கூத்துக்கலைஞர் ஏகாபுரம் -சுப்ரு என்கிற இலட்சுமணன் நேர்முகம்சந்திப்பு :தவசிக்கருப்புசாமி ர.தனபால்
ஏகாபுரம் -சுப்ரு ---------------------
விளம்பரங்களும் வெளிச்சங்களும் அண்டாத கலைத்தொழிலாளி. சாதாரணமாக வாயைத் திறந்தால் பத்து வார்த்தைக்கு ஒரு பொய் பேசும் கூத்தாடிகளுக்கு மத்தியில் வாக்குச் சுத்தமுள்ள ஒரு சொல் மனிதர். காலக்கிரமத்தில் ஒரு வைரஸ் போன்று சினிமா,மலினமான இசை நாடக தாக்கம் நிகழ்த்துக் கலையான கூத்தை மேலதிகமாக பீடித்து தீராப்பெருவியாதியாக நிலைபெற்றுவிடுமோ என்கிற இந்த அபாயகரமான சூழ்நிலையிலும் தனதாசான் கீரப்பாப்பம்பாடி குப்பன் அவர்களின் வழி அதன் மரபினின்று வழுவாது நிகழ்த்தி வருபவர். கச்சிதமான தொழிலாளி ,நிலக்கடையான பாட்டுக்காரர். பால்யத்தில் தான் தொலைத்த வாழ்க்கையை கூத்திலே தேடிக்கண்டவர். கொம்பாடிப்பட்டி ராஜு என்னும் உன்னதக்கலைஞனை கூர் தீட்டியதோடு கனகு* என்கிற திருநங்கையின் வாழ்க்கையை மடை மாற்றி கூத்துவெளிக்கு வழங்கியவர்.அவர் தோன்றிடப் புகழடைந்த வேடங்கள்மயில்ராவணன்,மச்சகற்பகன்,அர்ச்சுனன்,துரியோதனன், துர்ச்சாதனன்,கர்ணன்,காண்டீபன், ஆகியனவென்றாலும் அவ்வேடங்களின் தாத்பரியத்திற்கு சற்றேனும் குறைப்பாடுகள் நேராவண்ணம் இதுகாறும் காத்துவரும் கட்டுறுதி,செய்வன திருத்தமாகச் செய்யும் தொழில்நேர்த்தி,காசைக்கண்டு விலைபோகாத வைராக்கியம்,இவையே அவர் பேர் விளங்க காரணங்கள்.அர்த்தமற்ற இரைச்சல்களுக்கு வெளியே ஏகாபுரம் என்றதோர் குக்கிராமத்தில் வசிக்குமவரை நேர்கண்டு பேசியபோது..............தவசி: ஒங்களப்பத்தி சொல்லுங்க வாத்தியாரே......
சுப்ரு:என்னையப்பத்தி எனத்தப் போயிச் சொல்றது. நம்ப கையி வெறுங்கையி சாமி!
தவசி:அப்படியில்லைங்க வாத்தியாரே! வரும்பிடி பாக்கணும்முன்னா அதுக்கு பல தொழிலு இருக்க, ஒரு பண்ணையக்காரனுக்கு மகனா பொறந்த நீங்க சுத்தமா நம்ம வூட்டுக்கு ஒட்டொறவு இல்லாத கூத்துக்கு வர மொகாந்தரம் என்னா? எதனால கூத்தாட வந்தீங்க? எப்பயிருந்து ஆடறீங்க? எத்தன வருசமா ஆடறீங்க? வெவரந் தெரிஞ்சிக்கணுமில்ல, அதாங் கேக்கறன் சொல்லுங்க...சுப்ரு:ஊருல நோம்பி நொடியின்னா கூத்துட கூத்தாடிங்கள தேடிச் சலிக்கணும். அவன் என்னா பண்ணுவான் பத்தூரு நோம்பிய ஒட்டுக்காச் சாட்டனா..இப்பிடி ஏகாபுரத்துல வருசங்கண்டா பெரியத்தனக்காரங்களுக்கு விசேசம் வைக்க தலநோவு மண்டயிடி? பல வருசமாப் பாத்துட்டு வயசுப்பசங்களா ஒரு பத்துப்பேத்த சேத்தி அவங்களா ஒரு கூத்த படிப்பிச்சாங்க. நாங்க அரகொறயாப் படிச்சி அதயும் ஒரு ரெண்டு மூணு வருசமா ஔப்பரிச்சிக்கிட்டு திரிஞ்சம். பொறவு அதுவுஞ்சலிக்க அரவித்த கொறவித்த ஆவாதுடான்னு கீரப்பாப்பம்பாடி குப்புசாமி வாத்தியார கூட்டியாந்து பாஞ்சாலக்குறவஞ்சி, அரவான் கடப்பலி,வருணமால தவசு,கோவலங்கத இப்பிடி கூத்துப்படிச்சம். வாத்தியாரு கூடவே பத்து வருசம் ஆடணம். அவருகாலஞ்சென்னப்பறம் மத்தளக்காரன் பொன்னுசாமி வாத்தியாருக்கிட்ட ஆடணம்.இப்பவொரு இருவத்தஞ்சி வருசமா தனியா ஜமாவெச்சி நானாடறன்.
