ஞாயிறு, 26 ஜூலை, 2009

காலம் தின்று வாழும் கலை - வெய்யில்


மனிதனின் இன்றியமையாதவைகளை கண்முடித்தனமாக அழித்து நவீனம் வளர்க்கும் 21ம் நூற்றாண்டு குடிமகன்களின் காலில் மிதிபட்டு துடித்துக் கொண்டிருக்கிறது கலை. எது கலை? எதற்கு கலை? யாருக்கு கலை? எந்த கேள்வியையும் கேட்கவோ: பதில் சொல்லவோ யாருக்கும் நேரமில்லை. பொழுது போக்க மாலை நேரத்தில் “மானாட... மயிலாட... இத்தியாதிகளும் ஆடும்” இந்த கலையே போதுமானதாயிருக்கிறது நம் நவ யுக மக்களுக்கு.. நம் கலையை பேச ஊடக்கங்களுக்கும் நேரமேயில்லை.நம் கலையை வாழ வைத்தவனுக்கு, வாழ வைத்துக் கொண்டிருப்பவனுக்கு இன்று வாழ்க்கை பெருஞ்சுமையாகிப்போனது. நீண்ட நெடுங்காலமாய் மக்களை சிரிக்க வைப்பவன் திரைக்கு பின்னே அழுது துடிப்பதற்கான வாழ்வை மட்டுமே பெற்றிருக்கிறானே ஏன்? பரிசுகளும், பாராட்டுக்களும் எப்பொழுதுமே மேல்நோக்கி பாய்குற அதிசய நீரோட்டத்தில்தான் மிதக்குமா? மக்கள் மெய்ப்பித்து விட்டார்கள் “சில ரொட்டித் துண்டுகளும் ஒரு சர்க்கஸ் கோமாளியும் போதும் மக்களை ஏமாற்றுவதற்கு” என்ற ஹிட்லரின் சத்திய (!) வார்த்தைகளை.

எல்லா ராட்சச மாயங்களையும் தாண்டி நம்பிக்கையளிக்கிறது சிற்சில நிகழ்வுகள். அவற்றுள் ஒன்று மணல் வீடு நிகழ்த்திய மக்கள் கலை இலக்கிய விழா. படைப்பாளிகளின் சங்கமம் என்றுதான் சொல்ல வேண்டும் விழாவின் திரும்பிய திசையிலெல்லாம் படைப்பாளிகளின் முகங்கள். ஒவ்வொருவருக்கும் இது நமது விழா என்ற எண்ணம் இருந்ததை உணர முடிந்தது. கூத்துக் கலைஞர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வு மிகவும் நெகிழ்வூட்டுவதாக இருந்தது. ஐம்பது ஆண்டுகள் அறுபது ஆண்டுகள் என்று அவர்கள் கலைச் சேவை புரிந்த காலத்தை அறிவிக்கையில் வாழ்க்கையையே கலைக்காக படையலிட்டிருக்கிறார்கள் என்பதை உணரும் மனது இந்த பரிசு இவர்களுக்கு போதாது என்று குமுறகிறது, அலட்சியத்தை மட்டுமேவெகுமதியாகப் பெற்றவர்களுக்கு இந்த பரிசாவது கிடைத்ததே என்று ஆறுதலடையுமாறு நிர்பந்திக்கிறது தொடர்ந்து கலைஞர்களாகவே ஆண்டு கொண்டிருக்கும் நம் அரசு. சிறிது நேரம் பாடச் சொல்லி அந்த மூத்த கலைஞர்களின் கைகளில் மைக்கை தருகையில் வாழ்வின் கடைசி வாய்ப்பு என கருதும் வாஞ்சையுடன் நடுங்கும் கைகள் பெற்றுக் கொண்டு பாடுகிற பாடலில் ஓர் கலை வாழ்க்கையின் கதறல். எண்பத்தைந்து வயது இளைஞியான லட்சமியம்மாளின் உடலில் ரத்தத்திற்கு பதிலாய் நம்பிக்கைதான் ஓடிக் கொண்டிருக்கும் போல சற்றும் குறையாத மிடுக்குடன் நொடியில் உத்திரகுமாரனாய் மாறி கர்ஜிக்கிறார் சிங்கமென. அத்தனை சீக்கிரம் காற்றில் கரைந்துவிடாத அடர்த்தியான குரல். ஒவ்வொரு கலைஞரிடமிருந்தும் மைக்கை கெஞ்சித்தான் பெற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. கலையின் மீதான தீராக் காதல்.....

இரவின் கறுப்பை லாவகமாய் தன் தொழில் நுட்பத்திற்கு பயன்படுத்தியபடி நிழற் கூத்தை நிகழ்த்திக் காட்டினார்கள் தோல்பாவை கலைஞர்கள். வாலிக்கும், சுக்ரிவனுக்கும் இடையே நடக்கும் சண்டையை இத்தனை பிரமாண்டமாய் எந்த சினிமாவும் காட்ட இயலாது. பாய்வதும், உடலை தலையில் வைத்து முறித்து தூக்கி வீசுவதும், அப்பப்பா! அத்தனையும் பிரமாண்டம். சுயம் முற்றிலும் அழிந்த ஒப்பனை, உலகின் கடைசி மூலையில் இருப்பவனுக்கும் கேட்கும்படி பாட எத்தனிக்கும் குரல், காற்றினும் நளினமான, வலிமையானதோர் உடலசைவு, ஆட்டம்... ஆட்டம்.... ஆட்டம் கலையின் உச்சத்தை தொட்டுக்காட்டினார்கள் கூத்துக் கலைஞர்கள், ஒவ்வொருவனுக்குள்ளும் இருக்கும் நடனத்தை கிளறி விடும் இசை வெளியெங்கும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது கலை இலக்கிய விழாவின் கடை நிமிடம் வரை. அந்த சிறிய பந்தலுக்குள் அவர்கள் வெவ்வேறு உலகங்களை உருவாக்கி தந்தபடி இருந்தார்கள் கூத்து வழி. புகைப்படம் எடுக்க பலமுறை முயன்றும் மண¢டோதரியின் நடனத்திடம் தோற்றுப் போனேன். பொதுமக்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் நிறைந்த அந்த சபையில் மக்கள் கலை இலக்கிய விழா, மக்களுக்காக மக்களால் நிகழத்தப்பட்டுக் கொண்டிருந்தது. (மக்களாட்சி தத்துவம் சம்பந்தமில்லாமல் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது!). தமிழகத்தின் ஆயிரத்தெட்டு ஊடகங்களுள் ஒன்றுக்கும் இது விழாவாக தெரியாத பட்சத்திலும் மக்கள் தொலைகாட்சி மட்டும் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். விதிவிலக்கு எலலாவற்றிலும் உண்டுதானே. பார்வையாளர்கள், கலைஞர்களின் ஆடையை முடிந்த அளவு ரூபாய் நோட்டுகளை குத்தி அழகு படுத்தி உற்சாகம் கொள்ளச் செய்தனர். பாராட்டோ. வசையோ உடனுக்குடன் நேருக்கு நேர் கொடுத்துவிடுகிற ரசிகர்களையும் அதை எந்த கணத்திலும் எதிர் கொள்ள ஆயத்தமாயிருக்கிற கலைஞர்களையும் பார்க்க ஆச்சர்யமாயிருந்தது. கூத்தில் வருகிற ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்கேற்ப வந்து வந்து போகிறார்கள் அவர்களுக்கு சிறிதெனினும் ஒய்விருக்கும். கோமாளியாக வருபவர் முதலிலிருந்து இறுதிவரை ஓய்வின்றி எல்லா பாத்திரத்தோடும் ஆடிக்கொண்டே இருக்கிறார் : சிரிக்கவும் வைக்கிறார். கடின உழைப்பு. எந்த கலைஞருக்கும் நடனமும் சரி, வசனமும் சரி சிறிதும் பிசகவில்லை. சினிமா நடிகர்களின் “ரீ டேக”¢ சமாச்சாரங்களை நினைக்கையில் சிரிப்புதான் வந்தது,

விழா முடிந்ததும் சொல்லி வைத்தார் போல இரவும் விடிந்தது. ஒவ்வொருவரும் அவரவர் பயணத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். இரவில் முட்டி மோதி மண்டையை உடைத்துக் கொண்ட ராவணனும். ஹனுமானும் சிரித்துக் கொண்டிருந்தார்கள் வேஷம் கலைத்தபடி. கூத்து முடிந்ததும துண்டை உதறிவிட்டு புறப்படுகிற பார்வையாளனின் பெருமூச்சு சொல்லாமல் சொல்கிறது “எத்தனை பெரிய கலை இது!” கூத்தில் மயங்கிய இரவை விழுங்கிய கலை. அசையும் சலங்கையில் சிரித்துக் கொண்டிருந்தது. இனி வரும் நூற்றாண்டுகளையும் தின்று வாழும் இந்த கலை.


