வெள்ளி, 22 மே, 2009

அக்கப்போரு - மு. ஹரிகிருஷ்ணன்


அறியாமையின் பாற்பட்டு எனக்கிருக்கும் சில கேள்விகளை வாசகர் மத்தியில் வைத்துவிட்டு அக்கப்போரை துவங்கலாமென்று நினைக்கிறேன்.
மகத்துவமானதொரு சனநாயகம் சமத்துவமாக நிலவி வருகின்ற நமது செந்தமிழ் நாட்டிலே மக்களுக்கான கலை இலக்கியத்தைக் கட்டிக் காப்பாற்ற இயல்- இசை - நாடக மன்றம் என்றதொரு அமைப்பு சீரும் சிறப்புமாக செயலாற்றி வருகிறது.
மேற்சொன்ன அதிகாரப்பூர்வ கலைவளர்ப்பு உரக் கம்பெனியின் செயலாளராக இளையபாரதி என்னும் கவிஞர் பெருமகனார் கொலுவிருந்து பரிபாலனஞ் செய்து வருகிறார்.
உடையவன் பரிமாறுகையில் அடிப்பந்தியில் இருந்தாலென்ன? கடைப்பந்தியில் இருந்தாலென்ன? என்று இந்த பாழாய்ப்போன ஏழை நிகழ்த்துக்கலைஞர்கள் (பனைமரத்து நிழலும் ஒன்று பங்காளி உறவும் ஒன்று என்ற விகல்பம் அறியாத தோற்பாவை, தெருக்கூத்து, கட்டப்பொம்மலாட்டக் கலைஞர்கள்)நாட்டில் என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது என்ற அரசியல் உணராது, சச்சின் திரைக்காவியத்தில், முன்னே இளைய தளபதி விசய் அண்ணன் தொந்தியும் தொப்பையுமாய் செனிலியா அண்ணிக்கூட குண்டு மாங்காத்தோப்புக்குள்ள வண்டுப்போல வந்தேனே என்று குத்தாட்டம் போட்டபடி காதல் பண்ணிக்கொண்டிருக்க பின்ணணியில் தகீர்தாஜுன திகீர்தாஜுன என்று ஓரடி ஆதி தீர்ப்பில் அடவு பிடித்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள் .கள்ளம் கவடற்று காத்திருக்கிறார்கள் தங்களது கலைச்சேவையுங் கவனங்கொள்ளப்படுமென்று........
"அம்மா நாயி சோறுக்குடிக்க மாட்டிங்குது '' என்ற மகனிடம்
" அப்பனுக்கு ஊத்துடா''என்று தீர்க்கும் பண்ணையக்காரிச்சி கதையைப்போல கடந்த 2006ல் சிலம்பரசன், விஷால், ஜெயம் ரவி, வினித், திரிஷா......இன்னுமுள்ள பெரியத்திரை., சின்னத்திரை கலை ஆளுமைகள் நுப்பத்தொரு பேர்களுக்கு இட்டதுப்போக மீதியொரு நான்கு கிராமியக்கலைஞர்களுக்கு கலைமாமனி விருது வழங்கப்பட்டிருக்கிறது. அன்பர்களே இங்கு என்னை இடறிய ஐயம் என்னவெனில் விழிக்கு அஞ்சனந் தீட்டிக்கொள்ளவும், மொகரக்கட்டைக்கு ஒப்பனைச் செய்துக்கொள்ளவுந் தெரியாத ,மெய்ப்பாடு என்பதை கிஞ்சித்தும் அறியாதவர்தம் ( மொதல்ல பொட்டிக்கி சேத்தி நாலடிப்பாட்டு பாடத்தெரியிமா? விருத்தம் போடத்தெரியிமா? தாளத்துக்கு சேத்தி ரெண்டு அடவதாம் புடிக்கத்தெரியிமா? சொந்தமா வஜனம் பேசத்தெரியிமா? இப்பிடி எதுந்தெரியாத பிசுக்கோத்து பசங்க , பிள்ளைங்க எல்லாங் கண்ணுக்குத் தெரியறாங்க ) அருமை பெருமைகளை கருத்திலிருத்தி கலைமாமனி விருது கொடுத்து கௌரவிப்போர்களுக்கு , வெறும் நாலே நாலு கிராமியக்கலைஞர்கள்தாம் கைக்குச் சிக்கினார்களா?
பாட்டின் பிழை பொறுக்காது அதிகார தகனமெரித்தும் வீழாது தமிழை உய்விக்க வாழ்ந்த கீரனின் வழி வந்த இளையபாரதியாரே! எங்கே உமது நடுவு நிலைமை?