தவசி:இப்ப நம்ப ஜமாவுல ஆராரு ஆடறாங்க? சுப்ரு:ராமக்கறவத்தானுக்கு(கட்டியங்காரன்) கோரக்காட்டுச்சின்னு, தலவிரிச்சானுக்கு( அசுர வேடம்-வில்லன்) மெய்வேலு, கொண்டக்கட்டுக்கு நானு, கரட்டூர் செல்வம், ராசாபாளையம் காளியப்பன், சாரி வேசத்துக்கு(பெண் வேடம்) நம்ப கொம்பேடிப்பட்டி ராஜி, ஐயந்துரை,பாச்சாலியூரு கனகு, மத்தாளத்துக்கு நம்ப பழைய மத்தாளக்காரன் தபால்காரன் இருந்தானில்ல அவம்மவன் சபரிவாசன், கொழலுக்கு(முகவீணை) மொதல்ல ரெட்டிப்பாளையம் குப்பன். இப்ப சித்தூரு கருப்பன்.தவசி:ஒரூருல கூத்தாடறமுன்னு ஒப்பி வெத்தலப்பாக்கு வாங்கிக்கிறீங்க. ஆட்டத்தன்னைக்கி அங்க போயி ஆட்டமுட்டவங்க சொல்ற கூத்தாடுவீங்களா? இல்ல நீங்களா பாத்து எதோவொரு கூத்தாடறதுதானா?
சுப்ரு:நாம்ப சொல்லி அவிங்க வெக்கிற அலங்காரத்த ஆடறதுண்டு! அதேமாதர அவிங்க பிரியப்பட்டு கேக்கற அலங்காரத்த பால்மாறாம நாம வெச்சாடறதும் உண்டு.
தவசி:அலங்காரம் வெச்சாச்சி, களரி கூட்டியாச்சி! இன்னாரு இன்னாருக்கு இன்னின்ன வேசமின்னு எதக்கண்டு பிரிச்சுடுவீங்க? இல்ல இந்த பார்ட்டுக்கு இந்த ஆளுதான்னு பொருத்தமுன்னு எப்பிடி தீருகடச் செய்யறீங்க?
சுப்ரு:பொழைக்கறப்புள்ள லச்சணத்த கால கௌப்பிப்பாத்தா தெரியாதா!கூடவே ஆடறமில்ல, அந்த பொழக்காட்டத்துல ஒராள வேசம் போடச்சொல்லி சவையில வுட்டா, அந்தாளு வந்து நிக்கிற அசப்புலியே இந்தாளு கூத்துல இந்த வேசத்துக்கு தோதுப்படும், படாதுன்னு கண்டுக்கலாம்.
தனபால்:பொறுக்கியெடுத்த தெறமசாலியா இருந்தாலும் எளவட்ட பசங்களுக்கு பெருங்கொண்ட வேசங்கட்டியாட வாத்தியாருங்க வுடறதில்ல! பல்லுப்போன கெழவாடியாயிருந்தாலும் செட்டுக்கு மொகாமிங்கற ஒரே காரணத்துக்காக சாவளவும் அவிங்களே மெயினு கொண்டக்கட்டு (கதாநாயகன்) கட்றமின்னு அடம்புடிக்கறாங்க! இஷ்டப்பட்டவொரு வேசம்போட்டு ஆட முடியலைங்கறதனால பசங்களுக்கு தொழில்ல ஒரு சலுப்பு சங்கடம் வந்துருது! கனத்த கனம் அறியணுமில்ல வாத்தியாரே?
சுப்ரு:வேசத்துக்கு ஆசப்பட்ட பாவி நானில்ல! கத்த வித்தய மத்தவிங்களுக்கு படிப்பிச்சி அவிங்கள பத்துப்பேரு சவையில முன்னவுட்டு பின்ன அழகு பாக்கறானில்ல அவந்தான் நல்ல வாத்தியாரு! எஞ்செட்ல வந்து கேட்டுப்பாருங்க!, ஒண்ணு ரெண்ட தவுத்து, மிச்ச எல்லா அலங்காரத்திலியும் வயசுப்பசங்களுதுதான் ராச்சியம்!!
தவசி:மனசுல உள்ளபடி சொல்லுங்க, ஒரு எத்துவரிசையான தொழிலு எப்படியிருக்கணும்?
சுப்ரு:பாட்டும் அடவும் கூத்துக்கு உசுரு! இந்த ரெண்டு சமாச்சாரத்துலியும் சங்கக்கூடாது!. உப்பு, காரம்,ஒணத்தி செரியா இருக்கணும், கொறையப்படாது!. வசனத்த சவைக்கி அலங்காரமா பேசனாப் போதாது, பேசவேண்டிய பொருளப் பேசணும்! சாயிண்டு வேசக்காரங்கூட, வுடவேண்டிய எடத்துல சந்து வுட்டு,சேரவேண்டிய எடத்துல ஒட்டு சேந்து தொழில் செய்யணும்.காரியந்தான் முக்கியமே ஒழிய ஆளு முக்கிலியமில்ல. கூத்து பாக்கறவன் கூத்தவொரு வேடிக்கயா பாக்கறவனில்ல, செரியானபடிக்கி அவனுமொரு ஆட்டக்காரனிங்கற கருத்த, பொந்தியில நிறுத்தி செஞ்சா எவந்தொழிலும் எத்து வரிசதாங்கண்ணு!.
தனபால்:டேசியில நிக்கறீங்க, சித்தங்கூறி டீக்கடையச் சுத்தறீங்க!பின்பாட்டு பாடறீங்கச் சித்த! நின்னவாக்குல பீடியுங் குடிக்கறீங்க! வேசம் வரவேண்டிய நேரம் வந்தா ஓடி வேசம்போட குந்தறீங்க! சுப்ருங்கற வேசக்காரன் துரியனா இல்ல புலி போன்ற துச்சாதனனா எப்ப மாறுவீங்க? அந்த ஆள்மாறாட்டம் எப்ப நடக்கும்?