வெள்ளி, 22 மே, 2009

பாதரவு - மு. ஹரிகிருஷ்ணன்


சத்திப்பையன் வெச்சிருந்தது மொத்தம் எம்பது உருவாப் பின்னுக்குத்துக்காசு, ஒருப்பொட்டலங் குருணமருந்தும் ரெண்டு பாட்லு கோட்டரும் வாங்கி, ஒண்ண அப்பயே மூடிய திருவி வாயில ஊத்திக்கிட்டான், இன்னோன்ன வூட்டுக்கு கொண்டி ஒடச்சி அதோட இந்த குருண மருந்தையுங் கலக்கிக் குடிச்சிப்புடலாமுன்னு திட்டம், பின்ன என்னாப்பின்ன? இன்ன மேட்டும் அந்த உசுர வெச்சிருந்து ஆவப்போறதென்னா? சொத்து அழிஞ்சாலுஞ் சொல்லு அழியக்கூடாது, காத்தால ஒரு பேச்சி,மறுக்க மத்தியானம் ஒரு பேச்சா?
ஒடமையின்னு அவங்கிட்ட இந்தது அது ரெண்டுதான், அதுவும் அவஞ்சம்பாரிச்சதில்ல, அடமானம் வந்தது, நகுலூரு சுப்பனது அரப்பவுனு மோதரம், சௌரந்தரங் கோமாளியிது வாஸ்சு! நாளைக்கி ஒருநாளு குறுக்க, மறாநாளு ரெண்டு பேருந்சம்பந்தி, எதுப்பொண்ணு கட்டிக்கிறது. இந்தநாலு வருசமாக் கூத்தாடி அவந்தொச்சமா வெச்சிருந்தது அந்த மூவராயிரம் உருவா மொள்ளதான். அன்னிக்கி இருந்த பசையில ஆத்தர அவசரத்துக்கு கேட்க றாங்கன்னு ஈடுமானம் வாங்கிக்கிட்டுத்தான். காசக் குடுத்தான், அதயே தொழுவாடாப் பண்ற வள்ளலுமயிரு அவனுக்கு தெரியாது, அவன் அப்பேருகந்த ஆளுமில்ல, பழவுன தோசத்துக்கு ஒரு ஒதாரண நெனைக்கப்போயி பங்கம் வந்துட்டது.
வாங்கனவிகளச் சொல்லிக் குத்தமில்ல. அவிங்க குடுத்த தெல்லாம் ஒரு நாலணாப் பாக்கியில்லாம திலிப்பிக் குடுத்துட்டாங்க, இவனேத்தான் இவந்தலயில தட்டப்பொருத்தி வெச்சிக்கிட்டான், இந்தப் பித்தியா வாத்தியாருமாருங்க இவனுக்குச் சொல்லிக் குடுத்தாங்க?
மொதமொத பொன்னான் வாத்தியாரிண்டதான் இவங்கூத்துப் படிச்சது, கொன்னவாயனாக் கெடந்தவன வாய்கூட்டிப் பேச வெச்சி, பாட்டும், அடவுஞ் சொல்லிக் குடுத்தது அந்தப் புண்ணியவாந்தான்.! மவராசன குளுந்த நேரத்துல நெனைக்கனும்.! ராவுல கும்புட்டுட்டுப் படுக்கணும்.! என்னா அந்தாளுக்கிட்ட ஒருசிக்கலுன்னா எதயுத் திருத்தமாச் செய்யணும், இல்லையின்னா அவன் எதுப்புற நிக்க முடியாது. என்னாப் பண்டுவான். ஏதுப்பண்டுவான்னு அவனுக்கே தெரியாது. ஒரெட்டு ஆருலுப்பட்டி ஏரிக்கி அந்தாட்ட வெள்ளக்கல்லுப்பட்டியில முனியப்பந்தெவத்துக்கு கூத்துவுட்ருந்தாங்க, நளதமயேந்திரிக் கண்ணாலம் நாடகம்.! பொன்னாவிக தம்பிக்காரன் மணிப்பையன், நளச்சக்கரவர்த்தி வேசம்போட்டுக்கிட்டு வெளிய போனவனுக்கு சவய அடக்கிப் பேசத்தெரியில. அவம்பாட்டுக்கு என்னென்னம்மோ ஔப்பரிச்சிக்கிட்டுக் கெடந்தான், பொன்னானுக்கு கோவம் ஒண்ணுந் தாக்குப்புடிக்க முடியல, வலப்பையில வெச்சிருந்த பொறந்தவன் வேட்டிய எடுத்து ஒருப்பாட்டுக்கு ஒருக்க,
“கிழிஞ்சிப்போச்சிப்போ
கிழிஞ்சிப்போச்சிப்போ”!ன்னு
ஒருச்சாணுத்துணி மிச்சமில்லாம நூலு நூலாக் கிழிச்சியெஞ்சிப்புட்டான். விடிஞ்சி மணிப்பையன் முண்டக்கட்டயோட ஊரு மூப்பமூட்ல போயி பழைய வேட்டி வாங்கி கட்டிக்கிட்டு ஊடுபோயிச் சேந்தான்.
இன்னோரெட்டு, பக்க நாட்டுச் செட்டுக்கு ஆளுப்பத்தலைன்னு பொன்னானும். அவம்பங்காளி பெரிய கூவானும் போயிந்தாங்க, கொழலுல கூவாம் பேரேடுத்த ஆளு! அபி மன்னஞ்சண்டயோ, அர்ச்சுனந் தேவப்பட்டமோ அதென்னமோவொரு அலங்காரம் வெச்சிருந்தாங்க, பொன்னானுக்கு விடியாலம் வேசம், சேரிச் செத்தபடுத்துக் கண்ணசரலாமுன்னு டேசிக்கிப்பொறன படுதாவ விரிச்சுட்டு படுத்துக்கிட்டிருந்தான். பக்கநாட்டுச் செட்டுல ஆனையப்பன் ஆனையப்பன்னு ஒரு படயாச்சி பொண்ணு வேசக்காரன், அவனொரு சனஞ்சேராத நாயி! பொறத்தியாருன்னா அவனுக்கு பேண்ட பீய திலிம்பிப்பாத்தாப்பல ஓக்காளம், தானுங்கற கெவுரத்தி.
“சீருடன் தொண்டர் நாவில்
செழித்து வளர்பவளே போற்றி!
நாரணன் ஈன்றெடுத்த நான்முகன்
தேவியாளே!
சரஸ்வதி சாரதாம்பா உன்
தாழ்வினை போற்றி! போற்றி! ன்னு”
மூணடி விருத்தத்த முழுசாப் போடல, ஆனையப்பந் தொண்ட பொட்டிய அப்பிடியே கண்ணாப்பின்னான்னு கலைச்சது, மும்பாட்டு பணிக்கில்லையின்னா பிம்பாட்டுத்தான அத நேந்து நெரவுணும். கூவான் நெட்டா ஒரு அகவலு ஊத, உள்றயிருந்த ஆனையப்பன்.
“ஆர்ராவங் ங்கோயா பரதேசிப் புண்டமேல ஒக்க! என்றா கொழலு ஊதற, புண்டக்கொழலு? எங்கயிருந்துடா வர்றீங்க பறத்தாயாலிங்களா எம்பட தாலியறுக்க? அப்பிடியிப்பிடின்னு இன்னும் என்னனென்னம்மோ எச்சா வார்த்த பேசும்பிடி பொறனப் படுத்திருந்த பொன்னானுக்கு ஒவ்வொருச் சொல்லும் இந்த அல்லையிலக் குத்தி அந்த அல்லையில வருது, பின்ன என்னாப்பின்ன தானாடலையின்னாலும் தஞ்சரிகலம் ஆடாதா? எப்பேருகந்த தொழிலாளி? என்னா சேதி? வையகத்துல அவன பழிக்க ஆளுண்டா? குசல நாடகத்துல
சாமியும் வந்தாரா
சண்டைகள் செய்தாரா?
அனுமந்தப் பாலா ன்னு
அவன் ஊதறானே அந்த ஒருப்பாட்டுக்கு ஈடாவானா?இந்த ங்கொக்காளவோலி!
அவங்கால்ல ஒட்ன தூசி! இவனுக்குப்பாருவொரு மண்டக்கணத்த இருக்கட்டுண்டா ஒறக்கழுட்டிமாப்ள!
விடியறதுக்குள்ள உன்ன சின்னம் பண்ணலைன்னா ங்கப்பனுக்கே நாம் பொறக்கலைடான்னு மனசுல வெச்சிருந்தாம் பொன்னான்.
ஆனையப்பங் கழதயாட்டங் குதிச்சிப்புட்டு தர்பார முடிச்சிக்கிட்டு உள்ற வந்தான். மண்டையச் சுத்தி வழிச்சாலும் அவந்தலையில ஒரே மூணு மசுருச் சிக்காது. அக்கியானம் புடிச்சவன், ரெண்டடி சவுரி நால ஓட்டுக்கா வரிஞ்சி அதயே பூவு கீவெல்லாஞ் சிங்காரிச்சி நெத்தியோடச் சேத்தி சடையாட்டங் கட்டிக்கிவான். குதிக்கற முட்டுங் குதிச்சிப் புட்டு வந்து அத அவுத்து வெச்சிருவான்.
அன்னிக்கும் வந்தவன் மசுத்த தளத்தி பட்டிக்குச்சியிலக் கட்டிப்புட்டு வேசம் போட்டுக்கிட்டிருந்த சீனாங்கிட்ட பீடி வாங்கி பத்த வெச்சிக்கிட்டுக் குந்தியிருந்தான்.
மொழங்காலு குழி பொறிச்ச பொன்னான்,அலுங்காம அத அவுத்து குழிக்குள்ற போட்டு மண்ணத்தள்ளி மூடி,மேல படலப் பிரிச்சிப்போட்டு படுத்துக்கிட்டான், நாயம்பேசற முசுவுல ஆனையப்பனும் இதயெதயுங் கண்டுக்கல, அவஞ்சாயிண்டு வேசக்காரன் குஞ்சிப்பையன் தர்பாரு ஆவும்போதுதா எந்திரிச்சி சடயப் பார்த்தான், அது கட்ன தாவுல இல்ல.
“ஆயா ங்கொம்மா" ன்னு
பேசிக்கிட்டு தொழாவு, தொழாவுன்னு தொழாவுனா எங்கப்போயி அதுச் சிக்கப் போவுது? முடி இல்லாம மொட்டத்தலயோட எப்பிடி சவைக்கி வாறது? இவன் வேசத்த பொது வசனமாப் பேசி சரிக்கட்டிக்கிட்டாங் கு ஞ்சிப்பையன். இருந்தாலும் விடியாலம் ஒரு வேசம் வரவேயில்லைன்னு நூறு உருவாச் சொனயான ஆட்டமுட்டவங்க பாணிப்பண்டிப்புட்டாங்க.
அப்பேருகந்த ருஸ்தமான வாத்தியாரிண்ட வித்த கத்து என்னாப் பிரயோசனம்.?
அப்பறம்,
சிறுசுப் பெருசாச்சி, செட்டுங் கந்தறயாச்சி. பொன்னாங் கூப்புட்டுச் சொல்லிப்புட்டான்.
“அடே அடே சத்திப்பையா! இதப்பார்ராச் சாமி, உனக்கு பொழைக்க தடங்காட்டியுட்டுட்டன். நீயிப்போயி நெனப்பா பொழைச்சிக்கடாப்பா, இந்தச் செட்டயும். உங்களையும் கட்டி மாரடிச்சிக்கிட்டிருந்தா எம்பொண்டாட்டிப் பிள்ளைங்க கஞ்சிக்சிச் செத்து வீணாப் போயிருவாங்கடாப்பா”ன்னு.
கோழி, குஞ்சப் பிரிக்கறாப்பல பிரிச்சுட்டு அவரு கூப்புட்டப்பக்கம் கூத்துக்குப் போவ,,,,
சத்திப்பையன் அங்கயிருந்து எடப்பாடிக்கிப் போயி பொன்னியூட்டு மண்டயங்கிட்டச் சேந்தான், மண்டயன் ராவுலக் கூத்தாடி, பவல்ல சந்தப் பீச்சாண்டி.!
மொவங்கழுவி கண்ணாடிய எடுத்து, மின்ன வெச்சி வேசம் போட ஆரம்பிச்சா, அந்தக் கூறுமுஞ்சி காட்ற சேட்டைக்கிப் பயந்தே முக்காவாசிப்பேரு அந்த செட்லயிருந்து ஓட்டம் புடிச்சிருக்கறாங்க. நாயம் அநியாயங்கறது அவந்தலக் கட்டுக்கே தெரியாது, எல்லாந் சுதாரிச்சியிருந்தா எதோ ரெண்டு விசியஞ் தெரிஞ்சிக்கலாம்.
பேயிக்கி தாலிக்கட்னப்பொறவு சுடுகாட்டுக்கு பயந்தென்னா ஆவப்போவுது ? இவம் பாவம் படாத நிமுசுப் பட்டுக்கிட்டு அவனே கெதியின்னுக்கெடந்தான், மண்டயனுக்கு ஒரு கூத்தியா கந்தாயி, கந்தாயின்னு அவனோடவே இருந்தா கூத்தாடிக்கிட்டு. குஞ்சாம் பாளையத்துல ஒரு ஆட்டத்தன்னிக்கி சத்திப்பையந் தல கழுவிக்கிட்டு வந்துருந்தான்.
மைப்பந்துப்போட்டு ஊற வெச்ச எண்ணயப்பூசி பூசி அவனுக்கு மொழங்காலுமுட்லும் மசுரு, என்னதாஞ் சிக்கெடுத்துச் சீருப்பாத்தாலும் முடிஞ்சக்கொண்டய அவுத்தா அதோட மல்லுக்கட்டிதாம் படியவெக்கணும்!. வாக்கு அவ்வளச் சீக்கரம் பிரியாது. இவம்பாவம் கவடத்து
"கந்தாயிக்கா, கந்தாயிக்கா! இந்த தலயச் சித்த நேரெடுத்து ரெட்டச்சடப் போட்டுவுடுக்கா” ன்னு
கேக்க, அவளும் பாவஞ் சூதுவாது தெரியாம வாடா தம்பியின்னு ஒக்காரவெச்சி பெரும்பல்லுல நெவு நெவுன்னுச் சீவி ரெட்டச்சடப் பின்னிவுட்டா.
அன்னமுட்டும் மண்டயன் அவள நோட்டம் பாக்கறது ,பையன நோட்டம் பாக்கறது, வேசம் போடறதுன்னு கொறவனாட்டங் குந்தியிருந்தான். சத்திப்பையன் எந்திரிச்சி சீலயக்கட்டி சலங்காயக் கையிலெடுத்து,சாமிய வருந்தி கால்லச் சுத்திமுடிப்போட்டுக்கிட்டு, அரினனா,,,னா.ன்னு ராகம் போட்டான், கிடீர்னு ஒரு வொத கந்தாயிப்பிள்ள அல்ல வவுத்தக்கட்டி வுழுந்ததுப் பாரு, வடக்கத்தி படலோட அய்யோ யெஜ்ஜான்னு பொம்பள புழுதிக்காட்லப் போயி வுழுந்தா.
"ஏண்டி தேவிடியா! கொண்டவங் கொடுங்கையில, கொள்ளாதவன் உனக்கு மாரு மேலயாடி"ன்னு
மண்டயன் மூக்குல புளுத்துப்போயிக் கேக்க, சத்திப்பையன் நெட்டா அவங்காலடியில வுழுந்து
“அய்யோ வாத்தியாரே தப்பித் தவறிக்கூட உன்னு வாயால அப்பிடிச் சொல்லாத வாத்தியாரே அந்த தாயி ங்கம்மாளோட ஒணணு வாத்தியாரே”ன்னு
கெஞ்சிகெதர்றான்.
“ஏண்டா ங்கோயாலோக்க மொளச்சி மூணெலவுடல அதுக்குள்ள கூத்தியாச் சேத்தறயா கூத்தியா" ன்னு
வுட்டாம் பொத்துன்னு அவனுக்கு ஒருவொத! தெக்கித்திப்படலோட அவனும் புழுதிக்காட்ல போயிவுழுந்தான், வொதயத் தின்னுப்புட்டு என்னம்மோச் செரிக்கட்டி பொழுத ஒட்டி கதய முடிச்சி மங்கலம் பாடனாங்க. விடிஞ்சது, வேசத்த அழிச்சிப்புட்டு இவம்போறதுக்குள்ள மண்டயன் பைட்டேண்டு மோரிமேல தலகிழுதா கெடந்தாங் குடிச்சிப்புட்டு.
"வாத்தியாரே சம்பளம் வாத்தியாரே"ன்னு
பையங்கேட்க அந்த ஒணவு கெட்டவன் துள்ளிக் குதிச்செந்திரிச்சி,
"டே செட்டுக்கு வந்தமா குடுத்த வேசங்கட்டி ஆடனமான்னு உன்றச்சோலி மசுர பாத்துக்கிட்டுப் போயிக்கிட்டேயிருக்கனும், சம்பளங் கேக்கறப்பாரு, இந்தவொரு வேலப்புண்ட மட்லும் எங்கிட்ட வெச்சிக்காத"ன்னுப்புட்டு
திலுப்பியுங் குப்புற அடிச்சிப்படுத்துக்கிட்டாம் போதயில, என்னமுட்டும் நின்னுக்கிட்டிருக்கறது? பொட்டியத் தூக்கி தலமேல வெச்சிக்கிட்டு பதனெட்டு மைலு நடந்தேப்போயி வூடுச் சேந்தான்,
மண்டயங்கிட்ட சின்னப்பட்டு சீரழிஞ்சி ஒண்ணும் மோசம் போவல, ஒரு நல்லகாலம் பொறந்தது, மணிப்பையம் மறுக்கவுஞ் செட்டுக் கட்டனான், சத்திப்பையன் நாயா பேயா ஒழைச்சான், உருப்பிடியா தொழிலச் செஞ்சான், நாலுபேரு பரவால்ல சத்திப்பையன் வேசம் நல்லயிருக்குதுங்கற ரெவலுக்கு வந்தான், பொறவு சத்திப்பையன் இல்லையின்னா ஆட்டம் நெறக்காதுங்கற அளவுக்கு ஆச்சி, அவங்கையில ஒரு நூறு எரநூறு பொழக்காட்டம் போட்டது, அப்பறம் பாத்துக்க மாப்ளைக்கி கொம்பு மொளச்சிட்டுது, அறுப்புக்காலத்துல பெருக்கானுக்கு ஆறேழு கூத்தியாருன்னு சும்மாவாச் சொன்னாங்க?
பண்ணாடிக்கி போனபக்கம் பொண்டுங்க தொடுப்பு! பொழுது விடிஞ்சாலும் நழிச்சலு, கூட சீசாத்தண்ணீயும் போட பழவிக்கிட்டான், என்னம்மோ ங்காயா மேச்சேரி பத்ரக்காளி மொவம் முழிச்சி அவஞ்சாரீரத்த கெடுத்து பொழப்பல மண்ணள்ளிப் போடாம வுட்டுவெச்சிருந்தா.
இந்தக்கத இப்பிடியிருக்க.
சத்திப்பையனோட வீரப்பன் வீரப்பன்னு ஒரு குளுவன், அவனும் பொண்ணு வேசக¢காரஞ் செட்ல ஆடிக்கிட்டுயிருந்தான், பெருமைக்கிச் சொல்லல, தாயாலிக்கி கத்தியாட்டத்தொண்ட, முடிஞ்ச மட்லும் அவனும்பாவம் செட்டுக்குப் பாடுபட்டான், பாஞ்சாலக் கொறவஞ்சி நாடகம் வெச்சி அதுல இவங்கொறத்தி வேசங்கட்டிக்கிட்டு
சத்தியதுரோபதைக்கி தருமதயாளரும் விடையளித்து
சித்தமுங்கலங்கிவாடி தயங்கியே இருக்கும்போது
பத்தினி ரூபம்மாறி பாலனை இடுப்பில் வைத்து
அத்திமாநகரம் நோக்கி அம்மனும் வருகின்றாளே!ன்னு
விருத்தம்போட்டு
பாஞ்சால குறவஞ்சி வந்தாளே- பாலனையேந்தி
பாஞ்சால குறவஞ்சி வந்தாளே
பாஞ்சால குறவஞ்சி வந்தாள் பார்த்தாவ- பாலனாயேந்தி
செஞ்சிபதியாளுமம்மன் சிரசினில் கூடைவைத்து
நினைத்தகுறி தானுரைக்க நீலவர்ண மாயவரே
நீரும் வந்துதவவேணும் நினைத்தக்குறி சொல்லவேணும்
அக்கினியில் வந்துதித்து ஐவருக்கும் தேவியாகி
அக்யாதவாசம் விட்டு அத்திபுரம் போகலானேன்
முத்துமணிரத்தினங்களால் முடைந்து கட்டும் கூடையேந்தி
மூடனிட வாசலுக்கு முறைசொல்லப் போறேன் சாமி
சண்முகனார் அளித்த சதிரான கூடையேந்தி
சண்டாளன் வாசலுக்கு தான்போக நீதியாச்சே
ஆயனே மலர்கண்ணா அண்ணா அவரவர்க்கு குறியுரைக்க
அத்திபுர வீதிவந்து அமர்ந்திருக்க வேண்டும் சுவாமி.
மாபாவி துரியராசன் மானபங்கஞ் செய்திருக்க
மடையனிட வாசலுக்கு மாதுபோக காலமாச்சே
வனமாய் வனங்கடந்து வந்தேன் இருண்டவனம்
அந்தவனந்தனிலே ஆயனே துணை வருவாய்-ன்னு
இந்தப்பாட்ட பாடிக்கிட்டு வெளிய வந்தான்னா அடேயெங்கப்பா அவங்கொறத்தி வேசத்த அடிச்சி ஆட இன்னொருத்தன் பொறந்துதான் வருணும்.
மணிப்பையனும் மத்தாளக்காரன் பள்ளிப்பட்டி பெருமாளும் ஆளுங்க நெலவரத்தக்கண்டு செட்டுச் சம்பளத்த நேக்கா ஏப்பமுட ஆரம்பிச்சிக்கிட்டாங்க மூவாயிரஞ் சம்பளம் வாங்கனா ஆயிரந்தள்ளி ரெண்டாயிரம் போட்டுப் பிரிக்கிறது, ரெண்டாயிரஞ் சம்பளமின்னா உருவா ஆயிரந்தாங் கணக்கு, சத்திப்பையன் ஒருநாளு
“அடேய் நல்லவாயஞ் சம்பாரிக்கறத நாரவாயந் திங்கறாப்ல திங்கறிங்க. தின்னுத் தொலையிங்க, தூரந்தொலயா இருந்துப் பாவம் பத்து இருவது பஸ் சார்சுப் போட்டுக்கிட்டு வர்ரான் வீரப்பன். அவஞ்செலவுக்கு உண்டானத ஒரு அஞ்சிப்பத்து சேத்திக் குடுங்கடான்ன ததுதாம்ப்பா"....
“அடடா கூத்தாடிங்களே! பரவால்ல நல்ல நாயம் பேசிப் படிவிட்டீங்க. எங்களுக்கு தெரியாதாச் சம்பளம் பிரிக்க. குடுக்கறத்த வாங்கிக்கணும். கொலாய மூடிக்கிட்டு இருக்கணும், இதுதாஞ் செட்டு நடமொற! நாங்க வர்றவிங்கள வான்னுஞ் சொல்லல, போறவிங்கள வேண்டாமின்னுஞ் சொல்லல, இந்த சரோசாதேவியும் கே,ஆரு, விசியாவும் இல்லையின்னாச் செட்டு மாண்டாப் போவுது இல்ல பூன'கண்ண மூடிக்கிட்டா பூலோவம் இருண்டுப்போயிருமா?" ன்னு
கீட்டகம் பேசும்பிடி சத்திப்பையன் விசுக்குனு கௌம்பி வூட்டுக்குத் திலும்பிக்கிட்டான், மறாவது நாளு கூத்து இவனும் வீரப்பனும் போவாம நின்னுப்போச்சி. மணிப்பையஞ் சைக்கிலு எடுத்துக்கிட்டு சத்திப்பையமூட்டுக்கே வந்துட்டான்.
“என்றாச் சத்தி இப்பிடி சல்லியம் பண்றாப்ல பண்டிப்புட்ட? நீ பேசி வாங்கன வெத்தலப்பாக்கு, ச்சாமிச்சாமியா இருப்பியாம், இன்னிக்கி ஒரு நாத்திரியும்வந்து ஆடிக்குடுத்துர்றா. இல்லன்னா ஊருக்கரவத்தானுங்க ஈட்டுக்குச் சிக்கிப்போயிரவமுடா”ன்னு
அவங்கிட்டயும் அங்கயிருந்தபொண்டு பிள்ளைங்ககிட்டயும் நாயஞ்சொல்லி அழுவாத கொடுமயா கூப்புட, இவனுஞ் சேரி சேரின்னு போனான். போயி வேசம்போட்டு ஆடனான், விடிஞ்சி பெருமாளே வந்து இவங்கிட்டப் பேச்சிக்குடுத்தான்.
“ஏண்டாச் சத்தி நீரடிச்சி நீரு வெலகுமாடா? அப்பிடி என்றாப்பா நாஞ்சொல்லப்புட்டன்னு உனக்கு பொணக்கு வந்திரிச்சி, என்னம்மோ ஒரு பெரியமனுசன் வௌயாட்டுக்குப் பேசனா அதப்போயி கூரியமா மனசல வெச்சிக்கிறதா”ன்னு
கொழையிறான். கொணாய்க்கிறாஞ்சும்மா, இவனும் தொலையிதுடான்னு இருக்க அன்னிக்கி திருப்பியும் உருவா அயிநூறத்தின்னுப்புட்டாங்க நெண்டுப்பேரும், இவனும் வீரப்பனும் ஒரே முடுவாச் செட்டுக்கு போறதில்லன்னு தீருமானம் பண்டிக்கிட்டாங்க.
ஆட்டத்துக்கு போவலையின்னாச் சோத்துக்கு ஆரு குடுப்பா? அதும்போவ ஆடனகாலும் அவுசாரி போனப் பொச்சும் சும்மாயிருக்குமா?
கெடயில காலுத் தங்காம நத்தமேடு குளுவவமூட்டாரோட நாளு ராத்திரிக் கூத்துக்குப் போனாஞ் சத்திப்பையன்.
ஆரு ஆரோ ஆடறாங்க! பல பட்டறயுங் கூத்தாடுது அடோ சாமீ! கூத்துக்குன்னுப் பொறந்தவிங்க குளுவமூடுதான் நண்டுச் சிண்டு குஞ்சி குளுவான்னு சிறுகால் மட்டத்துலயிருந்து பெருங்காலுமட்டம் மட்லும் எதலயும் பூந்து வந்துருதுங்க அதுங்கச் சமாச்சாரமே வேற.
அவிங்க எசைக்கும் இவனோட எசைக்கும் ஒண்ணும்ரைனு வரல, ஆனா எடங்கண்டு பேசி தடங்கண்டுப் போறது எப்பிடின்னு அவிங்கக்கிட்டப் படிச்சிக்கிட்டான் உன்னப்பாரு என்னப்பாருன்னு கெழுடு கிண்டுங்களப் பாத்துக்கிட்டு எத்தன நாளைக்கி ஊட்டுல குந்தியிருக்கறது, அதும்பொறவு தொரசங்கட்டி ஏகாபுரத்துச் சுப்ருண்டப் போயி எடஞ்சேந்தான் அலங்காரத்துக்கு.
சுப்புரு ஒத்த உருவாயாயிருந்தாலுந் சேரி இன்னொருத்தங் காசுக்கு ஆசப்பட மாண்டான் ஒலக அனுப்பவம் தெரிஞ்சவன் எடப்பாடி மகுடஞ்சாவடியக்கட்டி, கெழக்க சேலம், தெக்க ராமக்கல்லு ஒருக்கோடியா பேரு தெரிஞ்ச கூத்தாடி. கொணம் மணம் ஆட்டம் பாட்டமின்னு, அவஞ்சங்கிதியே தனி. கச்சிதமான தொழிலாளி, நெலக்கடயானப் பாட்டுக்காரன். பதனெட்டாம் போர்க்களம் வெச்சி இவந்துரியோதனங்கட்டி,
“பாராளுந் திறமையிலாப் பாவியானேன்
பஞ்சவர்மேல் போர்தொடுத்தே விருதாவானேன்
தூறாதமரம்போல வொண்டியானேன்
துணையிழந்த பேடதுபோல் தவிக்கும்பாவி
நாராசங்காச்சிவிட்ட பான்மை போலே
நடுநடுங்கி மெய் சிலிர்த்து துரியன்தானும்
பொறாமையுள்ள சகுனி சல்லியன் சூழப்
போர்களத்தைக் கண்டு குறைமேற்கொள்வானே”
ன்னு, விருத்தம் போட்டு,பொறவு
பாவி துரியன் வந்தனன் ரணகளத்தில்
துரோகி துரியன் வந்தனன் ரணகளத்தில்
பாவி துரியன் வந்தேன் பாராச் சமர்களத்தில்
ஒண்டிக்கி ஒண்டியானேன் ஒருமரத்தோப்பானேன்
சிந்தனையில்லாது சிறகிழந்த பட்சியானேன்
பாவி துரியன் வந்தனன் ரணகளத்தில்”
ன்னு, பாட்டுப்பாடி வெளிய வந்து, படுகளத்துல வீமங்கெதயில அடிப்பட்டு காலொடிஞ்சி சாவற முட்டும் அவனப்பாத்து அழுத கண்ணுச் சிறுத்துப் போயிரும். சுப்புரிண்டப் போனப்பொறவு பரவால்ல. நல்லச் சேம்பரம் வரும்பிடிக்கும் ஒண்ணும் பஞ்சமில்ல.
கண்ணுச் சாளேசுரத்த கெவுணிக்க கெதியில்லாம திண்னையக் காத்துக்கிட்டு கெடந்த அவிங்கப்பங் கருப்பன மதுர கண்ணாசுப்பத்திரிக்கி கூட்டிப்போயி ஆப்பரேசன் பண்டி கண்ணாடி மாட்டிவுட்டான். மூட்டு வலியின்னும் மொழங்காலு வலியின்னும் வருசக்கணக்கா நடயில்லாம பாயிக்கி தொணயாப் படுத்துக்கிட்டிருந்த அவங்காயா செவிடிய ஈரோட்டு எலும்பாசுபத்திரிக்கி கொண்டி வைத்தியம் பாத்தான். அவந்தாயி தங்கப் பொண்ணூட்டுப்பிள்ள வயிசிக்கி வந்திச்சி, அதுக்கு அரப்பவுனு தோடு மூக்கித்தி ஆயிரம் உருவாயிக்கிச் சீலத்துணி மணி பதனேழு தட்டு வரிசயோட புளியம்பட்டி பல்லனையும் ஒலகடம் பூவரசனையுங் கூட்டியாந்து நையாண்டி கரவ முட்டாட்டி தெரட்டிச் செஞ்சாஞ் செரீங்கறாப்பிடி.. வவானித் சித்தாத்துல ஒருப்பொண்ணப் பாத்து அவனும் ஒரு கண்ணாலங் கார்த்திச் செஞ்சிக்கிட்டான்,அரமணைக்கிவொரு ஆம்பளப்பையனையும்,ஒரம்பரைக்கிவொரு பொட்டப்பிள்ளயையும் பெத்துக்கிட்டான், ஏழப்பால பொழச்சிட்டுப் போவுதுன்னு ங்கெப்பன் மவராசன் எம்,சி,யாரு அவிகப்பனும் ஆயாளும் போயி சம்பாரிச்ச சொத்துல காலனிக்கட்டிக் குடுக்க, அதுக்கொரு அய்யாயரம் வாக்கரிசிப்போட்டு சொந்த வூடுங்கட்டிக்கிட்டான்.
இதெல்லாம் மூணு நாலு வருசத்திக்கி மிந்தின ராமாயணம் மகாபாரதம், சுத்தமா இந்த வருசமும், போன வருசமும் பையம் பட்ட சித்ரவத பகவானுக்குதாந் தெரியிம், நேத்து வந்தானாங்குடி அவந்தலயில வுழுந்திச்சாம் இடிங்கறாப்பிடி உள்ளங்காலு வெள்ள எலும்பு தேய ஓழைச்ச சம்பாரிச்சி கட்ன வூட்ல எண்ணி எட்டு மாசங்கூட இந்தப் பையன் இருந்துப்பொழைக்கல.
மேக்க அந்தியூருக்கு அந்தல்ல எழுதிய மரத்தய்யங்கோயிலுக்கு கூத்தாடிப்புட்டு கழுத்துமுட்டும் கவட்டான் வரிச்சிக்கிட்டு வந்து மப்புல அவம் மச்சாங்காரன கண்டாரக் கழுதயின்னு பேச அவனிருந்துகிட்டு “இதாப்பாரு கடவுளே! என்னம்மோ கெடந்துசாட்டாவுது, நம்ப தங்கச்சிப் பிருசன் நம்பதங்கச்சிப் பிருசன்னு இத்தன நாளா நானும் வெச்சிப்பாத்தன், இன்னமேட்டும் போதப்போட்டுக்கிட்டு வந்து ஒரு வயசிப்பிள்ளைங்க இருக்கற எடத்துல நேந்தப்பிடி கொச்ச கோளாறு பேசிக்கட்டு திரியற வேல
நம்பளுக்குச் சுத்தப்படாது, மட்டு மரிகேதிய கெடுக்கறதுக்கு மின்ன வூட்டவுட்டு அந்தண்ட தாண்டிக்க”ன்னு
ஒரேவார்த்தயிலச் சொல்லிப்புட்டாங் கறாரா.
வெத்து மேலுல ஈமிய்க்க துணிமணியில்லாமக் கெடந்தவன் சிவுக்குனு எந்திரிச்சி சிண்ட ஒதிறித் தட்டி முடிஞ்சிக்கிட்டு இடுப்புலயிருந்த ஒட்டுக்கோமணத்தோட அப்பனாத்தா பொண்டாட்டி பிள்ளைங்கள கூட்டிக்கிட்டு அம்மாபேட்டைக்கி வந்து, பரசத்தாட்டி பூலாம்பட்டி வந்துட்டான்.ஆறுமாசம் ஒருவருசம் ஆவுமிந்தியே,அப்பனையும் அம்மாளையுந் தின்னு தண்ணிக் குடிச்சிப்புட்டான். அம்மா செத்த எலவுக்கு பொண்டாட்டி மூக்குல. காதுல இருந்தது அடவுக்குப் போச்சி, அப்பஞ்செத்த காரியத்துக்கு அந்த மோதரமும் வாஸ்சும் போச்சி.
மின்ன மாதரயா நோம்பி நொடிக்கி ஆட்டமுடறாங்க? இப்பத்தாங் குண்டியாட்டம் பாத்துப் பழவிக்கிச்சே சனம், எடவெளியே இல்லாம அலங்காரமா வந்து குமிஞ்ச எடத்துல கூத்துங்கறதே அறுதியாயிக்கிச்சி, கூழோ. கலியோ. கூப்புனு அரிசிச்சோறோ கொல நனஞ்சாப் போதுமின்னு வவுத்துப்பாடே பெருசாப்போச்சி, இதல எங்க அடமானத்த மூக்கறது, ஆறு மாசத்துல வட்டியும் மொதலுங்குடுத்தவனுக்கு இன்னிக்கி. நாளைக்கின்னு சாக்குச் சொல்லியே வருசம் ஒண்ணத் தாட்டியாச்சி.
தலமேல இருக்கறச் சொமயா கொண்டாடா நாஞ்சித்த தூக்கியாரமின்னு வாங்கிக்கிறதுக்கு உருவாச்சமாச்சாரம், இந்தக் காலத்துல ஒருத்தம் பொழைக்கறதப் பாப்பானா? பெறத்தியாங்கயிட்டத்தப் பாப்பானா? நகுலூருச் சுப்பனும். சௌந்தரங் கோமாளியும் ஆன முட்டும் இவஞ்சொல்ற தவுமானத்தக் கேட்டுக்கிட்டாங்க, ஆனாக் கண்ணாலக் காரியமாச்சே ஒரு நவ நட்டு இல்லாம எப்படி? பாக்கற வரைக்கும் பாத்துட்டு சுப்பஞ் சுருக்குனு ஒருச்சொல்லு சொல்லும்புடி சொல்லுப் பொறுக்க மாண்டாம ஒடி பனங்காட்டு மொண்டிச்சிக்கிட்ட ஒத்தைக்கி டவுலு கந்து வட்டிக்கி காசவாங்கி மோதரத்தையும் வாஸ்சயும் மூட்னதெல்லாம் மிந்தாநேத்தே மூட்டிப்புட்டாள் ரெண்டுநாளா ஆடவேண்டிய ஆட்டம் மழைக்கி நிக்கிம்பிடி அவுங்களும் நேர்ப்படல, மக்யாநாத்து சலகண்டபுரம் மதுர காளியம்மன் கோயில்ல அலங்காரம் இருந்தது, நேர்ல கொண்டி குடுக்க மொடப்பட்டுக்கிட்டு சேரி அங்க வந்தா பொருள ஒப்படச்சிப்புடலா மின்னுச் சிலேட்டமா இருந்தான். வெனய தேடிக்கிட்டான்.
செட்டுக்குப் போயும் தரித்தினியம் தொலயில, நீட்டாத கைய நீட்டி வாங்காத பக்கம் மொள்ளய வாங்கி வெச்சிட்டமே. எடப்பட தடப்பட எங்கியாச்சும் கூப்ட்டப்பக்கம் போயி பத்தஞ்சி ரெண்டு உண்டுன்னாச் சம்பாரிச்சாத் தானே கடங்கட்ட முடியிமின்னு மத்த செட்டுக்கும் போயிக்கிட்டிருந்தாம் பையன்.
வடச்சட்டிக்கிப் பயந்து அடுப்புல வுழுந்தாப்பிடி ஆயிப்போச்சி அன்னிக்கி இவங் கூத்துக்குப் போன கத, நம்ப சங்கிரி அஞ்சிப்பனையாண்ட கொரங்கச்செட்டுதுதாஞ் சதுரு, ஆனா கூத்துவுட்ட கரவத்தானுங்க பொண்ணு வேசத்துக்கு இவந்தான் வேணுமின்னு தனிச்சம்பளத்துக்கு பேசி வண்டிப்போட்டுக் கூட்டிக்கிட்டுப்போனாங்க.
கொரங்கனோட கூத்தாடறதும் ஒண்ணு அந்த நறவல்ல காலு வெக்கறதும ஒண்ணு, ஆலாமரத்துலக் குந்திக்கிட்டு கொரங்கு எம்புளுலேச் செம்புளுலுன்னுத் தடவித் தடவிப் பாக்குமாமே அந்த மாதர
ஒருச்சுக்குந் தெரியலைன்னாக் கூட என்யைவெட பெரிய புளுத்தி எவனுமிந்த பூமியிலியே இல்லம்பான், அவனோட ஒராளு வேசம்போட்டு ஆடுதுன்னா அவனுக்கு அடங்கித்தான் இருக்கணும், கடுகத்தன மீர்றதுக்கில்ல, அப்பிடி எங்கியாச்சுந் தப்பிடியா ஒருத்தங் கொண்டயம் போட்டுட்டான்னா இவன் விடியறதுக்குள்ள எதோவொரு வகயில அவன மொக்கப்பட்டம் பண்டிப்புடுவான், அரியானூரு பழனிசாமியிலிருந்து தானாதியூரு அர்ச்சுனன் முட்டும் அவஞ்சில்ரப்பித்திய செருப்பலடிக்காதவங்களே இல்ல, துரோபத துயிலு நாடகம், மடத்தூரு ஆறுமொகம் திரியோதனன், கொரங்கந் துச்சாதனன் சத்திப்பையம் பாஞ்சாலி. செட்டிப்பட்டி சின்னாளு அர்ச்சுனன். சித்தூரு பழனி தருமரு, திரியோதனந் தர்பாருக்குப் பொறன பாண்டவரு அஞ்சிபேரும் தர்பாரு ஆனாங்க, பகடயாட்டம் முடிஞ்சி. துச்சாதனன் துரோவதி சந்திப்புக்கட்டம்.
“மதித்த துரோபதையே நீதான் மானமுள்ளவளே யானால்
தித்தரும்நூற்றோர்அன்புவேணும்என்பவளேயானால்
கொதித்திடும்எந்தன்அண்ணன்கொலுவிற்குவரவேச்சொன்னார்
எதிர்த்துரை சொல்லாமல் யென்பின்னே வாராய¢“
“மட்டும் மருங்கும் மரியாதி இல்லாமல்
பொட்டெனவே எனையழைத்த
புத்தியில்லா மைத்துனரே
தோற்றமுடி உங்கள் அண்ணன்
சூழ்ந்திருக்கும் சபையில் என்னை
இட்டு வரச் சொன்னவிதம் எனக்கறியச் சொல்வாயே“
“வள்ளியே தருமபுத்திரன்
வலிவந்த சூதுமாடி முன்னிலும்
நாடுநகரம் முழுவதும் தோற்றான் பெண்ணே!
தன்னையும் தோற்றான் தம்பிமாரையும்
தோற்றான் உன்னயுந் தோற்று நின்று
ஒடுங்கினான் வந்து பாராய்“
“என்னையும் சொக்கட்டானில் வைத்து
இசையவே தோற்றார் என்றால்
என்மன்னவர் ஐந்துபேரும் வரவழைத்திடுவார்
காண் உன்னயும் யார்தான்
கண்டார் உன் தமையைனையும் யார்
தான்கண்டார்? பின்னமா பேசாதே
பேசாமல் நடந்திடுவாயே“
“நடக்கத்தான் வந்தேன் வந்தேன்
ஒரு நாழிகை தனிலே யுன்னை
ஒடுக்கத்தான் வந்தேன் வந்தேன்
வேந்தர்கள் சபையின் முன்னே
கெடுக்கத்தான் வந்தேன் வந்தேன்
கெர்வத்தை அடக்க வந்தேன்“
“துரோகியே இதுவென்ன சொல்லடா
என்னை தொடவேண்டாம் தூரநில்லடா
நெருப்பென்று தெரியாது நீசனே நீயாடாதே
கருத்தினால் கெட்டு வீணாய்க் கருகிப்போகாதே“
“தொட்டு இழுக்காமல் போவேனோ
போனால் துரியந்தம்பி ஆவேனோ
செத்தமாடும் பில்லுத் திங்குமா இனி
உஞ்சித்திர மினுக்கெல்லாம் செல்லுமா“
இந்த மாதர பாட்டுக்குப் பாட்டு விருத்தத்துக்கு விருத்தம் சத்திப்பையன் வுட்டுக் குடுக்காமப் போடும்படி, கொரங்கனுக்கு வேக்காடு ஒண்ணும் பொறுக்கமுடியல.
"போடுசா பொக்க "
"போடுசா பொக்க "ன்னு
சும்மாவே அல்லையில காரிக்காரித் துப்பிக்கிட்டிருந்தான்.
போடுசா பொக்கன்னா கூட ஆடற வேசக்காரன தொம்பரூட்டு பாசையில நாஸ்தி பண்றது, இவன் என்னாப் பண்டறான், ஏதுப்பண்டறான்னு கண்ணுறுத்துப் பாத்துக்கிட்டிருந்தாஞ் சத்திப்பையன். ஹூம் அவனுக்கா தெரியாது பல தண்ணி குடிச்சவனுக்கு. இருந்தாலும் தொழில தொழிலாச் செய்யனுமின்னு,,, பையங் குட்டு வுடல.
துயிலுரியறக் கட்டம் வந்தது, எப்ப அந்தக்கட்டம் வருதோ,,, தொரவதி வேசக்காரனும். துச்சாதன வேசக்காரனும் இன்னதுதாம் பண்றமின்னு ரக்கு தெரிஞ்சி வெளையாடனும். இல்ல மந்தையில மானங்கெட்டு நிக்கணும், இதுதாண்டா சமயமின்னு எடங்கண்டு ஏறி மிதிச்சாங் கொரங்கன், ஏமாந்த வாக்குல நின்னு,
வசனம் பேசிக்கிட்டிந்த சத்திப்பையஞ் சீலயப் புடிச்சி வெடுக்குனு இழுத்தாம் பாத்துக்க...... அவம் போட்ருந்த படி முடிச்சறுந்து முக்காச்சீல கொரங்கங் கையோட வந்துட்டது. அதறப்பதற அலயக்கொலய இப்பிடிச்செஞ்சா ஆருக்குத்தான் வெறி திலும்பாது? கங்கேடு மதிகேடா நட்ட நடு டேசியில போயிநின்னு சத்திப்பையன்,
“அடே கொழுந்தா! ஏண்டாப்பாவம் இவ்ள கயிட்டப்படற? இப்ப என்னா உனக்கு எம்பண்டத்தப் பாக்கணும் அவ்வளத்தான. இந்துரா பாத்துக்கடா”ன்னு
பாவாடய தூக்கி காட்டிப்புட்டு உள்ற போனவந் திரும்பி வரல, பிதுமாரு கெட்டுப்போச்சி, ஆயிரம் ஆட்டம் ஆடியிருக்கிறான், ஒரு நாளயிலியும் இந்த அவுமானம். நேந்ததில்ல.
பாஞ்சாலி சவதங் கூறாம கதய முடிக்க முடியாது, கூத்துட்டவங்க வந்து கெஞ்சிக் கொறமாட சத்திப்பையஞ் சாராயம் இல்லாம வெளி வரமாண்டேன்னுப்புட்டான், அஞ்சிப்பனையில சாராயத்துக்கா பஞ்சம்? நிழுசங் கொண்டாந்து குடுத்தாங்க சிலுவருப்போவுணி வழிய. சரக்கு அடிச்சிக்கிட்டுப் போயி ஒண்ணா ரெண்டா பாடி சந்தடைச்சிப்புட்டு வந்து வுழுந்தவன் உச்சி வெயிலு பொச்சியில அடிச்சப்பொறன எந்திரிச்சிப் பாத்தா, ஏப்பா கையிலிந்த மோதரத்தையுங் காணம்.! Õவாஸ்சயுங் காணம்! அவ்வளத்தாம் பையம் ஒடம்புல உசுரு இல்ல. கூட்ல ஆவியில்ல, எதக்கண்டு செரிக்கட்றது இருக்கற தொந்தரவ?
ஒடமக்காரஞ் சும்மாயிருப்பானா? மின்னயே “வயித்துக்கு என்றாத் திங்கறன்னு கேட்டுப்புடல? ஊருக்கெணத்தாண்ட ஒக்காந்தி வேசம் அழிக்கறப்பவே சத்திப்பையம்மேல சாவுக்கவுச்சி அடிச்சது, மொள்ள சங்கிரி வந்து அங்கயிருந்து முருகம்பஸ்ல ஏறி பூலாம் பட்டி வந்துச் சேந்தான்.
இவந் தலயக் கண்டதும் பையனும் பிள்ளயும் 'ஓ'ன்னுக்கத்தி கொணாய்ச்சிக்கிட்டு ஒடியாந்ததுங்க, பொட்டியக்கீழ வெச்சிட்டு கையிக்கு ஒண்ணாத் தூக்கயில தாயாலிக்கி எங்கிருந்து அத்தன ஆவுசம் வந்ததோ தெரியல! மென்னு முழுங்கறவனாட்டம் ரெண்டுங்களயுஞ் சொட்டவுடாம கடி கடின்னு கடிச்சி முத்தங் குடுக்கறானேச் சண்டாளப் பாவி!.
கள்ளு முள்ளு தெரியாத நிதானமாயிருந்தாலும் அதுங்களுக்கு நொறுவ வாங்க மறக்க மாட்டான், காலோட பின்னிக்கிட்டு வாற பிள்ளைங்களுக்கு பாலோடச் சோறூத்தலையின்னாலுங் கூட அகங்கைக்கிப் பத்தனத வஞ்சனையில்லாம வாங்கிப் போட்டு திங்கடிப்பான், அன்னிக்கிப்பாவம் வெறுங்கையோடதான் வந்தான், அதுங்களும் பாவம். அதப்பத்தி கண்டுக்கல, அப்பனோட சிரிச்சி மவுந்ததுங்க, ஒருச்சித்தய குடுமியப்புடிச்சேறி வௌயாண்டுதுங்க, போன நாயம் வந்தநாயம் பேசிக்கிட்டு அதுங்க தூங்கறதுக்கே ராவு வெகு நேரந்தாண்டிப் போச்சி...
தூக்கத்துல வில்லிதான், இருந்தாலுங் கடங்காரு வந்து போட்ட ரவுசுல சத்திப் பொண்டாட்டி காத்தாலப் புடிச்சே சோறுத்தண்ணியில்லாம கெடந்தா, வெறும் வவுத்துல எப்பிடி தூக்கம் புடிக்கும்? காலொருபக்கம், கையொருப்பக்கமா மாருமேல கெடந்த பிள்ளைங்கள தூக்கி ஒரு ஒரமாபோட்டுட்டு பொண்டாட்டியிண்ட வந்து படுத்தான், கண்டதும் அவ இவங் கோளாற நெனச்சி அழுதா,,, அழுதா,,, ஒயாம அழுதா.. சொல்ற சமாதானமெல்லாஞ் சொன்னவன் ஒண்ணும் வேலைக்கி ஆவாம பையம் ரவுக்குனு பண்ணயத்துல முசுவா பூந்துட்டான், வேணும் வேணாங்க உப்ப மழ அந்நேரம் பிச்சிக்கிட்டு ஊத்துது, வேர்த்த ஒடம்பு காத்து வேணுமிங்க பிருசனும் பொண்டாட்டியுந் திண்ணையில குந்தி மிய்க்க. மிய்க்க பொழைக்கற நாயம் பேசனாங்க.
காத்துச் சிலச்சிலுப்புக்கு கண்ண சொழட்டிக்கிட்டு வரும்பிடி அவ ஒருபக்கங் கட்டயச் சாய்க்க, இவனும் ஒருபக்கம் சாக்க விரிச்சுட்டுப் படுத்துக்கிட்டான், புருசம்பெருமயில பொம்பளைக்கி மசத் தூக்கம் மாயமா வந்துட்டது..
சத்திப்பையன் சுத்தியும் ஒருவட்டம் எசவிருக்குதான்னு நோட்டமுட்டுட்டு இடுப்புல கைய வெச்சிப்பாத்தாங் குருண மருந்துப்பொட்டலம் பத்ரமாயிருந்தது,,,,ச்சேரி மாடப் பெரையில ஒளிய வெச்சிருக்கற வெராந்திப்பாட்ல எடுக்கனுமே, குந்தனவாக்குல பூனையாட்டம் நவுந்து மொள்ள எந்திரிச்சி, ஒரு எட்டு தரையில வெச்சவன் மறு எட்டு வெச்சான் மவக்காரி மணிக்கட்டுமேல! எளங்கையிக்கும் அதுக்கும் எலும்பு ச்சடக்குனு முறிஞ்சது.
"ரே யெஜ்ஜா" ன்னு
பிள்ள ஒரேக் கத்தா கத்த
"அய்யோ மவளே"ன்னு,
தன்னப்பால பையங்கையி படக்குனு ரைட்டப்போட்டது

நரிக் கவிதை - தமிழ்நதி



நீங¢கள்என்னிடம் ஒரு கவிதை கேட்டிருந்தீர்கள்
எழுதப்படாத அது
அரூபமாய் கழிப்பறையிலும் உடனிருந்தது,
கடந்த மாதம் எழுதியிருந்தால்
புணர்ந்து தீராத உடலின் ஞாபகத்தை
காதலின் வலியாய் உருமாற்றியிருக்கலாம்
கடந்த வாரமெனில்
பல்லாயிரம் மைல்களுக்கப்பாலிருக்கும்
தேவதையின்
உதிர்ந்து போன சிறகினைப்பற்றி
எழுதியிருக்கலாம் நண்பரே
மூன்று நாட்கள் முன்புவரை
குருதியலை அடிக்கும் கடல்களை....
பசித்தழும் குழந்தைகளை....
ஒரு பெண்ணின் இறைச்சியைப்
பங்குபோட்டவர்களைக்
குறித்து எழுதும் எண்ணமிருந்தது.
களைத்துப் போய்த் திரும்பி வந்த
இந்த மாலையிலிருந்து
புலிவேஷம் கட்டிய நரியொன்று
என்னுள் ஏறியமர்ந்திருக்கிறது
இந்த நரியைத் தரையிறக்காமல்
எழுதிவிட முடியுமா
ஒரு கவிதையை?

மதிபாலா கவிதைகள்


  • தகரக¢ கொட்டகையில்
    கதைகள் பேசும்
    தேர்ச் சிற்பங்கள்
    திருவிழாவின் அம்மணம்
    குறித்து
    கோயிலிலிருந்தபடி காது கொடுப்பார்
    சாமியும் சிரித்தபடி.

  • இன்னும் மணமாகவில்லை - முதிர்கன்னி
    மனசெல்லாம் ஆண் வாசம்
    வெளிப்படையாக சொன்னால்
    வேறுவிதமாக போகும்,
    சொல்லாத வரை
    பிறர் நாசி
    மன வாசனையை நுகர முடியும்?

    கனவு வழி
  • முதிர்ந்த கனவில்
    வளர்ந்த சிவலிங¢கம்
    கோவிலை உடைத்து
    வெளியே தெரிகிறது,
    நந்தியின் மூச்சு திணறல்
    கேட்டு
    இடப்பாகம் சத்தமாய¢
    சிரிக்கிறது,
    நிசி தகிக்க.

வெட்டவெளி - பொதிகைச்சித்தர் பக்கங்கள்


4, “அலகுகளுக்குள் இருக்கும் நாக்குகள் அவ்வளவு தெளிவான மொழி உடையன அல்ல“
“பாசிசம் அரசியலை அழகியல் ஆக்குகின்றது
கம்யூனிசம் கலையை அரசியற் படுத்துகின்றது
-வால்ட்டர் பென்விமின்
அரசியற்கவிதை பற்றிய பதிவுகள் க,மோகனரங்கனின் 'நவீனகவிதைப் பரப்பின் சிந்தனைமுகங்கள்' கட்டுரையிலும் (சாம்பல்' மார்ச் 2004); ஜெயமோகனின் 'தேவதேவனின் கவிதை அரசியல்' கட்டுரையிலும் (தமிழினி பிப் 2008); விக்கிரமாதித்யனின் 'ஒரு கவிஞன் ஒரு கவிதை ஒருலகம்' கட்டுரையிலும் ('உயிர்எழுத்து'); சிபிச்செல்வனின் ராஜ மார்த்தாண்டன் கவிதை' கட்டுரையிலும் ('உயிர் எழுத்து' ஆக,2008) தொடர்வனவாகின்றன.
தந்த கோபுர வாசிகளின் சௌந்தர்ய உபாசனைக்கு ஊடாக உள்ளுறைந்து கிடக்கும் அரசியல்; செய்வினை மந்திரத்தகட்டினைச் செருகி உருவும் தந்திரோபயமான சாமான்ய ஜாலம்; கலை இயக்கத்தை வறள வைக்கும் தார்மீகப்பிசகு குறித்த பதிலாக இதனை முன்வைக்கின்றேன்.
“கடந்த அரைநூறு வருடங்களில் தமிழ்ச் சமூகத்தில் பாதிப்பு ஏற்படுத்திய முக்கிய நிகழ்வுகளான 1. நக்சல்வாத அமைப்பினால் காவு கொள்ளப்பட்ட இளைஞர்கள், 2. அவசரநிலை காலத்தில் நேர்ந்த நெருக்கடிகள், 3. இந்தி எதிர்ப்புப் போராட்டம் இவை குறித்தெல்லாம் காலத்தின் மனசாட்சியாகக் கருதப்படும் கவிதைகளின் பதிவுகள் அதிகமில்லை என்பது தமிழின் துரதிருஷ்ட்ட வசமான நிலையையே குறிக்கின்றது“ எனத் தொடரும் க.மோகனராங்கன் அவரது பார்வையில் புலப்பட்ட அரசியல் கவிதை என்பதாக வரிசைப் படுத்தலாகின்றார். பிரம்மராஜனின் 'விசாரம் வேண்டும் இறப்புகள்' சத்யனின் 'இளம் இரவில் வந்தவர்கள்' போன்ற கவிதைகளையும் ஆத்மாநாமின் சில கவிதைகளிலும் இப்பிரச்னைகள் எதிரொலிக்கக் கேட்க முடிகிறது. அரசியல் கவிதைக்கு உதாரணமாக ஆகச்சிறந்த தமிழ்க்கவிதைகளாக இன்றளவும் இருப்பது ஆத்மாநாமின் சிலவே, மனுஷ்யபுத்திரனின் சமீபத்திய 'அரசி' கவிதையையும் அவ்வரிசையில் சேர்க்கலாம். இதன் தொடர் நீட்சியாக இந்த 'ரிலே'யைக் கைமாற்றி தொடரலாகின்றனர் நம்பியும், சிபிச்செல்வனும்.
“தமிழ்ப்புதுக்கவிதையில் அரசியல் கவிதைகள் எழுதியவர்கள் மிக்குறைவு, அப்படி எழுதி வெற்றி பெற்றவர்கள் அதைவிடக் குறைவு. ஆத்மாநாம், ஞானக்கூத்தன், பிரம்மராஜன், சத்யன் வரிசையில் இப்போது ராஜமார்த்தாண்டனையும் சேர்த்துக் கொள்ளலாம்” எனத் தொடரும் சிபிச்செல்வன் “அரசியல் கவிதைகளை அடையாளங்கண்டு ஆச்சர்யப்பட்டு ஒருவாறு அதிர்ந்து தணிகின்றார். அரசியல் கவிதைகளையும் ராஜ மார்த்தாண்டம் எழுதியுள்ளார் என்பதும் பலருக்கு ஆச்சர்யம் ஊட்டக்கூடிய தகவலாக இருக்கும், 'புலி வேட்டை' 'அசல் குடிமகன் ' 'இல்லாதவாழ்க்கை' போன்ற கவிதைகள் சிலருக்கு அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம், இப்போது மறுவாசிப்பு செய்யும் போது இவரின் அரசியல் கவிதையை கண்டு பிடிக்க முடிந்தது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் ராஜ மார்த்தாண்டனின் முதல் கவிதையே அரசியல் கவிதை தான் என்று அவரின் முதல் தொகுப்பின் முன்னுரையிலிருந்து அறிந்ததும் அதிர்ச்சியின் வேகம் குறைந்தது, என்று சற்றே ஆசுவாசப்படுத்தி கொள்கின்றார். 'அய்யோபாவம் சிபி' என்றே நமக்கு அவர்மேல் அனுதாபப்படவே தோன்றுகின்றது. ஏதோ அரசியலென்பதே 'கெட்டவர்த்தை' என்பது போலவும், என்னவோ நம்ம அண்ணாச்சி கூடக் கெட்டவர்த்தை பண்ணிவிட்டார் என்பது போலவும் சிபி அதிர்ந்து தணிவதாகவே நமக்குப் படுகின்றது, வேறு வார்த்தைகளில் கூறுவதானால் “தொற இங்லீஷ் எல்லாம் பேசுது“ என விவேக்கை வியக்கும் கோவை சரளா 'டயலாக்' தான் நமக்கு ஞாபகத்தில் 'பிளாஷ் பேக்' ஆகின்றது.
இதற்கப்பால் கவிதையில் அரசியலைக் கண்டடைவது பற்றிய ஜெயமோகன் சித்தரிப்பிற்கு வருவோம், “கவிதையில் அரசியலைக் கண்டடைவது ஓர் அரசியல் செயல்பாடு மட்டுமே !இலக்கியத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை, பெரும்பாலும் அரசியல்வாதிகள் அவர்களின் அவ்வப்போதைய தரப்புக்கு ஏற்ப விருப்பு வெறுப்புகளுக்கு இடையில் அது செய்யப்படுகின்றது, அரசியலை மட்டுமே காண்பது மூடர்களின் வேலை, இலக்கியத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை என்பது இங்கு அரசியல் பேசாதீர் எனும் தேநீர்க்கடை அறிவிப்பு போன்றதே! 'அரசியல் பேசாதே' என்பதன் உட்கிடை எவ்வாறு அரசியல் சார்ந்தது ஆகின்றதோ அவ்வாறே 'இலக்கியத்திற்கும் அதற்கும் (அரசியலுக்கும்) தொடர்பில்லை' என்பதும் கூட ஜெயமோக அரசியலே, “வரலாற்றாளன் ஒரு நிகழ்வின் விளைவுகளைக் கையாள வேண்டியவன் ஆகிறான், ஒரு கலைஞனோ நிகழ்வின் உண்மைகளைக் கையாள வேண்டியவன் ஆகின்றான் என்பார் லியோ டால்ஸ் டாய், இவ்வாறு நிகழ்வின் உண்மைகளாகக் கலைஞன் கையாள வேண்டி இருப்பது எதுவோ அதற்குப் பேர் தானே அரசியல்?
இத்துடன் ஒருசேர கலாயோகி ஆனந்தகுமாரசாமி இது குறித்துப் பேசுவ தனையும் இங்கே கவனங் கூர்வோம், “கலை என்பது நம் வேலையை எப்படிச் செய்வது என்பதைப் பற்றியதோர் அறிவாகும், ஆனால் நமக்கு என்ன வேண்டும், என்ன செய்யப்பட வேண்டும் என்பதைப் பற்றி அது சொல்வதில்லை,,,,, எத்தகைய அனுபவத்தை வெளிப்படுத்த வேண்டும் கலை என்பதைக் கலைஞனுக்குள் இருக்கும் மனிதன் தீர்மானிப்பதுதான் சரியானது, அது அவனது கடமையும் உரிமையும் ஆகும்.” ('அறிகுறி அறிதலும் தீர்வும்' 'கணையாழி')
இவ்வாறு கலைஞனுக்குள் இருக்கும் மனிதனால் தீர்மானிக்கப்படுவது எதுவோ அதற்குப் பெயர்தானே அரசியல்- 'அரசியலை மட்டுமே காண்பது மூடர்களின் வேலை' என அருளிச் செய்கின்றாரே ஜெயமோகன், இங்கு எந்தவொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னாலே அதற்கான வர்க்கமும் வர்ணமும் ஒளிந்து கிடக்கின்ற போது, அதைக் காண வல்ல 'மூடத்தனமே' எம்மனோர்க்கு வேலை என்போம். சரி வாதத்திற்கு அரசியலை மட்டுமே காண்பது மூடர்களின் வேலை என்பதை ஒப்புக் கொள்வோமானால், அப்புறம் அழகியலை மட்டுமே காண்பது கயமையின் லீலை என்பதாகத்தானே ஆகிப்போகும்?
கவிதையில் அரசியலைக் கண்டடைவது குறித்து பேசப்புகுந்த ஜெயமோகன் அதனைச் 'செய்வினை மந்திரத் தகடு' என்றெலாம் மற்றவர் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, தகட்டை இடுக்கி வந்த பூசாரி மறைமுகமாக அதனைச் செருகி உருவும் செல்பிடுவித்தை போன்றதே என நக்கலடிக்கின்றார். மட்டுமல்லாமல் இருபது வருடங்களுக்கு முன்பு கவிதை அரசியல் பற்றி நடந்த ஒரு விவாதத்தின் போது பிரேமிள் பேசியதாக முவைக்கும் செய்தியையும் இங்கே நோக்குவோம்: தம் கவிதைகளைப் பற்றிப் பேசிய பிரேமிள் அவை அரசியலுக்கு அப்பாற்பட்டவை என்றார், அரசியல் என்ற சொல்லில் சுட்டப்படும் உலகியல் சார்ந்த, அதிகாரம் சார்ந்த சிந்தனைகளோடும், செயல்பாடுகளுடனும் அவற்றிற்குத் தொடர்பில்லை என்றார் எனத் தாம் இடுக்கி வந்த தகட்டை பிரேமின பேச்சிற்கு ஊடாக நைஸாக செருகி உருவிக் காட்டி விடுகின்றார், ('தமிழினி' பிப் 2008) அதிகாரத்தில் தங்காத-அதிகாரத்தால் தேங்காத சித்தர் மெய்யியலே பிரேமிள் மற்றும் அம்மனோரின் மெய்யியலாகும், எனவே இங்கு அரசியலுக்கு அப்பாற்பட்டவை எனும் பிரேமின் கூற்றின் மெய்ப்பொருள் கட்சி அரசியலுக்கு அப்பாற் பட்டதென்பதுதான்- பிரேமிள் அதிரடிக்கவிதை வரிகளாலேயே இதனைக் கூற வேண்டுமெனில் இப்படிக் குறிப்பிடலாம்,
“கட்சிக் கருத்துக்குள் கட்டுப்படுமா
காலத்தை மீறிக் கனலும் கவித்துவம்”
இது ணி=விசி2 எனும் கவிதையை விளங்கி கொள்ள மாட்டாத சிவசேகரத்திற்கான அதிரடிக் கவிதையே! மாறாக இதனையே அறிவியல் சமன்பாட்டைக் கூட ஒரு கவிதையாக மாற்ற இயலும் என நிரூபித்த சாதனையாகவே இனம் காண்பார் க.மோகனரங்கன். எனவே அதிகாரத்திற்கு- கட்சி கட்டலுக்கு-அப்பாற்பட்ட தென்கிற ரீதியியலான பிரேமிள் கூற்றையே அரசியலுக்கு அப்பாற்பட்டதெனத் திரிக்கும் தந்திரோபயமான ஜெயமோகனின் கைங்கர்யமே அவர் சுட்டிய செய்வினைமந்திரத் தகட்டினைச் செருகி உருவும் செப்பிடுவித்தையான திரித்தல்வாத சாமன்ய ஜாலமாகும், இனி இங்கே நாம் பேசிச் செல்வது குறித் தெல்லாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரேமின் குறிப்பிட்ட வற்றைத் தொகுத்துக் காண்போம்:
“உண்மையில் தத்துவத்தையும் தார்மீகத்திலோ, அறப்பிரச்சாரத்திலோ உபயோகிப்பது போலக் கவிதையில் உபயோகித்து விட முடியாது. ஹ்ருதய பூர்வமான புத்தியும், கவித்துவ தர்க்கமும் கலந்து சுடரும் போதே கவிதையும் சாத்தியம், இலியட்டும் நெரூடாவும் இத்தகைய சுடரின் வசப்பட்டவர்கள்”, ('தமிழின் நவீனத்துவம்') “உட்பொருட் செறியும் அதீதத்துவமான 'ஏதோ ஒன்றன' பிரசன்னமும் இணைபிரியாதவை, உட்பொருளை மட்டும் தேடி அடைவதோ 'ஏதோ ஒன்று' இருப்பதைப் போன்ற உணர்வை மட்டும் அனுபவிப்பதோ, போலித்தனமான தயாரிப்புகளையே ஊக்குவிக்கும். முதல்வகையாக கௌரவமான உட்பொருளும், செயற்கையாக வார்த்த தார்மீக விளம்பரங்களும், இரண்டாவது வகையாக ஏதோ இருக்கிறது என்று பாவனை காட்டுகிற குதர்க்க மயமும் கவிதைகளென எழுதப்பட்டு விடும்” என இருமுனைத் தவறுகளையும் எடுத்துக்காட்டுவார் (வானமற்ற வெளி)
பிரேமிளின் காத்திரமான அரசியலை இருட்டடிக்க முயலும் ஜெயமோகனின் தந்திரமான அழகியல் பார்வைகளுடன் அடிப்படையிலேயே முரண்பட்ட ஒன்றே பிரேமிளின் மனிதநேயம் சார் அழகியல் நோக்கெனலாம். இதுபற்றி இனிக் காண்போம், “பட்டவர்த்தனமாகச் சமூகவக்ரங்களை அம்பலப்படுத்துவோர் சுத்த சாந்நித்தியச் சுருதியிலிருந்து பிசகினாலுங்கூட மிகுந்த மரியாதைக்கு உரியவர்கள்” எனும் அவரின் விமர்சனச் சித்தாந்த அரவணைப்பிறகு உரியவர்களாக அவர் இனங்கண்டது இன்குலாப் கே, டானியல் முதலானோரை எனலாம், “உயிர்த் தமைதான் அழகெனக் கண்டார் பிரேமிள். உயிர்த்தன்மை தான் என்ன? என்று பார்த்தால் அது நீதியுணர்விலிருந்து பிசகாத ஒரு மனோதர்மம் என்று காணலாம்” என்பார். இவ்வாறே இன்குலாப்பும் “எது ஒன்று அதனுடைய இயல்பில் இருக்கிறதோ அது அழகானது, நான் என்நிறத்தில் பூக்கிறேன் நான் என்மணத்தில் பூக்கிறேன்! அழகியலென்பது உயிரியல்பாகும்” எனக்காண்பார். இவ்விரு கூற்றிகளின் சாராம்சமும் ஒன்றே, அது யாதெனில் விடுதலை என்பது பிளவுபட முடியாதது எனும் மார்க்சிய மூலவாசகத்தின் பொருண்மையே அதுவாகும், தன்னியல்பில் நிற்கின்ற ஒன்றுதானே தளைப்படாத் தகவுடன் இயங்க இயலும்?
எப்போது இந்த மனோதர்மத்திலிருந்து (நீதியுணர்விலிருந்து பிசகாத ஒரு மனோதர்மம்) கலைஞன் பிசகுகிறானோ, அது அவனது படைப்பிலிருந்து பிறிதான தனிமனிதப் பார்வைபிசகாக இருந்தால் கூட,அது அவனது கலை இயக்கத்தை வறள வைத்துவிடும். மௌனிக்கு நடந்தது இது என்பது நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்ற எனது சித்தாந்தம்"என மௌனியை முன்னிறுத்தி பிரேமிள் ஒர் விமர்சனச் சித்தார்ந்தத்தையே கையளித்தார். அதாவது இனக்குழு (ஜாதிய) மனோபாவம் உள்ள ஒருவர் எவ்வளவு பெரிய திறனாளியாக இருந்த போதிலும் போகப் போக அவரை இனக்குழுப் பார்வை அரித்து ஓட்டை போட்டுவடும் என்பதே அச்சித்தாந்தம். ஈழத்தின் எஸ், பொ, குறித்த அவர் பதிவான 'மனோவியோதி மணடலம்' மில் இதனை இன்னும் தெளிவுபடுத்துவார். நீதிப்பண்புக்கு முரணாக அழகினை அனுசரிக்கும் இயல் எதுவும் இருக்க முடியாது, விமர்சனத்தின் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு அநீதியே அழகியலாக வடிவெடுக்க இடமில்லை, ஆயினும் இல்லாமை அற்ற, சமூக ஏற்றத் தாழ்வுகள் அற்ற, பகுத்தறிவு பூர்வமான இயக்கங்களை வேரறுக்கும் ஏற்றத்தாழ்வு கங்காணிகள் இந்தியாவில் அழகியலை வர்ணாஸ்ரமச் சார்புள்ள இயலாக பயின்று வந்திருக்கின்றனர். காரணம் வர்ணாஸ்ரமமே தர்மம், நீதி. நியதி என்ற இந்த மனோவியாதி மண்டலத் தொடர்ச்சியாகும் (லயம்) இதனையே வசதியாகத் தனக்கேற்பத் தகவமைத்து வேறு வார்த்தைகளில் எதிரொலிப்பார் ஜெயமோகன். ஒரு தரப்பின் குரலாக ஒலிக்கும் படைப்புகள் வாதாடுகின்றன, தாக்குகின்றன, வசைபாடுகின்றன, மெல்லமெல்ல வெறுப்பையே ஆயுதமாகக் கொள்கின்றன. அவற்றின் அறச்சீற்றமும் நீதியுணர்வும் கூட மெல்லமெல்ல எதிர்மறையானதாக மாறிப் போகிறது,,, நாராயண குரு எந்நிலையிலும் எதிர் மறையாக எதுவுமே சொன்னதில்லை என்று