வியாழன், 13 நவம்பர், 2014

மன்மதன் ரதிக்கி மேலே வனத்தில்வாழும் குறத்தி கேளாய்!

கொம்பாடிப்பட்டி ராஜூ - கூத்துக் கலைஞர்


 ஓர் அற்புதமான கூத்துக்கலைஞன் என்பதற்கப்பால் ராஜீவைக் குறித்துச் சொல்ல நிறைய விசயங்களிருக்கின்றன.  இன்று பெண் வேடம் தரிப்பவர் அறுதி பெரும்பான்மையினர் அவரையே முன்னோடியாகக் கொள்கின்றனர்.  வேடம் ஒன்றுக்கு மாத்திரமல்ல, போடும் ஒப்பனை,  தோன்றும்பாத்திரம்,பாடும் சாரீரம், ஆடும் அடவென்று தனக்கென்ற ஓர் தனித்துவத்தை ஏற்படுத்திக் கொண்டவர். சென்னை லலிதகலா அகாதமியில் நடைபெற்ற  தமிழ்நாடு-கர்நாடக மாநிலங்களுக்கிடையேயான கலாச்சார பரிவர்த்தனை  நிகழ்வொன்றில் பாஞ்சாலி சபதம் கூத்து நடத்த வந்த  ராஜூ அவர்களோடு      மேற்கொண்ட உரையாடலில் பதிவான அவரது வாழ்க்கை பதிவிது!


-----------------எங்க சொந்த ஊரு சுண்டமேட்டூரு, ஆயி கோயிலு, பச்சாயி கோயிலு இருக்குதில்ல அந்த ஊரு.
அம்மா எனக்கு விவரந் தெரியுமுந்தியே  செத்துப் போச்சிங்க.  ஊருக்கு போனாலும், எங்க போனாலும், ஒரு ஒரம்பறைக்கிப் போனாலும்அப்பாதான் என்னய தோலுமேல தூக்கிவெச்சிக்கிட்டு வளத்துனாரு. நல்லபடியாத்தான் வளத்துனாரு.  அப்பையே சின்ன பையனா இருக்கும்போதே கூத்தாடிச்சின்னா கூட்டிக்கிட்டுப் போவாரு.  சால்ரா போடுவன். தூக்கி கக்கத்துல வெச்சிக்கிட்டு பாடச் சொன்னா அப்பையே பொட்டிக்கிச் சேத்தி பாடுவன்.  சுத்தி இருக்கறவங்கல்லாம் பேசிக்குவாங்க, பார்ரா இந்த  அறியா வயசிலியே பையம் பொட்டிக்கி சேத்தி பாடறதன்னு. 
அப்பா கட்ட பொம்மையில பேரு வாங்கனவரு. காருவள்ளிகாரங்கிட்ட பொம்மையாட்டிக்கிருந்தாரு.  அதுக்கு முன்ன  சிலிவாயன், வடுகப்பட்டி முத்துசெலவடகொன்னவாயன்இவங்களோடகூத்தாடிக்கிட்டிருந்தாரு. எங்கப்பாபட்டியிலகாவலுக்குபடுத்துக்கிட்டிருந்தாசெலவடகொன்னவாயந்தான் வந்து கூத்தாட எழுப்பிக்கிட்டு போவாராம்.  காலையில எங்க தாத்தன் கூத்தாடிப்பட்டு வர்ற எங்கப்பன தொரத்து தொரத்துன்னு தொரத்துவாராம்.  ஏன்னா ஆடு மேய்க்கப் போறவரு கூத்தாடிப்புட்டு களப்புல நெவுல்ல படுத்து தூங்கிப் போயிருவாராம், ஆட்ட தன்னப்பால வுட்டுட்டு.  தாத்தனுக்கு காடு, தோட்டம் உண்டு வசதியான குடும்பம்.  முன்சீப்பே எங்க தாத்தாவ டே கொளந்தையின்னு கூப்பட மாட்டாராம் கொழந்தைப்பான்னு தான் கூப்புடுவாராம்.  மணியாரமூட்டுக் காடும் எங்க காடும் எணக்காடு.  அப்பனுக்கு பொண்ணெடுத்தது பெரிய சீரகாபாடி.  நாங்க பொறந்தது ரெண்டு பசங்க.  எனக்கு நேரிளையவன் செத்துப்போயிட்டானாம்.  செம்மலைக்கி சித்தப்பா மவதான் எங்கம்மா.  பசங்க பொறந்ததும் பொம்பள லாயிக்கில்லாத ரூட்ல போவ, அப்பா வுட்டுட்டாராம்.  எனக்கு தெரியாது, எல்லாருஞ் சொல்வாங்க.  பொறவு அப்பா, இன்னோரு அம்மா ரெண்டாந்தாரங்கட்டி, அதுவும் ஒத்து வரல.  பொம்பளைங்க சமாச்சாரத்துல அப்பன் ரெண்டு பேத்துக்கு மூத்தவரு.  ரெண்டு பேத்துக்கு எளயவரு.  இது புடிக்காம எங்க சின்னம்மா அவுத்தியே தனியாவொரு வீடு பாத்து இருந்திச்சி.  எம்மேல ரொம்ப ஆசம்பா இருக்கும்.  தண்ணி வாத்துவுடும், சடபின்னி சிங்காரிச்சிவிடும்.  எதனா திம்பண்டம் வாங்கனா வெச்சிருந்து குடுக்கும், ஆனா எங்கப்பங்கிட்ட மட்லும் பேசறதில்ல.  இப்பிடி இருக்கப்பட்ட நாளையில சின்னு சின்னுன்னு ஓராளு காருவள்ளியில, சீனு வரையிறதில மீறன கையி.  அவுரு செட்டுக்கு ஆளு இல்லையின்னு வந்து கூப்புட்டாரு அப்பனும் நானும் சேரி வர்ரன்னுப்புட்டு போனம்.போயி மூணு மாசமாட்டம் பொம்ம கூத்து நடத்தனம்.  அங்க தெனமும் டெண்டக்கட்டி ரைட்டு போட்டுவுட்டார்ராங்களா வௌயாட புடிக்க குசாலமா இருக்கும்.  நல்லா அவ்வள அவ்வளசைசி பசங்கள செட்டு சேத்திக்கிட்டு ஓடறது, ஓடியார்றது, குதிக்கிறது இப்பிடி வௌயாடிக்கிட்டிருந்தம்.
 ஒருநாளு நானு துண்ட முறுக்கி கத்தி மாதிரி சொழட்டி அடிக்க ஒரு பையன் உசுரு நெலயிலபட்டு ரத்த ரத்தமா ஊத்துது.  ஊராரு அடிக்க தண்டு கட்டிக்கிட்டு என்னய தேடறாங்க.  ஆரந்த பையங் கூப்புடுங்க கூப்புடுங்கன்னு ஒரே புடியா நிக்கறாங்க.
 இந்த சம்பவம் நடந்தது கீழ்வால!.


 அப்பரம் பொம்ம வெக்கிற பொட்டியிருக்குமில்ல பெரிய பொட்டி, ராமரு பொம்ம, சீத பொம்ம, பொம்மய பூரா எடுத்துப்புட்டு அடியில என்னய படுக்க வெச்சி மேல பொம்மய அடுக்கிப்புட்டாங்க.  கேட்டவங்களுக்கு எந்த பையங்க எங்ககிட்ட இருக்கறான், இருக்கறவிங்க பூராம் பெரியாளுங்கன்னு சமாளிச்சிப்புட்டாங்க.  மணி ரெண்டு இருக்கும்.  வண்டிகட்டி ஒரு பத்து மையிலு தாட்டி பஸ்சு ஏத்திவுட்டாங்க.  அப்பறந்தான் எங்க பாட்டி வூடு பெரிய சீரகாபாடிக்கு வந்தம்.  எங்கப்பா காட்டு வேலைக்கிப் போனாரு.  நானு தறி நேயப்போனன்.  கைத்தறி நேசிக்கிட்டு இருக்கும்போது பள்ளிக் கோடத்துக்கு எதுத்தாப்ல குச்சி வூடு இருக்குதுல்ல அதுல நானும் ங்கப்பனும் சோறாக்கி தின்னுக்கிட்டிருந்தம்.  இருக்க வூடுல்லாம இப்பிடியே தறி நெஞ்சிக்கிட்டிருந்தா என்னா செய்யறது எப்பிடி பொழைக்கிறது வெசனம் புடிச்சிக்க, சேரி இந்த வூட்ட வாங்கி கெரயம் பண்டலாமுன்னு தீர்மானம் பண்டி வூட்டுக்காரங்கிட்ட எரநூத்தி பத்து உருவாயிக்கி வூட்ட வெல பேசிப்புட்டன்.  கையில சல்லிக்காசில்ல.  வெறுங்கைய மொழம் போட முடியுமா?  இங்க தறியோட்டிக்கிட்டிருந்தனே அதவுட்டுட்டு இன்னோரு மொதலாளியிண்ட போயி அண்ணா எனக்கு தறியோட்ட தெரியும், நாளையிலிருந்து நம்ப தறிக்கி வர்ரன்.  இப்பிடித் தான் வூட்ட வெலக் கூறிப்புட்டண்ணா, பாக்கி எரநூத்தி பத்து ரூவா குடுங்கண்ணு கேட்டன்.  அந்த மொதலாளி சேரி தம்பி காச காலையில தர்றன்.  ஆனா ரவைக்கி வந்து நீ தறிஓட்டு,அதபாத்துட்டுத்தான்பணந்தாருவன்னு கட்டாச்சாரமாச் சொல்ல, நானு ராத்திரியே போயி சாயிண்டு தறிக்காரன காக்காப் புடிச்சி விடியறதுக்குள்ள ஏழு தாரு ஓட்டிப்புட்டன்.  காத்தால மவராசன் பணத்த குடுக்க வாங்கியாந்து வூட்டுக்கு கட்டிப்புட்டேன்.    இப்பிடியே துண்டு தறியில இருந்து சர்வீசாவி எஸ்போட்டு (எக்ஸ்போர்ட்) தறிக்கு போவாரம்பிச்சேன்.  அந்தச் சமயம் வூட்டுமேல ஒரே ஓலக்கட்டயில்ல.  எல்லாங்கரயாந் தின்னுபுடிச்சி.  வூட்ட மேயணுமே !நேரா வேம்படிதாளத்துலஆட்டையாம்பட்டியாரு ஆட்டையாம்பட்டியாருன்னு ஒருத்தரு! அவுருக்கிட்ட போயி அண்ணா ஐநூறு உருவா கடந்தாருங்கண்ணா நம்ப தறிக்கு வாரன்னு கேக்க, அவரு யாருப்பா நீயி எந்தூரப்பா, சாலச்சட்டையா வந்து பணங்கேக்கறங்க, நானு இப்பிடித்தாண்ணா உங்களிண்ட தறியோட்ற பழனிசாமிக்கி பக்கத்தூட்டுக்காரன்னு சொன்னன்.  அவரு பழனிசாமிய கூப்புட்டு ஏப்பா பையம் பாக்கி கேக்கறான் வாங்கிக்கிட்டுப் போயிட்டு வராம இருந்துக்கிட்டா ஆரப்போயி நாங்கேக்கறதுங்க, பழனிசாமி நானாச்சிங்க பையனுக்கு சாமினுன்னு ஏத்துக்க, அப்பையே செட்டியாரு பணத்த எண்ணி குடுக்க, வாங்கிட்டு போயி, கன்னந்தேறியில எங்க சின்னாயி புருசங்காட்ல கரும்புசோவ இருந்திச்சி,  வண்டியில ஏத்தியாந்து, வூட்ட நல்ல வெல்ல அச்சுமாதர கிர்ன்னு மேஞ்சிப்புட்டன்.  காச வாங்கியாந்து மூணு நாளு வேலைக்கிப் போவல. மூணா நாளு போனன். செட்டியாரு என்னடா தம்பி காச வாங்கனதும் ஆள கண்ல காங்க முடியலன்னு ஆவேசப் பட்டாரு!  நானு இப்பிடித்தான்னா வூடு மேயத்தாம் பாக்கி கேட்டன், நேத்து வூட்டு வேல முடிஞ்சது, இன்னமேட்டு வேலைக்கி ஒழுக்கமா வந்துருவேன்னு தவுமானஞ்சொல்ல, அவருஞ் சேரிங்க அங்க போயிக்கிட்டிருந்தன்.
 கொம்பாடிப்பட்டி அம்மங்கோயிலு நோம்பிச் சாட்டியாச்சின்னா அந்தாண்ட மூணு நாலு மாசத்திக்கி ஒரு நாளுவுட்டு ஒரு நாளு   கூத்து ஆடியேருப்பாங்க.  அந்தெட்டு கூலிப்பட்டி சுப்ரமணி, குருக்குப்பட்டி கணேசன் இவிங்க ரெண்டு பேருதான் இவத்த கூத்துக்கு காணியாச்சி, நல்ல பேருங்கூட.  குருக்குப்பட்டி செட்ல அப்ப சோரக ஆறுமுகம் இருந்தாப்ல.  ரெட்டச்சட போட்டு பொண்ணு வேசங்கட்டி சண்டாளன் வெளிய வந்தா இன்னஞ்சித்த பாத்தாவாச்சின்னு இருக்கும்.  அன்னாடம் நாங்க தறி ஓட்டற பசங்க ரவ்வு சிப்ட்டு பாக்கறவங்க ஒரு மணிக்கு மோட்டார நிறுத்தவம். டீ குடிக்க வந்து அப்பிடி ஒசுருக்கா நின்னு கூத்து பாப்பம்.  அந்த மாதர ஒருப்பூட்டு, அம்மங்கோயில்ல செகநாதஞ்செட்டு கூத்தாட, போயி பாத்துக்கிட்டுருந்தம். அவஞ் செட்டு சூரவேசக்காரன் மெய்யழகனுக்கொரு பொறந்தவன், அவம்பேரு ஆறுமுகம், ஆளு நல்ல செவப்பு கூளயா பந்தடிச்சாப்ல இருப்பான்.  அவெனங்கியோவொரு சண்ட தகராறுல ஒருத்தம் மண்டயப் பொளக்க, போலிசி கேசாவி போலிசிக்காரங்க ஆளுக்கு வலப்போட்டு தொழாவிக்கிட்டு கூத்து டேசிக்கே வந்துட்டாங்க.  செகநாதனும் சூரவேசக்கார மெய்யழகனும் என்னாப் பண்டனாங்க, இந்த ஆறுமொகத்துக்கு தாவணி பாவாட கட்டி சாரி வேசத்த போட்டு சவையில வுட்டுட்டாங்க போலிசு ஆள துப்பு காங்க முடியாம சித்தங்கூறியும் தொழாவிப்புட்டு போயிட்டாங்க.  வேசம் போட்டு வெளிய வந்த ஆறுமொவத்துக்கு கட்ட தொண்ட!
 “செந்தார்மலர் பாதனே வந்தேன் குருநாதனே” ன்னு பாட எனக்குன்னா கர்ண கொடூரத்த கேக்க மனம் ஒப்பல.  பசங்கள வாங்கடான்னு இழுத்துக்கிட்டு, எப்பயும் குந்தி பொறுமையா கூத்த பாக்கறவன் அன்னைக்கிங்க இந்த ஆறுமொவம் வேசத்த பாக்கப் பொறுக்காம பாதியிலேயே தறிக்கி மோட்டார் போட பொறப்பட்டுட்டன்.  போயிதான் தறி ஓட்ட முடிஞ்சிதா?  முடியல.  ஓடாத எண்ணமெல்லாம் பொந்தியில ஓடுது.  மனசே ஒரு நெலயில இல்ல.  என்னடா இவனெல்லாம் வேசம்போட்டு கூத்தாடும்போது, நம்பளால முடியாதா,  அப்பிடின்னு. ராத்திரி எப்படியோ விடிஞ்சது, விடிஞ்சி போயி படுத்தா கண்ணக் குத்தனாலும் தூக்கம் வல்ல.  நானுத் தூங்கவுமில்ல.  துருவா போனன் செங்கோடம் பாளையம், சுப்ரமணிக்கிட்ட  கூத்துக்கு வர்ரன்னு கேக்க. அதுக்குமிந்தியே சுப்ரமணி ஓராடஞ் செட்டுக்கு ஆளுப் பத்தலைன்னு அப்பங்கிட்ட வந்து கருப்பண்ணா! கருப்பண்ணா! பையன ஆட்டத்துக்கு வுடு கருப்பண்ணா! தொழிலு அவனுக்கு அமையுமுன்னு கேக்க, அப்பன் என்னோட போவுட்டுமிந்த கூத்து,  பையனுக்கு அது வேண்டாமுன்னு ஒரே தீர்மானமாச் சொல்லிப்புட்டாரு.  அட அப்பன் இப்பிடி சொல்லியிருக்க நாம்ப போயி கேட்டா நல்லாயிருக்குமான்னு நானு ஓசிக்கல.  நேரா போனன்.  ஏப்பா என்ன வந்ததுன்னு கேட்டாரு.  கூத்துக்கு வரலாமுன்னு இருக்கறன்ணான்னேன்.  கூத்து பாக்க வர்றியா, இல்ல கூத்தாட வர்றியான்னாரு.  கூத்தாடத்தாண்ணா வரலாமுன்னிருக்கறன்னேன்.  டேயெப்பா என்னா திடீருனு இந்த கூத்து மேல பிரியமுன்னு கேக்க, நானு இப்பிடி, இப்பிடித்தான்னா சமாச்சாரம் நேத்து ராத்திரி மெய்யழகந்தம்பி பொண்ணு வேசம் போட்டு ஆட, அதப்பாத்ததுந்தாண்ணா அவனெல்லாம் பாவாட தாவணிக்கட்டி பொண்ணு வேசம் போடறானே நாம்ப போட்டா என்னான்னு  அதும்பேர்லவொரு நாட்டமின்னேன்.  சேரி அப்பிடின்னா, உறுதியா வாரயான்னாரு, உறுதியா வர்ரமின்னேன்.  


அவரு சமாவுல கூடலூரு மாரிமுத்துன்னு ஓராளு நம்ப தென்னாட்டுல சோகக் கட்டத்துக்கு அவருதான் மெயினு.  அவரவுட்டா வேற ஆளில்ல.  மாரிமுத்து, அரியானூரு பழனிசாமி, சாத்தனூரு வெள்ளையன் இவிங்க மூணு பேருந்தான் சாரி வேசம்.  வேசங்கட்ட என்னென்ன பொருளு வேணுமுன்னேன், என்னா வேணும்? ரெண்டு சவுரி சீல சாக்கிட்டு பாவாட வேணும்.  சலங்க வேணும் அதுக்கூட வேற ஆருக்கிட்டயாச்சும் எறவலு வாங்கிக்கலாம்.  சொன்னதயெல்லாம் எடுத்துக்கிட்டு பொறைக்கி பாலம்பட்டி பெருமாக் கோயில்ல ஆட்டம் நேரமா வந்துருன்னாரு.  அங்கிருந்து வூட்டுக்கு வந்ததும் பக்கத்தூட்ல சலங்க காயி வெச்சிருந்தாங்க. ஒரு காயி ஒண்ற உருவாயின்னு அறுவது காயி வாங்கி சலங்க செட் பண்டன கையோட சீல, சாக்கிட்டு, பாவாடயும் எடுத்துவொரு பையில தயாரா வெச்சிக்கிட்டு மத்தியானம் ரெண்டு மணி வரைக்குந் தூங்கனன்.  அட நேரமா வர்ரச் சொன்னாங்களேன்னு எந்திரிச்சி கௌம்பி அரியானூரு போயி அங்கிருந்து பாலம்பட்டிக்கி மூணு மணிக்கெல்லாம் போயிட்டன்.  பஸ்சவுட்ட எறங்கனதுந்தான் நெனப்பு வந்திச்சி, அடடா பெருமாக் கோயிலு கூத்துன்னாரே, கோயிலுக்கிட்ட கூத்தா, ஊருக்குள்ள கூத்தா ஆடற எடம் எவுத்தன்னு கேக்காத வுட்டுட்டமே, எதக்கண்டு தாவு சேர்றதுன்னு ஒரே தடுமாட்டமாப் போச்சி.  சேரின்னு டாப்பிங்கிலியே விசாரிச்சேன்.  அவிங்க கெழபொறமா ஒரு பர்லாங்கு நடந்துபோ, ரோட்டோரம் போரிங்கி பைப்பிருக்கும் அதுக்கு எதுப்புற இருக்கற கூர வூட்டுக்காரமூட்டாருதாங் கூத்துவுட்ருக்காங்கன்னு வெவரஞ் சொன்னாங்க. மொள்ள தடம் புடிச்சேங் கூற வூட்டுக்கு. எவுத்தயிருக்கறாங்களோ ஆளுங்கவொருத்தருங்காணமே!நாம்பதாவொரு வேகத்துல நேரங்கெட்ட நேரத்தல வந்துட்ட மாட்டமிருக்குதுன்னு பலத ஔப்பிக்கிட்டு...... அங்க போனா சால்ரா போடறவனும், பொட்டி மீட்றவனும் கோரப்பாய விரிச்சுட்டு படுத்துக்கிட்டிருந்தாங்க.  எங்கியோ கூத்தாடிப்புட்டு நெட்டா மக்யாநாத்து ஆட்டமுட்டவிங்க வூட்டுக்கே வந்துட்டாங்களாட்டமிருக்குது.  எந்த கூத்தாடிங்களுக்கு என்னைய தெரியாதிருக்குது, அம்மங்கோயில்ல கூத்தாட வார அத்தன ஆட்டக்காரனுக்கும் பவ்வத்துஉருவா பின்னுக்குத்துவன்.  நானு ரொம்ப ரசிப்புத்தம்மையோட பின்னுக்குத்தனது அக்ராவரம் ராமன். பாருங்க நம்ப மாது செட்ல குந்தி வேசம் போடுவாரு, அப்பறம் நாம்ப பாப்புக் கோமாளி. எந்த ஜமா வந்தாடனாலும் ஓராளு தொச்சமில்லாம ஓராளு தொச்சமில்லாம பின்னுக்குத்துவன்.  அதனால சுப்ரமணி செட்டுல அன்னைக்கி வந்த பொட்டிக்காரனும் மத்தாளக்காரனும் என்னய நெப்பு கண்டு, ஏப்பா ராசு எங்க வந்த? என்னா இவ்ளத் தூரமின்னு கேக்க, ஏப்பா என்னாப்பா இவ்வளத்தூரமின்னு கேக்கறீங்க நானும் ஆட்டத்துக்குத்தாம்பா வந்துருக்கறன், நீங்கயென்றான்னா எங்க வந்த? எவத்த வந்தன்னு? இப்பிடி சிலப்பமா கேக்கறீங்கங்கும்பிடி அவிங்க அடடா ஆட்டத்துக்கு வந்தபரவால்ல எடு, வா வா வந்துயிப்பிடி படுன்னு அந்த பாயில எடமுட்டு என்னையும் படுக்க வெச்சிக்கிட்டாங்க மணி ஆறாச்சி, ஏழு, எட்டாச்சி ஒம்போது மணிக்கு ஒவ்வொருத்தரா வந்து சேந்தாங்க. 

 செட்டு மெயினு பொண்ணு வேசக்காரனிருந்தானே கூடலூரு மாரிமுத்து! அவனும், சூரவேசம்போடற மெய்வேலும் ராத்திரி மணி பத்தே காலுக்கு லாடங்கட்ன தோலு செருப்பு போட்டுக்கிட்டு, சும்மா நறுக்கு நறுக்குன்னு வர்ராங்கப்பா.  அன்னநேரமுட்டும் வந்தவிங்க ஒருத்தரு பாக்கியில்லாம வாத்தி வரங்குடுத்த சுப்பிரமணி அவிங்க ரெண்டு பேத்தயும் ஏண்டா இவ்வளநேரங்கழிச்சி வர்றீங்கன்னு ஒருவார்த்த கேக்கல.  வந்தும் வராதமின்ன அவிங்களுக்கு கைக்கி தண்ணி குடுங்க வந்து சோறுங்குட்டுமுங்கறாரு.  சாப்ட்டம் போனம்.  என்னடா வேசம் போடறியான்னு ஆளத்தூக்கி கனம் பாத்தாரு.   நானு வுடல, என்னான்னா இப்பிடி கேக்கற வேசம் போடதான் வந்துருக்கறன்னன்.  சேரி இரு பாக்கலாம் என்னா அலங்காரம் வெக்கறாங்கன்னு பாத்துட்டுச் சொல்றன்னு டேசிக்குள்ற போயிட்டாரு.  ராமகறவத்தான் பாப்பு வெளிய வந்தான்.  ஆசி கேக்கக்குள்ள என்ற ரசிகன் ராசு இருக்கறாப்ல உள்ள அவர வரச்சொல்லுங்கன்னான்.  நானுப் போனன் வணக்கண்ணான்னன்.  ஏப்பா நீ செட்டுக்கு சேந்த ஆளுதான?  பாட்டி வயசிக்கி வந்துட்டா கூத்துவுட கூத்தாடிங்கள தேடிக்கிட்டு திலும்பனன்.  பாலம்பட்டியில கூத்துன்னாங்க, உங்கள பாத்துட்டு வெத்தலப் பாக்கு குடுக்கலாமின்னு...
ஆமா உங்களுக்கு வருணமால தவிசி கூத்து ஆடத் தெரியுமான்னாரு. 
நானு அன்னைக்கித்தான் சவையில போயி மொத தபா நிக்கறன். இருந்தாலுங் கூச்ச நாச்சமில்லாம என்னாங்க இப்பிடி சொல்றீங்க, பிரமாதமா ஆடுவங்க, வருணமால தவிசி எங்களுக்கு தண்ணி பட்ட பாடுங்கன்னன்,  எங்க ரெண்டடி பாட்டு பாடுன்னாரு பாப்பு.  நாலடி பாட்டுத்தாம் பாடனன், படுத்திருந்தவரு எந்திரிச்சிவந்து சால்ரா போட்டாரு கூலிப்பட்டியாரு.  நானு படக்குன்னு நாலடி பாடி நிறுத்தனதும், பாட்டு ருசனையில சுப்ரமணி அட ஏண்டா நிறுத்தன பாடறா, வேசமாக இன்னும் நேரமிருக்குதுன்னாரு.  அரமணி நேரம் பாடனன்.  வருணமால புள்ள இல்லாத கொறயில புருசங்கிட்ட சொல்லி பொலம்பறது, அண்ண பொண்டாட்டிக்கிட்ட அழுவறதுன்னு வுட்டு பொளந்து கட்டனன்.
அருமப்பா பிரமாதமா பாடற! நல்லா வருவ.  இன்னைக்கி என்னா அலங்காரம் அதச் சொல்லுன்னாரு. 
அண்ணா அதுக்கு வதுலுச் சொல்ல எங்க வாத்தியாரு இருக்கறாரு அவர வரச் சொல்றன்னு டேசிக்குள்ள வந்துட்டன். 

என்னா கூத்து வெக்கிறாங்களோ, ஆரு கூத்துவுட்டவங்களோ நாம்ப என்னத்தக்கண்டம்.  அத தூக்கிட்டு நாம்ப ஏம்பா திரியணும்?
அலங்காரம் ஆரவல்லிச் சண்ட வெச்சிட்டாங்க. ராசுக்கு பொண்ணு வேசம் போட்டுவுட்டு ஏழு பொம்பளைங்களோட ஒரு பொம்பளையா முடுக்குன்னவரு, மறுக்க என்னா நெனச்சாரோ, ஏப்பா ராசு உனக்கென்னாஆடத்தெரியுமா? பாடத்தெரியுமா?நடதான்நடக்கத்தெரியுமா இல்ல வசனந்தாம் பேசத் தெரியிமா? அவிங்களோட வந்து என்னாப் பண்டுவ, நீ பல்வருசா போட்டுக்க. கண்ணே பல்வருசான்னா வெளிய ஓடியாந்துருன்னாரு வாத்தியாரு..
சேரிப்பான்னுட்டு வேசம் போட்டன்.  அன்னைக்கி தாரமங்கலம் மாது வந்துருக்கறாப்ல. என்னு வேசத்தப் பாத்துட்டு, என்னா தம்பி கெழவி கட்ற சீலய எடுத்தாந்துருக்கற வயசிப்பையன், முகமான வேசம் பீத்த சீல வேண்டாமடா இருன்னு அவரு கொண்டாந்த பாவாட தாவணி அவரு கொண்டாந்த டோப்பாவ வெச்சி நல்ல கட்டபொம்மையாட்டம் கும்முனு சிங்காரிச்சி வுட்டாரு மவராசன்.
ஏப்பா சுப்ரமணி நல்ல வேசத்த உள்ற குந்த வெச்சிக்கிட்டு   நீங்களா ஔப்பரிச்சிட்டிருக்கறீங்க! அவன வெளியவுடங்கப்பா!வௌயாடட்டமுன்னு பறக்கறாங்க கூத்து பாக்க வந்த சனம்!.
ஆரவல்லிய பந்தயத்துல செவிச்ச அல்லிமுத்துவுக்கு வெற்றி பரிசு குடுக்கற கட்டம்.  எங்க உங்க பொண்ண கொஞ்சங் கூப்புடுங்கன்னாரு சுப்ரமணி.  ஆரவல்லி வேசக்காரன் கண்ணே பல்வருசா வாடி! வெளியன்னான்.
நானு உள்றயிருந்துக்கிட்டே “ஓ அம்மா, ஏம்மா பாதாள செறயில இருக்கறன்.  சூரிய வெளிச்சமே தெரியல! தாளு நீக்கி சிறையிலிருந்து என்னய விடுவிச்சாத்தாம்மா நானு வெளிய வரமுடியும் சிறைய நீக்குமா மொதல்ல”ன்னேன்.
அப்பையே கூடலூரு மாரிமுத்துக்கு சப்புன்னு ஆயிப்போச்சி.  நேத்து பேஞ்ச மழயில இன்னைக்கி மொளச்ச காளான்,  பவுடரு போட்டு முழுசா வேசமாடல, பூராக்கதையுந் தெரியுது! பல்வருசா பாதாள சிறையில இருக்கறதுந் தெரியிதேன்னு அவிங்க  புழுங்க, நானு சவைக்கி தர்பாரு ஆனன்.  சுப்ரமணி என்னய சும்மாவே நோண்டராரு, இதுதாம் பொண்ணா, இதுதாம் பொண்ணா, ஏம்பிள்ள முகஞ்சோந்தாப்ல இருக்குதுன்னு நானும் அவுத்த வெக்கப்பட்டு ஓடறது இவித்த வெக்கப்பட்டு ஒடறதுன்ன வெறும் பாவ்லா பண்றன்.
கதப்பிரகாரம் பின்ன மரச்சோலைக்குப் போற கட்டம்.  எலுமிச்சங்கனி பூச்செண்டு ரெண்டயுங்குடுத்தாங்க.  அதுயெதுக்குன்னு சொல்லல.  பாக்கலாம் இவிங்க கீட்டகத்தன்னு ஒண்ணும் பேசாம வாங்கியத மடியில வெச்சிக்கிட்டன் பின்ன மரச்சோலைக்கிப் போனன்.  எம்பிருசனுக்கு தாவம் எடுத்துக்கிச்சி. கண்ணே பல்வருசா எனக்கு பச்ச தண்ணி தாவம் பல்லொணந்து போகுது, நல்ல தண்ணி தாவம் நாவொணந்து போகுதேன்னு வசனம் பேசிப்புட்டு சுப்ரமணி ஒருத்தருக்குங் கேக்காதபடிக்கி “ராசு பூச்செண்டு மோந்தா தாவமடங்குமின்னு சொல்லி குடு”ன்னு எங்கிட்ட குசு குசுன்னு சொல்றாரு, எலுமிச்சங்கனி எதுக்கு, பூச்செண்டு எதுக்குன்னு அவருக்கு பிருவா தெரியல.  நானு என்னாச் செஞ்சன், ஓ மன்னா பிராணபதி! எங்கம்மா எனக்கு சொன்னது, இதோயிந்த எலுமிச்சங்கனியை ரெண்டாக பாகம் செய்து சாறு பிழிந்து குடித்தால் போகுவழியதனில் உண்டாகும் தாகம் தணியுமென்று! அந்தப் பிரகாரமே சாமி இந்த கனிய பாகஞ்செய்து புசிப்பீர் ன்னு சொல்லிப்புட்டு அண்ணா சமாச்சாரத்த இப்பிடித்தாண்ணா செய்யுனுமுன்னு அவரு காதுல சொன்னான்.  பின்ன மரச்சோலையில இன்னங்கொஞ்ச தூரம் போனதும் எம்புருசனுக்கு தலயச் சுத்தி மயக்கம் வந்துட்டது. “பெண்ணே பல்வருசா பூமி சொழலுதடி, புத்தி தடுமாறுதடின்னாரு,
சுவாமி இதோயிந்த பூச்செண்டை முகந்து பார்த்தீர்களானால் உண்டான மயக்கம் தன்னால தீருஞ்சுவாமின்னு நானு பூச்செண்டு எடுதுக்குடுக்க மோந்துப் பாத்தவரு,  மயக்கமல்ல பெண்ணே! இது மாரகம், நான் பிழைக்கயினி வழியில்லன்னு ஒரே வார்த்த பேசனதும் சுப்ரமணி என்னு மடிமேல சாஞ்சி கண்ண மூடி படுத்துக்கிட்டாரு.  அல்லிமுத்து செத்ததும் பின்ன மரச்சோலையில அடுத்தாப்ல நானு இன்னத செய்யணும், இன்னார சந்திக்கணுமின்னு ஒருத்தருஞ் சொல்லிக் குடுக்கல.  என்னயத்தவிர மிச்ச பொண்ணு வேசக்காரனங்கெல்லாம் சுத்தி நின்னு வேடிக்கப் பாக்கறாங்க.  என்னாப் பண்றானோ ஏது பண்றானோன்னு மெதுவா சுப்ரமணி தலய அசாம மடியிலயிருந்து எடுத்து கீழவெச்சிட்டு எடுத்தம் பாட்ட.  கண்ணீரா கடவாயில ஒழுவுது!கொல்ல நினைத்தாளோ!கொலைகார ஆரவல்லின்னு மடிக்க நினைத்தாளோமாபாவி ஆரவல்லி!திருப்பி பாட்ட நிறுத்தவேயில்ல.
சனமுன்னா ச்சும்மா காசா கொண்டாந்து கொட்டி என்ற மடிய நப்பறாங்க.  கீழ படுத்துக்கிட்டு சுப்ரமணி பாடு, பாடு சொனையான் எறங்குது பாடுங்கறாரு.  அன்னராவு கூத்து முடிஞ்சி வேசமழிச்சம்.  எல்லாருக்கும் சம்பளம் பிரிச்சாரு வாத்தியாரு.  என்னய கூப்புட்டு அம்பது உருவா சம்பளங் குடுத்தாரு.  மடியில வுழுந்ததே சில்லரக்காசி அத முடிஞ்சி வாத்தியாரு பொட்டியில வெச்சிருந்தன்.  அதயும் எடுத்து இந்தாடா ராசு பத்ரமா வெச்சிக்க பஸ்ல கிஸ்ல தூங்கி காச தொலைச்சிப்புடாதன்னு புத்தி சொன்னாரு, கேட்டுக்கிட்டன். வூட்டுக்குப்போயி மூட்டய பிரிச்சிப் பாத்தன் முந்நூத்தியம்பது உருவா இருந்திச்சி.  நூத்திருவது உருவாயிக்கி சூட்கேசி பொட்டி வாங்கிக்கிட்டன்.
மக்யாநாத்து திண்டமங்கலம் ஆட்டம்.  பழனிமாதர பெரும் பெருத்த கூத்தாடிங்க இருக்கப்பட்ட ஊரு.சலவ வேட்டி, சலவ சர்ட்டு மாட்டிக்கிட்டு கௌம்பனேன்.  பெருமன்னாலூம் பெரும சாமி எனக்கு காலு தரையில பாவல.  என்னையே திரும்பி திரும்பி பாத்துக்கறன்.  காத்தாலயே சம்பளம் பிரிக்கறப்ப, பாரு எளம்பிள்ளையில பன்னியாண்டிங்க இருப்பாங்க காதுகுத்திக்க, ராத்திரி காதுமணியில்லாம பொக்குனுயிருந்திச்சின்னாரு வாத்தியாரு.    ஓமலூரு பஸ்சவுட்ட எறங்கி காதுமணி ரெண்ட வாங்கிக்கிட்டேன். திண்டமங்கலம் போனம்.  இவரு முந்தியேப் போயி அம்பாள் கல்யாணம் அலங்காரம் வெச்சிட்டாரு.   மூணுபேரு மெயினு வேசக்காரங்க,  இருக்கும்போது எனக்கென்னா வேசங்குடுக்கறதுன்னு வாத்தியாரு சித்தங்கூறி தடுமாறிப்புட்டு ராசு நீ தாயி வேசம் போட்டுக்க, பரிமளகந்தி! முன்ன போ ஒண்ணும் ஆட வேண்டாம், பாடவேண்டாம்! தர்பார முடிச்சிக்கிட்டு, “என் மைந்தர்கள் இருவர்களிரண்டு பேர்களும் வீர விளையாட்டுக்கள் விளையாடிக்கொண்டிருப்பாங்க தாயார் நான் அழைத்ததாக அதி சீக்கிரமாக அழைத்து வாருங்கள்”ன்னு சொல்லிப்புட்டு வந்துரு அவ்வளத்தான் வேலன்னாரு.  வேசம் போட்டன். புதுசா வாங்கன காதுமணிய கண்ணமூடிக்கிட்டு ரெண்டு காதுலையும் குத்தி பட்ன மாட்டிக்கிட்டன். வெளிய போனன் தெரிஞ்சத ஆடனன்.  அறுவது உருவா பின்னுக்குததனாங்க.  முன்னப் போனாங்களே செட்டு மெயினு வேசக்காரங்க மாரிமுத்து, வெள்ளையன், பழனிசாமி இவிங்க ஆருக்கும் ஒருபைசா சொனையாங்குத்துவாரில்ல.  ஆடி தர்பார முடிச்சிக்கிட்டு உள்ர வந்தன்.  ரெண்டு பக்கத்து தோளுபட்டயும் நனஞ்சி, சாக்கிட்டும் நனஞ்சி போச்சி! சோத்தாங்கையி காதுல சொட்டு சொட்டுன்னு ரத்தம் ஒழுதே இருக்குது.  சட்டுனு வேற சாக்கிட்டு மாத்திக்கிட்டு காத்தாட நின்னு வலிய ஆத்திக்கிட்டிருந்தன்.   இந்த மாரிமுத்து கிட்டவந்து  "முன்ன போயி நாலு பேரு ஆடனம் ஒருவா குத்துவாரில்ல! பொறன போயி மூணுபேத்தயும் மண்ட பண்டிப் புட்ட''ங்கறான்! மொவறயில எள்ளுங்கொள்ளும் வெடிக்குது.  நானு ஒண்ணுஞ்சொல்லல பேசாம இந்துக்கிட்டன்.  சந்திப்பு கட்டம் வந்திச்சி திலும்பி சவைக்கி போனன்.  பீஷ்ம வேசக்காரனும், விசித்திர வீரியன் வேசக்காரனும் இருக்க, எனக்கு மாத்தரம் ஒருத்தன் பத்து உருவாயகொண்டாந்து குத்திபுட்டு என்ற கைய புடிச்சி குலுக்கல,சுப்பிரமணிய கையப்பிடிச்சி குலுக்கி  என்னான்னு சொல்றான் மவராசன், புண்ணியவான் இன்னிக்கிச் சொன்ன மாதர இருக்குது "சுப்ரமணி இந்தபையம் மட்டும் உன்ற செட்டுல ஒரே வருசம் இருந்தான்னா, உன்ன அடிச்சி ஆட இந்த தென்னகத்துல வேற செட்டு இல்ல''ன்னாம்பா. சுப்ரமணிக்கு வாயி வெப்பிரிச்சிப் போச்சி.  ம்... ம்... செய்வான்னாரு.அடுத்த நாளு கள்ளக்குறிச்சி ஆட்டம் எல்லாம் அஞ்சர மணிக்கு கள்ளக்குறிச்சி பஸ்டாண்டுக்கு வந்துருங்கன்னு வாத்தியாரு சொன்னதும், அவிங்கவிங்க வூட்டுக்கு பொறப்பட்டம்.  அப்ப சுப்ரமணி சாவா வண்டி வெச்சிருந்தாரு.  ரயிலு மாதர பொக.  பொறன ஒருவண்டி போறதுக்கில்ல தடதடன்னு சத்தம் வேற. என்னய பொறன குந்த வெச்சிக்கிட்டாரு ராசு, நீயி கள்ளக்குறிச்சி வந்து சேர மாண்ட, மூணு மணிக்கி நம்ப வூட்டுக்கு வந்துரு, நாம்ப ஒட்டா போவலாமுன்னாரு. சேரின்னுப்புட்டு நானு வூட்டுக்கு வந்து தூங்கல, நேரா ஓராள புடிச்சிக்கிட்டு திருச்செங்கோடு வந்து தேர்முட்டிக்கிட்ட இந்தா வளத்தி டோப்பா முடி! முந்நூறு உருவாக்கி வாங்கனேன்.  வூட்டுக்கு போனன், தண்ணி வாத்தன் நேரஞ் செரியாயிருந்திச்சி.  கள்ளக்குறிச்சி போயிட்டம்.  அன்னைக்கும் சுப்ரமணி அம்பாள் கல்யாணமே வெச்சிட்டாரு.  அம்பாலிக வேசக்காரன் அரியானூரான் வரல.  வேசம் போட்டன், வெளிய போனன் நூத்திருவது உருவா பின்னுக்குத்தனாங்க.  சந்திப்பு கட்டத்துல, அவிங்க பாடிக்கிட்டிருந்தா, ஏப்பா நீங்களே பாடறீங்க அந்த பையன செத்த பாடச் சொல்லங்கறாங்க சவையில குந்தியிருக்கறவங்க.  மாரிமுத்தும் வெள்ளையனும் மொவறய திருப்பிக்கிட்டு நிக்கறாங்க.  நானென்ன செய்யறது?  உண்டான விருத்தம், உண்டான பாட்ட பாடனன்.  அவிங்கள நாங்கண்டுக்கல.  கள்ளக்குறிச்சி ஆட்டத்துல சுப்ரமணி சம்பளத்த ஏத்தி எம்பது உருவா குடுத்தாரு.  விடிஞ்சன்னைக்கி ஆட்டம் சாமக்குட்டப்பட்டி... நம்ப ராசாபாளையத்துக்கிட்ட.  அந்த ராவும் அம்பாள் கல்யாணமே அலங்காரம், அம்பாள் வேசம் போடற மாரிமுத்து வரல வாத்தியாருக்கிட்டயும் சொல்லல,  ஒருத்தருக்கிட்டயும் சொல்லல.  ராத்திரிப்புடிச்சே ஆளு மொவற சுண்டிப்போயி அரா சிவான்னு ஆருகிட்டயும் பேசிக்கல.  ஆளுக்கு என்னமோ பொந்தியில பொமைச்சலு.  சுப்ரமணி பழனிசாமிய அம்பாள் வேசங்கட்டுன்னா அவன் க்கும் நாந்தான்,  அம்பாள போடறானா? ன்னு ஒரே முக்கு முக்கிப்புட்டா. வெள்ளயன கேட்டா ஏப்பா நீயொருப்பக்கம்! நாந்தான் சிக்கனான்னு ஆளு தூரமாப் போயிட்டான்.  வேசம் போட்டு செலுத்தமுடியாமயில்ல, புதுவேசக்காரனுக்கு இவ்வளவு ரஸ்பீட்டு மயிரா? இன்னைக்கு ஆக்கிட்டு போட்டு புளுத்துட்டுமே! சவையில வுட்டு சனங்க மின்ன சமாச்சாரந் தெரியாம சரக்கு பத்தாம சின்னப்படட்டுமுன்னு ஒரு கெட்ட எண்ணம்.


என்னய கேட்டாரு, சுப்ரமணி. அண்ணா வேசம் போடத்தான் வந்துருக்கறன், எந்த வேசமுன்னாலுங்குடு போட்டுக்கறன்.  இன்ன இன்னத இப்பிடி இப்பிடி செய்யணும் விங்கிணிச்சி சொல்லு அந்தப்பிரகாரஞ் செஞ்சிபுடறன்னன். அம்பாள் வேசங்குடுத்தாரு.  மொத மொத பெருங்கொண்ட கதாநாயகி வேசம் போடறன்னு கொஞ்சம் அச்சமா இருந்திச்சி சுதாரிச்சிக்கிட்டன்.  சும்மா சொல்லக்கூடாது அத்தனாம்பட்டி சீனு சால்வன் வேசம், சுப்ரமணி பீஷ்மரு வேசம் ரெண்டு பேருச் சந்திப்பையும் திருத்தமா செஞ்சன்.  எல்லாத்துக்கும் நல்ல பேரு,  கூத்து எத்தாயிருந்திச்சி.  அந்த அம்பாள் வேசத்துலயிருந்து இன்னைக்கி வரைக்கும் சுபத்தர, சித்ராங்கத, சீத, தமயந்தி, பாஞ்சாலி ன்னு பெருங்கொண்ட வேசந்தான் கட்டியாடறன்.  "சீசீ இந்த வேசம் நல்லாயில்ல உள்ற போ'' ன்னு ஒரு சொல்லு கேக்காத அளவுக்கு தொழிலுப் பண்றன்.  தனியா செட்டுக்கட்டி பதனஞ்சி வருசம் ஆடிப் பத்துப்புட்டன்.  ஒண்ணும் சுத்தப்படல. இப்ப ஏகாபுரம் சுப்ருகிட்ட ஆடிக்கிட்ருக்கறன்.  வரும்பிடி பரவால்ல, மூணு பேரு சம்சாரத்த தாட்ட முடியிது. என்று தனது, வாழ்வானுபவத்தை தொழில் ரீதியாகவே பகிர்ந்து கொள்ளும் ராஜூ அவர்கள் சிறந்த கலைஞர் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.*

*********கலைஞனை அணுகுவதும், அண்டியிருப்பதும் அவனது உட்கிடக்கையை உள்வாங்குவதும், பின் வெளிச்சமிட்டுக் காட்டுவதும் சாமான்யமல்ல.  ஒவ்வொரு கணமும் அவனே அவனுக்கே புதுமையானவன், நிகரானவன். உள்ளதை உள்ளவாறே கண்டு நுகர்வதே சாலச் சிறந்தது.  மற்றங்கே நமது தேடலை, விருப்பத்தை கேள்விகளாக்கி வேண்டிய விடையெதிர் நோக்கி பரிட்சித்தோமானால்இ நாமங்கே பெறும் மதிப்பெண் பூச்சியமே!

https://www.youtube.com/watch?v=UEyYo9lXhng


பெற்றவள் என்றில்லை தண்ணீருக்கும் மூன்று முறை
தாளம் காலம் இசையாத அச்சிறுப்பிழையும் பொறுக்கான்
பொட்டி மூலிகைச் சிமிழ் கொண்டு நெறிதப்பி போகும்
மயில்ராவணனை தடுத்து நாயஞ்சொல்வான்
அதிவர்ண மாலையான ராசுப்பையன்
குற்றங்கடிந்து நீட்டும் அச்சுட்டுவிரல் கண்
ஒளிந்திருக்கும் ஆயிரமாயிரம் சித்ரவித்தை
குறி சொல்லும் நேர்த்தியில் குறத்தி தோற்பாள்
எத்தனையெத்தனை பாவங்கள் வேண்டுமுங்களுக்கு
கல்லெல்லாம் மாணிக்கமல்ல சொல்லெல்லாம் அச்சரமல்ல
அரங்காடும் நல்லத்தங்காள் பொம்மையைக் கேட்டுப்பாருங்கள்
சோமப்பானம் சுராப்பானம் தேவர்களுக்கு
பீ மூத்திரமொன்றாய் பிசைந்துண்டும் புத்தி வரவில்லை
ஓரவஞ்சனை பாராமுகம் லாரிமுன் தீப்பாய்ந்தது சீதை
வேடப்பையின் ஓட்டை வழி தொங்கும்
ஒற்றைச்சதங்கை குரலெடுத்து அரற்றுகிறது
யாகச்சேனை வேசமினி ஆர் கட்டுவதுகாலனக்கென்ன தாகம் மரியாதைக்குரியவர்களின் உயிரை எல்லாம் குடிக்கிறான்
..கூத்து கலைஞர் கொம்பாடிப்பட்டி ராஜு அகால மரணம் ...22-10-2014
கருத்துகள் இல்லை: