வெள்ளி, 11 நவம்பர், 2011

அசுரவித்து




எப்பப் பாத்தாலும் ஆறாவதும் ஏழாவதும் மொதல்ல சத்தொணவு வாங்கணுமா? ஒரு நாளாக்கி எட்டாவது வாங்கனா என்னா? 'எ' கிளாசுன்னா எல்லாத்துக்குமே ஒரு எளக்காரம் அப்பிடியிப்படி மொண்டியபடி முன்னாலப் போயி வாங்கலாமுன்னா இந்த ரமணிபீட்டி வேற பெருமா கழுவாட்டம் பாத்துக்கிட்டே நிக்கறாரு. அனுமாரு வாலுமாதிரி இந்த வரிசயெல்லாம் முடிஞ்சி எப்ப நாம சோறு வாங்கறது?







காத்தால இந்திராகாந்தி அணி தோட்ட வேல கூட்டறவேல குடிக்கறத் தண்ணி கொண்டாந்து வெக்கிறதுன்னு அவங்க வேலய அவங்க செஞ்சி முடிச்சிட்டாங்க மத்தியானம் நாங்க நேரு அணி அதயெல்லாஞ் செய்யணும். அந்த அணி டி. சாந்தின்னா பரவால்ல கொஞ்சத்துக்குக்கொஞ்சம் நேந்துக்குவா எங்க எஸ். கீதா இருக்கறாப்பாரு கொரங்கு வாயாடிச் சனியன் தருடு. கொதிக்கறச் சோத்த அவசரம் அவசரமா அள்ளித் தின்னுப்புட்டு போனாலும் அதுக்கு முன்னால தெறிச்சுப்புட்டு வந்து நிப்பா.







அவளுக்கென்ன வூட்டுச் சாப்பாடு, சில்வரு போவுணி ஆறிட்டாலுஞ் சாப்பாடு நல்லாயிருக்கும். நம்பளாட்டமா, ஒடுக்குழுந்த அலுமினிய வட்டிக்குக்கூட வக்கில்ல, சத்தொணவே கெதி' அந்த மந்திக்கூட மல்லுக்கட்டி இப்ப மூணுவேலயும் செஞ்சே ஆவணும். இல்லாட்டி ராஜாமணி சாருகிட்ட குசுலமூட்டி வுட்ருவா ராஜாமணி சார் நல்லவருதான் வாயில்லாப்பூச்சி அவரு அடிக்கமாட்டாரு. ஆனா அந்த குண்டன் மதியழகன் பையனக் கொட்டச் சொல்வாரேன்னு அங்கலாப்புல பெனாத்திக்கிட்டுருந்த சதிரேசம் பையன்தான் எட்டாவது 'எ'க்கு ரீடருன்னாலும் இந்தக்கொட்டு வெக்கறது புள்ளைங்களை அடிக்க தடி ஒடிச்சாறது, போர்டுக்கு கரி போடறது மாதிரி பெருங் கொண்டப் பன்னாட்டு எல்லாம் அனுபவசாலி மதியழகம் பையந்தாம் பாத்துக்கிட்டிருந்தான்.






அவங்கணிக்கு பிரிச்சுட்ட வேலயில்லாம கதிரேசனுக்கு கிளாசு ரூம்புல இன்னோரு முக்கியமான காரியம் ஒண்ணு இருந்திச்சி. நெனச்ச மாயத்துல பையனுக்கு திக்திக்குன்னு மனசடிச்சிக்கிட்டு வெசனமுன்னாலும் வெசனம் அப்டியாந்த வெசனம். ஆக்கப் பொறுத்தவன் ஆறப்பொறுக்கல. கைப்பத்திக்க வாய்ப்பத்திக்க இச்சி எலயில சோத்த அறக்கப் பறக்க வாரி வாரி தின்னாம்பாரு அந்த அவசரத்துல ஒரு பருக்கப் போயி நாஞ்சியிலக்குத்தி குப்புனு பெற ஏறிக்கிச்சி. அடுக்கடுக்கா தும்பலு வரும்படி பையனுக்கு மூச்சு தெணறி திக்குலு முக்கலு ஆயி, குடிக்க ரவ தண்ணியில்லாம தலயில நாலுத்தட்டு தானாத்தட்டி, சுதாரிச்சிக்கிட்டான்.









