சனி, 27 பிப்ரவரி, 2016

ச்சட்டீர்........ச்சட்டீர்

ச்சட்டீர்........ச்சட்டீர்













மாடு வாய்க்குமாம் மவராசனக்கு .பொண்டு வாய்க்குமாம் புண்ணியவானுக்கு .செட்டுக்கு  ஆளுங்க நேர்றது அவ்ளச் சிலேட்டமில்ல. ரெட்டியாரும்,பரமசிவனும் ,ராசாக்கவுண்டனும்,செல்வராசியுங்கூட நல்லூரு கருவாயஞ்  சேகரும் வந்து எடஞ்  சேந்துருக்கறாங்க.இந்த சீசனு தேவல. நடுத்தரம். தையில இருவது ராத்திரி  மாசியில பத்து ராத்திரி ஒட்டியிருக்குது .ரண்டு  வருசமா செட்டு  இல்லாம பெறத்தியாருக்கு ஒழச்சி சல்லிக்காசு  மிச்சமில்ல.சொந்த செட்டுன்னா சாமானஞ்  சட்டு படுதா ,பொட்டி மத்தாள வாடவ, பூசபணம் வெத்தலப்பாக்குப் பணமின்னும் இனாம் வர்ற சொணையான்னும்  சம்பளத்துக்கும்  மேல வரும்பிடி ஆயிரம்  ரெண்டாயிரம்  தேறும் .

சீட்டு நாட்டு போட்டு சேத்தி வெய்க்கலாம்.பின்னியும்  இப்ப ஆளுங்க மிம்பணம் கேக்கப் பழவிக்கிட்டாங்க . நீட்டிச்  சுருக்கனா நெடும் பக . வருச கண்ட மாப்ளைங்க  வந்து வந்து  நிக்கறாங்க.ஆளும்பேர்ல  பவ்வத்து  ஆயிரம்  அவுக்கும்பிடி  சிரிச்ச  மூஞ்சியாத்  திரியறாங்க வான்னா  வராங்க , போன்னாப் போறாங்க. பொறுப்பா கருதிப்புடிச்சி  தொழுவாடு நடக்குது .

இன்னைக்கு  கூத்து கெடையூரு மட்டம்பட்டி.எஸ். அஞ்சில  எடப்பாடி  வந்து, வெள்ளண்டி வலச  தாட்டி வீரப்பம்பாளையம்  வந்து  சங்கரி  ரோட்டுல  வவானி  பைபாசுக்கு முந்தி   கவண்டமூட்டு  கல்யாணமண்டபத்து முக்குல சோத்தாங்கை பக்கம் திலும்புனா அவத்திக்கி  யெட்டிபுடிச்சாப்ல மட்டம்பட்டி .
அண்ணாமல மொகாமியிலதான் கூத்து . சாயிண்டு  கூத்துன்னும் தெரியல. அந்தாளுக்கிட்ட  என்னாவொரு  சங்கடமின்னா    தனிச்  சம்பளத்துக்குப் பேசியாச்சும் ஆளு    எச்சா  வெச்சிக்  கூத்தாடணும். மொகமான வெத்தல  முன்ன  இருக்கணும் .

ஆளு  வரச்சொல்றத பத்தி இல்ல . நம்ப கைக்காசியா  நட்டம் .அஞ்சாறு  ஆளுக்கூட  வரச்சொல்லலாம்.வர்ரவிங்க வந்தா குடுத்த வேசத்தப் போட்டாடிப்புட்டு  கோளாறு பண்டாமப் போயிட்டா  தும்பமில்ல. அய்யோன்னப்பாவம்  கையோட  வருது.போனப்பூட்டுக்கு  சாயிண்டு  கூத்தொண்ணுக்கு செட்டிபட்டி  சின்னாளையும் , கொம்பாடிப்பட்டி ராசிப்பையனையும்  கூட்டியாரனமுன்னு  ஒரே  அடவாதம்  புடிச்சி  ஆளுமேல ஆயிரம்  உரூவா மொன முறியாம குடுத்துக்  கூட்டியாந்தாங்க. கெந்துருவ பருவதம்  வச்சிருந்தம். கூத்தென்னமோ எத்தாதான்  இருந்துச்சி.சின்னாளு  வெளிய வந்து   தர்ப்பார முடிச்சிக்கிட்டு    சுபத்ரா  சந்திப்புக்கட்டம்  வந்ததும் ராசிப்பையன்  வழமொறையா பாதம் பணிஞ்சி -


-ஆனக்குந்தி  பட்டணத்து  அரமண அந்தப்புரத்துல  சிலான  தாதிமார்களோட  சிரிச்சி  பேசி சொக்கட்டான்  வெளையாடிக்கிட்டு  இருந்தேன்.இந்த  ராஜ  கொலு மண்டபத்துக்கு      என்னைய  கூப்புட்டு  இருக்கறீங்களே யென்னா சாமி  சமாச்சார-மின்னு
 
ரெண்டடி  பாட்டுப்பாடி நாலடி வசனமா கேட்டதுதான்  தொச்சம் .  
சின்னாளு ஆ - ன்னு அவன வாய்ப் பேசறதுக்கில்லாம

-தேவி  நான்  உரைக்கும் பரியந்தம் நீயுந்தன் வாயை  திறக்கப்படாது-ன்னு

இவரே பேசிக்கிட்டு  இருந்தாரு.ஒருமாறு  பொழுதும் ஒரே  ஆளு எவ்ள பேசுவ ? சந்து வுடணுமில்ல.ராசிப்பையன் இதுதாஞ்  சாக்குன்னு  அரா சிவாங்கல.கம்முனே  நின்னுக்கிட்டிருந்தான்.அவரு பேசறமுட்டும் பேசிப்புட்டு
-பார்ரா  கழுத  வண்ணான் என்னைய  பாணி  பண்றான் -  
பார்ரா  கழுத  வண்ணான் என்னைய  பாணி  பண்றான்- ன்னு

ஒடனதும் பொண்ணு வேஷக்காரன,

-ஏன்  தேவி  பேசல
ஏன்  தேவி  பேசல
அடி  ஏண்டி  பேசல  கிளிக்குஞ்சி -ன்னு  புடிச்சி உலுக்க

அட  ராசிபையன் இந்தாள தர தரன்னு இழுத்துக்கிட்டு மின் சபையில  நிறுத்தி-

-கேளுங்க மகா  ஜனங்களே எம்பிருசன்  தாஞ்  சொல்றவரைக்கும்  வாயே பேசப்படாதுன்னு  தானே  சொல்லிப்புட்டு இப்ப
-ஏண்டி  பேசல
-ஏண்டி பேசலன்னா நானு  வாயில  பேசாம  எங்கூதியிலியா பேசட்டும்?- மின்னு  கேக்க

ஒரே ரசாப்பாசமா  போச்சி .








இதோடவா?

நெருப்பூரு நாகமரையில  வஸ்திர பங்கம் கூத்து எச்சாளு ரண்டுப்பேர  கூட்டியாரச்சொன்னாங்க.பாஞ்சாலி  வேசத்துக்கு  ராசிப்பையனையும் துச்சாதனன்  வேசத்துக்கு சூளமேட்டு காவேரியும்  வர சொல்லியாச்சி. துரியோதனமூடு  தர்பாரு  ஆனாங்க.பஞ்ச பாண்டவரு  தர்ப்பாரு  ஆனாங்க . ஆச்சி ராசிப்பையன்  வேசமும் ஆச்சி .
பக்கத்துல கோந்து துச்சாதனன்  வேசக்காரம்  மொகமெழுதி மீசக்கட்டி  எந்திரிச்சி அம்புறேக்கு  போட்டு  கண்ணாடியப் பாத்தவன்
-அண்ணா  ராஜின்னா  எப்பிடின்னா  எம்பட வேசமின்னு ஒரு  மெப்புதலைக்கி கேக்க -
ராசிபையன்
-இதென்னா  வேசம்   தங்கம்- மின்னு அவன  வளைச்சி  கேக்க

-என்னாண்ண கிண்டுலு  பண்ற ? வீரப்புலி  துச்சாதனன்  வேசந்தான்னா- ன்னு  அந்த  திருவாத்தாஞ்  சொல்ல -

-அப்படியா-
-அப்படியா-
- என்னமோப்பா உனக்கே  நல்லாருந்தா  சேரி - ன்னு

சொல்லிப்புட்டு  கண்ணாடிய  பாத்து   குமிஞ்சிக்கிட்டான் ராசிப்பையன்.
பழிகாரன்கிட்ட  பஞ்சாங்கம்  கேட்டா  அவன்  மட்ட  மத்தியானத்துல  மரணமுன்னுதானேச்  சொல்லுவான்.இவன்  வழுதுப்  பேசல.ச்சர ச்சரன்னு  கட்ட நவய அவுத்து  வெச்சிட்டு படல  பிரிச்சிவுட்டு தெக்க போனவம்  போனவனே .மறுக்க ஆத்ர அவசரத்துக்கு  கூப்புட்டா  ஆளே  வரதில்ல .






சுள்ளிமுள்ளூரூ  பொனங்காட்டு மாரியாயிக்கு  கூத்து. அரவங்கடப்பலி பெருங்கொண்ட  சதுரு .செட்டிபட்டி  சின்னபையனும் அவஞ்செட்டு சாரிவேசக்காரன்  மதிபையனும் வெத்தலப்பாக்கு வாங்கி தண்ணிதாசனூர்  கொக்கிபல்லனையும் அம்மாபேட்ட முட்டக்கண்ணனையும் ஆட்டத்துக்கு  கூப்புட்டுருந்தாங்க .அவனவனுக்கு தகுதியான  வேசங்கட்டி  ஆடுங்கன்னு  சொல்லி  பாகம் பிரிச்சிருந்தா  சங்களவம் இல்ல . மண்டகொழுப்பேறி தானுங்கற கெருவத்துல  சின்னபையன்

-டே  ஆராடா கூத்தாடிங்களே அரவான் வேஷம் , உளுவி  வேஷம் ரெண்டையும்   போட்டு  செலுத்தமாண்டீங்க. அத  தள்ளிப்புட்டு  மிச்சத்த போட்டாடுங்க -ஆயிரம்  வேசக்காரனுங்க இருதாளும்  இந்த   கெழவனுக்கு  டூட்டி  குடுத்து  ராவுடி   பண்டராங்க-ன்னு

 சலிச்சிக்கிட்டு  போயி  கரக்கட்டு  மேல  தானும்  மதியும்  கூத்தியா நாயம்  போட்டுக்கிட்டு  படுத்தவிங்க  அலுப்பத்து  தூங்கறாங்க .எங்க  கெடக்கறீங்க நாயிங்களேன்னு ஒருத்தரும் கண்டுக்கவே  இல்ல.கெழக்க  வெளுக்க  கெனா கண்டு  முழிச்ச  செட்டிபட்டி  ஒழு  வாத்தியாரு டெசிக்கி போகாமயே மங்களம் பாடி  சம்பளம்  பிரிச்சான்  கொக்கிப்பல்லன் .

செட்டுப்பண்ணாடி தலமேல  துண்டப்போட்டுக்கிட்டு  வெறுங்கையோட ஊடு  போனான் .

என்னாதான்  நேரமா பொறப்பட்டாலும் எடம்  வந்துசேர நெடு  நேரமாவிப்போவுது .இந்த  கொழலுக்காரனும்  கோமாளி  வேசக்காரனும் வந்த பாட்ட  காணம்.முக்குல குந்தி சலிச்சி  டேசிக்கி  வந்தா ஆளாளுக்குப்  பேசறாங்க மணி  ஒம்போதுக்கே  கூத்து  ஆரம்பிக்கலைன்னு .

ஊட்டுக்கு  ஓராளு பன்னண்டு  பேரு  தூளு  வரிக்கப்போயி  வந்த பொறவும் இந்த ரெண்டு  கொலவாரிங்களும் காணல. பெருந்தனக்காரு,ஊரு மூப்பனெல்லாம் சும்மாயிருப்பானா  இப்பிடித்தான்  ரெண்டாளு  தாவு  வந்து  சேரலைன்னா ......

போனு மேல  போனு போட்டா திருட்டு ஒக்காளவோளிங்க எடுத்து  தொலையல.பேனுத்தலையமூட்டு தனபாலுக்கு  தாக்கலச்  சொல்லி மேச்சேரி  பைட்டேன்டுல ஆளுங்க  நடமாடறாங்களா-இல்ல  விராந்தி  கட கண்ட பக்கம்   குடிச்சி குண்டி வெடிச்சிக் கெடக்கறாங்களான்னு பாக்கச் சொன்னம் மவராசன் ஆள கைப்புடியா  புடிச்சி  கொண்டாறன்.பூசப்போட்டு கூத்த ஆரம்பியிங்கன்னு  சொன்னப்போறவுதான் மனசாறிச்சி.





இந்த  கூறுக்கெட்ட  கொசவங்  கூத்து  படிச்சப்ப  மயில்ராவண  வேசந்தாம்  போடப் பழவுனான். அவிங்கப்பன் பெரிய  கொழந்தையொரு அசகாயச்சூரன்.கட்டப்பொம்ம வீரப்பனவிக அப்பன்  முட்டக்கண்ணனோடடெண்டுக்கூத்தாடிக்கிட்டுஏரியூரு சந்தப்பேட்டையில இருந்தாங்  குடி .


கூத்திருந்தா  ஆச்சி . இல்ல  ஊருப்பாட்டுக்கு  போயி  ஒண்ணு ரெண்டு  வரும்பிடி  வந்தா  கால்வவுறு  அரவவுறு  கஞ்சி, எதுவுஞ்  சிக்கலைன்னா போரு பைப்பு  தண்ணி குடிச்சி கொலைய நனைச்சிக்குவாங்க .
இப்பத்தான்  சினிமா  டி வீ  அந்த நாளையில அதெல்லாமேது . உள்ளூரு பசங்க ஒரு  செட்டு  கூத்துப்பித்து  புடிச்சதுங்க  இவனோட  கூத்துப்படிச்சி  அவத்திக்கே ரெண்டாட்டம்  ஆடனாங்க .
ஆடன முசவக்கண்டு  அக்கம்  பக்கத்து  ஊருக்காரும்  இவிங்கள கூட்டிப்போயீ கம்புக்கும் ஆரியத்துக்கும்  ஆடச் சொன்னாங்க. அப்படித்தான்  செல்லமண்டி சித்தரப்பட்டி  தாண்டி  வத்துலுப்பட்டி ஒருக்கோடியா வருசக்கூத்து  வந்து  இவிங்க  ஆடிக்கிட்டிருக்கும்பிடி  வத்துலுப்பட்டி பெரியத்தனக்காரமூட்டு  பொம்பளயொருத்தி அடந்தடந்து  ஆட்டம்  பாக்க வந்துக்கிட்டிருந்தா .

மொத நாளு தெக்கவொரு  கடையா குந்தியிருந்தவ நாளுக்கு   நாளு    
நவுந்து லைட்டுக்கம்பத்திண்டையே கோந்து கூத்து  பாத்தா .கதா நாயகம்  வேஷம்  கண்ணுக்கு  குளும.மாப்ளைக்கு தெனம் நோட்டுமாலச்  சாத்துறா .
ருசிக்கண்ட  பூன உரியேறுமா ஏறாதா ?
இந்த  செத்தய  முழுங்கி கோணயன்
-உரூவா  நோட்டுத்தாங்  குத்துவியா இல்ல  சோறு தண்ணி  எதனாலும்  ஊத்துவியான்னு - கேக்க
அவளும்  வேணும்  வேணாங்க  விருந்தே  போடறன்   வாடா  சமுட்டி மொட்டான்னு  ஊட்டுக்கே வர  சொல்லிப்புட்டா.புலி  மார்க்கம் சீவக்கா  தூளு  போட்டு  தலைக்கி  தண்ணி வாத்து ஒரு  சித்திய  ஆறவுட்டு  ஆறன மசுத்துக்கு   சம்பங்கி  எண்ணத் தடவி கோணக்கெராப்பு சீவி  மயிலுக்கண்ணு வேட்டிக்கட்டி அரக்குச்  சொக்கா மாட்டி  மீசைய  முறுக்கி  தொடைய த்தட்டி  கூத்தியா வெய்க்கத்  திலும்புனான் .

வூட்டுக்குப்  போனாரு பண்ணாடி .உபசரண  சம்ரட்ன ஒண்ணுஞ் சொல்லிக்கிறதுக்கில்ல.பையன தரையில  குந்தவுடல கூத்தியா.போனமாப்  போன  வேலயப்பாத்தமான்னு  இல்லாமச் செய்யற  வேலய வுட்டுட்டு  செனையாட்டுக்கு  மசுரு  புடுங்கற  மாதர அவக்கிட்ட வாயக்குடுத்து  இவஞ்  சூத்த  புண்ணுப் பண்டிக்கிட்டான்.

தின்னுக்கொளுத்தவன  எச்சிப்பிரியத்துல  அவங்கூத்தியா என்னான்னு  கேக்கறா ..


-அன்னாடம்  பத்துப்  பேரு  சவையில ஆட்டம்  ஆடறியே ராசாவூ இன்னிக்கி  ஒருநா  எனக்கோசரம்  ஒராட்டம் புடியேஞ் சித்தங்கூறி  -

-பகலு  வேஷம்  போடப்பிடாதுன்னு  அவன்  மறிச்சி  சொல்ல .உடாம அட்டிபிடிச்சி  ஆட்டங்கட்றா.  

வேசப்பொட்டி துணி மணி  இல்லைன்னு  சுதாரிச்சா

இருக்கறத வெச்சி கட்டுங்கறா.

புஜகீர்த்திக்கி  என்ன  கட்டறதுன்னான்

ரெண்டு கைக்கு  ரெண்டு  மொறத்த  குடுத்தா .

சிகரக்குச்சின்னான்

அவ  ஓரளுப்புட்டிய தலமேலக்  கமுத்துனா .
 
மார்ப்பதக்கமின்னான் -நாலு  பிரமனயக்கோர்த்து இடுப்பாரம்  தொங்கவுட்டா .

மயிலுத்தோகைன்னு கேக்க  ஊடு  கூட்ற ஈச்சவௌக்குமாத்த  முதுகுப்பக்கம்  சொருவிவுட்டா .

அவ்வளதான் அலங்காரத்தப்பாக்க  ரெண்டு  கண்ணுப்பத்தல.


இந்தக்கத இப்படியோட கூத்தியாருப்புருசன்  ஊருப்பெரியத்தனக்காரன்  மத்தியான  சோறுங்க வூட்டுக்கு  வந்துட்டான்.அப்பறம் பாத்துக்க  கூத்து  கொண்டயம்  ஏறிட்டுது .

இரும்பு  பூணு போட்ட  ஓலக்கையில கூத்தாடி  மாப்ளைய  கணுவு  கணுவா  வூணனா....அட அட  கதவடியிலச்  சிக்குன  பெருச்சாளியாட்டம்  கத்தி  பப்பாரி எந்தப்பக்கம் அவம்  முட்டறதுக்கும் எசவில்ல. வாசக்காலுப்பக்கம் முட்னா கதவு  அறிகாலு  ரெண்டுப்பக்கத்து  மொறத்த  தடுக்க   குப்புற வுழுந்தவன்  இடுப்பக்கட்டி சேங்கி சேங்கி  ரெண்டூனு  வூணனாம்பா.

ஓரம்  இழுத்துக்கிட்டு  போயி  இவுனுக்கு  ஒருப்பக்க  நடையாச்சி .பொறவு  கொண்டக்கட்டு  வேசமாவுது  குத்தடவு  ஆவுது !

வவு நாளா நெண்டிக்கிட்டு  திரிஞ்ச மொண்டி  கட்டங்  கடசியா  கோமாளி  வேஷம் போட்டு  வவுத்த  வளக்குது.






பத்து மணி  ராவுக்கு வந்துச்  சேந்தாங்க  மாப்ளைங்க. சோறு  தண்ணி  குடிக்கிறியான்னு  ஒருத்தருங் கேக்கல.உஸ்ஸ்ஸ் அப்பாடான்னு   டேசிக்குள்ள  போயி ஒக்காந்தான் ராசப்பன் .


இன்ன  அலங்காரம்    வெய்க்கலாமுன்னு ஒரு  முடுவா தீருக்கட  பண்டமுடியாம ஊருக்கறவத்தானுங்க அத வெய்க்கிலாமா இத  வெய்க்கிலாமான்னு   தடுமாறி  அல்லாட்டம்  போட்டுக்கிட்டிருந்தாங்க.செட்டு  மொகாமி  மத்தாளக்கார நடராசனும் விடியறமுட்டும் கூட்டம்  கலையாம இருக்க  என்னா ஆட்டம்  வெச்சா  எடுக்குமுன்னு சுதி கூட்னவாக்குல யோசனப்பண்டிக்கிட்டிருக்க  ராசப்பன் கண்ணாடிய சுத்தஞ்செஞ்சி  வேசப்பொட்டிக்கி முட்டுக்குடுத்து  முத்து  வெள்ளையக் கொழப்பி மூஞ்சியில  அப்புனான் .

கிணி கிணியின்னு போனு அடிக்கிது .

அவுதி பவுதியா  கையத்தொடச்சி  அதயெடுத்து

அலோ  அலோ -ன்னு  வெற எடுத்தப்பன்னியாட்டம்   கத்தறான் .


சுதிக் கூட்டறத  வுட்டுட்டு  இவம் போட்ட  ரவுசுல அண்ணாந்து  மொறச்ச  நடராசி  ஆரவல்லிச்சண்ட  வெச்சிக்கிலாமுன்னுச் சொல்ல  ஊராரு  ஒத்துக்கிட்டாங்க .



அடிக்கொருக்க  அடிக்கொருக்க ஓயாம  சில்லுபோனு வுடாம  அடிக்க கோமாளி  எடுத்து

- அலோ ஆராயா அதுன்னு  - கேக்க

-நாந்தா -ங்குதுவொரு பொம்பள  கொரலு .

-நாந்தான்னா -

-அட நாந்தாங் கோணையா -

-ஆரு ஒண்ணும் நெட்டுச்  சிக்கலியே -

-ஏம்மாப்ள எத்தனாடங்  கூப்படறது ? காதுல  ஈயமா காச்சி  ஊத்தி  வெச்சிருக்குது -

-ஆராயிருந்தாலுஞ்  சேரி .வேசம்  போடணும்.பேச  நேரமில்ல பொறைக்கி நாளைக்கி  பேசலாம் -

-ஓகோ அவ்ளத்தூரம் ஆயீப்போச்சா.நானு  ஆட்டம்  பாக்க வந்தன். இப்பிடியே  திலும்பி  போறன்.வூட்டுப்பக்கம்  வா - கால  திருவுலு போட்டுப்  படுத்துக்கறன்-

-ஆரு பிள்ள  செலம்பாயீ ! எப்ப  வந்த ? ஆரு ஆரு வந்தீங்க ?இப்பத்தான் சமாச்சாரம்  தெரிஞ்சிதா ?எங்க இருக்கற ? எவத்த  இருக்குற ? அங்கியே  இரு  வாறன் -

துண்டெடுத்து  முக்காடுப்போட்டுக்கிட்டு  மூத்தரம்  பேய போறவனாட்டம்  பட்டிப்படல  ஒங்கிரிச்சி வுட்டுட்டு வேக்கு  வேக்குன்னு சவுனிப்பக்கம் துடியா  தடம்  புடிச்சான் .

அந்த  ஒணத்திக்கெட்டவனுக்கு  இன்ன ஆளு  இவத்திக்கித்தான் இருக்குதுன்னு  ஒண்ணும் துப்பு  கண்டுப்புடிக்க  முடியல .பழுப்பு  சாரி  பட்டுகிச்சின்னு  சும்மா ஆவு ஆவுன்னுப் பறக்கறான்.  அலமோதறான் . சவுனிய  எடம்புரி  வலம்புரிச்  சுத்தறாஞ் சொழமாடறாங்   கவடத்து . நேரம் போனதே தெரியல .கோமாளி  வேசம் வர  நேரமாச்சே  இன்னுங்  காணமேன்னு தெரைய வெலக்கி  டேசிக்குள்றப்  பாத்தா  ஆளு  எங்கிருப்பான் .கூத்தியா  போணங்கிக்கிட்டு பூந்தடிச்சிப்போயிருவான்னு     சவுனிய  வுட்டு  அந்தாண்ட  பனஞ்சாரிய  வுட்டு கள்ளிப்போத ஒருக்கடையா  தேடித்  தொளாவுறாம்பா.

நடராசிக்கு  ஆத்ரந் தாக்குப்புடிக்க  முடியல . பின்னென்னாப்பின்ன சனத்த அதக்க அவனுந்தான் என்னமுட்டும் கிடீர் கடீர்னு சத்நக்கூட்டி மத்தாளத்த சொமறுவான்?  மூணு  செல்லு  பேட்ரிய கைலெடுத்துப்புடிச்சிக்கிட்டு ராமகறவத்தான  தேடி  பொறப்பட்டான் இருட்டுல .

-அங்க  எங்கடா  செத்தைய  முழுங்கி  கண்ணத்தின்னுப்புட்டு போற? நானு  இங்க  இருக்கறன்-

-இங்கன்னா  எங்கப்பிள்ள -    

-அட இங்கதாம்பாரு-

-அட  எங்கப்பிள்ள -

-நொள்ளையா சவுனிக்கி  மேக்க பாரு -

-தெரியலியே -

-என்னா தெரியலியே  இப்ப  பாரு  முன்ன வந்துட்டன் -

-ஐயோ  தெரியலப்பிள்ள  எவத்திருக்கற ?-

புழுதிக்காட்ல  வடக்க தெக்க கெழக்க மேக்க  வண்டியோட்டிக்கிட் டிருந்த ராசப்பன  பாத்து மத்தாளக்காரன் அங்கம்  அறுவத்தி  நாளும் பத்தி எரிஞ்சது .

-யோவ்  மச்சான் வேசமெழுதி வெளிய வருவன்னு  பாத்தா ...இங்கென்னய்யா  பண்ற ?வாய்யா இப்படி - ன்னு

கழுத்துக்கு  கைப்போட்டு இழுத்துக்கிட்டு வரவும் நல்லூரு  சேகரு அவங்கிட்ட வந்து

-இதா  ஏம்பேசல?  அட  ஏம்பேசல? கோவிச்சிக்காத. இன்னிக்கி  வேண்டாம்  மாமா! ஞாயித்தன்னைக்கி  கறி எடுத்து  தின்னுட்டு  இன்னுக்கலாம் மாமா -ன்னு கூத்தியா நாயம் பேச கோமாளி  நவண்டைய கடிச்சிக்கிட்டு  அவன அடிக்க  கைநோங்கிக்கிட்டுத் தொரத்த   கூத்தாடிங்க  பூராப்பேரும்  கொல்லுன்னுச்  சிரிச்சாங்க .
 






ஆட்டமாடி  சோக்கா பாட்டுப்பாடி

அழகான கோமாளி  வந்தாரய்யா

நாட்டுக்கு  சேவைச் செய்ய

நாகரீக  கோமாளி  வந்தாரய்யா

ஊருக்கு  சேவைச்  செய்ய

உத்தமங் கோமாளி  வந்தாரய்யா

வந்தாரய்யா பெருமாள்  வந்தாரய்யா

அந்த  வடமலை ரங்கநாதர்  வந்தாரய்யா

மோட்டார  விட்டிறங்கி  வந்தாரய்யா

முங்குடுமி  வெச்சிக்கிட்டு  நின்னாரய்யா

நின்னாரய்யா  பெருமாள்  நின்னாரய்யா

அந்த நீலகிரி  பர்வதம்போல்  நின்னாரய்யா

கச்சைக்கட்டி  ஒட்டியாணம்  காலில  சலங்கயாம்

கரியபெருமாளாம் கோமாளியப்  பாருங்க

காட்டு  தொளசிய  வெட்டுவாராம் பெருமாள்

கருணா  கருணையா  கத்தரிப்பார்  மாயவர்

கோர்த்து  கழுத்துல போடுவாராம்

கோவிந்தம்  போடச்சொல்லி  ஆடுவாராம்

வந்தனமய்யா  வந்தனம்  வந்த சனமெல்லாம்  குந்தனம்

சந்தனத்த  பூசிக்கொள்ளுங்க எஞ் சபையோர்களே

சந்தோசமா  பாட்டக்கேளுங்க

கோமாளி வேசம்  சவைக்கி வரும்போது மணி  பதனொன்னு அதும்போறவு  ஆரவல்லி  வேசம்  வர இன்னும்  நேரமாச்சி .


-யாரிங்கே -

-நானிங்கே-

-வாடா  இப்படி-

-வந்தேன் -

-என்னைக்கண்டால்  சற்றேனும்  பயமென்பது  கிடையாது-

-ஐயோ  அப்படி இல்லைங்க  மகா ராணி  உங்கள  கண்டாவே  நடுக்குலு எடுக்குதுங்க-

-என்னிடத்தில்  எக்கச்சக்கம்  ஏடாகூடம்  வைத்துக்கொண்டால் உன்  சிரத்தையறுத்து காக்கைக்கு  விருந்தாக்கி  விடுவேன்-

-மகாராணி  கண்ணு மயிரூண்டு  தப்பு  வராதுங்க-

-எத்தன  மணிக்கடா  கூத்துக்கு  வரச்சொன்னார்கள்-

-ஏனுங்க  - நேரமா வரச்சொன்னாங்க-

-நேரமா  வந்தாயா-

-இல்லீங் -

-வராம பத்துபேர  காக்க வெச்சிட்டு  எங்கடா  பச்ச  பேப்பரு  பொறுக்க போன ?-

மகா  ராணி தப்பா  நெனைக்கப்படாது  முக்கிலியமான சோலியா  போய்ட்டனங்க-

-ராசாங்க  காரியத்த வுட்டுட்டு  அப்படி  என்னடா  முக்கியமான  சோலி?


-மகாராணியம்மா  நேத்துக்கூத்துல  கறிக்கோழி  ஏலம் எடுத்தனுங்க. வூட்ல  ஒரேச்  சனக்காடு .ஒரே குஞ்சான  குஞ்சி பொழுதே  எறங்க  மட்டும்  வூட்ட வுட்டு அந்தண்டத் தாண்டலீங்க பொறவு  அசலூரு  சொந்தக்காரஞ்ச் செத்துப்போய்ட்டான்னு ஆளுவுட்டு தகோலுச்  சொல்லி அல்லாத்தையுந் தாட்டிவுட்டுட்டு  கறியாக்கி களி கிண்டி திங்க  நேரமாவிட்டுதுங்க . முழுகோழி  மூன்றப்படி  கறி- நாலு உண்ட  களி நானே தின்னங்க .

அதென்றான்னா மேச்சேரி  வரங்காட்டியும் அடி  புடிங்கிட்டுது. சின்ன எலும்பு  தொச்சமில்ல முச்சூடும் வந்துட்டது .கெவுருமெண்டு கக்கூசுன்னு  அவசரத்துக்கு  உள்ள  போனனுங்க .காசு கேட்டாங்க   இல்லைன்னேன்- கக்கூசு கழுவப்  போட்டுட்டாங்க .

ஆளே வரல  நாம்போறமின்னு கேட்டா .. வந்தா  கழுவ  ஆளு  வேணுமுன்னு புடிச்சி வெச்சிக்கிட்டாங்க மகாராணி -

-அட  அட  டேய் இதெல்லாம்  ஒரு பழமையின்னு சவையில வந்து  சொல்றியே  உனக்கு  ஈனப்பானங்கறது ஒரே இம்மியாச்சியுமிருக்குதா ?-

-ச்சட்டீர்  ச்சட்டீர் -

-வந்தது  வந்த இவ்ள ரேட்டுக்கழிச்சி படார்ன்னு  ஒக்காந்து மளார்ன்னு  வேசங்கட்டி வெளிய  வராம   வயசுப்பையனாட்டம் உனக்கென்றா  சில்போனு ?-

 -ச்சட்டீர்  ச்சட்டீர் -

ஆரு பேசறாங்க?  எவுரு பேசறாங்க ?பொம்பள  பேசுதா ? ஆம்பள  பேசுதா?-  ன்னு  நெதானம் இல்லாம போனத்   தூக்கிக்கிட்டு போட்ட  பவுடர  தொடைச்சிப்புட்டு  அவுத்துட்ட கழுதையாட்டந்    திரியற ? பொண்டுங்க  பொறன போவியா?  போவியா ?


 -ச்சட்டீர்  ச்சட்டீர் -

-அம்மா  ராணியம்மா!  என்னைய   வெட்டுங்க !  குத்துங்க!  கொல்லுங்க! ஆனாவொரு  விண்ணப்பம்  நானு  சோறில்லாம  கெடந்தாலுங்  கெடப்பன்  ஆனா  ஓழு இல்லாம இருக்கமாண்டேன் -

  -அட  அட  டேய் !

ச்சட்டீர்  ச்சட்டீர் -
-





-பொண்டாட்டி  இல்லாதவஞ்  சந்தையிலகண்டாரவோளி    கண்டாரவோளின்னானாம்.ஏண்டா கோமாளிதாசா வெறும்பீத்துலு பீத்தர? நீயொரு  சூரப்புலியின்னா  வுங்கூட்டுக்காரி ஏண்டா  குருசாமி  வாத்தியார கூட்டிக்கிட்டு  ஓடிப்போவுனும் -

பொட்டிக்காரந் தொரையன்  பொறனயிருந்து  கேக்க

-அட  அட  டேய் ! என்னடா  சொல்கிறாய்  முன்னே  வந்துச்  சொல்லடா -

-அய்யயோ  நானொன்னுஞ்  சொல்லலீங்    ராணியம்மா-

-சொன்னதைச்சொல்லடா  சுனைக்கெட்ட மூடா -

 குடுமிய  புடிச்சி  இழுத்துக்கொண்டி  நடுசபையில வுட்டான் . ஆரவல்லி  வேசக்காரன் .

ச்சட்டீர்  ச்சட்டீர் -

ராணியம்மா  இந்த  தெள்ளவாரி கூத்தாடிப்புட்டு  வூடு  அண்டாம ஊரு  ஊரா எச்சில  பொறுக்கிக்கிட்டு திரிஞ்சது. பாக்கறவரைக்கும் பாத்துட்டு  அவ  செட்டு  வாத்தியாரோட ஓட்டம்  புடிச்சுட்டுட்டா  ஒமலூரு காமலாபுரம்.
-
-பெண்டை வைத்து  ஆளத்தெரியாத  பேதமதியா இவன் ?-

-ஆமாங்க  மகாராணி ! பத்துப்பொண்டாட்டி கட்டனாலும்  தரித்தினியம்  புடிச்சவனுக்கு  படுக்க  பொண்டாட்டி  இல்லீங் -

ச்சட்டீர்  ச்சட்டீர் -

பொறவு  வுழுந்த அடியெல்லாம் கோமாளிதாசன் உசுருமேல தான் வுழுந்தது.
-





 .


   

சனி, 3 அக்டோபர், 2015

தாய்க்கி பிள்ளையேதடாதண்ணி கெணத்துக்கு முறைமையேதடா சாரங்கதாரா!- கூத்துக்கலைஞர் -கொத்தாபாளையம் குருநாத வாத்தியார் -குறித்தொரு பதிவு.

சேலம் மாவட்டத்தில் பூரல்கோட்டை கருப்புசெட்டி என்றால் அழுதபிள்ளை வாய் மூடும்.வன்னிய சமூகத்தில் மாத்திரமல்ல,மற்ற இடைச்சாதியினர் மத்தியில் மேலதிக செல்வாக்கும், ஆதிக்கமும் பெற்றிருந்தவர்.கோனூர் பஞ்சாயத்தில் ஒரு குட்டி ராசாவாக கோலோச்சி வந்த அவர் வெள்ளைப் புரவி ஏறி ஊர் பவனி வருகையில் கைச்சொடுக்கும் சாட்டையொலி மக்களுக்கு அசீரிரி!.உதிர்க்குஞ் சொல் வேதவாக்கு!. மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் நிர்வாகப் பாத்தியதை சம்மந்தமாக நடைப்பெற்ற வழக்கொன்றில் அந்த ரணபத்ரகாளியே வந்து இவர்பட்சமாக சாட்சி சொன்னதாக பெருங்கதையாடல்கள் இங்குண்டு. 

மனிதனின் எச்சிப்பால் குடித்து வளர்ந்தது தான் சாதியென்றாலும் அதனின்று இப்பூலகில் ஜனித்தவன் அவன் எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருக்கட்டுமே! தப்பித்தல் அரிது.இதற்கு கருப்பு செட்டியும் விதி விலக்கல்ல!( பெற்ற பாசத்தைவிட வளர்த்த பாசம் பெரிதல்லவா?) பூரல்கோட்டையில் பிறக்கப்பட்ட பறையன், சக்கிலி, குறவன் (அவர்கள் சின்னச்சாதிகள் என்றே இட்டு வழங்கப்படுகிறார்கள்)மட்டுமல்ல உடுத்தியிருக்கும் இடுப்புவேட்டி, கால்செருப்பு ,தலைமுண்டாசு,மொட்டைக் கோமணம் முதற்கொண்டு அவர் ஆக்கிணையை சிரமேற்கொண்டொழுக வேண்டும். அன்றேல் மண்மேல் மனுசன் சீவிப்பது யதேஷ்டம்!

இப்படியாகத்தானே கருப்புசெட்டியின் ராஜ்யபரிபாலனத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டி வேடமாரியம்மன் கோவிலில் சோமாரக்கிழமை ஊர் பெருந்தனக்காரர்கள் கெவுளி வாக்கு கேட்டுச் சொல்ல, இறங்கு பொழுதில் அன்றைக்கெல்லாம் ஒருசிந்தியிருந்த ஊர்தோட்டி வட்டப்பாறையில் நின்று நோம்பிச்சாட்டை துடும்படித்து அறிக்கைச் செய்தால் சுற்றியுள்ள ஆண்டிக்கரை, தானம்பட்டி,மேட்டுத்தானம்பட்டி, கந்தனூர், சாவடியூர்,குள்ளமுடையானூர்,நரியனூர்,மல்லிகுந்தம், பூரல்கோட்டை,காலாண்டியூர், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பதினெட்டு கிராமங்களில் உள்ள மாரியம்மனுக்கு அந்தந்த ஊருக்குண்டான வழமொறை,வாமூல் என்னென்னவோ அந்தப்படியே நோம்பி சாட்டிவிடுவார்கள். 


இந்தப்பிரகாரமாகத்தானே பூரல்கோட்டை மாரியம்மனுக்கு காதறுத்து* ,கம்பம் நட்டு*, கம்பளிக்கூத்தாடிச்* சாட்டிய பதினைந்து நாள் சாட்டுக்கு அன்றாடம் பனிரெண்டு வகை தாளத்திற்கு சாரிக்கு எவ்வேழுப்பேர், பதினாறு சாரியாக நின்று இளவட்டங்கள் ஆடும் மாரியாத்தா ஆட்டத்தில்(சேவாட்டம்) ஊரே அல்லோகலப்பட்டுக்கொண்டிருந்தது. பதிமூன்றாம் நாள் திங்கள் அம்மன் அழைப்பு, பதினான்காம் நாள் செவ்வாய் இராவிளக்கு, கடைசிநாள் புதன் பகல் விளக்கு, அந்தியில் அலகு குத்து,பூங்கரகம், அக்னி கரகத்தோடு வண்டிவேசம், குதிரை வேசம்,நரி வேசம், வாணவேடிக்கை என்று இந்த அமர்க்களம் போதாதென்று குருநாதவாத்தியாருக்கும் வெற்றிலைப்பாக்கு கொடுத்திருந்தார்கள் கூத்தாட. மூணேகால் உரூவா ஒத்திக்கு காந்த விளக்கை கொண்டுவரும் சேலத்துக்காரன் இன்னும் வந்துசேர்ந்திருக்கவில்லை. 


பார்க்கின்றவரைக்கும் பார்த்துவிட்டு கொடுவாள்முனையில் மேட்டூர் பழம் மல்லை சுற்றி பந்தம் முடைந்து சீமெண்ணையில் நனைத்து பற்ற வைத்து அதையிருவர் வாகாக பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர். அதிகாலையிலிருந்து அந்திவரை குடித்த ஒருமரக்கள்ளுக்கும் செலவுச்சாமான்கள் ஏதுமின்றி வெறும்குறுமிளகிட்டுப் பிரட்டிய வெள்ளாட்டுக்கறிக்கும் அமைந்த தோதில், இன்னும் துளி, இன்னும் துளியென ஒரம்பரை சரம்பரைகளை உற்றார் உறவினர் வஞ்சனையின்றி உபசரிக்க, அதில் நெகிழ்ந்து போய் நாலுவாய்ச்சோற்றினை எச்சாக உண்ட மயக்கத்தில் சனம் ஒருவிதமான கிறக்கத்துடனேதான் கூத்துப்பார்க்க காத்திருந்தார்கள்.

பூசைப் போட்டாயிற்று, பொட்டி மத்தளத்தை வெளியே எடுத்து வைத்தாயிற்று, களரிக்கூட்டி கூத்தும் துவக்கமாயிற்று. பாத்திரங்களை பங்கு வைத்துப் பிரித்துக் கொடுத்தப்பின்பு வரிசைக்கூத்தாகயிருந்தால் குருநாதவாத்தியார் வேசங்கட்ட உக்காருவதற்கு முன்பு காற்றாட சற்றெங்காவது ஒதுக்குப்புறமாக துண்டை விரித்து கண் அயர்வது வழக்கம்.முந்தி தோன்றிய கோமாளி வேடதாரியும் உடன் தர்பாரான தலை வேடதாரியும் துருவதாளத்தில் ஆடிக்கொண்டிருக்க சபை அந்த ஆட்டத்தில் மெய்ம்மறந்து அமர்ந்திருந்தது. கூத்தாடிகளுக்கு ஆக்கிப்போடவா நான் தாலிக்கட்டி நீரு வைத்துக்கொண்டேன் என பெண்டாட்டிக்காரி பிணங்கிக்கொண்டுவிட்டதால் வந்திருந்த ஆட்டக்காரர்களை வீட்டிற்கு ஒருவராக சோத்துக்கு அனுப்பியதில் பந்தி விசாரிக்க முடியாமல் போயிற்று.

அதும்போக ஊர் முகாமியாக தானிருக்க, உள்ளூரில் விசேசம் நடந்துக்கொண்டிருக்க கூத்தாடிகளுக்கு ஒரு நாலணாவோ, எட்டணாவோ எனாங்கொடுக்காமல், ஒரு வெற்றிலைப்பாக்கு பொகையிலை நறுக்கு வாங்கிக்கொடுக்காமல், கொட்டாங்குச்சியில் வார்த்துக்கொடுக்கும் டீத்தண்ணியோ, ஒரு சுக்குத்தண்ணியோ ஏற்பாடு பண்டாமல் இருந்துவிட்டால் இதுகாறும் செய்து வந்த பண்ணாட்டுத்தனத்திற்கு அதனாலொரு பின்னம் நேர்ந்துவிட்டால் எதைக்கொண்டு அதனை ஈடுக்கட்டுவது? கவுண்டா கவுண்டான்னா ஓய்ங்கிறான்! ஒராளுக்கு சோறுடான்னா ஊகூங்கறாண்டா இந்தூரு கவுண்டன்! என்று மணியக்காரர் வீட்டில் கை நனைத்துவிட்டு வருகையில் ஏவிடியம் பேசிய எடக்கு பிடித்த கூத்தாடியொருவன் அதை எத்தனை ஊரில் போய்ச்சொல்லுவானோ! என்ற விசனமும் சேர்ந்துகொள்ள, எதற்கும் ஓருப்பூட்டு எட்டி பார்த்துவிட்டு போகலாமென்ற கட்டாசாரத்தில் ஊர் மந்தைக்கு அவர் தனது சாரட்டுவண்டியை திருப்ப விளைந்தது வம்பு! முக்கியஸ்தர் உக்காருவதற்கென்று தருவிக்கப்பட்ட நாற்காலியில் தன் சரீகலத்தை ஓய்வாக சாய்த்திருக்க ஒருகணமுமவருக்கு இருப்புக்கொள்ளவில்லை. 

பத்துத்தலை ராவணேசன் கொலுவில் பதிக்கெட்ட குரங்கு வால்கோட்டையிட்டு அமர்ந்தாற்போல ஒண்ணானப்பட்ட பண்ணாடி தன் எதிரே மத்தளமடித்த பறையனும்,குழலூதிய பறையனும் பெஞ்சுப்போட்டு குந்தியிருப்பதா? காண மனம் ஒப்புமா? அண்ணாருக்கு கோபம் வந்து கண்கள் சிவந்தால் அடிப்பொடிகள் சும்மாயிருப்பார்களா? "ஆரடா கூத்தாடி? எவண்டா வாத்தியாரு? ஊளச்சாதி கழுதைங்களா! ஒங்க பொச்சிக்கெட்டக் கேட்டுக்கு அட்டாலிக் கேக்குதா? மண்ணுல குந்தி மத்தாளமடிக்கிறதுன்னாதாங் கூத்தாடும்! இல்ல தல தனியா முண்டந்தனியா கெடக்கும்!" என்று மிரட்ட மத்தாளக்காரர் பள்ளிப்பட்டி பெருமாளும், குழல்காரர் வேலாயுதமும், பெட்டிக்காரரோடு மூவரும் விரித்துப்போட்ட கோணிப்பைமேல் சத்தமில்லாமல் உட்கார்ந்து வாசிக்கலாயினர். இந்த அமளி துமளியில் தூக்கம் கெட்ட குருநாதன் முழித்தெழுந்தார். விசயம் தெரிந்தது, வேறுப் பேசவில்லை. 


மானம் மருவாதி கெட்டு கூத்தாடமாட்டேன்! என்று கூத்தை நிறுத்தி விட்டார். வந்தது சண்டை! கூடியது பஞ்சாயத்து! கண்டால் கையெடுக்கும்படி விதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவனின் குரல் கேட்க நாதியற்று காற்றில் கரைந்துப் போனது. தளரவில்லை குருநாதன்," சாமி நீங்க படியளக்கற பரமேஸ்பரனா இருக்கலாம்! பதனெட்டுப்பட்டிக்கி ராஜனா இருக்கலாம்! பெரிய்ய நாயாதிபதியா இருக்கலாம்! நீங்க தொட்டு இழுத்தாதான் மேச்சேரித்தேரு மறு அடி நகருங்கறது உம்மயாக்கூட இருக்கலாம்! அது பத்துப்பேரா ஒத்துக்கிட்ட சங்கதி! அதுல உங்களுக்கு பவுருண்டு! பங்கு பாத்தியமுண்டு! அவுத்த உங்க பேச்சி செல்லும்! 

கூத்து உங்களுக்கு தெரியாத பொருளு! அங்க என்னய படைச்ச பிரம்மாப் பேச்சின்னாக்கூட நானு வெச்சிக்கமாட்டன்! ஜதியும் சுதியும் புருசம் பொண்டாட்டி மாதர! புருசங் கட்லு மேலயும், பொண்டாட்டி பாயி மேலயும் படுத்திருந்தா சம்சாரம் நெறக்குமா?நானு நின்னுக்கிட்டுப் பாடி அவிங்க ஒக்காந்தி அடிச்சா மேளக்கட்டு நல்லாயிருக்குமா? ஆஞ்சியோஞ்சிப் பாக்காட்டி நாயஞ்செத்துப்போவுங்க! நேந்து நெரவுங்க செத்த!" என்க, அவருதவிக்கு எழுந்து நின்ற சனத்திரளைக்கண்டு கருப்புச்செட்டியாரும் தணிந்து நிதானித்து," டேய் இவனென்றா தெரிஞ்சப்பொருளு, தெரியாதப்பொருளுன்னு புது நாயம் போடறான்? ஒண்ணும் பிருவாத் தெரியிலியே! கூப்புடுறா வாயாடிப்பூசேரிய! வாக்கு கேட்டு அவஞ் சொல்ற மாதரச் செய்வம்." என்றுமருளாடியை அழைத்து சாமி வருந்தினர்.

 உடனே அம்மன் பிரசண்டமாகி பூசாரி மீதிறங்கி,"எளச்சவிங்கன்னு எளக்காரமா நெனைக்காதீங்கடா! அவிங்களும் எம்மக்கமாருதாண்டா! ஒசக்க ஒக்காந்தி அடிக்கச் சொல்றா!" என்று தீர்க்கபிரச்சனை முடிவுக்கு வந்து அந்த இரவு மட்டுமல்ல, தொடர்ந்து அந்த வட்ட வாகறையில் ஏழு ராத்திரி கூத்தாடினாராம்!. கலைஞனுக்கு தன் சுயத்தை விட்டுக்கொடுக்காத மன உறுதி வேண்டும். குருநாதன் கலைஞர் மாத்திரமல்ல நல்ல மனிதரும் கூட.

எடப்பாடி தாதாபுரம் காட்டுவளவைச் சேர்ந்த குருநாதனுக்கு உடன்பிறந்தோர் ஐந்துபேர். மூன்று தமையன்கள், இரண்டு தமக்கைகள்.தந்தை வீரய்யனுக்கும்,தாயார் பாவாயிக்கும் செல்லப்பிள்ளையாக வளர்ந்த குருநாதனின் பால்யகாலம் சேட்டைகளும், வாய்த்துடுக்கும், விளையாட்டுப் புத்தியும் நிரம்பியதாக இருந்ததினால் திண்ணைப்பள்ளிக்கூடமும் அங்கிருந்த முரட்டு வாத்தியாரும் அவருக்கு வேப்பங்காயாய் கசந்துப் போனதில் வியப்பேதுமில்லை.பிறகு தன் மாமன் மகனுடன் சேர்ந்து அரிச்சுவடிகளை தானே வாங்கிப் படித்துக்கொண்டு வந்தவருக்கு அதன் நீட்சியாக பிற்காலத்தில் கூத்துப்பிரதிகளை படைக்கும் அளவிற்கு அந்த கனமுள்ள வாசிப்பனுபவம் கைக்கொடுத்திருக்கிறது.

 பள்ளி நிழல்தானுறியாத தன் மகன் எண்ணற எழுத்தற துருசாகப் படிப்பதை பார்த்த தந்தையாருக்கு ஓரெட்டில் சந்தேகம் மண்டி பையனுக்கு பைத்தியமென்று ஊரெல்லாம் தூற்றிவிட, சொந்தக்கார பெரியவர்கள் இருவர் குருநாதனை சோதித்து அப்பாமர தகப்பனின் ஐயம் போக்கியுள்ளனர். தாதாபுரம் கரட்டுப்பெருமாள் கோயிலுக்கு செலவடை கொன்னவாயன்* அவர்கள் வந்து அலங்காரம் வரிக்க லைட்டு கம்பத்தடியிலிருந்து அதைப்பார்த்தவருக்கு கூத்தின் மேல் ஆர்வம் பிறந்திருக்கிறது. பிறகென்ன எந்த ஊரில் கூத்தென்றாலும் கிழடு கிண்டுகளோடுஅரையில் மொட்டக்கோவணம்,தோளில் மேல் சுண்டு சகிதமாக, நடைத்துணையாகச் செல்லும் வாத்தியாரையும் முதல் ஆளாக அங்கேப் பார்த்துக்கொள்ளலாம். கண்டதை காலாடிப்பார்க்க, காதால் கேட்டதை வாய்ப்பாட ஆடு மாடு மேய்க்குமிடமெல்லாம் குருநாதனுக்கு கூத்தாடும் சபையாகிப்போனது. 

ஆசை பித்தாகி ஆட்டுவிக்க, உள்ளூரில் குடியிருந்த பழைய கூத்தாடி பொன்னான் வாத்தியாரிடம் இவர் வேண்டியதற்கிணங்க, அவராடிய துரோபதை துயில் கூத்தில் முதன்முறையாக அர்ச்சுனன் வேடங்கிட்ட, கரட்டுப்பெருமாள் முன்னிலையில் குருநாதனவர்களினுடைய அரங்கேற்றம் நடந்தேறியிருக்கிறது.பின்தொடர்ந்த நாட்களில் சொந்தமுயற்சியில் தன் வயதொத்த சகாக்களுடன் சத்தியவதிக் கல்யாணம், கிருஷ்ணன் பிறப்பு,போகவதி கல்யாணம் போன்ற கூத்துக்களைப் பயின்று நிகழ்த்தி வந்தவருக்கு பதினாறு வயதில் மேச்சேரி சடையன் வாத்தியாரின் பாஞ்சாலக் குறவஞ்சி கூத்தைப் பார்த்தப் பிற்ப்பாடு ஓர் திருப்பம்! அதில் சடையன் புனைந்த குறத்தி வேடத்தாக்கத்தில் தானும் சிலவருடங்கள் பெருங்கொண்ட பெண் வேடங்களை விரும்பியேற்று அவைத்தோறுந் துலங்கி கோரிய வாலிபத்தில் மூண்ட இருபது வயதிலெல்லாம் தக்கப்படியான கூத்தாடி என்று பேர் எடுத்து விளங்கியிருக்கிறார். 

அன்று தொட்டு இன்று வரை அறுபதாண்டு காலங்களுக்கு மேலாகியும் இக்கலைச்சங்கின் சங்கநாதம் ஓயாது தொனித்தபடியேயிருக்கிறது. எனது விடலைபருவத்தில்தான் வாத்தியாரின் கூத்தைப் பார்க்க வாய்த்தது. அப்பொழுது எனக்கு பதினான்கு அல்லது பதினைந்து வயதிருக்கும். ஏர்வாடியிலிருந்து மாதநாயக்கன்பட்டிக்கு விருந்தாடப் போயிருந்தோம். காது குத்து- கல்யாணம், நோம்பி- நொடி,வீட்டுச்சாமி- காட்டுச்சாமி,தேரு-தெவம் என்று வந்துவிட்டால் மேச்சேரி பகுதிகளில் ஒரம்பரை அழைப்பு என்றவோர் சம்பிரதாயம் இன்றளவும் உண்டு. விருந்துக்கு கூப்பிடுவதென்றால் சும்மா அல்ல! ஒரு ஊரில் விசேசமென்றால் பெண்டுகள் பேசிவைத்து முப்பது நாற்பதுபேர் ஒன்றிணைந்து அக்கம்பக்கமோ, தூரந்தொலைவோ அதெங்கிருந்தாலும் உறவினர் வீட்டுக்கு கட்டெறும்புச்சாரிப்போல் படையெடுப்பார்கள்.


ஒரு வீட்டில் எத்தனைப் பேரிருந்தாலும், சிட்டாமுட்டிகளானாலும் சரியே அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே "நோம்பிக்கி வாங்க! நோம்பிக்கி வாங்க! என நெஞ்சார அழைத்து மனதார விருந்தளிப்பார்கள். அந்தச்சோலி, இந்தச்சோலி என்று சாக்குச்சொல்லி காரியத்தின் பேரில் விருந்துண்ண வாராதவர்களை "கொன்னவாயன் சமா- குருநாதன் சமா, சடையன் சமா- சின்னாளு சமா,பாப்பம்பாடி சமா- கன்னந்தேரி பச்சமுத்து சமா கூத்தாடுது சோத்துக்கு வராட்டிப்போவுது! கூத்துப்பாக்கவாச்சும் வந்துட்டு வருவீங்களாம் வாங்க" நோம்பி கும்பிடுவதின், விருந்திடுவதின் சிறப்புக்கூறாக கூத்தை முன்வைத்து அழைப்பதும் வழமை. ஆண்கள் கறிபோட, பெண்கள் சாந்தறைக்க என மாயாத வேலைகளை பகிர்ந்துக் கொள்ளும்போதே கோப தாபங்கள், குற்றம் குறைப்பாடுகள்,கஷ்ட நஷ்டங்கள், உதவி ஒத்தாசைகள் பரஸ்பரம் பரிமாறி ஒருவருக்குள் ஒருவர் இளைப்பாறிக்கொள்வார்கள். பேச்சு திசைத் தப்பி வார்த்தை தடித்து சண்டையிட்டு மண்டை உடைத்துக் கொள்வதும் நடக்கும்.

குருநாதவாத்தியாரின் சமாவினரை வைத்து பள்ளத்து கட்டேறுப்பன்* தெவத்துக்கு அன்று "வன்னியன் பிறப்பு" கூத்து வைத்திருந்தார்கள். முன் வந்த பாத்திரங்கள் களைத்து ஓய்ந்த மூன்று மணி கருக்கல், அங்கமெலாம் தீயெரிய அதிவீரவன்னியனாக குருநாதன் சபையில் தோன்ற உக்கிரமாகி தகித்தது.சுமார் இரண்டரை மணிக்கூறுகள் ஆயிற்று அந்த பாத்திரத்தின் தர்பார் விருத்தாத்தங்கள் முடிவதற்கென்றாலும் கூடிய அச்சபையினின்று ஒருவரும் அசைந்தவர்களில்லை. பார்த்தகண் பூக்கவில்லை, கேட்ட காதடைக்கவில்லை! கைகள் பொத்தி, வாய் பதைக்க பக்தி சிரத்தையோடும், தொற்றவைத்த பதட்டத்தோடும் கூத்தை கண்டு களித்திருந்தோம்.இரண்டாம்முறை குருநாத வாத்தியாரைச் சந்தித்தது கரும்பு சாலியூர் ஊத்துக்கோம்பை மாரியம்மனுக்கு* 'சாரங்கதாரா ' கூத்தாட வந்தபோது. உடாங்கனை கனவு நிலையென்னும் 'வாணாசூரன் சண்டை' எனுமோர் கூத்தைப்போன்றே சாரங்கதாராவும் புழக்காட்டத்திலிருந்து அருகி மறைந்து வருமொரு கூத்து.

 அர்ச்சுனன் மகன் அபிமன்யு, அபிமன்யு மகன் பரிச்சித்து, பரிச்சித்து மகன் ஜனமேஜெயன், ஜெனமேஜெயன் மகன் சுரேந்திரன், சுரேந்திரன்மகன் நரேந்திரன். இந்த நரேந்திர மன்னன் சபையில் தோன்றுவது முதல் மகன் சாரங்கன் சித்திரத்தைக் காட்டி சித்ராங்கியை நயவஞ்சகமாக ஏமாற்றி மணம் முடிப்பது,அந்த ரகசியத்தை மைந்தனிடம் சொல்லப்படாதென்று மந்திரிகுமாரானாகிய சுபந்திரனை நிர்ப்பந்தஞ் செய்வது, மந்திரிகுமாரனும், சாரங்கனும் புறாப்பந்து விளையாடுவது, எதிர்பாரா சந்தர்ப்பத்தில் சாரங்கனின் மணிப்புறா சித்ராங்கி மடியில் தஞ்சமடைய, மீள புறாவைப் பெறும் பொருட்டு சாரங்கன் அந்தப்புறம் ஏகுவது, சித்திரத்தில் கண்டவன் இவனென துணிந்து சாரங்கனை சித்ராங்கி புணர்ச்சிக்கு அழைப்பது, மறுத்தவன் வெளியேற, வெஞ்சினங்கொண்டவள் சாரங்கன் மீது வீண்பழிப் போடுவது, மனையாட்டி சுமத்தும் குற்றத்தை ஆராயாமல் நரேந்திர மன்னன் மகனை மாறுகை, மாறுகால் வாங்குவது ஈறாக இந்த கட்டங்களெல்லாம் வாத்தியார் நடத்தும் சாரங்கதாரா கூத்தில் செறிவார்ந்தபகுதிகள்.


 கதையோட்டத்தின் பல நிலைகளை குருநாதனும் அவர்தம் சகாக்களும் மெனக்கெடாமல், இயல்போட்டம் மாறாமல் அந்த புராதான காலத்தை கரைந்து நிற்றல் வழி அப்படியே கண்முன் நிறுத்தியப் பாங்கு அசாத்தியமானது.மூன்றாவது முறை நேரிட்ட சந்தர்ப்பத்தில் வாத்தியார் வல்லிய இடுங்கட்டில் மாட்டிக்கொண்டிருந்தார்.காப்புக்கட்டு முடிந்து தை பிறந்துவிட்டால் ஆடிமாதம் முடியும் மட்டும் ஊரில் இருக்கப்பட்ட சாமிகளுக்கு கொண்டாட்டத்திற்கு குறைவிருக்காது. காமாண்டாருக்கு* படையலிட்ட கரிநாளன்று சாட்டப்பெறும், ஏழு நாள் சாட்டென்றாளும் சரி, பதினைந்து நாள் சாட்டென்றாளும் சரி அதில்விழும் வியாழக்கிழமை மாமூலாக கூத்து நடத்தியே தீருவார்கள். ஊர்ப்பெரியத்தனக்காரர்கள் அவரவர்கள் நேமித்துக்கொண்ட ஜமாக்களுக்கும் இன்னும் பிறவுள்ள புதுமை விரும்பிகளுக்கும் அடிக்கடி மூளும் போட்டி பொறாமை, சண்டை சச்சரவுகளிடையே ஆனைச்சண்டையில் கொசு நசுங்குவதுப்போல வாத்தியார்கள் சிக்கி தத்தளிப்பார்கள். 

நெருக்கடி மிகுந்த இச்சூழலில் அம்மாபேட்டை சரஸ்வதி ஜமா பெரியத்தலைகளான கனகராஜி வாத்தியாரும், கணேசவாத்தியாரும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் ஒரே நாளில் ஆரியக்கவுண்டனூரிலும், குருவரெட்டியூர் அண்ணாநகரிலும் ஆடும்படிக்கு வெற்றிலைப்பாக்கு வாங்கிவிட்டார்கள். சரியானபடிக்கு நிறைந்த தருணம் வேண்டி வேண்டி அழைத்தாலும் மாற்று ஜமாவிலிருந்து ஒரே ஒரு ஆளைப் பெயர்க்கமுடியவில்லை. முன்பணம் கொடுத்தவர்கள் அம்மாபேட்டை அந்தியூர் பிரிவு ரோட்டில் வண்டிப்போட்டுக்கொண்டு வந்து மணிக்கணக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். செய்வதறியாது கையைப் பிசைந்துக் கொண்டு நின்றிருந்தவர்களுக்கு முடை நீக்கிய ஆபத்தாந்தவனாக வந்துச் சேர்ந்தார் குருநாத வாத்தியார்! ஒரே (அபிமன்னன் சுந்தரி மாலை) கூத்தை இரண்டு நிகழ்விடங்களிலும் வைத்துக்கொள்ளலாமென்றும், வேடதாரிகளை மாத்துக்கட்டில் (இங்காடியவர் அங்கு, அங்காடியவர் இங்கு ) பாகமேற்கப் பண்டலாமென்றும், பின்னித்தி மேளத்தோடு இருப்பவர்களை தன்னோடுத் தாட்டிவிடுமாறு பணித்தவர், பன்னிருவர் இருக்குமிடத்தில் வெறும் அறுவரை இட்டுக்கொண்டு ஊர்போய்ச் சேர்கையில் இரவு மணி பத்து. கூத்துப் பார்க்கப் போன நான் ஓட்டை டிவியெஸ் வண்டியில் விடிய விடிய ஆரியக்கவுண்டனூருக்கும் அண்ணாநகருக்கும் சவாரியடித்து சலித்து ஓய்கையில் வாத்தியார்,

அறம் புகழ் ஈன்ற நகர்
அரசுக்கு உரிமையான
அபிமன்னராஜனிதோவந்தேன்
சபையை நாடி

என துடியாக தர்பாராகிக்கொண்டிருந்தார்.

 என் உறக்கச்சடைவை கண்ட சுப்ரமணி(அம்மா பேட்டை கணேச வாத்தியாரின் சோதரர்) சுபத்திரை வேடமிட்டாடிக்கொண்டிருந்தவர் சுருக்கமாக தன் டூட்டியை முடித்துக்கொண்டு வந்த சுருக்கில் அங்கிருந்த இச்சிமரத்திட்டில் என்னை இளைப்பாறச்சொல்லிவிட்டு தான் ஒரு நடை ஆரியக்கவுண்டனூருக்கு போய் வருவதாக வண்டியை வாங்கிக்கொண்டார். தவிரவும் ஆடிமுடிக்கப்படாத சுபத்திரை பாகம் அவருக்கென்று அங்கு காத்திருந்தது. போனவர் போனவரே! வெகு நேரமாகியும் ஆள் துப்பே காணவில்லை! வரவேண்டிய மற்றொருவரும் வந்துச்சேரவில்லை! 

அபிமன்யு கானகத்தில் வேட்டையாடிக்கொண்டிருந்தவர் காதலியாம் மாமன் மகள் கமலச்சுந்தரி எட்டடுக்கு கற்கோட்டை! எறும்பேறா மண்டபம்! பத்தடுக்கு கற்கோட்டை! பாம்பேறா மண்டபத்தில் சிறையிடப்பட்ட சேதியை சுந்தரியெழுதிய நிருபம்கண்டு தெரிந்து சிறைமீட்க தாய் சுபத்திரையிடத்தில் உத்தாரம் பெற ஆனைக்குந்திப்பட்டணம் நோக்கி காற்றாய் பறந்துவந்துக்கொண்டிருந்தார். 

என்னாச்சோ, ஏதாச்சோ தம்பி எட்டிப்பாத்துட்டு வாங்க ஒருவிச, என்று குருநாதவாத்தியார் வேண்ட திரும்ப ஆரியக்கவுண்டனூருக்கு பயணம்போனேன்.எதிரே சுப்ரமணியை தேடிக்கொண்டு அங்கிருந்தொருவர் வரவே எனக்கோ பதட்டமான பதட்டம். கூடி இருவருந் துழாவியதில் பழையூர் முக்கில் எம்.பி நலநிதியில் வடிக்கட்டி எழுப்பிய பேருந்து நிழற்குடையினடியில் மனிதர் நாயொன்றிற்கும் தனக்கும் நடந்த அகோரயுத்தத்தில் மிஞ்சியிருந்த தாய்ச்சீலையினைக் கிழித்து கடிப்பட்ட இடத்தில் கட்டுப்போட்டப்படி விதியே என்று ஒடுங்கிப்போய்க் குந்தியிருந்தார். 

ஆண்வேடமோ, பெண் வேடமோ அதுவெந்த வேடமாகயிருந்தாலும் தரித்தவர் முகமழிக்காமல், கால்களிலிருக்கும் சதங்கைகளை அவிழ்க்காமல் ஆடரங்கை விட்டகலமாட்டார்கள். இட்ட வேடத்திற்கு எதாவதொரு விதத்தில் பங்கம் விளைந்தால் தன் வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய அவகேடாக அதை எண்ணியெண்ணி வருந்துவார்கள். அன்றைக்கிருந்த இக்கட்டில் யாருக்கும் எதையும் பொந்தியிலிருத்த இயலவில்லை. அவதி பகுதியாக கிளம்பியவர் எண்ணை இல்லாமல் முண்டியடித்த வண்டியை நடைப்பழக்கிப்போயிருக்கிறார் தடத்தோர பஞ்சர் கடையில் எப்படியும் எண்ணையைப் பிடித்துக்கொள்ளலாமென்று துணிந்து!. கட்டுத்திட்டத்தை மீறி தனது காற்சதங்கையை அவிழ்க்காமல் சென்றதால் அந்த கலைவாணி சரஸ்வதியே நாயாக அவதாரமெடுத்து வந்து தன்னை தண்டித்துவிட்டதாக வருந்திய அந்த அப்பாவிக்கலைஞனை உடனடியாக பூதப்பாடி மருத்துவமனையில் அனுமதித்தப்பின் உடன் வந்தவரை ஆரியக்கவுண்டனூருக்கு அனுப்பிவிட்டு தக்க கலைஞர்களின்றி இரண்டு பக்க கூத்தும் என்ன கதியானதோ என்ற வாட்டம் மேலிட நான் அண்ணா நகருக்கு விரைந்தேன்.

 குரு நாத வாத்தியார் நெடிது நீண்ட தன் சிகையை விரித்துப் போட்டு சுபத்திரை வேடத்தில் நின்று கண்ணனிடம்,

உரிமைக்காரி நானிருக்க

யாருக்கண்ணா பெண் கொடுத்தாய்

சொந்தக்காரி நானிருக்க

சுந்தரியை!தரலாமா

அவன் பாவி துரியனாச்சுதே

என் ஆவி பதறலாச்சுதே

ஓ அண்ணா மாயக்கண்ணா!

என்று அபிமன்னனுக்கு பெண் கேட்டது ஆச்சரியமென்றால் அதைவிட ஆச்சரியம், தங்கை மகனுக்கு பெண் தர மறுத்ததோடு தகாதமுறையில் அவமானப்படுத்தி கண்ணனும் அவன் மனைவி மலர்மங்கை லட்சுமியும் சுபத்திரையை விரட்டியடிக்க, தாயை அவமதித்த மாமனை கருவறுத்து கமலசுந்தரியை சிறைமீட்ட சபதங்கூறி புறப்படவேண்டிய இடத்தில் பெண் வேடத்தில் உள்ளே சென்றவர் மூன்றடி பாட்டு இடைவெளியில் மீண்டும் ஆண்வேடத்தில் வெளியில் வந்த சுருக்கு. மின்னல் வேக தோற்ற மாற்றம்! யாருக்கு வேண்டுமானாலும் சமயோசிதப் புத்தி வாய்க்கலாம், அது காரியமாவது கலைஞனிடமே! பத்தடிக்கு பத்தடி சதுரம், அம்மண் தரையே கொலுமண்டபம், சபாமண்டபம், அந்தப்புரம், ஆண்டவன் சந்நிதானம், ஆரண்யமான கானகம், படுகளம், பாடிக்கூடாரம்!!!நவீனகால காணூடகங்கள் கொண்டாட்டமாக கட்டமைக்கும் பிரம்மாண்டமான காட்சிப் பின்புலங்களுக்கு நிகரானதொரு காட்சிக்களத்தை தனியொரு கலைஞன் தனது தனித்த மெய்ப்பாடுகள் வழி நிகழ்த்திக்காட்டும் வன்மை குருநாதனவர்கள் நிகழ்த்தும் கூத்திலுள்ளது..

 மற்றுமவர் ஆடும் கூத்துக்களில் சிறப்பம்சங்களென்று தருக்கள் விருத்தங்களைச் சொல்லலாம். (மரபுக்கலை வடிவமான கூத்து பாட்டுக்கள் வழி கதை நகர்த்தும் போக்கை கொண்டது) ஓர் பனுவலாக எழுத்துரு காணாத இப்பாடல்களை நாம் இன்றியமையாதனவொன்றாக கருதி படைப்பாக வடிக்கவேண்டிய காரணம் என்னவெனில் பாட்டன் பூட்டன் காலத்து பழைய சொத்து என்பதனால் மட்டுமல்ல,பொருளோடு புதைந்திருக்கும் கருத்துச்செழுமைக்கும்,வழி வழியாக பல தலைமுறை கண்டபோதும் வகைத்தூய்மை சிதையாத மூல மெட்டுக்கள்,அதன் கட்டுறுதி, இசைக்குந்தோறும் சலிக்காமல் கேட்பவரை மனங்கிறங்கடிக்கும் உள்ளுறைந்த அந்நூதனம்! சாரங்கதாரா கூத்தில் சித்ராங்கி சாரங்கன் சந்திப்பில் இருவருக்குமுண்டான தர்க்கத்தில் அமைந்த தருக்கள் இவை: 

சாரங்கன் சொல் தரு

 இங்குவந்த என்புறாவைமாதாவே தாயே
எடுத்திருந்தால் தந்திடம்மாமாதாவே தாயே
மணிப்புறாவைத் தந்தீரானால்
மாளிவிட்டுச் சென்றிடுவேன் 


சித்ராங்கி சொல் தரு

 மாராப்பு சீலைக்குள்ளே
என் கண்ணாளா
மானு ரெண்டு வெளையாடுது
மானை நீ பிடிப்பதெப்போ
இந்த மங்கை குறைதீர்ப்பதெப்போ
சித்தாட சீலைக்குள்ளே
என் கண்ணாளா
சித்திரம் எழுதியிருக்குது
சித்திரத்த நீ பார்ப்பதெப்போ
இந்த செல்லி குறைதீர்ப்பதெப்போ 


சாரங்கன் சொல் தரு


 விடு விடம்மா மடி விடம்மா
நான் வீடு போய் சேரவேண்டும் 
சித்ராங்கி சொல் தரு 
விடுவதற்கா மடி பிடித்தேன்
மெல்லியாளை என்னைச் சேரும்


 சாரங்கன் சொல் தரு

என் தந்தையாரும் வந்து கண்டால்
தகுந்த பழி நேருமம்மா 


சித்ராங்கி சொல் தரு

 உந்தன் தந்தையாரும் வருகுமுன்னே
 தாட்டிடுவேன் என் மாளிவிட்டு


 சாரங்கன் சொல் தரு 

என்னை கணவன் என்று சொன்னால்
அம்மாஉனக்கு கண்ணு தெரியுமோ
என்னை புருசன் என்று சொன்னால்
அம்மாஉனக்கு புண்ணியம் கிட்டுமோ

 சித்ராங்கி சொல் தரு

 தாயிக்கி பிள்ளையேதடாசாரங்கதாரா
தண்ணி கெணத்துக்கு முறைமையேதடாசாரங்கதாரா
கோழிக்கி முறைமையேதடாசாரங்கதாரா
கொக்குக்கு முறைமையேதடாசாரங்கதாரா


 அச்சரப் பிழையற்ற வசனங்கள், அடிபிறழாத பாடல்கள், தாளம் தப்பாத அடவுகள், பாகத்திற்குண்டான ஒப்பனை, ஒன்றி இயைந்து பகட்டின்றி வெளிப்பட்ட நடிப்பு இவற்றின் மூலம் மட்டுமல்ல, அந்நேரமந்நேரம் தோன்றும் கற்பனையில் குருநாதனவர்கள் நிகழ்த்துதலில் உருவாக்கிய காட்சியற்புதம் அதன் தீவிரம் இன்றளவும் மனதைவிட்டகலவில்லை.தற்செயலாக திறமைசார்ந்த பற்பல அசாத்தியங்களை வெளிக்கிட்டுக்காட்டும் அளிக்கை குருநாதனவாத்தியாரின் கூத்தில் ஓர் தனித்த பண்பாகும். தொடர் ஒத்திகை, நெறியாள்கை முதலான அறிவுத்தளத்திலமைந்த செல்நெறிகளினின்றும் அதை தனித்தே இனங்காணலாம்.அறிவனுபவமாகவும், உணர்பனுவமாகவம் உள்ள படிமம் கவிதையை உன்னதமாக்கும் அத்தன்மைப்போல் அவர் பாத்திரத்தோடு பொருந்தி அதில் பற்பல மெய்ப்பாடுகளை பொதிந்து பார்வையாளனின் உள்ளத்தில் உணர்வெழுச்சியை உண்டுச்செய்யும் சமத்காரம் அவர்தம் ஆளுமையை கட்டியம் கூறும் பிரதான கூறு. 

கற்றலும் கற்பித்தலும் கலைஞனை புதுப்பிக்குமோர் பாரிய செயற்பாடு! நிகழ்வுதோறும் கற்றுதெளிந்ததோடு மெய்வேல்,நல்லூர் பெரிய மாது, சாத்தனூர் வெள்ளையன்,பொன்னான்,சோரகை மணி, மட்டம்பட்டி பழனி,போன்ற வளப்பமான சீடப்பிள்ளைகளை வளர்த்தி ஆளாக்கி நிகழ்த்து கலையுலகில் அழியாச்சுவடுகள் பதிக்க வைத்துள்ளார் வாத்தியார். 

இங்குகலைஞனென்றும் கலைவாழ்க்கையென்றும் பேதங்களில்லை.வறண்டபூமியில் பொங்கலிட்டு உண்டுகளித்த உடல் உழைப்பாளிக்கு, நாளுக்கு நாள் கூடிய உழைப்பில் பாடு ஏற்றிய சேகு ஆகச்சிறந்த கலைக்கூறுகளை அவனுள் உற்பவனம் செய்வதோடு அவனை வாதைகளை பகடியாக்கும் தேர்ந்த கலைஞன் ஆக்குகிறது. 


காதறுத்தல்:

நோம்பி சாட்டும் முகமாக நடப்படும் கம்பத்திற்கு (மூன்றடிக்கு ஐந்தடி ஆழம்) வெள்ளாட்டு கிடாயின் காதறுத்து இரத்தப்பலி கொடுத்த அன்றைக்கு மரம் தேர்ந்து அக்கம்பத்தில் உருவம் வடித்தமைக்காக ஆசாரிமார்களுக்கு அக்கிடாய் இனாமாகக் கொடுக்கப்படும். கம்பம் நடுதல்:கம்பம் நடுவது நோம்பி சாட்டுதலில் முக்கியமான சம்பிரதாயமாகும். கார்த்த வீரியார்ச்சுனனை மனதிலெண்ணியது ஓரு குற்றமென வன்கொலை செய்யப்பட்ட ரேணுகா பத்தினி உருமாறி தெய்வமாக நின்றபோழ்து அம்மணி உனைப் பிரிந்து யாம் உய்வது எங்ஙகனம்? என்று ஜமதக்னி முனிவர் தம் பெண்டாட்டியை கேட்க, கலியுகத்தில் மக்கள் எனக்கு நோம்பி சாட்டி விழா எடுக்கும் அந்த பதினைந்து தினங்கள் மாத்திரம் கம்பத்தில் வனைந்த சிற்பமாக தன்னோடு உறையலாம் என அம்மன் சொன்ன ஐதீகப் பிரகாரம் முற்றிய பாலை மரத்தை தேர்ந்து ஆண் உருவை செதுக்கி தூய நீராட்டி மஞ்சள் சந்தனம் தடவி சிறப்பு பூசனையிட்டு கோயில் தலைவாசலில் அம்மன் முகம் பார்க்கும்படி நட்டு விடுவார்கள்.

கம்பளிக்கூத்து

மாமன் மைத்துனர் முறையுள்ள உறவுக்காரர்களிரண்டுபேர்களுக்கு உடலில் கம்பளி சுற்றி, முகத்திற்கு மாறுபட்ட ஒப்பனை செய்து தாளக்கட்டுக்கு ஏற்றவாறு அடவில் பகடி கலந்து ஆடும் ஆட்டம் கம்பளிக்கூத்து. இதற்கென்று பாடப்பெறும் தனிப்பாடல்களும் உண்டு. 


செலவடை கொன்னவாயன்

சொந்த பெயர் குஞ்சிப்பையன்.தந்தையார் இராமசாமி படையாச்சி சேவாட்டத்தில் மிகச்சிறந்த விற்பன்னர். தகப்பன் வழி காலடவு ஆட்டங்களில் விஞ்சிய ஆட்டம் கொன்னவாயன் அவர்களுடையது. கூத்தில் தனக்கென்றுவோர் தனி பாணி அமைத்து அதையும் சிறப்பாக செய்து வந்தவர்.சாரங்கதாரா கூத்தில் அவரிட்டு விளையாடும் சாரங்கன் வேடம் மக்களிடையே வெகுவான மதிப்பை பெற்றது.

கட்டேறுப்பன்( கட்டு ஏரியப்பன்):

சேலம் ஜில்லா, மேட்டூர் வட்டார வன்னிய குடிகளின் காவல் தெய்வமாகிவிட்ட மூத்த குடித்தலைவன். முஸ்லீம் பெண்ணை சிறையெடுத்து (நங்கியம்மனாக) இணை சேர்த்து கொண்டதனால் வழிபாட்டு முறைகளும் இசுலாமிய வழிபாட்டு முறைகளையொட்டிய பழக்கங்கங்களாக உள்ளது. (அருள் வந்து சாமி பேசுகையில் உருது மொழியில் பேசுவதாக சொல்கிறார்கள். மண்டிபோட்டு வணங்குகிறார்கள்.) ஆதி பதி வாணியம்பாடி திருப்பத்தூரிலும், இன்ன பிற பதிகள் சேலம் கீரை பாப்பம்பாடி, மாதநாயக்கன் பட்டி, கொப்பம் புதூர் ஆகிய இடங்களில் கிளை பிரிந்து அமைந்திருக்கிறது.


 காமாண்டார்

தைமாதம் மூன்றாம் கிழமை கரிநாளன்று காலை, பிள்ளை பிராயத்திலுள்ள இருபால் சிறார்கள் மணியடித்து பாட்டுப்பாடி ஊர் சோறெயெடுத்து பிள்ளையார் கோயில் முன்பதாக கூடியதை உண்ட பிற்பாடு அங்கிருந்து ஒரு அரை மைல் தூரத்திற்கு ஒட்டப்பந்தயம் விடுவார்கள். தோற்றவர்கள் ஆணோ பெண்ணோ அவர்களை காமாண்டார் பெண்டாட்டி என தெரிவு செய்துஅன்று மாலைபொழுது இறங்கியபின் ஆறோ, ஏரியோ, கிணறோ ஊர் எல்லையிலுள்ள நீர் நிலைக்கு சென்று களிமண் எடுத்து வந்து ஆணுரு (காமாண்டார்) பெண்ணுரு(காமாண்டார் பெண்டாட்டி) பிடித்து வைக்க அவரவர் பெற்றவர்கள தங்கள் குழந்தைகளுக்கு இட்டு அழகு பார்ப்பதுபோல வெள்ளியோ,தங்கமோ, பித்தளயோநகைகளை அப்பிரதிமைகளுக்கு போட்டு அலங்கரித்து கூடி நின்று கும்மியடித்து,மாவிளக்கோடு பழந்தேங்காய் படைத்து வழிபடுவார்கள். பெரும்பாலும் பிள்ளை வரம் கேட்டு வரும் கோரிக்கைகளே அதிகமுமிருக்கும். விடிந்தபின் அப்பொம்மைகளை மீண்டும் பிள்ளையார் கோயில் வாசலில் எரியூட்டிவிடுவார்கள்.

சனி, 15 நவம்பர், 2014

மாண்டும் மறக்கவில்லை மாது பெண்ணாசை செத்தும் மறக்கவில்லை சீமாட்டி கண்ணாசை

கோவிலன்  சரித்திரத்தின்  மூன்றாவது  ராத்திரி பாண்டியன்  சண்டை -கூத்து

 நிகழ்வும்  கலைஞர்களும் - ஓர்  பதிவு -தவசிக்கருப்புசாமி


பசியோடு  அலைய வச்சான்  அந்த  பரமன்

ருசியோடு  நூறு  கலைகள் ...!கசியும் மனம் ...!

நிற்கவச்சி   ஏங்கவச்சி காக்கவச்சி  கற்க வச்சி

விற்கவும்  வச்சிட்டா  னே-

  -ஆகாசம்பட்டு  சேஷாசலம்








தருணமின்னும் துவங்கியிருக்க  வில்லை . அங்கொன்றும்  இங்கொன்றுமாக வேண்டுதலை கூத்துகள்  நிகழ்ந்த  வண்ணமிருக்கின்றன . இருக்கப்பட்ட  ஜமாக்களில் எகாபுரம்  சுப்ருவும்  எலிமேடு  வடிவேலுந்தான் வருடம்  முச்சூடும்  நிறை  செலுத்துபவர்கள் .நிகழ்த்துதல் பாங்கின்    குலையாத கட்டுறுதி .உறுத்தாத  எளிமை  சுப்ருவுக்கு  நிரந்தர  பார்வையாளர்களையும்  ஆதரவாளர்களையும்  பெற்றுத்தந்திருக்கிறது . செல்லுபடியாகாத  இந்த  ஐப்பசி மாதத்தில்  கூத்துக்கலைஞர்  பெரிய சீரகாப்பாடி க . ராசுவை  தொடர்ந்து   மெய்யழகன் அவர்களும் மாரடைப்பால்  காலமானதை  அடுத்து  ரொம்பவும்  மனம்  கனத்து போய் திரிந்துக்கொண்டிருந்தேன் .ஒன்றன்  பின்  ஒன்றாக  இருவர்  இரண்டு  முக்கிய புள்ளிகளை  மண்ணுக்கு  வாரிக்கொடுத்த  இழப்பிலிருந்து  இன்னும்  மீள  முடியவில்லை ....






ராஜுவின்  நினைவஞ்சலி  கூட்டத்துக்கு வாத்தியாரை  அழைக்கும்போதுதான் வெள்ளையம் பாளையம்  மூலக்கடை  பாட்டப்ப சாமிக்கு  கூத்து  விட்டுருக்கும்  தாக்கல் சொல்லி  கூத்துப்பாக்க  கூப்பிட்டார் .கொங்கு  மண்டலத்தில் அரங்கக்கலை வழிப்பாட்டுச்சடங்கு களின்  ஓர்  இன்றியமையாத  கூறு .   சுண்டமேட்டூர் ஆயீ  கோவில் , செங்கோடம்பாளையம்  மேடை  பெருமாள்  கோவில் ,வெள்ள கரட்டூர்  பெருமாள்  கோவில்  மற்றும்  ஊர்ப்புற  அம்மன் கோவில்  நோம்பிகளில்  கூத்து ஓர்  இரவு  கட்டாய  நிகழ்வு .




ஒன்பதரை  மணிக்கெல்லாம்  சின்னு  கோமாளி  தர்பாராகி  விட்டார் . மரம்  பழுத்தாலும்  புளிப்பு  குறையவில்லை , அழுத்ததிருத்தமான அதே  பகடி  எள்ளல் .ஜமா  விருத்தாந்தங்களை  சொல்லி  நிகழ்வு  ஏற்பாட்டாளர்களை வாழ்த்தி  அன்றைய  கூத்து  கோவில சரித்திரத்தின்  மூன்றாம்  இரவு  பாண்டியன்  சண்டை  என  முன்னறிக்கை  செய்யப்பட்டது . பாரத -இராமாயண- இதிகாச  புராண  கதைகள்  உட்பட  180  கதைகள்  கொங்கு சீமை  நிகழ்த்துவெளியில்  நிகழ்த்தப்படுகின்றன .பிரதி  வழி நாம்  வாசிக்கும்  சிலப்பதிகார  கோவலன்  கதையிலிருந்து  மக்கள்  உருவாக்கிய  இக்கதை  மாறுப்பட்டது .


காவிரிப்பூம்  பட்டினம்  வாழ்  கப்பல்  வியாபாரி மாத்தோட்டான் செட்டி  மனையாட்டி  வருணமாலை   தமையன்  வீட்டு திருமணத்திற்கு சீர்  கொண்டு சென்றும்  பிள்ளை  இல்லா கொடுமைக்கு  வரிசையின்றி அவமானப்பட்டு   திரும்புகிறாள் . தவமிருந்து  அவள்  கோவலனை  பெறுவது  ஒரு  ராத்திரி  கதை . கோவலன்  கண்ணகியை  மணந்து  மாதவியிடம்  அடிமையாகி  மீண்டு   வருவது  ஒரு ராத்திரி கதை.. சிலம்பு விற்க  போகும்  கோவலன்  மதுரை  வஞ்சி  பத்தான்  ஆசாரி  சதியில்  கொலையாகுவது  மூன்றாம்  ராத்திரி கதை ...

பார்வை வடிவ  படிம  மொழியை  ஆடும்  சபையில் செயற்படுத்தும்  கூத்தாடி  நிகழ்த்துதல்  மூலம்  சுவை  உணர்வை  அனுபவமாக சமைத்து தருகிறான் .கருத்து  புலப்பாடு  அதன் காத்திரமான அங்கம். ..கலைஞன்  எண் வித   உணர்ச்சி  குறிப்புகள்   மற்றும் குரல் வழி- உடல் வழி- அணி  வழி  உள்ளிட்ட  நான்கு வகை  வெளிப்படுத்துதல் வாயிலாக  அவையோருக்கு ஆக சிறந்த  இரசனையை - உய்த்தலை  உண்டாக்குகிறான்   .


சுப்ருவுக்கு  அன்று  தலை  வேடம் ..முதன்மை பாத்திரம் .. சரியாக  இரவு  பத்துமணிக்கு  அரங்கில்  தோன்றியவர் பூர்வோத்திரங்களை  வருணித்து  முடிக்க  ஒன்றரை மணித்தியாலங்கள்  ஆகியிருந்தது ..
கண்ணுக்கு  வெளிச்சமான்  வேடம்...தாளம் - காலம் -சுருதி  பிசகாத பாட்டு வித்தியாசமான  ஆட்டமுறைமை . புத்திக்கு  உறைத்த கதை.

அர்ச்சுனன்  தபசுக்கு - ஜம்பை,  ஆரவல்லி  சண்டை  அல்லிமுத்து  பந்தயம், மதுரை வீரன் ஆகியவற்றுக்கு  சுத்தமான  ஆதி , அண்ணமார்  சரித்திரத்துக்கும்  நூதன  ஓட்ட நாடகமென்னும் சித்தரவல்லி  கூத்துக்கும்-  நொண்டி  சிந்து .....

இந்த  கோவலன்  கூத்துக்கு  ஓரடி ஆதி  சாப்பில்  அமைந்த ஏக  தாள  மெட்டு  வரிசை பாத்தியம் . அத்துடன்    ஆதி, அடவு, திருப்படை,ரூபகம், ஜம்பை, நொண்டிச்சிந்து,கும்மிதாளம் என்ற தாள வரிசைகளையும்  பாவித்து நிகழ்வுக்கு  செழுமை  சேர்த்தார்கள்







ஆசாரி  சிரமறுப்பேன்

 அருந்தாமாலை  ஸ்தனமறுப்பேன்

 பொன்னரசன்  உடல்  கிழிப்பேன்
#
அத்த  அத்த  மாமி  அத்த

ஆகாத  கனவு  கண்டேன்

வாழ மரம்  சாயக்கண்டேன்

வடிவழகன்  சாக  கண்டேன்

தென்ன  மரம் சாயக்கண்டேன்

என் தேசிகரும்  மடிய க்கண்டேன்
#
கொண்டவளை  சிறையில்  வைத்து

கூத்து பார்க்க  போனேன்  அண்ணா

மங்கையாளை சிறையில்  வைத்து

 மாதாட்டம்  பார்க்க  போனேன்  அண்ணா

#



போன்ற  பாடல்களும் - இசையும்  அம்பலக்கலையின் உயிர்த்தளம். ஆம்  கூத்துப்பாதி  கொட்டுப்பாதி .சேகர்  அவர்களும் , மெய்வேல்  அவர்களும்  மாற்றி  மிருதங்கம்  வாசிக்க அன்றைய  கூத்தின்  பிரதான  அம்சம் முகவீணை.




 ரெட்டிப்பாளையம் குப்பன் அவர்களையடுத்து வந்த தலைமுறையில் செல்வம்   முதல்தரமான முகவீணைக் கலைஞர்.  நாபியில் பிறந்து கண்டத்தில் இழைந்து குழல் வழி வழிந்தோடும் நாதம் கேட்பவரை மனம் பேதலிக்க வைக்கும். அகவலிடுவது, அணுக்கள் கொடுப்பது, சரளி வரிசை என்று தேர்ந்த தெளிந்த இசைஞானம் இவருக்கென்றாலும், இழைத்து, இழைத்து நயமாக்கி அவர் வாசிக்கும் குழல் சோகத்தை, மந்தகாசத்தை, அதிகாரத்தை, ஆணவத்தை, அது எந்த உணர்ச்சி வெளிப்பாடாகயிருப்பினும் பிறழ்வு இன்றி பரிபூரணமாக நம்மை உணரவைக்கும் வித்தைகளையடக்கியது.  உயிர் மூச்சை முதலாக்கி செய்யும் இந்த பிறப்புத் தொழிலுக்கு ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு பிரசவம்.  பிராணசங்கடமேற்று, மக்களை மகிழ்விக்கும் இசையை உற்பவனம் செய்யும் இவர்கள் கலைச் சேவை வெறும் புகழுரைக்கானது மட்டுமன்று!.


கரணம்  தப்பினால்  மரணம்  என்பார்கள். தான்  என்கிற வித்துவானோ  அவர்    எப்பேர்ப்பட்ட  விற்பன்னரோ  கூத்தில் கைத்தாளம்  கலைந்தால்   மிருதங்கம்  வாசிப்பவர் மண்ணை  கவ்வ  வேண்டியதுதான் . அந்த  வகையில்  லயம்  தப்பாது  தாளமடித்த  சுந்தரம் - கொழந்தையப்பன்  இருவரும்  கவனங் கொள்ளத்தக்கவர்கள்

 அன்று  கனகு அப்பு  தாசி  வேடம் ஏற்றிருந்தார் .தெருக்கூத்தில் திருநங்கைகளை பங்கேற்க வைப்பதில் முன்னோடியானவர் கூலிப்பட்டி சுப்ரமணி வாத்தியார் அவர்களே! அவரது ஜமாவில் பங்கு பற்றிய ரேகா அவர்களை தொடர்ந்து ஒக்கிலிப்பட்டி சாமியாருடன் இயங்கிய அபிராமி, புவியரசி,ஆகியோருடன் கனகு அவர்களும் கடந்த பத்தாண்டு காலங்களாக வேடங்களிட்டு ஆடி வருகிறார். ஒப்பு நோக்கும்போது திருநங்கையருக்கு ஆடவர் பெண்டிரைக்காட்டிலும் விஞ்சிய கலைத்தேட்டமும்,நுகர்வும், உற்றுநோக்கி உள்வாங்கும் திறனும் இருப்பதை உணரலாம். மண்டோதரி, அதி வர்ணமாலை, துரோபதை, ஏலக்கன்னி போன்ற
பெருங்கொண்ட கதைமாதர்களாக தோன்றும் கனகு தானதுவாகி பாத்திரத்தை கனம்பண்ணுவதோடு அவையை தனது பல்வேறு கோட்டுச்சித்திரங்கள்,பண்பட்ட ஒயிலாக்கம் வழி நிரப்பித்தருகிறார்.

சுப்ரு அவர்களுடன் கரட்டூர்  செல்வம் (பொன்னரசன் ),அய்யந்துரை ( அருந்தாமாலை ) மெய்வேல் (வஞ்சி  பத்தான் )தருமன் (குப்பு  தாசி ) சீனிவாசன் ( சுப்பு தாசி ) செந்தில்  (பாண்டிய  மன்னன்) ஆகியோரும்  பாகம் ஏற்றிருந்தனர் . வாத்தியார்  என்ற  ஹோதாவில் உருட்டி  மிரட்டி   ஆர்ப்பாட்டங்கள்  ஏதும்  செய்யாத  தோழமையுள்ள  மூத்த  கலைஞன் -  அவன் குறிப்பறிந்து  காரியமாற்றும்  சகபாடிகளை  காண  ஆனந்தமாகயிருந்த அன்றிரவு  நன்றிரவு.

பின்னொட்டு

நிழல்  சாய்ந்த  பக்கம்  குடை  பிடித்து  அதிகாரத்தை  கைப்பற்றி  விடும்  புலவர்  பெருமக்களுக்கு  எப்படியோ  சடையப்ப  வள்ளல்கள் கிடைத்துவிடுகிறார்கள் .போஷகரையும்  புரவலர்களையும்  வாசகர்களையும் கொண்டு  சேர்க்க  ஊடகங்களையும்  ஏற்ப்பாடு  செய்த  பிறகே  பேனா  மூடியை  எழுத  திறக்கும்  நாம் . கூச்சமே  படாது  தகுதிக்கு  மீறிய  அங்கீகாரம்  தேடும்  நாம் , வாய்ப்பு  அருகி  நலிவடைந்து  வரும்  நமது  தொல்கலைகளின்  மேம்பாடு, மீட்டுருவாக்கம் , சீர்மை ,ஆவணமாக்கம் ,மதிப்பீடுகள் ,விமர்சனங்களின்   ஊடாக  சாத்தியப்பட்ட  நகர்வு  மற்றும்  சம்பந்தப்பட்ட   நிகழ்த்துக்கலைஞர்களின் வாழ்வியற்   மேம்பாடு குறித்து  ஒரு  சிந்தனை  தொடர்ச்சியை  மேற்கொள்வதுடன் வாய்  பேசிக்கொண்டிருப்பதை  நிறுத்திவிட்டு  வேலை  மட்டும்  பார்த்தால்  எவ்வளவு  நன்றாக இருக்கும் .

கலைஞன்  பார்வையாளன் இவ்விருவருடைய   உறவு  குறித்த ஆத்மார்த்தமான , தீர்க்கமான புரிந்துணர்வு  இல்லையெனில்  கலை  படைப்பது  வெட்டி  வேலை .


http://youtu.be/q7rV8b2P8zg




வியாழன், 13 நவம்பர், 2014

மன்மதன் ரதிக்கி மேலே வனத்தில்வாழும் குறத்தி கேளாய்!

கொம்பாடிப்பட்டி ராஜூ - கூத்துக் கலைஞர்


 ஓர் அற்புதமான கூத்துக்கலைஞன் என்பதற்கப்பால் ராஜீவைக் குறித்துச் சொல்ல நிறைய விசயங்களிருக்கின்றன.  இன்று பெண் வேடம் தரிப்பவர் அறுதி பெரும்பான்மையினர் அவரையே முன்னோடியாகக் கொள்கின்றனர்.  வேடம் ஒன்றுக்கு மாத்திரமல்ல, போடும் ஒப்பனை,  தோன்றும்பாத்திரம்,பாடும் சாரீரம், ஆடும் அடவென்று தனக்கென்ற ஓர் தனித்துவத்தை ஏற்படுத்திக் கொண்டவர். சென்னை லலிதகலா அகாதமியில் நடைபெற்ற  தமிழ்நாடு-கர்நாடக மாநிலங்களுக்கிடையேயான கலாச்சார பரிவர்த்தனை  நிகழ்வொன்றில் பாஞ்சாலி சபதம் கூத்து நடத்த வந்த  ராஜூ அவர்களோடு      மேற்கொண்ட உரையாடலில் பதிவான அவரது வாழ்க்கை பதிவிது!






-----------------எங்க சொந்த ஊரு சுண்டமேட்டூரு, ஆயி கோயிலு, பச்சாயி கோயிலு இருக்குதில்ல அந்த ஊரு.
அம்மா எனக்கு விவரந் தெரியுமுந்தியே  செத்துப் போச்சிங்க.  ஊருக்கு போனாலும், எங்க போனாலும், ஒரு ஒரம்பறைக்கிப் போனாலும்அப்பாதான் என்னய தோலுமேல தூக்கிவெச்சிக்கிட்டு வளத்துனாரு. நல்லபடியாத்தான் வளத்துனாரு.  அப்பையே சின்ன பையனா இருக்கும்போதே கூத்தாடிச்சின்னா கூட்டிக்கிட்டுப் போவாரு.  சால்ரா போடுவன். தூக்கி கக்கத்துல வெச்சிக்கிட்டு பாடச் சொன்னா அப்பையே பொட்டிக்கிச் சேத்தி பாடுவன்.  சுத்தி இருக்கறவங்கல்லாம் பேசிக்குவாங்க, பார்ரா இந்த  அறியா வயசிலியே பையம் பொட்டிக்கி சேத்தி பாடறதன்னு. 
அப்பா கட்ட பொம்மையில பேரு வாங்கனவரு. காருவள்ளிகாரங்கிட்ட பொம்மையாட்டிக்கிருந்தாரு.  அதுக்கு முன்ன  சிலிவாயன், வடுகப்பட்டி முத்துசெலவடகொன்னவாயன்இவங்களோடகூத்தாடிக்கிட்டிருந்தாரு. எங்கப்பாபட்டியிலகாவலுக்குபடுத்துக்கிட்டிருந்தாசெலவடகொன்னவாயந்தான் வந்து கூத்தாட எழுப்பிக்கிட்டு போவாராம்.  காலையில எங்க தாத்தன் கூத்தாடிப்பட்டு வர்ற எங்கப்பன தொரத்து தொரத்துன்னு தொரத்துவாராம்.  ஏன்னா ஆடு மேய்க்கப் போறவரு கூத்தாடிப்புட்டு களப்புல நெவுல்ல படுத்து தூங்கிப் போயிருவாராம், ஆட்ட தன்னப்பால வுட்டுட்டு.  தாத்தனுக்கு காடு, தோட்டம் உண்டு வசதியான குடும்பம்.  முன்சீப்பே எங்க தாத்தாவ டே கொளந்தையின்னு கூப்பட மாட்டாராம் கொழந்தைப்பான்னு தான் கூப்புடுவாராம்.  மணியாரமூட்டுக் காடும் எங்க காடும் எணக்காடு.  அப்பனுக்கு பொண்ணெடுத்தது பெரிய சீரகாபாடி.  நாங்க பொறந்தது ரெண்டு பசங்க.  எனக்கு நேரிளையவன் செத்துப்போயிட்டானாம்.  செம்மலைக்கி சித்தப்பா மவதான் எங்கம்மா.  பசங்க பொறந்ததும் பொம்பள லாயிக்கில்லாத ரூட்ல போவ, அப்பா வுட்டுட்டாராம்.  எனக்கு தெரியாது, எல்லாருஞ் சொல்வாங்க.  பொறவு அப்பா, இன்னோரு அம்மா ரெண்டாந்தாரங்கட்டி, அதுவும் ஒத்து வரல.  பொம்பளைங்க சமாச்சாரத்துல அப்பன் ரெண்டு பேத்துக்கு மூத்தவரு.  ரெண்டு பேத்துக்கு எளயவரு.  இது புடிக்காம எங்க சின்னம்மா அவுத்தியே தனியாவொரு வீடு பாத்து இருந்திச்சி.  எம்மேல ரொம்ப ஆசம்பா இருக்கும்.  தண்ணி வாத்துவுடும், சடபின்னி சிங்காரிச்சிவிடும்.  எதனா திம்பண்டம் வாங்கனா வெச்சிருந்து குடுக்கும், ஆனா எங்கப்பங்கிட்ட மட்லும் பேசறதில்ல.  இப்பிடி இருக்கப்பட்ட நாளையில சின்னு சின்னுன்னு ஓராளு காருவள்ளியில, சீனு வரையிறதில மீறன கையி.  அவுரு செட்டுக்கு ஆளு இல்லையின்னு வந்து கூப்புட்டாரு அப்பனும் நானும் சேரி வர்ரன்னுப்புட்டு போனம்.போயி மூணு மாசமாட்டம் பொம்ம கூத்து நடத்தனம்.  அங்க தெனமும் டெண்டக்கட்டி ரைட்டு போட்டுவுட்டார்ராங்களா வௌயாட புடிக்க குசாலமா இருக்கும்.  நல்லா அவ்வள அவ்வளசைசி பசங்கள செட்டு சேத்திக்கிட்டு ஓடறது, ஓடியார்றது, குதிக்கிறது இப்பிடி வௌயாடிக்கிட்டிருந்தம்.
 ஒருநாளு நானு துண்ட முறுக்கி கத்தி மாதிரி சொழட்டி அடிக்க ஒரு பையன் உசுரு நெலயிலபட்டு ரத்த ரத்தமா ஊத்துது.  ஊராரு அடிக்க தண்டு கட்டிக்கிட்டு என்னய தேடறாங்க.  ஆரந்த பையங் கூப்புடுங்க கூப்புடுங்கன்னு ஒரே புடியா நிக்கறாங்க.
 இந்த சம்பவம் நடந்தது கீழ்வால!.






 அப்பரம் பொம்ம வெக்கிற பொட்டியிருக்குமில்ல பெரிய பொட்டி, ராமரு பொம்ம, சீத பொம்ம, பொம்மய பூரா எடுத்துப்புட்டு அடியில என்னய படுக்க வெச்சி மேல பொம்மய அடுக்கிப்புட்டாங்க.  கேட்டவங்களுக்கு எந்த பையங்க எங்ககிட்ட இருக்கறான், இருக்கறவிங்க பூராம் பெரியாளுங்கன்னு சமாளிச்சிப்புட்டாங்க.  மணி ரெண்டு இருக்கும்.  வண்டிகட்டி ஒரு பத்து மையிலு தாட்டி பஸ்சு ஏத்திவுட்டாங்க.  அப்பறந்தான் எங்க பாட்டி வூடு பெரிய சீரகாபாடிக்கு வந்தம்.  எங்கப்பா காட்டு வேலைக்கிப் போனாரு.  நானு தறி நேயப்போனன்.  கைத்தறி நேசிக்கிட்டு இருக்கும்போது பள்ளிக் கோடத்துக்கு எதுத்தாப்ல குச்சி வூடு இருக்குதுல்ல அதுல நானும் ங்கப்பனும் சோறாக்கி தின்னுக்கிட்டிருந்தம்.  இருக்க வூடுல்லாம இப்பிடியே தறி நெஞ்சிக்கிட்டிருந்தா என்னா செய்யறது எப்பிடி பொழைக்கிறது வெசனம் புடிச்சிக்க, சேரி இந்த வூட்ட வாங்கி கெரயம் பண்டலாமுன்னு தீர்மானம் பண்டி வூட்டுக்காரங்கிட்ட எரநூத்தி பத்து உருவாயிக்கி வூட்ட வெல பேசிப்புட்டன்.  கையில சல்லிக்காசில்ல.  வெறுங்கைய மொழம் போட முடியுமா?  இங்க தறியோட்டிக்கிட்டிருந்தனே அதவுட்டுட்டு இன்னோரு மொதலாளியிண்ட போயி அண்ணா எனக்கு தறியோட்ட தெரியும், நாளையிலிருந்து நம்ப தறிக்கி வர்ரன்.  இப்பிடித் தான் வூட்ட வெலக் கூறிப்புட்டண்ணா, பாக்கி எரநூத்தி பத்து ரூவா குடுங்கண்ணு கேட்டன்.  அந்த மொதலாளி சேரி தம்பி காச காலையில தர்றன்.  ஆனா ரவைக்கி வந்து நீ தறிஓட்டு,அதபாத்துட்டுத்தான்பணந்தாருவன்னு கட்டாச்சாரமாச் சொல்ல, நானு ராத்திரியே போயி சாயிண்டு தறிக்காரன காக்காப் புடிச்சி விடியறதுக்குள்ள ஏழு தாரு ஓட்டிப்புட்டன்.  காத்தால மவராசன் பணத்த குடுக்க வாங்கியாந்து வூட்டுக்கு கட்டிப்புட்டேன்.    இப்பிடியே துண்டு தறியில இருந்து சர்வீசாவி எஸ்போட்டு (எக்ஸ்போர்ட்) தறிக்கு போவாரம்பிச்சேன்.  அந்தச் சமயம் வூட்டுமேல ஒரே ஓலக்கட்டயில்ல.  எல்லாங்கரயாந் தின்னுபுடிச்சி.  வூட்ட மேயணுமே !நேரா வேம்படிதாளத்துலஆட்டையாம்பட்டியாரு ஆட்டையாம்பட்டியாருன்னு ஒருத்தரு! அவுருக்கிட்ட போயி அண்ணா ஐநூறு உருவா கடந்தாருங்கண்ணா நம்ப தறிக்கு வாரன்னு கேக்க, அவரு யாருப்பா நீயி எந்தூரப்பா, சாலச்சட்டையா வந்து பணங்கேக்கறங்க, நானு இப்பிடித்தாண்ணா உங்களிண்ட தறியோட்ற பழனிசாமிக்கி பக்கத்தூட்டுக்காரன்னு சொன்னன்.  அவரு பழனிசாமிய கூப்புட்டு ஏப்பா பையம் பாக்கி கேக்கறான் வாங்கிக்கிட்டுப் போயிட்டு வராம இருந்துக்கிட்டா ஆரப்போயி நாங்கேக்கறதுங்க, பழனிசாமி நானாச்சிங்க பையனுக்கு சாமினுன்னு ஏத்துக்க, அப்பையே செட்டியாரு பணத்த எண்ணி குடுக்க, வாங்கிட்டு போயி, கன்னந்தேறியில எங்க சின்னாயி புருசங்காட்ல கரும்புசோவ இருந்திச்சி,  வண்டியில ஏத்தியாந்து, வூட்ட நல்ல வெல்ல அச்சுமாதர கிர்ன்னு மேஞ்சிப்புட்டன்.  காச வாங்கியாந்து மூணு நாளு வேலைக்கிப் போவல. மூணா நாளு போனன். செட்டியாரு என்னடா தம்பி காச வாங்கனதும் ஆள கண்ல காங்க முடியலன்னு ஆவேசப் பட்டாரு!  நானு இப்பிடித்தான்னா வூடு மேயத்தாம் பாக்கி கேட்டன், நேத்து வூட்டு வேல முடிஞ்சது, இன்னமேட்டு வேலைக்கி ஒழுக்கமா வந்துருவேன்னு தவுமானஞ்சொல்ல, அவருஞ் சேரிங்க அங்க போயிக்கிட்டிருந்தன்.




 கொம்பாடிப்பட்டி அம்மங்கோயிலு நோம்பிச் சாட்டியாச்சின்னா அந்தாண்ட மூணு நாலு மாசத்திக்கி ஒரு நாளுவுட்டு ஒரு நாளு   கூத்து ஆடியேருப்பாங்க.  அந்தெட்டு கூலிப்பட்டி சுப்ரமணி, குருக்குப்பட்டி கணேசன் இவிங்க ரெண்டு பேருதான் இவத்த கூத்துக்கு காணியாச்சி, நல்ல பேருங்கூட.  குருக்குப்பட்டி செட்ல அப்ப சோரக ஆறுமுகம் இருந்தாப்ல.  ரெட்டச்சட போட்டு பொண்ணு வேசங்கட்டி சண்டாளன் வெளிய வந்தா இன்னஞ்சித்த பாத்தாவாச்சின்னு இருக்கும்.  அன்னாடம் நாங்க தறி ஓட்டற பசங்க ரவ்வு சிப்ட்டு பாக்கறவங்க ஒரு மணிக்கு மோட்டார நிறுத்தவம். டீ குடிக்க வந்து அப்பிடி ஒசுருக்கா நின்னு கூத்து பாப்பம்.  அந்த மாதர ஒருப்பூட்டு, அம்மங்கோயில்ல செகநாதஞ்செட்டு கூத்தாட, போயி பாத்துக்கிட்டுருந்தம். அவஞ் செட்டு சூரவேசக்காரன் மெய்யழகனுக்கொரு பொறந்தவன், அவம்பேரு ஆறுமுகம், ஆளு நல்ல செவப்பு கூளயா பந்தடிச்சாப்ல இருப்பான்.  அவெனங்கியோவொரு சண்ட தகராறுல ஒருத்தம் மண்டயப் பொளக்க, போலிசி கேசாவி போலிசிக்காரங்க ஆளுக்கு வலப்போட்டு தொழாவிக்கிட்டு கூத்து டேசிக்கே வந்துட்டாங்க.  செகநாதனும் சூரவேசக்கார மெய்யழகனும் என்னாப் பண்டனாங்க, இந்த ஆறுமொகத்துக்கு தாவணி பாவாட கட்டி சாரி வேசத்த போட்டு சவையில வுட்டுட்டாங்க போலிசு ஆள துப்பு காங்க முடியாம சித்தங்கூறியும் தொழாவிப்புட்டு போயிட்டாங்க.  வேசம் போட்டு வெளிய வந்த ஆறுமொவத்துக்கு கட்ட தொண்ட!
 “செந்தார்மலர் பாதனே வந்தேன் குருநாதனே” ன்னு பாட எனக்குன்னா கர்ண கொடூரத்த கேக்க மனம் ஒப்பல.  பசங்கள வாங்கடான்னு இழுத்துக்கிட்டு, எப்பயும் குந்தி பொறுமையா கூத்த பாக்கறவன் அன்னைக்கிங்க இந்த ஆறுமொவம் வேசத்த பாக்கப் பொறுக்காம பாதியிலேயே தறிக்கி மோட்டார் போட பொறப்பட்டுட்டன்.  போயிதான் தறி ஓட்ட முடிஞ்சிதா?  முடியல.  ஓடாத எண்ணமெல்லாம் பொந்தியில ஓடுது.  மனசே ஒரு நெலயில இல்ல.  என்னடா இவனெல்லாம் வேசம்போட்டு கூத்தாடும்போது, நம்பளால முடியாதா,  அப்பிடின்னு. ராத்திரி எப்படியோ விடிஞ்சது, விடிஞ்சி போயி படுத்தா கண்ணக் குத்தனாலும் தூக்கம் வல்ல.  நானுத் தூங்கவுமில்ல.  துருவா போனன் செங்கோடம் பாளையம், சுப்ரமணிக்கிட்ட  கூத்துக்கு வர்ரன்னு கேக்க. அதுக்குமிந்தியே சுப்ரமணி ஓராடஞ் செட்டுக்கு ஆளுப் பத்தலைன்னு அப்பங்கிட்ட வந்து கருப்பண்ணா! கருப்பண்ணா! பையன ஆட்டத்துக்கு வுடு கருப்பண்ணா! தொழிலு அவனுக்கு அமையுமுன்னு கேக்க, அப்பன் என்னோட போவுட்டுமிந்த கூத்து,  பையனுக்கு அது வேண்டாமுன்னு ஒரே தீர்மானமாச் சொல்லிப்புட்டாரு.  அட அப்பன் இப்பிடி சொல்லியிருக்க நாம்ப போயி கேட்டா நல்லாயிருக்குமான்னு நானு ஓசிக்கல.  நேரா போனன்.  ஏப்பா என்ன வந்ததுன்னு கேட்டாரு.  கூத்துக்கு வரலாமுன்னு இருக்கறன்ணான்னேன்.  கூத்து பாக்க வர்றியா, இல்ல கூத்தாட வர்றியான்னாரு.  கூத்தாடத்தாண்ணா வரலாமுன்னிருக்கறன்னேன்.  டேயெப்பா என்னா திடீருனு இந்த கூத்து மேல பிரியமுன்னு கேக்க, நானு இப்பிடி, இப்பிடித்தான்னா சமாச்சாரம் நேத்து ராத்திரி மெய்யழகந்தம்பி பொண்ணு வேசம் போட்டு ஆட, அதப்பாத்ததுந்தாண்ணா அவனெல்லாம் பாவாட தாவணிக்கட்டி பொண்ணு வேசம் போடறானே நாம்ப போட்டா என்னான்னு  அதும்பேர்லவொரு நாட்டமின்னேன்.  சேரி அப்பிடின்னா, உறுதியா வாரயான்னாரு, உறுதியா வர்ரமின்னேன்.  






அவரு சமாவுல கூடலூரு மாரிமுத்துன்னு ஓராளு நம்ப தென்னாட்டுல சோகக் கட்டத்துக்கு அவருதான் மெயினு.  அவரவுட்டா வேற ஆளில்ல.  மாரிமுத்து, அரியானூரு பழனிசாமி, சாத்தனூரு வெள்ளையன் இவிங்க மூணு பேருந்தான் சாரி வேசம்.  வேசங்கட்ட என்னென்ன பொருளு வேணுமுன்னேன், என்னா வேணும்? ரெண்டு சவுரி சீல சாக்கிட்டு பாவாட வேணும்.  சலங்க வேணும் அதுக்கூட வேற ஆருக்கிட்டயாச்சும் எறவலு வாங்கிக்கலாம்.  சொன்னதயெல்லாம் எடுத்துக்கிட்டு பொறைக்கி பாலம்பட்டி பெருமாக் கோயில்ல ஆட்டம் நேரமா வந்துருன்னாரு.  அங்கிருந்து வூட்டுக்கு வந்ததும் பக்கத்தூட்ல சலங்க காயி வெச்சிருந்தாங்க. ஒரு காயி ஒண்ற உருவாயின்னு அறுவது காயி வாங்கி சலங்க செட் பண்டன கையோட சீல, சாக்கிட்டு, பாவாடயும் எடுத்துவொரு பையில தயாரா வெச்சிக்கிட்டு மத்தியானம் ரெண்டு மணி வரைக்குந் தூங்கனன்.  அட நேரமா வர்ரச் சொன்னாங்களேன்னு எந்திரிச்சி கௌம்பி அரியானூரு போயி அங்கிருந்து பாலம்பட்டிக்கி மூணு மணிக்கெல்லாம் போயிட்டன்.  பஸ்சவுட்ட எறங்கனதுந்தான் நெனப்பு வந்திச்சி, அடடா பெருமாக் கோயிலு கூத்துன்னாரே, கோயிலுக்கிட்ட கூத்தா, ஊருக்குள்ள கூத்தா ஆடற எடம் எவுத்தன்னு கேக்காத வுட்டுட்டமே, எதக்கண்டு தாவு சேர்றதுன்னு ஒரே தடுமாட்டமாப் போச்சி.  சேரின்னு டாப்பிங்கிலியே விசாரிச்சேன்.  அவிங்க கெழபொறமா ஒரு பர்லாங்கு நடந்துபோ, ரோட்டோரம் போரிங்கி பைப்பிருக்கும் அதுக்கு எதுப்புற இருக்கற கூர வூட்டுக்காரமூட்டாருதாங் கூத்துவுட்ருக்காங்கன்னு வெவரஞ் சொன்னாங்க. மொள்ள தடம் புடிச்சேங் கூற வூட்டுக்கு. எவுத்தயிருக்கறாங்களோ ஆளுங்கவொருத்தருங்காணமே!நாம்பதாவொரு வேகத்துல நேரங்கெட்ட நேரத்தல வந்துட்ட மாட்டமிருக்குதுன்னு பலத ஔப்பிக்கிட்டு...... அங்க போனா சால்ரா போடறவனும், பொட்டி மீட்றவனும் கோரப்பாய விரிச்சுட்டு படுத்துக்கிட்டிருந்தாங்க.  எங்கியோ கூத்தாடிப்புட்டு நெட்டா மக்யாநாத்து ஆட்டமுட்டவிங்க வூட்டுக்கே வந்துட்டாங்களாட்டமிருக்குது.  எந்த கூத்தாடிங்களுக்கு என்னைய தெரியாதிருக்குது, அம்மங்கோயில்ல கூத்தாட வார அத்தன ஆட்டக்காரனுக்கும் பவ்வத்துஉருவா பின்னுக்குத்துவன்.  நானு ரொம்ப ரசிப்புத்தம்மையோட பின்னுக்குத்தனது அக்ராவரம் ராமன். பாருங்க நம்ப மாது செட்ல குந்தி வேசம் போடுவாரு, அப்பறம் நாம்ப பாப்புக் கோமாளி. எந்த ஜமா வந்தாடனாலும் ஓராளு தொச்சமில்லாம ஓராளு தொச்சமில்லாம பின்னுக்குத்துவன்.  அதனால சுப்ரமணி செட்டுல அன்னைக்கி வந்த பொட்டிக்காரனும் மத்தாளக்காரனும் என்னய நெப்பு கண்டு, ஏப்பா ராசு எங்க வந்த? என்னா இவ்ளத் தூரமின்னு கேக்க, ஏப்பா என்னாப்பா இவ்வளத்தூரமின்னு கேக்கறீங்க நானும் ஆட்டத்துக்குத்தாம்பா வந்துருக்கறன், நீங்கயென்றான்னா எங்க வந்த? எவத்த வந்தன்னு? இப்பிடி சிலப்பமா கேக்கறீங்கங்கும்பிடி அவிங்க அடடா ஆட்டத்துக்கு வந்தபரவால்ல எடு, வா வா வந்துயிப்பிடி படுன்னு அந்த பாயில எடமுட்டு என்னையும் படுக்க வெச்சிக்கிட்டாங்க மணி ஆறாச்சி, ஏழு, எட்டாச்சி ஒம்போது மணிக்கு ஒவ்வொருத்தரா வந்து சேந்தாங்க. 





 செட்டு மெயினு பொண்ணு வேசக்காரனிருந்தானே கூடலூரு மாரிமுத்து! அவனும், சூரவேசம்போடற மெய்வேலும் ராத்திரி மணி பத்தே காலுக்கு லாடங்கட்ன தோலு செருப்பு போட்டுக்கிட்டு, சும்மா நறுக்கு நறுக்குன்னு வர்ராங்கப்பா.  அன்னநேரமுட்டும் வந்தவிங்க ஒருத்தரு பாக்கியில்லாம வாத்தி வரங்குடுத்த சுப்பிரமணி அவிங்க ரெண்டு பேத்தயும் ஏண்டா இவ்வளநேரங்கழிச்சி வர்றீங்கன்னு ஒருவார்த்த கேக்கல.  வந்தும் வராதமின்ன அவிங்களுக்கு கைக்கி தண்ணி குடுங்க வந்து சோறுங்குட்டுமுங்கறாரு.  சாப்ட்டம் போனம்.  என்னடா வேசம் போடறியான்னு ஆளத்தூக்கி கனம் பாத்தாரு.   நானு வுடல, என்னான்னா இப்பிடி கேக்கற வேசம் போடதான் வந்துருக்கறன்னன்.  சேரி இரு பாக்கலாம் என்னா அலங்காரம் வெக்கறாங்கன்னு பாத்துட்டுச் சொல்றன்னு டேசிக்குள்ற போயிட்டாரு.  ராமகறவத்தான் பாப்பு வெளிய வந்தான்.  ஆசி கேக்கக்குள்ள என்ற ரசிகன் ராசு இருக்கறாப்ல உள்ள அவர வரச்சொல்லுங்கன்னான்.  நானுப் போனன் வணக்கண்ணான்னன்.  ஏப்பா நீ செட்டுக்கு சேந்த ஆளுதான?  பாட்டி வயசிக்கி வந்துட்டா கூத்துவுட கூத்தாடிங்கள தேடிக்கிட்டு திலும்பனன்.  பாலம்பட்டியில கூத்துன்னாங்க, உங்கள பாத்துட்டு வெத்தலப் பாக்கு குடுக்கலாமின்னு...
ஆமா உங்களுக்கு வருணமால தவிசி கூத்து ஆடத் தெரியுமான்னாரு. 
நானு அன்னைக்கித்தான் சவையில போயி மொத தபா நிக்கறன். இருந்தாலுங் கூச்ச நாச்சமில்லாம என்னாங்க இப்பிடி சொல்றீங்க, பிரமாதமா ஆடுவங்க, வருணமால தவிசி எங்களுக்கு தண்ணி பட்ட பாடுங்கன்னன்,  எங்க ரெண்டடி பாட்டு பாடுன்னாரு பாப்பு.  நாலடி பாட்டுத்தாம் பாடனன், படுத்திருந்தவரு எந்திரிச்சிவந்து சால்ரா போட்டாரு கூலிப்பட்டியாரு.  நானு படக்குன்னு நாலடி பாடி நிறுத்தனதும், பாட்டு ருசனையில சுப்ரமணி அட ஏண்டா நிறுத்தன பாடறா, வேசமாக இன்னும் நேரமிருக்குதுன்னாரு.  அரமணி நேரம் பாடனன்.  வருணமால புள்ள இல்லாத கொறயில புருசங்கிட்ட சொல்லி பொலம்பறது, அண்ண பொண்டாட்டிக்கிட்ட அழுவறதுன்னு வுட்டு பொளந்து கட்டனன்.
அருமப்பா பிரமாதமா பாடற! நல்லா வருவ.  இன்னைக்கி என்னா அலங்காரம் அதச் சொல்லுன்னாரு. 
அண்ணா அதுக்கு வதுலுச் சொல்ல எங்க வாத்தியாரு இருக்கறாரு அவர வரச் சொல்றன்னு டேசிக்குள்ள வந்துட்டன். 





என்னா கூத்து வெக்கிறாங்களோ, ஆரு கூத்துவுட்டவங்களோ நாம்ப என்னத்தக்கண்டம்.  அத தூக்கிட்டு நாம்ப ஏம்பா திரியணும்?
அலங்காரம் ஆரவல்லிச் சண்ட வெச்சிட்டாங்க. ராசுக்கு பொண்ணு வேசம் போட்டுவுட்டு ஏழு பொம்பளைங்களோட ஒரு பொம்பளையா முடுக்குன்னவரு, மறுக்க என்னா நெனச்சாரோ, ஏப்பா ராசு உனக்கென்னாஆடத்தெரியுமா? பாடத்தெரியுமா?நடதான்நடக்கத்தெரியுமா இல்ல வசனந்தாம் பேசத் தெரியிமா? அவிங்களோட வந்து என்னாப் பண்டுவ, நீ பல்வருசா போட்டுக்க. கண்ணே பல்வருசான்னா வெளிய ஓடியாந்துருன்னாரு வாத்தியாரு..
சேரிப்பான்னுட்டு வேசம் போட்டன்.  அன்னைக்கி தாரமங்கலம் மாது வந்துருக்கறாப்ல. என்னு வேசத்தப் பாத்துட்டு, என்னா தம்பி கெழவி கட்ற சீலய எடுத்தாந்துருக்கற வயசிப்பையன், முகமான வேசம் பீத்த சீல வேண்டாமடா இருன்னு அவரு கொண்டாந்த பாவாட தாவணி அவரு கொண்டாந்த டோப்பாவ வெச்சி நல்ல கட்டபொம்மையாட்டம் கும்முனு சிங்காரிச்சி வுட்டாரு மவராசன்.
ஏப்பா சுப்ரமணி நல்ல வேசத்த உள்ற குந்த வெச்சிக்கிட்டு   நீங்களா ஔப்பரிச்சிட்டிருக்கறீங்க! அவன வெளியவுடங்கப்பா!வௌயாடட்டமுன்னு பறக்கறாங்க கூத்து பாக்க வந்த சனம்!.
ஆரவல்லிய பந்தயத்துல செவிச்ச அல்லிமுத்துவுக்கு வெற்றி பரிசு குடுக்கற கட்டம்.  எங்க உங்க பொண்ண கொஞ்சங் கூப்புடுங்கன்னாரு சுப்ரமணி.  ஆரவல்லி வேசக்காரன் கண்ணே பல்வருசா வாடி! வெளியன்னான்.
நானு உள்றயிருந்துக்கிட்டே “ஓ அம்மா, ஏம்மா பாதாள செறயில இருக்கறன்.  சூரிய வெளிச்சமே தெரியல! தாளு நீக்கி சிறையிலிருந்து என்னய விடுவிச்சாத்தாம்மா நானு வெளிய வரமுடியும் சிறைய நீக்குமா மொதல்ல”ன்னேன்.
அப்பையே கூடலூரு மாரிமுத்துக்கு சப்புன்னு ஆயிப்போச்சி.  நேத்து பேஞ்ச மழயில இன்னைக்கி மொளச்ச காளான்,  பவுடரு போட்டு முழுசா வேசமாடல, பூராக்கதையுந் தெரியுது! பல்வருசா பாதாள சிறையில இருக்கறதுந் தெரியிதேன்னு அவிங்க  புழுங்க, நானு சவைக்கி தர்பாரு ஆனன்.  சுப்ரமணி என்னய சும்மாவே நோண்டராரு, இதுதாம் பொண்ணா, இதுதாம் பொண்ணா, ஏம்பிள்ள முகஞ்சோந்தாப்ல இருக்குதுன்னு நானும் அவுத்த வெக்கப்பட்டு ஓடறது இவித்த வெக்கப்பட்டு ஒடறதுன்ன வெறும் பாவ்லா பண்றன்.
கதப்பிரகாரம் பின்ன மரச்சோலைக்குப் போற கட்டம்.  எலுமிச்சங்கனி பூச்செண்டு ரெண்டயுங்குடுத்தாங்க.  அதுயெதுக்குன்னு சொல்லல.  பாக்கலாம் இவிங்க கீட்டகத்தன்னு ஒண்ணும் பேசாம வாங்கியத மடியில வெச்சிக்கிட்டன் பின்ன மரச்சோலைக்கிப் போனன்.  எம்பிருசனுக்கு தாவம் எடுத்துக்கிச்சி. கண்ணே பல்வருசா எனக்கு பச்ச தண்ணி தாவம் பல்லொணந்து போகுது, நல்ல தண்ணி தாவம் நாவொணந்து போகுதேன்னு வசனம் பேசிப்புட்டு சுப்ரமணி ஒருத்தருக்குங் கேக்காதபடிக்கி “ராசு பூச்செண்டு மோந்தா தாவமடங்குமின்னு சொல்லி குடு”ன்னு எங்கிட்ட குசு குசுன்னு சொல்றாரு, எலுமிச்சங்கனி எதுக்கு, பூச்செண்டு எதுக்குன்னு அவருக்கு பிருவா தெரியல.  நானு என்னாச் செஞ்சன், ஓ மன்னா பிராணபதி! எங்கம்மா எனக்கு சொன்னது, இதோயிந்த எலுமிச்சங்கனியை ரெண்டாக பாகம் செய்து சாறு பிழிந்து குடித்தால் போகுவழியதனில் உண்டாகும் தாகம் தணியுமென்று! அந்தப் பிரகாரமே சாமி இந்த கனிய பாகஞ்செய்து புசிப்பீர் ன்னு சொல்லிப்புட்டு அண்ணா சமாச்சாரத்த இப்பிடித்தாண்ணா செய்யுனுமுன்னு அவரு காதுல சொன்னான்.  பின்ன மரச்சோலையில இன்னங்கொஞ்ச தூரம் போனதும் எம்புருசனுக்கு தலயச் சுத்தி மயக்கம் வந்துட்டது. 







“பெண்ணே பல்வருசா பூமி சொழலுதடி, புத்தி தடுமாறுதடின்னாரு,
சுவாமி இதோயிந்த பூச்செண்டை முகந்து பார்த்தீர்களானால் உண்டான மயக்கம் தன்னால தீருஞ்சுவாமின்னு நானு பூச்செண்டு எடுதுக்குடுக்க மோந்துப் பாத்தவரு,  மயக்கமல்ல பெண்ணே! இது மாரகம், நான் பிழைக்கயினி வழியில்லன்னு ஒரே வார்த்த பேசனதும் சுப்ரமணி என்னு மடிமேல சாஞ்சி கண்ண மூடி படுத்துக்கிட்டாரு.  அல்லிமுத்து செத்ததும் பின்ன மரச்சோலையில அடுத்தாப்ல நானு இன்னத செய்யணும், இன்னார சந்திக்கணுமின்னு ஒருத்தருஞ் சொல்லிக் குடுக்கல.  என்னயத்தவிர மிச்ச பொண்ணு வேசக்காரனங்கெல்லாம் சுத்தி நின்னு வேடிக்கப் பாக்கறாங்க.  என்னாப் பண்றானோ ஏது பண்றானோன்னு மெதுவா சுப்ரமணி தலய அசாம மடியிலயிருந்து எடுத்து கீழவெச்சிட்டு எடுத்தம் பாட்ட.  கண்ணீரா கடவாயில ஒழுவுது!கொல்ல நினைத்தாளோ!கொலைகார ஆரவல்லின்னு மடிக்க நினைத்தாளோமாபாவி ஆரவல்லி!திருப்பி பாட்ட நிறுத்தவேயில்ல.
சனமுன்னா ச்சும்மா காசா கொண்டாந்து கொட்டி என்ற மடிய நப்பறாங்க.  கீழ படுத்துக்கிட்டு சுப்ரமணி பாடு, பாடு சொனையான் எறங்குது பாடுங்கறாரு.  அன்னராவு கூத்து முடிஞ்சி வேசமழிச்சம்.  எல்லாருக்கும் சம்பளம் பிரிச்சாரு வாத்தியாரு.  என்னய கூப்புட்டு அம்பது உருவா சம்பளங் குடுத்தாரு.  மடியில வுழுந்ததே சில்லரக்காசி அத முடிஞ்சி வாத்தியாரு பொட்டியில வெச்சிருந்தன்.  அதயும் எடுத்து இந்தாடா ராசு பத்ரமா வெச்சிக்க பஸ்ல கிஸ்ல தூங்கி காச தொலைச்சிப்புடாதன்னு புத்தி சொன்னாரு, கேட்டுக்கிட்டன். வூட்டுக்குப்போயி மூட்டய பிரிச்சிப் பாத்தன் முந்நூத்தியம்பது உருவா இருந்திச்சி.  நூத்திருவது உருவாயிக்கி சூட்கேசி பொட்டி வாங்கிக்கிட்டன்.
மக்யாநாத்து திண்டமங்கலம் ஆட்டம்.  பழனிமாதர பெரும் பெருத்த கூத்தாடிங்க இருக்கப்பட்ட ஊரு.சலவ வேட்டி, சலவ சர்ட்டு மாட்டிக்கிட்டு கௌம்பனேன்.  பெருமன்னாலூம் பெரும சாமி எனக்கு காலு தரையில பாவல.  என்னையே திரும்பி திரும்பி பாத்துக்கறன்.  காத்தாலயே சம்பளம் பிரிக்கறப்ப, பாரு எளம்பிள்ளையில பன்னியாண்டிங்க இருப்பாங்க காதுகுத்திக்க, ராத்திரி காதுமணியில்லாம பொக்குனுயிருந்திச்சின்னாரு வாத்தியாரு.    ஓமலூரு பஸ்சவுட்ட எறங்கி காதுமணி ரெண்ட வாங்கிக்கிட்டேன். திண்டமங்கலம் போனம்.  இவரு முந்தியேப் போயி அம்பாள் கல்யாணம் அலங்காரம் வெச்சிட்டாரு.   மூணுபேரு மெயினு வேசக்காரங்க,  இருக்கும்போது எனக்கென்னா வேசங்குடுக்கறதுன்னு வாத்தியாரு சித்தங்கூறி தடுமாறிப்புட்டு ராசு நீ தாயி வேசம் போட்டுக்க, பரிமளகந்தி! முன்ன போ ஒண்ணும் ஆட வேண்டாம், பாடவேண்டாம்! தர்பார முடிச்சிக்கிட்டு, “என் மைந்தர்கள் இருவர்களிரண்டு பேர்களும் வீர விளையாட்டுக்கள் விளையாடிக்கொண்டிருப்பாங்க தாயார் நான் அழைத்ததாக அதி சீக்கிரமாக அழைத்து வாருங்கள்”ன்னு சொல்லிப்புட்டு வந்துரு அவ்வளத்தான் வேலன்னாரு.  வேசம் போட்டன். புதுசா வாங்கன காதுமணிய கண்ணமூடிக்கிட்டு ரெண்டு காதுலையும் குத்தி பட்ன மாட்டிக்கிட்டன். வெளிய போனன் தெரிஞ்சத ஆடனன்.  அறுவது உருவா பின்னுக்குததனாங்க.  முன்னப் போனாங்களே செட்டு மெயினு வேசக்காரங்க மாரிமுத்து, வெள்ளையன், பழனிசாமி இவிங்க ஆருக்கும் ஒருபைசா சொனையாங்குத்துவாரில்ல.  ஆடி தர்பார முடிச்சிக்கிட்டு உள்ர வந்தன்.  ரெண்டு பக்கத்து தோளுபட்டயும் நனஞ்சி, சாக்கிட்டும் நனஞ்சி போச்சி! சோத்தாங்கையி காதுல சொட்டு சொட்டுன்னு ரத்தம் ஒழுதே இருக்குது.  சட்டுனு வேற சாக்கிட்டு மாத்திக்கிட்டு காத்தாட நின்னு வலிய ஆத்திக்கிட்டிருந்தன்.   இந்த மாரிமுத்து கிட்டவந்து  "முன்ன போயி நாலு பேரு ஆடனம் ஒருவா குத்துவாரில்ல! பொறன போயி மூணுபேத்தயும் மண்ட பண்டிப் புட்ட''ங்கறான்! மொவறயில எள்ளுங்கொள்ளும் வெடிக்குது.  நானு ஒண்ணுஞ்சொல்லல பேசாம இந்துக்கிட்டன்.  சந்திப்பு கட்டம் வந்திச்சி திலும்பி சவைக்கி போனன்.  பீஷ்ம வேசக்காரனும், விசித்திர வீரியன் வேசக்காரனும் இருக்க, எனக்கு மாத்தரம் ஒருத்தன் பத்து உருவாயகொண்டாந்து குத்திபுட்டு என்ற கைய புடிச்சி குலுக்கல,சுப்பிரமணிய கையப்பிடிச்சி குலுக்கி  என்னான்னு சொல்றான் மவராசன், புண்ணியவான் இன்னிக்கிச் சொன்ன மாதர இருக்குது "சுப்ரமணி இந்தபையம் மட்டும் உன்ற செட்டுல ஒரே வருசம் இருந்தான்னா, உன்ன அடிச்சி ஆட இந்த தென்னகத்துல வேற செட்டு இல்ல''ன்னாம்பா. சுப்ரமணிக்கு வாயி வெப்பிரிச்சிப் போச்சி.  ம்... ம்... செய்வான்னாரு.



அடுத்த நாளு கள்ளக்குறிச்சி ஆட்டம் எல்லாம் அஞ்சர மணிக்கு கள்ளக்குறிச்சி பஸ்டாண்டுக்கு வந்துருங்கன்னு வாத்தியாரு சொன்னதும், அவிங்கவிங்க வூட்டுக்கு பொறப்பட்டம்.  அப்ப சுப்ரமணி சாவா வண்டி வெச்சிருந்தாரு.  ரயிலு மாதர பொக.  பொறன ஒருவண்டி போறதுக்கில்ல தடதடன்னு சத்தம் வேற. என்னய பொறன குந்த வெச்சிக்கிட்டாரு ராசு, நீயி கள்ளக்குறிச்சி வந்து சேர மாண்ட, மூணு மணிக்கி நம்ப வூட்டுக்கு வந்துரு, நாம்ப ஒட்டா போவலாமுன்னாரு. சேரின்னுப்புட்டு நானு வூட்டுக்கு வந்து தூங்கல, நேரா ஓராள புடிச்சிக்கிட்டு திருச்செங்கோடு வந்து தேர்முட்டிக்கிட்ட இந்தா வளத்தி டோப்பா முடி! முந்நூறு உருவாக்கி வாங்கனேன்.  வூட்டுக்கு போனன், தண்ணி வாத்தன் நேரஞ் செரியாயிருந்திச்சி.  கள்ளக்குறிச்சி போயிட்டம்.  அன்னைக்கும் சுப்ரமணி அம்பாள் கல்யாணமே வெச்சிட்டாரு.  அம்பாலிக வேசக்காரன் அரியானூரான் வரல.  வேசம் போட்டன், வெளிய போனன் நூத்திருவது உருவா பின்னுக்குத்தனாங்க.  சந்திப்பு கட்டத்துல, அவிங்க பாடிக்கிட்டிருந்தா, ஏப்பா நீங்களே பாடறீங்க அந்த பையன செத்த பாடச் சொல்லங்கறாங்க சவையில குந்தியிருக்கறவங்க.  மாரிமுத்தும் வெள்ளையனும் மொவறய திருப்பிக்கிட்டு நிக்கறாங்க.  நானென்ன செய்யறது?  உண்டான விருத்தம், உண்டான பாட்ட பாடனன்.  அவிங்கள நாங்கண்டுக்கல.  கள்ளக்குறிச்சி ஆட்டத்துல சுப்ரமணி சம்பளத்த ஏத்தி எம்பது உருவா குடுத்தாரு.  விடிஞ்சன்னைக்கி ஆட்டம் சாமக்குட்டப்பட்டி... நம்ப ராசாபாளையத்துக்கிட்ட.  அந்த ராவும் அம்பாள் கல்யாணமே அலங்காரம், அம்பாள் வேசம் போடற மாரிமுத்து வரல வாத்தியாருக்கிட்டயும் சொல்லல,  ஒருத்தருக்கிட்டயும் சொல்லல.  ராத்திரிப்புடிச்சே ஆளு மொவற சுண்டிப்போயி அரா சிவான்னு ஆருகிட்டயும் பேசிக்கல.  ஆளுக்கு என்னமோ பொந்தியில பொமைச்சலு.  சுப்ரமணி பழனிசாமிய அம்பாள் வேசங்கட்டுன்னா அவன் க்கும் நாந்தான்,  அம்பாள போடறானா? ன்னு ஒரே முக்கு முக்கிப்புட்டா. வெள்ளயன கேட்டா ஏப்பா நீயொருப்பக்கம்! நாந்தான் சிக்கனான்னு ஆளு தூரமாப் போயிட்டான்.  வேசம் போட்டு செலுத்தமுடியாமயில்ல, புதுவேசக்காரனுக்கு இவ்வளவு ரஸ்பீட்டு மயிரா? இன்னைக்கு ஆக்கிட்டு போட்டு புளுத்துட்டுமே! சவையில வுட்டு சனங்க மின்ன சமாச்சாரந் தெரியாம சரக்கு பத்தாம சின்னப்படட்டுமுன்னு ஒரு கெட்ட எண்ணம்.


என்னய கேட்டாரு, சுப்ரமணி. அண்ணா வேசம் போடத்தான் வந்துருக்கறன், எந்த வேசமுன்னாலுங்குடு போட்டுக்கறன்.  இன்ன இன்னத இப்பிடி இப்பிடி செய்யணும் விங்கிணிச்சி சொல்லு அந்தப்பிரகாரஞ் செஞ்சிபுடறன்னன். அம்பாள் வேசங்குடுத்தாரு.  மொத மொத பெருங்கொண்ட கதாநாயகி வேசம் போடறன்னு கொஞ்சம் அச்சமா இருந்திச்சி சுதாரிச்சிக்கிட்டன்.  சும்மா சொல்லக்கூடாது அத்தனாம்பட்டி சீனு சால்வன் வேசம், சுப்ரமணி பீஷ்மரு வேசம் ரெண்டு பேருச் சந்திப்பையும் திருத்தமா செஞ்சன்.  எல்லாத்துக்கும் நல்ல பேரு,  கூத்து எத்தாயிருந்திச்சி.  அந்த அம்பாள் வேசத்துலயிருந்து இன்னைக்கி வரைக்கும் சுபத்தர, சித்ராங்கத, சீத, தமயந்தி, பாஞ்சாலி ன்னு பெருங்கொண்ட வேசந்தான் கட்டியாடறன்.  "சீசீ இந்த வேசம் நல்லாயில்ல உள்ற போ'' ன்னு ஒரு சொல்லு கேக்காத அளவுக்கு தொழிலுப் பண்றன்.  தனியா செட்டுக்கட்டி பதனஞ்சி வருசம் ஆடிப் பத்துப்புட்டன்.  ஒண்ணும் சுத்தப்படல. இப்ப ஏகாபுரம் சுப்ருகிட்ட ஆடிக்கிட்ருக்கறன்.  வரும்பிடி பரவால்ல, மூணு பேரு சம்சாரத்த தாட்ட முடியிது. என்று தனது, வாழ்வானுபவத்தை தொழில் ரீதியாகவே பகிர்ந்து கொள்ளும் ராஜூ அவர்கள் சிறந்த கலைஞர் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.*





*********கலைஞனை அணுகுவதும், அண்டியிருப்பதும் அவனது உட்கிடக்கையை உள்வாங்குவதும், பின் வெளிச்சமிட்டுக் காட்டுவதும் சாமான்யமல்ல.  ஒவ்வொரு கணமும் அவனே அவனுக்கே புதுமையானவன், நிகரானவன். உள்ளதை உள்ளவாறே கண்டு நுகர்வதே சாலச் சிறந்தது.  மற்றங்கே நமது தேடலை, விருப்பத்தை கேள்விகளாக்கி வேண்டிய விடையெதிர் நோக்கி பரிட்சித்தோமானால்இ நாமங்கே பெறும் மதிப்பெண் பூச்சியமே!

https://www.youtube.com/watch?v=UEyYo9lXhng


பெற்றவள் என்றில்லை தண்ணீருக்கும் மூன்று முறை
தாளம் காலம் இசையாத அச்சிறுப்பிழையும் பொறுக்கான்
பொட்டி மூலிகைச் சிமிழ் கொண்டு நெறிதப்பி போகும்
மயில்ராவணனை தடுத்து நாயஞ்சொல்வான்
அதிவர்ண மாலையான ராசுப்பையன்
குற்றங்கடிந்து நீட்டும் அச்சுட்டுவிரல் கண்
ஒளிந்திருக்கும் ஆயிரமாயிரம் சித்ரவித்தை
குறி சொல்லும் நேர்த்தியில் குறத்தி தோற்பாள்
எத்தனையெத்தனை பாவங்கள் வேண்டுமுங்களுக்கு
கல்லெல்லாம் மாணிக்கமல்ல சொல்லெல்லாம் அச்சரமல்ல
அரங்காடும் நல்லத்தங்காள் பொம்மையைக் கேட்டுப்பாருங்கள்
சோமப்பானம் சுராப்பானம் தேவர்களுக்கு
பீ மூத்திரமொன்றாய் பிசைந்துண்டும் புத்தி வரவில்லை
ஓரவஞ்சனை பாராமுகம் லாரிமுன் தீப்பாய்ந்தது சீதை
வேடப்பையின் ஓட்டை வழி தொங்கும்
ஒற்றைச்சதங்கை குரலெடுத்து அரற்றுகிறது
யாகச்சேனை வேசமினி ஆர் கட்டுவது



காலனக்கென்ன தாகம் மரியாதைக்குரியவர்களின் உயிரை எல்லாம் குடிக்கிறான்
..கூத்து கலைஞர் கொம்பாடிப்பட்டி ராஜு அகால மரணம் ...22-10-2014