சுப்ரு:கை, கால சுத்தஞ்செஞ்சி,கண்ணாடிய முன்ன வெச்சி, முத்துவெள்ளயத் தொட்டு, முந்தியே தவங்கெடந்துமுந்நூறு நாள்சுமந்துஅந்தியும் பகலாய்சிவனையே ஆதரித்துதொந்திச் சரியவேஎனைப்பெற்ற தாயேஉன் பாதம் கைதொழுதேன்அன்னையே! ன்னுபெத்தவளையோ, இல்ல குருவையோ வருந்தி, மொகத்துல பூசறாம்பாரு அப்ப அந்த வேசத்துக்குள்ற பூதறவன், வேண்டிய வர்ணங்கொழப்பி,வேசம் அமைச்சி, கன்னத்துல கோடு எழுதி,கண்ணுக்கு மையி தீத்தி, பிருவம் திருத்தி, கட்டு மீசய முடிஞ்சி, தலக்கட்டு, புஜக்கட்டுன்னு முப்பத்தி ரெண்டு கட்டா, கட்ட நகைய கட்டி, கால்ல சலங்காயோட கத்திய எடுத்து பெஞ்சிமேல தட்டி உண்டான விருத்தம்போட்டு பாட்டுப்பாடிக்கிட்டு தெரைய வௌக்கிவுட்டு வெளிய வரும்போதுஅவம்போட்ட வேசம் பூர்த்தியா தொலங்குது.
தவசி:கர்ணமோட்சத்த நீங்கவொரு பாணிப்புல ஆடறீங்க. அதாவது கர்ணன், பொன்னுருவி, துரியோதனன்,அர்ச்சுனன்,கிருஷ்ணன்,சல்லியன் இந்த பாத்தரங்களோட...............முக்கியமா குந்தி கர்ணன் சந்திப்பு இல்லாம............அதேமாதர பதினெட்டாம்போர் படுகளம் கூத்துல பெருந்துருவாள் துரியன் சந்திப்பு இல்லாம.....ஆனா இதே கர்ணமோட்சத்தையும், படுகளத்தையும் நல்லூர் பெரிய மாது இன்னும் இருக்கப்பட்ட ஜமா வாத்தியாருங்கெல்லாம் சினிமா பாணிய கலப்படம் பண்டி நடத்றாங்க. இதனால கூத்தோட ஐதீகம் கெட்டுப் போவாதா?
சுப்ரு:அவிங்கவிங்க வாத்தியாருங்க என்னென்ன கத பொருள படிப்பிச்சி குடுக்கறாங்களோ, அதுக்கு தக்கனதான் சீடப்பிள்ளைங்க கிட்ட சரக்கு இருக்கும். கத முக்கியமில்ல, கத நடத்தற போக்குதான் முக்கியமின்னு இருந்தாலும் பொருளுக்கு பொருளு, காரண காரியத்துக்குன்னு ஒரு ஒட்டுவேணும். இல்லையின்னா கூத்துல பசையிருக்காது. பெரிய மாது ஆடற கர்ணமோட்சத்துல பதினேழாம் நாளு சமர்களத்துக்கு சேனாபதியா மின்னயிருந்து சண்டைக்கிப் போற கர்ணபூபதிய குந்தியம்மா சந்திக்கறது முன்னைக்கிம் பின்னைக்கிமொரு கோர்வ, தல காலு வித்தியாசம் இல்லாத சமாச்சாரம். பாரதத்துல உள்ள உம்மயென்னன்னா பாண்டவருக்கோசரம் கௌராதிங்க கிட்ட கிருஷ்ணன் தூது போற அன்னைக்கி அவம் முடிப்போட்ட சூதகமான காரியம் மூணாகுது. உவலாய வன்னியத்துலயிருந்து தூதுக்கு பொறப்படும்போதே, அத்த குந்திய கூப்புட்டு, உனக்கு ஒண்ணு வேணுமா, அஞ்சி வேணுமான்னு கேக்க, குந்தி நெட்டுச் சிக்காம கொழம்பி மருமவனையே வளைச்சி , கண்ணா மாயவா நீச்சொல்ற அஞ்சிங்கறது என்னு மக்கமாருன்னு துருசா தெரியிது, ஆரு அந்த ஒண்ணு? வெவரஞ்சொல்லுன்னு கெஞ்சி கொறமாட, அத்த அத்த மாமி அத்த பாண்டவரு உனக்கு பொறக்கறதுக்கு முன்னையே நீ ஒருத்தனப் பெத்து, அனாதியா ஆத்துக்குள்ள வுட்டடிச்சியே! நெனப்பிருக்குதாங்க, அப்பத்தாங் குந்திக்கி திக்குன்னு அடி வவுத்துல தீப்பத்துது.கரூவே உருவாகி, உருவே பிண்டமாகி,பிண்டமே சரீகலமா அங்கம் நோவ தாம்பெத்தெடுத்த பிள்ளய எப்பிடி மறந்தேப்போனமுன்னு பரிதவிச்சி அழுதகண்ணுஞ் சிந்தன மூக்குமா, நானு ஆத்துலவுட்ட எம்மவன் எங்கயிருக்கறான்னு, கண்ணன தொளச்சியெடுக்கறா. அங்கு தேசாதிபதி கர்ணன்தான் குந்தி வயித்துல முந்தி ஜனிச்சவன்னு பூரா பழமயும் புட்டு வெக்கற கண்ணன், பாண்டவரு உசுரு தக்கனுமுன்னா கர்ணங்கிட்ட அரவக்கணைய ஒருத்தரத்துக்கு மறுதரம் பிரயோகஞ் செய்யறதில்ல,அதோட அர்ச்சுனன தவுத்து மத்தபேத்துமேல பாணந்தொடுக்கறதில்லன்னு சத்தியம் வாங்குன்னு தொட்டலயும் ஆட்டி தூங்கற புள்ளயுங் கிள்ளிவுடறாரு.அங்கயிருந்து அத்திபுரம் போயிச் சேந்தவொடனே சாமி துரியங்கொலுவுக்குப் போறதில்ல, விதுரங்கிட்ட தொறப்புக்குச்சிய வாங்கன வெசயில நேரா அவனோட ஓட்ட கொட்டாயிக்கி போறாரு. ஓயாத அடமழையில இந்த ஏழ குடுசுலுக்கு வந்துருக்கறீங்களே சாமி! என்னா காரணமின்னு விதுரங் கேக்க, இப்பிடித்தாம்பா தூதுக்கு வந்தன், நாயத்துக்கு கட்டுப்பட்டா யுத்தமில்ல, இல்லையின்னா பத்தெட்டு நாளு பாரதப்போரு உறுதி! சனத்த பழிக்கொடுத்து எனத்துக்கு இந்த பொழித்தகராறு? ஒருத்தஞ்சொத்து இன்னொருத்தனுக்கு பாத்தியமாவாது! பங்காளி சொத்த என்னைக்கிருந்தாலும் பாகம் பிரிச்சித்தான ஆவுணும், விதுரா நீ போயி ங்கொண்ணமவனுக்கு கடைசியா ஒருவார்த்த புத்தி சொல்லிப் பாரப்பான்னு விதுரன கண்ணன் தூண்டியுட.....விதுரம்போயி துரியனுக்கு புத்தி சொல்ல, அவன் எடுத்த எடுப்புல,ஏண்டா தாசிப்பெத்த வேசிப்பையா! ஆசாப்பாசமுனக்கு அங்க! அங்கவஸ்த்தரம் இங்கியா? மொழுக்கு நாயம் பேசாத, என்னு மூஞ்சியிலியும் முழிக்காதன்னு வெடுப்பா பேச,ஆனவனுக்கு புத்தி சொன்னா, அறுவும் உண்டு, நெனவும் உண்டு!ஈனனுக்கு புத்தி சொன்னா இல்லிடத்தையுந் தோக்கணும்! நீயொரு ஆப்பசைச்ச கொரங்கு! உனக்கு நல்லதச் சொல்லி திருத்த முடியாது! உன்னு ஒறவுல வாழ்றத விட ஒருக்கட்டு வெறவுல வெந்து சாவறது மேலுன்னு, கையிலயிருந்த வில்ல ரெண்டா முறிச்சிப்போட்டுட்டு கடுங்கோவத்தோட அவரு யதா ஸ்தானம் போயி சேர்ராரு....................அரண்மனைக்கி வர்ற மாயவன உப்பரிக மேல நிக்கற சகுனியும்,துரியனும், அசுவத்தாமனும் பாக்கறாங்க.அசுவத்தாமன் ஓடி எதுக்கொண்டழைச்சி பாதம் பணிஞ்சி கண்ணன தோத்தரிக்க, அந்த சமயம் பாத்து பகவான் கணையாழி மோதரத்த கழட்டி கீழவுட ...பெரியவங்க ஒரு பொருள கைத்தவறிப்போட்டா சின்னவிங்க அத எடுத்துக் குடுக்கறதுதான மரியாதின்னு கணையாழிய எடுக்கற அசுவத்தாமன், பரந்தாமா நீ சூதுக்காரன், தங்கத்த பெட்டிக்கிட்டு பித்தளய குடுத்துட்டன்னு பித்தலாட்டம் பேசுவ! நல்லாப்பாத்துக்க இது உன்னு மோதரந்தான்னு மேழயுங் கீழயுங் காட்டி கண்ணனோட உள்ளங்கையில அந்த கணையாழிய வெய்க்க, அத சகுனி..பாத்துக்கடா மாப்ள! இந்த குதரைக்கிப்பொறந்தவன் ஆகாயஞ் சாச்சியா, பூமி சாச்சியா என்னைக்கும் உனக்கு சகாயமா இருப்பன்னு அந்த எடையனுக்கு சத்தியம் பண்டறாம் பாருடா! ன்னு, துரியங்கிட்ட சொல்ல... எடுப்பாரு கைப்பிள்ளதான துரியன், ஒடனே குருபுத்தரன கூப்புட்டு, என்றா அசுவத்தாமா, இப்பிடியாடா சங்கிதின்னு கேக்க, அய்யமூட்டு பையனுக்கு சுருக்குன்னு கோவம் பொத்துக்கிட்டு வந்து என்னுமேல சந்தேவப்பட்டு ஒரு சின்னச்சொல்லு கேட்டுட்ட இல்ல, அள்றவங்கிட்ட இருந்தாலுங் கிள்றவங்கிட்ட இருக்க முடியாது! பாரதப்போரு முடியந்தின்னியும் அத்திபுரத்து மண்ண மிதிக்கறதில்லடான்னு பொணங்கிக்கிட்டு அவனொருப்பக்கம் தீத்தயாத்ர போயிர்றான்.....................விருந்துக்கு ஒரம்பற வந்து வூட்ல குந்தியிருக்குது. சமயலு ஆகாம சாப்பாட்டுக்கு கூப்படலாமா? எல மொதலானதும் இருந்தாதான நெறசொம்பு தண்ணி குடுத்து விசுக்குன்னு பந்தியில குந்த வெக்கிலாம். குருசேத்ரத்துக்கு இவிங்கவொரு நாலுப்பேரு சண்டைக்கி வந்தா இசுக்காருன்னு நல்லா தெரிஞ்சிதான கண்ணன் ஆத்துல வெள்ளம் வரதுக்கு முன்னையே அணயப்போடறாரு. ஒரு பேச்சிக்காலுக்கு சொல்றன்..கர்ணன் குந்திய பெத்த தாயின்னு ஒத்துக்கல, அர்ச்சுனம்மேல நாகாஸ்தரம் போட மாண்டேன்னு சத்தியஞ் செய்யலன்னா என்னாப் பண்டறது?அதனால இந்த வில்லங்கத்தயெல்லாம் கறாரு பண்ணிக்கிட்டுத்தான் சாமி துரியஞ்சவைக்கி பஞ்சாயத்துக்குப் போறாரு! இந்த கத இப்பிடியிருக்க....பதினேழாம் நாளு மூண்ட சமர்க்களம் மும்முரமா இருக்கையில குந்திபோயி கர்ணங்கிட்ட சத்தியம் வாங்க முடியுமா!.. இல்ல சந்திக்கதாம் முடியுமா? இந்த பப்பெல்லாம் சினிமாவுல வேவும்..ஆனா கூத்துல வேவாது. சட்டப்பிரகாரம் சண்டையில கர்ணஞ்செத்து மண்ணு மேல சாஞ்சப்பொறவுதான் குந்தியம்மா சவைக்கே வரணும். இதே மாதரதான் பதனெட்டாம் நாளு சண்ட படுகளத்துல நெறஞ்சப்போரு நெடுவ நடந்துக்கிட்டிருக்க, துரியோதனன் பெருந்துருவாள சந்திக்கறதும்.....புருசம் பாக்காத கோலம், பொண்டாட்டி கோலமுன்னு வெள்ளச்சீல கட்டியாந்து ஒப்பேரி வெக்கறதும், அன்னைக்கிப் பாத்த கோலம் என்னைக்கி பாக்கப்போறன்னு பொன்னுப்புள்ளையாட்டஞ் சோடிச்சிக்கிட்டு வந்தவள கட்டிப்புடிச்சிக்கிட்டு அழுது பொழம்பறதும் கண்றோவி..கண்றோவி...சினிமாவ கூத்துல கலப்படம் பண்டனாக்கா ஐதீகம் மட்டுமில்ல கூத்தே கெட்டுப்போவும். தனபால்:குண்டு சட்டியில குதர ஓட்டறதுதாங் கூத்து! புளிச்சிப்போன ராமாயணம், மகாபாரதத்த வெச்சே காலத்த ஓட்டறீங்க, புதுசா மாத்துக்கட்டுல எதனா செஞ்சா என்னா?
சுப்ரு:
எது கண்ணு புதுசு? ராக்கிட்டும், ஏரோக்கப்பலும், டீவிப்பொட்டியும், இந்த சீனிமாவுந்தாம் புதுசு! இந்த மானங்கெட்ட மனசரும், அவிங்க கோணப்புத்தியும் அன்னைக்கியிருந்தது இன்னைக்கிம் அச்சுக்கொலையாம அப்பிடியே இருக்குதே காண! பாக்காதத பாக்கலாம் பலங்கொண்ட ராமாயணத்துல!கேக்காதத கேக்கலாங் கீர்த்தியுள்ளபாரதத்துல! முக்காலத்துக்கும் உகந்த கருத்து முச்சூடும் அதலயிருக்குது கண்ணு!.
தனபால்:உங்கபேச்சியிலியே வர்றன். பாரதத்த பெருசாப் பேசறீங்களே, பீஷ்மரு, துரோணரு, கிருபரு, கர்ணன், இன்னும் இருக்கப்பட்ட நாயக்காரனுங்கயெல்லாம், பாரா சவையில நிறுத்தி பாஞ்சாலிய துச்சாதனன் துயிலுரிக்கறத்த, வேடிக்கப்பாத்துக்கிட்டுத்தான இருந்தாங்க! ஒரு நாயும் தடுத்து புத்திச் சொல்லலியே!அவுத்த நாயஞ் செத்துப்போச்சே இதுக்கு என்னாச் சொல்றீங்க?
சுப்ரு:ஆத்துக்கு நேரான ஊரும் அரசாட்சிய எதுத்த குடியும் நீரு நீராப்போவுமுன்னு அவிங்களுக்கு அப்பையே தெரிஞ்சிருக்குது!அதில்லாம, தடுத்துச்சொன்னா வெச்சிக்கறவனா துரியன்? எதுத்துப்பேசன குத்தத்துக்கு போடா வெளியன்னு நிமுசஞ் சொல்லிப்புடமாட்டான்? அது கத அதவுடுங்க! இப்ப இந்த கலிகாலத்துல எத்தன வக்கீலு, எத்தன மேசர்ட்டு,எத்தன டாக்டர்ரு, எத்தன கலைக்கிட்ரு? இங்க எத்தன ஏடாகூடம், எக்கச்சக்கம் நடக்குது? எதயாச்சுங் கண்டுக்கறாங்களா?
தவசி:கூத்தாடிங்கறவன் எப்பயும் பொய் சொல்றவனாவே இருக்கறான். ஒருத்தரு மேல ஒருத்தருக்கு மதுப்பு மரியாதியே இருக்கறதில்ல! மூணாம் வருசம் ஒரு விசேசத்துக்கு கட்டபொம்ம வீரப்பன கூப்பட ஏர்க்கோல்பட்டி சிவாலிங்கஞ்செட்டுக்கு போயி, ஏப்பா வீரப்பங் கூத்துக்கு வர்றாப்பலையா? ன்னு கேட்டதுக்கு, ஐய்யோ அவஞ்செத்து வருசம் ஒண்ணாச்சேன்னு வாய் கூசாம சொல்றாங்க! இத்தனைக்கும் அந்தாளு அவிங்க ஜமாவுலியே ஆடுது.....
சுப்ரு:சிரிக்காமியே சவைய சிரிக்க வெக்கிறாங்க, தனக்கு அழுவாச்சி வராமியே சவய அழ வெக்கிறாங்க, ஆத்ரமில்லாமியே சனத்த கோவப்பட வெக்கிறாங்க இப்பிடி இல்லாதவொண்ண கவிக்கட்டி, கவிக்கட்டியே பொழப்புத்தனம் பண்டறதனால, சூத்தும் வாயும் ஒண்ணாப்போவுது. உம்மயெது, பொய்யெதுன்னு நெதானிக்கற சூட்டிப்பு பத்தறதில்ல. பொறவு யாரிண்ட பேசனாலும் வுழுவுற மொதசொல்லு பொய்யா இருக்கும். திருப்பி விலாவரியா அவன ரெண்டு தக்கம் கேக்கணும்! அப்பிடி கேட்டாதான் மூணாஞ்சொல்லுக்கு முழிச்சிக்குவான் ஓவ்வ்... நம்ம ஜம்பம் இங்க செல்லாதுன்னு உள்ளத பேசுவான். பலவூட்டுச்சோத்த திங்கறான், பல ஊரு தண்ணிய குடிக்கறான், பலபேரு கோமாளித்தனத்த பாக்கறானில்ல, அதனால ஆரக்கண்டாலும் எளக்காரம், எத செஞ்சாலும் கீட்டகம், தனக்கு எல்லாந்தெரியுங்கற மண்டக்கனம். தன்ன மிஞ்சி ஒருத்தன் தொழிலு செஞ்சான்னா மனம்பொறுக்க மாண்டானுங்க, பொறாம பொச்செருப்புலதான் நீங்க சொன்னீங்களே அந்தமாதர கோளாறு பேசிக்கிட்டு திரியறது.அதும்போவ கூத்தாடிங்களுக்கு பொறந்தப்ப வந்த கூத இது! பொங்க வெச்சாலும் போவாது!.
தவசி:வருசம் நூறு, எரநூறு ராத்திரி கூத்தாடன எடத்துல இன்னைக்கி அம்பது, அறுவுது ராத்திரி ஆடறதே அறுதி! கூத்தாடறது இப்பிடி அருகிப்போச்சே! இதுக்கென்னா காரணம்?
சுப்ரு:வேற எதுவுங் காரணமில்ல!கூத்தாடற கூத்தாடிதான் இதுக்கு காரணமுன்னு நாஞ்சொல்றன். ஒரு கடலச்செடி களவெட்டப்போனா, ஒரு தென்னஞ்செடி பாரு புடிக்கப்போனா, பொழுதுக்கும் ஆம்பளையாளுக்கு நூத்திருவது, இல்ல நூத்தம்பது உரூவா கூலி! கூத்துல ஒருராத்திரிக்கி நானூறு, ஐநூறு உருவா கொறையாம வாங்கறானே, ஒரே ஒருமணி நேரம் ஒழுக்கமா அவன் டூட்டியச் செய்யறானா? பஸ்சு ஏறி வரும்போதே வாங்கற சம்பளத்துக்கு மிச்சமா கந்து வாங்கி சாராயங் குடிக்கறது. விடிஞ்சி சோத்துக்கே வழியில்லையின்னாக்கூட வேசப்பொட்டியில பாட்லுக்கு கொறவிருக்காது. போத ஏறனாப்போதும், பீத்த வேசம் போட்டு, பேருக்கு என்னம்மோ ஆடி, ரெண்டு வசனத்த மெப்பிச்சிப்புட்டு போயி டேசிப்பொறன மலத்திப்புடிச்சி படுத்துக்கறது!.ஆயரங் கஷ்ட நஷ்டமிருக்கும் அதயெல்லாத்தையும் மறந்து விடிய, நம்பள ஒக்காந்திப் பாக்க வர்ற சனம், இந்த கந்தறகோலத்தப் பாத்தா என்னா நெனைக்கும்?....கூத்தாடிப்பசங்க குடிகாரப்பசங்க! என்றாக் கூத்தாடறாங்க மண்டக்கூத்து! வுட்டுத்தொலைங்கடா இந்த எச்சிப்பண்ணாட்ட அப்பிடின்னுதான...இந்த அஞ்சிக்கனாலதான் ஆரும் கூத்தே வுடறதில்ல! கூத்து அருகிப்போச்சி.
தனபால்: பவுடருப்பூசறவனயிருக்கட்டும் இல்லவொருபண்ணயஞ்செய்றவனாயிருக்கட்டும்! அவரவரு தம்பிள்ளைங்க காலு மண்ணுமேல பாவக்கூடாது, நகக்கண்ல துளி அழுக்கு சேரக்கூடாதுன்னு நெனைக்கறாங்களே!நெசமாலுமே நீங்க செய்யற இந்த கலைத்தொழிலு உங்களப்பொழைக்க வெக்கிதா இல்லியா?
சுப்ரு:மண்ணுமேல நின்னு பெண்ணோரஞ் சொல்லக்கூடாது! அந்த கலைவாணி சரசுவதி சாக்கியாச் சொல்றன்! இந்த கூத்து மட்டுமில்லையின்னா முப்பது நாப்பது வருசத்திக்கி மின்ன, எனக்கிருந்த வறுமயில, பொண்டாட்டி புள்ளைங்களுக்கு கஞ்சியூத்த வக்கத்து வடக்கவுத்துல நாண்டுக்கிட்டுச் செத்துருப்பன்!. குதிச்ச குதிக்கி தக்க வரும்பிடி! அதக்கண்டு தாங்க நாம்பொழைச்சன். மாணிக்கம்பட்டி கணேசன் மெத்த வூடு கட்டி பொழைக்கிலியா? கூலிப்பட்டி சுப்ரமணி பொழைக்கிலியா? குருநாத வாத்தியாரு பொழைக்கிலியா? எலிமேட்டு வடிவேலு பொழைக்கிலியா?....
தவசி:முன்னப்பின்ன தெரியாத ஊருக்கு கூத்தாட, தூரந்தொலையா பயணம் போறீங்க. ஒரூர்ல நோம்பி நொடியின்னா பலபட்டற கூடும், கொண்டாட்டம் போடும்! அதுல ரெண்டு தண்ணி வண்டியிருக்கும், தொண்டு தறுதலைங்களும் இருக்கும்! சண்ட சல்லு எப்பிடியும் முண்டாமயிருக்காது! அந்த ரகளையில எச்சிப்பிச்சி, எதுனாச்சிம் கூத்துக்கு எடஞ்சலு வந்தா எப்பிடி சுதாரிப்பீங்க?
சுப்ரு:அய்யோ அதயேங் கேக்கறீங்க, சொன்னா ஏழு ராத்திரி கதயாவும். குட்டப்பட்டி நாகரம்மங்கோயில்ல கூத்தாடனம். கர்ணஞ்சண்ட கூத்து. கூட்டமான கூட்டம் வந்து குமிஞ்சிருக்குது! மீறன குடிகாரனொருத்தன் சரக்க வாங்கியாந்து பைக்கி வண்டியில வெச்சிக்கிட்டு துளி, துளியா ஊத்திக்குடிக்க, அதுல ஒருத்தம் பங்கு கேக்க, இவங் குடுக்க மாண்டேங்க...ஆளு அசந்த நேரத்துல அந்த குடிகாரன், இந்த குடிகாரன் பைக்கி வண்டியில வெச்சிருந்த வெராந்தி பாட்ல பதம் பாத்துட்டான். செரி ராத்திரி தூங்கி முழிச்சி, போத தெளிஞ்சதும் குடிக்க சரக்க தேடனா அது எங்கயிருக்கும்?...எவண்டா என்னு பாட்ல எடுத்தவன்? எவண்டா என்னு பாட்ல எடுத்தவன்னு குதிக்கறாஞ் சும்மா.. சவ மொளேர்னு எந்திரிச்சிக்கிச்சி!எம்பாட்லு கைக்கி வந்தாதாங் கூத்தாடனமுன்னு குடிகாரன் கூத்த நிறுத்த,ஒக்காந்தி கூத்தப் பாத்தச்சனம் அவங்கெடக்கறான் நீங்க ஆடுங்கங்க....இவந்திலும்பி டேய் எவண்டா கூத்தாடறவன், பாட்லு வராம கூத்து ஆடனா, ஆடற கால வெட்டுவங்கறான்..அவஞ்செத்த கத்தி ஓஞ்சதும், பொட்டிய மீட்டணம்பா...கைச்சோட்டு, கைச்சோட்டு கல்லா மூஞ்சிக்கி மின்ன விர்,விர்ன்னு பறக்குதே. அரா சிவான்னு ஒராளு அவங்கிட்ட வாயத்தொறக்கமுடியல! சாமிக்காசுல எரநூறு உரூவா அவம்போதைக்கி தச்சண வெச்சி கூத்த ஆடி ஒப்பிச்சம்.
தவசி:நோவுகண்டு வருத்தமாயிருக்கற கூத்தும், கூத்தாடிங்க பொழப்பும் விருத்தியாகனுமுன்னா நாம்பயென்னா செய்யனும்?
சுப்ரு:நம்ப வட்ட வாகறையில உள்ள வாத்தியாருங்கெல்லாம் ஒட்டா ஓரெடத்துல குந்தி அவிங்கவிங்க மனசல உள்ளத கொட்டி கலந்து தூசு துப்பு மாசு மருவு எல்லாத்தியும் தூத்தி ராசிப்பண்டி, அதலதல ஒரு வித்து கூத்துல அத்துப்படியான டிக்கிட்டுங்களா சேத்தியொரு ஜமாவ உண்டுச்செய்யிணும். பாட்டன் முப்பாட்டன் ஆடனானே ஐதீகமான கூத்து! அதமட்டுந்தான் அந்த ஜமா ஆடணும்! ஆமா அதுல ஒரு மாத்து கொறயக்கூடாது. ஆராருக்கு கூத்துபடிக்க நாட்டமிருக்குதோ அவிங்க முன்னடந்துபோற அந்த ஜமாவுலதான் கூத்து படிக்கணும்,கொழலூத படிக்கறானோ, மத்தாளமடிக்கப் படிக்கறானோ, இல்ல வேசத்துக்குப் படிக்கறானோ அதப்பத்தி காரியமில்ல! ஆனா, படிச்சானதும்,அங்கவன ஒரு தொழிலாளியா ரூபிக்கணும், அதும்பொறவுதான் கூத்துக்குன்னு வெளிய பொட்டிய தூக்கிக்கிட்டுப் போவுணும்!கூத்தாடிங்க கடன வாங்கி கடன கட்டக்கூடாது! வரும்பிடிக்கி தகுந்த செலவு செய்யிணும்! வருங்காலம் பிள்ளைங்க கையில, பரி பக்குவம் வந்து அவிங்களா பிரியப்பட்டா கூத்துல வுடலாம்! ஆனா எக்காரணங்கொண்டும் பள்ளியோடத்துப் படிப்ப கெடுக்கக்கூடாது. கருத்தா படிக்க வெக்கணும்!அலங்காரத்துக்கு வந்தா அதுமேல கவனமா தொழில் செய்யணும்! ஆடியாடி அலுப்பா இருக்குதா எதோ சலுப்புக்கு ஒரு முழுங்கு சாராயங் குடிச்சமா, சத்தமில்லாம வூட்டுக்குப்போயி படுக்கற வழியப்பாக்கணும்! பஸ்டாண்டு பஸ்டாண்டா திரியக்கூடாது. எரக்கப்போனாலும் நெறக்கப்போவுணும்!கூத்து இல்லையா, வேச சாமானத்த மராமத்து பண்டி வெச்சிக்கிணும், துணிமணிக்கி ஒட்டு போட்டுக்கிட்டே இருக்கக் கூடாது! துணிப்பாகம் வாங்கறயில்ல, வருசமொரு செட்டு புதுத்துணி வாங்கிப்போட்டு ஆடிப்பாரு, வேசப்பவரு எப்பிடியிருக்குதுன்னு!.இன்னும் நாலுக்கூத்து சேத்தியாடலாம்!இந்த வரமொறதான் நடமொற! இப்பிடி ஆடனாவே இந்த மண்ணு உள்ளவரையும் கூத்தாடும்.
................................
சாகசங்களும், சாதனைகளும் மனித ஆளுமையை மதிப்பீடு செய்யும் அலகுகள் எனில் அதன் துலாக்கோலில் எடையிறுப்பதற்கு ஏதுவாகயிருக்காது, பாமர கூத்துக்கலைஞனின் கனமுள்ள வாழ்மானம்.கருதி, ஒன்றைப்பற்றி அதற்கே தன்னை ஒப்புக் கொடுக்குமவனுக்கு, அர்ப்பணிப்புணர்வு, ஈடுபாடு, உயிர்மூச்சு, சுவாசம் என்றுச்சொல்லித் திரிகிறோமே, அவற்றின் பேர் தெரியாது, அர்த்தமுங்கூட.....அவன் வாழ்கிறான், கலையும் கூட...அவ்வளவே!.
*குப்பன் - முகவீணைக் கலைஞர்
தேவூர் ரெட்டிப்பாளையம் குப்பன் என்றால் அறியாத கூத்துக் கலைஞர்களே இல்லை. பூர்வீகத்தில் பின்பாட்டுக்காரர்களால் சிறப்பு செய்யப்பட்டு வந்து கூத்தில், குரல் ஏற்ற இறக்க வரிசையில் நேரும் சுதிப்பிழைகளுக்கு அஞ்சி சடையன் வாத்தியார் குழல் என்று சொல்லப்பட்ட முகவீணையை கூத்தின் பக்க இசைக்கருவியாக அறிமுகஞ் செய்கையில் அதை முதலில் பயின்றது குப்பன் அவர்களே. விளைந்த கூத்துக் கலைஞர் எவரென்றாலும் அவர் விரும்பும் பக்கவாத்தியத்தில் ஒன்றாக குப்பன் அவர்களின் குழலிசை கண்டிப்பாக இருக்கும். முகவீணையோடு பல்வேறு காற்றுக் கருவிகள் இசைக்கும் வித்தகரிவர். வாழ்வது தொகுப்பு வீடு, வயிறு வளர்ப்பது அரசு வழங்கும் நலிந்த கலைஞர்களுக்கு உதவி தொகையில். கொம்பு இளைக்காத சீர் பெற்றது குப்பன் அவர்களின் கலைச்சேவை.
*கருப்பண்ணன் - முகவீணைக் கலைஞர்
வாத்தியப் பயிற்சி பெற்றதும், வலுவான தொழில் கற்றதும், பெற்ற மகனுக்கு உற்ற மகனுக்காக உறவாடியதும் பின் தொடரும் நிழலாய் வாழ்ந்ததும் சடையன் வாத்தியாரிடத்தில். பக்க மேளக் கலைஞர்களின் வகுபாகம் கூத்தில் பிரதானமானது. ம் என ஆமோதிப்பிற்கும் ஹும் என்ற அங்காரத்திற்கும் ஐயோ என்ற அவல உணர்வுக்கும் உருவங்கொடுத்து பார்வையாளர்களிடத்தில் பிசிறின்றி பதிய வைக்கும் வேலை அவர்களுடையது. செய்வதை செம்மையாகவும், முழுமையாகவும், சீராகவும் செய்பவர் கருப்பண்ணன். எண்பது அகவையை தாண்டியும் தொட்ட காரியத்தை விண்ணமின்றி செய்து வருகிறார். குருநாதருக்கு அடுத்து குருக்குப்பட்டி கணேச வாத்தியார் ஜமா நீண்ட நெடுங்காலம் குழலூதிக் கொண்டிருந்தவர் இப்போதுயிருப்பது இருப்பாளி சேட்டு வாத்தியாரிடத்தில்.
கனகு*தெருக்கூத்தில் திருநங்கைகளை பங்கேற்க வைப்பதில் முன்னோடியானவர் கூலிப்பட்டி சுப்ரமணி வாத்தியார் அவர்களே! அவரது ஜமாவில் பங்கு பற்றிய ரேகா அவர்களை தொடர்ந்து ஒக்கிலிப்பட்டி சாமியாருடன் இயங்கிய அபிராமி, புவியரசி,ஆகியோருடன் கனகு அவர்களும் சுப்ரு வாத்தியாரிடம் கடந்த பத்தாண்டு காலங்களாக வேடங்களிட்டு ஆடி வருகிறார். ஒப்பு நோக்கும்போது திருநங்கையருக்கு ஆடவர் பெண்டிரைக்காட்டிலும் விஞ்சிய கலைத்தேட்டமும்,நுகர்வும், உற்றுநோக்கி உள்வாங்கும் திறனும் இருப்பதை உணரலாம். மண்டோதரி, அதி வர்ணமாலை, துரோபதை, ஏலக்கன்னி போன்ற பெருங்கொண்ட கதைமாதர்களாக தோன்றும் கனகு தானதுவாகி பாத்திரத்தை கனம்பண்ணுவதோடு அவையை தனது பல்வேறு கோட்டுச்சித்திரங்கள்,பண்பட்ட ஒயிலாக்கம் வழி நிரப்பித்தருகிறார்.

0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக