வெள்ளி, 15 மே, 2009

தோல்பொம்மை தெருக்கூத்துக்கலைஞர் திருமதி.ஜெயா செல்லப்பன் அவர்களுடன் ஓர் நேர்காணல்
சந்திப்பு;தவசிக்கருப்புசாமி
திருமதி ஜெயா செல்லப்பன்.
தோல் பொம்மை / தெருக்¢கூத்துக்கலைஞர். ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் அம்மாபேட்டையில் வசித்து வரும் திருமதி ஜெயா செல்லப்பன் அவர்கள் நாமக்கல். ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்ட அளவில் நன்கறியப்பட்ட தோல் பொம்மை கலைஞர், மட்டுமல்ல அற்புதமான தெருக்கூத்து கலைஞரும் கூட. நிகழ்த்துக் கலைகளில் சவாலானதும், மிகவும் கடினமானதுமான தோல்பொம்மலாட்டத்தை தனியொரு பெண்மணியாக கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திக் கொண்டிருப்பவர். வயோதிகம் அவரை/அவரது வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு மேலதிகமாக ஒடுக்கி விட்டிருந்த போதிலும், கைக்கொண்ட கலை மீது எல்லையற்ற அர்ப்பணிப்பு உணர்வையும், ஈடுபாட்டையும் கொண்டு வாழ்ந்து வருகிறார். அருகி மறைந்து வரும் தொல் கலைகளின் விதைநெல் இவரிடம் மூட்டை மூட்டையாக கொட்டிக்கிடக்கிறது. கொள்வாரின்றி செல்லரித்து மக்கி விடுமுன் நல்ல நிலம் பார்த்து விதைக்க வேண்டும்.
தவசி;
எத்தன வயசுல பொம்மையாட்ட வந்தீங்க?
ஜெயா:
அதிருக்குந்தம்பி ஒரு ஏழு எட்டு வயசு. ஒரெட்டு எங்கய்யனுக்கு (அப்பா) பாடறதுக் கில்லாம தொண்டக் கெட்டுப் போச்சி வாயத் தொறந்தா துளிச் சாரீரம் வெளிய வரல. தொழிலேச் சுத்தமாச் செய்ய முடியல. வவுத்துக்கொடும - தாக்குப் புடிக்க முடியல. வழுது தொழிலுந் தெரியாது. துணிஞ்சி ஒருதக்கம் டெண்டக்கட்டி, ஊரக் கூட்டி, டிக்கிட்டுங் குடுத்துட்டாரு. கூட்டமா வந்து குமிஞ்சிருக்குது, பிம்மேளம் கிடி மொழங்குது. தனக்குச் சுத்தமா வாயத்தொறந்து பாடமுடியல. ஒடியாடி வெளையாடிக்கிட்டிருந்த என்னையக் கூப்புட்டு மடியிலக் குந்த வெச்சி என்ற காதுல தாம்பாடி பொம்மையாட்டிக்கிட்டு, அத வாங்கி திலுப்பி என்னய பாடச் சொன்னாரு அன்னைக்கி புடிச்சது இந்த பித்து.
தவசி;
உங்களுக்குமுந்தி உங்கய்யன், அவருக்கு மிந்தி ஆராச்சும் தோல் பொம்மலாட்டம் நடத்தியிருக்கிறாங்களா?
ஜெயா:
அக்கானுங்க, (ஆமாம்) அய்யன், பாட்டன், முப்பாட்டன் ஏழெட்டு தலக்கட்டு முந்தியிருந்தே எங்களுக்கு இதே தொழுவாடுத் தானுங்க.
தவசி;
இதுவரைக்கும் எந்தெந்த கதய/எத்தன கதய தோல்பொம்மையில நடத்தியிருக்கறீங்க?
ஜெயா:
குருபுத்ரன் இறப்பு ராமர் பிறப்புலயிருந்து ராமாயணம் பூர்த்தியா. யயாதி கண்ணாலத்துலயிருந்து தருமரு வைகுந்தம் முடிய மகாபாரதம் பூர்த்தியா. பொறவு நல்ல தங்கா. அரிச்சந்திரன் மயான காண்டம், நள தமயேந்திரிக் கண்ணாலம். இப்பிடி பல கதைங்கள நடத்தறம்.
தவசி;
மொதல்ல தோல் பொம்ம ஆட்டிக் கிட்டிருந்த நீங்க பிற்பாடு தெருக்கூத்துல வேசம்போட்டும் ஆடியிருக்கறீங்க எதனால இந்த மாத்தம்?
ஜெயா:
தோல் பொம்மையாட்டறது நுணுக்கமான வேல மனசுக்குப்புடிச்ச தொழிலுன்னாலும் பத்து பேத்துகஷ்டத்த ஒராளு சுதாரிக்கணும், கதையில மொத வர்ற கோமாளி பொம்மையிலிருந்து ஆணுபொம்ம, பெண் பொம்ம, தோலு, துருத்தி எல்லாத்துக்கும் ஒரே ஆளு பேசி, பாடி ஆட்டணும். கால மடிச்சி குத்துக்காலுப் போட்டு மனையில கோந்து சோத்தாங்கையில கட்டயும் ஒரட்டாங்கையில பொம்மயும் புடிச்சமின்னா பொறவு அஞ்சி பஞ்ச பூதமும் வேலச் செய்யணும், இஸ்காரு சாஸ்தி, நாவரீவ காலமாவ, ஆவ சனத்துக்கு கூத்துமேல நாட்டமாச்சி, போற வாறப் பக்கமெல்லாம் கூத்தே ஆடச்சொன்னாங்க. அந்த பூட்டுல, அதோட கூத்துன்னா ஒரு வேசம் மட்டுந்தான் வேலையும் ரொம்பச் சுளுவு, இருந்தாலும் எடப்பாட தடப்பட எங்கியோ ரெண்டொரு ஊருல தோலு பொம்மையே வேணுமின்னு கேப்பாங்க அங்க பிரியமா நடத்திக் குடுப்பம்.
தவசி;
கூத்துல ஆண்வேசம் கட்டுவீங்களா இல்ல பெண் வேசமா?
ஜெயா:
கதைய பொறுத்து. ஆணு/பொண்ணு எந்த வேசமின்னாலுங்கட்டுவேன், ஒவ்வோரெட்டு கூத்து வுட்டவிங்க கேக்கறமாதரயும் வேசங்கட்டுவம், மாடுபுடிசண்டை வெச்சா நானு உத்தரகுமாரன் கட்டுவன். எம்பட வூட்டுக்காரரு பேடி கட்டு வாப்ல. பவளக்கொடி கண்ணால மின்னா அவரு அல்லி நானு அர்ச்சுனன் பத்மாச்சூர வதமுன்னா அவரு பத்மாசூரன் நானு மோகினி,நல்லதங்கா வெச்சா நானு நல்லதங்கா அவுரு மூளி அலங்காரி.
தவசி;
வேசம் போடறப்ப எத்தன ரக பவுடருப் பொழங்குவீங்க? இன்னின்ன வேசத்துக்கு இன்னின்ன நெறத்துலதாம் பவடருப் போடணுமின்னு எதனாச்சும் வரமொற உண்டா?
ஜெயா;
அடந்தடந்துப் பொழங்கறது, முத்து வெள்ள, மஞ்ச கோபி, நீலம், செவப்பு, செந்தூரம்.ஒரு அரவான், அனுமாரு வேசமுன்னா,பச்சப்பவுடரு,ஒரு பகவான்,பீமன் வேசமுன்னா நீலம், காளி மாரி, தொரவதி வேசமுன்னா செவப்புப் பவுடருப் போடுவம்.
தவசி;
எத்தன தினுசான அடவு ஆடுவீங்க? ஆணு வேசத்துக்கும். பெண் வேசத்துக்கும் தனித்தனியா அடவு உண்டா?
ஜெயா:
தோலுப் பொம்மையாட்டத்துக்கு சுதி நானம் உண்டு, தெருக்கூத்துல அது அறுதி. கண்ட பாவனதான், பண்ணண்டு வக தாளம். எழு வக அடவுதான் இப்ப ஆடறம், ஆணுவேசத்துக்கும் பெண்ணு வேசத்துக்கும் ஆதி. அடதாளம். ரூபகம். சூரடி சாப்பு. ரெண்டடி சாப்பு. நொண்டிச்சிந்து. திறப்பட தாளம். ஒத்த சம்ப ரெட்டச் சம்ப இப்பிடி தாள வரிச ஒண்ணு தான், ஆனாக்கா ஒரு ஆண் வேசத்துல ஆடும்போது பெண்ணாயிருந்தாலும் ஆட்டம் துடியா இருக்கணும். ஏர்வ தாளத்துல எத்து வரிசையா ஆடனும். பெண் வேசத்துல ஆடும்போது அதுவோரு ஆம்பளையாயிருநத்£லும் சீலைக்குள்ளயே நயனமா ஆடனம்.
தவசி;
பல வேசம் போட்டுருக்கீங்க உங்களுக்கு பேர் வாங்கி குடுத்த வேசமென்னன்னு சொல்லுங்க?
ஜெயா:
லவ குசங் கூத்துல சீத வேசந்தாந் தம்பி எனக்கு பேரு வாங்கி குடுத்த வேசம்.
தவசி;
பெண் கூத்துக்கலைஞரா உங்க ஜமாவுல நீங்க வேசம்போட்டு ஆடனாப்ல, மத்த ஜமாவுலயும் பெண்கள் வேசம் போட்டு ஆடியிருக்கறாங்களா?
ஜெயா:
என்ன தம்பி ஆடனாங்களான்னு அவ்வளச் சிலேட்டமா கேக்கறீங்க, எங்க ஜமாவுல நானு, எங்கமாமியா பாப்பா, என்ற கொளுந்தியா காளியம்மா, அங்கம்மா ,குரும்பனூரு புட்டி இப்பிடி பொண்டுங்க ஆடனமா, பொன்னிவூட்டு மண்டயஞ் செட்டுல சித்தாயி. பாவாயின்னு ரெண்டுப் பொண்டுங்க. அதே மாதர சேலங் கொண்டாலாம்பட்டியில பூவாயி செட்டுன்னு ஒரு பொண்டுங்க செட்டே தனியா இருந்தது, அதுல லச்சிமி கந்தாயி. பவுனாம்பா ராஜாமணி ,செல்லம்மா இப்பிடி பல பொண்டுங்க ஆடனங்க.
தவசி;
அப்பிடியா! அவுங்களப்பத்தி கொஞ்சம் வௌக்கமா சொல்லுங்க?
ஜெயா:
தம்பி கண்ணாலத்துக்கு முந்தி எனக்கு பொம்மையாட்ட மட்லுந்தான் தெரியிம், மொட்டயங்கொறவமூட்ல என்னய எங்கய்யங் கட்டிக்குடுத்ததும் எனக்கு கூத்து படிப்பிச்சிது எங்க மாமியா பாப்பா காலடவு சொல்லிக் குடுத்தது,லச்சிமி, லச்சிமின்னு ஒரு அம்மா, பாருங்க இன்னும் நம்ப மேச்சேரி காளிக்கவுண்டனூருல ஆண்வேச துணி தச்சிக்கிட்டு உசுரோட இருக்குது, அந்தம்மா ஆடற ரெட்டடவுக்கு மத்தாளத்த அடிக்க முடியாம எத்தனயோ ஆம்பளைங்க பாதிக்கூத்துல சொல்லாமப் புடிக்காம ஒட்டம் புடிச்சிருக்கறானுங்க. அதே மாதர அவிங்க வர்க்கத்துல அவிங்க பாட்டி பூவாயி, பெரியாயி கந்தாயி,சின்னாயி பவுனாம்பா இவிங்கெல்லாம் பெருங்கொண்ட வேசக்காரு மட்டுமில்ல, பேரேடுத்த கூத்தாடிங்க! காலுமேல காலுப்போட்டு குந்தி, பவுனாம்பா கைப்பைய மொழங்கையில மாட்டிக்கிட்டு, கத்திரி மார்க்கம் சிவரெட்ட பத்த வெக்கறத பாக்கவே பத்திருவது பேரு கூடுவாங்க, தருமன், வீமன், அர்ச்சுனன், ஆயன், துரியோதனன், துர்ச்சாதனன், அய்மன்னன்னு இப்பிடி வேசம் ஆணோ பொண்ணோ ஆரு வேணுமுன்னாலும் கட்டலாம், ஆனா கூடன சவ நெறக் கும்பிடி கோமாளி வேசம் போட்டு அதுமொரு பொம்மனாட்டி சாமான்யத்துல ஆடி செலாமணி பண்ட முடியாது, எங்க காளியம்மா ராமக்கறவத்தாங் (கோமாளி) கட்டி வெளிய வந்தா பாக்கற சனத்துக்கு சிரிச்சி சிரிச்சி வவுறு புண்ணாப்போவும், பேச்சிக்கி பேச்சி சிங்காரம்,,,, அவளாட்டம் பேச இன்னக்கி ஆளு இல்ல.
தவசி;
அவங்கெல்லாம் இப்ப என்னா ஆனாங்க எங்க இருக்கறாங்க? என்னா செய்யறாங்க?
ஜெயா;
ஒடம்புல சத்து இருக்கமட்டும் ஆடனாங்க, வூடு நம்ப பிள்ளைங்க குட்டிங்க பெத்தாங்க. காதுல மூக்குல கெடக்கறத வித்துக்கூட அதுங்களுக்கு சீரு பாரு பாத்தாங்க, இப்ப ஊடுமில்ல வாசலுமில்ல! ஒடம்புல வலுவுமில்ல! நாடோடிங்களா மேச்சேரி வனவாசி, நங்கோளி ஒருக்கோடியா சந்த சந்தைக்கி மொளவுத்தூளு வித்துக்கிட்டு திரியிதுங்க.
தவசி;
உங்களுக்கு அப்பரம் உங்க பொண்ணுங்க. பசங்க ஆராச்சுங் கூத்தாடறாங்களா?
ஜெயா:
எனக்கு ஏழு பொட்டப்பிள்ளைங்க! ரெண்டு பசங்க, ஒருப்பையன் ராரி ஓட்றான். ஒருப்பையன் இங்க சலண்டபுரத்திண்ட சேட்டு ஜமாவுக்கு மத்தாளத்துக்குப் போறான். பிள்ளைங்க ஒவ்வொருத்திக்கும் கால காலத்துல கண்ணாலங்கட்டி குடுத்துட்டம், ஒருத்திக்கிகூட இந்த தொழிலு வோண்டாம்னுட்டம், ஏன்னு கேளுங்க அந்த காலத்துல நானு தோலு பொம்மையாட்டும் போது ஆட்டம் முடிஞ்ச பெறவு டெண்டவுட்டு வெளிய வந்தா பார்ரா பொம்மையாட்ற மவராசி வருதுன்னு நாலுச்சனம் கும்புட கையெடுக்கும், கூத்தாடும் போது பலபட்ற ஆம்பளைங்களோட சச்சமமா நின்னு உடுப்பு மாத்துவம் புடிப்பம் ஒரு தப்புத் தவறு நடக்காது, கன்னியமா நடந்துக்குவாங்க, காசி பணம் இல்லாட்டியும் ஊருநாட்ல மட்டு மருவாதி இருந்திச்சி. ஊருக்கு நூறு வூடு குடியானப்பசங்க, பத்திருவது டிக்கிட்டுங்க தான் பறயமூட்டாரு சக்கிலியூட்டாரு, இவிங்க பாவம் வருசமுச்சூடும் பாடுபட்டு சம்பாரிச்ச பணத்த போட்டு, ஆதிய மறக்கக் கூடாதுன்னு உள்ளூரு நோம்பி நொடிக்கி கூத்துவுட்டா, அத பொறுக்க மாண்டாம எதுத்தாப்பல குடியானப்பசங்க காலேசிப்பிள்ளைங்கன்னு சேலம் கல்லாங்குத்துலருந்து பொம்பளைங்கள கூட்டியாந்து அம்மண ஆட்டம் வுடறாங்க தம்பி! என்ற மகனாட்டம் நீங்க உங்ககிட்ட சொல்ல நாவு கூசுது, ஒசக்க பிளாசிட்டிக்கி தொட்டிய நிறுத்தி பைப்ப போட்டு கீழ தண்ணிய வுட்டு நட்ட நடு டேசியில பொம்பளய நெற அம்மணா நிக்க வெச்சி தண்ணி வாக்கச் சொன்னாங்க தம்பி ஒரு ஊருல. கேட்டா சினிமா பாட்டு அப்பிடியே ஆடறாங்கன்னு சொல்றாங்க! இப்பிடி பாத்து கண்டவிங்க கூத்தாடிப் பொம்பளய வேசம்போட்டு ஆடறவ தானேன்று அப்பிடி சினிமா பாட்டுக்கு ஆடுன்னா நம் கெவுரவம் என்ன ஆவறது தம்பி? அதான் அந்த நாத்தமே ஆவாதுன்னு வுட்டுட்டந் தம்பி.
தவசி;
இதுவரைக்கும் எத்தன கூத்து நடத்தியிருப்பீங்க?
ஜெயா:
வருசத்துக்கு நூறு, நூத்தம்பது ராத்திரி கூத்து கொறவில்லாம நடத்தனம், அம்பது வருசமா தொழிலுச் செய்யறன், எத்தன ராத்திரி கூத்து கணக்கு வருது நீங்களே பாத்துக்கங்க.
தவசி;
கூத்துல வர்ற வரும்பிடி உங்களுக்கு போதுமா?
ஜெயா:
அறக்க-பறக்க பாடுபட்டாலும், படுக்க பாயில்லங்கறாப்பல தானுங்க நம்ப பொழப்பு! அன்னைக்கிம் சரி இன்னிக்கும் சரி என்னமோ வர்ற வரும்பிடி வவுத்து ஈரங்காயாம பாத்துக்கலாம் அவ்வளதானுங்க.
தவசி;
பிரயோசனமில்லாத காரியத்தச் செஞ்சி,என்னங்க புண்ணியம்? வவுத்துக்கு கஞ்சி ஊத்தாத தொழில எனத்துக்குங்கயிப்பிடி வலிவந்தமாச் செய்யினும்?வுட்டுட்டு வேற தொழில எதனாலும் பண்டலாமில்ல?
ஜெயா;
நீங்க சொல்றது நூத்துலவொரு வார்த்தைங்க, எப்பிடிச் சம்பாரிச்சியென்னா? எத தின்னாயென்னா இந்த அங்கமாகப்பட்டது நம்பிப்போயிருஞ் சாமி! ஆனா பாழாப்போன பொந்தி அப்பிடிங்களா?
தவசி;
வருசா-வருசம் அரசாங்கம் உங்க மாதர கலைஞர்களுக்கு பென்சன், உதவித்தொகை,அதுயிதுன்னு பல நலத் திட்டம் அறிவிக்குது. நெறயாபேரு பென்சன் வாங்கறாங்க நீங்க அதுக்கு முயற்சி பண்ணலாமில்ல?
ஜெயா:
அதயேந் தம்பி கேக்கறீங்க! பெருமைக்கி பேசனா எருமைக்கி பில்லு ஆவாது. உங்க மாதர ஒருத்தரு சொல்லுப்பேச்சக் கேட்டுத்தானுங்க அஞ்சி வருசமா வுடாம எழுதிபோடறம். அது எந்த பொறட்டுல கெடக்குதுன்னே தெரியலீங்க. மினிசீப்பு, ஆர்.ஐயி. தாசில்தாருன்னு வருசந்தப்பாம வாக்கரிசி போட்டு உருவா ஐய்யாயிரம் கடம்பட்டதுதாந் தொச்சம்.

1 கருத்து:

மண்குதிரை சொன்னது…

யாத்ரா, ஹரி அவர்களுக்கு,

நல்ல வந்திருக்குங்க. அவுங்க மொழியிலே இருப்பது இன்னும் சிறப்பா இருக்குது. தோல் பொம்மை கூத்துன்னு சொல்றது பாவை கூத்தா?

பிறகு தொடர்பு கொள்கிறேன்.