நும் தெரிவு நெறிகளில் நேர்மையில்லை, பழுது, பிழை இருக்கிறது
நானிங்கே இந்த பழைய குப்பையை கிளற முகாந்திரங்களுண்டு..........
இயல் -இசை- நாடகமன்றம் செவ்வனே இயங்கிக்ªகொண்டிருக்கிறது என்றுச் சொன்னேன் அல்லவா.... அது மாத்திரமன்றி
நசிந்து தேய்ந்துப்போன கலைஞர்களின் வாழ்க்கைப் பாதையை செப்பனிடும் முகத்தான் செல்லுப்படியான 2007 ஜூன் மாதம் உரூவா ஒன்றுக்கு மக்களின் வீடு தேடிவந்து அவர்தம் அறிவுத்தாகத்தைத் தீர்த்து வைக்கும் பிரபல்ய நாளேடான தினகரனில் நலிந்த நிலையில் வாழும் சிறந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கான விளம்பர அறிக்கை ஒன்றை இவ்வமைப்பின் முகாமையில் அரசு வெளியிட்டிருந்தது.
அதில் கண்ட பிரதான ஷரத்துப்படி நிதியுதவி பெற விழைவோர்க்கு அரசு நேமித்திருக்கும் வயது வரம்பு 58.
ஐம்பத்தெட்டு வருடத்திற்கு முந்திப்பிறந்த கிராமியக்கலைஞர்கள் அறுதிப்பெரும்பான்மையினருக்கு ஏட்டுச்சுரைக்காயென்றால் என்னவென்றேத் தெரியாது
பூர்த்தியாக எல்லோரும் கைநாட்டுப் பேர்வழிகள்!
ராவெல்லாம் கூத்தாடிவிட்டோ, பறையடித்துவிட்டோ, பொம்மையாட்டிவிட்டோ வருவோர் சோறுத்தண்ணி இல்லையென்றாலும் அகப்பட்ட இடத்தில் தெக்க வடக்க நெப்பில்லாம பொச்ச நெட்டுக்கிட்டு தூங்குபவர்கள்!
நாட்டு நடப்பு கிடக்கட்டுங் கழுதை!
சினிமாக்காரிகளின் விரி தொடையழகு காவிரிச்சி விளம்பரங்களுக்கிடையே இங்ஙனம் வெளியாகும் துக்குளியூண்டு அரசு செய்திகளை ஓதி விளக்கஞ்சொல்ல அவர்களுக்கொரு கதியுண்டா?
நலிந்த கலைஞர்களனைவரும் எண்ணறக்கற்று எழுத்தற வாசிக்க கூடியவர்கள் என்று தாமாகவே அரசு நம்பிக்கொண்டிருப்பது எவ்வளவுப்பெரிய பைத்தியக்காரத்தனம்?
சங்கடத்தில் பிள்ளைப் பெற்று வெங்கட்டம்மா என்று பேர் வைத்தது மாதிரி என்னம்மோ சாங்கியத்திற்கு இம்மாதிரி நலத்திட்டங்களை பேப்பரில் மட்டும் அறிவித்தால் ,போதுமா???
பாமரக்கலைஞர்களுக்கு கருதிய பலன் கிட்டுமா?
முதலில் நிதியுதவி வேண்டுவோர்க்கு படிவத்தில் விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளை வாசியுங்கள்
"அரசாங்கம்,ரசிகர்கள்அல்லது பிரபல கலை நிறுவனங்களிடமிருந்து தங்களுக்கு விருது, பாராட்டு, சன்மானம் வழங்கப்பட்டிருந்தால் அவற்றின் விபரம் குறிப்பிடவும் சான்றிதழ்களின் நகல்களை இணைக்கவும்(மறைந்த கலைஞரின் மனைவி விண்ணப்பிப்பாரெனில் கணவர் பாராட்டுப் பெற்ற விவரங்களைக் குறிப்பிட வேண்டும்)" நிபந்தனை-8
" தங்களையும் ,தங்களுடைய கலைத்தகுதிகளைப் பற்றியும் நன்கு அறிந்தவர்களை (தங்கள் துறையில் பிரபலமாக உள்ள)இரண்டு கலைஞர்களிடமிருந்து தங்களைப்பற்றிய பரிந்துரைகளைப் பெற்று இத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் பரிந்துரை வழங்கியுள்ள இரண்டு கலைஞர்களின் முகவரிகளையும் குறிப்பிடவும் முக்கியமானதெனக் கருதப்படும் தாங்கள் பங்கேற்றுள்ள கலைநிகழ்ச்சிகளுக்கான அழைப்பு ,அறிவிப்பு , விளம்பரக்குறிப்பு, ஆகியவற்றினையும் தாங்கள் பெற்றுள்ள பாராட்டிதழ்களின் நகல்கள் ஆகியவற்றினையும் கண்டிப்பாக இணைத்து அனுப்பவும்" நிபந்தனை-9
மேலோட்டமாகப் பார்க்கும்போது எளிமையானவைப்போல தோன்றும் இவற்றைப்போன்றே விண்ணப்பத்தின் பல ஷரத்துகளில் பூர்த்திச் செய்யமுடியாதபடிக்கி பல குளறுபடிகள் உள்ளன. முதலில் கலைஞர்கள் என்றால் அரசுக்கும் சரி அதுவியக்கும் இயலிசை நாடக மன்றத்தார்க்கும் சரி புத்தியில் உறைந்துப்போயிருப்பது சினிமாக்காரர்கள்,டிவிக்காரர்கள் ,கர்நாடக இசைமேதைகள், ஆர்மெச்சூர் நாடகக்காரர்கள் கடைசியாக ஒப்புக்குச் சப்பாணியாக கிராமியக்கலைஞர்களில் ஒன்றிரண்டு ஒயிலாட்ட மயிலாட்ட, கரகாட்டக்கலைஞர்கள் .....
தொன்மையானதும், பழமையானதும், கிராமியக்கலைகளில் நுட்பமானதும் தமிழர்களின் ஒப்பற்ற பண்பாட்டு அடையாளமுமான தெருக்கூத்து முதலிய நிகழ்த்துக்கலைகள்
குறித்த பிரக்ஞையும் அக்கறையும் அவர்களுக்கு சுத்தமாகவே இல்லை.
ஒருவேளை கேட்பதற்கு நாதியில்லை என அறிந்தும் அறியாத சிவமணி போல இருக்கிறார்களோ என்னவோ.....
தெருக்கூத்தை அடியாகக்கொண்டு நிறுவப்பட்ட கூத்துப்பட்டறை போன்ற பிரபல கலை நிறுவனங்கள் சினிமாவுக்கு நடிக ,நடிகைகளை உற்பந்தி செய்யும் தொழிற்கூடங்களாகிவிட்டன. அதன் வாரிசுதாரர்கள்
ஆத்தாக்காரி அம்மணமாம் கும்பகோணத்தல கோதானமாம் என்றமானிக்கி மாநகராட்சிகளில் உள்ள நட்சத்திர ஹோட்டேல்களில்,பல்கலைவளாககங்களில் அமைந்திருக்கும் ஏசி பொருத்தப்பட்ட அரங்குகளில் தாம் கற்ற நாடகக்கலையை
வளர்த்துவருகிறார்கள்
இன்னும் சில கலை ஆர்வலர்கள், ஆய்வாளர்கள,தமிழ் பேராசிரியர்கள் இருக்கிறார்கள் அவர்கள் கூத்தாடிகளிடம் வந்து முடிந்தமட்டும் சமாச்சாரங்களைச் சுரண்டிக்கொண்டுப் போய் தீசீஸ் எழுதி பணம் பண்ணுகிறார்களேவொழிய தாம் கண்ணாரக்கண்டு காதாறக் கேட்டு தெளிந்த கலைஞர்களின் கலைத்திறமைகளை, கஷ்ட்ட நஷ்ட்டங்களை குறித்து வாய்க்கும் இடத்தில் இதுகாறும் ஒரேவொரு அச்சரத்தைக்கூட உதிர்த்ததில்லை. (சும்மானாச்சிக்குங்கூட)
இவற்றையெல்லாம் நான் ஏன் சொல்லவேண்டியிருக்கிறதென்றால் தடங்கண்டுப்போய் இனங்கண்டு சிறப்பு செய்யவேண்டிய இவர்களே நிகழ்த்துக்கலைஞர்கள் பால் பாராமுகம் காட்டும் போது.............................
இல்லாத பொருளைக் கேட்கிறார்களே(அரசாங்கம், பிரபல கலை நிறுவனங்கள் வழங்கிய விருது, சன்மானம் பாராட்டு சான்றிதழ்கள்) எப்படி
கொடுப்பது?அதோடு மட்டுமல்ல ஆணோ, பெண்ணோ ஒரு கூத்தாடிக்கி எந்த ஊரில் ரசிகர் மன்றமிருக்கிறது? எந்த ஊரில் தெருக்கூத்திற்கு அழைப்பிதல் அச்சிட்டு விநியோகிக்கிறார்கள்?
ஒத்த உரூவாயிக்கி வெற்றிலை வாங்கி ஐந்தோ பத்தோ அதில் வைத்து வந்து ஆடுங்கடா என்று பண்ணாடிகள் ஆணையிட்டால் முப்பது நாற்பது மைல்களுக்கு அப்பால் கூட சொந்தப் பணத்தைச் செலவழித்துக்கொண்டுப் போய் நடத்துகிற தெருக்கூத்து திடீர் மழை காரணமாகவோ, ஊரார்களின் அடிதடி சண்டை போன்ற அசம்பாவிதங்களினால் தடைப்பட்டு இடையில் நின்று விட்டால் போக்குவரத்து செலவுக்குக்கூட பணம் அவுக்க மாட்டார்கள். பத்தாயிரம் இருபதாயிரம் பெறு மதிப்புள்ள நிகழ்ச்சிக்கு ஒரு உரூவா வெற்றிலைதான் அச்சாரம்.
இந்த லட்சணத்தில் இவர்கள் கேட்கும் அழைப்பு, அறிவிப்பு, விளம்பரக்குறிப்பு, இத்தியாதி போன்ற ஆவணச்சான்றுகளுக்கு வெறும் வெற்றிலை சருகைதான் வைத்திருந்துக்கொண்டுப்போய் காட்ட வேண்டும் ...
ஒரு கலைஞராகப்பட்டவர் அரியணையில் அமர்ந்து செங்கோன்மை செலுத்தி வருகின்ற இந்த பொற்கால ஆட்சியில் சதமானத்தின் அடிப்படையில் பார்த்தால் நூற்றுக்கொரு தெருக்கூத்து கலைஞர் கூட (ஒருங்கிணைந்த சேலம், தருமபுரி,ஈரோடு, நாமக்கல் மாவட்ட) நலிந்த நிலையில் வாழும்சிறந்த கலைஞர்களுக்கான நிதியுதவி வழங்கும்
திட்டத்தின் பயனைப் பெறவில்லை என்பதே உண்மை!
எனக்கு தெரிய நான்கைந்து ஆண்டுகளாக இத்திட்டத்திற்கான விண்ணப்பத்தை வாங்கி நிரப்புவதிலிருந்து கோட்டாட்சியர், \வட்டாட்சியரின் வருவாய் விசாரணை அறிக்கை, கையெழுத்து மற்றும் முத்திரை பெற்று மன்றத்திற்கு அனுப்பும் பரியந்தம் பல நூறு உரூபாய்களை கடன்பட்டு அதிகாரிகளிடம் தாரை வார்த்துவிட்டு தனது விண்ணப்பம் போனவழி தெரியாமல் அன்னாடம் அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று
"பணமும் வரல ஒரு பாடையும் வரல அப்பிடி எதனாச்சிம் வந்தா வூட்டிண்டையே வந்து வாக்கரிசி போடறம் போ'"
என்று போஸ்ட் மாஸ்டரிடம் பாட்டு வாங்கி வரும் பொன்னான் வாத்தியார் கட்டிலில் கிடையாக கிடக்கிறார் . பல விண்ணப்பங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை விட்டு தாண்டுவதேயில்லை.(ஏற்கப்படாத விண்ணப்பங்கள் குறித்த தகவல்கள் அதாவது இன்னின்ன காரணங்கள், குறைப்பாடுகளுக்காக அவ்விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என்ற விபரம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை.)
கோரிப்பெறுவது வெகுமதியன்று.....ஆனால் அன்பர்களே
குரங்கு அப்பம் பங்கியதுப்போல உரியவர்க்கு உரியதை ஈயாமல் தன் வாயில் போட்டுக்கொள்ளும் நாட்டாமைத்தனம் நெடிய நாட்களுக்கு நிலைக்காது.
இடிப்பார் இல்லா எமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்

1 கருத்து:

PUTHIYAMAADHAVI சொன்னது…

அக்கப்போரு.. அடடா அப்படிப்போடு.

இப்போ உங்க முயற்சியிலே கூத்து
கலைஞருக்கு அரசு உதவிப்பணம் கிடைத்தச் செய்தியை அறிந்தேன்.

வாழ்த்துகளுடன்,

மும்பையிலிருந்து
புதியமாதவி