வரலாறு சொல்கிறது. வெறுப்பற்ற ஒரு நேர்மறை இயக்கம் அது,, அது ஞானியின் அரசியல் நாராயண குருவை பிற இந்திய சமூகசீர்திருத்த வாதிகளிடம் இருந்து முற்றிலும் மாறுபடுத்திக் காட்டும் அம்சம் இதுவே!. ஜெயமோகன் விதந்தோதும் அந்த ஞானியின் அரசியலை தம்மளவில் நிலைநிறுத்த அவரால் முடிகின்றதா? தேவதேவன் கவிதையின் அரசியல் பற்றிப் பேசு முகமாகத் தலைப்படுகையில் அக்கவிதைகளில் உள்ள அடிவயிற்றுச் சீற்றத்தை நாம் ஒருபோதும் நம் தொழில் முறைப்புரட்சியாளர்களிடம் கண்டு கொள்ள முடியாது எனப் போகிறபோக்கில் நக்கலடிக்கின்றார், ('தமிழினி ' பிப் 08) ஆக இவ்வாறு எல்லாம் நாராயண குருவைப் போற்று முகமாக மற்ற இந்திய சமூகசீர்தி£ருத்த வாதிகளைக் கீழிறக்குவதும் தேவதேவனைப் போற்றுமுகமாக மாற்றுத் தரப்பைத் தொழில் முறைப் புரட்சியாளரென்றவர் பாவிக்கும் பதப்பிரயோகமும் ஒருதரப்பின் குரலாகத் தாக்க முற்படும் எதிர்மறை வசை அல்லாமல் மற்றென்னவாம்? இவ்வாறே அவர் கிறித்துவர் மீதான இந்துத்வ சக்திகளின் தாக்குதலைக் கடுமையாக கண்டனம் புரிவதற்கு ஊடாகவே “ஏதேனும் ஒருவகையில் இந்து எனத்தன்னை உணரும் ஒருவன் உரக்கச் சொல்ல வேண்டிய தருணம் இது,,,, இந்து மறுமலர்ச்சி என்று இந்த இந்துத்துவர்கள் சொல்வது இந்தமரபுக்குள் முல்லாத்தனத்தைக் கொண்டுவருவது தான் என்றால் நாளடைவில் அத இந்து ஞான மரபின் அடிப்படை விழுமியங்களைஅழிப்பதாக மாறும்” எனவும் மனம்பதறுகின்றார். ('தமிழினி ' அக்.08) 'நம்தொழில் முறைப் புரட்சியாளர்கள்' மற்றும் 'இந்து மரபுக்குள் முல்லாத்தனத்தைக் கொண்டுவருவது' போன்ற அவரது பதப்பிரயோகங்கள் அவரது மடிப்பூனைகளை அவிழ்த்து விட்டு விடுகின்றன, ஆசிரியனுக்குத் துரோகம் பண்ணி அவரைக் காட்டிக் கொடுத்துவிடுகின்றது, அவரது மொழி. எம்மினிய எதிராளியான தொழில் முறைக் கலைஞனே! இந்துத்துவா என்பது தான் அவர்கள் வாழ்முறை புரட்சி என்பது எம்மனோர்க்கு ஒரு போதும் தொழில் முறை ஆகாது! அதுவே எம் வாழ்முறை! களத்தில் நிகழும் இச்சமரில் ஜெயமோகன் நிற்பது எந்தப் பக்கத்தில்? நேர்மறை எதிர்மறை என்றெல்லாம் பூசி மெழுகாமல் நேரடியாகவே பதில் சொல்லட்டும் எதிர் மற்றும் மாற்று மரபினர் குறுக்கீடுகளில் நேர்மறைக்கு ஏது இடம்? ஆதிக்க வாதிகள் திசை நோக்கிச் சுட்ட வேண்டிய ஜெயமோகனின் சுட்டுவிரல் பாதிக்கப்பட்டவர் பக்கம் திசை திரும்புவதேன்? சரி வாதத்திற்காகக் காந்தியாரின் சாந்த சொரூபமாகவே ஜெயமோகனையும் ஏற்று 'இந்து ஞானமரபின் அடிப்படை விழுமியங்களை'க் கொண்டாடும் 'அப்ராணி' யகவே வைத்துக் கொள்வோம்! ஆனாலது அடிப்படையிலேயே கொடுங்கோன்மை மரபுதானே? அதிலென்ன விழுமியம்? உலக முழுமைக்குமான ஒவ்வொரு மனிதனையும் மிக எளிதாக எந்தவிதக் குற்றவுணர்வுமற்று ஒருவன் முறையாளனாக மாற்றிவிடும் சாத்தியம் இந்து மதத்திற்கு உண்டு. சமூக தன்டனைகள் பற்றிய பற்றிய கருத்தாக்கங்களையே தனது நெறியாகக் கொண்டு உருவான இந்து மதப்பண்பாடு வடிவம் என்பதிலிருந்து மீளுவதே இந்தியத் தலித்துக்கான முதல் விடுதலை என்பதை அம்பேத்கர் தமது இறுதி நிலையில் உரக்கவே கூறிச் சென்றார் என்பாரே பிரேம்-ரமேஷ் (சிதைவுகளின் ஒழுங்கமைவு) இவ்வாறிருக்க இந்து மரபுக்குள் முல்லாத்தனத்தைக் கொண்டு வருவதெனும் பதப்பிரயோகம் இஸ்லாமியர் மீதான ஊடகவன் முறையின் பாற்பட்ட ஒன்றேயன்றோ? எத்தரப்பிலும் இல்லாத நடுநிலையாளர் போல ஒரு தரப்பு சார்வசை வன்முறை என்றெலாம் குறுப்பிடும் ஜெயமோகச் சாயங்கள் இங்கே வெளுத்துவிட வில்லையா? தம் கடவுளின் நிறுவனத்தைக் காபந்து பன்ணத் துடிப்பதாக பிரேமிளின் முற¢சுட்டிய சித்தாந்தத்தால் அம்பலப்படுத்தப் பட்டவர் பட்டியல் மௌனிமுதலாகத் தொடங்கி, ஞானக் கூத்தன், வெங்கடசாமிநாதன், எஸ்,பொ, சுந்தரராமசாமி எனத்தொடர்ந்து இறுதியாக வந்தடைவது யாரிடம் தெரியுமா? “பிறக்கும்போதே இந்த தார்மீகப் பிசகினால் சவலைப்படைப்பாளியாகப் பிறந்து அறுவை இலக்கியம் பண்ணும் ஜெயமோகன்! ஈறாக இந்த எனது சித்தாந்தத் துக்குச் சாட்சியங்கள் உண்டு, இந்தத் தார்மீகப் பிசகுக்கு இவர்ளும் இவர்களுடன் ஒத்தூதுகிறவர்ளும் தரும் சப்பைக்கட்டுதான் அழகியல்“ என்றே இனங்காண்பார் பிரேமிளும்.
நவீன கவிதைப்பிதாமகன்களே! எமது அரசியல் கவிதையின் தராதரம் குறித்தெல்லாம் தீர்ப்பெழுதி முனைமுறிக்க உமக்கென்ன அருகதை? அரசியல் மற்றும் கலாச்சார பீடங்கள் மற்றும் மறைமுக அதிகார மையங்களின் ஆதிக்க நுண் அரசியல் குறித்தெல்லாம் நீங்கள்சாதிப்பது கள்ள மௌனந்தானே?
“அதிகாரத்தில் சிவந்த கண்களுக் கஞ்சி
உண்மையைப்புதைக்கும் உதடுகளுக் குள்ளேதான் சிறைகளுக்கான கட்டுமானம் தொடங்குகின்றது"
என்பாரே இன்குலாப்! அங்கிருந்து தானே ஆரம்பமாயின நும்மனோரின் ஜீவ சமாதிகள்? குறைந்தபட்சம் உங்கள் எஜமானர்களின் குரலாகவே எதிரொலிக்க நேரும் அவலத்தலான குற்ற உணர்வு கொஞ்ச நஞ்சமேனும் எஞ்சிக்கிடக்கிறதா உம்மிடம்? எவரெவரிடம் போய் அரசியற்கவிதை கற்க எம்மை நீர் ஆற்றுப்படுத்துகின்றீர்?
ஆத்மாநாமையும், சத்யனையும் அறிவோம் உம்மினும் நாங்கள் அவர்களை உள்ளார மதிக்கின்றோம்! நேரடியாக அரசியற்களத்தில் நில்லாது போயினும், மறைமுகமாகச் சோரம் போகாத ஆத்மார்த்தமான ஜனநாயக சக்திகள் என்பதனால். மகாத்மாவின் வாழ்க்கையும் படுகொலையும் மட்டுமல்ல, ஆத்மாநாமின் வாழ்க்கையும் தற்கொலையும் கூட அவரவர் வழங்கிய செய்திதான். அப்புறமென்ன இந்த வக்ரோக்தி ஞானக்கூத்தனிடமா? அவர்தான் பிராமண மதத்தின் பிரதிநிதி என தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டாயிற்றே! மீட்சி பிரம்மராஜனிடமா? அவரது மீட்சிக்கூடாகவும் அவரது கவிதை பற்றிய பதிவுகள்வாயிலாகவும் மேலைக் கவிதைச் செல்நெறிகள் குறித்த மேலதிகப் புரிதல்கள் மின் சுற்றாய்க் கைகூடின என ஒப்புக் கொள்ளும் அதே தருணத்தில் திணைநிலை மாறிய பயிர்ச் செலவாய் எம்மைத் தீண்ட மறுக்கின்றன அவர்கவிதைப் பாடுகள் என்றே ஒருசேரச் சுட்டித் தீர வேண்டியுள்ளது, தமிழின் தாக்கமே தம்மிடமில்லை யென்பது அவர் பிரேம்-ரமேஷ்க்கு வழங்கிய செவ்வியின் வாக்குமூலமே அல்லவா? இன்றவர் தமிழ்ப்டைப்பாளிகள் பேரியக்கத்தில் பொறுப்பேற்றதற்கும் உடனேயே விலகியதற்குமான காரணங்களை வெள்ளை அறிக்கை வெளியிடத்தயாரா? இனவரைவியலை வலியுறுத்துவதற்கும். இனக்குழுவாதத்திற்கு இரையாவதற்கும் இடையே வேறுபாடுகள் உண்டு, இருப்பினும் இவை இரண்டிற்குமான ஆகச்சிறந்த உதாரணமெனில் அது பழமலயே! இதில் தம்மிடம் எது?என பிரம்மராஜன் தெளிவு படுத்துவாரா? அடுத்து 'அரசி' மனுஷ்யபு புத்திரனிடமா? நம் படுக்கையறைக்குள் ஒளிந்திருப்பவர்களையும் நமக்குள்
ஒளிந்திருக்கும் ஹிட்லர்களையும்
அம்பலப்படுத்தியஅரசியற்கவிதைகள் காத்திரமானவையே, ஆனால் நக்சலைட் இயக்க மூலமாக நமக்கறிமுகமான அந்தப் பழைய மனுஷ்யபுத்திரனா இன்றிருப்பவர்? இன்றைய சூழலில் 'கண்ணச்சுவடே' பரவாயில்லை என்னும் அளவிற்கு ஒட்டுமொத்த 'ஸ்வஸ்திகா'வின் சுழற்சிதானே உயிர்மை? இத்தகைய காவுப்படலங்கள் குறித்தெல்லாம் என்ன சொல்ல இயலும் மோகனரங்கனால்? உம்மனோர் அரசியற் கவிதைப் பட்டியல்களில் சமூகமன சாட்சியான கலைஞர்கள் பிரேமிள், தேவதேவன். இன்குலாப் மற்றும் எம்மனோரும் தேசிய மற்றும் பெண்ணிய அரசியலை முன்னிறுத்தும் ஈழக்கவிஞர்களும், திணைசார் வேர்மூல இனவரைவியல் முன்னோடியான (முன்னாள்) பழமலயும் காத்திரமான அடுத்த பாய்ச்சலான இலக்குமி குமாரன் ஞான திரவியமும். சமூக மற்றும் பெண்ணிய விடு தலை அவாவிய குட்டிரேவதியும், மாலதிமைத்ரியும், தலித்திய அரசியலை மார்க்சியத் தளத்திலிருந்து பேசும் பூஜ்யத்திலிருந்து ஆட்டத்தைத் தொடங்கும் மனுவிரோதி ஆதவன் தீட்சண்யாவும், கருப்பு மந்திரப் பித்த ஜால வந்தனம் ராஜ்குமாரும், தூமையிற் தோய்ந்த செருப்பூசிக் கவிநெருப்பு மதிவண்ணனும், இஸ்லாமீய விளிம்பு நிலை அரசியலை மார்க்சியத் தளத்திலிருந்து பேசும் ரசூலும்,இன்னபிறரும் இருட்டடிக்கப்படுவதேன்? 'எல்லா நியாயமும் தெரிந்த நந்தி'யாய் வீற்றிருக்கும் நம்பியண்ணாச்சியின் சைவலீலைகளையும் சந்திப்போம். Òயவனிகா மணிவண்ணன் இருவரின் சமூகம் சார் கவிதைகள் முன் எப்போதும் இல்லாதவை என நவீன கவிதைக்கு மட்டுமல்லாமல் அரசியற்கவிதைக்குமான பேரதிகாரியாக எழுந்தருள, முயல்கின்றார் அண்ணாச்சி. (உயிர் எழுத்து) 'நந்தனை மறைத்து நின்ற நந்திக்கு எல்லா நியாயமும் தெரியும்' எனத்தம் 'கடவுளின் நிறுவனத்தை' மட்டும் காபந்து பண்ண மடிதற்று முந்துற்ற அண்ணாச்சி. 'விந்தை மனிதர் வேடிக்கை, சந்தை இரைச்சல் சலசலப்பென் றெல்லாம் தலித்தியக் குரலைக் கொச்சைப்படுத்துகின்றார்(சங்கு) மட்டுமல்லாமல் 'நவீனகவிதைக்கு மூவர் யவனிகா, லக்ஷ்மி மணிவண்ணன், பிரான்சிஸ் கிருபா,,, நையாண்டி ஞானக்கூத்தனுக்கு மட்டுமே வாய்த்த சம்பத்து,,, பார்ப்பனரல்லாதோர்க்கு (பெரும் பாலோருக்கு)கேலியும் கிண்டலும் எழுத்தில் வராது' என்றெல்லாமுங்கூட எழுத்துக் கலையைக் கருவிலேயே திருவுடைய பிறவிக் கொடையான கொடுப்பினையாக்கிவிட முயல்கின்றார், (உயிர் எழுத்து அக்08) மக்கள் இதைத்தான் 'குசும்பு' 'கிருத்துருவம்' என்பார்கள், என மக்கள்வழக்கான சொற்பிரயோகங்களின் முன்னொட்டுக்களை மட்டும் தமக்குவசதியாக 'சுன்னத்' பண்ணிப் போட்டார் அண்ணாச்சி. உண்மையில் 'பாப்பாரக்குசும்பு' 'ஊமைக்குசும்பு' 'தின்னேலிக்குசும்பு' 'தெக்கத்திவக்கணை' எனச் சாதி சுட்டியும், திணை சார்ந்துமே புழங்கப்படுவதுதான் மக்கள் வழக்கு. பாப்பாரக்குசும்பும் என்றாலும் ஊமைக்குசும்பு என்றாலும் ஒன்றுதான் உதாரணத்திற்கு அதுமாதிரிப் பண்ணிக்காட்டவா? நம்பியண்ணாவா, அவா மகாசமுத்ரம்ன்னா......,?
பெண்ணிலை வாதம் என்பதுங்கூட பல்வகைப் பட்ட ஒன்றே, இங்கு பெண்ணிய வாதிகள் மத்தியில் குட்டி ரேவதியும் மாலதிமைத்ரியும் மட்டும் குறிப்பிடத் தக்க வகையில் சமூக ஓர்மை விழிப்புணர்வின் புரிதலுடன் பெண்ணிய அரசியலைக் காத்திரமாக முன்னெடுக்கும், வல்லமையுடன் இயங்க வல்லவர்களாயுள்ளனர், இது பற்றிக்காண்போம்.
“கவிஞனால் ஒருபோதும் அரசியலைத் துறக்க முடியாது, அரசியலின் கண்ணாடியாகக் கவிஞன் வளர்சிதை மாற்றம் அடைகிறான்" என்பார் குட்டி ரேவதி ('பனிக்குடம்'-2) “பெண்கள் எழுத வந்ததும் ஆண்கள் முகம் கலையத் தொடங்கியது, அவர்களின் கவிதைமொழி மொழிசார்ந்த பரீட்சைக்குப் போய்விட்டது, சமூக விமர்சனத்தை விட்டுப் புதிய பகுதிகளுக்குள் கவிதை முற்றிலுமாக அரசியலிலிருந்து நழுவிப் போய்விட்டது“ என்பார் மாலதிமைத்ரி ('எழுத்து' 'தினமணி ' 5,10,06) மலர்களின் அழகினை மட்டுமல்லாமல் மலர்ச்சிக்கான அதன் உயிரியல்பினையும் வேரோடும் வேரடி மண்ணோடும் காணவல்லதென ஞானியால் இனங்காணப்படும் அழகியலே எம்மனோர் கவிதைகளுக்குள் இயங்கும் வேதிமூலமாகும்,
“கட்டளை உனது கவிதை எமது
வரலாற்றின்வரிகளாய் எதை எழுதுவதென்று
காலத்தின் கைகள் தீர்ப்பளிக்கட்டும்
சிறைகள் உனது விடுதலை எமது
மானுடம் எதிலே மலரும் என்பதைச்
சூரியக் கதிர்கள் முடிவு செய்யட்டும்"
-இன்குலாப்
“மௌனமாய்வாசிப்பது உம்கவிதை
மௌனங்களை வாசிப்பதே எம்கவிதை
மௌனம் சாதிக்கும் உம் அழகி யலூடே
கரந்து உறையும் உம் அரசியல்
கரந்து திரியும் வாழ்வியலோடும்
பிறந்த மேனியாய் எம் அழகியல்"
- பொதிகைச் சித்தர்
“அலகுகளுக்குள் இருக்கும் நாவுகள்
அவ்வளவு தெளிவான மொழியை உடையன அல்ல"
-இலக்குமி குமாரன் ஞானதிரவியம்.
பின்குறிப்பு: மோகனரங்கன் பார்வைக்காக
1.நக்சல் பாரி இலக்கியம் பற்றி தீராநதி பத்தி எழுத்தில் எழுதப் புகுந்த 'இந்திர விழிகளுக்கு ஏனைப்பிறமாநிலப் பதிவுகள் மட்டுமே தென்பட்டன, தெக்கத்திச்சீமையில் பாம்படத்திலும் தொங்கும் தமிழ் அழகியலைப்பேசும் வாய் தமிழகப்பங்களிப்பை மட்டும் பேசாது சாதித்தது கள்ளமௌனமே! இன்குலாப் கவிதைகள் மற்றும் நாடகத்திற்கு ஊடாகவும். எனது கவிதைகள் (ஆரியக்குளியல்) மற்றும் கவிதா நிகழ்விற்கு ஊடாகவும் (போராடும் மானுடம்) இத்தகுபதிவுகள் இலக்கிய ஆவணங்களாகின,
2.அவசரகாலத்தைப் பதிவுசெய்யும். அரசியற்கவிதையே பிரேமிளின் 'மேல் நோக்கிய பயணம்'
3. இந்தி எதிர்ப்புப் போராட்ட காலக் கவிதைப் பதிவுகள் 'தென் மொழியில்' பெருஞ்சித்திரனாரின் 'தமிழ் நானூற்றில்' காணக்கிடக்கின்றன

ஒரு நாளுக்கான வேலை - பால் சக்கரியா ( தமிழில் : கே.வி. ஜெயஸ்ரீ )


செல்வி ஆனி வர்க்கி
ஹோம் நர்ஸ்
மைலாடும் குன்று வீடு,
குருவாயூர் (அஞ்சல்)
அன்பான ஆனி.
என் விளம்பரம் தொடர்பாக தாங்கள் தகவல் கேட்டு அனுப்பிய கடிதத்திற்கு நன்றி, வேலையைப் பொறுத்து கீழ்க்காணும் விபரங்களைத் தருவதில் மகிழ்ச்சி யடைகின்றேன்.
1.எர்ணாகுளம் வைட்டிலயில் 'ஹெவன்ஸ் கிப்ட்' அபார்ட்மென்டின் 702ஆம் எண் பிளாட்லதான் நாங்கள் (இப்போது எங்களுடைய அம்மா மட்டும்) வசிக்கிறோம், நானும் என் மனைவியும் பத்து வருடங்களாக டெஹ்ரானில் இருக்கிறோம், எங்களுக்கு இரண்டு குழந்தைகள் நிஜா ஒன்பது வயது, நிக்கி ஆறு வயது. என் மனைவியின் பெயரும் ஆனிதான்.
2.நாங்கள் இருண்டு வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இந்தியாவிற்கு வருவோம், இந்தமுறை ஆகஸ்டு 15 முதல் செப்டம்பர் 14 வரைதான் எங்களுக்கு விடுமுறை உள்ளது, திரும்பப் போவதற்குள் அம்மாவிற்கு ஒரு ஹோம் நர்சை ஏற்பாடு செய்ய வேண்டுமென்பது எங்களின் விருப்பம்.
3. பிளாட்டின் வசதிகள்: நான்கு படுக்கையறைகளும் எல்லாவித நவீன வசதிகளும் கொண்ட பிளாட் இது. ஒவ்வொரு படுக்கையறையிலும் டி,வி, செட் இருப்பதோடு அம்மாவிற்காகத் தனியாக டிஜிடல் ஹோம் தியேட்டரும் உள்ளது. அம்மாவின் அறை குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. ஏ.ஸி. காண்டஸா காரும், டிரைவரும் உண்டு, சமையல் செய்ய ஒருபெண்மணியும் (அம்மு அம்மாள்) மற்ற வீட்டுத் தேவைகளுக்கு இரண்டு வேலைக்காரர்களும் இருக்கிறார்கள் (தங்கம்மா, மணியன்). அம்மாவிற்கு உதவுவதற்காக ஒரு பெண் (சோசாம்மா) இருக்கிறாள், அம்மாவின் அறைக்கு அடுத்திருக்கும் படுக்கையறை ஹோம் நர்சிற்கானது.
4. ஹோம் நர்சின் சம்பளமும் சலுகைகளும்: சம்பளம்: மாதம் ரூ, 300/- உணவும் தங்கமிடமும் இலவசம். வருடத்திற்கு ஒருமுறை 2 வார விடுமுறை. ஆனால், பதிலுக்கு ஒரு நர்சை எங்களுடைய அனுமதியுடன் ஏற்பாடு செய்த பிறகுதான் விடுப்பில் போக முடியும். வேலை நேரம் ஒவ்வொரு நாளும் 24 மணிநேரம். ஆனால் சோசாம்மாவிடம் முன்னரே சொல்லிவிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆறுமணி நேரமும் வேறு ஏதாவது ஒரு நாள் மூன்று மணி நேரமும் வெளியே போகலாம். ஹோம் நர்சிற்குப் பார்வையாளர்கள் அனுமதி கிடையாது. டெலிபோன் வசதி அம்மாவின் தேவைகளுக்கு மட்டுமேயானது. கார் வீட்டுத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
5, அம்மாவின் பெயர்: எலிசபெத் கோரா பிலிப் ஏலிக்குட்டி என்றும் அழைப்பார்கள். அம்மம்மா என்றோ அம்மச்சி என்றோ ஹோம் நர்ஸ் அழைக்கலாம்.
6. அம்மாவின் வயது 86, உயரம் 5'4”, எடை 47 கிலோகிராம்.
7. உடல் நிலை: நடக்க முடியாவிட்டாலும் கேள்வித் திறனிலோ, பார்வைத் திறனிலோ குறை ஒன்றும் இல்லை. குறிப்பிடும்படியான வியாதியொன்றும் இல்லை. வியாதி ஒன்றும் வராமல் கவனித்துக் கொள்ள வேண்டியதுதான் ஹோம் நர்சின் தலையாய பொறுப்புகளில் ஒன்று.
8. ஞாபகம்: பல நேரங்களில் குறைவது.
9. அம்மாவுக்கும் எனக்குமான உறவுநிலை: அம்மாவின் ஆறு குழந்தைகளில் கடைக்குட்டி நான், என்னுடைய ஒரு சகோதரி திருமணம் முடித்து அமெரிக்காவில் ப்ளோரிடாவில் வாழ்கிறாள். இன்னோரு சகோதரி கன்னியாஸ்தீரியாகவும். இமாலயத்தின் தேஹ்ரி கத்வார் பிரதேசத்தில் ஒரு பள்ளிக் கூடத்தின் தலைமையாசிரியையுமாக இருக்கிறாள். இரண்டாவது அண்ணன் ஆப்ரிக்காவின் எரிட்ரியாவில் ஊழியும் செய்யும் பாதிரியார். மூன்றாமவர் சுவிட்சர்லாந்தின் சூரிக்கில் பல்கலைக்கழக நூலகத்தில் உயர்
பதவியில் இருக்கிறார். எங்கள் அப்பா இறந்து 11 வருடங்களாகிறது. எனக்கு அம்மாவிடமும் அம்மாவிற்கு என்னிடமும் அளவற்ற நேசமுண்டு, கடைக்குட்டியான என்னை அம்மா மிகவும் செல்லமாக வளர்த்தாள். எங்களின் மதிப்பிட முடியாத சொத்து அவளே. எல்லோருக்குமாக நான்தான் அம்மாவைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். என் மனைவியும் குழந்தைகளும் இந்த விசயத்தில் முழு ஒத்துழைப்பு தருகின்றனர்.
10. இனி, அம்மாவைப் பராமரிக்கும் முறை பற்றிச் சில விளக்கங்கள்:
காலை 9 மணி : அம்மாவை மென்மையான குரலில் அழைத்து எழுப்ப வேண்டும். உலுக்கி எழுப்பக் கூடாது, அதற்கு பதிலாக உள்ளங்கையிலோ, நெற்றியிலோ மிருதுவாகத் தடவிக் கொடுக்க வேண்டும். விழித்த பிறகு அம்மா நர்சைப் புரிந்து கொள்ளும்போது புன்னகையுடன் எதிர்கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளத் தாமதித்தால் புன்னகையுடனேயே சுய அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு கட்டிலின் தலைப்பக்கத்தை சோசாம்மாவின் உதவியுடன் உயர்த்தி அம்மாவைத் தலையணையில் சாய்த்து உட்கார வைக்க வேண்டும். இடுப்புக்கு மேல் உள்ள பாகத்தை மெதுவாக முன்னால் கொண்டுவந்து தோளையும் முதுகையும் மென்மையாகத் தடவிவிட வேண்டும், அதற்குள் சோசாம்மா கம்மோடு கொண்டு வந்திருப்பாள். நர்ஸ் தனியாகவோ சோசாம்மாவின் உதவியுடனோ அம்மாவை எடுத்துக் கம்மோடில் உட்கார வைக்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பங்களில் நர்ஸ் புன்னகை புரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது, ஏனெனில், விழித்தவுடன் அம்மாவிற்கு அன்பான ஒரு தழுவல் கிடைப்பது என்பது அம்மாவின் தளர்ச்சியுற்ற மனதும் உடலும் புத்துணர்வு பெற அவசியமானது. அம்மா கம்மோடில் உட்கார்ந்திருக்கும்போது நர்ஸ் அம்மாவின் இரண்டு கைகளையும் தன் கைகளில் எடுத்து மிருதுவாகத் தடவுவதோ முதுகில் கைவைத்துத் தாங்கிக் கொண்டிருப்பதோ செய்யலாம்.
9.20 அம்மாவைத் துடைக்க வேண்டும். இதைச் செய்யும்போது அம்மாவோடு பேசிக் கொண்டிருக்க மறக்கக் கூடாது, பேசுவதற்குத் தகுந்த சில விசயங்கள் : நர்சின் வாழ்க்கையின் சில நல்ல அனுவங்கள்; சகோதர சகோதரிகளுண்டென்றால் அவர்களைப் பற்றிய விசயங்கள் முதல்நாள் வாசித்த பத்திரிக்கையின் மகிழ்ச்சியான செய்திகள்; மனதிற்கு ஆனந்தம் தரும் கிறித்தவ ஆன்மீகக் கதைகள் ஏதாவது தெரியுமென்றால் அவை; பிள்ளைகளான எங்கள் பற்றியும் எங்களுடைய குழந்தைகள் பற்றியுமான அன்பான உரைகள்.
9.35: அம்மாவின் முகத்தை அதற்காக தனியாக வைக்கப்பட்டுள்ள துண்டினால் மெதுவாக ஒற்றியெடுத்துப் பவுடர் போட வேண்டும். கழுத்து, கக்கங்கள். முலைகளுக்கடியில், முதுகு, பிருஷ்டம், அந்தரங்க பாகங்கள், கால் பாதங்கள் என்றெல்லா இடங்களிலும் பவுடர் போட வேண்டும். இந்நேரத்தில் நர்ஸ் ஹம்மிங் செய்வதோ சின்னக் குரலில் வாய்திறந்து பாடுவதோ செய்யலாம். பழமையான ஆன்மீகக் கீதங்களாயிருந்தால் மிகவும் நல்லது. இது ஏதும் தெரியாதெனில் நர்சுக்கு விருப்பமான, ஆனால் இனிமையான ஏதாவது பாடல்கள் பாடலாம். பிறகு துவைத்தெடுத்து வைத்திருக்கும் கவுனை அம்மாவிற்கு அணிவிக்க வேண்டும்.
9.45: அம்மாவைச் சக்கர நாற்காலிக்கு மாற்ற வேண்டும். சோசாம்மா கம்மோடை உருட்டி நகர்த்தி அதன் வாளியைக் காலி பண்ணிக் கழுவிச் சுத்தமாக்கி வைக்க வேண்டும் அவிழ்த்தெடுத்த கவுனையும். நனைந்த துண்டுகளையும் அழுக்குக் கூடையில் போடவேண்டும். நர்ஸ் சக்கர நாற்காலியை அம்மாவின் மேசைக்குப் பக்கத்தில் தள்ளிக் கொண்டு போக வேண்டும்.
948 அம்மா மேசைக்கருகில்: அம்மா நாற்பது வருடங்கள் ஆசிரியையாயிருந்ததால் இந்த வாசிப்பு மேசைக்கு அருகில் வந்தமர்வது அவர்களுக்கு விருப்பமான ஒன்று. மேசை மீது பைபிள், நிகண்டு, அம்மாவின் டைரி, இங்க் பாட்டில், பேனா, பூதக்கண்ணாடி, அம்மாவின் திருமணத்தில்போது கிடைத்த சிலுவை உருவம் என்றிவை கட்டாயமாக இருக்க வேண்டும். இவை மட்டுமின்றி பிள்ளைகளான எங்களை உயர்படிப்பு படிக்க வைப்பதற்காக அம்மா டியூசன் எடுத்த வருடங்களில் பயன்படுத்தியிருந்த மெலிதான பிரம்பும் மேசையின்மீது அம்மாவின் இடதுபுறமாக இருக்க வேண்டும், இந்த மேசையின் முன் அமர்ந்துதான் அம்மா உணவு உட்கொள்வார்கள். நாப்கின்கள் விரித்து அதன் மீது மேலே சொன்ன பொருட்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
9.49 : சாப்பிடும் நேரம் : கட்ட வேண்டிய துவாலையை அம்மாவின் கழுத்தில் கட்ட வேண்டும், பல்செட்டை எடுத்து சுத்தமான நீரில் கழுவி வாயில் திரும்பவும் பொருத்திவிட வேண்டும், அம்மாவின் இடது கையை யீவீஸீரீமீக்ஷீ தீஷீஷ்றீ பயன்படுத்திக் கழுவிவிட வேண்டும். அம்மா இடது கைப்பழக்கம் உள்ளவர், அவர் தன் கையாலேயே உணவு எடுத்து சாப்பிட முடியுமென்றால் அதற்கு அனுமதிக்கலாம். இல்லையென்றால் நர்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி விடலாம், மென்று விழுங்கிவிட்டார்கள் என்பதைத் தெரிந்த கொண்ட பிறகுதான் அடுத்த ஸ்பூன் ஊட்ட வேண்டும், முக்கியமான உணவு வகைகள் : ஓட்ஸ் கஞ்சி நன்றாக வேகவைத்துக் குழைத்தது, நன்றாக பழுத்தப் பப்பாளிப் பழத்தின் நான்கில் ஒரு பகுதி சிறு துண்டுகளாக்கியது, மூன்று ஆரஞ்சுகளின் பிழிந்தெடுக்கப்பட்ட சாறில். மலம் இளகுவதற்கான இஸபகோல் பொடி ஒரு ஸ்பூன் மட்டும் போட்டுக் கலந்தது, ஓட்ஸ் கஞ்சியில் கொஞ்சம் வெண்ணெயும், மேப்பிள் சிரப்பும். கொஞ்சம் கல் உப்பு கலந்த தண்ணீரும் சேர்க்கலாம், இவற்றை அம்மு அம்மாள் சரியாகத் தயாரிக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அம்மா சுயமாகவே உணவு உட்கொள்வதானால் அந்த நேரத்தில் நர்ஸ் பைபிலிலிருந்து இப்போது வாசிக்கலாம் என்று தோன்றும் ஏதாவது ஒரு பகுதியை வாசிக்க வேண்டும். உணவை ஊட்டி விடுவதானால் நர்ஸ் புன்னகையுடன் அம்மாவிடம் பள்ளி கல்லூரி கால மகிழ்ச்சியான அனுபவங்களைப் பற்றிப் பேசலாம். அம்மா புன்முறுவல் பூக்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும். புன்முறுவல் பூப்பதாக தெரிந்தால் அம்மாவின் கண்களைப் பார்த்துக் கொண்டே வாஞ்சையுடன் கன்னத்தில் தடவிக் கொடுக்க வேண்டும்.
10.15: அம்மாவின் உதடுகளையும் தாடையையும் துடைத்துச் சுத்தமாக்கி மேல்துண்டை எடுத்துவிட்டு இடது கையைக் கழுவித் துடைத்துச் சக்கர நாற்கலியைக் கட்டிலுக்கருகில் தள்ளிச் செல்ல வேண்டும். அதற்குள் சோசாம்மா கட்டிலைத் தாழ்த்தி படுக்கையிலும். தலையணைகளிலும் சலவை செய்த பெட்ஷீட்டும் உறைகளும் போட்டிருப்பார்கள், போர்வைக்கடியிலுள்ள ரப்பர் ஷீட்டில் எறும்புகளோ, துர்நாற்றமோ இல்லையென்று நர்ஸ் சுயமாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், அம்மாவைச் சக்கர நாற்காலியிலிருந்து கட்டிலுக்கு மாற்றிப் படுக்க வைத்து போர்வை போர்த்திவிட வேண்டும். அம்மாவின் கண்களைப் பார்த்துக் கொண்டே மேலும் ஒருமுறை புன்முறுவல் பூப்பதும், கன்னத்தில் தடவுவதும் அவசியம்.
10.20 : அம்மாவின் துணிகளும் போர்வைகளும் மற்றவையும் சோசாம்மா வாஷிங் மிஷினில் போட்டு மிஷின் ஸ்டார்ட் செய்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
11.10 : வாஷிங் மிஷினிலுள்ள துணிகளை வெளியே எடுத்துக் கொடியில் காயப்போட வேண்டும் இதை சோசாம்மா செய்வார்கள்.
12.30 : அம்மாவைக் கம்மோடில் உட்கார வைக்க வேண்டும், அதில் உட்கார்ந்திருக்கும்போது செய்ய வேண்டியவற்றை முன்பே சொல்லியிருக்கிறேன்.
12.40 : அம்மாவை சக்கர நாற்காலிக்கு மாற்றி நாற்காலியைப் பால்கனிக்குக் கொண்டு போகவேண்டும், அம்மாவின் மூக்குக் கண்ணாடியை நன்றாகத் துடைத்துவிட்டு முகத்தில் பொருத்த வேண்டும், பால்கனியிலிருந்து பார்க்கும்போது தெரியும் நகர பாகங்களைப் பற்றி இந்த நேரத்தில் அம்மாவோடு பேசலாம், அங்கேயிருந்து பார்த்தால் மலயாட்டூர் தேவாலயம் பார்க்கலாம் என்று எப்போதாவது சொல்லலாம், மலயாட்டூர் மலை ஏற வேண்டும் என்பது அம்மாவின் நீண்ட நாள் ஆசை. இந்நேரத்தில் கல்உப்பு கலக்கிய ஒரு ஸ்பூன் தண்ணீரை மாதுளம்பழச் சாற்றில் கலந்து அதை அம்மாவுக்கு ஊட்டி விடலாம்.
13.30 : அம்மாவை மத்தியான உறக்கத்திற்காக கட்டிலில் படுக்க வைக்க வேண்டும், மத்தியானத் தூக்கம் எனறு அம்மாவின் காதில் சொல்ல வேண்டும்.
15.00 : அம்மு அம்மாள் அம்மாவின் இரவு
உணவைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டார்களா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.இரவு உணவுவின் வகைகள் : குழையக் குழைய வேகவைத்த கோதுமைக் கஞ்சி, சிறிது பால் சக்கரை சேர்த்து தெளிவான கோழியிறைச்சி சூப் : ஒரு சிறு பழம் (முடியுமானால் பூவன் பழம் மட்டும்) மெல்லிய வட்டங்களாக அரிந்து அதில் கல்லுப்பு கரைத்துத் தண்ணீர் தெளித்தது.
16.00 : அம்மாவைத் தூக்கத்தினின்று எழுப்ப வேண்டும், இந்நேரத்தில் காலையில் எழுப்பும்போது செய்ய வேண்டியது எனக் குறிப்பிட்ட காரியங்களை மீண்டும் செய்ய வேண்டும், மீண்டும் கம்மோடில், பிறகு சக்கர நாற்காலியில் உட்கார்த்தி மேஜைக்கருகில்.
16.20: மேல்துண்டைக் கட்டவும், இடது கையைக் கழுவவும், பல்செட்டைக் கழுவி வாயில் பொருத்த வேண்டும், இரவு உணவு அளிக்க வேண்டும்.
16.50 : உணவு உண்ட அம்மாவைச் சூரிய அஸ்தமனம் பார்ப்பதற்குச் சௌகரியமுள்ள மேற்குப் பக்கமுள்ள பால்கனிக்குத் தள்ளிச் செல்லவும். சக்கர நாற்காலியின் சக்கரங்களைப் பூட்டிவிட்டு அம்மா முன்பக்கமாகச் சாய்ந்து விடாமலிருப்பதற்கான கம்பியை அதனிடத்தில் பொருத்திவிட்டு அவர்களைத் தனிமையில் விட வேண்டும்.
18.15 : காய்ந்த துணிகளைச் சோசாம்மா மடித்து வைத்தாயிற்று என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும், அம்மாவை மீண்டும் உட்கார வைக்க வேண்டும், திரும்பவும் சக்கர நாற்காலிக்கு.
18.30 : அம்மாவின் சக்கர நாற்காலி டிஜிட்டல் ஹோம் தியேட்டர் ஸ்கிரீனுக்கு முன்னர், அம்மாவின் மூக்குக் கண்ணாடியை நன்றாகத் துடைத்துவிட்டுப் பொருத்தவும், ஹியரிங் எய்டைக் காதில் பொருத்தவும், இதன் பிறகு அம்மாவிற்காக படம் போடலாம், அது நர்சும் பார்க்க விருப்பமுள்ள படமாகலாம்.
19.30 : படத்தை நிறுத்த வேண்டும், ஹியரிங் எய்டையும் மூக்குக் கண்ணாடியையும் மாற்றி விடவும், அம்மாவைக் கம்மோடில் உட்கார வைக்க வேண்டும், அந்நேரத்தில் அம்மாவோடு பேச வேண்டும், வெறுப்பு உண்டாக்காதவிதத்திலும் ஆவலைத் தூண்டும்படியாகவும் விசயங்களைத் தேர்ந்தெடுக்கலாம், மறுநாள் பார்க்கப்போகும் திரைப்படத்தை பற்றிப் பேசலாம், இல்லையென்றால் மக்கள் பயன்படுத்தும்படி கடைதெருவில் புதிதாக. விற்பனைக்கு வந்துள்ள ஏதேனும் பொருட்களைப் பற்றிப் பேசலாம், (குறிப்பு : நிறுத்தி வைத்திருக்கும் திரைப்படத்தின் மீதி பாகத்தை அம்மா படுத்தபிறகு நர்ஸ் சன்னமான ஒலியில் பார்க்கலாம்)
19.40 : அம்மாவின் சக்கர நாற்காலி கட்டிலுக்கருகில் அம்மா பிரார்த்தனை செய்யும்போது. நர்சும் பிரார்த்திக்க வேண்டும், இந்த நேரத்தில் நர்ஸ். மண்டியிடுவதோ. அம்மாவின் அருகில் நாற்காலியில் அமர்வதோ எனத் தன் விருப்பம்போல் செய்து கொள்ளலாம், நாங்கள் சிரியன் ரோமன் கத்தோலிக்கர் என்பதால் ஐம்பத்து மூன்று மணி ஜெபம்தான், இரவு பிரார்த்தனைக்கு. நர்சும் இதே பிரிவைச் சார்ந்தவரெனில் பிரார்த்தனையைச் சொல்ல வேண்டும், திருத்தியமைக்கப்பட்ட பிரார்த்தனை முறையைவிடப் பழைய பிரார்த்தனை முறைதான் அம்மாவின் விருப்பம், பிரார்த்தனை முடிந்ததும் அம்மாவின் மேஜையில் இருக்கும் சின்னச் சிலுவை உருவத்தை எடுத்துக்கொண்டு வந்து அம்மாவின் உதடுகளில் ஒற்றிவிட்டுத் திரும்பக் கொண்டுபோய் வைக்க வேண்டும்.
20.15 : அம்மா படுப்பதற்கான ஏற்பாடுகள் : கடைசியாக ஒருமுறை கம்மோடில் உட்கார வைக்க வேண்டும், பல்செட்டை நீக்க வேண்டும், கிளீனிங் லிக்விட் உள்ள பாத்திரத்தில் அவற்றைப் போட்டு வைக்க வேண்டும், ஒரு ஹேர்பலாக்ஸ் மாத்திரையின் பாதியை ஒரு டம்ளர் தண்ணீருடன் அம்மாவுக்குக் கொடுக்கவும், படுக்கையையும் ரப்பர் ஷீட்டையும் மறுபடியும் பரிசோதிக்க வேண்டும், சுருக்கங்களை நீக்கவும்.
20.30 : அம்மாவைப் படுக்கையில் படுக்க வைத்துப் போர்வையால் மூடிவிட வேண்டும், அம்மாவின் கண்களைப் பார்த்துக்கொண்டே புன்முறுவல் செய்ய வேண்டும், “குட்நைட், ஸ்வீட் டிரீம்ஸ்” என்று சொல்ல வேண்டும், அம்மா புன்முறுவல் கொள்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும், புன்முறுவல் பூத்தாலும் இல்லையென்றாலும் அம்மாவின் நெற்றியிலும் கன்னத்திலும் உதடுகளிலும் என் பிரியமான அம்மச்சீ என்று சொல்லிக்கொண்டே எங்கள் ஆறு பேருக்காகவும் ஒவ்வொரு இனிமையான முத்தம் கொடுக்க வேண்டும்,
இவ்வளவும் செய்தால் நர்சின் அன்றைய நாளின் வேலை முடிவடைகிறது.
இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதானால் நேர்காணலுக்கு வருவதற்குச் சௌகரியமான ஒரு தேதியைக் குறிப்பிட்டு உடனே பதில் அனுப்புங்கள்,
நன்றியுடன்
பிரியமான
கோபிராபிலிப் ஜான்,

பூனைகளின் வீடு - லக்ஷ்மி சரவணக்குமார்




அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 9த் 'பி'யில் படித்துக்கொண்டிருந்த வாசுகி மாதத்தேர்வுகள் நடந்துக்கொண்டிருந்த நாட்களொன்றில் கணக்கு தேர்வை எழுதி முடித்துவிட்டு பத்து சதவிகிதங்கூட தேர்ச்சியாவதற்கு வாய்ப்பில்லை என்கிற வருத்தத்தோடு வீட்டிற்குத் திரும்பியபோதுதான் நகராட்சிக்குப் பின்புறம் இந்தப்பூனை குட்டியாக கத்திக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். கிளிகள் மட்டுமே வளர்க்கப் பிரியப்பட்டிருந்தவள் , அவை கிடைக்காத காரணத்தாலொ அல்லது குட்டியாக நெளு நெளு வென வெல்வெட் போர்த்திய அதனழகில் லயித்தோ அதை தூக்கி வர முடிவு செய்தாள். பூனைகள் வளர்ப்பதுப் பற்றிய குறிப்புகளை ஒவ்வொரும் சொல்லத்துவங்கியபோது அவற்றில் ஒருவித சலிப்புணர்வு சூழ்ந்திருப்பதாக உணர்ந்தாலும் தான் கேட்டவற்றில் முக்கியமானவற்றை பின்பற்ற தவறியிருக்கவில்லை. அவற்றில் மிக முக்கியமாக அம்மா சொன்னதையும் மருதாயி பாட்டி சொன்னதையுமே அவள் முதலில் பின்பற்றுவதென முடிவு செய்தாள்.'
"கட்லுக்குக் கீழ துணி விரிச்சி படுக்க வெய்யி "......என அம்மா சொன்னபோது காற்றாடியிலிருந்து கசியும்
காற்று கட்லுக்கடியில் செல்லுமா?என சந்தேகம் வர ஒருமுறைகட்லுக்கடியில் படுத்துப்பார்த்து காற்று சன்னமாக வருவதை உறுதி செய்துவிட்டு அதற்குள் இடம் ஒதுக்கினாள்.
"அதுக்கின்னு தனியா கிண்ணத்தில பால வெச்சிரு..."செத்த வளந்தப்பறம் திங்க எதுனாச்சிம் கொடுக்கலாம்.!..."
என மருதாயி பாட்டி சொன்னதில்தான் எந்தப்பாத்திரத்தில் பால் கொடுக்கலாமென யோசித்து அது வாய் வைத்துக்குடிக்க ஏதுவாயிருந்த தங்கச்சியின் டிஃபன் பாக்ஸில் ஊற்றிவைக்கத் துவங்கிவிட்டாள். அதே பள்ளியில் 6த் ஏயில் படிக்கும் தங்கச்சிக்கு இதனால் வாசுகி அக்காவின் மீது பெரிய கோபமிருந்தபோதும்
அப்பூனைக்குப் பிறக்கிற முதல் இரண்டு குட்டிகளை தங்கச்சிக்கு தருவதாக சொன்னபிறகுதான் சமாதானமடைந்தாள் . சற்றே வளர்ந்த அப்பூனை மொட்டை மாடியில் உலவப் பழகியிருந்த நாட்களில் எதிர் வீட்டு காயத்ரி அக்கா "பூனை பார்டா பூனை" என விளையாட்டுக் காட்டியே தன் குழந்தைக்கு சோறூட்டத் துவங்கினாள். துவக்கத்தில் பூனையின் மீது பெரிய கவனிப்பொன்றும் அக்குழந்தைக்கு இல்லாதபோதும் நாளடைவில் துறதுறுப்பான அதன் கண்களுக்கு இப்பூனையின் உருவம் அழிக்கவியலாதவொன்றாய் பதிந்துபோய்விட்டிருந்தது.விஸித்திரமாக சொல்லிக்கொள்கிறவொன்றை செய்துவிட்டதைப் போல் பூனை வளர்க்கற இந்த வீட்டுக்காரர்களை யாவரும் விநோதமாய்ப் பார்த்தனர் .மற்ற வீடுகளுக்கு அவ்வப்போது பூனைகள் வந்து போனபோதும் ஒருவரும் பூனைகளை வளர்த்ததில்லை. உண்மையில் அதற்கான அவசியம் எதுவுமிருப்பதாக அவர்களுக்கு தோன்றியிருக்காததுதான் காரணம். அந்த தெருவிலேயே முதல் தடவையாக இவர்கள் பூனை வளர்த்ததாலேயே வாசுகியின் வீடு பூனைக்கார வீடாக மாறிப்போயிருந்தது
ஒரு அடையாளத்திற்காக.
முன்பு எப்பொழுதோ பொங்கலுக்கு வெள்ளையடிக்கப்பட்டிருந்த வீட்டில் காரை உதிர்ந்து பொலிவிழந்துப்போன பிறகும் ஒருவிதமான கம்பீரம் இருக்கவே செய்தது.
ஐந்து பேர் மட்டுமே குடியிருந்து வந்த வீட்டில் ஐந்தாவது நபரான வாசுகியின் அப்பா வருடத்தில் ஒருமுறை வருவதோடு சரி, மற்றபடி அஸ்ஸாமில் அவருக்கு இன்னொரு குடும்பம் இருப்பது வீட்டில் யாருக்கும் தெரியாது. இவர்களைப் பொறுத்தவரை அப்பா நாட்டிற்கு சேவை செய்துக்கொண்டிருக்கும் ராணுவ அதிகாரி என்பது மட்டுமே.வெவ்வேறு வயதுகளில் வாழ்ந்த அந்தநான்கு பெண்களின் உலகம் இந்தப்பூனையின் மூலம் கலகலப்பாகி விட்டிருந்தது. மருதாயி பாட்டிதான் அந்த விசயத்தை முதல் நபராய் அறிந்துகொண்டுவிட்டிருந்தாள், அதனைத் தூக்கிப்பார்த்து....
ஐந்தாவதாகவும் இன்னுமொரு பெண் என்பதில்அவர்கள் அனைவருக்கும் ஆச்சர்யம்தான் .யாருமற்ற நேரங்களில் பொழுதைக் கழிப்பதற்கென எவ்வளவோ வழிகளிருந்தன வாசுகிக்கு. எனினும் மற்றெல்லோரையும் விட பூனையைக் குளிப்பாட்டவும் அதனோடு விளையாடவுமே அவள் அதிகம் விருப்பம் கொண்டவளாய் இருந்தாள் .மங்கலான இருளடங்கிய அவ்வீட்டின் அறைகள் முழுக்க தன் பாதம் பதிக்கத் துவங்கிவிட்டிருந்தபின் ஒவ்வொரு அறைக்கதவிலிருந்தும் உதிர்ந்து விழும் மர வாசனையிலேயே அவ்வறைகளின் இருப்பை அழுத்தமாக தெரிந்துக்கொண்டுவிட்டிருந்தது
கூர் நகங்கள் பாதம் மறைக்க பரப்பி வைத்த ஒவ்வொரு அடியிலும் தன் மீதான நேசிப்பை அம்மனிதர்கள் வெளிப்படுத்தியதில் பூரித்திருந்த பூனைக்கு காவேரி யென பெயர் வைத்திருந்தாள் வாசுகி. ஆளற்ற பொழுதுகளின் தனிமையை முன்பு ஒவ்வொருமே உணர்ந்திருந்த அவ்வீட்டின் மோனம் கலைக்க அவ்வப்போது காவேரி எழுப்பிய மியாவ் ஒலிகள் இதற்கு முன் கேட்டிருந்த அத்தனை ஒலிகளை விடவும் சந்தோசப்படும்படியாய் இருந்தது. அந்த தெருவிலிருந்த பலரும் பல விசயங்களை நினைவுப்படுத்துவதற்கென ஓர் அடையாளமாய் தங்கள் உரையாடல்களில் காவேரிக்கென ஓர் இடம் ஒதுக்கியது ஒரு விதத்தில் ஆச்சர்யம்தான் என்றாலும் அது தவிர்க்க முடியாததும் கூட. எவ்வளவோ வருடங்களாய் எத்தனையோ பேர்கள் உதிர்த்த சொற்களின் நிறைவே அவ்வீட்டில் ஒருவிதமான அடர்த்தியை ஏற்படுத்தி விட்டிருந்ததை ஒருவரும் உணர்ந்திருக்கவில்லை.அந்த ஆண்டும் 9த் பியில் தவற விட்ட வாசுகிக்கு பள்ளிக்குப் போவதில் இருந்த ஈடுபாடு முழுமையாக விட்டுப்போயிருந்த்தோடு , தன் வயதிற்கு குறைந்த பெண்களோடு அடுத்த ஆண்டும் ஒன்றாக உட்கார்ந்து படிக்க முடியாதென்கிற பிரக்ஞையும் வந்துவிட்டிருந்தது.அரவமற்ற பகல் நேர வீதியின் வெம்மையில் அவ்வீட்டிற்குள்ளேயே சுருங்கத் துவங்கிவிட்டிருந்த அவள் உலகம் காவேரியின் பாதத்தடங்களைத் தொடர்வதில் ஒருவித விசாலத்தன்மை பெற்றிருந்ததோடு சமீப நாட்களாய் அம்மாவும் வேலைக்குப் போக ஆரம்பித்திருந்ததால் அது வரை அம்மாவின் வசமிருந்த இயக்கங்களனைத்தையும் தன் வசமாக்கி விட்டிருந்தாள் .மதிய உணவு எடுத்துச்செல் அக்காவின் அடக்கமான டிஃபன் பாக்ஸ் கிடைத்ததில் பெரிய சந்தோசமிருந்த போதும் அதன் பிறகு துணைக்கு அக்கா வராதது ஏக்கமாக இருந்தது .ருதுவெய்தி மூன்றாண்டுகள் கழிந்து போயிருந்தது வாசுகிக்கு.அவளைப்போலவே நடப்பதிலும் ,பேசுவதிலும் தன்னை ஆட்படுத்திக்கொண்ட தங்கச்சி ஏழாம் வகுப்ப அரைப்பரீட்சையின்போது ருதுவெய்தியதும் அவளாகவே தன்னை பாவித்துக் கொண்டாள். பகல் பொழுதின் பெரும்பகுதி அவ்வீட்டின் அறைகள் முழுக்க உரையாடல் ஏதுமற்ற சூன்யமே நிரம்பியிருந்த்து. சற்று நிதானித்து கவனிக்கையில் மருதாயி பாட்டியை அச்செடுத்திருந்த அம்மாவைத்தான் வாசுகி அக்கா அச்செடுத்திருந்தாள்,.இப்போது அதுவே தங்கச்சிக்கும் தொடர்ந்திருந்தது.
வயோதிகத்தின் பெரும் ரேகைகள் மருதாயி பாட்டியின் உடல் முழுக்க விரிந்தபடியே இருக்கதேகம் சுருங்கி குழந்தையைப் போலாகிவிட்டிருந்தாள் .சமீபமான நாட்களில் வார்த்தைகளற்ற காற்றொலியே அவள் பேச எத்தனிக்கையில் வெளிப்பட்டுக்கொண்டிருக்க , புலன்கள் ஒவ்வொன்றாய்தன் இயக்கம் அறுத்துவிட்டிருந்தது. அவளுக்கு மிக நெருக்கமாக மரணம் ஓர் நிழலாய் படியத்துவங்கி விட்டிருப்பதை மற்ற மூவரும் உணரத்துவங்கியதைப் போலவே அவளும் உணர்ந்திருந்தாள்.
எவ்விதமான பிணித்தொற்றலுமின்றி ஒருவித சாந்த்த்துடன் அவளுயிர் பிரிந்திருந்தது ஓர் சனிக்கிழமையின் அதிகாலையில் .உறவினரென சொல்லிக்கொள்கிறபடி குறிப்பிட்டு எண்ணுகிற அளவிற்கு சிலர் வந்திருக்க துஷ்டி நடந்த விபரம் கூறி வாசுகியின் அப்பாவை கூப்பிட்டபோது இனி ஒருபோதும் வரமுடியாதென அவர் கூறியது அவர்களுக்கு அதிர்ச்சியாய் இருந்த்து. மருதாயி பாட்டியின் ஒரே மகளான இவளுக்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தினாலும், அவள் கணவன் வர மறுத்துவிட்டிருந்ததாலும் இறுதிச்சடங்கை யார் மூலமாக செய்யலாமென்கிற சிக்கல் வந்துவிட்டிருக்க , உறவுப்பெண் ஒருவரின் கணவரை வைத்து சடங்கு செய்து முடித்தனர்.
பாட்டிக்கென ஒதுக்கப்பட்டிருந்த இருளடர்ந்த அறையின் ஒவ்வொரு துகளிலும் அவள் ஜீவன் ஸ்வீகரிக்கப்பட்டிருந்ததோடு அவள் விட்டுப்போன வாசனையும் அவ்வறைக்குள் நிரந்தரமாக படிந்துவிட்டிருந்தது. அவ்வீட்டின் பிரதிநிதிகளில் ஒருத்தியாய் தன்னையும் உணர்ந்திருந்த காவேரி வீட்டிலிருந்து பாட்டியின் உடலை எடுத்துப்போனபோது நீண்ட நேரம் வாசலில் நின்றபடியேக்
கத்திக்கொண்டிருந்தது அப்பாவிடமிருந்து செலவிற்கென வந்த பணம் முழுமையாக நின்றுபோகத் துவங்கியபோதுதான் அம்மா முற்றிலுமாக மாறி விட்டிருந்தாள் இயல்பிலிருந்து.வாசுகியையும் அவள் தங்கச்சியையும் நினைத்து எழுந்த ஆற்றாமைகள் ஒருவிதமான பதற்றத்தை அவ்வப்போது அவளுக்குள் ஏற்படுத்தியிருந்தது.தன் பெரும்பாலான நேரங்களில் காவேரியும் உடனிருந்ததில் வாசுகிக்கு ஆதுரமாய் இருந்ததோடு அதன் மீதான உரிமை மற்றவர்களைவிட தனக்கே அதிகமாய் இருப்பதான உணர்வை ஏற்படுத்திவிட்டிருந்தது.
அம்மா பயந்தாற்போலில்லாமல் மிக விரைவிலேயே நெருங்கிய உறவினரிடத்திலிருந்து வாசுகியை பெண் கேட்டு அனுப்பியிருந்தது
ஒருவிதமான நிம்மதியை அவளுக்கு கொடுத்திருந்ததோடு,திருமணத்திற்கு பிறகு அவள் விட்டுப்போகும் வெறுமை நினைத்துப்பார்க்க முடியாததாக இருந்தது.பாவாடை ,சட்டையினை மட்டுமே உடுத்துப் பழகியிருந்த வாசுகிக்கு அம்மா தாவணி கட்டி விட்டபொழுது ,தங்கச்சிக்கும் காவேரிக்கும் அவளைப் பார்க்க யாரோ போலிருந்தது.சமீப நாட்களாய் யாருடனும் ஒட்டாத காவேரி அசமந்தமாய் இருப்பதைக் கவனித்துவிட்டிருந்த அம்மா இன்னும் சில நாட்களில் அது குட்டி ஈனப் போவதை அறிந்துக்கொண்டுவிட்டிருந்தாள். வாசுகிக்கு திருமணம் நிச்சியக்கப்பட்ட சில நாட்களுக்கு முன்பாக காவேரி வெவ்வேறு நிறங்களில் நான்கு குட்டிகளை ஈன்றிருந்ததோடு அசதியிலும்,பெருமிதத்திலும் ஓய்வெடுக்கத் துவங்கியது.
அதீத பசியில் காவேரியே தன் குட்டிகளை தின்றுவுடக்கூடிய அபாயம் இருப்பதாக உணர்ந்ததால் அதன் குட்டிகளை தனியாக மடித்து வைக்கப்பட்ட துணியில் உறங்க வைத்தனர்.தனக்குப் பாத்தியமான இரண்டு குட்டிகளைத் தூக்கிக்கொண்ட தங்கச்சி அவைகளுக்கு இங்க் ஃபில்லரில் பால் கொடுப்பதைப் பார்த்த வாசுகி மிஞ்சியிருந்த குட்டிகளுக்கு இங்க்ஃபில்லர் எதுவும் இல்லாத்தால் பிளாஷ்டிக் ஸ்பூனிலியே ஊட்டினாள் .ஆரவாரங்கள் ஏதுமின்றியே திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடக்கத்துவங்கிவிட்டிருந்த வீட்டில் சற்றே வளர்ந்திருந்த குட்டிப்பூனைகளும் ,காவேரியும் வீடு முழுக்க வலம் வந்துக்கொண்டிருந்தன, ஏதோ ராஜபவனி வருகிற பாவனையில் .
திருமணத்திற்குப் பின் தன்னோடு எடுத்துச்செல்வதற்கென இரண்டு குட்டிகளை வைத்திருந்த வாசுகிக்கு என்ன விதத்தில் அறிவுரை சொல்லலாமென யோசித்துக்கொண்டிருந்த அம்மா ,திருமணம் முடிந்து அவள் அங்கு சென்றபின் தானேஎடுத்து வருவதாய் வாக்களித்தாள் .பெருத்த ஆரவாரங்களின்றி முடிந்துப்போன திருமணச் சடங்குகளுக்கு மத்தியில் பூனைகளை பிரிய மனமற்று ஊருக்குச் செல்லும் வாசுகியின் மனநிலையை உணர்ந்து கொண்ட தங்கச்சி சிறிய அட்டைப்பெட்டியொன்றில் அவளுக்கு விருப்பமான இரண்டு குட்டிகளைப் போட்டனுப்பினாள்.வழியில் அவை ஆழ்ந்து உறங்கிப் போனதால் யாருக்கும் எவ்விதமான சந்தேகமும் வந்திருக்கவில்லை. கணவன் வீட்டில் தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையில் ஒருவரும் பார்த்து விடாதபடி அப்பூனைகளை வைத்துவிட்ட பின்புதான் அவளுக்கு நிம்மதியாய் இருந்தது.விளக்குகள் அணைக்கப்பட இரவில் இவளை அணைத்து ஸ்பரிசித்துக் கொண்டிருந்த கணவன் திடீரென பூனையின் குரல் நாரசமாய்க் கேட்க , எரிச்சலோடு தன்னிலிருந்து அவளை விலக்கினான்.களைந்துப்போன ஆடையைக்கூட சரி செய்யாதவளாய் முதலிரவுக்கென கொண்டுவந்திருந்த பாலில் கொஞ்சத்தை பாத்திரமொன்றில் ஊற்றி அவற்றுக்கு வைத்துவிட்டுத் திரும்பியவள், அதன் பிறகு எவ்வளவோ வற்புறுத்தியும், அன்றைய தினம் அவன் அவளைப் புணராமலேயே உறங்கிப் போயிருந்தான்.
மறுநாள் விசயத்தினைத் தெரிந்துக்கொண்ட மாமியார் அவளைத் திட்டுவதற்கும் விரும்பாதவளாய் அக்குட்டிகளைத் தூக்கி குப்பைத்தொட்டியில் போட்டு விட்டு வந்தாள்.பழக்கப்படாத ஓரிடத்தில் சகிக்கவியலாத நெடியை உணர்ந்த அவைகள் வீறிட்டு அலற, அவைகளின் குரல் தெரு முழுக்க எழுந்தடங்கியது. தொலைந்துபோன பூனைக்குட்டிகளைத் தேடிய வாசுகி வீதியிலிருந்து வரும் சப்தத்தினை யூகித்துஅவற்றை தூக்கிவர யத்தனித்தப்போதுதான் ,
"இதென்ன வீடா ,என்னன்னு நெனச்ச? ஒழுங்காயிருந்தா இரு!அந்தப்பூனக்குட்டிங்கள தூக்கப் போனயின்னா அப்படியே உன் வீட்டுக்குப் போயிடு!....."
என மாமியார் திட்டியதைக்கேட்டு என்ன செய்வதெனத் தெரியாமல் அப்படியே நின்றுவிட்டாள் அன்று மாலைக்குள்ளாகவே குப்பைத்தொட்டியிலிருந்து எழுந்துவந்த பூனைகளின் குரல் நின்று போய்விட்டிருந்தது.அதன் பிறகான சில நாட்களில் உணர்வுகள் ஏதுமற்றவளாக மாறிவிட்டிருந்தவளுக்கு எதன் மீதான நாட்டமுமின்றி அவசமாய் இருந்தாள். ஒவ்வொரு முறையும் அவளைப் புணர்கிறபோது ,ஓர் சவத்திடமிருக்கிற நிசப்தத்தையும், உயிரில்லாத் தன்மையையுமே அவளிடம் உணர்ந்தவன் வீட்டில்யாவரும் ஊருக்குப் போய்விட்டிருந்த ஓர் இரவில் அவளைப் புணர்வதற்கென முழுமையான விருப்பத்தோடு நெருங்கியபோது இருளில் அசைவற்றுக் கிடந்த அவளின் விழிகள் பூனையினுடையதைப் போல நீலமாகிப் போயிருந்ததில் அச்சம் கவிழ்ந்த மனத்தோடு எழுந்து விளக்கைப் போட்டான் . ஆடைகளற்ற அவளுடலில் பூனைகளுக்கிருப்பனப் போன்று கோடுகளிருந்தன, அடர்த்தியான குறுமயிர்களோடு.அவளைப் புணர்கிற எண்ணம் மறந்துஅவசரமாய் அவ்வறையிலிருந்து வெளியேறிப் போனான் .ஊருக்கு தகவலனுப்பப்பட்டுஅம்மா வந்திருந்தாள்.
"என்னாச்சு?...."
என எவ்வளவோ முறை அவள் கேட்ட எதற்கும் வாசுகி பதில் பேசாமலே மௌனித்திருந்தாள் .
"இப்படியிருக்கற புள்ளய வெச்சி எப்படிங்க குடும்பம் நடத்தறது?நீங்களே சொல்லுங்க!...."
என ஏகத்திற்கும் கோபப்பட்ட வாசுகியின் மாமியாருக்கு என்ன பதில் சொல்வதென யோசித்த அம்மா,தனக்கு ஆதரவாக யாராவது பேசுவார்களா என எதிர்ப்பார்த்து ஒருவரும் இல்லையென்றானபின் ,
"செரிங்க எம்பொண்ண நானே கூட்டிட்டுப் போறேன் .இவ்ளோ நாளா நாந்தானே பாத்துட்டிருந்தேன் இனிமே பாக்கறதுக்கு என்ன?..."
எனச்சொல்லிவிட்டு வாசுகியை அங்கிருந்து கூட்டி வந்தாள்.
சில நாட்களுக்குப் பிறகு அவ்வீட்டில் மீண்டும் வாசுகியின் ஸ்பரிசத்தை உணர்ந்த 'காவேரி ' அவ்வீட்டின் அறைகள் முழுக்க ஒருவித குதூகலத்துடன் சுற்றிவர அதன் குட்டிகளிரண்டும் மெல்லிய ஓட்டத்தோடு அதனைப் பின தொடர்ந்தன.இரவு நேரத்தில் உறக்கமற்றவளாய் காவேரியோடு விளையாடிக்கொண்டிருந்த வாசுகியைப் பார்த்த அம்மாவிற்கு அச்சம் மெல்ல இழையோடத் துவங்கிவிட்டிருந்தது. இரவில் இவளின் விழிகள் நீல நிறமாக மிளிர்வதை கவனித்ததுப் போலவே காவேரியின் உடலிலிருந்து கோடுகள் மெல்ல அழிந்து போகத்துவங்கியிருப்பதையும் அம்மா கவனித்திருந்தாள் .
தங்கச்சியிடம் அதிகமாய் வாசுகி ஒட்டாதபோதும் இவள் மீது நிகழ்ந்து விட்டிருக்கிற புதுவிதமான மாற்றம் கொடுத்த கிறக்கத்தில் சதா நேரமும் தங்கச்சி இவளையே சுற்றியபடியேதான் இருந்தாள் வாசுகியின் ஸ்பரிசத்திலிருக்கிற நறுமணமும் மிருதுவும் காவேரியை
அள்ளிக்கொஞ்சியபோது உணர முடிந்த அதேதான் என்பதுபோல் தோன்ற, மிக அழுத்தமாய் அவ்வப்போது அவளை அணைத்துக்கொண்டாள் .மிகச்சில நாட்களாகவே இருவருமாய் அம்மாவைப் புறக்கணித்திருக்க , ஓய்வின் விருப்பமாய் அவளும் தனித்தவளாகவே இருந்து வந்தாள். ஓர் பின்னிரவில் சிறுநீர் கழிப்பதற்காக எழ நேர்ந்தபோது தற்செயலாய் அவர்கள் இருவரும் உறங்கிக்கொண்டிருந்த அறையின் பக்கமாய் சென்றபோது முழுமையான உருமாற்றமொன்று வாசுகியின் மேல் நிகழ்ந்து விட்டிருந்தது .தங்கச்சிக்கு அப்பொழுதுதான் துவங்கியிருக்க வேண்டும் உடலில் நீலத்திலும் கருப்பிலுமாய் கோடுகள் தென்படத் துவங்கிவிட்டிருந்தது. தம் மகள்களின் உருமாற்றத்தினை உணர்ந்தவளாய் அம்மா மெல்ல அங்கிருந்து நகர்ந்த போது ,காவேரியின் இரண்டு குட்டிகளும் அவளைச் சூழ்ந்துக் கொண்டன.சப்தம் எழுந்து விடாதபடி அவைகளைத் தூக்கியவள் அடர்த்தியான இருள் கவிழ்ந்திருந்த வீதியில் இறங்கி சிறிது நடந்தபின் ஏதோ நினைவு வந்தவளாய் நகராட்சிக்காரர்கள் தண்ணீருக்காக வெட்டி வைத்திருந்த குழியில் அவைகளைப் போட்டு அவசர அவசரமாய் மண்ணைச் சரித்துவிட்டு வந்தாள் .
மறுநாள் காலையில் தன் குட்டிகளைக் காணாத காவேரி நினைவு பிறழ்ந்தவளைப்போல எங்கெங்கோ சுற்றத் துவங்கிவிட்டிருந்தது. தன் இயல்பைத் தொலைத்து விட்டு அரூபமாகி விட்டிருந்த அதன் தோற்றத்தில் தெரிந்த சிதைவை உணர்ந்த அம்மா வெகு சீக்கரமே அங்கிருந்து தம்மகள்களை அழைத்துச் சென்றுவிட வேண்டுமென முடிவு செய்துக்கொண்டாள்.இப்போதெல்லாம் அதிகம் சிரிக்காதவளாய் இருந்த போதிலும் அசாதாரணமான ஓர் கணத்தில் சிரித்த வாசுகிக்கு கூர் கூராய் பற்கள் செதுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் போலிருந்தது. சீகைக்காய் கொடுப்பதற்காக அவள் குளித்துக்கொண்டிருந்த அறைக்கதவை திறந்த அம்மா நிர்வாணமாயிருந்த தம் மகள் உடல் முழுக்க ரோம்ம் அடர்ந்துப்போயிருப்பதோடு பின் புறத்தில் வால் ஒன்றும் வளர்வதைப் பார்த்து அறைக்கதவை சாத்த யத்தனித்த போதுதான் கண்ணாடியில் தெரிந்த வாசுகியின் முகம் பூனைக்குரியதைப்போல்
தெரிவதை உணர்ந்தாள்.அன்றைய மதிய உணவை முடித்து உறங்கப் போன வாசுகி நெடும் உறக்கத்திற்கு ஆட்பட்டவளைப் போல் மறுநாள் விடிந்த பிறகும் அசைவற்றுக் கிடந்தாள் .இயல்பிற்கு மீறின நீலம் படர்ந்து போயிருந்த அவளுடலைச் சுற்றி சுற்றி வந்து கத்தியபடியிருந்தது கவேரி .
வாசுகியின் இறுதிச் சடங்குகள் முடிந்து சில நாட்கள் போயிருக்கும் , ஓர் பின் மாலைப் பொழுதில் அங்கிருந்து இடம் பெயரும் பொருட்டு தன்னோடு கிளம்பச் சொன்ன அம்மாவை எவ்விதமான வியப்பையும் காட்டாமல் நோக்கியிருந்த தங்கச்சியின் மனம் முழுக்க 'வாசுகி வாசுகி' என அக்காவின் பெயர் ஒலித்துக்கொண்டிருந்தது.அதிக ஆள் நடமாட்டமில்லாத நடைபாதையில் ரயிலுக்காக அவர்கள் காத்துக்கொண்டிருக்க எதையோப் பார்த்து சிரித்த தங்கச்சியை கவனித்த அம்மா , கூர் கூராய் அவள் பற்கள் நீண்டிருப்பதைப் பார்த்ததும் எழுந்த பயம் எதனையும் காட்டி விடாதபடி முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டாள்..