகலவி  புரிந்த பொழுதுகளில்
அப்படியொன்றும்  மகத்துவமில்லை
ஆண்டுக்குள்ளொரு பேறு அதுவும்  சமைந்துவிட்டது
பணிமூப்பு  திறன்   நயந்து  வாழ்க்கை  துணைநலம்
அபிவிருத்தி  துறையில்  கூடுதல்  பொறுப்பு  வேறு
முதுகுக்கு  சோப்பு  போட கால்வழியும் உள்ளாடையை
கசக்கிப்பிழிய  வேட்டி   சட்டை  வெளுத்துகொடுக்க
கடன்வாங்கி  உடன் வாங்கி  பச்சை  வைக்க
பெத்து பிறப்பு -அண்ணன்  தம்பி -மாமன்  மைத்துனன்
வந்தால் போனால்  வடித்துக்கொட்ட
வாடிக்கையாளர்  சேவைக்கட்டணம்  சகாயம்தான்
தீவாளி தள்ளுபடி  சீலை  ரெண்டு
கிள்ளுச்சரம்  முழம்  பத்து  உருவா
அவளன்றி  ஓர்  அணுவும்  அசையாது
ஏர்ப் பிடித்தவன்  என் செய்வான்

பானை  பிடித்தவள்  பாக்கியசாலி