அதும் பொறவு அவனுக்கு சோறு எறக்கங்குடுக்கல வட்டியிலிருந்தச் சோத்த வழிச்சி காக்காயிக்கி வெச்சிட்டு, கையக் கழுவுலாமுணுப் பாத்தான், பள்ளியோடத்து தொட்டியடிய செரியானக் கூட்டம். ஆபத்துக்கு பாவமில்லன்னு அவத்த இருந்த கொட்டமரத்துல ஒரு எலய ஒடிச்சி கையத் தொடச்சி தூர எஞ்சிப்புட்டு, பொறத்திக்காலு பொடனியில ஒடனப் பையனுக்கு ரூம்பு கதவு வெளிப்பக்கந் தொறப்பு போட்டுரந்த பாத்தப்பறந்தான் மனசு நிம்மியாச்சி. ஓடியாந்தக் களப்புக்குச் சித்த நின்னு ஒரு தேக்கந்தேறி நெதானமா உள்ளப்பூந்து தெக்கித்தி மூலைக்கி போயி பைய எடுத்து வெச்சி கையவுட்டு தொழாவுனாம்பாரு அவன் வெச்சிட்டுப் போயிருந்த வெநாயம் இல்ல.






அவந்தல கிர்ரடிச்சி, பள்ளியோடத்துக் கூரசும்மா கரகரன்னு ரங்க ராட்டனமாட்டஞ் சுத்துதே' பையன் பயந்தாப்பிடியே நடந்துட்டுது. கணக்கு பொய்த்தகத்துல அவன் வெச்சிருந்த உருவா நூத்தம்பதக் காணம். வருசா வருசம் பள்ளியோடத்துல வாங்கி குடுக்கற நோட்டுப் புத்தகத்துக்கு கட்ற பணம். அவங்கூட படிக்கறதுங்க அறுவத்தி ரெண்டு பிள்ளைங்க அதுல மூணுப் பேத்த தவுத்து பாக்கி அம்பத்தொம்போது பேத்தோட மொத்தபணம் முச்சூடும் நேத்து அந்தியோடமுட்டும் அவந்தான் வசூல் பண்டிக் குடுத்தான்.






இன்னிக்கி காத்தாலப்புடிச்சி சேந்தப் பணத்துக்குத்தான் மோசம் வந்துட்டுது. மத்தியான கூழுக்கு உப்பு இல்லாத மவராசமூட்ல பொறந்த பையன் ஒரு நேரந்தின்னா மறுநேரம் வவுத்துக்கு ஈரத்துணி' முழுசா மூணு நேரந்தின்னா அன்னிக்கி அவனுக்கு நோம்பி. இந்த ரட்சணத்துல ஊட்ல போயிக் கேட்டா, வொத நிமித்திப்புடுவாங்க. அப்பிடியே அடம்பண்ணி அழுதுப் பொரண்டாலும் அஞ்சுப் பத்து பேர்றதே அரிசியம். முழுசா நூத்தம்பது உரவாயிக்கி எங்கப் போறது? நெஞ்சிப் பத பதைக்க நெனச்சிப் பாத்துட்டுப் பையனுக்கு அழுவாச்சி கண்ணக் கொப்புளிச்சிக்கிட்டு வரும்பிடி 'ஓ'ன்னு பொருங்கொரலெடுத்து அவஞ் சங்கூத, அவுத்த ஒரு சந்தக் கூட்டமே கூடிப்போச்சி.






மத்தியானச் சோறுண்டுட்டு வட்சுமண வாத்தியாரு உண்ட மயக்கம் போவ ரவ அசிரிக்கையா ஒட்காருலாம்னு ஆறாவது 'பி' கிளாசுக்குப் போயி அப்பதாங் குந்துனாரு. அதுக்குள்ள இந்தப் பிள்ளைங்க போட்ட ரவுசொண்ணும் பொறுக்க முடியல. நட்டிபட்டி அடைக்க பெரம்புங் கையுமா பொறப்பட்டாரு வாத்தியாரு. எட்டாவது முட்டும் இங்கிலீசும், கணக்குஞ் சொல்லிக் குடுக்கற சின்ன வாத்தியாருன்னாலும் வட்சுமண வாத்தியாருக்கு பள்ளியோடத்துல நல்ல மரியேதி. நல்லபேரு' ஒரு புத்தகம் வாங்கறது நோட்டு வாங்கறது பள்ளியோடந் தொறக்கயில பிள்ளைங்களைச் சேத்திக்கிறதுன்னு எல்லா பெரியத்தனமும் அவரு தல மேலதான் விடியும் நொம்போ கண்டுசனான ஆளு. பசங்க அவரக் கண்டுட்டா அப்பிடியே புர்ரு கழிவாங்க.






வாத்தியாரு வர்றத்த கண்டுட்டு பிள்ளைங்க தேங்கூட்ல கல்லிட்டாப்பிடி திக்காலிக்கி ஒருத்தராப் பிச்சிக்கிட்டு ஓடனாங்க.
“டேய் இங்கென்றாச் சத்தம்?”
“கதிரேசம் பையன் நோட்டுப்பணத்த தொலச்சிப்புட்டாஞ்சார்”.
“டேய் கதிரேசா வாடா இங்க”
வாத்தியாரு போட்ட அதட்டல்ல பையன் டவுசரோட மண்டுப்புட்டான். பயத்துல நடக்கவொட்டாம அவங்காலோட காலுப் பின்னிக்கிச்சி.
“வாடான்னா... அங்கென்றா மஞ்சக் குடுவ குடுவற?”
ஒரே மெரட்டா மறுபிடி வாத்தியாரு மெரட்டும்பிடி அவன் வாயிக் கோணி தானா ஔர ஆரம்பிச்சிட்டுது.
“சார்... வந்து... பையில........... கணக்கு........ பொய்த்தகத்துல உருவாய...... வெச்சிருந்தஞ்சார்.......... பொய்த்தகத்தோட உருவாயக்காணஞ்சார்”.
“பணத்த பையில வெச்சிட்டு, எங்கடா மயிருப்புடுங்கப் போனபடவா?”
“சோறுத் திங்கப் போனஞ்சார்”
“சோறுத் திங்கப் போனியா இல்ல பணத்த எங்கியாச்சும் ஒளிய வெக்கப் போனியா?” “எங்கம்மா மேலச் சத்தியமா உருவாய பொய்த்தகத்துலதாஞ்சார் வெச்சன்.
“அப்ப எடுறா பணத்த”
“..............................................”
“ஏண்டாப் பேசல? ஏம் பேசல? வாயத் தொறடாக் கொறவா?”
“..............................................”
“சொல்றா எங்கடா வெச்சிருக்கறப் பணத்த எங்க வெச்சிருக்கற? திருட்டு ராஸ்கல் உஞ்சாலக்க எங்கிட்டயே காட்டிரியா?”ன்னு கதிரேசம்பையன் கோர முடியக் கொத்தோடப் புடிச்சிச் சும்மா நெக்கு நெக்குன்னு செவுத்துல மாத்தி மாத்தி கையே ஓயமுட்டும் இடிச்சாரு வாத்தியாரு' மண்டப் பொடைக்க அத்தன அடி வுழுந்தும் பையனுக்கு வலியில்ல ஆனா வாத்தியாரு ஆடன ஆட்டத்துல அப்பிடியே வெப்பிரிச்சி போயிட்டாஞ் செலயாட்டம்.






ஒவ்வொரு வருசமும் பள்ளியோடந் தொறக்கயில ஆறாவதுலயிருந்து பத்தாவது வர கிளாசுப் பிரிப்பாங்க. அந்நேரம் பையஞ் சுறுசுறுப்பையும், பித்தியும் நெனப்பயுங்கண்டுட்டு மத்த வாத்தியாருங்க கிட்ட சண்டயான சண்டப் போட்டு வலுக்கட்டாயமா தம்பட கிளாசுக்கு வேணும், வேணும்னு லட்சுமண வாத்தியாரு கதிரேசம்பையன கூட்டிக்குவாரு. இந்த வருசந்தான் சீட்டு குலுக்கிப் போட்டதுல ஏனோ தோத்துப் போயி வேண்டா வெறுப்பா ராஜாமணி வாத்தியாருக்கு அவன உட்டுக் குடுத்தாரு. ஒழுக்கமானப் பையன்' நல்லாப் படிக்கறப் பையன்' அறிவாளிப் பையன்னு அல்லாருக்கிட்டாயும் பெருமயாச் சொல்ற வாத்தியாரு இன்னிக்கு அவனுக்கு திருட்டுப்பட்ங்கட்டணா,,, ஒண்ணும் புடிபடல, சில்லரச் செஞ்சச் சேட்டய அந்த சின்னப்பையம் பாவம் என்னாத்தக் கண்டான். ஓடாத எண்ணமெல்லாம் ஓடி அவம் மண்டயப் போட்டு உருட்டி உம்ம அந்தச்சணமே அவன் வாத்தியாரு மேல வெச்சிருந்த மரியேதிக் கிரியேரி எல்லாஞ் சமாதியாயிப் போச்சி. அவங்கோயில் கட்டி குடிவெச்சிருந்த சாமி செத்துப்போச்சி.






மின்னலு மின்றாப்ல பழைய நெனப்பு வந்து அவனப்படுத்தும்பிடி அவனுக்கு அழுவாச்சி பீருட்டுக்கிட்டு வந்து பையம் பொங்கி பொங்கி அழுதான்.
“என்றா ஊளையிடற? மரியேதியா பணத்தக் குடுத்துரு இல்ல டி.சி.யக் கிழிச்சி கைலக் குடுத்து வூட்டுக்கு தொரத்திப்புடுவஞ் சாக்கிரத”.
“சார் பெரிய்ய மாரியாயி அறியச் சத்தியமா பணத்த இங்கதாஞ்சார் வெச்சிட்டுப் போனன்?”
“இப்பிடிக் கேட்டா நீயி பதிலுச் சொல்லமாட்ட கேக்கறவங்க கேட்டா தானா கக்கற, நடறா எச்.எம். ரூம்புக்கு”ன்னு பலிகெடாயாட்டம் கதிரேசம் பையன பையுங் கையுமா தரதரன்னு புடுச்சி இழுத்துட்கிட்டு போனாரு லட்சுமண வாத்தியாரு.
மசமசன்னு நல்ல மத்தியானத் தூக்கத்துல இருந்தாரு பெரிய வாத்தியாரு நாராயணசாமி. தூங்கறச் சிங்கத்த தட்டி எழுப்புனாச் சும்மாயிருக்குமா அது?
“ஆருங்க பையன்”
“பையன் ராஜாமணி கிளாசுங்க சார்”
“என்னா சமாச்சாரம்”
“நோட்டுப்புத்தகத்துக்கு பணம் வசூல் பண்ணச் சொல்லி அப்பப்ப வாங்கிக்கிட்டிருந்தங்க சார். இன்னைக்கி காலையிலக்கூட வந்து கேட்டன். யாருமே தரலேன்னான். ஆனா மூணுப் பசங்க பணம் குடுத்தாங்களாம். இவனக் கேட்டா தொலஞ்சிப் போச்சிங்கறான். பையன் ஒருமாதிரி இவம்பேச்ச நம்பறதுக்கில்ல'”
காசக் கொண்டுபோயி கையில ஒப்படச்சப்ப தமிழுச்செல்வி டீச்சரண்ட நாயம் பேசுற முசுவுல போடா, போடா அப்புறம் வாடான்னு டாப்பு ரூம்பவுட்ட தொரத்திவுட்டுட்டு, வாய்க்கூசாம புளுவுனாரு வாத்தியாரு.
“இங்க பாரு தம்பி ஒதப்பட்டுச் சாவறதுக்கு முன்னாடி நெசத்தச் சொல்லிரு பணத்த எங்க ராஜா வெச்சிருக்கற?”
“படிக்கற படிப்பறிய நானு பணத்த புத்தகத்தோட பையலதாஞ் சார் வெச்சிருந்தன்.
“பணஞ்சேந்தவொடனே வாத்தியாருக்கிட்ட குடுக்க வேண்டியதான பையில எதுக்குடா வெச்ச?”
“சோபி கிழிஞ்சிருந்தச்சி சார், மொத பீரியடப்பவே சாருக்கிட்ட தாந்தஞ்சார். அவர்தாஞ்சார் வைடா அப்பறம் பாத்துக்கலான்னாரு சார்”.
“அப்ப அவரு பொய்யி சொல்றாரா? திருட்டுக் கழுத உம்மயச் சொல்லு இல்ல தோல உரிச்சி உப்பு, தடவிப்புடுவன்”னு பெரிய வாத்தியாரு பாம்பாட்டஞ் சீற,
“நானு அப்பவே சொல்லலைங்க சார், இவம் பெரிய்ய கைகாரன், அவ்வளவும் நடிப்புன்னு லட்சுமண வாத்தியாரு அந்த நாவுருக்கு பாலூத்தி முட்டைய ஒடச்சி வெச்சாரு”.
“எந்த ஊருங்க இவன்”
“பிச்சக்காரனூருங்க”
“இருட்டெல்லாஞ் சேந்து எதுக்க வந்தாப்ல இருக்கான் என்னா சாதி? சேரிக்காரனா?”
“இல்லைங்க, இவனுங்க வேற, ஆடு திருடி போற பசங்க”
“அதுதானப் பாத்தன் ஜாதியந்தப் புத்தி குலமந்த ஆச்சாரம்னு பெரியவங்க தெரியாமலாச் சொல்லியிருக்காங்க. திருட்டு நாயே உங்க திருட்டுப் புத்திய பள்ளிக்கூடத்திலியே வந்து காட்டறீங்களா அந்த வேலத்தனமெல்லாம் எங்கிட்டச் செல்லுப்படியாகாது. சொல்றா எங்கடாப் பணம் எங்க”.
என்னம்மோ அவங்கூட்டுச் சொத்த இவந்திருடி அழிச்சாப்ல, தீராத ஆத்தரத்தோட கதிரேசம் பையன் டவுசரு சோபியில கையவுட்டு அலாசு அலாசுன்னு அலாசி புடிச்சி உலுக்கு உலுக்குன்னு உலுக்குனாரு.






அதே கிழிஞ்ச துணி அவரு இழுத்த இழுப்புல இன்னும் உண்டுன்னா கிழிஞ்சி கீழ தொங்கிபோச்சி. உள்ற ஒண்ணும் போடாம சும்மா நின்னுக்கிட்டிருந்தவன் டவுசருல தொச்சமா கெடந்தது சோத்துக்குச் செத்த அவஞ்சுண்ணிதான். பட்டும் படாததுக்குமுன்ன என்னமோ புத்துக்குள்ள கையவுட்டவனாட்டம் அந்த ஆளு மொவற பேய் அடிச்சாப்ல இருளோடி சிறுத்துக்கிச்சி. படாத அவமானம் பட்டு ஒடம்பு கூசி கூனி குறுவி தலகவுந்து செவனேன்னு இருந்த பையன எட்டி ஒதச்சி கீழத் தள்ளி வெச்ச வெஞ்சம் தீர கண்ணுமூஞ்சி தெரியாம மிதி மிதின்னு மிதிச்சாரு நாராயணசாமி.
சார்' பணம் இங்கயிருக்குதுன்னு மதியழகம் பையங் கத்திக்கிட்டு ஓடியாரும்பிடி பெரிய வாத்தியாரு கரண்டு போன மிசினாட்டங் கப்புனு அடங்குனாரு.







அஞ்சாம் பீரியடுக்கு நோட்ஸ் எடுக்க வேணுமின்னு தமிழுசெல்வி டீச்சர் கணக்கு புத்தகம் வேணுமின்னு கேக்க கதிரேசம் பையிலிருந்த பொய்த்தகத்த அவந்தான் கொண்டுபோய் குடுத்தான்.
அதும்பொறவு பையனுக்கு ஆரு மூஞ்சியிலியும் முழிக்கப் புடிக்கல' சொக்கா கிழிஞ்சிபோன டவுசரோட தடுமாறி எந்திரிச்சவன், வீர்சமா பைய எடுத்து தோளுல மாட்டிக்கிட்டு ச்சும்மா விறுவிறுன்னு நடந்து போனவன், பள்ளியோடத்து தல வாசலுக்கேப் போயிட்டான். பொறன கூப்பிட்ட கொரலு ஒண்ணுக் கூட அவங்காதுல வாங்கல. அவுத்துக்கால கேட்டு பின்னால போயி நின்னு த்தூ,,, ஊ,,, ஊன்னு பள்ளியோடத்தப் பாத்து காரித்துப்பிப்புட்டு, பைய அவந்தலய எட வலமாச்சுத்தி உள்ற எஞ்சிப்புட்டு ரெண்டுக் கையயும் தாராளமா வீசி தடத்தப்பாத்து நடந்தான்.

0 கருத்துரைகள்: